பிச்சைக்காரன்
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காற்று பலமாக வீசியடிக்கின்றது. வானம் இருண்டுகொண்டு வருகின்றது. நேற்றுவரை பளீரிட்டிருந்த வானம் திடீரென இந்தக் காலை வேளையில் இருளுவது குறித்து விசனத்துடன் ஜன்னலை மூடியபடி எழுகிறேன்.
தனிமை….பயங்கர தனிமை….இதைவிட வாழ்க்கையில் பெரிய கொடுமை வேறென்ன இருக்கிறது! மழையும், காற்றும் என்ன செய்துவிடக்கூடும்?
சமையலறைக்குள் நுழைந்து நிதானமாக அடுப்பைப் பற்ற வைக்கிறேன். சூடாக நெஸ்கஃபே குடித்தால் நல்லா யிருக்கும். கலந்து எடுத்துக்கொண்டு மீண்டும் ஹோலுக்கு வருகிறேன். சுவைத்துக் குடித்துக் கொண்டிருக்கையில் வாசலில் தபால்காரன் வந்து நிற்கிறான். கடிதத்தை வாங்கி மேசையில் போடுகிறேன். ஏதாவதொரு திறப்புவிழாவுக்குக் கூப்பிட்டிருப்பார்கள். எனக்கென்று கடிதம் எழுத வேறு யாரிருக்கின்றார்கள்?
முன்பு மருத்துவ சேவகியாக இருந்து ஓய்வு பெற்று விட்டபோதும் இந்த அறுபது வயதுக் கிழவியின் அறிவுரை களைக் கேட்பதற்கு இன்னும் ஆட்கள் இருக்கின்றார்கள். எங்கேயாவது ஒரு சுகாதார நிறுவனமோ, மருத்துவ தொண்டு நிறுவனமோ திறப்பு விழாவிற்கு அல்லது ஆண்டுவிழாவிற்கு என்னை அழைத்தபடியே இருக்கின்றன. இந்த லோகத்தில் இது ஒரு புதுமைதான். எனது பேச்சு இன்னும் உயிர்த் துடிப்புடன் இருக்கின்றது போலும். இன்றைக்கு கிழவிகளின் அறிவுரைகளை யார் கேட்கிறார்கள்?
வெற்றுக் கோப்பையை மேசைமீது வைத்துவிட்டு கடிதத்தைப் பிரிக்கிறேன். ஊர்க்கோடியிலுள்ள வயோதிபர் இல்லத்தில் முதியோர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்திருக்கின்றது.
வாசலுக்கு வந்தபோது வானம் சிறிது வெளுத்திருப்பது கண்டு உள்ளத்தில் களிப்பு மேலிடுகின்றது. படியை விட்டிறங்கி சிறிது நடக்கவேண்டும் போலிருக்கிறது. வெளியிறங்கும்போது பக்கத்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்த பெரேரா நிமிர்ந்து பார்க்கிறார்.
“என்ன மெடம்.. ஏதும் விசேஷமா?”
தபால்காரன் கொண்டுவந்த கடிதத்தைப் பற்றித்தான் கேட்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு “அப்படி ஒண்ணும் இல்லை…” என்கிறேன். ஒரு மருத்துவிச்சியைப் பார்த்து “மெடம்” என்று கூப்பிடும் அவரது உயர்ந்த குணத்தை எப்போதும் நான் சிலாகிப்பதுண்டு. எனது கணவரின் நல்ல நண்பர் அவர். கத்தோலிக்க சிங்களவர். இருவரும் கொழும்பில் பெற்றோலிய நிறுவனத்தில் வேலை செய்தவர்கள். பத்து வருடங்களுக்கு முன்பு எனது கணவர் இறந்துபோன நாளிலிருந்து முக்கியமான எனது வெளி வேலைகளை யெல்லாம் செய்து தருபவர்.
“மெடம்… இன்று மாலை மகளை பிரசவத்திற்கு வீட்டுக்குக் கூட்டிவரப் போகிறோம். நேரம் கிடைத்தால் நீங்கள் கொஞ்சம் வந்து பாக்கணும்..”
“ஓ…அதுக்கென்ன? அடுத்த கிழமைதானே டேட்?”
“ஆமாம். அவளை ஒரு மாசத்திற்கு முந்தியிருந்தே கூப்பிடுகிறோம். இப்போதான் வருவதற்கு ஒத்துக் கொண்டாள்.”
அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு முற்றத்தில் காலைப் பதிக்கிறேன். வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சிறிய பூந்தோட்டம். எனது கணவரின் ஓய்வூதி யத்தில் பெரும் பகுதியை இந்தப் பூந்தோட்டத்திற்கே நான் செலவிடுவது வழக்கம். அந்தளவுக்கு பூக்கள்மீது கொள்ளைப் பிரியம் எனக்கு. பேரன் பேத்திகளைக் கொஞ்ச வேண்டிய வயதில் பூக்களையாவது கொஞ்சக்கூடாதா?
செக்கச் சிவந்து மலர்ந்து கிடந்த அந்தூரியம் பூக்களை அள்ளிக்கொள்கிறேன். இந்தத் தள்ளாத வயதிலும் ஊர்ச்சேவகம் செய்யும்படி அழைப்பு வந்துகொண்டிருக்கிறது. சொந்தச் சேவகம் செய்ய ஒரு பிள்ளையையாவது தராத ஆண்டவரின் எண்ணத்தை என்னவென்பது?
ஓடியாடி ஊருக்குப் பிரசவம் பார்க்கின்ற மருத்து விச்சிக்கு ஆசைக்குக்கூட ஒரு வாரிசு இல்லாத முரண் நகையை எண்ணிக்கொள்கிறேன். இதழோரத்தில் என்னை யறியாமலேயே ஒரு விரக்திப் புன்னகை சுழித்துச் செல்ல, படியேறி வீட்டினுள் நுழைகிறேன். “கர்த்தரே என்னை ஆசீர்வதியுங்கள்.” உதடுகள் மெல்ல முணுமுணுக்கின்றன. பூச்சாடியிலுள்ள நேற்றைய மலர்களைக் களைந்துவிட்டு இன்றைய மலர்களை வைத்து அழகு பார்க்கிறேன்.
“அம்மா..” வாசலில் குரல் கேட்கிறது. எட்டிப் பார்க்கிறேன். வெள்ளிக்கிழமைப் பிச்சைக்காரன். வாசலில் கையேந்தியபடி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வருவானே, அந்தப் பிச்சைக்காரன் நிற்கிறான். தோளில் பெரிய துணிமுட்டை.
”ஓ… இன்று வெள்ளிக்கிழமை…” மனது ஆயாசத்துடன் உணர்வு கொள்கிறது. காரணம், வெள்ளிக்கிழமை பொழுது முற்றிச் சாய்வதற்குள் பலதரப்பட்ட பிச்சைக் காரர்களின் குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டியிருக்கும். அக்கடாவென்று உட்கார்ந்து ஜெபம் பண்ணும்போதும், பைபிள் படிக்கின்ற போதும் அது பெரிய தொல்லையா யிருக்கும். எல்லோருக்கும் நல்ல நாளாக இருப்பது போலவே பிச்சைக்காரர்களுக்கும் இது விசேட நாள்தான். எல்லாரும் பிச்சையெடுக்கப் படையெடுப்பது இந்த நாளில்தான்.
எழுந்து சென்று அலுமாரி மேலுள்ள வாயகன்ற கோப்பையில் கைவிட்டு, சில்லறைகள் கலகலக்க ஒரு ஐந்து ரூபா நாணயத்தை எடுத்துவந்து கொடுக்கிறேன். பெற்றுக் கொண்டு நகர்கிறான். வெள்ளையும் சள்ளையுமாய் உடுத்து வந்து நிற்கின்ற இவனுக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும்.
அந்த அனுதாபம் காரணமாகவே அவனுக்கு நான் ஐந்து ரூபா கொடுப்பது வழக்கம். போகும்போது துணிப்பையில் சேகரித்த அரிசியை விற்று காசாக்கி, அந்தப் பணத்திற்கு வயிறு முட்ட கள்ளச் சாராயம் குடித்து முடித்துவிட்டு, தானம் பெற்ற சில்லறையெல்லாம் கொட்டிக் கிடக்க, வழியில் மல்லாந்து விழுந்து கிடப்பான் பலவேளைகளில். அப்போது அவனிடமிருந்து யார் யாரோ தானம் பெற்றுக் கொள்வார்கள்.
மேசை மீதிருந்த வெற்றுக் கோப்பையை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைகிறேன். கோப்பி தயாரித்த குவளைகளைக் கழுவி கவிழ்த்து வைக்கும்போது அடுத்த ஞாயிற்றுக் கிழமை முதியோர் தினக் கொண்டாட்டத் தில் கலந்து கொள்வதா, இல்லையா என்ற யோசனை எழுகின்றது. சும்மாயிருப்பதற்கு போய் வந்தால் என்ன? புதிய மனிதர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்தானே…
மனதுக்குள் போவது என்ற தீர்மானம் உறுதியாக, கைகளைத் துடைத்தபடி அறைக்குள் சென்று சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் கலண்டரில் உரிய இடத்தில் குறித்துக்கொள்கிறேன்.
“அம்மா…” வாசலில் மீண்டும் குரல். சிறிது நேர இடைவெளிக்குள் மீண்டும் கல்லில் அடித்ததுபோல் “அம்மா…” என்று சிறிது அதிகாரத்துடன் ஒலிக்கிறது. பெண்குரல்.
இப்போது பிச்சைக்காரனுக்கும் நேரத்தின் பெறுமதி தெரிந்திருக்கிறது. எவ்வளவு அவசரமாக பிச்சை கேட்கிறான்? எண்ணியபடி ஒரு சிரிப்புடன் எட்டி நடந்து முன்னே செல்கிறேன். வாசலில் நிற்கும் இந்தப் பெண்ணுக்கும் ஏறத்தாழ அறுபது வயதிருக்கும். என் வயதுதான். பழக்கமானவள். ஆனால், அடிக்கடி வருபவள் அல்ல.
என்னைக் கண்டதுமே பழகிய தோரணையுடன் உள்ளே வருகிறாள். நான் சோபாவில் அமர்ந்துகொள்ள, அவளும் சற்றுத் தள்ளி எதிரே அமர்கிறாள்.
“என்ன மேரியம்மா..என்ன விசேஷம்?”
“ஒண்ணுமில்ல. சும்மா பாத்துட்டுப் போக வந்தேன்..”
இவள் பார்த்துவிட்டுப்போக வந்தேன் என்றால், நூறு ரூபா இல்லாமல் இங்கிருந்து நகரமாட்டாள் என்பதே அதன் அர்த்தம் ஆகும். ஒருவகை கர்ணகடூரமான முகம். கேதமுற்று வாட்டம் கொண்டிருக்காவிட்டாலும் வார்த்தைகளில் அளந்து கொட்டும் புலம்பல். பொசுபொசுப்பு.
“உங்களுக்கென்னம்மா கொடுத்து வச்சவங்க. எங்கள மாதிரியா அலைஞ்சு திரிய ஆண்டவர் உங்கள வெச்சார்?”
நீண்ட பெருமூச்சுடன் அவள் சொல்ல, “கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம்.” எனது உதடுகள் மெல்ல முணுமுணுக்கின்றன. மௌனமாக புன்முறுவல் பூக்கிறேன்.
பளிச்சென்று துடைத்து சுத்தமாகக் கூட்டப்பட்டு, ஒழுங்குடன் காட்சியளிக்கும் முன் ஹோலையும், வீட்டின் உட்புறத்தையும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு அங்கலாய்ப் புடன் சொல்கிறாள்.
“நா அப்பாவ இழந்தேன்… தம்பிய இழந்தேன்…அவர இழந்தேன்… கடைசியா மகனையும் சுனாமில பறிகுடுத் துட்டேன். என்ன தலையெழுத்தோ? ஏழை எப்பவுமே ஏழை யாவே இருக்கிறான். பணக்காரன் எப்பவுமே பணக்காரனாவே இருக்கிறான். ஹும்…”
அவளது வழக்கமான பல்லவி இன்று வித்தியாசமான தோரணையில் வெளிவருகிறது. என்னுள் சட்டென ஒரு எரிச்சல் மூளுகிறது. எழுந்து உள்ளே செல்கிறேன். இவளுக்கு நூறு ரூபா கொடுக்கத் தேவையில்லை என்று மனது கூவுகிறது. கைப்பையிலிருந்து ஐம்பது ரூபா தாளொன்றை எடுத்து வந்து அவளிடம் நீட்டுகிறேன். இது எந்த மூலைக்கு என்பதுபோல் பார்க்கிறாள்.
“வெச்சிக்கோங்க.இப்ப வேற காசு இல்ல… ஏழைக்குப் போலவே பணக்காரனுக்கும் பிரச்சினைகள் இருக்கு…”
அவள் முகத்தில் தெரிந்தது வாட்டமா அல்லது கோபமா? அனுமானிக்க முடியவில்லை. விசுக்கென பணத்தை எடுத்துக்கொண்டு சர்ரென பாம்பு ஊர்வதுபோல விரைந்து சென்று பெரேராவின் வீட்டுக்குள் புகுந்து கொள்கிறாள்.
அறைக்குள் சென்று நிலைக்கண்ணாடி முன்னால் நின்று என்னை நானே உற்றுப் பார்க்கிறேன். லேசாக நரை விழுந்த முன்கூந்தல். சுருங்கிய வட்ட முகம். சற்றே கூனிய உடம்பு. கழிவோலை வரும்வரை காத்திருக்கும் எனக்கு ஏன் சட்டென கோபம் வந்தது? அவளும் என்னைப்போலவே கிழவிதானே… ஏதோ சொல்லிவிட்டுப் போகட்டும் என்று ஏன் சும்மாயிருந்திருக்கக்கூடாது?
அய்யோ… அவளது புலம்பலைக் கேட்டுக் கேட்டு புளித்துப்போய் விட்டது. மனிதர்கள் ஏன் இப்படிப் புலம்பிப் புலம்பி தன்னையும் அழித்து, அடுத்தவரது சந்தோஷத்தையும் கெடுக்கிறார்கள்…? கொஞ்சமாவது இங்கிதம் வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் இருக்கலாமே..
மத்தியான உணவை சமைத்துக் கொண்டிருக்கின்றேன். வாசலில் மணி ஒலிக்கிறது. ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறேன். கறுத்த ஸ்கார்ஃப் பக்கவாட்டில் தெரிகிறது. அடுத்த வரவு … டெயிசி!
கதவைத் திறக்கிறேன். “கர்த்தரே” என்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டபடி உள்ளே வருகிறாள். தான் கொண்டு வந்த வயர் பையை நீட்டுகிறாள்.
“மரக்கறி கொஞ்சம் கொண்டு வந்தேம்மா…”
இவளும் அடிக்கடி வருபவள் அல்ல. எனினும் வித்தியாசமான பிச்சைக்காரி. எவ்வளவு எதிர்பார்க்கிறாள் என்று சொல்ல முடியாது. இருபது ரூபா கொடுத்தால்கூட எடுத்துக் கொள்வாள். ஆனால், வெறுங்கையோடு வரமாட்டாள். ஏதாவது ஒரு அன்பளிப்புடன்தான் வருவாள். வயலில் அறுவடை செய்த புத்தரிசி, பச்சைமிளகாய், கெக்கரிக்காய்…
பையை வாங்கிப் பார்க்கிறேன். பயற்றங்காய்களும், முருங்கைக்காய்களும் கிடக்கின்றன. “இது என்னத்துக் கும்மா?” என்று கேட்டுவிட்டு அவளிடமே மீண்டும் தருகிறேன்.
“சும்மா எடுத்துக்கோங்க. உங்களுக்குத்தான் கொணாந்தேன்.”
“சரி. தாங்க.” எடுத்துச் சென்று பின்கட்டில் ஒரு பெரிய தட்டில் இட்டுப் பரப்புகிறேன்.
“இருங்க. சாப்பிட்டுப் போகலாம்..”
“இல்லம்மா…அவரு வந்து ஹொஸ்பிட்டல் பக்கத்துல நிற்கிறாரு. பார்மசிக்கு வந்த மாதிரி… அவரோட நானும் வந்தேன். உங்களப் பாத்துட்டுப் போகலாம்ன்டு..”
“சரி. இருங்க.” உள்ளே சென்று ஹேன்ட்பேக்கில் கைவிட்டு எடுத்துப் பார்க்கிறேன். ஐம்பது ரூபா தாள்.
எடுத்து வந்து கொடுக்கையில், “எதுக்கும்மா இதெல்லாம்..? என்று மறுக்கிறாள். பரவாயில்லை… எடுத்துக் கோங்க” என்று அவளது கையில் திணிக்கிறேன். மறுக்காமல் எடுத்துக்கொண்டு விடைபெற்றுச் செல்கிறாள்.
ஒவ்வொரு கிறிஸ்மஸ் பண்டிகையின்போதும் இந்த இரண்டு கிழவிகளுக்கும் ஐந்நூறு ரூபா வீதம் அன்பளிப்பு கொடுத்துவிடுவேன். அந்த நன்றிக்கடனோ என்னவோ இவள் இப்படித் தீர்க்கிறாள். அவள்…?
அவளுக்குக் கொடுக்கவிருந்த ஐம்பது ரூபா தான் இவளுக்குக் கொடுக்கப்பட்டது என்று ஞாபகம் வருகிறது. “தேவரே.. உம்மிடத்தில் பாரபட்சமில்லை…” நெஞ்சில் சிலுவைக் குறியிட்டு சொல்லிக் கொள்கிறேன்.
மனிதர்கள் எத்தனை விதமோ, பிச்சைக்காரர்களும் அத்தனை விதம். இவர்களைப் படிப்பதும், இவர்களோடு பழகுவதும், இவர்களது பிடியிலிருந்து தப்பிவாழ்வதும்கூட ஜீவிதக் கலைதான்.
கொடுப்பவர்கள் கொடுத்துக்கொண்டேயிருப்பதாலோ என்னவோ, எடுப்பவர்களும் அதிகமாகவே இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் வீட்டு முன்னால் பெரிய கடாரம் வைத்து அதில் என் அப்பா அரிசியை குவித்திருப்பாராம். வருபவர்கள் எல்லோரும் அள்ளிக்கொள்வார்களாம். அந்தப் பழக்கம்தான் இன்றும் விடாமல் தொடர்கிறது.
இன்றைய உலகில் எத்தனையோ நாகரீகப் பிச்சைகளும், அடுத்திருந்து திருடிக் கொள்ளும் உறவுகளும் அதிகரித்திருப்பதுபோலவே இந்த வாசல் பிச்சைக்காரர்களும் அதிகரித்துவிட்டார்கள். ஆனாலும், இவர்கள் வாசலில் வந்து நேர்மையாகக் கையேந்திக் கேட்பதை மதிக்க வேண்டித் தானே இருக்கிறது….? சிலவேளை நாம் வைத்துக்கொண்டு இல்லை யென்று சொல்லும்போதும், துளியளவே தர்மம் கொடுக்கும் போதும் கொடுப்பதை மறுக்காமல் எடுத்துச் செல்கிறார்களே, இதைவிட நேர்மை வேறு என்ன இருக்கிறது! வெறுமனே ஒரு ஏக்கப்பார்வை மட்டுமே பார்த்துவிட்டு அவர்கள் செல்லும்போது எமது நெஞ்சே எம்மைச் சுட்டெரிக்கிறதே…
சமையலை முடித்து பின்கட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றேன். “அம்மா…” வாசலில் மீண்டும் குரல் கேட்கிறது. சென்று பார்க்கிறேன். நொண்டியன் நிற்கிறான்.
கால் லேசாக வளைந்திருப்பதால் இழுத்து இழுத்து நடப்பான். அதனால் நொண்டியன் என்று பெயர். இந்த வட்டாரத்தில் பலே குடிகாரன். குடிப்பதற்காகவே பிச்சை எடுப்பான். வயது நாற்பதுக்கு சிறிது மேலேதான் இருக்கும். எனவேதான் நான் அவனுக்கு இரண்டு ரூபாவுக்கு மேலே கொடுப்பதில்லை. கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு பேசாமல் போய்விடுவான்.
இன்று இவனுக்கு ஒரு பத்து ரூபா கொடுத்தால் என்ன என்று தோன்றுகிறது.எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறேன். பத்து ரூபா நோட்டைக் கையில் பெற்றுக் கொண்டு அதிசயமாகப் பார்த்து முகம் மலர்ந்து சிரிக்கிறான்.
“கொண்டு போய் நல்லாக் குடி…”
அவனது சிரிப்பில சட்டென ஒரு வெட்கம் இழைகிறது. தலையைக் குனிந்துகொண்டு அப்பால் செல்கிறான்.
அன்றைய வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அவன் என்றுமே என் வீட்டுப் பக்கம் தலைகாட்டவில்லை. பல மாதங்களுக்குப்பிறகு ஒருநாள், அவன் வீடு வீடாகச் சென்று, காட்போட் அட்டைகளைக் கேட்டு வாங்கிச் சேகரித்து கடைகளுக்கு விற்பதாகக் கேள்விப்பட்டேன்.
– படிகள், நவம்பர் – டிசம்பர் 2006.
– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.