புன்னகையின் இடைவெளி





அந்த முற்றத்துக்கு மேல் புழுதிசுமந்து பதுங்கியிருந்த அந்தப் பழைய கூரை – ஒருகாலத்தில் நிழலளித்த பாதுகாப்பின் அடையாளம்… இப்போது, ஒரு நிழலில்லாத மரம் போல, ஒரு பெருங்காற்று வீசினாலே முறிந்து விழக்கூடிய நிலையில், தூண்களில் சாய்ந்தபடி உயிர் காத்து கிடந்தது.
முற்றம் அமைதியோடிருந்தது. அந்த அமைதிக்குள்ளே, சொல்லமுடியாத ஒரு சுமை நிரம்பியிருந்தது – மரத்தடியில் காற்றில்லாமல் விழுந்த இலையைப்போல், நிசப்தமாக.
சுலைமான் பாய் – சைக்கிளில் இருந்து மெதுவாய் இறங்கி, ஸ்டாண்டை உதைத்தார். பக்கத்துக் கிராமங்களைச் சுற்றிச் சம்பாதித்த பழைய இரும்பு, பிளாஸ்டிக், அலுமினிய சாமான்கள் – சைக்கிளின் இரு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்த பைகளை மெதுவாய் இறக்கி, முற்றத்தின் தரையில் விரித்தார். அந்த சுமை தானாக இறங்கியது. ஆனால்… மனசுக்குள்ள சுமை மட்டும் – அதே சக்கரத்தில் சுத்திக்கிட்டேயிருந்தது. ஓர் இடைவெளி இல்லாமல் சுழன்றுகொண்டே…’சுமையைச் சுமந்த சக்கரத்துக்கு, ஓய்வென்ற ஒன்று கிடையாதோ என்னவோ?’.
வீட்டுக்குள் சென்றார். ஒரு கால்படி அரிசியை எடுத்தார். கழுவினார். சுருக்கமா ஒரு கை தண்ணீர் ஊற்றி, அடுப்பிலே வைத்தார். அடுப்புப் புகை மேல எழும்பியும், அந்த சுவாசம் அடங்கலை. பசி கண்ணைக் கட்டியது. ஆனால் அது பசியா? மெய் சோர்வா? தெரியல.
“மதிய சாப்பாடு?…” ஒருகாலத்தில் ஒவ்வொரு நாளும் கேட்டுத் தொடங்கிய ஒரு அக்கறையின் மொழி – இப்போது அந்தக் கேள்வி கேட்க ஆளே இல்லை. மனம் அதன் இல்லாமையை ஏற்றுக்கொண்டுவிட்டாலும், கை மட்டும் பழக்கத்தின் அடிமையாக – கேள்வி இல்லாவிட்டாலும், பதில் இல்லாத செயலை மெதுவாய் தொடர்கிறது.
உலையை அடுப்பில் வைத்து விட்டு, மீண்டும் வெளியே வந்தார். அந்த சுமையை இறக்கிய இடத்துக்கே சென்று அமர்ந்தார். சுமை மட்டும் அங்கேயே இருந்தது – அதை அசைக்கும் காற்றே இல்லாமல்.
பக்கத்தில் விரிந்திருந்தன – பழைய இரும்புத் துண்டுகள், சுருண்ட பிளாஸ்டிக் ஓட்டைகள், வாடிப்போன அலுமினியக் கலங்கள்…இவை எல்லாம் வேறெதுவுமல்ல; பயன்பாடு முடிந்த உடல்கள்தான். ஒரு காலத்தில் உழைத்தன, சூடான கைகளில் சுழன்றன, இப்போ…மூச்சை எங்கோ விட்டுவிட்டு, திரும்பி வந்து இங்கே தங்கிக் கிடக்கின்றன.
சுலைமான் பாய் அவற்றைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் ஒரு காலத்தில் வாழ்ந்ததுபோல, நெஞ்சோடு மிதமாக உற்று நோக்கினார். உருப்படியில்லை என்பதைத் தெரிந்தே பார்த்தார். அதேபோல், வாழ்க்கையிலும் மீதி இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார் போல.
அந்த சாமான்களை அவர் ஒவ்வொன்றாக கைமுறையிலே பிரிக்கும்போது, படிந்து உறைந்திருந்த மண்ணும், தகரத்துக்குள் அடைந்திருந்த புழுதியும், நுரையீரலுக்குள் பாரமாய் நுழைந்தன. சுவாசத்தில் சற்றும் தடுமாற்றம்… மூச்சு சில வினாடிகள் துள்ளிவாங்கியது. உடம்பு எங்கோ எரிந்தது. ஆனால் அந்த எரிச்சலோ, உடல் தாங்கும் சுமையோவெல்லாம் ஒதுங்கிவிட்டது… பாத்திமாவின் நினைவுகள் நெருக்கி வந்து நின்றபோது.
அவளின் குரல், அவளின் நடை, அவளின் தொழுகை, பளபளவென சாமான்களை அலசும் அவளது விரல்கள்…அது எல்லாம் அந்த மண்ணுக்கும் புழுதிக்கும் குறைவில்லாமல் நெஞ்சுக்குள் சேர்ந்தன.
அடுப்பிலிருந்து உலை கொதிக்கிறது. சத்தம் உண்டு. ஆனால் அது வெளியுலகச் சத்தமில்லை – மனசுக்குள்ளே எங்கேயோ நுழைந்து, அங்கொரு சத்தமில்லாத கத்தலாகவே மாறிவிடுகிறது. இன்று அந்த சத்தம், வீட்டுக்குள் நிறைந்திருந்த மௌனத்தைத் தகர்க்க முயன்றது. முடியவில்லை. மௌனம் அதை விழுங்கிவிட்டது. உருகாத பனிக்கட்டி போல அது ஒட்டிப் போய் கிடந்தது.
இருபது… முப்பது கிலோமீட்டர் கொளுத்தும் வெயிலில் சைக்கிளோடு பயணித்த களைப்பு, எண்பதுகளைக் கடந்து வரும் உடலின் தளர்வுகள், பசியால் உள் நரம்புகளைத் திரும்பத் திரும்ப கிழித்திழுக்கும் ஒரு உச்ச வலி – அவையெல்லாம் தாங்கிக்கொள்ளும் உடம்புக்குள்ளே, பாத்திமாவின் நினைவுகள் மட்டும்தான் தாங்க முடியாத பாறை போல நுழைந்திருந்தன. தலைமேல் ஏறிய சுமையல்ல அது – தலையோடே உறைந்திருக்கும் நினைவுப் பாறை.
அவளுடைய சிரிப்பு -முகத்தில் வாழ்ந்த சுருக்கங்களைக் கூட மீறி, திரையின் மறைவிலிருந்து எட்டிப்பார்க்கும் ஒரு குழந்தையின் நம்பிக்கையோடு
இருந்தது. கள்ளமில்லாத புன்னகை – இன்றோடு இருபது நாட்களாகக் காணவில்லை. “நாளை என்னவாகுமோ?” என்ற பயம் கூட மறந்துவிடச் செய்த ஒரு சிரிப்பு – அந்த சிரிப்பு இன்று இல்லை; அதை தாங்கிய வாழ்க்கையும் இல்லை…
இப்போது அவள் இருந்திருந்தா…
பின்வாசலிலிருந்து காற்றாய் வந்து நின்றிருப்பாள். கையில் தேநீர். குரலில் மென்மை. பார்வையில் பழக்கப்பட்ட பாசம்.
“சூடா இருக்கும்போதே குடிச்சுட்டீங்கன்னா நல்லா இருக்கும்…” என்று சும்மா சொல்வதுபோல் சொல்லி, டம்ளரையும் வார்த்தையையும் எதார்த்தமாகக் கீழே வைத்திருப்பாள்.
இப்போது… அந்த குரலும் இல்லை. தேனீரின் வாசனையும் இல்லை. ஒரு குறிக்கோளில்லாத காலி தட்டுப் போல, அந்த நினைவு மட்டும் மனக்கண்களில் சுழல்கிறது. இப்போது இருக்கிறது – அவர் தனக்காக உலை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நிசப்த வேதனையல்லாமல் வேறொன்றும் இல்லை.
பாத்திமா இருந்திருந்தா…
முற்றத்தின் வாசலோரம் நெட்டுக்கணக்காய் உட்கார்ந்திருப்பாள். காய்கறியோ, கவிச்சியோ அரிந்துகொண்டிருப்பாள். அல்லது – சீப்பை விரலில் சுழற்றி, மெல்லிய செம்பட்டையும் நரையும் கலந்த முடியை மெதுவாய் வாரிக் கொண்டிருப்பாள். ஒரு குயில் கூச்சலில்லாமலே மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது, அது அங்கே இருக்கிறது என்று தோன்றும் அமைதி போல — ஒலி இல்லாத ஓர் இருப்பு.
அல்லது… பக்கத்து வீட்டு காசியம்மாள், கலாவுடன் — மீன்வாசனையோடு கலந்ததொரு பழைய பேச்சு போல…பாத்திமா அதிலேயே நனைந்து பேசிக்கொண்டிருப்பாள்.
“அந்த ஆளோட பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறார்னே… என்னாச்சு?”
“வீட்டு வாசல்ல வாங்கற மஞ்சள் மட்டும் பளபளன்னு…” என்று அந்த உரையாடல் நெளிந்துசெல்லும்.
பாத்திமா அந்த மாதிரி உட்காரும்போது, சீப்பில் சிக்கிய முடியை மெதுவா எடுத்துக்கிட்டு, பார்க்காத மாதிரி ஒரு புன்னகையோடு, யாரும் பார்க்காம, கூரையின் இடுக்குல சுருக்கி வைத்திருப்பாள்.
அதை சுலைமான் பாய் பார்த்தபோது:
“என்னம்மா, கூரையில பொக்கிசமா பதக்கற மாதிரி வைக்கற?” என்று நக்கலோட கேட்பாரு.
அவளோ வம்பு இல்லாத சிரிப்போட,
“வெளியே போட்டா கோழிங்க முழுங்கிடும்…” என்று பசப்போடு பதிலளிப்பாள்.
அந்த முற்றம்… வெறும் சமையல் வாசனைக்கே இல்லை. அங்கே பேசும் சத்தங்களும், சிரிப்பின் கலகலப்பும், காதலின் பசுமை கலந்த ஒரு சுவாசமும் இருந்தது. பேச்சுகள் உருட்டிக் கொண்டிருக்கும்போது,அதற்குள் இடைவேளையாய் சுலைமான் பாயின் நக்கலும் வந்து சேரும்.
“ஏளா… இப்பவும் இந்த பாத்திக்கிழவி தலையை வாரிக்கிட்டே இருக்கியா? புதுப்பொண்ணு பாரேன்!”. அந்த நக்கல் ஓசையோடு சிரிப்புகள் முற்றத்தை மூடி விடும்.
பதில் தயார்: “வாயை மூடுங்க பாய்அண்ணே…
உங்க மாதிரி பல்லு ஒழுங்கா இருக்குறவங்கதான் இப்ப ஊர்ல எம்.ஜி.ஆரு., ரஜினி!”
அவரது சிரிப்பு சீரில்லாதது. ஆனால் அந்த சத்தம் – வீட்டுக்குள் இன்னும் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறாரென்று சொல்லும் உறுதி. ஒரு பக்கம் பஞ்சம் இருந்தாலும், அந்த நக்கல் இருந்தாலே வாழ்க்கை ஓடுகிறது என நம்ப வைக்கும் ஒலி.
இப்போ? முற்றம் வெறிச்சோடிப் போய்விட்டது. நக்கல் இல்லை. சீப்பும் இல்லை. சிரிப்பும் இல்லை.
அந்த மூலை – ஒரு சொந்த மரணத்தின் நிழலை சுமந்தபடியே நின்றுகொண்டிருக்கிறது. அதில் இன்னும் ஒருவரின் மூச்சு மட்டும் விலகாமல், அழிவில்லாத துக்கமாக விரிந்திருக்கிறது.
நீண்ட மௌனம்…
அந்த மௌனத்திலிருந்து கலைந்தது போல காசியம்மாவின் குரல்.
“பாய்அண்ணே… இருக்கீங்களா?”
சுலைமான் பாய், தாழ்வான ஒரு மூச்சோடு, தரையில் இருந்த பழைய சட்டியை எடுத்து நேர்த்தியாய் வைக்கிறார். கண்களை மெதுவாகத் திறக்கிறார். அந்த பார்வையில் — நிழலாகவே மாறிய ஒரு நிழலைத் தேடும் தனிமை.
“இருக்கேன்…” அந்த சொற்கள், உயிரோடு உச்சரிக்கப்படவில்லை. சத்தமின்றி ஒலிக்கிற வலியைப்போல்.
காசியம்மா முன்னே வந்தாள்.
“குழம்புக்கு காய் எதுவும் இல்ல… நாளைஞ்சு பறிச்சிக்கலாமா?”.
அவள் கேட்டது அனுமதிக்காக அல்ல. தீர்மானமாகச் சொல்லிவிட்டு, சுவர் ஓரத்தில் இருந்த அலக்கையை தூக்கி, முற்றத்தைத் தாண்டி முருங்கைமரம் நோக்கிப் புறப்பட்டாள். அவளுடைய நடை ஒரு காற்று போல மெதுவானது. ஆனால் அந்த மெதுவில்தான், இந்த வீட்டின் சோகத்தை அதிகமாக உணர முடிகிறது.
பாத்திமா இல்லாத வீடு என்பது, வெறுமையான வீடல்ல. அது வாழ்வு இல்லாத நினைவுகளின் தங்குமிடம். இரங்கல் சுமந்த சுவர்கள், சலனமற்ற உளர்ந்த வாசல்கள்.
காசியம்மாவின் முகத்தில் இருந்தது ஒரு பேசாத இரக்கம். அவள் கேட்டாள்:
“குழம்பு என்ன செஞ்சிருக்கீங்க?”
அவளுடைய குரல் கேள்விக்காகக் கேட்கப்பட்டது அல்ல. அந்தக் குரலில் இருந்தது — மறைமுகமான அக்கறை, மறைக்க முடியாத அழுகை. ஒரு துணை இல்லாத வாழ்க்கையின் சுவையற்ற தனிமை அதை எப்படி ‘குழம்பு’ எனும் வார்த்தைக்குள் அடக்கி சொல்வது?
“குழம்பல்லாம் யாருக்கு வைக்கத் தெரியும்,
வெறும் மோரும் ஊறுகாவும்தான்…
குழம்பு வைக்க உங்க அக்கா எனக்கு சொல்லிக்கொடுத்துட்டா போயிருக்கா?” என்றார் சுலைமான் பாய்.
சிரிப்போடு சொன்னதுபோல இருந்தாலும், அந்த வார்த்தைகள் சற்றே வெளியில் விழுந்தவுடனே வலி சிதறியது. காசியம்மா சிரிக்கவில்லை. அவளுடைய பார்வையில் நெஞ்சுக்குள்ளே பேச முடியாத இரக்கம்.
“கொஞ்சம் பொறுங்க… பாப்பாகிட்ட கொடுத்து விடறேன்…” என்று சொல்லிச் சென்றாள்.
அவளுடைய நடை காற்றின் மென்மையும், மனசின் சுமையுமாக.
முற்றத்தில் வாடிய உலர் இலைகள், காற்று ஊதிய இடுக்குகள் வழியே வந்து விழுந்தன.
வீட்டுக்குள்ளே அவை மழைத்துளிகள் போல பரந்தன. அவையும்… பாத்திமா இல்லாத சாயலுடன் சிதறிக் கிடந்தன.
அந்தக் கணம் திடீரென வீசியது ஒரு அசாதாரணமான பல காற்று. சில நொடிகளில்… முற்றம் முழுக்க பரந்து கிடந்த மரத்தின் உதிர்ந்த சருகுகளும், கூரையிலிருந்து கிழிந்து விழுந்த பழைய தேக்கங்களும், மண்வாசனையோடு கலந்து நின்ற ஒரு இன்மைத் தூசியும் அவை அனைத்தும் ஒரே மூச்சில் எழுந்தன.
அந்தக் காற்று, முற்றத்தை மட்டும் சுற்றவில்லை. அது வீட்டுக்குள்ளும் நுழைந்து, உலையில் கொதித்தும் விட்டது.
அந்த முருங்கை மரம்…
அவர் பார்வைக்கு முன்னால் அதன் கொத்துகொத்தாய் ஊசலாடும் காய்கள் — அவை காற்றின் ஆட்டமல்ல. ஒவ்வொரு ஆட்டத்திலும்… ஒரு புன்னகை, ஒரு பார்வை, ஒரு மௌனமாய் கடந்த கணம்.
அந்த ஊசலின் ஒவ்வொரு அசைவிலும், சுலைமான் பாய் மனத்தில் ஒரு பழைய நிழல் மெதுவாக எழுந்தது.
அந்த நாள்…
இதே முற்றம். மௌனமான காலை மழை பெய்யத் தயங்கும் வானம்போல் அமைதி. சூரியனின் வெளிச்சமும், காற்றின் மெல்லிய அசைவும், முற்றத்தில் பதிந்திருந்தன.
சுலைமான் பாய், பழைய இரும்புப் பொருட்கள் மேல் பார்வையை மையப்படுத்தியபடி, ஒரு வலிமையற்ற கவனச்சிதறலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த அமைதியை உடைத்தது — அவள், பாத்திமா.
வீட்டுக்குள்ளிருந்து வந்தாள். கையில் ஒரு பிய்ந்த செருப்பு. வழக்கம்போல் முகத்தில் வெயில்தான் இருந்தது, ஆனால் அதன் பின்னாலிருந்தது — ஒரு சிறு போராட்டக் கோபம்.
முன்னே முருங்கை மரம். நீளத்தில் கிட்டத்தட்ட மூடியிருந்தாலும், மரத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை வெறும் இலைகள்தான். பூவோ காயோ இல்லை.
“பூப்பியா? காய்ப்பியா?” என்று அவள் கேட்டாள்.
திடீரென அந்தச் செருப்பைத் தூக்கி, மரத்தின் அடியில் ஒரு இழுத்து விட்டாள். அந்த அடிகள் வெறுப்பும் இல்லாமல், பாசத்தோடும் கோபமின்றியும். ஒரு குழந்தையின் குறும்பு போல.
அவர் சிரித்தார்.
“ஏய்… என்ன புள்ள… கிறுக்கு ஏதாவது பிடிச்சுடுச்சா?” அந்தக் கேள்வியில் திட்டலோ எரிச்சலோ கிடையாது. அதிலிருந்தது — ஒரு கூரை வாசலில் கொஞ்சும் பனித்துளி போல, அவளுக்காக மட்டும் தனிப்பட்ட நிசப்தமான நேசம்.
“வச்சு பத்து மாசம் ஆச்சு… ஒரு காய கூட காணோம்!
இப்படி அடிச்சா கொஞ்சம் ரோசம் வந்துடுமோனு பாக்கறேன்…” என்று குழந்தை போலத் தனக்கே சிரித்தாள்.
அந்த முட்டாள் தீர்வு அவளின் புன்னகை அந்த இடைவெளி பற்கள் தெரிந்த சிரிப்பு அதிகம் பேசாத உணர்வுகளை தாங்கி வந்த புன்னகை. அப்போது அது ஒரு நகைச்சுவை. இப்போது நினைவில் வந்தபோது… அது ஒரு கிழியாத மௌன வலி.
அந்த தருணம் வாழ்க்கையின் எளிய காட்சிகளுக்குள் புதைந்து போன ஒரு முழுமையான காதல். அது வார்த்தையால் விளக்க முடியாதது.
வீட்டுக்குள் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படம்.
நேர்த்தியாக ஒழுங்குசெய்த மெல்லிய டெர்லின் சட்டையோடு நின்றிருந்தார் சுலைமான் பாய் அந்த காலத்தின் மரியாதையின் உருவகமாக. அவரின் பக்கத்தில் பார்வையை நேராக வைத்தபடி, பாத்திமா.
அவளது சிரிப்பு ஒரு கன்னிகையின் மெல்லிய நாணத்தோடு கூடியது. கண்ணாடி ஃபிரேமுக்குப் பின்னாலிருந்து ஒளிரும் அந்த சிரிப்பில், ஒரு சிறிய இடைவெளி இருந்தது முன்பற்கள் தெரியும் அந்த இடம்…
அப்போது அது ஒரு அழகான குறியாய் இருந்தது. இப்போது அது — அவருடைய மனச்சாட்சியின் இடைவெளி. அவளது புன்னகையில் மெதுவாய் பதிந்திருந்த அந்த இடம் இப்போது நொந்துக் கொண்டிருக்கும் மனத்தின் மெல்லிய பிளவாகிவிட்டது.
படத்தைப் பார்த்தபடியே, அவர் மெல்ல தலைக் குனிந்தார்.
“பாழாப்போன கோபம்…” என்று ஒரு வார்த்தை மட்டும், வாயிலிருந்து சிந்தும் கசப்பான துளியைப் போல வெளியே வந்தது. வார்த்தைத் துவளும் ஓர் தூக்கமற்ற கனவுப் பேச்சு போல… அந்தச் சொற்கள், வெறும் நினைவல்ல தண்டனையாகத் தங்கிய வெறுமை.
அவரது கண்கள் ஈரமாயின. அது சாதாரண கண்ணீர் இல்லை… கடந்த காலத்தின் சதைகளில் இன்னும் கரைந்து உறைந்திருந்த குற்ற உணர்ச்சி.
“இதுக்காகத்தான் இப்படி பாழா ஆனேனோ?”
அன்று அது அவருக்கு சிறிய விஷயம்தான். சாதாரண கோபம், தவிர்க்கமுடியாத பரபரப்பு. ஒரு கணத்தில் நடந்தது, மறைந்துவிடும் என்று நினைத்தது. ஆனால் இன்று… அந்த ஒரே நிகழ்வின் நினைவே மனதின் ஒரு மூலைக்குள் ரணமாய் பட்டைதீயாக விட்டுச் செல்கிறது.
அவளோ அதைக்கண்டபடியே கூட, புன்னகையோடு மீட்டமர்ந்தவளாய் இருந்தாள். ஒரு வார்த்தை புகார் இல்லை. மௌனம்தான் அவர் பெற்ற மன்னிப்பு.
ஆனால் அவர் மனதில் மட்டும்… அந்த மௌனமே, விடக்கூடாத ஒரு பிழை போல விழுந்தது. தன் மீதே தான் விதித்துக்கொண்ட தண்டனையாக அந்த நினைவு இன்னும் சுமையாக உயிரோடு இருக்கிறது.
அந்த நாள்…
அது ஒரு வெயில் தாளமின்றி கொந்தளித்த பகல். வானத்திலிருந்து விழுந்தது வெயிலல்ல… புரட்டிப் போட்ட நரம்புகளுக்குள்ளே புகுந்த ஒரு சுடு நச்சு போல. வியர்வையின் வாசம் மட்டும் இல்லை — அதனோடே சேர்ந்து, தோற்கடிக்கப்பட்ட வாழ்க்கையின் வாசனையும் உடனே வந்தது.
சைக்கிளின் ஸ்டாண்டு தரையைத் தொட்டது. “இந்த உலகமே சுமையாக தலையிலே விழற மாதிரி…” அவர் தோள்களில் அந்த சுமை — ஒவ்வொரு கிலோவாய்ப் படர்ந்தது. பின்னால் கட்டியிருந்த சாக்குப் பைகளும், பழைய இரும்பு சாமான்களும் — தொழிலுக்காகச் சேகரித்தவை இல்லை. வறுமையை மறைக்க ஒரு சாதாரண போர்வை மாதிரி.
அவற்றைப் பக்கமாக இறக்கிவைத்தபின், முகத்திலிருந்த சோர்வை தண்ணீரால் கழுவினார். துண்டால் துடைத்தார். பசி வயிற்றைக் கிள்ளியது. தரையில் அமைதியா அமர்ந்தார்.
அவளிடமிருந்து வந்த சோறு முன்னே இருந்தது. அது வெறும் உணவல்ல. ஒவ்வொரு கொட்டிலும் – பாசம் இருந்தது, பராமரிப்பு இருந்தது. வாசலில் நுழையும் காற்று மாதிரி மெதுவா வந்த பாசம்.
அவர் சாப்பிட்டது நாவால். ஆனால் உணர்ந்தது நெஞ்சு. அந்த சோறிலே…அவதானிக்காம ஒரு முடி விழுந்திருந்தது. ஒரு சிறு கவனச்சேதம். அதை எடுத்தபோது, அவருக்குள்ளே தூக்கிக்கொண்டிருந்த வலி பட்டாசு போல வெடித்தது.
“மனுஷன் சாப்பிடுற சோறா இது?” என்று வார்த்தை நழுவியது. பின்னர் தட்டையும் வீசப்பட்டது. நேராக அவளது முகத்தில்.
அவளது முன்பல் உடைந்தது. அவளது சிரிப்பின் ஒளி, அந்த நொடியிலே மெலிந்து போனது. அந்த நாள் முதல்…அவள் சிரிக்கும்போது, அவளது புன்னகையின் பிழைதிருத்தம் அவர் நெஞ்சில் ஒரு குற்ற உணர்வாகவே ஒலித்தது.
பின்னாளில், தங்கப்பல் பதிக்கப்பட்டது. பளிச்சென விளங்கினாலும் அவளுக்குள் அது நாணமாய் பதிந்ததுதான்.
“தங்கப்பல்லு பாயம்மா…”
ஊரே அதுபோலவே அழைத்தது. ஒரு புன்னகையின் இடைவெளி அவளுக்கே துன்பமாயிற்று.
மீண்டும் ஒரு இரவு… சாப்பாட்டுக்கு சாம்பாரை சுடவைக்காமல் பரிமாறினாள்.தட்டு பறந்தது. இன்னொரு பல்லும் தங்கமானது.
“பாய் அண்ணே… பாயம்மாவோட கழுத்துக்கும் காதுக்கும் வாங்கி போட்டு அழகு பாப்பாருன்னு பாத்தா, பாயம்மா பல்லுக்குள்ள வாங்கி போட்டு அழகு பாக்கறாரு!” என்ற நக்கலில் சிரிப்பே இருந்தது; ஆனால் அதுக்குள்ளே சுமைந்து கிடந்தது ஒரு புண்.
அது ஒரே சம்பவமல்ல. அப்படி ஒவ்வொரு முறையும் அவள் சொல்லாமல் சகித்தாள். சின்ன சிரிப்பில் மறைத்தாள். ஆனால் இப்போது…அந்தச் சம்பவங்கள் சுலைமான் பாய்க்கு துப்பாக்கிச் சத்தம் போலத் தாக்குகின்றன. அந்த பற்களின் இடைவெளி… மன்னிப்புக்குப் பதிலா ஒரு குற்றச்சாட்டாகவே அவரிடம் இருந்தது.
“நான் அவளிடம் அப்படிச் செய்ததுக்காக என்னை நான் மன்னிக்க முடியல…” அந்த ஒரு வரி உள்ளுக்குள்ளே தினமும் நச்சென குழைந்த வலி. வெளியில் கண்ணீர் இல்லை… ஆனாலும் உள்ளம் முற்றிலும் நொறுங்கியது.
“தாத்தா… இந்தாங்க.”
காசியம்மாளின் பேத்தி உருக்கமாக மணக்கும் முருங்கைக்காய் சாம்பாருடன் வந்தாள். பாத்திரத்தைக் கொடுத்தவுடனே, ஒரு வார்த்தையும் சொல்லாமல், குழந்தை போல ஓடிவிட்டாள்.
அந்த முருங்கைக்காய் சாம்பாரின் வாசனை…ஆம்… அவள் வைக்கும் அதே சாம்பாரின் வாசனை போல. வெறும் வாசனையில்லை அது. ஒரு வீட்டின் சமையலறையை நன்கு அறிந்தவள் மட்டுமே உருவாக்கும் நுணுக்கம்.
பாத்திமா.. அவளது முருங்கைக்காய் சாம்பாரின் வாசனைக்கு ஓர் உரிச்சொல்லில்லை. அது அவளது கைரேகை. அவளது மூச்சு.
வாசனைக்குள்ளே சில நேரம், ஒரு உயிர் வாழ்ந்திருக்கிறது என்பதற்கான சாட்சி. அவள் சாகவில்லை. வீட்டில் இருக்கும் வாசனையிலே இன்னும் கிளம்பிக்கொண்டேதான் இருக்கிறாள்.
அவருக்குள் பசிக்குமேல் ஏதோ வேறொரு ஏக்கம் நுரைத்துக் கொண்டிருந்தது. அவளிடம் செய்த தவறுகள், பேசாத பாவங்கள், “ஏதாவது திருத்த முடியுமா?” என்ற பசப்பான சிந்தனை…
கை பழக்கமா? பசி உந்துதா? தெரியாமல் சாதத்தை எடுத்து தட்டில் போட்டார். உணவு பார்த்தவர் போல இல்ல; ஓர் இழந்த காலத்தைத் திரும்பக் கண்ணால் தேடுபவர் போல.
சாதம் காத்திருந்தது. அவர் மட்டும் நெடுநேரம் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார். உணவுக்குள் ஏதாவது பதிலென்று எதிர்பார்ப்பது போல. பின் மெதுவாக பிசையத் தொடங்கினார்.
அவர் கை சுழற்றிய சாதத்தில் திடீரென ஒரு நுண்ணிய தடுப்பு. முதலில் – முருங்கைக்காயின் நாரோ என்றார். விரலில் தடவியதும், உடனே தெரிந்தது — அது ஒரு தலைமுடி.
முதலில் கண் மறைந்தது. பிறகு அதை மெதுவாக விரல்களிடையே விரித்தார்.
அந்த நீளமும், மென்மையும், அந்தச் சற்று மங்கிய செம்பட்டை வண்ணமும்…
அவருக்குத் தெரியாமல் ஒரு மூச்சு இடையில் நின்றது. இது அவளுடையதுதான். நிச்சயமாக.
சற்று முன் அடித்த பலமான காற்று, முற்றத்தில் இருந்த கூரையின் ஓர இடுக்கிலிருந்த அந்த முடியை தூக்கிக் கொண்டு வந்து உலையிலேயே விட்டுவிட்டது போல. அல்லது, அவளே சற்று முன் அங்கு வந்து கை விட்டுவிட்டு போனதுபோல்.
தலைமுடியை மெல்ல நெஞ்சில் வைத்தார். விழிகள் சுருண்டன. முன்னரே அடக்கி வைத்திருந்த உணர்வுகள் ஒரே நேரத்தில் வெடித்தன. மனதில் மீதமிருந்த உறுதியும் உடைந்தது. உணர்ச்சி கனமொழிந்து, கண்ணீராகக் கரைந்தது.
அந்த தலைமுடியை மார்போடு தக்கவைத்தபடி
“பாத்தி…!” என்று ஒரு முழக்கம்.
அது ஒரு அழைப்பல்ல.
அது ஓர் புலம்பல்.
அது மனவுரத்தில் அடைத்துப் பதித்துவைக்க முடியாத ஒரு ஆழ்ந்த மன்னிப்பு வேண்டுகோள்.
![]() |
சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க... |