பூட்டியிருந்த வீடு..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2024
பார்வையிட்டோர்: 2,842 
 
 

அந்த வீட்டோட பேரே ‘பூட்டின வீடு..’

ஆமா ! ஒரு நாள் ரெண்டு நாள்… ஏன் ஒரு மாசம் கூட சில வீடு பூட்டியிருக்கும்..பெரிய அதிசயம் ஒண்ணுமில்ல… !இரண்டு மூணு மாசம் பூட்டிட்டு அமெரிக்கா , ஆஸ்த்திரேலியான்னு போறதில்லையா…?

ஆனா இது  வேற… !வருஷம் முன்னூறு நாள் பூட்டியிருந்தா??  நல்ல வேள! வருஷத்துல ஒரு தடவ தொறக்கும் சொர்க்கவாசல் மாதிரி இல்லாம , எப்போதாவது அந்த கதவு தொறக்கும்..

ஒரு நடுத்தர வயதுக்காரர்…தல முடி உப்பும், மொளகும்..ஆள்  பார்க்க  ஆரோக்கியமான தேகம்தான்.. கொஞ்சம் வெளி வேலை இருக்குமாயிருக்கும்…! யார் கிட்டயும் பேச்சு வச்சுக்க மாட்டார்.

உனக்கு உன் வழி..எனக்கு என் வழி..!

இந்த தெருவுக்கு குடி வந்து  ஒரு வருஷம் இருக்கும்.. அவர் குடி வந்ததுகூட யாருக்கும் தெரியாது.. ஒரு ஒருத்தர தவிர.. எதிர் வீட்டு  அய்யப்பன்…!

அவர் ஏதோ பிறவி புண்ணியம் அடைந்தமாதிரி பாக்கிறவா எல்லார் கிட்டேயும் சொல்லி சொல்லி பெருமப் பட்டுக்குவார்… தமிழும் மலையாளமும் கலந்து அவர் பேசறதக் கேக்கணும்… திகில் படம் பாக்கிறமாதிரி..!

“எனிக்கு நல்லோணம் ஓர்மையுண்டு..மணி பன்னிரண்டு இருக்கும்..நம்ப காலனில ஒரு வெளக்கு எரியல…எதுத்த வீட்டு மின்னாடி ஏதோ வண்டி சத்தம்.. சளசளன்னு நாலஞ்சு பேர் ஒரக்க பேசற ஒச்ச கேட்டு ஞான் ஜன்னல் கதவு மட்டும் தொறந்து பார்த்தது..யாரோ புதுசா குடிவராப்போல இருக்கு…பாரியாள் நல்ல ஒறக்கத்துல இருந்தா… ஒரு மணிநேரம் கழிஞ்சது..பின்னே வண்டி கெளம்பியாச்சு..யாரு உள்ள போனதுன்னு ஒரு பிடியும் கிட்டல…

இப்படி  இருட்டுல குடி வந்து நான் ஆயுசுல கண்டதில்ல..எண்ட குருவாயூரப்பா..!”
என்று கன்னத்தில் போட்டுக் கொள்வார்…

யாருக்குமே தெரியாமல் , தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்த அய்யப்பன்  இன்று தக்க காலனியில்  மிகவும் பிரபலமாகக் காரணம் எதுத்த வீட்டுக்கு குடி வந்தவர்கள் .

“அய்யப்பன்…! நீங்க நன்னா பாத்தேளா..? எத்தன பேர் இருந்தா…? அவரோட வீட்டுக்காரி உள்ள போனதப் பாத்தேளா?? “

சீனிவாச ஐயங்காருக்கு  அந்த தெருவே தனக்கு சொந்தம் என்கிற எண்ணம்.தனக்குத் தெரியாம ஒரு குருவிகூட கூடுகட்ட விடமாட்டார்…

“அய்யப்பன்… உங்க வீட்டுக்கு நேர் எதுக்காப்போலத்தானே இருக்கார்..நானா இருந்தா அவா ஜாதகத்தையே புட்டு புட்டு வக்கமாட்டேனா..? நீங்க போறாது…!

நான் எதுக்கு சொல்லவரேன்னா…! காலம் ரொம்ப கெட்டுக்கிடக்கே சார்.. நாமெல்லாம் ஒரே குடும்பமாக இருந்தாத்தானே , ஒரு ஆபத்துக் காலத்துல உதவியா இருக்கும்..”

சீனிவாச ஐயங்காருக்கு பேச்சுத்தான் வெல்லம் ..அறுந்த விரலுக்கு சுண்ணாம்பு தரமாட்டார்..

கோடிவீட்டு கோதண்டம் உண்மையிலேயே பரோபகாரி.

“அய்யப்பன் நீங்க எப்படியாவது கண்டுபிடியுங்க.. பாவம்..! வீட்ல யாருக்காவது ஒடம்பு முடியலையோ என்னவோ…உங்களுக்குத்தான்  சுலபமா  விசாரிக்க முடியும்…”

அய்யப்பனுக்கு ரோஷம் வந்துவிட்டது..

“ஒரு வாரம் டைம் வேணம்.. நீங்கள் பறஞ்சாற்போல் அவரோட ஜாதகத்த உங்க கையில குடுக்கலைன்னா இந்த அய்யப்பன்  வீடு காலி பண்ணும்..”

இப்போதெல்லாம் அய்யப்பன்  காலையிலேயே காப்பியும் கையுமா எதிர்வீட்டப் பாத்து உட்கார ஆரம்பித்தார்..

இப்படியா ஒரு குடும்பம் இருக்கும்…? வெளியில தலகாட்டாமா அப்படி என்ன ரகசியம்..??

அய்யப்பன் வேறு வழியில் முயற்சி பண்ண ஆரம்பித்தார்…


நாலு மணிக்கெல்லாம் பால்காரன் எதிர்வீட்டுக்குப் போவதைப் பார்த்து வைத்துக் கொண்டார்.

அவரும் அவனிடம் தானே பால் வாங்குகிறார் . ஆனால் அவன் பாலை வீசிவிட்டு புயல் வேகத்தில் பறந்து விடுவானே.

“சபரி.. கொஞ்சம் நில்லுப்பா…!”

“நிக்க நேரமில்ல சாமி..இன்னா ? சொல்லு.?”

“எதுத்த வீட்ல எத்தன பாக்கெட் போடற?”

“அது  இன்னாத்துக்கு? காலைல மூணு…மதியத்துக்கு இரண்டு…போதுமா..?”

இப்போதைக்கு துப்பு கிடைத்துவிட்டது.. குறைந்தது மூன்று பேர் இருக்க வேண்டும்.

பலசரக்குக் கடையிலிருந்து வாரம் ஒரு பெரிய லிஸ்ட்டே வீடு தேடி வரும்.. நிச்சயம் மனைவி , பெண்ணோ,  பையனோ இருக்க வேண்டும்..

ஆகா.. அய்யப்பன் தன் துப்பறியும் மூளையை மெச்சிக்கொண்டார்..

தான் குளிக்கப்போகும்போதும் , சாப்பிடும்போதும் , மனைவியை ஒருகண் வைத்துக் கொள்ளச் சொல்லுவார்.

‘பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ இல்லையா…? அவரும் ஒரு நாள் அய்யப்பனிடம் கையும் களவுமாய் பிடிபட்டார்… அதுவும் திருடனே போலீசில் சரணடைந்தால்…?

ஒரு நாள் இரவு மணி ஒன்பது இருக்கும்.அய்யப்பன் தனது நைட் ட்யூட்டியை முடித்துக் கொண்டு விளக்கை அணைத்து விட்டு படுக்கத் தயாரானார்.அன்றைக்கு என்னவோ ரொம்பவே அசதியாய் இருந்தது..

பத்து நிமிடத்தில்  தூக்கம் வந்துவிடும்..

யாரோ லேசாக கதவைத் தட்டும் ஓசை.காலிங் பெல் அடிக்கவில்லை..யாரோ நாகரீகம் தெரிந்தவர்தான் என்று மனதில் எண்ணிக்கொண்டு கதவைத் திறந்தவருக்கு  ஒரு நிமிஷம்  கனவுக்காட்சியோ என்ற சந்தேகம்..

கண்களைக் கசக்கிக்கொண்டே “நீங்க.. நீங்க..! என்று பேய்முழி முழித்தார்..

“சார்.. உங்களுக்கு கரண்ட் இருக்கா..? காலையிலிருந்தே கரண்ட் இல்ல… வரும் வரும்னு பாத்தேன்.. லைன்மேன் நம்பர் கெடைக்குமா…?”

“உள்ள வாங்க சார்.. நீங்க எதுத்த வீடுதானே.. நம்பர் மொபைல்ல இருக்கு… எடுத்துத் தரேன்..உள்ள வாங்க!”

“இல்ல..இங்கியே நிக்கறேன்…”

சரியான காரியவாதியாய் இருந்தார்..

“இதுதான் சார் நம்பர்.”

வாங்கிக் கொண்டவரிடமிருந்து ஒரு சாரியோ , தாங்யூவோ.. ம்ஹூம்…”

“நான் வரேன்…”

“சார்! சார்! உங்க பேரு?”

நாளைக்கு சீனுவாச ஐயங்கார் காச்சி எடுத்துவிடுவாரே…

“என்னய்யா மனுஷன் நீர். ? பேரக்கேட்டு வச்சுக்க மாட்டீரோ..?”அவர் குரல் காதில் ஒலித்த மாதிரி இருந்தது.

வந்தவர் ஒரு நிமிடம் தங்கிவிட்டு..

“மாசிலாமணி “என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்..

“நாளைக்கு ஞான் வீட்டிலேக்கு வந்து நோக்காம்..”

இந்த சாக்கில் வீட்டில் நுழைந்து பார்க்கும் நப்பாசைதான்…

“அவசியமே இல்ல”

பளிச்சென்று சொல்லிவிட்டு மாயமாய் மறைந்தார்…

அய்யப்பன் ‘மாசிலாமணி… மாசிலாமணி..’ என்று முணுமுணுத்துக்கொண்டே கதவைச்சாத்தினார்..


அய்யப்பனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.. ஒரு வீடு என்று இருந்தால் நாலு மனுஷ நடமாட்டம் இருக்காதோ??

அவர்களும் வெளியில் வராமல் , ஒரு ஈ காக்காவையும்  உள்ளே விடாமல்…!

ஐயங்கார் இப்போதெல்லாம் அவரைப் பார்த்து சிரிப்பது கூட இல்லை.
“ச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷனா ?? “என்பது போல ஒரு அலட்சியப் பார்வை…

அப்போதுதான்  அய்யப்பன் பக்கம் காற்றடிக்க ஆரம்பித்தது..

ஒரு நாள்  ராத்திரி மூணு மணி இருக்கும்..எதிர்வீட்டிலிருந்து  இரைந்து பேசும் குரல்கள்..ஒன்று மாசிலாமணியுடையதுதான்…சந்தேகமேயில்லை… மற்றது பெண் குரல்.
பாத்திரங்கள் உருளும் சப்தம்…

“ஐய்யோ.  ! விடுங்க..ப்ளீஸ்..”

இடையில் ஒரு கீச்சுக்குரல்.. அதுவும் ஒரு சின்னப் பெண் குரல் போல இருந்தது..

அய்யப்பன் காதைத் தீட்டி வைத்தும் ஒன்றும் தெளிவாகக் கேட்கவில்லை..

ஆனால் ஏதோ ரகளை என்று மட்டும் நன்றாகப் புரிந்தது..

இப்போது அவர் துப்பறியும் மூளை சுறுசுறுப்பானது.. மொத்தம் மூணு பேர்.மாசிலாமணி , மனைவி , மகள்…!

ஒரு மணிநேரம்  உள்ளே ஒரு யுத்தமே நடந்திருக்க வேண்டும்…

தடாலென்று கதவு திறக்கும் சப்தம்..

மாசிலாமணி வெளியே வந்தார்.. ஒரு சாவியை எடுத்து வீட்டைப் பூட்டினார்…

அர்த்த ராத்திரியில் எங்கு போவார்..?

ஒரு அரைமணி நேரம் போயிருக்கும்…மீண்டும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார்..

ரொம்ப நாளைக்கப்புறம் அய்யப்பன் இன்றைக்குத்தான் நன்றாகத் தூங்கினார்.

காலனியே அய்யப்பனைச் சுற்றி சுற்றி வந்தது.

அடுத்த  எபிசோடுக்குக் காத்திருந்தார் அய்யப்பன்…


இதோ…எதிர் வீட்டு கேட்டு திறக்கும் சப்தம்… ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார் அய்யப்பன்..

மாசிலாமணி வெளியே வந்தவர் , சுற்றும் முற்றும் பார்த்தார்…என்ன நினைத்தாரோ , விறுவிறு என்று அய்யப்பன் வீட்டை நோக்கி வந்தார்..

அய்யப்பனுக்கு  உடம்பெல்லாம் புல்லரித்தது.. காலிங் பெல் அழைத்தது…வாயிற் கதவைத் திறந்தவர் அப்படியே திகைத்துப்போய் நின்றார்.

மாசிலாமணி உடலெல்லாம் வேர்த்து கொட்டி , கண்கள் சிவந்து , தலையெல்லாம் கலைந்து..இது என்ன கோலம்..??

“சார்! உள்ளே வரலாமா..?”

அய்யப்பன் இதற்காகத்தானே இத்தனை நாள் தவம் கிடந்தார்…

“வாங்க மாசிலாமணி!  எந்து பற்றி ?? இரிக்கணம்…!”

மாசிலாமணிக்கு மூச்சு வாங்கியது..

“குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா…?”

“ஓ..!”

தண்ணீரை வாங்கிக் கொண்டவர் மடமடவென்று ஒரே மூச்சில் குடித்துவிட்டு காலி டம்ளரைக் கொடுத்தார்…

விக்கி விக்கி அழ ஆரம்பித்தார்…

அய்யப்பனுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது…

அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ,

“சார்..கரையரது. என்னாச்சு சார்..?”

“அய்யப்பன்…என் கஷ்டம் என்னோட போகட்டும்னுதான்  இத்தன நாள் வாயத்தொறக்கல..ஆனா. ! முடியல..!”

ஆனால் இன்றைக்கு என்னவோ  , திறந்தவாயை  மூடவே இல்லை.
‘எப்போ வருவாரோ ?’ என்று ஏங்கியது போக , ‘எப்போ கிளம்புவார்’ என்று எண்ண வைத்து விட்டார்..
படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டார்..

“என்ன சார்…? நீங்க சொல்றதெல்லாம் சத்தியமா..? நம்பவே முடியல..?”

ஒருவழியாக  பேசிக் களைத்தவர்,  சட்டென்று ஒன்றும் சொல்லாமல் கிளம்பி விட்டார்..

அய்யப்பனுக்கும் ‘விட்டால் போதும்’ என்று இருந்ததால் தடுக்கவில்லை…

அவர் போய் பத்து நிமிஷத்துக்கெல்லாம் மறுபடியும் காலிங் பெல்…

‘ஐய்யோ  திரும்ப வந்துவிட்டாரோ…?’

பயந்தபடியே கதவைத் திறந்தால்,  சீனிவாச ஐயங்கார்..மூக்கிலே வேர்த்து விட்டது ..

“அய்யப்பன்..நீங்க பெரிய ஆள்தான்.. ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறீரா…?”

“உள்ள வாங்க சார்… மாசிலாமணி. எங்க வீட்டுக்கு வந்ததப் பாத்துட்டீங்க போல இருக்கே…நிறைய  இருக்கு சார்.. உக்காருங்க…”

“சார் மனுஷன் ரொம்ப பாவம்..! வீட்ல தினம் தினம் சண்டை…படிச்ச பணக்கார வீட்டுப் பொண்ணுன்னு அம்மா பாத்து வச்சது பொருத்தமே இல்லையாம்..

அம்மா இருக்கும்போ அடங்கி இருந்தளாம்..இப்போ இவர மதிக்கிறதே இல்லையாம்…தனக்கு வேலையில்லைன்னு  மட்டமா பேசறாளாம்.

‘பாதி நாள் சமைக்கிறதே கிடையாது..கதவைத் தாள் போட்டுட்டு அம்மாவும் பொண்ணும் உள்ளயே இருந்தால் எப்படி சார்? ன்னு சொல்லி அழறார்… “

“ஏன் வேலைக்குப் போறதில்லையாம்…? நீங்க கேக்கலியா…”

“ஞான் சோதிச்சு சாரே… போயிட்டு தான் இருந்தாராம்.. ஒரு திவசம் வீட்ல ஜோலியுண்டுன்னு பர்மிஷன் போட்டுட்டு வந்தா வீடு பூட்டியிருக்காம்…சொல்லாம குழந்தையையும் தூக்கிட்டு எங்க போனன்னு  கேட்டதுக்கு  ஒரே சண்டையாம்..

அன்றிலிருந்து ஆஃபீசில் வேலையே ஓடலையாம்.. அடிக்கடி பர்மிஷன் போட்டதுல ஒரு வேலையிலும் நிரந்தரமா இருக்க முடியலியாம்.

“நானாவது வேலைக்குப் போறேன்னு”தினம் தினம் அவரோட மல்லுக்கு நின்னா அவர் எந்து செய்யும்…?”

“ஏன் சார்.. ஒரு வேளை அவளுக்கு மனநிலை சரியில்லையே என்னவோ. ? ஒரு நல்ல டாக்டர் கிட்ட காட்டப்படாதோ…?”

“அதையும் கேட்டு சாரே…
“ஐய்யோ.  அவ படே கில்லாடி டாக்டர் கிட்ட ரொம்ப நல்லவ மாதிரி பேசி நான்தான் பயித்தியம்ன்னு பிளேட்டை திருப்பிப் போட்டுடுவா சார்…அந்த வேலையே ஆகாது..”  அப்படின்னு அடிச்சு சொல்றாரே..!

“நாம் வேணா ஒரு நாள் அவா ஆத்துக்கு போய்ப் பார்க்கலாம்.   என்ன சொல்றீர்…??

சீனிவாச ஐயங்கார் சொன்னதை அய்யப்பனும ஏற்றுக் கொண்டார்..
ஆனால் கூடிய சீக்கிரம் அது நடக்குமென்று அவர்கள் எதிர் பார்க்கவில்லை..


அன்றைக்கு காலை அய்யப்பனுக்கு வேறு விதமாக விடிந்தது… கண்ணைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் மறுபடியும் பார்த்தார்..அதே காட்சிதான்..

எதிர்வீட்டுக் கதவு  முழுதுமாக திறந்திருந்தது.. வீட்டில் முதல் முறையாக போவோரும் வருவோருமாக  ஒரே சத்தம்.

சட்டையை மாட்டிக்கொண்டு  வெளியில் வந்தார் அய்யப்பன்..

கோதண்டமும் சீனிவாச ஐயங்காரும்  தன் வீட்டு வாசலில் நிற்கிறார்களே !

“அய்யப்பன்.. என்ன ? மசமசன்னு நிக்கிறீர் ? கெளம்புங்கோ…?”

“எங்க சார்..? எவிடைக்கு..?? எதிர் வீட்ட நோக்கு…ஒரே தெரக்கு…!”

“சார் மாசிலாமணி போய்ட்டாராம்…! “

“எவிட போயி..??”

மேலே கையைக் காட்டினார் ஐயங்கார்..

மூவரும் நேரே நடந்தார்கள்… இன்றைக்கு எல்லோரையும் பார்த்துவிடலாம் என்ற ஆர்வமே அதிகம் இருந்ததேயொழிய மாசிலாமணியை நினைத்து ஒரு  சொட்டு கண்ணீர் வரவேண்டுமே.. ம்ஹூம்..

உள்ளே  தலைமாட்டில் சிறிய அகல் விளக்கு எரிய மாசிலாமணி படுக்கவைக்கப்பட்டிருந்தார்…

உள்ளேயிருந்து நடுத்தர வயதில்  ஒரு  அழகிய பெண்மணி  பொதுவாக இவர்களைப் பார்த்து தலையசைத்து வரவேற்றாள்.. பக்கத்தில் அவள் தோளுயர ஒரு இளம்பெண்..

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்..

“உக்காருங்க..!”

ஒரு வயதானவர் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையைக் காண்பித்தார்.

“மாசிலாமணிய உங்களுக்கு எவ்வளவு நாளா பழக்கம்?”

“இப்பத்தான் சார்…கொஞ்சநாளா… அதிகம் பேசமாட்டார்…ஆனா வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டிருக்காருன்னு தெரியும்?”

“ஓ ! அப்படியா சொன்னான்?”

“ஏன் சார் உங்களுக்கு அவர நல்லாத் தெரியுமா..?”

“குழந்தையில் இருந்து தெரியும்.. அவுங்க அம்மா எனக்கு தூரத்து சொந்தம்..

இந்த நிலைமைல  நான்  சொல்லப்போறது  அத்தன உசிதமில்லைன்னு எனக்குத் தெரியும்… ஆனாலும் மனசு கேக்கல…”

அந்த பெரியவர் சொல்ல சொல்ல முன்று பேர் முகத்திலும் ஈயாடவில்லை…

“சார்.. நீங்க சொல்றது…?”

“அத்தனையும் சத்தியம் சார்..போகப்போக உங்களுக்கே புரியும்…”

மூவரும் திரும்பி வரும்போது மனசு பாரமாயிருந்தது.. மீண்டும் ஒரு முறை மாசிலாமணியின் மனைவி முகத்தைப் பார்த்து , தலையசைத்துவிட்டு கிளம்பினார்கள்.. அவள் முகம் நிர்மலமாயிருப்பது போலத் தோன்றியது.

என்னவோ மாசிலாமணியின் முகத்தைத் திரும்பவும் பார்க்கத்  துணிவில்லை…


இப்போதெல்லாம்   அந்த வீடு திறந்தே இருக்கிறது… வீட்டில் போவோரும் வருவோருமாக கலகலவென்று சதா பாட்டு , வீணை , சலங்கை ஒலி என்று  தெருவுக்கு ஒரு களை வந்துவிட்டது..

அய்யப்பன் மனைவி அங்கு போய் தையல் கற்றுக் கொள்வதாகவும் , ஐயங்காரின் பேத்தி நடனம் சொல்லிக்கொள்வதாகவும் கேள்வி…

ஏனிந்த மாற்றம்?

அய்யப்பனுக்கும் , கோதண்டம்  , அப்புறம் சீனுவாச ஐயங்காருக்கும் தெரிந்த  உண்மை நமக்கும் தெரிந்தால்  இந்த கேள்விக்குத் தன்னால் பதில் கிடைக்கப் போகிறது…!

“மாசிலாமணி அம்மா வளர்த்த பிள்ளை.  சிறுவயதிலிருந்தே பிடிவாத குணம்..அம்மா செல்லம்.. ஒரு அழகான படித்த பெண் மனைவியாக அமைத்தது அவனின் அதிர்ஷ்டம்… அவளின் துரதிர்ஷ்டம்…

அம்மா இருந்தவரை  அவளைத் தன் கைக்குள் வைத்திருந்தாள்.. மாசிலாமணியும் ஏதோ வேலைக்குப் போகிறேன் என்று பேர் பண்ணிக் கொண்டிருந்தான்..

அம்மா போனபின் மனைவியைத் தனியாய் வீட்டில் விட்டுப்போக பயம் .. எப்போதும் சந்தேகம்.. யார் கூடப் பேசினாலும் சந்தேகம்..

வேலையிலிருந்து அடிக்கடி பர்மிஷன் போட்டுவிட்டு கண்காணிக்க ஆரம்பித்தார்… அடிக்கடி வாக்குவாதம்..சண்டை…! வேலையும் போய்விட்டது..!

குழந்தை பிறந்தப்புறம் அவளையும் குழந்தையையும் வீட்டுக்குள் பூட்டிவிட்டு வெளியே போவதும் வழக்கமானது.

பிளேட்டை திருப்பிப் போட்டது அவர்தான்..

பூட்டிய வீட்டின் இரகசியம் ஊருக்கே அம்பலமாகும் என்று பாவம் மாசிலாமணி கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை..!

SaraSuri இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *