புகழேந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2024
பார்வையிட்டோர்: 1,118 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விஞ்ஞான ஆராய்ச்சியிலே அவனுக்கு நிகர் யாருமில்லை. இந்தியாவின் ஈன்ஸ்டின் என்று உபகண்டம் பாராட்டுப் படித்தது. சரித்திர ஆராய்ச்சியின் கரையைக் கண்டவன் அவன். சார்லஸ் ஆண்டபோது நடந்ததைக் கூற வேண்டுமா ? ஷாஜகானின் குணாதிசயங்களை ஒன்று விடாமல் சொல்ல வேண்டுமா? நாசர் காலமா ? சீசர் வீரமா ? எல்லாமே அவனுக்கு மனப்பாடம்! சுருங்கச் சொன்னால் அவனே ஒரு சரித்திரப் புத்தகம்! 

இலக்கியத்திலே எதுபற்றி அவனிடம் விவாதிக்க வேண்டும் ? எதற்கும் தயார்! கவிதைத் துறையிலே கம்பனா ? ஷெல்லியா? காளிதாசனா? டென்னிசனா? பைரனா ? பாரதியா? யாரைப் பற்றியும் கருத்துரைகள் வழங்குவதிலே அவனுக்கு நிகர் யாருமில்லை என்பது மட்டுமல்ல; அந்தக் கவிதா மண்டலத்தோடு போட்டியிடவும் திறமை பெற்றவன். பொருளாதாரம் பற்றி விளக்கம் தேவையா ? காரல்மார்க்ஸ் அனுப்பி வைத்த தூதுபோலத் தொடங்கி விடுவான், பொருளாதாரப் பிரசங்கத்தை. அமெரிக்காவின் ஆஸ்தி என்ன? ரஷ்யாவின் ரகசியமென்ன ? இது போன்ற விவரங்களை மிக எளிதில் கற்றுத்தர வல்லோன்! கணிதத்திலோ மேதை! பூகோளத்துப் புலி! அரசியலிலே அவனொரு பிளேட்டோ! சமுதாயத்திலே சாக்ரடீஸ்! எழுத்திலே பெர்னாட்ஷா- ஷேக்ஸ்பியர் இருவரின் கூட்டு! பேச்சிலே டெமாஸ்தனிஸ் -இங்கர்சால் இருவரின் கலப்பு! இத்தகைய மேதை! புதிய பாதை வகுத்தவன்! அவனது பெயர் கூறவே மக்கள் தயங்குவர் – பெயரைக் கூறுவது அவன் பெருமையை இழிவு படுத்துமோ என்ற சந்தேகத்தால்! ஆகவே அவனை மேதை என்றே அழைத்தது இந்த மேதினி. 

சில புலவர்கள் கூட அழகாகச் சொல்லுவார்கள் அவனது பெயரைப் பற்றி. “மே” என்பது உலகத்தொழிலாளரின் உற்சவதினம்; “தை” என்பது தமிழரின் உழைப்பு வெற்றி தினம்; ஆகவே இரண்டு பெருந் திருநாட்களும் சேர்ந்தமைந்த பொருத்தமான பட்டம் ‘மேதை’ என்று! நமது சிந்தை கவர்ந்தவனுக்குச் சிறப்பான பெயர் அமைந்து விட்டது என்று கூறி மகிழ்வர் பல்லோர். வயதோ முப்பது நிறையவில்லை. வாலிபத்தென்றல்; அதற்குள்ளாக அவனுக்கு வந்து குவிந்த புகழோ பெருங்குன்றம்! 

அவனைச் சுற்றி வாழ்த்துப் பாடியபடி எந்நேரமும் இருப்பார் மாணவரும், தொழிலாளரும், பண்டிதரும், பாமரரும்! தனக்கு எத்துணைப் பெருமை வளர்ந்திருக்கிறது என எண்ணும்போது, மணக்கும் அவன் நெஞ்சம் புகழ் கண்டு பூரிப்படைவான். ஆனாலும் அவன் உள்ளம் புகையும் எரிமலை போல இருந்ததை அவனால் மறைக்க முடியவில்லை. மறைப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டான். 

புகழ்! புகழ்!! புகழ்!!! 

யாருக்கு வேண்டும் இந்தப் புகழ்! சரித்திர விற்பன்னன் ஜகம் புகழும் பூகோள மேதை -கணித நிபுணன் கவிஞருக்கு மன்னன் எழுத்து வேந்தன் என்றெல்லாம் உலகம் உளறுகிறது அவனைப் பற்றி! ஆனால் அவனோ துடித்துக் கிடக்கிறான். “தொலையாதோ இந்தப் புகழ்” என்று மனம் வெடித்துச் சாகிறான். காரணம் அவனால் தனியே எங்கும் போக முடியாது. மாலை நேரத்தில் கடற்கரையில் உலவி வரலாமா? முடியாது, கூடாது என்று தடையல்ல; அவன் போக முடியாதபடி புகழ் அவனைத் தடுத்தது. நூறு, ஆயிரம் என்று மக்கள் சூழ்ந்து கொள்வர். “மேதை” வந்து விட்டார் என்ற செய்தி எங்கும் பரவும். தனிமையை நாடிவந்த அவன் புகழ்தரும் தலைவலி தாங்காமல் ஓட்டமாக ஓடி வீட்டுக்குப் போய்விடுவான். ரயிலில் போக முடியாது. கடைத்தெருப் பக்கம் தலைகாட்ட இயலாது. கண்காட்சி சாலைகளில் காலடி வைக்க முடியாது. புகழ் – புகழ் – புகழ் – எங்கும் புகழ்! அந்த மேதையின் நற்பண்புகள் பற்றிப் பேசாதார் இல்லை. 

காதலனும் காதலியும் கொஞ்சிடும் அந்த அழகான நந்தவனத்தைப் பற்றி உணர்ச்சி பொங்கிட வர்ணித்திருக்கிறானே; அந்த ஒய்யார வனத்திலே உல்லாச கீதம் பாடும் ஜீவஜோடிகளை யாரும் சித்தரிக்காத வண்ணம் சித்தரித்து எழுதி இருக்கிறானே; படிக்கும்போதே நமக்கு ஒரு போதை தோன்றுகிறதே; அதை எழுதும்போது அவன் நிலை எப்படி இருந்திருக்கும்! – இப்படியெல்லாம் எழுதுவது போன்ற கற்பனையை வாழ்நாளில் தத்ரூபமாகச் சிந்திக்க வேண்டுமென்று அவன் விரும்பமாட்டானா ? அந்த இன்பவிருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவித்திருக்க மாட்டானா? அந்தத் தவிப்பின் போது ரோஜா கிடைக்காவிட்டால் ஒரு கனகாம்பரம் என்ற அளவுக்குத் தன் ஆசையை விரித்திருக்க மாட்டானா ? என்றெல்லாம் அவனைப் பற்றிப் பேசினர். 

“ஆச்சரியம் தான்! நீ நினைக்கிறபடியோ, சந்தேகங் கொள்ளுகிறபடியோ, அந்த மேதை வழுக்கி விழுந்து விடுகிறவனல்லன்; நிச்சயம் அத்தகைய வழியில் அவன் இறங்க மாட்டான்!” என்று உறுதியோடும் பலர் பதிலுரைத்தனர். 

“நல்லொழுக்க சீலன் என எப்படி நவில முடியும் ? நாடு பல சுற்றியிருக்கிறான்” 

“ஏடு பல கற்றிருக்கிறான். ஏன் அவன் சற்குணனாய் இருக்க முடியாது ?” இப்படிக் கேள்வியும் பதிலும் மாறி மாறி! 

“தான் எதிர்பார்த்து நடைபோடும், அந்த லட்சியம் கைகூடும் வரையில் – உலகத்திற்கு அந்த ஒப்பற்ற பரிசை வழங்கும் வரையில் – அவன் திருமணமே செய்து கொள்ள மாட்டானாம்!” 

இந்தப் பிரசாரமும் பரவியது, அவன் அப்படிச் சொன்னானோ இல்லையோ எல்லோரும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தனர். அவன் சொல்லாததையெல்லாம் மக்கள் சொல்லுவர். அதைப் பற்றிப் புகழ்வர், அவனும் வேறு வழியின்றி, “ஆமாம், சொன்னேன்” என்று ஒத்துக் கொள்வான். 

“இலட்சியம் கைகூடும் வரையில் உறங்கவும் மாட்டாராம்!” இப்படிப் பிரச்சாரம் நடைபெறும். அன்பின் மிகுதியால் கிளம்பும் வதந்தி. அவனைப் போய்க் கேட்பர். “உங்கள் இலட்சியம் கைகூடும் வரையில் உறங்கமாட்டீர்களாமே! ஆகா, என்ன உறுதி” எனப் புகழ் பாடியபடியே! 

“இல்லை, இல்லை எனக்கு அப்படியெல்லாம் இலட்சியத்தில் மோகமில்லை!”, என்றா அவனால் சொல்ல முடியும்? முடியாது. ஆகவே, “ஆமாம் உறங்கமாட்டேன்” என்பான். அதற்காகத் தன்னைச் சுற்றியிருப்போர் தூங்கிய பிறகு நாற்காலியில் உட்கார்ந்தபடியே எதையோ சிந்திப்பது போலத் தூங்கிக் கொண்டிருப்பான், பாவம்! அதுவும் அமைதியற்ற அரைத் தூக்கம். 

“நமது மேதை – நல்ல வேட்டி சட்டைகூட உடுத்துவதில்லை. அவருடைய எண்ணமெல்லாம் உலகத்திற்கு ஒரு புதிய வழி காண வேண்டுமென்பதிலேயே லயித்துக் கிடக்கிறது” என்பர் சிலர். 

“இல்லை, இல்லை நான் ஆடம்பரமாக உடை உடுத்துவேன்” என்றா அவன் கூற முடியும் ? முடியாதே; பாவம்! அதற்காக நாற்றத்தையும் தாங்கிக்கொண்டு அழுக்கு ஆடைகளை உடுத்துவான். 

“பெரிய மகானுக்கும் நமது மேதைக்கும் என்ன வேறுபாடு? ஒன்றுமில்லை – பெண் என்றால் திரும்பியும் பார்ப்பதில்லையே இவர்!” என்று அதிசயமாகப் பேசுவர் பலர். 

“உம் – பெண்ணாவது மண்ணாவது!” என்று மேதையும் அவர்களோடு சேர்ந்து பேசுவான். பேசத்தானே வேண்டும், அவனுடைய பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள! 

மேதை ஒருநாள் வெளியூருக்கு அழைக்கப்பட்டிருந்தான் கல்லூரி ஒன்றிலே ‘விஞ்ஞான அறிவு’ என்ற தலைப்பிலே சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக! கல்லூரித் தலைவரின் வீட்டிலேயே தங்கியிருந்தான். யாரும் தொந்தரவு கொடுக்காமலிருப்பதற்காகத் தனியாக மேல் மாடியில் மேதைக்கு இடவசதி செய்து கொடுத்திருந்தார் கல்லூரித் தலைவர். கல்லூரியில் மேதையின் சொற்பொழிவு நடைபெற்றது. விஞ்ஞானத்தின் பெருமைகளை அவனுக்கே உரிய அழகு நடையில் அவனால் மட்டுமே விளக்கமுடியும் என்ற அத்தனைப் பெரிய கருத்துக்களை மாணவரிடையே வாரியிறைத்தான் மேதை. 

கூட்டத்திலே மாணவிகளும் அதிகமிருந்தனர். அந்த முல்லைக் கொல்லையின் நடுவே அழகு ரோஜா ஒன்றும் இருந்தது. மேதையின் பேச்சையும், அவனது கட்டுக்குலையா மேனியின் அழகையும் அந்த ரோஜாப்பூ தன்னிரு செவிகளாலும், விழிகளாலும் முறையே விழுங்கிக் கொண்டிருந்தது. மேதையின் பார்வையும் இரண்டொரு முறை அந்த அழகியின் மீது பாய்ந்தது. ஆனால் பாய்ந்த வேகத்தில் மீண்டது. அவன் அவளை லட்சியம் செய்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. சொற்பொழிவு முடிவுற்றது. மேதையை மாணவர் சூழ்ந்துகொண்டனர். அனைவரிடமும் பேசிவிட்டு மேதை கல்லூரித் தலைவரின் வீட்டுக்குப் புறப்பட்டான். 

உணவு முடிந்த பின்னர் அமைதியை விரும்பி, மேதை மாடிக்குப் போனான். மாடியிலே உலவிக் கொண்டிருந்தான். நல்ல நிலவு! உலவிக் கொண்டிருந்தவனுக்குக் கால் வலி எடுக்கவே நாற்காலியில் அமர்ந்தான். மேதையைக் கவனிப்பதற்காக அமர்த்தப்பட்டிருந்த பையன் ஓடிவந்து, மேதையின் கால்களை அமுக்கி விட்டான். மேதையின் வலிகண்ட கால்கள் பையனின் பணிவிடையால் சுகம் பெற்றன. 

மேதையின் கண்கள் கட்டவிழ்த்துக் கொண்டு இங்குமங்கும் திரிந்தன. எதிர்த்த வீட்டு மாடியிலே, கல்லூரியிலே கண்ட ரோஜா நின்று கொண்டிருந்தாள். அவள் கண்களிலேயிருந்து புறப்படும் அந்தக் காதற் கணைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை! ஆனால் அவை மேதையை அசைக்கவும் முடியாதவை என எண்ணித் தவித்தாள், அந்த ரோஜா! மேதைக்குக் கால் அமுக்கிவிட்ட பையன் வேலை முடிந்து வெளியே போனான். போனவன் எதிர்த்த வீட்டு மாடிக்கு எப்படிப்போனானோ தெரியவில்லை. அந்த மாடியைப் பார்த்துக் கொண்டிருந்த மேதையின் கண்களிலே ஒரு காட்சி தெரிந்தது. தனக்குக் கால் பிடித்த பையன் எதிர்த்த வீட்டிலே அந்தக் கல்லூரி ரோஜாவுடன் ஏதோ பேசுகிறான். அவளும் மெதுவாக ஏதோ கூறுகிறாள். பிறகு அந்தப் பையனுடைய கைகளை எடுத்துக் கண்களிலே ஒத்திக்கொள்கிறாள். அந்தக் காட்சியை மேதை கண்டான். “லட்சியம் ஈடேறும் வரையில் பெண்களைத் திரும்பியும் பாரார்! திருமணமும் வேண்டார்!” என்று ஊரார் – உலகத்தார் பேசிய புகழ் உரைகள் அவன் காதில் ஒலித்தபடி இருந்தன. 

மறுநாள் காலையில் பையன் வந்தான், அவனுக்குக் காலைப் பணிவிடைகள் புரிவதற்காக! அப்போது மேதை அவனிடம் கேட்டான்: “நேற்றிரவு அந்தப் பெண் உன் கைகளைக் கண்களில் ஒத்திக் கொண்டாளே, ஏன்?” என்று. “நான் உங்கள் கால்களைப் பிடித்தேனல்லவா? அதனால் என் கைகள் மிகவும் பாக்கியம் செய்த கைகளாம்; அதனால் என் கரங்களை அவள் கண்களில் ஒத்திக் கொண்டாள்!” என்று பையன் நிலைமையை விளக்கினான். 

மேதை ஒன்றும் பதில் சொல்லவில்லை; நினைத்துக் கொண்டான். “நான் அவள் கால்களையே கண்களில் ஒத்திக் கொள்ளத் தயாராயிருக்கிறேன். அவளோ என் காலில் பட்ட உன் கரங்களை முத்தமிடுகிறாள்! நல்ல புகழப்பா இது! பொல்லாத புகழ் – என்னைக் கொல்லாமல் கொல்லுகிறது!’ என்று ஆயிரம் முறை தனக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டான். 

அதற்குள்ளாக அந்தப் பெண்ணும் எதிர்வீட்டு மாடியில் உதயமானாள். மேதையை வழியனுப்புவதற்காக ஐம்பது மாணவரும், ஆசிரியர் பத்துப் பேரும் மாடிக்கு வந்துவிட்டார்கள். மேதை எதிர்வீட்டு மாடியை ஏறெடுத்தும் பாராமல் காரியங்களை முடித்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டான். 

“மேதை வாழ்க!” என்ற முகத்துடன் மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்தார்கள். 

– 16 கதையினிலே, முதற் பதிப்பு: டிசம்பர் 1995, திருமகள் நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *