கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 1,292 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது பழைய நாற்சார் வீடு. தொண்ணூற்றைந்து தென்மராட்சியை நோக்கிய இடப்பெயர்ச்சிக்கு முன்னர் கலகலப்பாக இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக, உயிர்ப்பேதுமில்லாமல் களை இழந்து, காடு மண்டிக் கிடந்தது. இப்பொழுது அந்த வீடு – முற்றத்துக் குருகுமணல், பொன்னாய் பளிச்சிட அழகாய் இருந்தது. நான்கு நாளாக முகம் தெரியாத மனிதர்கள் சிலர் வந்து, அந்த வீட்டையும் வளவையும் துப்பரவு செய்தார்கள். வீட்டின் உடைந்த பகுதிகளையும் களவு போன மூலை ஓடுகளையும் மாற்றிச் சரி செய்தார்கள். ஜன்னல்களுக்கும் கதவுகளுக்கும் கூடச் சிறுசிறு தச்சுவேலைகள் நடந்தன. 

அந்த வீட்டுக்கு அவள் புதிதாகக் குடி வந்திருந்தாள். நேற்று மாலைதான் அவளொரு மொறிஸ் மைனர் காரில் வந்திறங்கினாள். அவளுடன் வயதான ஒரு முதுகிழவி. அவளது தாயாக இருக்குமா..? உதவி ஒத்தாசை என்று வந்தவளாயிருக்கக்கூடும். கிழவியில் நல்ல தளர்ச்சியும் தளம்பலும் தெரிந்தது. 

எங்களது வீடு மாடி வீடு. மாடியின்மேற்குச் சாய்வில் படர்ந்திருந்த குண்டு மல்லிகைப் புதரின் மறைவில் நின்றபடி, என்னால் அந்த வீட்டின் புறச்சூழலை குறிப்பாக அவளையும் அவளது அசைவுகளையும் கவனம் கொள்ள முடிந்தது. 

வதவதவென அவள் வளர்ந்திருந்தாள். பிருஷ்டத்துக்குக் கீழாகத் தழையும் கூந்தல். முகம் வசீகரமாகவும் கண்கள் பெரிதாகவும் இருந்தன. மாந்தளிரில் சிறிது மஞ்சளைக் கொட்டிப் பிசைந்தது போன்ற நிறம். மார்பகம் கவர்ச்சி ஏதுமில்லாது மிகச் சிறியதாக இருந்தது. 

‘தூரத்துப் பசுமை கண்ணுக்குக் குளிர்ச்சி என்பதுபோல ஏதாவது இவளிடமும் இருக்குமோ…!’

அவளை நெருக்கத்தில், மேலுதட்டோரம் துளிர்த்திருக்கும் பூனைமயிர் தெரியப் பார்க்க வேண்டும் போலிருந்தது. 

‘ஏய்… ஏய்….இது கொஞ்சம் அதிகம்…’ உள்ளிருந்து, ஏதோ என்னை எச்சரித்தது. 

யாரோ மாடி ஏறிவரும் அரவம். யாரோ என்ன, எனது சகதர்மினி நிதிதான். சுதாரித்துக் கொண்டவன், இரண்டு மல்லிகை மொட்டுக்களுடன் அவளை நெருங்கினேன். 

தையல் மெஷினோடு மல்லுக் கட்டியபடி அவள். என்னைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்களில் பழைய களை, பிரகாசம், நீரிழிவால் அவதிப்படும் அவளுக்குப் புதிய மருந்து நன்றாகவே வேலை செய்கிறது. 

அவள் அருகாக வந்து, கையில் இருந்த மல்லிகை மொட்டுக்களை அவளது கைகளில் பொதித்துவிட்டு, விலகியபோது, அவள் சிரித்தபடி கேட்டாள்: 

“என்ன… என்ன இளமை திரும்புதோ..” 

அவளுடன் வாழ்ந்த வாழ்வின் அற்புதங்கள் அனைத்தும் ஒருகணம் மனதில் மிதப்புக் கொள்கிறது. 

‘கொடுத்து வைத்தவள்…!’

மனசு தளம்பி, அமிர்தமாய் வர்சிக்கிறது. 

மாடியிலிருந்து இறங்கிய நான், வீட்டின் முன் முற்றத்துக்கு வந்தேன். ஹோர்ஸ் பைப்பின் உதவியுடன் பூஞ்செடிகளுக்கு நீர்வார்க்க ஆரம்பித்தேன். மேற்குப்பக்கமாக ஆளரவம். திரும்பியவன், அவள் மதிலோரம் நிற்பதைக் கண்டேன். 

“என்ன முசுந்தாஸா…? குங்கும நிறத்திலை, கொத்துக் கொத்தாக, உந்தக் கண்ணிகள் எவ்வளவு வடிவு…” 

அவள்தான் பேசினாள். 

பேச்சு ஓய்ந்த நிலையில் நான் விரும்பிய நெருக்கத்தில் அவளைப் பார்த்தேன். 

அவள் அழகிதான். மேல் உதட்டோரம் பொன்இழையாய்ப் பூனை மயிர்கள் இருந்தன. ஈரம் உலர்ந்து, வதங்கிய மலர்போல அவள் இருந்தாள். அவளது கண்களிலும் ஈரமில்லாத வரட்சி. தொலைத்துவிட்ட எதையோ அவை தேடுவது போலிருந்தது. இனந் தெரியாத ஒரு துயரின் சாயல் அவளைச் சூழ இருந்தது. 

‘இது ஏன்… எதற்கு…?’ மனசு இளகி அவள்பால் பரிவு கொண்டது. 

அவளது வயதுக்கு, அவளது ஒதுக்கம் எனக்கு வியப்பாக இருந்தது. 

‘கடிவாளமிடாத, திமிர்த்த, பிடரிமயிர் சிலிர்க்கும் – வீரியம் மிகுந்த, ஓர் அரபிக் குதிரையின் துள்ளல் இவளுக்குக் கூடிவந்தால் – இவள்….இவள் எப்படி இருப்பாள்..!’

குதித்துக் கும்மாளமிடும் மனசைச் சமனப்படுத்தியபடி, 

அவளைப் பார்த்துக் கேட்டேன்: 

“உங்களுக்கு மலர்கள் பிடிக்குமா..?” 

“….”

பதிலேதும் தராது மௌனித்தவள், வீட்டின் உள்ளே வேகமாகச் சென்று மறைந்தாள். 

அவளைப் பற்றிய செய்திகள் – எங்கள் வீட்டுப் பக்கம் சிறிது சிறிதாகக் கசியவே செய்தன. 

மறுநாள் காலையில், பரமேஸ்வரனின் ஓட்டோவில்தான் அவள் பட்டணப் பக்கம் போனாள். பரமேஸ் என்னைக் கண்டதும் தானாகவே சொன்னான்: 

“ஆள் உரும்பிராய்ப் பக்கம் போல… கொழும்பிலை இலங்கை வங்கியிலை வேலை செய்தவ… வெள்ளவத்தை பிராஞ்ச்….இஞ்சை ஸ்ரான்லி றோட் பிராஞ்சுக்கு மாற்றலாகி வந்திருக்கிறா… மனேச்சர்…”

“பாக்கிறதுக்குச் சின்னப்பெட்டை மாதிரித் தெரியுது… மனேச்சரோ…!” 

எனது குரலின் ஆச்சரியத்தை வெட்டியபடி, பரமேஸ் தொடர்ந்தான்: 

“இல்லை… ஆள் கொஞ்சம் முத்தல்… முப்பது வயதாவது இருக்கும்….” 

அவன் ‘முத்தல் கித்தல்’ என்று அவளைப் பற்றிக் கூறியது எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. 

நாலுநாள் கழித்து, எனது அடிசிற்கினியாள் காவி வந்த செய்தி, எனக்கு இன்னும் சுவையானதாக இருந்தது. 

“இந்தப் பெட்டை ஈசு..” 

“ஆரப்பா…எந்தப் பெட்டை..?” 

“பக்கத்து வீட்டிலை வந்திருக்கிற ஈஸ்வரிதான். சடங்கு முடிச்சு. கொழும்பிலை மாப்பிள்ளையோட இருந்தவள். அவன் அப்படி இப்படியெண்டதாலை, அவனை விட்டிட்டு, இஞ்ச வந்திட்டாள்.” 

“அப்படி இப்படியெண்டால்..?” 

“சத்தம் போடாதேங்கப்பா…அவன் ஒரு Sexual Pervert.” 

“இதை உனக்கு ஆர் சொன்னது?” 

“நம்மடை. நகுலாதான். இரண்டு பேரும் ஹிண்டு லேடீஸிலை ஒண்டாப் படிச்சவை. நல்ல ஃபிரண்ட்ஸ்.” 

“நீரும் ஹிண்டு லேடீஸ் தானே..” 

“அவை இரண்டு பேரும் எனக்கு ஜுனியேர்ஸ்” 

“சரி… சரி…. பேர்வேர்ட் எண்டா என்னமாதிரி?” 

எனது ஆர்வம் நிதியைக் குழப்பியிருக்க வேண்டும். இறுக்கம் குலைந்த குரலில் அவள் சொன்னாள்: 

“அதை… அந்த அசிங்கத்தையெல்லாம் சொல்லேலுமா. இவள்… இந்தப் பெட்டை எல்லாத்தையும் நகுலாட்டைக் கொட்டி அழுதிருக்கிறாள். நகுலாதான் எனக்குச் சொன்னவ…” 

“அது சரி..அந்த ஆளின்ரை வக்கரிப்புத்தான் என்ன..? எனக்குச் சொல்லுமன்..” 

கதை கேட்கும் ரசனை எனக்கு. 

“அவன்ரை பேர் தயாளன். தின்னவேலிப் பக்கம், வேலுப்பிள்ளை வாத்தியாற்றை மகன், ஏகபுத்திரன். டொனேசன் அது இதெண்டு இவள் பெட்டேற்றை பத்துக்கு மேலை சுவடீற்றான்.” 

“பத்து லட்சமா…?” 

“ஓம்… ஓம்….. ஆள் சரியான சிம்பான்ஸி… எனக்கு அவனை நல்லாத் தெரியும். ஈசுவுக்கும் அவனுக்கு மிடையிலை, தெறிப்பு ஏற்படுறதுக்கு அவன் வேலை செய்யிற கொம்பனி ஸ்ரெனோதான் காரணம். இருவது வயசு. இளம் பெட்டை. சிங்களத்தி, சுனந்தா எண்டு பேர்…” 

“சிங்களத்தி எண்டா நல்ல வடிவாத் தானிருப்பாள்…” 

“சரி சரி வாயூறிறதை விட்டிட்டுக் கேளுங்க. முதலிலை அவன், அந்தச் சுனந்தாவோடை ஊர் சுத்தியிருக்கிறான். ஒருநாள் அந்த Stud bull சுனந்தாவைக் கூட்டிக் கொண்டு, இவையின்ரை அனெக்சுக்கே வந்திட்டான்.’ 

“அதென்ன Stud bull…”

“ஒண்டோடை மனசடங்காமல் கண்ட கண்ட பெண்களோடை அலையிறவனை வேறென்னெண்டு சொல்லுறது…?” 

“ம்… சரி சொல்லும்…!” 

“கொழும்பிலை அனெக்ஸெண்டா உங்களுக்குத் தெரியுந்தானே; ஹோல், ஒரு பெட் ரூம், கிச்சின், அற்றாச் பாத் அவ்வளவுதான். சாப்பாடு ஆனதும் தயாளன்தான் பெட்மேக் பண்ணினான். டபிள் பெட். மூண்டு பேரும் ஒண்டாப் படுக்க வேணுமெண்டு ஈசுவை அவன் வற்புறுத்தியிருக்கிறான்.” 

“இதென்ன கூத்து… எண்டு ஈசு விக்கித்துப் போனாளாம்.” 

“கட்டிலை ஆயத்தம் செய்யும் போதே, தயாளன் அந்தச் சுனந்தாவை இழுத்து இழுத்து அணைத்து, முத்தம் வேறு கொடுத்திருக்கிறான். இவளுக்கு உடம்பெல்லாம் தீப்பற்றியது போல இருந்திருக்கு. ‘you…. you son of a bitch…. get lost…’ எண்டு ஏதேதோ முனகியவள், தனது தலையணையையும் பெட்சீற்றையும் உருவி எடுத்தபடி, ஹோல் பக்கமாக வந்துவிட்டாள்.” 

கதை கூறிவந்த நிதி, என்னையும் அடிக்கடி கடைக்கண்ணால் பார்த்துக் கொள்ளவும் செய்தாள். 

“ஹோலைப் பார்த்த கதவு திறந்தபடி இருக்க, அவன் சுனந்தாவுடன் முயங்கினான். ஒரு பெண், வெட்கம் கெட்டதனமாக ஒரு ஆடவனுடன், அதுவும் திருமணமான ஒருவனுடன் புணர்வதை ஈசு ஓரக் கண்ணால் பார்க்கவும் செய்தாள். இவள் எழுந்துபோய் கதவை அடித்துச் சாத்தியபொழுது மூக்கனும் சாரையும் போல அவர்கள் பிணைந்து கிடந்தார்கள்.” 

“அந்த இடத்திலை ஈசு ஒரு பட்டுத் துணியைப் போட்டெடுத்திருக்கலாமே… பாம்புகளின்ரை ஸ்கலித நீர் பட்ட, பட்டு அப்படிச் செல்வத்தைக் கொட்டிக் கொடுக்குமே…” நான் சிரித்தபடி கூறினேன். 

“வக்கிரம்… வக்கிரம். நீங்களும் ஆம்பிளை தானே…! உங்கடை புத்தி எங்க போகும்… அந்தப் பெட்டை பாவமெண்டு ஒரு சொட்டு இரக்கங்கூட உங்களுக்கில்லை…” 

“ஸொரி… ஸொரியடா… என்னை மன்னிச்சிடு..” கூறியவன், எழுந்து நிதியிடமிருந்து தூரமாக விலகிக் கொண்டேன். 

‘இந்தத் தயாளனின் Perversion இது மட்டுமா? இன்னும்… இன்னும் bestiality, exhibitionism, sadism, sodomy, rape எண்டெல்லாம் விரிவு கொண்டிருக்குமோ…? 

மனசு ஈசுவைப்பற்றி, அவளது வாழ்க்கை பற்றி, அதன் அவலங்கள் பற்றி எல்லம் மேலும் அறிந்து கொள்ள விரும்பியது. 

‘நிதியிடம்தான், கால நேரமறிந்து கதைக்க வேணும்..’ என நினைத்துக் கொண்டேன். 

ஈசுவைப் பற்றி நானும் நிதியும் கதைத்த இரண்டொரு கிழமைக்குள்ளாகவே அவள் எங்கள் வீட்டுப் பக்கம் வந்தாள். 

படி ஏறிவந்த அவளை, மனசு நனைகிற மாதிரி சிரித்தபடி வரவேற்றேன். 

“ரீச்சர் இருக்கிறாவா…?” 

குளிர்ச்சியான அவளது குரலைக் கேட்டதும் உள்ளே ஏதோ வேலையாக இருந்த நிதி, ஹோல் பக்கம் வந்தாள். 

“வாருங்க ஈசு…! எங்க வீட்டுப்படி ஏறுறதில்லை எண்ட சபதமா…?” 

“கோயிலிலை பார்த்துப் பேசிறது போதாதா..?” 

“அது சரி. நான் கூடப் பக்கத்திலை இருந்தும் உங்களை எட்டிப் பார்க்கிறேல்லை…”

“அக்கா பெரிசா ஒண்டுமில்லை… என்ரை Blockse Block கொண்டு வந்திருக்கிறன்… எனக்கு இரண்டு சட்டை தைச்சுத் தரவேணும்…” 

“இப்ப தைக்கிறேல்ல… எண்டாலும் உமக்கு முடியாதெண்டு சொல்லேலுமா..” 

“அதென்ன எனக்கு மட்டும் ஸ்பெஷல்” 

“நொந்து போயிருக்கிற பெட்டை எல்லா எங்கட ஈசு..” “தெரியுமா…?” 

“கொஞ்சம் கொஞ்சம் தெரியும். நகுலா சொன்னவ.” 

“முழுசாத் தெரியவேண்டாம் அக்கா… அந்த மனிசன் ஒரு சாக்கடைப் புழு மாதிரி…அந்த வாழ்க்கை ஒரு கெட்ட கனவு மாதிரி.. அந்தச் சகதியிலை இருந்து, விடுபட்டு வந்தது, மனசுக்கு நிம்மதியா இருக்கு…” 

எல்லாவற்றையும் துடைத்து எறிந்து விட்டவள் போல அவள் பேசினாள். 

அந்தப் பேச்சிலிருந்த அலட்சியமும் தைரியமும் எனக்குப் பிடித்திருந்தது. 

“மிஸ் இப்படித்தான் உசாராய் இருக்க வேணும்…” 

எனது குறுக்கீடும் அதிகப்பிரசங்கித் தனமும் அவளை அசர வைத்திருக்க வேண்டும். 

“சேருக்கும் தெரியுமா..?” 

அவளது குரலில் இழைந்த ஏதோ ஒன்று என்னைக் கூனிக் குறுக வைத்தது. 

நிதியின் முகத்தைப் பார்ப்பதற்குத் தெம்பேதுமில்லாது, மனக்கிலேசத்துடன் எழுந்து, எனது அறைப் பக்கம் நடந்தேன். 

மாடி ஏறிய ஈசுவும் நிதியும் அன்று பலமணிநேரம் ஏதோ குசுகுசுத்தார்கள். அவர்கள் எதைப் பற்றி அப்படிப் பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் நிதியிடம் கேட்பதற்கு துணிவில்லாது விட்டுவிட்டேன். 


கால நகர்வில் ஈஸ்வரியின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. 

பொலிவிழந்து, உலர்ந்து போயிருந்த அவளது உடலில் ஒரு திரட்சியும் செழுமையும் தானாகவே தழைந்தது. கன்னங்களில் செம்மை படர, மென்மையும் பட்டின் பளபளப்பும் அவளுக்கு வாய்த்தது. கண்களில் பிரபஞ்சத்தையே வளைத்துப் போடும் ஒரு பிரபை.. ஒளிக் கீறலாய் ஒரு சிரிப்பு, எப்பொழுதும் அவள் உதட்டோரம் இருந்தது. மனசோடு புதைந்து கிடந்த துயரம் விலகிப் போக, அவள் வெண்பஞ்சின் லாவகத்துடன், தரையில் கால் படாமல் மிதந்தாள். 

அவள் ஆடை அணிவதிலும் தன்னை அலங்கரிப்பதிலும் கூட அதிக அக்கறை எடுத்துக் கொண்டாள். ஒரு சமயம் வீட்டுப் பக்கமாக வந்து போன பொழுது, Intimate perfumeமின் நெடி, எங்க வீட்டுச் சுவாசத்தையே ஈரப்படுத்தியது. 

‘இந்த ரசவாதம்… மாற்றம்… எல்லாம் எதனால்..?’ 

குழம்பிக் கிடந்த எங்களுக்கு, இரண்டொரு நாளில், விடை எளிதாகக் கிடைத்தது. 

அன்று நனைந்து கிடந்த வானம் உடைத்துக் கொண்டது. மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. மழையில் நனைந்தபடி, அவனும் அவளும் ஒரு ஓட்டோவில் வந்து இறங்கினார்கள். அவனை முன்பின் பார்த்த ஞாபகம் ஏதும் எனக்கில்லை. புதியவன் என்று நிதியும் கூறினாள். 

அவன் ஒடிசலாய், வதவதவென்று வளர்ந்திருந்தான். உடல் சிவந்து கிடந்தது. ஆழ்ந்த பெரிய கண்கள், முகத்தை விட்டகலாத சிரிப்பும் மலர்ச்சியும் அவனிடம் இருந்தது. 

அவளைவிட அவன் இளமையாக இருந்தான். மழையில் நனையாதவாறு அவளைத் தனது மார்பினுள் புதைத்தபடி, கேற்றைத் திறந்து, வீட்டுப் படிக்கட்டில் ஏறினான். நனைந்த கண்மடல்கள் படபடக்க, அவனையே பார்த்தபடி அவளும் படி ஏறினாள். 

மூன்று நாட்களாக மழை விடாது பொழிந்தது. அவர்கள் இருவரும் வெளியே எங்கும் போகாமல் தேன் நிலவுத் தம்பதிகள் போல இழைந்து இழைந்து, காதல் வசப்பட்டவர்களாய் கிறங்கிக் கிடந்தார்கள். 

அதை, அந்த நாற்சார் வீட்டின் மேற்கு விறாந்தையிலும் அலட்சியமாக நீக்கல் தந்து, மூடிக் கிடந்த, அறைக் கதவுகளின் ஊடும் என்னால் பார்க்க முடிந்தது. 

‘அப்படிப் பார்ப்பதே விவஸ்தை கெட்ட தனமா?’ என மனம் விசாரப்பட்டபோதும் கூச்சமேதுமில்லாமல் அவர்களது அசைவுகளையும் இசைவான மிதப்புகளையும் நான் பார்க்கவே செய்தேன். 

‘வாழ்வு தரக்கூடிய நிறைவையும் தாம்பத்திய சுகத்தினுள்ளூறும் பரவசத்தையும் தவற விட்டு விட்டுத் தவிக்கும் இவளுக்கு…. இந்தப் பெண்ணுக்கு எல்லாமே கிடைக்க வேணும்…’ 

மனசாரத் துளிர்க்கும் நினைவுகள். 

இந்த அனுபவம் எனக்குப் புதியது. ஏதோ உள்வீட்டுப் பிள்ளையின் சுகதுக்கங்களில் தோய்ந்து போனது போல ஒரு திருப்தி. இந்த மகிழ்ச்சியையும் பூரிப்பையும் நிதியும் பகிர்ந்து கொண்டாள். 

மூன்று நாட்களாக அடைப்பாம்புகள் போல வளைய வந்தவர்கள், நாலாம் நாள் காலை வெளியே கிளம்பினார்கள். பரமேஸின் ஓட்டோதான் அவர்களைச் சுமந்து சென்றது. 

ஈசுவுடைய அவன் – வார இறுதி நாட்களில் வந்து, அவளுடன் தங்கிப் போவதைக் கவனம் கொண்டேன். ஈசுவும் அவனுடன் போனால், இரண்டொரு நாள் அவனுடனே தங்கி வருவதையும் வழமையாக்கிக் கொண்டாள். 


ஒரு மாத காலத்துக்குப் பின்னர், ஒரு மாலை நேரம் – அன்றும் மழை பெய்து கொண்டிருந்தது – ஈசு எங்கள் வீட்டுப் பக்கம் வந்தாள். புதிதாகச் சட்டை தைத்துக் கொள்ள மட்டுமல்ல, அவளுக்கு வேறு தேவைகளும் இருந்தன. 

வந்த ஈசுவை, வசமாக இழுத்து வைத்துக் கொண்டு நிதி சளசளக்கத் தவறவில்லை. 

என்னைப் பார்த்த ஈசு, “நீங்களும் இருங்க சேர்…” என்றாள். 

அவள் தன்னுடைய அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பியதும் – தனக்கு மிக நெருக்கமானவர்களாக எங்களிருவரையும் கருதியதும் எனக்கு மிகுந்த மன நெகிழ்ச்சியைத் தந்தது. 

ஆரம்பத்தில் அவளைக் காணும் போதெல்லம் ஏற்பட்ட, ஆணுக்கே உரிய மன முதிர்ச்சி சரிந்த, விடலைத்தனமான உணர்வுகளில் இருந்து விட்டுபட்டது எனக்கு ஆறுதலாக இருந்தது. அவளை முகத்துக்கு முகம் பார்த்துப் பேசமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. 

முதலில் அவள்தான் பேசினாள்: 

“ரூபன் என்னோடைதான் வேலை செய்கிறார். துணை முகாமையாளர். அவர் நல்ல மாதிரி. வெள்ளை மனசு. ஒளிச்சு மறைச்சு வைக்க அவரிட்டை ஒண்டுமே இல்லை. He is just an open book. எங்க இருவருடைய உலகமும் அழகானது. ஒத்த ரசனைகள், ருசிகள், விட்டுக் கொடுத்து, அனுசரிச்சு எங்களாலை எதையுமே செய்ய முடியுது. தளைகள் ஏதுமில்லாத இந்த உறவு எங்களுக்கு பிடிச்சிருக்கு..” 

“சரி… சரி… எனக்கு எல்லாம் விளங்குதம்மா… ஒண்டு கேக்கலாமா…?” 

“கேளுங்க…” 

“இந்த வாழ்க்கையை நீர் ஏத்துக் கொண்டது ஒரு வகையிலை முரட்டுத்தனமா, வீம்பா எனக்குப் படுகுது… உம்மடை காயப்பட்ட நானைக் கொஞ்சம் ஒத்தடம் கொடுக்கிற மாதிரியும் இருக்குது.. என்ன இருந்தாலும் அந்தத் தறுதலை தயாளனை விட்டிட்டு, இப்படி தூரப்பட்டு வந்தது, என்ரை மனசுக்கு இதமா இருக்குது…” 

“வீம்பு, திருப்தி எண்டு ஏதும் எனக்கில்லை அக்கா…. தயாளனிலை பிடிப்பு தளர்ந்ததும் அவனிலை பிடிப்பு எண்டு ஏதாவது இருந்ததா என்ன ரூபனிலை ஒரு பிடிப்பு விழுந்திட்டுது அவ்வளவுதான்.” 

“நீர் என்ன சொல்லும் – என்ரை மனசு கேக்குதில்லை… உம்மை நினைக்கப் பயமாயும் துக்கமாயும் இருக்குது..” 

“என்ன பயமா… துக்கமா… எதுக்கு?” 

அவள் கலகலவெனச் சிரித்தாள். 

“ஈசு சிரியாமல் நான் சொல்லுறதைக் கேளும்… இந்த Living together எல்லாம் இந்த மண்ணுக்குப் பொருந்தி வாற மாதிரி இல்லை. இதையெல்லாம் சரி செய்யிற மாதிரி – ரூபனை, உம்மடை கழுத்திலை ஒரு தாலியைக் கட்டச் சொல்லுமன்.. 

“அக்கா.. பிளீஸ்.. எனக்குக் கொஞ்சம் மூச்சு விடவேணும் போலை இருக்க… இந்த Social, legal bindings எல்லாம் இப்போதைக்கு வேண்டாமே… பட்டது போதும். ஒரு ஆணும் பெண்ணும் மனம் விரும்பி இணையிறது பிழையா… Adulteryய… ஒழுக்கக் கேடா..? இது ஒழுக்கக் கேடெண்டா… அம்மி மிதிச்சு, அருந்ததி பாத்து.. ஐயர் மந்திரம் சொல்ல, சடங்கு முடிச்சு – அந்த Sex maniac தயாளனோடை குப்பை கொட்டினதெல்லாம் எதிலை சேரும்…” 

ஈசு சற்று அழுத்தமாகவே பேசியது போல எனக்குத் தோன்றியது. அவள் தொடர்ந்து கேட்டாள். 

“எங்க இருவருக்குமிடையிலான இந்த உறவு வெறும் செக்ஸ் சம்பந்தப்பட்டது மட்டும்தானா…? அதுக்கு அப்பாலை… அப்பாலை எதுவுமே இல்லையா…?” 

ஈசு உணர்ச்சி வசப்பட, அவளது குரல் கரகரத்தது. 

பதட்டமடைந்த நிதி, அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள். 

நிதியின் கரங்களை இறுக்கமாகப் பற்றிய ஈசு எதுவும்பேசாது, மௌனமாக, ஒரு தலையசைப்பில் எங்களிருவரிடமும் விடை பெற்றுக் கொண்டாள். 

அவள் நிமிர்ந்து நேராக நடந்து போவதை நானும் நிதியும் வைத்தகண் மாற்றாது பார்த்தபடி நின்றோம். 

– மல்லிகை, ஜனவரி 2004.

– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்

க.சட்டநாதன் க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *