பெண்மை = உண்மை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2025
பார்வையிட்டோர்: 252 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மையத்து வீடு (மரண வீடு) நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஆம். தனது மாணவர்களுக்கெல்லாம் இஸ்லாத்தை யும், அதன் கொள்கைகளையும் தெளிவாகக் கற்பித்த, இஸ்லாமிய நாகரிகம் பாட விரிவுரையாளர் சுப்யான் தனது நாற்பத்தைந்தா வது வயதில் மாரடைப்பினால் திடீரென காலமாகி விட்டார். 

மிகச் சிறிய வீடு. முன்னும் பின்னும் ஆண்களே அதிகம் கூடியிருந்தார்கள். சுப்யான் ஆசிரியரிடம் கற்றவர்கள்… கற்றுக் கொண்டிருப்பவர்கள்… சகாக்கள்… கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள்… அதிகாரிகள்… எங்கும் ஒரே ஜனத்திரள் அலைமோதிக்கொண்டு இருந்தது. அந்த அலையில் குறிப்பிடத்தக்க அளவில் நின்றுகொண்டிருந்த பெண்கள் கூட்டமோ நெருக்கித் தள்ளி ஒதுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

லேசாக நெஞ்சு வலிக்கிறதென்று நேற்றுக் காலை அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுப்யான், மாலையில் தனது மனைவியுடன் நல்லபடியாகப் பேசி யிருக்கிறார். இன்று அதிகாலை மனைவி ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது கணவரின் ஜனாஸாவைத்தான் (பூதவுடல்) பார்க்க முடிந்தது. அவர் தனது மார்க்கத்தை எவ்வாறு படிப்பித்தாரோ அவ்வாறே வாழ முயற்சித்தவர். ஏறக்குறைய வாழ்ந்தும் காட்டியவர். அவரது வேண்டுகோளின்படி உடனே மையத்து அடக்கம் செய்யப்பட ஏற்பாடாகியிருந்தது. 

மாலை மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது நேரம். இன்னும் சிறிது நேரத்தில் அஸர் (மாலை நேரத்) தொழுகைக்கான அதான (அழைப்பு) ஒலிக்கும். அதற்குள் மையித்தைக் குளிப்பாட்டி கபனிடும் (இறுதியாக அணிவிக்கப் படும் தையலற்ற வெள்ளைத் துணி) வேலைகளைச் செய்தாக வேண்டும். 

அந்தச் சிறிய வீட்டின் முன்ஹோல் ஏறத்தாழ நூறு சதுர அடிகள் அளவே விஸ்தீரணம் கொண்டது. அதன் மத்தியில் போடப்பட்டிருந்த சிறிய பலகைக் கட்டிலின்மீது அவரது ஜனாஸா வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டுக் கிடந்தது. 

“பொம்புளைகளுக்கு மையித்தைக் காட்ட மாட்டாங்களாம்”. 

பக்கத்தில் ஒருத்தி சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட லத்தீபாவுக்கு தலை வலித்தது. எவ்வளவு தூரத்தி லிருந்து வந்திருக்கிறோம்…? கடைசியாக ஒருமுறை sir இன் முகத்தைப் பார்த்துவிட்டுப் போவதற்குத்தானே… இப்போது இப்படிச் சொன்னால்… 

அருகிலிருந்த நுஸ்ரத்தின் முகத்தைப் பார்த்தாள் அவள். “பேசாம உள்ளுக்குப் போவோம்… நீ வாவேன்…” என்றாள் அவள். 

எவ்வளவு இங்கிதமான ஆசிரியர்.. என்ன அருமை யாகப் படிப்பிப்பார்….! சொல்லப்போனால் இன்று அனுராதபுர மாவட்டத்தில் உலவுகின்ற எல்லாப் பட்டதாரிகளுமே அவரிடம் கற்றவர்கள் அல்லவா? அந்த அன்பு, மரியாதை, அபிமானம் காரணமாகத்தானே மாத்தளையில் இருந்து மையித்துச் செய்தியைக் கேட்டவுடன் ஓடோடி வந்திருக்கிறோம்… 

லத்தீபாவின் சிந்தனைகள் ஒரே திக்கில் சென்று கொண்டிருந்தன. கால்கள் தோய்ந்து இற்று விடுமோ என வலித்தன. பெண்கள் கூட்டம் நெஞ்சோடு நெஞ்சு முட்டி மூச்சு விடுவதற்குக்கூட அல்லற்பட்டுக் கொண்டிருந்தது. 

அந்தச் சிறிய வீட்டைச் சுற்றியிருந்த வேலி எற்கனவே கூட்டத்தால் மிதிக்கப்பட்டு சிதிலமாகியிருந்தது. அந்த வேலிக் கட்டைகளின்மீது வயோதிபப் பெண்கள் சிலர் தாளாமல் உட்கார்ந்து கொண்டனர். பெண்கள் கூட்டத்தில் ஒரு அலை வீட்டின் பின்புறமாக உள்நுழைய முண்டியடித்துக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. 

“வா. நாங்களும் அவங்களோட போவோம்…” நுஸ்ரத் லத்தீபாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு முன்னேறினாள். ஒருவாறாக வீட்டைச் சுற்றி பின்வாசலை அடைந்தார்கள். 

ஏதோ சஞ்சீவனம் கேட்பதற்காக தெய்வத்தின் சந்நிதியில் காத்துக் கிடப்பவர்கள் போன்று அந்தப் பெண்கள் எல்லோரும் வாடி வரண்டு கிடந்தார்கள். தாகத்தால் நாக்கு வரண்டு உலர்ந்து மேலே ஒட்டிக் கொண்டது. ஒவ்வொரு முகத்திலும் சோகம், கவலை. எதிர்பாராத மரணத்தின் அதிர்ச்சி, துயரம்… 

நிலத்தில் கால்கள் பாவாமல் மிதப்பதே போன்று லத்தீபாவும், நுஸ்ரத்தும் பின்கட்டு தாழ்வாரத்தைத் தாண்டி நடுக்கூடத்தை அடைந்தார்கள். 

முன்ஹோலில் யாரோ ஒரு ஆணின் குரல் உரத்துக் கேட்டது.

“நீங்க எல்லாரும் இப்புடி நெருக்கியடிச்சுக்கிட்டு ஆம்புள மையத்தைப் பாக்கணும்டு வந்து நிக்கிறீங்களே, இது சரியா? யோசிச்சிப் பாருங்க..” நிதானமாக, ஆனால் உறுதியாக அக்குரல் ஒலித்தது. 

மீண்டும் நுஸ்ரத்தின் முகத்தைப் பார்த்தாள். ஏதோ தவறு செய்கிறோம் என்ற தாழ்வுணர்வு அந்தப் பார்வையில் தொனித்தது. 

“இன்னும் கொஞ்ச தூரம்தான். கிட்டப்போய் எப்பிடியாவது பாத்துருவோம். வா பேசாம…” நுஸ்ரத் பிடித்திருந்த கைகளை இறுகப் பற்றினாள். 

பத்தடி தூரம் செல்வது பத்து கிலோ மீட்டரைக் கடப்பது போன்று கஷ்டமாக இருந்தது. அந்த சந்தடிக்குள் எதிரேயிருந்த அறையில் சோகமே உருவாக அமர்ந்திருந்த sir இன் மனைவியையும், மகளையும் கண்டாள் லத்தீபா. sir இன் மகளை முன்பு கண்ட ஞாபகம். அதைவைத்து sir இன் மனைவி இவர்தானோ என்று அவளால் ஊகிக்க முடிந்தது. 

Sir எப்பவுமே தனது மனைவியை ‘ராசாத்தி’ என்றே குறிப்பிடுவார். தனது மனைவிக்கு அவர் அவ்வளவு உயர்ந்த இடம் வழங்கியமை கண்டு மாணவிகள் வியப்படைவார்கள். அந்த ‘ராசாத்தி’ சுந்தரரூபியாக இருப்பாள் என்று கற்பனையும் செய்வார்கள். ஆனால், லத்தீபாவின் கண் முன்னே தெரிந்தது மிகமிக சுமாரான ஒரு பெண்ணின் முகம். 

வந்திருந்த சில பெண்கள் ‘ராசாத்தி’க்கு ஸலாம் கொடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். 

Sir இருமி இருமி அந்த இருமலூடே கற்பிக்கும் கோலம் திடீரென லத்தீபாவின் கண்முன்னால் வந்தது. ஏறத்தாழ பதினைந்து வருஷங்களுக்கு முன்பே Sir இற்கு தொடர்ச்சி யான ஆஸ்த்துமா இருந்து வந்திருக்கிறது. 

இதோ நெருங்கிவிட்டார்கள். வெள்ளைத் துணியால் மூடிய மையித்தின் காலண்டையில் வந்துவிட்டார்கள். 

அவர்களுக்கு முன்பாக சென்று மையித்தைச் சுற்றி நின்றுகொண்டிருந்த பெண்கள், நெருக்கித் தள்ளிக்கொண்டு மையித்தின் முகத்திரை களைவதற்காகக் காத்து நின்று கொண்டு இருந்தார்கள். நுஸ்ரத்தின் முதுகோடு ஒட்டியபடி நின்று அவளது கழுத்துக்கு மேலே எம்பிப் பார்த்தாள் லத்தீபா. 

“எவ்வளவோ சொல்லிட்டேன். நீங்க யாரும் கேக்குற மாதிரியில்ல.. சரிசரி… சுருக்கா பாத்துட்டு இடத்தைக் காலி பண்ணுங்க. இதனால் ஒங்களுக்கும் பாவம்….மய்யித்துக்கும் பாவம்…” 

மீண்டும் அந்த மனிதர் நிதானமாகவும், உறுதியாகவும் கூறினார். 

திடீரென லத்தீபாவுக்கு பொறி கலங்கினாற் போலிருந்தது. “அந்தா பாரு…sir முகத்தைக் காட்டுறாங்க… 

சுருக்காப்பாரு…” நுஸ்ரத் லத்தீபாவை நிமிண்டினாள். 

தனக்குப் பக்கவாட்டில் வெள்ளைத் துணியால் போர்த்திருந்த sir இன் கால்களை, பாதங்களை நன்றியுடன் நோக்கின லத்தீபாவின் விழிகள். 

அவளுள் மீண்டும் ஒரு சுழல் தோன்றி புரண்டெழுந்தது. ‘வேணாம்.. sir இன் முகத்தைப் பாக்க வேணாம்.. ஆண் மையித்தை நெருக்கமான சொந்தமில்லாத பெண்கள் பாக்குறது பாவம்… எனக்கு எப்பவும் நல்லதையே சொல்லித் தந்த sir இற்கு, உத்தமனா வாழ்ந்து காட்டிய sir இற்கு, ஒரு பட்டதாரியா, டிப்ளோமாதாரியா, நா உயரக் காரணமா இருந்த sir இற்கு, நானும் ஏதாவது நன்மை செய்யணுமே…! பாக்காமலே திரும்பிப் போயிடறதுதான் நல்லது…!’ 

அவளது உள்மனக் குரல் உரத்து ஒலித்தது. உடனே மறுபுறமாகத் திரும்பலானாள் லத்தீபா. 

அந்தக் கல்வி வளநிலையக் கட்டடம் மனித அலைகளால் மோதுண்டு கொண்டிருந்தது. மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களுமாக அந்த விழா மண்ட பத்திலே கூடியிருந்தார்கள். இன்னும் பலர் வந்துகொண்டு இருந்தார்கள். 

மண்டபத்தின் பின்புற உள் அறையில் கல்வி அதிகாரி வீற்றிருந்தார். அவர் தன் முன்னாலிருந்த காகிதக் கட்டுகளை மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். 

இன்று…நல்ல ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் வைபவம். தனது பிரதேசத்தில் சிறந்த தொண்டாற்றிய ஆசிரியர் களுக்குப் புள்ளி வழங்கி, அவர்களைக் கௌரவிக்கும் இந்த விழாவை தனது வருடாந்த செயற்றிட்டமாக அறிவித்திருந்தார் அவர். அதன்படி சகல ஏற்பாடுகளும் பூர்த்தி யாக்கப்பட்டு இன்று விருது வழங்கப்பட இருக்கிறது. அதைக் காண்பதற்கு சகல ஆசிரியர் களும், உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்களும் கட்டாயம் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று தனக்குக் கீழுள்ள ஒவ்வொரு பாடசாலைக்கும் கண்டிப்பாக உத்தரவு பிறப்பித் திருந்தார் அவர். 

தகுதியான ஒருவர் விடுபட்டிருந்தாலும் பரவா யில்லை, தகுதியற்ற ஒருவர் விருது பெற்று விடக்கூடாது என்பதில் அவருக்கு அதீத சிரத்தை. வந்து சேர்ந்த விண்ணப் பங்களைக் கவனமாகப் பரசீலித்து தனது உதவியாளர்கள் தயாரித்துத் தந்த மனுவை மீள் பரிசீலனை செய்து, பல திருத்தங்கள், வெட்டுக்கொத்துகள் இட்டு, சிறந்த பத்து ஆசிரியர்களை தனது பிரதேசத்திலிருந்து தெரிந்தெடுத் திருந்தார். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கல்வித் திணைக்களத்தினூடாக தனது சுற்றறிக்கையை அவர் விடுத்திருந்தார். அதன்படி இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புகின்ற ஆசிரியர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்புமாறு வேண்டப்பட்டிருந்தார்கள். 

அந்த சுற்றறிக்கையை ஏற்று எராளமான விண்ணப் பங்கள் வந்து குவிந்தன. அவற்றையெல்லாம் பார்த்து முடிப்ப தற்குள் போதும் என்றாகிவிட்டது அவருக்கு. இதற்கெல்லாம் விண்ணப்பங்களில் காணப்பட்ட குளறு படிகள்தான் காரணம் என்று சொல்வதற்கில்லை. அவற்றை உள்வாங்கி, ஆராய்ந்து, விருதுக்குரியவர்களைத் தெரிவு செய்வதில் அவர் மறை முகமான பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

அவர் வேறெந்த கல்வித் தகுதிகளும் இல்லா விட்டாலும் கூட, ஒரு கல்வியதிகாரியாகத் தன்னை நியமித்து, பணிப்பாளர் என்ற பட்டத்தை அலங்கரிக்க வைத்த அரசாங்கத் தின் அதிக பட்ச விசுவாசி. பலப்பல கல்வி கற்ற, நிர்வாகத் துறையில் பட்டை தீட்டப்பட்ட, அனுபவமும் ஆழ்ந்த அறிவும் சான்ற கல்விமான்கள் நிரம்பிய கூட்டங்களின் வாசல் படிகளைக்கூட ஒருபோதும் அவர் மறந்தும் மிதித்ததில்லை. அப்படியிருந்த போதும் அவருக்கு இந்தக் கல்வியதிகாரி பதவி வாய்த்திருக்கிறதென்றால் அவரது விசுவாசத்தைப் பற்றி கேட்கவா வேண்டும்? அல்லது மறுபுறம் பார்த்தால்… அவர் எவ்வளவு பெரிய விசுவாசியாக இருந்திருந்தால் இந்தப் பதவி வாய்த்திருக்கும்… 

நேரம் காலை ஒன்பதரையைத் தாண்டிவிட்டிருந்தது. காலை எட்டுமணி என்றால் ஒன்பது மணி என்பதுதான் நடைமுறைச் சித்தாந்தம். அதிலும் இவர் ஒருபடி மேலே போய் முப்பது நிமிடங்கள் அதிகமாக எடுத்துக்கொண்ட பின்னர் உள்வாயிலுக்கூடாக மேடையில் நுழைந்தார். 

மண்டபம் நிரம்பியிருந்தது. ஒவ்வொரு சோடிக் கண் களும் அவரது வருகையையே ஆவலாக எதிர் பார்த்திருந்தாற் போன்று…. 

மேடையில் ஆளுங்கட்சி அதிகாரிகள் அமர்ந்திருந் தார்கள். மண்டபத்தின் முன்வரிசைகளில் மாணவர்கள் வெள்ளைச் சீருடையில் கலகலத்துக் கொண்டிருந்தார்கள். 

அனைவர் மத்தியிலும் திடீரென ஒரு நிசப்தம். இவர் தனது குள்ளமான தடித்த உருவத்திற்குள்ளே வேண்டு மென்றே ஏற்படுத்திக் கொண்ட கம்பீரத்தை வரவழைத்துக் கொள்ள… 

“சிறந்த ஆசிரிய மணிகளுக்கல்லாம் முடிசூடி கௌரவிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்த-அதற்காக அல்லும் பகலும் பாடுபட்ட — எமது கல்வி அதிகாரி இதோ வந்துவிட்டார்….” அறிவிப்பாளர் உற்சாகமாக வரவேற்புப் பத்திரம் வழங்க, தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார். 

அப்போதுதான் கவனித்தார். தனக்கு எதிர் வரிசையில், மண்டபத்தில், பள்ளி மாணவர்களுடன் ஒருத்தியாக, வெண் மல்லிகை மொட்டுகள் நடுவில் பளீரெனத் துலங்கும் ஒற்றை ரோஜாவைப்போல வெண்ணிறச் சேலையில் வந்திருப்பது. ஆஹா.யார் அது? கஸ்தூரி அல்லவா? 

மாணவர்களையும், என்னையும் எக்காரணத்தினாலும் பிரிக்கமுடியாது எனுமாப்போல தான் வழக்கமாக உடுத்து கின்ற வெள்ளை நிறச் சேலையை இழுத்துப் போர்த்துக் கொண்டு, கருகருவென்ற கண்ணாடிக்கூடாக சாந்தமான தழுவும் பார்வையோடு அந்தப் பெண்மணி அமர்ந்திருந்தாள். இதுவன்றோ சிறந்த ஆசிரியருக்குரிய முத்திரை! ஒரு ஆசிரியன் மாணவனோடு மாணவனாகக் கலக்காமல் எப்படி நல்லாசிரி யனாக உயர்வது? 

கஸ்தூரி டீச்சரைப் பற்றித்தான் இந்த உலகமே சொல்லுமே. கல்வியில் அவர் ஏறிய படிகள் எத்தனை… நிர்வாகத்தில், ஆளுமையில், அன்பில், அர்ப்பணிப்பில்… அவர் எத்தனை கோணங்களில் மிளிர்ந்தார்..? அதுமட்டுமா? இலக்கியத்தை யும் விடவில்லையே…அவர் எழுதிக் குவித்த நூல்கள் எத்தனை… சிந்தனையைத் தூண்டிய உரைகள் எத்தனை யெத்தனை! ஆனால்….இந்தக் கல்வியதிகாரியின் சிறந்த ஆசிரியர் பட்டியலில் அவரது பெயர் இல்லையே ஏன்? குறு குறுக்கும் விழிகளைத் தாழ்த்திக்கொண்ட கல்வியதிகாரி ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த மீண்டும் நிமிர்ந்து பார்க்கிறார். 

கஸ்தூரி டீச்சர் அப்படியேதான் இப்போதும் இப்போதும் உட்கார்ந் திருக்கிறார். அவரது பார்வை சாட்சாத் பாரதியின் பெண்மைத் தெய்வத்தின் பார்வையை ஒத்திருப்பதுபோன்று, அனுபவக் கல்வியின் சுடரும், உண்மையின் தெளிவும் முன்னரை விட அதிக மதிகம் ஜொலிக்கிறாற்போல கல்வி யதிகாரிக்குத் தோன்று கின்றது. அந்தக் கணத்தில் நெஞ்சை ஏதோ…. 

தாளமுடியாமல் மறுபடியும் தனது கண்களைத் தாழ்த்திக் கொள்கிறார். 

– ஜீவநதி, பங்குனி -சித்திரை 2008.

– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *