பிழைப்பு




(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“என்ன ஐயர்வாள்! நல்ல வேலை செய்தூட்டிங்களே!'” “வாங்க, உட்காருங்க ….. அப்படி ஒண்ணும் செய்ய வில்லையே.”
“ஒப்புக்கொள்ளப் பயப்படுறீங்களா, இல்லாட்டி வெக்கப்படறீங்களா?”
“எதைப்பற்றிச் சொல்றீங்கோ?”

“நீங்க செஞ்சதைக் கேள்விப்பட்ட பிறகு நான்கூட அதுமாதிரி செஞ்சால் என்னன்னு யோசிக்கிறேன். நான் கூட அவுங்ககிட்டியே ஒப்படைச்சூட்டு ஹாய்யாக இருக் கலாம். காட்டை அழிக்கிறதுன்னா தீவட்டியை வச்சுக் கொளுத்தியா ஆகும்? மூங்கிலும் மூங்கிலும் உரசிக் கொண்டால்தானே காடு அழிந்துபோகிறது. பொதுவுடைமை, அபேதவாதம், கிஸான் இயக்கம் இன்னும் இருக் கிற அவ்வளவு தொந்தரவுக்கும் இந்த வழிதான் நல்ல மருந்து. அவா கேக்கறதைக் கொடுத்தூட்டால் அப்பொ தானாத் தெரிந்து போறது! கையை இறுக்கமாக மூடிக் கிட்டால் என்னவோ இருக்கு என்று சண்டைக்கு வரான் கள். இப்பொ என்ன மோசம்! இத்தனை நாளாய் நாம் கொடுத்தோம், பண்ணையாள் வாங்கிக் கொண்டான். இப் பொழுது அவன்தான் கொடுக்கட்டுமே, நாம் வாங்கிக் கொள்கிறோம். என்ன நான் சொல்றது சரிதானே?”
“சரிதான் சரிதான். பண்ணையைப் பத்தியா?”
“ஆமாம். ஒண்ணாம் நம்பர் யோசனை. நிலம் சாகு படியாகாமெயும், நடவு நடாமெயும் அறுவடைக்கூலி சண்டை இல்லாமலும் போயிடும் பாருங்கோ…அதோடு இந்த இயக்கங்களும், கோவிந்தா ஆயிடும். அஞ்சு வாரத்துக்கு அப்புறம் இவங்களா வந்து, ‘நிலமும் வேண்டாம், நீச்சும் வேண்டாம்; நீங்களே படி அளங்க’ன்னு சொல் வான்கள். பாருங்களேன். இருக்கட்டும். மெம்பராச் சேர்ந்தூட்டீங்களாமே?”
”மெம்பராச் சேர்ந்துட்டேன். அவுக ஒரு கடுதாசு கொடுத்தாங்க. அதில் கையெழுத்துச் செய்து கொடுத் திருக்கேன்.”
‘சபாஷ்! அவுங்க ஒங்க மனசுக்குள்ளே பூந்து பார்த் தான்களா என்ன? முள்ளை முள்ளாலேதான் எடுக் கணும்!”
“முள்ளை முள்ளால் எடுத்தால் சில சமயம் ரெண் டாம் முள்கூட உள்ளேயே ஒடிஞ்சு போறதும் உண்டு.”
”நீங்க சொல்றது ஒரு மாதிரியாத் தோணுதே.ஆனால் நீங்க நிஜமாவே சேர்ந்துட்டேளா?”
“ஆனால் பொய்யா வேறே சேருகிறதுண்டா என்ன?”
“ஏன் இல்லே? திருடனைக் கண்டுபிடிக்கணுமின்னா நாமும் திருடன் ஆனால்தான் முடியும். அந்தமாதிரி யோசிச்சுத்தான் இந்த மாதிரி செய்திருக்கீங்க என்னு நினைச்சேன்.”
“இல்லே, நிஜமாகத்தான்.”
“என்னாலே நம்பவே முடியவில்லையே. போன வாரம் இதே திண்ணையிலே நீங்க பேசினது ஞாபகம் இருக்கோ இல்லியோ? அந்தப் பேச்சைக் கேட்ட எவனும் நீங்க இப்போ சொல்றதை நம்பமாட்டான். ‘கட்டுத் தறியிலே இருக்கிற மாடு தொடந்தாப்போலே மூணு மாசமா விடியக்காத்தாலே செத்துக் கிடக்கிறதுன்னா யார் வேலைன்னு தெரியல்லியா?’ இன்னு உறுமினீங்களே. ‘சுவான்தாரனை நஷ்டப்படுத்து. அவன் வழிக்கு வரு வான்னு உபதேசம் பண்ணினவங்களை வைக்கறேனா பாரு!’ என்று வரிந்து கட்டினீங்களே …அதெல்லாம் மறந்து போய், அவங்க சங்கத்திலேயே சேந்தூட்டேன் இன்னா எப்படி நம்பறது?”
“அப்போ பேசினது வாஸ்தவம். அப்போ கொதிச்சதும் வாஸ்தவம்தான். ஆனால் இப்போ ஒண்ணு நடந்தது. அதிலே இருந்து புத்தி மாறிப்போச்சு.நம்ப பேச்சு, வேகம் எல்லாம் அவ்வளவு நியாயமாகப் படவில்லை. சுயகாரியப்புலி விஷயமாத் தெரியுது – நன்னா நிதானமா யோசிச்சால்-”
“அப்படி என்ன நடந்தது? எனக்குத் தெரியாதே.”
”கிணறு இறக்க வேண்டும் என்று சொல்லிக்கொண் டிருந்தேனா? மூணு நாளைக்கு முந்தி ஒட்டன் கிட்டே வேலையைப் பேசி விட்டேன். அவங்களோடே கூலி பேசி விடறதுக்கே பெரிய தொந்தரவாய்ப் போய்ட்டுது. ஒரு சமயம் கிணறும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாமுன்னு கூடத் தோணிப்போயிட்டுது. ஆனால் ஆசை விடவில்லை. ஒண்ணுக்கு மூணாக் கூலியை ஒத்துக்கிட்டேன். இந்தக் கூலி ஜெரிக்காதுன்னு சொல்லியே ஒத்துக்கிட்டேன்.
“அவன்கள் வேலைக்குப் போயிட்டான்கள். சாயங் காலமாக என்ன வேலை ஆகி இருக்கு பார்ப்போம் என்று நான் புறப்பட்டுப் போனேன். காண்டிராக்டுக் கூலி இன் னால் கேக்கணுமா? பர பரவென்று வேலை செய்துகொண் டிருந்தான்கள். பதினைந்து ஆட்கள் வேலை செய்துகொண் டிருந்தான்கள். இரண்டு பேர் கிணற்றில் இடுப்பு மட்டும் தண்ணீரில் நின்றுகொண்டு மண்ணைக் கூடையில் வாரி மேலே அனுப்பிக்கொண் டிருந்தான்கள். இரண்டு பேர் கிண ற்றுக்குமேல் நின்றுகொண்டு கூடையைச் சாரங்களில் இடிக்காமல் கொள்ளாமல் மேலே அனுப்பிக்கொண்டிருந் தான்கள். சாரத்திற்கும் மேலே இருவர் நின்றுகொண்டு இந்தக் கூடைகளைக் கயிற்றினால் இழுத்துக்கொண் டிருந் தான்கள். வேறு இருவர் மண்ணை வாங்கிக் கொட்டினான் கள். அப்பொழுது வேலை நடந்திருந்த கணக்குக்கு மறு நாள் வேலை முடிஞ்சுவிட வேண்டும்.
“என் மனசுலே ஒரு கணக்கு ஓடிக்கொண் டிருந்தது. ‘ஒரு நாளைக்கு ஓர் ஆளுக்கு இரண்டு ரூபாய் வீதம் கூலிக் கணக்கு வைத்தால், இரண்டு நாள் வேலைக்கு அறுபது ரூபாய்தானே ஆகிறது. இந்த அறுபது ரூபாய்க்குமேல் கூலி கேட்பது அக்கிரமம்தானே! அவர்கள் இல்லாவிட் டால் காரியம் நடக்காதுன்னு தெரிந்துகொண்டுதானே நம்மை ஏமாத்தி மோசடி செய்கிறார்கள்! இந்த வேலைக்கு 180 ரூபாய்க்குக் குறையமாட்டேன் என்றான்களே! கூலி யாட்களை ஏழை, அப்பாவிகள் என்று நினைக்கக்கூடாது. அவர்களைப்போல் பகற் கொள்ளைக்காரர்களை எங்கேயும் பார்க்கமுடியாது. ஏழைகள், வேலையாட்கள் பாடே தேவல்லை. பஞ்சப்பாட்டுப் பாடியே பிழைத்து விடுகிறான் கள். நல்ல கொள்ளை! ஆனால் நம்ம கதி! மகா வெட்கக் கேடு!”
“இதை எல்லாம் நினைக்க நினைக்க மனசு பொங்கியது. அவர்கள் வேலை செய்வதைப் பார்க்கப் பார்க்க எனக்குப் பற்றிக்கொண்டது. சஞ்சாயத்தில் வேலை செய்வதாய் இருக்கட்டும், இப்படியா வேலை செய்வான்கள்? எத்தனை தரம் வெத்திலை பாக்குப் போடுகிறேன் என்று உட்காரு வான்கள்! எத்தனை தரம் ஒண்ணுக்குப் போவான்கள் இல்லை என்றால் வேலை செய்யும்பொழுது எப்படி ஆடி அசைந்துகொண்டு வருவான்கள்! ஒரு தட்டுலே ஒரு பிடி மண்ணைப் போட்டுக்கொண்டு தாங்கமாட்டாத பாரத் தைத் தூக்கிக்கொண்டு வருவதுபோல் முக்கி முனகி என்ன பாசாங்கு செய்வான்கள்! இப்போ காண்டிராக்டு வேலை! பறக்கிறான்கள்!”
“பாத்தீங்களா, அந்தப் பசங்களே அப்படித்தான்! மோசக்காரன்கள்.”
‘இதை எல்லாம் நினைக்க நினைக்க எனக்குத் தாங் கல்லே. அந்த இடத்தைவிட்டுப் போய்விட வேணுமின்னு தோணித்து. பாக்கி வயலை ஒரு சுத்துப் பார்த்துவிட்டு வரலாமின்னு கிளம்பிச் சுத்திக்கொண்டு வந்தேன்,பத்துப் பதினைந்து நிமிஷம் ஆகியிருக்கும். மாடு மேய்க்கிற பையன் வரப்பு வழியாக என்னை நோக்கி ஓடிவந்தான். ‘கிணறு இறக்கறவன் காலிலே கடப்பாரையைப் போட்டுக் கொண்டுவிட்டான்’ என்று சொன்னான். எனக்குத் திக் கென்றது.
“ரத்தம் வருகிறதா என்று கேட்டேன். அவனுக்குத் தெரியவில்லை. அதற்குப் பிறகு வயலைச் சுத்திப் பார்க்க மனசு வரவில்லை. கிணறு இறக்கும் இடத்திற்குத் திரும் பினேன். அப்பொழுது வேறு ஒரு யோசனை. ‘கிணறு இறக்குவதற்குப் பலியாகத்தான் பெரிய பூசணிக்காய்க்குக் குங்குமமிட்டு அங்கே வைத்திருக்கிறான்களே. ரத்தபலி வேறு கிணத்துக்கு வேணுமா என்ன?’ என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.
“கிணத்தண்டை ஒரே கும்பலாக இருந்தது. கும்பலின் நடுவில் ஓர் ஆள் படுத்துக்கொண் டிருந்தான். கண், மூடி இருந்தது.எனக்குப் பயமாகப் போய்விட்டது. மெதுவாகப் பக்கத்தில் இருந்த ஆளைப் பார்த்து, ‘பலமாகப் பட்டுவிட் டதா என்ன?’ என்று கேட்டேன். அவன் வாயைத் திறந்து பதில் சொல்லாமல் தலையை அசைத்தான். தலை அசைப்புக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. ஆனால் அவனை வற்புறுத்திக் கேட்டால் எதாவது கவலைப்படும் படியாகச் சொல்லிவிடப் போகிறானே என்ற பயம். ஒன்றும் பேசாமல் படுத்துக்கிடந்த ஆளின் காலைப் பார்த் தேன். ஈரத் துணி சுத்தி இருந்தது. ஆனால் அதில் ரத்தக்கறையைக் காணோம். அது எனக்குத் தெம்பு கொடுத்தது. நல்லகாலம் என்று நினைத்துக்கொண்டு ரோட்டுப் புறத்துக்கு வந்துவிட்டேன். பாக்கி வயலைச் சுத்திப்பார்க்க மனசு வரவில்லை. என் வண்டியண்டை வந்து ஒரு விநாடி நின்றேன்.வண்டிக்காரன் மெதுவாகப் பின்னால் வந்து வண்டி ஏறினான். நான் வண்டி ஏறியதும் வண்டி புறப்படும் சமயம். கிணறு இறக்கற ஆட்களில் நாலஞ்சு பேர் திடு திடுவென்று ஓடிவந்தார்கள். திகிலுடன் ஒரு விநாடி வண்டி புறப்படுவதைத் தாமதப்படுத்தினேன். சாமி! வேலைக்கு வந்த இடத்திலே இப்படி ஆபத்தாப் போயிடுச்சுங்க. நீங்கதான் தயவுபண்ணனும் என்றான்கள்.
“என்ன பண்ணணும்? ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக் கிண்டு போயேன்”
“போறோங்க; நீங்க ஆஸ்பத்திரியிலே சொல்லாட்டிச் சேக்கமாட்டாங்க. ஏழைங்களை ஏன் இன்னு கேக்கற பேர் யாரு?.. அவனுக்கு மயக்கமாய் இருக்கு. பிராந்தி வாங்கிக் கொடுக்கணும்.”
“ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சொல்லிவிட்டுப் போகி றேன்’ என்று உறுதி சொன்னதுடன் இரண்டு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.’
“கூலியிலே கொடுத்தீங்களா அல்லது இனாமா?” என்று முதலியார் குறுக்கிட்டார்.
“அதை நான் கேட்கவும் இல்லை. அவர்கள் சொல்ல வும் இல்லை. ஆனால் கூலியில் கழிப்பேன் என்று சொல்ல எனக்கு அந்தக் கலவரத்தில் தோன்றவில்லை.
“பிறகு அங்கிருந்து ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினேன். வண்டி நகர்ந்ததோ இல்லையோ வண்டிக்காரன், “பாவம்! நல்லா விழுந்தூட்டுது” இன்னான்.
“இல்லேடா, கொஞ்சந்தானே பட்டுது என்றான்கள். ரத்தங்கூடக் காணும். நீ இந்தமாதிரி சொல்றயே, நீ பாத்தியா?” என்று கேட்டேன்.
“நானு அங்கேதானே இருந்தேங்க. ஒரு ஆளு கட்டப் பாரையாலே மண்ணை இடிச்சு விட்டுக்கிட் டிருந்தான். இரண்டு மூணு ஆள் மாத்தி மாத்தி மண்ணை அள்ளிக் கிட்டிருந்தான்கள். அந்தக் குருட்டுப் பயல் கட்டப்பாரை யைப் பார்த்துப் போடறதில்லே மண் அள்றவனாவது உஜாராய் இருக்கவேணாம்! கட்டப்பாரையை அவன் போட்டான் பாருங்க, ‘ஐயோ!’ன்னான் மண் அள்றவன். ஓடிப்போய்ப் பார்த்தால் கட்டப்பாரை பாதத்துக்கு அடி யில் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. பிறகு எல்லா ஆள்களுமாக மெதுவாக அந்தக் கட்டப்பாரையை எடுத் தாங்க. அந்த ஆள் அப்படியே மயக்கமாய் விழுந்தூட் டான். அவனைப் பிடிச்சுத் தூக்கி மோட்டில் கொண்டு வநது சேர்த்தாங்க. யாரோ ஒருத்தன் எதோ எலையோ சாம்பலோ கொண்டுவந்து காயத்தின் ரெண்டு பக்கமும் வைத்து ஒரு துணியால் சுத்திக் கட்டினான். ரத்தம் ஒண் ணும் அதிகமா வரவில்லை. அதான் பயமாக இருக்கு.”
இதைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்றியது. ஆள் பிழைக்கமாட்டானோ என்னவோ என்ற திகிலில் மயக்கமே வந்துவிட்டது. வண்டி கொஞ்சதூரம் போன பிறகு தான் மயக்கம் தெளிந்தது. நேரே ஆஸ்பத்திரி டாக்டரிடத்தில் நடந்த விஷயத்தைச் சொல்லி, ஆள் வருவான்; ஆஸ்பத்திரியிலே சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தேன். மறுநாள் காலையில் தெருத் திண்ணையில் உட்கார்ந்துகொண் டிருந்தேன். கிணறு வெட் டின ஆளில் நாலு பேர் திடீருன்னு முன்னே வந்து முளைச் சான்கள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அந்த ஆள் பாடு முடிஞ்சுவிட்டதுபோல் இருக்கு. அப்படியானால் அவன்களுக்கு என்ன சமாதானம் சொல்லுகிறது? நான் ஏதோ குத்தம் செய்துவிட்டதுபோல் வேதனை உண்டாச்சு. இப்படி மனசைப்போட்டு அலட்டிக்கொண்டிருந்தேன்.
”நேத்து ராத்திரி ஆஸ்பத்திரிக்குப் போனாங்க.. நீங்க வந்தூட்டுப் போனதாகச் சொன்னாங்க. டாக்டர் ஐயா அவனுக்கு மருந்து வச்சுக் கட்டிப்பிட்டு ஆஸ்பத்திரியிலே பதினைஞ்சு நாளைக்கு இருக்கணும்னாரு. ‘ராவைக்கு இவனை வீட்டுக்கு இட்டுப்போயிட்டுக் காத்தாலே அழச்சாறம். காத்தாலேயே பிடிச்சுப் பதினைஞ்சு நாள் இருக்கட் டும்’ன்னு சொன்னோம். ‘அதெல்லாம் கூடாது. இப்பவே இங்கேயே அவன் இருந்தூடணும்’ இன்னாரு. எங்களுக்கு வேறெ யோசனைங்க. எங்ககூடக் காலையிலே வேலைக்கு வந்தவன் சாயங்காலமா எங்களோடெ வீட்டுக்கு வல்லே; ஆபத்தாயிடுச்சு ; ஆஸ்பத்திரியிலே இருக்கான் இன்னு அவங்க வீட்டிலே யார் எப்படிப் போய்ச் சொல்றதுங்க? அவன் பொண்சாதி வேறெ முழுகாம இருக்குங்க. இப் பிடிச் சொன்னா அவ அலறிப் போயிடமாட்டா! காலம்பர அழைச்சாந்தூ டறமின்னு அவனை ஊட்டுக்கு இட்டுக் கிட்டுப் போயிட்டோம். அந்தப் பொம்பிள்ளை புருசனைப் பார்த்ததும் ஹோன்னு அழுதூடுச்சி. ஒண்ணும் பயமில் லேன்னு தேத்தறபாடு தெய்வம் அறிஞ்சு போயிடுச்சு. அப்பறம் காத்தாலே இப்பொ அவனை இட்டுக்கிட்டுப் போனோம். டாக்டர் மருந்தைப் போட்டுக் கட்டிப்பிட்டு வீட்டுக்குப் போகச் சொல்றாரு. எங்களுக்கு வண்டியா காடியா வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போக. அவன்தான் வீட்டிலே என்ன செய்வான்? பதினைஞ்சு நாளைக்குப் பிழைக்க வழி ஏது? புள்ளத்தாச்சி அவனுக்குச் சம்பாரிச்சி எப்பிடிப் போடுவா? இதை எல்லாம் சொன்னால் டாக்டர் கேக்கமாட்டேங்கறார். ‘ராத்திரி ஏன் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போனே? இப்பவும் அழைச் சுக்கிட்டுப் போ’ இன்னு வீம்பு பேசறார். பொம்பிள்ளை பயந்து போகுமேன்னு செஞ்சோமின்னா கேட்கமாட் டேங்கறாரு. நீங்க வந்து டாக்டர்கிட்டேச் சொல்லி ஆஸ்பத்திரியிலே சேத்துப்புடுங்க’ இன்னான்.
“நான்தான் குத்தம் செஞ்சுட்டேன் இங்கிற நினைப் பாச்சா எனக்கு. போங்கோ வரேன் என்று சொல்லிப் பிட்டு வண்டியைக் கட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன்.
‘ஆஸ்பத்திரிக்குப் போனீங்களா? அப்புறம், இன் னும் என்ன என்ன ஒத்தாசை செஞ்சீங்க?’ என்று கண்ணை அகல விழித்து முதலியார் வியப்புற்றார்.
“ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டர்கிட்டே சிபார்சு செஞ்சுட்டு வெளியே வந்தேன். ஒரு புள்ளத்தாச்சி வந்து விழுந்து கும்பிட்டு எழுந்தாள். அவள் வாயைத் திறக்கவே இல்லை. கைகளை அப்படியே கூப்பிக்கொண்டு நின்றாள். கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகி யது. அவள் யார் என்று எனக்குப் புரிஞ்சு போச்சு. அவள் விழுந்து கும்பிட்டபொழுதும் எழுந்திருந்தபொழுதும் அவள் கன்னத்திலுள்ள கதுப்பு வேதனையால் நெளிஞ்சு மறைஞ்சது கண்ணுக்குமுன் அப்படியே நிற்கிறது. இந்த மாதிரிக் கூலியாளுங்கதான் பகல் கொள்ளை அடிக்கிறான் இன்னு நாம்ப கட்சி பேசறோம். பதினைஞ்சு நாள் படுத் துக்கிட்டாச்சோறு யாரு சம்பாரிச்சுப்போடுவா?….. நம்ப கட்சி நமக்கு; அவா வேதனை அவாளுக்கு.. அதை நெனச் சுக்கிண்டாலே அந்தப் பிள்ளைத்தாச்சிதான் கண்ணிலே தெரியறாள்.”
“இந்த நியாயத்தை நினைச்சுத்தான் நெலத்தை அவங்க கிட்டியே குடுத்தூட்டேளா?” என்றார் முதலியார்.
“அதிலே இருந்துதான் மனசு மாறிப்போச்சு. இது ஏழைங்க பொழப்பைப்பத்தி நன்னா யோசிச்சால்…… “
“அவுங்க கட்சி சரி இங்குறிங்க. அவ்வளவுதானே?” என்று கிண்டலாக முத்தாய்ப்பு வைத்தார் முதலியார்.
“பின்னே பொய்யா நான் சொல்றது. அந்தப் பொம் பிள்ளை பிரசவிச்சூட்டுது இன்னு நேத்துச் சாயங்காலமா ஒரு ஆளு வந்து கையைப் பிசைஞ்சான் ஒரு கலம் நெல்லுக் குடுத்தனுப்பினேன். நிலம் என்றாலே எனக்கு இப்போ தலை சுத்தறது. கொடிக்கால் மூலை மின்ன றதா, சனிமூலை மின்னறதான்னு பாக்கறதும், வெளுப்பு மேகமா கறுப்பு மேகமான் னு வாதம் செய்யறதும், வெதைவாசி தேடறதும் பாதி ராத்திரியிலே மடையைத் திறந்துவிட்டானோ இல்லி யோன்னு தூக்கத்திலே இருந்து முழிச்சுக்கறப்போ நெனைச்சுப்பாக்கறதும்… அப்பப்ப இப்பொ ஒரு தொந் தரவும் இல்லை. ஹாய்யாக இருக்கேன். அப்பிடி மனசு தெளிஞ்சுபோச்சு. அதான் அந்தக் கட்சியிலே சேந்தூட்டேன்.”
“இப்பொ நன்னாப் புரிஞ்சு போச்சு. நல்ல தந்திரம், நிலத்தைச் சாகுபடி பண்ண! ஏமாந்தவனுக்குக் காதுகுத்த நல்ல கதை!” என்று துண்டை உதறி மேலே போட்டுக் கொண்டு முதலியார் நடையைக் கட்டினார்.
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |