பெண்ணடிமை தீருமட்டும்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 674 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை தீராது’ – மகாகவி பாரதியார்

“இப்படி இந்தப் பக்கம் கொஞ்சம் ஒருக்கனிச்சி படும்மா” ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த சாம்பல் பொட்டலத்தை உள்ளங்கையில் அமர்த்திச் சூடுபார்த்தபடியே கைத் தாங்கலாக மகளின் இடுப்பை அணைத்து, ‘ம்… ம்’ என்றாள் தாயம்மா கிழவி.

கிழவியின் ஒத்தாசையுடன் தனது முழுப்பலத்தைத் திரட்டி முயன்றும் திரும்ப முடியாது போக இந்த எத்தனிப்பில் வெடவெடக்கும் கால்களை சுயகட்டுப்பாட்டில் நிறுத்த முடியாமல் வெறுமையுடன் தாயைப் பார்த்ததாள் அஞ்சலை.

கிழவியின் வெற்றுக்கண்களுக்கு அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்துகொள்ளும் திராணி கிடையாது, என்பதைக் கண்டு கொண்ட ‘குப்பிலாம்பு’ பராமுகமாக உமிழ்ந்துகொண்டிருந்தது.

வெடவெடக்கும் கால்களில் சாம்பல் பொட்டலத்தை அழுத்தித் தேய்த்து, மேலிருந்து கீழாக உருவிக் கொடுத்தாள் கிழவி. பார்வை தான் வஞ்சகம்செய்து சலனங்களை மறைத்தாலும், யூகத்தில் உணர்ந்து கருமமாற்ற முடியாதபடி உடலினைப்போல் அனுபவமும் தளர்ந்து போய் விடுவதில்லையே! தள்ளாத வயதில் உடல்தளர்ந்து போனாலும் உள்ளம் தளர்ந்துவிடாமல் அனுபவ முத்திரையாக கனிந்து போய் விடுகின்றது. “என் பிள்ளைக்கு புரண்டு படுக்கக்கூட சத்து இல்லை… போட்டா போட்டபடியே என்ற நினைவு ஊறும் போது கிழவியின் கண்கள் பனிக்கின்றன. மூக்கை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.

பொறிபறக்கும் சாம்பல் பொட்டலத்தைக் கால்களில் ஒற்றி ஒற்றி எடுக்கும்போது நெஞ்சுப்பகுதி மீண்டும் குளிர ஒத்தடத்திற்கு அடங்கிப் போயிருந்த ‘புர் புர்…’ என்ற ஆஸ்துமா மூச்சிறைப்பு ‘கீர்… கீர்…’ என்ற இழுவையுடன் மீண்டும் தொண்டைக்குள் கட்டியம் கூறியது.

பனிக்காலம் தொடங்கிவிட்டால் அஞ்சலை பாயும் படுக்கையும்தான். ஆஸ்துமா வாட்டி எடுத்துவிடும். மூன்று பிள்ளைகளுக்குத் தாயான நோஞ்சான் உடம்பைப் பார்க்கவே பரிதாபமாகவே இருக்கும். பழைய தேயிலைக் கூடைக்கு சேலையைச் சுற்றியது போல எலும்புக் கூட்டைக் காட்டிக் கொண்டு கிடக்கும் போது, “இந்தப்பாடு படுவதற்கு செத்தால் தேவலை” என்று தோட்டமே அனுதாபப்படும்.

நோயில் படுத்தாளென்றால் கைகால்கள் நடுக்கமெடுத்து வளைந்து வழங்காமல் போய்விடும். பின்னர் தேறி எழுந்து நடமாடுவதற்குள் வீட்டிலுள்ள செப்புப்பாத்திரங்கள் கூட ரூபா அஞ்சி ரெண்டுக் கென்று அடகில் தவம் கிடக்கும்.

தாயம்மா கிழவியின் கணவன் தோட்டத்தில் தண்ணிக்காரனாக இருந்தான். இராமசாமி என்ற அவனது பெயர் மறைந்து போக எல்லோரும் ‘தண்ணிக்காரர்’ என்றே அழைப்பர். தோட்டத்தில் வாண்டு பட்டாளம் தண்ணிக்கார தாத்தா தண்ணிக்கார தாத்தா என் மொய்த்துக் கொண்டிருக்கும்.

காதில் கடுக்கன் மின்ன, தண்ணீர் வாளியுடன் தூரத்து மலைக்குள் புகுந்துவிட்டாரென்றால் குமரிகள் அவரைச் சுற்றிக்கொண்டு செய்யும் குறும்புகளுக்கோ அளவே இல்லை. உச்சிகொதிக்கும் வேளையில் ஒரு மிடறு வாங்கிக் குடித்தார்களென்றால் புதுத்தெம்புடன் மலையில் ஏறிவிடுவார்கள். “அவர் இருக்கும்போதே நான் போயிடனும்” என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த தாயம்மா கிழவியை ஏமாற்றிவிட்டு அவர் ஒரு நாள் திடீரெனப் போய்விட்டவுடன் கிழவி தன்மகள் அஞ்சலை வீட்டில் அடைக்கலமாகிவிட்டாள்.

அவ்வேளையில் அஞ்சலையின் மூன்றாவது பிள்ளையான பையன் வயிற்றில் மூத்த பெண் தங்கத்திற்க்கு ஏழு வயது, இளையவள் அவளுக்கு ஒரு வயது இளமை. அஞ்சலையின் கணவன் சுப்பையா தோட்டத்தில் தொழிற்சங்கக் இளையின் தலைமைப் பதவியையும் ஏற்றுத் திறமையாக செயலாற்றி வந்தான்.

‘ரவுண்’ பிந்திவிட்டபடியினால், ஒருநாள் மாலை தோட்டத்தில் அந்தி கொழுந்தெடுப்பு நடந்து கொண்டிருந்தது. கொழுந்து முற்றிப்போய் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக சகலரும் அசுரவேகத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அது கொழுத்துக்காலம். காலையிலிருந்தே மழை தூறிக்கொண்டிருந்த போதும் மழையினைப் பொருட்படுத்தாது ‘றப்பர் சீட்’, கம்பளி இன்னும் படக்குத் துண்டுகளில் புகுந்து கொண்டு வேலையில் கண்ணாக் இருந்தனர்.

காலையிலிருந்து சீராகப் பெய்து கொண்டிந்த மழை அந்தியில் ஒரே யடியாக அடம் பிடித்துக் கொண்டு கொட்டம் அடித்தது. எல்லோரும் பித்திய ரவுணை முடித்துவிட்டு நாளை புதுமலையில் நிற்கவேண்டுமென்ற ஆவலில் கவிழ்ந்துகொண்டுவரும் இருளையும் கவனத்தில் கொள்ளாது தளிர்களை வீழ்த்திக் கொண்டிருந்தனர். இருண்ட வானத்திலே அக்கினிப் பந்தொன்று திடீரென நெளிந்து உதிர்ந்தது. இடிமுழக்கம் செவிப்பறைகளை அறைந்து தாக்கியது. நடந்ததைப் புரிந்து கொள்வதற்கு முன்னர் நால்வர் கருகிக் கிடந்தனர்.

அவர்களில் சுப்பையாவும் ஒருவன். சுப்பையா இருக்கும் வரை அஞ்சலைக்கு எவ்வித கஷ்டமுமே தெரியாமல் காலம் ஓடிக்கொண்டிருந்தது. இதற்குப்பின்னர் முழுக்குடும்பப் பொறுப்புமே அவள் தலையில் வந்து விழுந்த போது கலங்கிப் போய்விட்டாள். நேரம்பார்த்து நோய்வேறுவத்து ஒட்டிக்கொண்டு நிரந்தரமாக இடம்பிடித்துக் கொண்டு விட்டது. நோயாளி உடம்பு, உழைக்க முடியாத தாய் – விபரம் புரியாத மூன்று குழந்தைகள், குடும்பச்சுமை வாட்டி எடுத்துவிட்டது.

சுப்பையா உயிருடன் இருந்த போது கொடுக்க வாங்கவென்றிருந்த ‘சட்டிக்கடை அம்மா’ அவ்வப் போது இரண்டொன்று என்று கொடுத்து உதவி செய்தாள். செயின், அட்டியல் என்று தொடங்கி மூக்குத்திவரை விற்று மூளியாக்கும் நிலைக்கு வந்துவிட்டது. குளிர் காலம் வந்துவிட்டால் ஆஸ்துமா அலைக்கழித்து விடும். கூடவே கை கால்கள் நடுக்கமெடுத்து வளைந்து குறண்டி விளங்காமல் போய் பின்னர் ஒருவாறு தேறி எழுந்து நடமாடுதற்குள் மாதங்கள் பல ஓடி விடும்.

இந்த நிலையில் மூத்தபெண் பெரிய டீமேக்கரின் சிபார்சுகளுடன் கொழும்பில் ஒரு பங்களாவிற்கு பிள்ளை பார்ப்பதற்கென்று அனுப்பி வைத்தாள். “ஒரு வேலையுமே கிடையாது வேளாவேளைக்கு சாப்பிட்டுவிட்டு பிள்ளையோடு விளையாடிக் கொண்டிருநதால் போதும்” என்ற வேண்டுகோளோடு அழைத்துச் செல்லப்பட்டவள் மூன்று மாதங்களின் பின்னர் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குறி சுடப்பட்டு ‘கள்ள மூதேசி’ என்ற பட்டத்துடன் தோட்டத்துக்கு திரும்பி வந்த அஞ்சலையை ‘இனிப் பிச்சை எடுத்தாலும் பிள்ளைகளை அனுப்புவ தில்லை” என்ற முடிவினை எடுக்க வைத்துவிட்டது.

ஆளும் பேருமாக வேலை செய்பவர்களே ‘ஐயோ, ஐயோ’ என்று என்று பரிதவிக்கும் போது நிரந்தர நோயாளியான அஞ்சலை வயதான தாயையும் மூன்று பிள்ளைகளையும் வைத்து காலத்தை ஓட்டுவதே போதும் என்றாகிவிட்டது.

தாயம்மா கிழவி விதியை நொந்தபடியே மகள் பேரிலுள்ள கொந்தரப்பிற்கு தினமும் நடையைக் கட்டி விடுவாள். கிழவி பென்சன் எடுப்பதற்கு முன்னர் பிள்ளை மடுவத்தில் பிள்ளைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்து வந்தாள். அவள் கைப்பட்டு வளர்ந்தவர்கள் இன்று தோட்டத்தில் மட்டுமன்றி கொழும்பில் பெரிய சைவக்கடைகளிலும் தொழில் பார்த்து வருகிறார்கள்.

தீபாவளி, பொங்கல் என்று வரும் திருநாட்களில் விதம் விதமாக உடுத்திக் கொண்டு தோட்டத்தை வலம் வரும் போது ‘ஏல பெரிய எனந்தாரியாகிட்டாக… மூக்க வடிச்சிக்கிட்டு சாக்கில கெடந்தத மறந்திட்டாக போல நான் தூக்கி.. தொடச்சி வளர்த்தவ’ என்று இழுக்கும் போதே இளசுகள் ‘இல்ல அம்மாயி உன்னைய பார்க்கத்தான் வந்தேன் என்று சங்கோஜத்துடன் இந்தா வெத்திலை வாங்கிப் போடு என்று சில்லறையைக் கொடுத்து விட்டுப் போவார்கள். கிழவி ‘மகராசனா இரு’என்று வாழ்த்தி விட்டு சில்லறையை முந்தானையில் முடிந்து கொள்வாள்.

இரவு வெகு நேரம்வரை விழித்திருந்து மகளுக்கு பணிவிடை செய்த கிழவி காலையிலேயே எழுந்து தலைவர் முருகையா வீட்டை நோக்கி நடந்தாள்.

தலைவர் முருகையா புறப்பட் டுக் கொண்டிருந்தார். ‘அம்மாயி உங்க விடயமாகத்தான் இன்றைக்கு ஜில்லாவுக்குப் போகிறேன். இன்னைக்கு லேபர் ஓபீசில் கொன்புரன்சு நடக்குது. துரையும் வாராரு இந்தத் தடவை எப்படியும் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.’ இளைஞனான தலைவர் மிகவும் உறுதியுடன் கூறினார்.

“எப்படியும் பேசி முடிவெடுத்துக் கொண்டு வாங்க. அஞ்சலை இனி பொழைக்க மாட்டா போலிருக்கு. பேத்தி தங்கத்தை பேர் பதிஞ்சிட்டீங்கன்னா எங்க குடும்பம் எப்படி யோ பொழைச்சிக்கிடும்.”

“அம்மாயி.. நான் புதுசா பேரு பதியும்படி துரையை கேட்காத நாள் இல்லை..அவன் நாட்டாளுக்கும் வேலை கொடுக்கனும்னு இழுத்தடிச்சிக்கிட்டே வாரான். இன்னைக்கு எப்படியும் முடிவு கெடைச்சிடும். நீங்க போங்க. நான் அந்திக்கு வாரேன்” – தலைவர் வேகமாகப் புறப்பட்டு விட்டார்.

தலைவரை சந்தித்த கீழவி வழமை போல் கொந்தரப்பிற்கு நடந்து விட்டாள். வயிறு ‘கடமுடா’ என்று உருட்டியது, வெறும் சாயத் தண்ணி உள்ளே போராடியது;

வயது வந்தவர்களையும் கைக்காசு ரேட்டில் ‘பாசான் துடைக்க, உரம் போட’ என்று சில்லறை வேலை செய்பவர்களையும் தோட்டத்துச் செக்ரோலில் பேர் பதிந்து பெரியாள் ரேட்டில் வேலை வழங்க வேண்டுமென்று தோட்டத்துத் தலைவரும் ஜில்லா பிரதிநிதியும் கேட்காத நாள் கிடையாது. வாரத்திற்கொரு மகஜர் மாதத்திற்கொரு ‘கொன்புரன்சு’ என்று முயன்று கொண்டிருந்தனர்.

மூன்று தலைமுறையாக தொழிலாளர்கள் பெருகிக் கொண்டிருக்கின்றனர். தோட்டம் அப்படியே தான் இருக்கின்றது. உழைத்துக் கொடுக்கும் தொழிலாளரைப் பற்றியோ, வஞ்சகம் செய்யாது தளிரை வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மண்ணைப்பற்றியோ எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

புதிய மலை கால்போட்டு சரிவுகளுக்கு கல்கட்டுதல் என்பவை எல்லாம் ‘எஸ்டிமேட்டில்’ தான். எப்போதாவது பேருக்கு ஆங்காங்கே இடம்பெறும். பேருக்கு ரோட்டோர மலைகளில் ஆங்காங்கே உரத்தைத் தூவிவிட்டு பெரும்பகுதி உரம் தோட்டத்திற்கு வராமலே துரை எல்லோரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிடுவார். இது ஒன்றும் ஒருவருக்கும் தெரியாத சிதம்பரச் சக்கரமல்ல… தெரிந்தும் என்ன பயன்? துரை செல்வாக்கு அப்படிப்பட்டது.

மாலையில் கொந்தரப்பிலிருந்து வீடு திரும்பும் போதே கிழவி பீலிக் கரையில் குளித்துவிட்டு, சேமன் கொழுந்து வெட்டிக்கொண்டு வந்தாள்.. இன்று அஞ்சலைக்கு ஆஸ்துமா அவ்வளவாக இல்லை. எனினும் எழுந்திருக்க முடியவில்லை.

மூத்தவள் தங்கமும், இளையவள் சந்திராவும் தோட்டத்திற்குப் பக்கத்திலிருக்கும் ‘நாட்டிற்கு’ப் போய் நல் அறுவடை செய்த பின் வயல் வெளியில் தவறிப் போய் கிடக்கும் நெற்கதிர்களை தேடி எடுத்துச் சேகரித்துக் கொண்டு வந்திருந்தார்கள்.

கடைக்குட்டி கோபால் நிர்வாணமாக முற்றத்துப் புழுதியில் வாண்டுகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். மூத்தவள் தங்கமும் சந்திராவும் தண்ணீர் கொண்டு வர, சமையல் ஆரம்பமாயிற்று.

தங்கம் பதினான்கு வயதினைக் கடந்துவிட்ட போதிலும், வயதிற்கேற்ற வளர்ச்சி உடலில் காணப் படவில்லை. ஒட்டிய தேகம், உள் வாங்கிய கண்கள், பரட்டைத் தலை. பட்டினிக் கோலம். பரிதாபக் காட்சிப்பொருளாக நின்றாள்.

பூப்பெய்தும் வயதினை அடைந்து விட்டவளா?..அப்படி ஒரு பொலிவு ..லட்சுமிகரம். தோற்றம் கிடையவே கிடையாது. இளையவளும் அப்படியே வளர்ச்சியின்றிக் குள்ளமாகக் காட்சியளித்தாள்.

கிழவி காட்டுச் சேமம்கீரைத் தண்டின் நாரை உரித்து அரிப்பு நீங்குவதற்காகப் புளிக்கரைசலில் அதனை ஊறவைத்துக்கொண்டிருந்தாள்.

“அம்மாவி… அம்மாயி..”

கிழவி எட்டிப்பார்த்தாள். தலைவர் நின்று கொண்டிருந்தார்.

“என்னப்பா போன காரியம் எப்படி? எப்ப கைக்காசு புள்ளைகல செக்குரோலில் பதியுறாங்களாம்”. கிழவியின் கேள்வியில் அவசரம், நம்பிக்கை, பசித்த வயிறு எதிர்காலம்! அத்தனையும் கொக்கிப் போட்டு கொளுவியிருந்தன.

பதில் கூறாது தலைவர் மௌனமாக நின்றார். ஒருவேளை தான் கூறப்போகும் செய்தியை கிழவி எப்படித் தாங்கிக் கொள்ளப் போகின்றாள் என்று நினைத்தாரோ.. என்னவோ?..

“என்னப்பா ஒன்னும் பேசாம நிற்கிறீங்க? இன்னைக்கும் ஒன்னும் முடிவாகலியா?..” கிழவியின் குரல் நடுங்கியது. தலைவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு துக்கம் மேலிடக் கூறினார்; “அம்மாயி கைக்காசு புள்ளைகளை பேர் பதியுறதா முடிவாகிறிச்சு…. ஆனா” தலைவர் இழுத்தார்.

“ஆனா என்னப்பா, சுணங்குமா?” கிழவி இடிந்துபோய்விட்டாள்.

“அதெல்லாம் சுணக்கம் ஒன்னும் கிடையாது வயசுக்குவந்த புள்ளைகளைத்தான் அடுத்த முதலாம் திகதி பேர் பதியப் போறாங்களாம் இனிமேல் சில்லறை வேலை செய்யுற கைக்காசு பிள்ளைகளை நிறுத்தப் போறாங்களாம். வயசுக்கு வராத பிள்ளைகளுக்கு வேலை கொடுக்கிறது குத்தமுன்னு சட்டம் சொல்லுதாம். அப்படின்னா அடுத்த முதல்தேதிக்கு உங்க பேத்தியை பேர் பதிய முடியாதுன்னு நினைக்கிறேன். என்ன செய்யுறது? உங்க நிலைமை எனக்குப் புரியுது. இதுக்காகத்தான் நான் விட்டுக் கொடுக்காம இவ்வளவு தூரம் போராடிப் பார்த்தேன்.”

தலைவர் எப்போது போனார் என்பது கூடக் ழெவிக்கு நினைவில்லை. பேரப்பிள்ளைக்குச் சாப்பாடு போட்டுக் கொடுத்துவிட்டுச் சிவனே என்று திண்ணையில் முடங்கிவிட்டாள். நித்திரை வரவில்லை: எப்படி காலத்தை ஓட்டுவது? மகள் இளித்தேறி எழும்புவது என்பது நடக்க முடியாத காரியம். கொந்தரப்பு சம்பளம் செலவுகளுக்கு செக்ரோலில் பிடிக்கப்பட்டது போக தோட்டத்திற்கு கடன். ஐந்து ஜீன்கள் எப்படி வாழ்வது?

மூத்தவள் தங்கத்தைப் பேர் பதிந்துவிடலாம் என்ற நம்பிக்கையிலும் இடிவிழுந்துவிட்டது. அதுமட்டுமா? இனி கைக்காசு, சில்லறை வேலைகட்கும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இனி அடுத்த வருடம்தான்.

என்ன செய்வது? இதற்குத்தானே தலைவர் வீட்டிற்கு காலையிலும் மாலையிலுமாக நடையா நடந்து திரிந்தாள்.

மறுநாள் கிழவி கொந்தரப்புக்குச் புல்வெட்டச் செல்லவில்லை. தனது இரு பேத்திகளையும் அழைத்துக் கொண்டு நாட்டுக்குப் போய், சூடு மிதித்து நெல்லை அள்ளித்தூற்றிச் சேகரித்த பின்னர் மண்ணோடு ஓதுக்கிப்போடப்பட்டிருக்கும் பதர் குவியலைப் புடைத்து தேறிய நெல் லை பழந்துணியில் பொட்டலமா கக் கட்டிக்கொண்டு வந்தாள்.

நாட்டிலிருந்து வீடு திரும்பும் போது சூரியன் மேற்கு நோக்கிப் பயணமாகிவிட்டாள். கிழவி பேத்தி மார்களுக்குப் பல கதைகளையும் புத்திமதிகளையும் அடுக்கிக் கொண்டே வந்தாள்.

கிழவி மனதில் திட்டமொன்று உருவாகிக் கனத்தது. எப்படியும் அடுத்த முதலாம் திகதி தங்கத்தின் பெயரைப் பதிந்துவிட வேண்டும் என்பதைத் திடப்படுத்திக் கொண்டாள்.

தனது திட்டத்தை நினைக்கும் போது ஒருபுறம் பயமாகவும் கவலையாகவும் பாவமாகவும் இருந்தது எனினும் –

சரியா பிழையா என்பதை யோசிக்க மறந்துவிட்டாள்… வேறுவழி வாழ வேண்டுமே..!

மாலை மயங்கத் தொடங்கியது. கொண்டுவந்த நெல்லை உரலில் போட்டுக் குற்றிக் கொண்டிருந்த மூத்தவள் தங்கத்திடம், ஏதோ கூறிய கிழவி, அவ்ளை அழைத்துக் கொண்டு போய்க் கதவு மூலையில் அமர்த்திவிட்டுப் படுக்கையில் கிடக்கும் மகளிடம் ஏதோ காதோடு காதாக கூறினாள். அவள் படுத்த படியே விசித்து விசித்துக் கண்ணீர் சிந்தினாள்

சிறுமி தங்கத்திற்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘அம்மாயி நான் எழுந்து வாரேன்’ என்று நடமாட முற்பட்டாள். அவளை ஏசி மீண்டும் கதவுமூலையில் உட்கார வைத்துவிட்டாள், கிழவி. கிழவி யின் கண்டிப்பான குணத்தை தங்கம் அறிவாள். அதற்குப் பின்னர் அவள் எழுந்திருக்கவில்லை.

இளையன் சந்திரா அம்மாயின் கட்டளைப்படி ஓட்டமும் நடையுமாக பீலிக்கரைக்குப் போய் வீட்டிலுள்ள பாத்திரங்களில் நீரை நிரப்பிக் கொண்டிருந்தாள்.

மாலை மயங்கிவிட்டது. திண்ணையில் அமர்ந்த கிழவி ஒரு பாட்டம் பெரிதாகக் குரல் எடுத்து தன் மருமகனை நினைத்து அழுதாள். பின்னர் மேட்டுலயத்துச் சின்னான் டோபியிடம்போய் ரெண்டு மாத்து வாங்கிக்கொண்டு வீடுகளுக்கு சேதி சொல்லிவிடும்படி கூறிவிட்டு வந்தாள்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் குசு… குசுவென விசாரித்துவிட்டுச் சிரித்தபடியே போனார்கள். தொங்க வீட்டு முனியம்மா, ‘என்ன அடுத்த வீட்டு தீட்டுவீட்டுக்குப் போகலியா?’ என்று ஆறு மணிக்கே கேட்க ‘போகாம இருக்க முடியுமா? அடுத்த வீடு ஏழு மணிக்குத்தானாமே? தண்ணி ஊத்தற நேரத்துக்குப் போலோம்’ என்று கூறிக்கொண்டு தன் கொண்டை முடியைத் தேட அஞ்சலையின் காம்பரா வாசலில் கங்காணியார் வீட்டுப் பெற்றோல் மாக்ஸ் காஸ்லைட் புஸ்.. என்று இரைந் துகொண்டு வெள்ளி ஒளியைப் பரப்ப, அந்த ஒளியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பெரியவர் தூரம் போகும்படி துரத்த, ‘தீட்டு வீடு’ களை கட்டிவிட்டடது.

ஏழு பத்தாச்சு. இனி நல்லநேரம். தண்ணி ஊத்தலாம் என்று கூறிய படியே வந்தாள், பக்கத்து வீட்டு அலமேலு. அவள் வீட்டு ரேடியோ அலறிக் கொண்டிருந்தது.

கிழவி பேத்தியை வாசலுக்கு அழைத்து வந்தாள். வண்ணான் கொண்டுவந்த சேலையை வட்டமாகப் பிடித்தனர் பெண்கள். அலமேலு “கொளவி கொட்டுங்க் கொளவி போடுங்க” என்றாள். இரண்டு பெண்கள் வாயில் விரலை விட்டுக் குரலை எழுப்பினர். கங்காணி சம்சாரம் பாக்கியம் சம்பிரதாய பூர்வமாக சிறுமி தலையில் முதலில் தண்ணீரை ஊற்றினாள். சிறுமி ஒன்றும் அறியாது குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். பிறகு ஒருவர் மாறி ஓருவராக செம்பில் தண்ணீரை மொண்டு மொண்டு ஊற்றினர்.

கிழவி சிறுமிக்குப் பக்கத்தில் நின்று கையடக்கமாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டாள். அநாயசியமாக எவருக்கும் இடம் கொடுக்கவில்லை. அவர்களும் கிழவிக்குத் தெரியாததா என்று அவள் பொறுப்பிலேயே விட்டு விட்டனர்.

எப்படியோ எல்லாம் நல்லபடியாக கிழவி திட்டமிட்டபடியே முடிந்து விட்டது. கிழவி பேத்தியை குச்சுக்குள் அமர்த்திவிட்டு குசு. குசு.. என்று ஏதோ கூறினாள். அதில் கண்டிப்பு இழையோடிக் கொண்டி ருந்தது. பேத்தியும் விளங்கியதோ இல்லையோ தலையை ஆட்டி ஆமோதித்துவிட்டு அமர்ந்து விட்டாள். அம்மாயி கண்டிப்பானவள் மட்டுமல்ல. எல்லாம் தங்கள் நன்மைக்கே புரிபவள் என்பதும் தங்கத்திற்கு தெரியும்.

குச்சுக்குள் இருந்த பேத்தீயை கிழவி இயன்ற மட்டும் கவனித்து உடலைத் தேற்றிக் கொண்டிருந் த்ாள். இதற்கிடையில் தலைவரை சந்திக்கவும் தவறவில்லை. கிழவி வின் பேத்தி வயதுக்கு வந்துவிட்ட தையிட்டு தலைவருக்கும் மகிழ்ச்சி புதிதாக போபதியும் போது முத லாவதாக பதிவதாக உறுதியளித்து விட்டார்.

பதினைந்து நாட்கள் பறந்தோடி விட்டன. இன்று முதல்தேதி பொழுது புலர்ந்ததோ புவரவில்லையோ என்பதை நிச்சயிக்க முடியவில்லை. கிழக்கு வெளுத்துக் கொள்ள நினைக்கின்றது. இன்னமும் அடிவானம் சிவக்கவில்லை. இருள் மெல்ல நகர்ந்து ஓடமுயலுகின்றது. இது இரவா..? இல்லை காலையா..? என்று அறியமுடியாத பருவமாக விளங்க, ஸ்டோருக்கு மேல் இருக்கும் பிரட்டுக்களம் நிரம்பி வழிகின்றது.

வழமையாக வேலைக்குச் செல்வோருடன் புதிதாகப் பெயர் பதிய வந்திருக்கும் குமரிகளும் வரிசையில் நிற்கின்றனர் அந்தக் கூட்டத்தின் மத்தியில் பதினான்கு வயதினைக் கடந்து விட்ட போதிலும் வளர்ச்சியோ, மலர்ச்சியோ இன்றி வாடிப்போன தங்கம்; அம்மாயிக்கு தலையாட்டிவிட்டு வந்ததை மறந்து விடாமல் அஞ்சலையின் பழைய சேலையொன்றைச் சுற்றிக் கொண்டு குமரிகளோடு தன் பெயரையும் பதிவு செய்துவிட்டு, கொழுந்துக்கு கூடையுடன் மலைக்குச் செல்வதற்கு தயாராக நின்று கொண்டாள்.

தங்கத்தின்பெரிய மனுஷி வேடத்துடன் தாயம்மா கிழவியின் பசி போக்கும் நாடகம் அரங்கேறி கொணடிருக்க….

பனி கொட்டிக்கொண்டிருந்தது.

பருவம் தவறாமல் கொட்டும் பனியும், காலைக் குளிரும் மந்த போசனத்தால் வாடிப்போன தங்கத்தின் உடலில் அப்படி என்ன தான் மாற்றத்தைச் செய்துவிடப் போகின்றன?…

– குன்றின் குரல் 1992.03.

மாத்தளை பெ.வடிவேலன்2 சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன.  வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *