புகழ் அரசி
 கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்
 தின/வார இதழ்: மறுமலர்ச்சி                                           
 கதைத்தொகுப்பு: 
                                    சமூக நீதி 
 கதைப்பதிவு: July 11, 2025
 பார்வையிட்டோர்: 4,826  
                                    (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வானவில்லின் பகட்டு மின்னிய விதானங்கள் அழகு செய்யும் அந்த இடம் வசந்தகாலத்துப் பூங்காபோல் திகழ்ந்தது. மின்னலின் அற்புத வனப்பும், பகலோனின் பொற்கதிரால் தகதகக்கும் நீரலைகள் வெட்டி மினுக்குகிற கவர்ச்சியும் நிறைந்த அந்த அழகின்நிலையத்திலே ஒய்யாரமாகக் கொலு வீற்றிருந்தாள் புகழ் அரசி.

சரத்காலப் பூர்ணிமையிலே வடித்தெடுத்த பிம்பம் போன்றவள் அவள். ஏதோ ஒரு வெறியுடன் மின்னுகிற எத்தனையோ பேர்களை வெறியராய் அடிக்கும் காந்தம் நெளிகிற கருமணிக் கண்ணினாள் அவள்.
அவள். அவள் சிரிப்பிலே கவிதை குலுங்கியது. அவள் தலையசைப்பில் பித்தேற்றும் பண்பு தவழ்ந்தது. அவள் முகம் ஆசை எற்றும் அலைகடல். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றும். அவளது அங்க அசைவுகள் ஒவ்வொன்றும். மண்ணுலகத்துப் பிறவிகளை கிறங்கடிக்கும் மோகலாகிரியில் ஆடும் தனி இசை. தென்னங் குருத்துப்போன்ற வெள்ளிய தேககாந்தி என்னும்படி அவள் தனித்திறமையுடன் அழகு செய்து கொண்ட, அற்புத சக்தியுடன் நெய்யப்பட்ட பூந்துகில் பூவுலக வாசிகளைச் சொக்கச் செய்வது…
அவள் புகழின் செல்வி. புகழுக்கு இருப்பிடமானவள். புகழைப் பூட்டி வைத்துப் பாதுகாப்பவள். புகழின் அரசி.
அவளது ஆலயத்தின் ஆலாட்சி மணி அடங்காது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அவள் மாளிகையைச் சுற்றிநெளிகிறகாற்று எண்ணற்ற வர்களின் காதற்கீதங்களைச் சுமந்துவருகிறது. அவளது அன்புப் பிச்சைக்காக ஏங்கிக்கிடப்போர் எவ்வளவோபேர். அவளோ தன் போதையிலே கிறங்கிக் கிடந்தாள். காற்றைப் பருகி தனி மோனஇன்பம் பெறும் சர்ப்பம் போல.
புகழுக்காக இறந்தவர்கள்… புகழ்வேண்டி செத்துக்கொண்டிருக் கிறவர்கள்… புகழ்பெற்றுவிட்டவர்கள் வீரர்கள் கலைஞர்கள், அரசர்கள், தலைவர்கள்…..
எவ்வளவுபேர்! எத்தனை எத்தனை ரகம்! வருகிறார்கள், போகிறார்கள் காத்துக் கிடக்கிறார்கள், விழுந்து கும்பிடுகிறார்கள்!
அவள் புகழின் தலைவி. சபலபுத்திக்காரி. கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. சிலருக்கு அவளது கண்வீச்சு கிடைக்கிறது. கடைக்கண் உகுக்கும் கள்ளநோக்கு சிலரை புண்ணியவான்களாக்குகிறது. மாதுளை மொட்டுப்போன்ற உதட்டிலே வெடிக்கும் புன்னகை சிலரை தலைகனக்க வைக்கிறது. அவளது அன்புப்பார்வை சிலரை அடிமை கொள்ளுகிறது. அவள் புகழரசி. புகழ் பரிமாறுபவள், புகழப்படுபவள்….
அவன்…
மண்ணுலகிலே மண்ணையே நம்பி உயிர்வாழ்ந்து மண்ணாகப் போகிற ஒரு பிராணி.
என்றாலும், மற்ற மனிதர்களைவிட அவன் சிறந்தவன். அப்படிச் சொல்லவில்லை. அவன் உயிர்மூச்சு சிந்தனை. அவனது வாழ்வு உழைப்புதான். ‘கலை’ அவன் பொழுது போக்கல்ல. அவனது இதயஒலியே அதுதான். அவன் வாழ்வது, உழைப்பது எல்லாம் அதற்காகத்தான்.
அவன் உழைத்தான், புகழுக்காக அல்ல. அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. உழைப்பிலே அவன் இன்பம் கண்டான். மனிதரிலே பெரும்பாலோர் உழைக்காமலிருக்க முடியாதே! ஆனால் அவன் உழைப்பை வாழ்வை – கலையாக மாற்றிக் கொண்டான்.
அவனைப் பித்தன் என்றனர் பலர். பேதை என்றனர் பலர். புகழிடம் காமம் கொண்டவன் என்றார்கள் சிலர்.
அவன் மறுக்கவுமில்லை; ஒப்புக்கொள்ளவுமில்லை. அவன் அவர்கள் பேச்சைக் கேட்கவேயில்லையோ! அவனுக்குத் தெரிந்தது உழைப்பும் அதில் பெற்ற இன்பமுமே. அவனைக்கண்டு நகையாடியவர்களிலே ஒருவன் புகழைக் காதலிப்பவன். ‘புகழ்… மேலும் புகழ்… மேலும் மேலும் புகழ் இன்னும் மேலேமேலே புகழ் என ஆசைக்கோட்டைகட்டி புகழரசிக்குக் காதற்கவி பாட ஆரம்பித்தவன். பணத்தின் கல கல நாதத்துக்கு மயங்கிவிடுவாள் புகழ் மகள் எனக் கனவு கண்டவன்.
புகழ் அரசி சபலபுத்திக்காரி. அவள் ஒரு வேசி. பகட்டிக் குலுக்கும் அவள் இன்று இங்கிருப்பாள். நாளை அங்கிருப்பாள்.மறுநாள் எங்கிருப்பாளோ! அவளிடம் ஏன் காதல் கொள்ள வேண்டும்? என்றான் உழைப்பாளி.
‘போடா பிழைக்கத் தெரியாப் பெரும்பித்தே! வாழ்வின் லட்சியமே புகழ்தான். அதை அடைவதே என் லட்சியம் என்றான் பணக்காரன். வெள்ளி நாணயங்களின் ‘கிலு கிலு’ ஓசை, கிண்ணாரக்காரி புகழின் செல்வியை மயக்கிவிடுமா?
அவள் பைத்தியம்போல் திரிபவள். எத்தனையோ மேதைகளின் சமாதியை நோக்கித் தன் மாலையைச் சுழற்றி வீசுவாள். செத்துக்கொண்டே உழைக்கும் மேதைகளைக் கவனியாமல் அவர்களை மரணம் எப்பொழுது தழுவும் என ஏங்கிக்கொண்டிருப்பாள். அவள் சபலபுத்திக்காரி.
புகழை எண்ணி ஏங்கிய செல்வனிடம் சிந்தனையாளன் சொன்னான். ‘புகழ்’ கடல் அலைமாதிரி நிலையாகவே இராது. ஏறும்; விழும். அதற்காக ஆசைப்படுவானேன்? புகழ் வருவதாயிருந்தால் தானாக வரட்டுமே!’
அவன் உழைத்தான். சுயபலத்துடன், திறமையிலும், உழைப்பிலும் நம்பிக்கை வைத்து உழைத்தான்.
பணக்காரன் பணத்தால் புகழுக்கு ஏலம் கூறிக்கொண்டிருந்தான்.
வானவில் ஜாலம் காட்டும் ஒய்யார மாளிகையிலே எழிற்கொலுவில் இருந்த புகழரசியின் காதிலே. காற்று ரகசியம் பேசியது. எவ்வளவோ பித்தர்களின் புலம்பல்களுடன் இவர்கள் பேச்சும் ஒலித்தது. அவள் சிரித்தாள்.
எத்தனையோபேரை மயக்கிய, எவ்வளவோபோ கண்டு பித்துப் பிடித்துப் புலம்புகிற, பாசிமணிக் கண்களில் தனியொளி தெறித்தது. எத்தனையோபேர் முத்தம் பதிக்கவேண்டும் எனத் துடிக்கிற, சிலருக்கு முத்தம் விதைத்த, ரோஜாமுகை போன்ற உதடுகளில் மிமினிச் சிரிப்புப் பூத்தது. நடனராணிபோல அவள் ஒயிலாக நெளிந்து நிமிர்ந்தாள். குறும்பு சுடரிட்டது அவள் பார்வையில், சிரிப்பில், செயலில்.
அருகில் கிடந்த பூமாலையை எடுத்து, சுழற்றி வீசினாள். அழகாக மிதக்கும் பட்டம்போல, நீரில் கவர்ச்சியாய் நீந்தும் பாம்புபோல ஒளி கிறுக்கிச் சுழலும் மின்னல்போல வந்த மாலை உழைப்பவன் கழுத்திலே விழுந்தது.
அவன் திறமையில் நம்பிக்கைவைத்து தன்னம்பிக்கையைத் துணை யாகக் கொண்டு உழைப்பிலே இன்பம் காண்பவன். அவன் வாழ்க்கையே ஒரு கலை.
புகழரசியின் மாலை தானாக அவன்மீது வந்து விழுந்தது. அவன் மேலும் உழைத்தான்.
அப்பொழுதும். பணத்தை வைத்துக் குலுக்கிக் கொண்டு. அதன் ‘கிண்..கிணார்’ ஓசையால் புகழரசியை வசியம் செய்து விடலாம் என நம்பியவன் புகழ்… மேலும் புகழ்… மேலும் மேலும்…’ என ஜபம் செய்து கொண்டுதானிருந்தான்.
கொலுப்பொம்மைபோல் திகழ்ந்த புகழ்ராணி சிரித்தாள். ஒயிலாகச் சோம்பல் முறித்துக் கொண்டாள். அவள் சபல புத்திக்காரி. அவள் வேசி. அவளை யாரும் வசியம் செய்துவிட முடியாது. ஆனால் அவள் எல்லோரையும் வசியம் செய்யவல்ல மாமாயக்காரி.
– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை.