போலிகள்
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2026
பார்வையிட்டோர்: 361
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நீ இஞ்சை ஏன் வந்தாய்?
உனக்கிஞ்சை என்ன வேலை?
இப்பவே போய்த் துலை!
அவரைக் கண்டதும்
அதிபர் அருணாசலத்துக்கு கொதிப்பு.
ஆக்ரோஷமாய்க் கத்துகின்றார்
அதிபர் அருணாசலம்.
மகாலிங்க மாஸ்டருக்கு
பதட்டம்.
மௌனியாய் நிற்கின்றார்
இரண்டாம் தவணை விடுமுறை
முடிந்துவிட்டது.
இன்று தான் கல்லூரி தொடக்கம்.
வகுப்புகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை.
மாணவ மாணவிகள்
கூட்டம் கூட்டமாய்
வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு குதூகலம்.
அவர்கள் ஆரவாரம்.
ஒரு மாதத்துக்கு முன்னம்
நான் உனக்கு
என்ன சொன்னான்?
உனக்கு இந்த உத்தியோகம்
எள்ளளவும் சரிவராது.
எங்கடை கல்லூரி
ஒரு கல்விக் கோயில்.
உன்போன்ற உலுத்தருக்கு
இஞ்சை இடமில்லை.
இனி இஞ்சை நீ வராதை
இப்பவே போய்த்துலை.
அன்று நான் உனக்கு
சொன்னனான் தானே”
மகாலிங்க மாஸ்ரர்
கூனிக் குறுகி நிற்கின்றார்.
“இப்ப நீ இஞ்சை வந்து
நிற்கின்றாய்.
இப்பவே போய்த்துலை
இந்த இடத்திலை நிக்காதை”
மகாலிங்க மாஸ்ரருக்கு
மலைப்பு.
இந்தக் கல்லூரியிலை
தொடர்ந்து தான்
படிப்பிக்க முடியும்
என்ற எதிர்பார்ப்புடன்தான்
இன்று அவர்
வந்துள்ளார்.
அவரது எதிர்பார்ப்பு
நிறைவேறுமா?
அது அவருக்கே கேள்விக்குறி.
“பெற்றார்கள் எல்லாரும்
எங்களை நம்புறார்கள்.
அதனால் தான் அவர்கள்
தங்கடை பிள்ளையளை
எங்கடை கல்லூரிக்கு
அனுப்பி வைக்கின்றார்கள்.
அந்த நம்பிக்கையை
நாங்கள்
அடியோடு நாசமாக்கிறதா?
எங்கடை கல்லூரிக்கு வருகின்ற
எல்லாப் பிள்ளையளையும்
எங்கடை சொந்தப் பிள்ளையளாய்
எண்ணித்தான் நாங்கள்
கல்வி கற்பிக்கிறம்.
ஆனால்
உன்போன்ற உலுத்தர்கள்
உல்லாசமாய் பொழுது போக்க
இஞ்சை வாறியள்
பார் அந்தப் பாலா மாஸ்ரரை”
பேச்சு மூச்சற்று
சிலையாய் நிற்கின்றார்
மகாலிங்க மாஸ்ரர்.
உயர் வகுப்பு மாணவன்
ஒருவன்
மகாலிங்க மாஸ்ரரின்
புத்தம் புதிய
ஏ.போட்டி காரை கண்டுவிட்டான்.
அவன்
ஓடோடிச்சென்று
மகாலிங்க மாஸ்ரர்
வந்திருக்கிறார் என்ற
செய்தியை
தன் சக மாணவர்களுக்கு
வெறுப்புடன் கூறுகின்றான்.
மகாலிங்க மாஸ்ரர்
படிப்பிக்க
இனி இஞ்சை வரமாட்டார்.
பாலா மாஸ்ரர்தான்
இனி எங்களுக்கு
தொடர்ந்து படிப்பிப்பார்”
என்று
திடமாய் நம்பியிருந்த
உயர் வகுப்பு
மாணவ மாணவியற்கு
இடிவிழுந்தாற் போலாச்சு.
உயர்வகுப்பு
மாணவ மாணவியர் மத்தியில்
கொந்தளிப்பு
கொந்தளிக்கும்
மாணவ மாணவியர்கள்
அதிபரின்
அலுவலகத்தின் முன்
அலை அலையாய்
வந்து குவிகின்றனர்.
மாணவ மாணவியரின்
கொந்தளிப்பை அறிந்த
அதிபர் அருணாசலம்
அலுவலகத்திலிருந்து
வெளியே வருகின்றார்.
“என் அருமைப் பிள்ளைகளே!
உங்கள் நிலமை எனக்கு
நன்றாய் புரிகின்றது.
நான் எல்லாவற்றையும்
பார்த்துக்கொள்ளிறன்.
நீங்கள் எதுக்கும்
பயப்படாதீர்கள்.
கவலைப்படாதீர்கள்.
நீங்கள் எல்லாரும்
உங்கள் உங்கள்
வகுப்புகளுக்கு
அமைதியாய் செல்லுங்கள்.
அதிபர் அருணாசலத்தின் மேல்
அசையாத நம்பிக்கை
மாணவர்களுக்கு.
அதிபரின் சொற்கேட்டு
அமைதியாய் செல்கின்றனர்
தத்தமது வகுப்புகளுக்கு.
பாலா மாஸ்ரர் மீண்டும்
இங்கு படிப்பிக்க வருவார்
என்ற நம்பிக்கை
மாணவ மாணவியர்க்கு.
அதிபரின் அலுலகத்தில்.
கூடி நிற்கின்ற
ஆசிரியர் அனைவரும்
அதிபர் அருணாசலத்துக்கு
பக்கபலமாய் நிற்கின்றனர்
உறுதியாய்.
மகாலிங்க மாஸ்ரர்
அடிக்கடி கல்லூரிக்கு
வராமல் லீவெடுப்பார்.
அந்த நாட்களில்
அவரது மாணவ மாணவிகள்
பாலா மாஸ்ரரை
தங்களுக்கு பாடங்கள்
சொல்லிக் கொடுக்கும்படி
மன்றாட்டமாய் வேண்டுவர்.
மாணவ மாணவிகளது
வேண்டுதலுக்கு
அதிபரின் அனுமதியுடன்
பாலா மாஸ்ரர்
உற்சாகமாய்
பாடங்களைப் படிப்பிப்பார்.
மாணவ மாணவிகளும் ஆர்வத்துடன்
படிப்பார்கள்.
பாலா மாஸ்ரரே
தங்களுக்கு தொடர்ந்து
படிப்பிக்கவேண்டுமென்று
ஆவலாய் இருக்கின்றனர்
மாணவ மாணவியர்
பாலாமாஸ்ரருக்கு
கற்பித்தல்
கைவந்த கலையாச்சே
தமிழ் இலக்கிய பாட வேளைகளில்
மானிடக் கவிஞன்
கம்பனிலிருந்து
புரட்சிக்கவிஞன்
பாரதிவரை
எங்கள் தங்கத்தாத்தா
சோமசுந்தரப் புலவரிலிருந்து
முற்போக்குக் கவிஞன்
முருகையன் ஈறாக
தரிசனம் கொடுத்துக் கொண்டே
இருப்பார்கள்.
வரலாற்றுப் பாட வேளைகளில்
விடுதலை வீரர்கள்
மாஜினி, கரிபால்டியிலிருந்து
ஏப்ரஹாம் லிங்கன் வரை,
தத்துவ வித்தகர்
கார்ல் மார்க்ஸிலிருந்து
மாமேதை மாஓ வரை,
விஜயம் செய்து கொண்டே
இருப்பார்கள்.
பாரிஸ் கம்யூன்,
பிரெஞ்சுப் புரட்சி,
ரஷ்ய ஒக்ரோபர் புரட்சி,
வியட்நாம் விடுதலையின்
வீர வரலாறு,
இந்திய சுதந்திர வேள்வி
எல்லாம்
விவரணச் சித்திரமாய்,
காட்டாற்று வெள்ளமாய்
கரைபுரண்டோடும்.
அரசியல், பொருளியல்
பாடங்கள் எல்லாம்
எளிமையாய் ரசனையாய்
வழங்கப்படும்
பாலாமாஸ்ரரால்.
மாணவ மாணவிகள்
எல்லோரும்
ஆர்வத்துடனே கற்பார்கள்.
ஆனால்
மகாலிங்க மாஸ்ரரோ
எந்த நேரம் பார்த்தாலும்
சோம்பேறித்தனமாய்
பொழுது போக்கிக்கொண்டே
இருப்பார்.
‘இவர் படிப்பிப்பது மிகவும்
குறைவு.
இவருக்குத் தெரிந்தால் தானே
படிப்பிக்க முடியும்.
இவர் எப்படி ஏலெவல்
பாஸ் பண்ணினாரோ
இவருக்காக யாராவது
குதிரை ஓடினார்களோ
மாணவர்களுக்கு
சந்தேகம்.
பாலா மாஸ்ரரே
தங்களுக்கு பாடங்கள் எல்லாவற்றையும்
தொடர்ந்து கற்பிக்க வேண்டும்
என்ற பேராவல்
எல்லா மாணவ மாணவியர்க்கும்.
‘எங்கடை கல்லூரியிலை
ஒரே ஒரு ஆசிரிய வெற்றிடம்தான்
இப்போ உண்டு.
அந்த இடத்துக்கு
பாலா மாஸ்ரரைதான்
நியமிக்கும்படி
சிபார்சு செய்துள்ளோம்
நாம்.ஏனென்றால்
அவன் தான் எங்கடை
கல்லூரியிலை கற்பிக்க
தகுதியுள்ளவன்.
திறமையானவன்.
‘என்னை சிபார்சு
செய்யுங்கள் ‘என்று
நீ கேட்டாய்.
நாங்கள் உன்னை
ஒரு போதும்
சிபார்சு செய்யமாட்டம்.
ஏனென்றால்
ஆசிரியத் தொழில்
உனக்கு எள்ளளவும்
சரிவராது என்று
எங்கள் எல்லோருக்கும்
நன்றாய் தெரியும்.
இந்த விசயத்தை
அன்று நான் உனக்கு
உறுதியாய் சொன்னன்.
‘மூன்று மாதங்கள்
மாத்திரம்தான்
நான் இஞ்சை படிப்பிப்பன்.
பின்னர் இந்த வேலையை
நிச்சயமாய் நான்
விட்டிடுவன்.
அதன்பின் பாலா மாஸ்டர்
தொடர்ந்து படிப்பிக்கட்டும்
என்று நீ சொன்னாய்.
மூன்று மாதங்கள் மாத்திரம்
படிப்பித்துவிட்டு நீ
வேலையை விட்டுவிடுவாய்
என்பதற்கு என்ன
உத்தரவாதம்?
‘நிச்சயமாய் நான் இந்த
வேலையை விட்டிடுவன்.
இல்லாவிட்டால்
நீங்கள் என்னை
கழுத்தைப் பிடித்து
வெளியே தள்ளி விடுங்கள்.
மூன்றே மூன்று மாதங்கள்
மாத்திரம் தான்.
பின்பு நான் நிச்சயமாய்
விட்டிடுவன் சேர்.
கடவுள் சத்தியமாய்
நான் சொல்லிறன் சேர்’
மூன்று மாதங்கள்
மாத்திரம் படிப்பிக்க
நீ ஏன் ஆசைப்படுகிறாய்
ஏன் உனக்கு இந்த
ஆசை அந்தரம்?
‘சேர்
எனக்கு
கலியாணப் பேச்சு நடக்குது’
சைவ வேளாளர் குடும்பம்
பெண் வீடு
கண்ட நிண்ட இடங்களில்
செம்பு தண்ணி
எடுக்காத குடும்பமது.
ஒரே ஒரு பொம்பிளைப்பிள்ளை.
வேறை சகோதரங்கள் இல்லை.
கொழுத்த சீதனம்.
புத்தம் புதிய பெரிய
மாடிவீடு நல்லூர்
செட்டித்தெருவில்
இருபத்தைஞ்சு லட்சம்
காசு ரொக்கம்.
முப்பது பரப்பு தனிக்கிணற்று
தோட்டக் காணி
தின்னவேலியில்
யாழ்ப்பாணம் கஸ்தூரியார்
வீதியில்
பெரிய சாராயத் தவறணை.
பூநகரியில் ஐம்பது பரப்பு
நெல்வயல்
கிடக்கிறதெல்லாம்
பொம்புளைப் புள்ளைக்குத்தான்
கலியாணப் புறோக்கர்
உறுதியாச் சொன்னான்.
மாப்பிள்ளைப் பொடியன்
பீ.ஏ.மாஸ்ரர்.
பெரிய பள்ளிக்குடத்திலை
படிப்பிக்கிறான்.
பள்ளிக்குடம் போறதுக்கு
புத்தம் புதிய ஏ. போட்டிக் கார்
பெரிய மோட்ட சயிக்கிளும்
வைச்சிருக்கிறான்.
வசதியான குடும்பம்.
ஊரிலை நல்ல செல்வாக்கு
நல்லாய் படிச்ச குடும்பம்
பரம்பரைப் பணக்காரர்
சுண்டி எடுத்த
வெள்ளாளக் குடும்பம்
கண்ட நிண்ட குடும்பங்களில்
கை நனைக்காத குடும்பம்.
அண்ணன்மார் இரண்டுபேரும்
கலியாணம் கட்டினம்.
அக்கா ஒருத்தி அமரிக்காவிலை.
இன்னொரு அக்காலண்டனிலை.
மூத்த அக்காவின் புருசன்
அமெரிக்காவிலை டொக்டர்
இளைய அக்காவின் புருசன்
லண்டனில் இஞ்சினியர்
மூத்த அண்ணன் கொழும்பிலை
பெரிய கம்பனியிலை
அக்கவுண்டன்.
இரண்டாவது அண்ணனும்
அக்கவுண்டன்தான்.
யாழ்ப்பாணம்
கே.கே.எஸ். வீதியிலை
பெரிய அடைவு புடிக்கும் கடை.
பண்டாரவளையில்
பெரிய பலசரக்கு ஸ்ரோறும்
பிரசித்தி பெற்ற புடவை
மாளிகையும்.
இரண்டுபேற்றை சாதகங்களிலும்
பத்து பொருத்தங்களும்
சரியான பொருத்தம்
விஸ்தாரமாய் கூறினான்.
புறோக்கர்.
பெண் வீட்டாரும் அதை ‘வலுவாய்
நம்பீட்டினை.
அதுக்குதான் சேர் நான்
மூண்டு மாதங்கள் இஞ்சை
படிப்பிக்க அந்தரப்படுகிறன்.
மனம்விட்டு சொல்கிறார்
மகாலிங்க மாஸ்ரர்.
நீர் சொல்லிறதெல்லாம்
சரிதான் மாஸ்ரர்
ஆனால் அந்த பாலா மாஸ்ரர்
சரியாய் கஷ்டப்பட்ட
குடும்பத்தை சேர்ந்தவன்.
அவனுக்கு
இரண்டு பெண் சகோதரிகள்
கல்யாண வயதில்
தம்பிமார் இரண்டு பேரும்
படிக்கின்றார்கள்.
பெற்ற தாயோ நோயாளி.
படுத்த படுக்கையாய்
மூண்டு வரியங்கள்.
பாலா மாஸ்ரரின் தகப்பனுக்கும்
வயது போட்டுது.
அப்படியிருந்தும் அவர்
இரவு பகலாய்
மாடாய் உழைக்கிறார்.
பாலா மாஸ்ரரின் தகப்பன்
பத்துபரப்பு தோட்டக் காணியை
‘கொண்டிசன் உறுதி ‘ முடிச்சு
எழுதிக்குடுத்து
பணத்தை கடனாய் வாங்கி
பாலாவை படிப்பித்தார்.
கடன் தவணையும் முடிஞ்சு போச்சு
தோட்டக்காணியும் பறிபோச்சு
வீடு வளவையும்
ஈடு வைச்சுத்தான்
பாலாவை தொடர்ந்து
படிப்பித்தார் தகப்பன்.
வீடுவளவை
மீட்டெடுக்க வழியில்லாமல்
தவிக்கின்றார்கள்
பாலாவாக்கள்.
பாலாவிற்கும் வேலையில்லை
ஆறு மாதங்களாய்தான்
எங்கடை கல்லூரியிலை
உன்னைப்போல
தற்காலிகமாய் படிப்பிக்கின்றான்
பாலா.
காலையும் மாலையும்
ஏழு மைல்கள்
சைக்கிள் மிதிச்சுத்தான்
இஞ்சைவந்து
படிப்பிக்கின்றான்.
சைக்கிளும் மாதவாடை
மாதம் முப்பது ரூபா
வாடைக் காசு
சொந்த சைக்கிள் வாங்க
பணமேது பாலாவுக்கு?
நீயோ
மூண்டு மைல் தூரத்துக்கு
ஏஃபோட்டி காரிலை
உல்லாசமாய் கல்லூரிக்கு
வந்து போறாய்
‘சேர்
பாலாவின் குடும்பம்
கஷ்டப்பட்ட குடும்பம்
எண்டு எனக்கு
நல்லாய் தெரியும்
நான் மூன்று மாதங்கள்
இஞ்சை படிப்பிக்கிறன்.
பாலா மாஸ்டர்
என்ரை சம்பளத்தை
எடுக்கட்டும்’
‘ஓய் மகாலிங்கம்
நீ படிப்பிக்க
உன்ரை சம்பளத்தை
எடுக்க
பாலா சம்மதிப்பானா?
பாலா என்ன
தன்மானமில்லாதவனா?
விடு உந்த விசர் கதையை
இந்த விசயத்தை
பாலா அறிந்தானெண்டால்
உன்னை சும்மா
விடமாட்டான்.
வீண்கதை பேசாதை
நீ இப்பவே போய்த் துலை.
இனி இந்தப் பக்கம்
வந்திடாதை.
ஒரு மாதத்துக்கு முன்னம்
இதை நான் உனக்கு
சொன்னனான் தானே.
மானம் ரோசமில்லாமல்
இப்ப நீ இஞ்சை
வந்து நிற்கிறாய்
வெட்கமில்லாமல்
ஒரு மாதத்துக்கு முன்னம்
‘ப்ளாங் ‘செக்கோடை
கொழும்புக்கு நீ
போனதும் எனக்கு
நன்றாய் தெரியும்
மலையக பாடசாலை ஒன்றில்
ஆசிரிய நியமனம் பெற்றுக்கொள்ள
கல்வி அமைச்சிலுள்ள
லஞ்ச பிணந்தின்னிக்
கழுகுகளுக்கு
நிவேத்தியம் படைக்க
வேண்டுமே.
யாழ்ப்பாணப் பாடசாலையில்
ஆசிரிய நியமனம் ஒன்றுக்கு
எட்டு சிறீ’
‘இப்படியும் நடக்குதா?
என்ன, ஆசிரிய நியமனம்
ஒண்டுக்கு
எட்டாயிரம் ரூபாவா?
இதிலென்ன ஆச்சரியம்?
இன்னும் கொஞ்சக் காலத்தில்
பத்தாயிரமோ
அதுக்கு மேலையும் போகும்.
யாழ்ப்பாணத்திலையுள்ள
பாடசாலையில்
ஆசிரிய நியமனம் பெற
ஏன் பத்தாயிரம் ரூபா? ‘
‘யாழ்ப்பாணத்தில்
ரியூட்டறி ரியூசன் கடைகள்
ஏராளமாச்சே.
மகாலிங்க மாஸ்ரர்
உனக்கு எது?
ஐஞ்சு சிறியா அல்லது எட்டா?
அல்லது இரண்டுமா?
இப்பெல்லாம்
பாடசாலைகளிலும்
கல்லூரிகளிலும்
சிறியள் மலிஞ்சு போச்சு.
இதாலை
தரமான கல்வியும்
துலைஞ்சு போச்சு
மகாலிங்கம்
இனி உன்ரை பயறு
இஞ்சை அவியாது.
இப்பவே போய்த் துலை’
‘சேர்.
நியமனக் கடிதம் என்ர
கைவசமிருக்கு
இறுமாப்பில் மகாலிங்கம்.
‘எடே மகாலிங்கம்
உந்த நியமனக் கடிதத்தை
நீ வைச்சு
கூழ் காச்சிக் குடியடா.
போடாவெளியாலை
போக்கிலிப் பயலே.
இப்பவே போய் துலையடா
இனி இந்தப் பக்கம்
எட்டிக்கூடப்
பாக்காதையடா
நீசப் பயலே!
ரௌத்திர மூர்த்தியாய்
கர்ச்சிக்கின்றார்
அதிபர் அருணாசலம்.
அண்டசராசரங்களும்
அதிர்கின்றன.
– காலவெள்ளம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: செப்டம்பர் 2010, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |