பிதாமகன்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 2,837

ஆதவனூர் ஏரிக்கரையின் அதிகாலைப் பொழுது, எப்போதும் ஒரு மௌனராகத்தை மென்மையாய் இசைத்துக் கொண்டிருக்கும். அன்றைய காலைப் பொழுதில், குளித்து முடித்த பின் வேப்பமரத்தடிச் சுமைதாங்கிக் கல்லில் ஒரு சிலை போல் அமர்ந்து தியானித்தபடி இருந்தார் தமிழாசிரியர் சாலமன். , அவரது மாணவன் பாலமுருகன் ஒரு நாள் அதிகாலையில் அவரைப் பார்த்தான். தினமும் 7 மணி அளவில் எழுபவன் அவரைப் பார்த்த பின் அதிகாலையில் எழுவதும் அவரைப் போல் ஏரியில் குளிப்பதும் அவனுக்கு வழக்கமாகி போனது. அவரைப் போலவே ஆகவேண்டும் என்ற எண்ணமும் அவனிடம் மேலோங்கிய வண்ணம் இருந்தது.
“ஐயா நான் தினமும் காலைல உங்களை ஏரிக்கரையில் பாக்குறேன், . நீங்க குளிச்சு முடிச்சிட்டு வேப்பமரத்தடியில் இருக்கிற சுமைதாங்கி கல்லுல அப்படியே சாமி மாதிரி உட்கார்ந்திருக்கீங்க. நான் உங்கள மாதிரி ஆகணும்னு விரும்புறேன் அய்யா !”
இப்படி காலை வேளையில் சிறு சாலை வழியே தமிழாசிரியர் சாலமன் தான் வேலை பார்க்கும் ஆதவனூர் நடுநிலைப்பள்ளிக்கு நடந்து செல்லும்போது, அவரது வகுப்பு மாணவன், பாலமுருகன் எனும் பாலகன், தனது வகுப்பு ஆசிரியர் சாலமனை பார்த்து எந்தவித சுணக்கமும் இல்லாமல் வணக்கம் சொல்வதைக் கூட மறந்துவிட்டு, இணக்கமாக ஒரு நண்பனை போல் அவரிடம் கேட்டது, அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவர் அந்தச் சிறுவனது கேள்விக்கு எந்தவித பதிலையும் அளிக்காமல், உள்ளுற மகிழ்ந்தார். வழக்கமான பள்ளிச் சூழலில் ஆசிரியரைப் பார்த்ததும் வரும் பயமோ, தயக்கமோ அவனிடம் இல்லை. ஆசிரியர் சாலமன் , அந்தச் சிறுவனின் மழலை மாறாத எதார்த்தத்தில் மனம் குளிர்ந்து, மெல்லிய புன்னகையோடு பள்ளியை நோக்கி நடந்தார்.
தமிழ் ஆசிரியர் சாலமன், பரமக்குடி அருகில் உள்ள இதம் பாடல் கிராமத்தைச் சேர்ந்தவர். சிவகங்கையில் புலவர் பட்டம் பெற்று, ஆதவனூர் நடுநிலைப்பள்ளியில் இருபத்தொன்பது ஆண்டுகளாகத் தமிழ் ஆசிரியராக இருந்து, தமிழின் சுவையை மாணவர்களுக்கு இனிதே ஊட்டி இன்புற்று வருபவர்.
மெலிந்த தேகம், கனிந்த பார்வை, இதமான நடை, எளிமையான கதர் உடை – இவைதான் இப்போதைய அவரின் அடையாளம்.
அவரது இனிய உறவுகள் யாவும், பெயர் தெரியாத நோய்களால் பீடிக்கப்பட்டு, ஒரு மாத இடைவெளிக்குள் ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்து விண்ணுலகம் சென்றுவிட்டனர். எஞ்சியிருப்பது சாலமனும், அவர் கடைபிடிக்கும் காந்திய நெறிகளும் மட்டுமே.
தனிமையைத் தவமாகக் கொண்ட அந்தச் சாந்த சொரூபியின் மனதில் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி கனன்று கொண்டிருந்தது. ஆன்மீகமும் தத்துவமும் கலந்த அந்த வினாவை, இன்று தனது எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்க வேண்டும் என்ற ஆவலோடு வகுப்பறைக்குள் நுழைந்தார்.
ஆசிரியர் உள்ளே நுழைந்த உடன் மாணவர்கள் அனைவரும்,
”வணக்கம் ஐயா” என்று ஒரு சேர, ஒருமித்த குரலில் ஓசையிட்டனர். ஆசிரியர் இருக்கையில் அமர்ந்தார். வகுப்பறைக்குள் மாணவர்களின் கண்கள் அவர் மீது நிலைத்தன. ஆசிரியர் பேசத் தொடங்கினார்:
“பிள்ளைகளா, இன்னைக்கு நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கப்போறேன். இதுக்கு சரியான பதில், தவறான பதில்னு எதுவுமே கிடையாது. உங்க மனசுல என்ன தோணுதோ, அதை அப்படியே தயக்கமில்லாம சொல்லணும். சரியா?”
மாணவர்களிடம் ஒருவித மெல்லிய நடுக்கம் பரவியது. ஆசிரியர் தொடர்ந்தார்:
“இறப்பு என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது எப்போது உங்களைச் சந்திக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?”
வகுப்பறையில் சில நிமிடங்கள் நிசப்தம் நீடித்தது. வரிசைக்கு ஏழு பேர் வீதம் அமர்ந்திருந்த மாணவர்கள் நிலைகுலைந்தனர். சிலர் பயத்தில் இருக்கை மாறினர்.
ஆசிரியர் முதல் வரிசையில் இருந்த பரசுராமனை பார்த்து பதில் சொல்லும்படி சைகை செய்தார். உடனே பரசுராமன் எழுந்து பதிலளித்தான். .
“ஐயா, எங்க தாத்தா எண்பது வயசுல இறந்தாரு. பாட்டி எண்பத்தஞ்சு வயசுல போனாங்க. நானும் அவங்க வழியில அந்த வயசுலதான் இறப்பேன்னு நினைக்கிறேன்,” என்றான் இயந்திரத்தனமாக.
மணிவண்ணன் எழுந்து, “எங்க அப்பா ஐம்பத்தைஞ்சு வயசுல தூக்கு மாட்டி இறந்துட்டாரு ஐயா… நானும் அப்படித்தான் ஆவேனோன்னு பயமா இருக்கு,” என்றான் கலங்கிய குரலில்.
ஜெயபால் எழுந்து, “ஐயா, எனக்குத் தண்ணியில கண்டம் இருக்குன்னு ஜோசியர் சொன்னாரு. அதனால இன்னும் ஒரு வருஷத்துல நான் இறந்துடுவேன்,” என்றான் விதியைக் காரணம்காட்டி.
மாணவர்கள் ஒவ்வொருவராக தங்கள் கணிப்பைச் சொல்லிக் கொண்டிருந்தபோதே, சாலமன் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடியபடி கவனிக்கத் தொடங்கினார்.
அவர் தூங்கிவிட்டதாகக் கருதிய மாணவர்கள்,
“நான் 90 வயசுல!”,
“நான் 80!”,
“நான் 100!”
“நான் 75” என்று ஆளுக்கொரு இலக்கத்தைச் சொல்லிவிட்டு அவசரமாய் அமர்ந்தனர்.
சிறிது நேரம் கழித்துக் கண்விழித்த ஆசிரியரைப் பார்த்து இஸ்மாயில் சொன்னான்,
“ஐயா, எனக்கு ரொம்ப வயசான அப்புறம்தான் சாவு வரும்.”
சபரிமுத்து எழுந்தான். பேச முடியாமல் அவன் அழுது கொண்டே அமர்ந்தான்.
குலோத்துங்கனோ கோபத்துடன் ஆசிரியரைப் பார்த்துவிட்டு, தேம்பி அழுதபடி வகுப்பை விட்டு வெளியே ஓடினான். அவன் கால்கள் அவன் வீட்டை நோக்கிப் பயணித்தன. ஆசிரியர் அவனைத் தடுக்கவில்லை.
அப்போது வாசலில் மணிமுத்துவின் தாத்தா வந்து நின்றார்.
“ஐயா, பேரன் தயிர் சாதப் பொட்டலத்தை வீட்ல விட்டுட்டு வந்துட்டான். அதைத் தரலாம்னு வந்தேன்,” என்றார்.
ஆசிரியர் எழுந்து சென்று கனிவோடு அதை வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி வைத்தார்.
மீண்டும் வகுப்பு தொடர்ந்தது. ஆனால், வாசலில் குலோத்துங்கனின் அப்பாவும் சித்தப்பாவும் ஆவேசமாக வந்து நின்றனர்.
“என்னப்பா இது? வாத்தி பாடத்தைச் சொல்லிக் கொடுக்காம, சாவைப் பத்திப் பேசிப் புள்ளைங்களை பயமுறுத்துறாரே! இன்னைக்கு நாம இவருக்கு நல்லா பாடம் புகட்டணும்,” எனச் குலோத்துங்கனின் சித்தப்பா கூக்குரலிட்டபடி இருக்க. அவர்களுக்குப் பின்னால் குலோத்துங்கன் பயத்துடன் ஒளிந்து கொண்டிருந்தான்.
வகுப்பறைக்குள் பிரான்சிஸ் எழுந்தான்.
“ஐயா, எங்க அப்பா சரியில்லை. தினமும் குடிச்சிட்டு வந்து எங்க அம்மாவ போட்டு அடிக்கிறாரு! இன்னும் ஒரு மாசத்துல அவரைப் போட்டுத் தள்ளிட்டு நானும் கிணத்துல விழுந்து சாவப் போறேன்!” என்றான் ஆத்திரத்துடன்.
இறுதியாகக் கயல்விழி எழுந்தாள். ஆசிரியர் அவளையே உற்றுப் பார்த்தார். அவள் நிதானமாகச் சொன்னாள்:
“ஐயா, இறப்புங்கிறது எப்ப வரும், எப்படி வரும்னு யாருக்குமே தெரியாது ஐயா. அது நம்ம கையில இல்லை.”
கயல்விழியின் தெளிவான பதிலை கேட்டவுடன் சாலமனின் முகத்தில் ஒரு பேரொளி படர்ந்தது.
“அற்புதம்! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். தெளிவான சிந்தனை இதுதான்,” என்று சொல்லி கயல்விழியை பாராட்டினார். உடனே அனைத்து மாணவர்களும் கைத்தட்டி உற்சாகமடைந்தனர்.
“பிள்ளைகளா… கவனிங்க. மரணம் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அதை நினைத்து வருந்துவதில் அர்த்தமில்லை. நாம் இந்த உலகில் வாழும் காலம் வரை, யாருக்கும் இடையூறு இல்லாமல், அன்பை விதைத்து வாழ்ந்தால், அந்த வாழ்க்கை ஆனந்தமாகவும் அர்த்தமுள்ளதாகும் இருக்கும். நாம் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினால், மரணத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை,” என்று கூறிவிட்டு நாற்காலியில் நிதானமாகச் சாய்ந்தார்.
வகுப்பிற்கு வெளியே வாசலில் அமர்ந்தபடி வெகு நேரம் காத்துக் கொண்டிருந்த குலோத்துங்கனின் குடும்பத்தினருக்கு, இறுதியில்
ஏமாற்றமே எஞ்சியது. அவரை வம்புக்கு இழுத்து அவரோடு சண்டையிட நினைத்தவர்களுக்கு, அதன் பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
ஆசிரியர் நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு அருகில் சென்ற மாணவர்கள் திடுக்கிட்டனர்.
தமிழாசிரியர் சாலமன், தான் எடுத்த கடைசிப் பாடத்தின் பொருளைத் தனது மௌனத்தின் வாயிலாகப் புரியவைத்துவிட்டு, அந்தப் பரலோகப் பிதாவோடு இரண்டறக் கலந்துவிட்டிருந்தார்.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
