பாப்பாச் சாமியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 1,173 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்குச் சாமியார் என்றால் நிரம்பப் பயித்தியம். அதில் என் நண்பர்களுக்கு ஒரு கேலி. அதற்காக என்னை மண்டகப்படி செய்யாத நாளே கிடையாது. ஒருநாள் எனது நண்பர்களுடன் திண்ணையில் பேச்சுக்கடை திறக்க ஆயத்தப்பட்டபொழுது ஒருவன், ‘ஏனப்பா! காவேரிக்கரையில் வந்திருக்கிறாரே, புதுச் சாமியார், அவரைப் பார்க்கவில்லையா?’ என்றான். புரளி என்று நினைத்து நான் பதில் சொல்லவில்லை. ‘உண்மையாகத் தான் அப்பா. வெகு பால்யம். ஒருவித அப்பு அழுக்கும் சொல்ல முடியாது’ என்று பின்னும் சொன்னான். புரளி சொல்லும் வழக்கத்தை அருங்கலையாகப் பயின்றவனே இப்படிப் பேசினானென்றால், என்னைப் பற்றிக் கேட்பா னேன்? சாமியாரைப் போய்ப் பார்த்து வரவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டேன். 

மறுநாள் காலையில் கொஞ்சம் பசும் பாலும் சீனாக் கற்கண்டும் வாங்கிக்கொண்டு, காவேரிக்கரைக்குப் போய்ச் சேர்ந்தேன். ஒரு பெரிய அரச மரத்தடியில் ஒருவர் ஒரு குழந்தையுடன் விளையாடிக்கொண் டிருந்தார். ஆ! எவ்வளவு பால்யம்! கன்னத்தைவிட்டுப் பால் கதுப்புக்கூட நீங்கவில்லை. இடுப்பில் ஒரு வெள்ளைக் கோவணம், தலை மொட்டை. அவருடைய முகத்தில் ஆனந்தத்தின் அலை பூரணமாகத் தவழ்ந்தது. வயது பதி னான்குக்கு மேல் இருக்காது. அவரைப் பார்த்ததும் எனக் குச் சுப்பிரமணியசுவாமியின் ஞாபகம் வந்தது. காலடி யில் விளையாடிக்கொண் டிருந்த குழந்தை தந்தப்பொம்பை போல் அழகாக இருந்தது. அதற்கு வயது இரண்டுக்கு மேல் இராது.பாப்பாச்சாமியார் குழந்தையுடன் விளை யாடிக்கொண் டிருந்த அக்காட்சி, எனக்குப் பிரும்மானந்த மாக இருந்தது. குழந்தையைத் தரையில் விடுவதும், அரச மரத்தைச் சுற்றிச் சுற்றி நர்த்தனம் செய்வதும், திரும்ப வும் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவதுமாக இருந்தார் சாமியார். நடுவில் நடுவில் காவேரிக்கு வரும் ஜனங் களோடு விளையாடுவார். அவர்களை வாழைப்பழம் வேண்டும் என்று கேட்பார். தேங்காய் மூடி கொடுத்தால் வாங்கிக்கொள்வார். குழந்தைக்குக் கொடுத்துத் தானும் சாப்பிடுவார். ‘குழந்தைக்கு மாந்தம் வரப்போகிறதே’ என்று யாராவது சொன்னால், ‘சாவு வரப்போகிறதே என்று நீங்கள் என்ன முன்ஜாக்கிரதை செய்துகொண் டிருக்கிறீர்கள்?’ என்று பதில் கேள்வி கேட்பார். உண்மை யில் குழந்தைக்கு ஒருவித உபாதியும் அதுவரையில் வந்ததில்லை. இருந்தாலும் எப்படியாவது இச்சிறு குழந்தையை எடுத்துக்கொண்டு போய்க் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்து, ஊரார்களில் சிலர் இராக் காலத்தில் காவேரிக் கரைக்கு வந்தார்களாம்.பாப்பாச் சாமியார் மடியின் மீது குழந்தை தூங்கிற்றாம். சாமியார் மட்டும் விழித்திருந்தார். அந்தச் சந்திரனைப் பிடித்துக் கொடுத்தால், இந்தச் சந்திரனைத் தருகிறேன்’ என்று கைகொட்டிச் சிரித்தாராம். 

‘குழந்தைக்குச் சாமியார் எப்படி ஆகாரம் கொடுப் பார்? என்ன கொடுப்பார்?’ என்று அறிய எனக்கு ஆவலாக இருந்தது. நான் கொண்டுபோன பாலைக் கீழே வைத்ததும். அவசர அவசரமாக ஒரு பிறையிலிருந்து ஒரு பாலாடையை எடுத்துக் குழந்தைக்குப் பால் புகட்டி னார். அப்பொழுது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே! ஆ! என்ன தாயன்பு! 

‘இவர் யார்? இவரிடம் குழந்தை எப்படிச் சிக்கியது!’ என்ற இரண்டு விஷயமும் ஒருவருக்கும் தெரியவில்லை. அவருடைய சுய கதையைக் கேட்கலாம் என்று, “என்ன, பாப்பா, எந்த ஊர்? தாயார் தகப்பனார் இருக்கிறார்களா?” என்றேன். 

”நம்முடைய ஊர் திருச்சிற்றம்பலம். அப்புறம் தெரி யுமா!அம்மையும் நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீயேதான்.” 

இந்த இரண்டு நிமிஷமும் என்னுடன் பேசியது அதிகப்படி என்று அவர் உள்ளத்தில் தோன்றிவிட்டது போல் அடுத்த நிமிஷம் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு தாண்டவமாடினார். 

மானாட மழுவாடா மதியாடப் புனலாட 
மறைதந்த பிரம்ம னாட 

என்று பாடினார். குழந்தை மின்னல்போல் விழுந்து விழுந்து சிரித்தது. என்னை அறியாமல் நான்கூட இரண் டோர் அடி எடுத்து வைத்து விட்டேன். 

சாமியார் சற்று அசதி அடைந்து உட்கார்ந்ததும், மறுபடி விசாரித்தேன். “விடமாட்டிய அந்தப் பேச்சை? ஹும், இரண்டு நாளுக்குள் தயார், தகப்பனார்,அண்ணன், தம்பி அவ்வளவு பேரும் போய்விட்டார்கள் -கால்ராவில். நானும் இந்தத் தம்பியும்தான் பாக்கி.. அவ்வளவு தெரிந்தால் போதும்” என்று ஆகாயத்தை நோக்கினார். கண்ணில் இரண்டொரு நீர்த் துளி சேர்ந்தது. மறுகணத் தில் ஏதோ நினைத்துக்கொண்டு, “தாயார் ஏது? தகப்பனார் ஏது? எல்லாம் மாயை. உண்மை எது வென்றால், ஆனந்தம் பரமானந்தம், ஆனந்தம் பிரும்மானந்தம்!” என்று சொல்லிக்கொண்டு குதிக்கத் தொடங்கி விட்டார்… 

அடுத்த நாள் அவரைப் போய்ப் பார்க்க எனக்கு அவகாசம் இல்லை. ஆனால், அதற்குப் பிறகு இரண்டு மூன்று நாட்கள் வரையில் நான் ஆபீசுக்குப் போகும் பொழுதாவது திரும்பி வரும்பொழுதாவது அவர் என் கண்ணில் படுவார். அதுவே எனக்குத் திருப்தி அளித்தது. அதற்குப் பிறகு சாமியார் என் கண்ணில் படவில்லை. அதில் ஏதோ விசேஷம் இருக்கிறதென்று நான் நினைக்க வில்லை. ‘சித்தம் போக்கு, சிவம் போக்கு’ என்பார்களே. அந்த வகுப்பைச் சேர்ந்த பேர்வழிதானே என்று நினைத்துக்கொண்டேன். 

மறு ஞாயிற்றுக்கிழமை. “கேட்டீரா? உங்கள் பாப்பாச் சாமியாரின் குழந்தை நேற்று இறந்து போய் விட்டதாம். குழந்தைச் சாமியார் மடியில்தான் இருக்கிறதாம். அதை எடுத்து அடக்கம் செய்யச் சாமியார் இடம் தரமாட்டேன் என்கிறாராம். சாமியாரின் முகத்தைப் பார்க்கவேண்டுமே; மகா கண்ணராவியாய் இருக்கிறது! யாராவது பிடிவாதம் செய்தால், ‘குழந்தை தூங்குகிறது. நல்ல தூக்கம்; கூட்டம் போட்டுச் சப்தம் செய்யாதீங்க! என்கிறார். அவருக்குப் பிரமை பிடித்திருக்கிறது.காவேரி யில் ஒரே கூட்டம்” என்று ஒருவன் சொன்னான். 

இதைக் கேட்டதும் விழுந்தடித்துக் கொண்டு காவே ரிக் கரைக்குச் சென்றேன். ஒரே கூட்டம். பெண்களில் சிலர் கன்னத்தில் கைவைத்து நின்றார்கள். சிலர் கண்ணீர் விட்டார்கள். ஆடவரில் பலர் விழியாடாமல் நின்று கொண்டிருந்தார்கள். பாப்பாச் சாமியார் மட்டும் குழந்தையின் உயிர் மணம் மறைந்து மண்ணாகிவிட்டதை நம்பவில்லை போலும்! ஏனென்றால். தூங்கும் குழந்தை யைத் தாயார் பார்ப்பதுபோல் மடியில் இருந்த உருவத் தைப் பிரேமையுடன் கவனித்துக்கொண்டிருந்தார். 

இரண்டு மணி நேரம் சென்றது. கூட்டத்தில் புதி தாக வந்த சிலர் தங்கள் சாமர்த்தியத்தைப் பிரயோகம் செய்து பார்த்தார்கள். சாமியார் அழுதார் ; தூங்குகிற இடத்திலே வம்பு செய்கிறார்களே என்று மொண மொணத்தார். ஒருவரும் அசையும் வழியாக இல்லை. அதன் பேரில் வெறிகொண்ட நாய்போல இரண்டொரு வரைக் கடிக்கக்கூடத் தொடங்கிவிட்டார். 

ஜனங்கள் மறுபடியும் யோசனை செய்தார்கள். கடைசியாக, யாரோ ஒருவர் போய் ஒரு போலீஸ்காரனை அழைத்து வந்தார். பிறகு பாப்பாச் சாமியார் சும்மா இருந்தார்.உடனே ஊர்ஜனங்கள் குழந்தையை மயானத் துக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.பாப்பாச் சாமி யாரும் மளனமாக உயிருள்ள நிழல்போலக் கூடவே சென்றார். சடங்குகள் முடிந்ததும் ஊரார் திரும்பினார் கள். பாப்பாச் சாமியார் மட்டும் சுடலையில் அப்படியே உட்கார்ந்திருந்தார். அவருடைய கண்கள் மூடி இருந்தன. நாங்கள் அழைத்தது அவர் காதில் ஏறவில்லை. 

அன்று பகல் முழுவதும் சாமியார் வெயிலில் அப்படியே உட்கார்ந்திருந்ததாக வெட்டியான் சொல்லுகிறான். அன்று இரவும் அவர் அப்படியேதான் இருந் திருக்க வேண்டும். ஏனெனில், சிலர் அங்கு மறுநாள் போனபொழுது சாமியார் முன்போலவே உட்கார்ந்திருந் தார். எங்களுக்கெல்லாம் துக்கம். அப்படியே விட்டு விட்டால் குழந்தை போன வழி இவரும் போக நேருமே என்ற பயம் எங்களுக்குப் பிறந்தது. ஆனால், இன்னது செய்வதென்று புரியவில்லை. திடீரென்று எனக்கு ஓர் எண் ணம் தோன்றிற்று. “ஏன் பாப்பா! காவேரிக் கரையில் குழந்தை தூங்கி எழுந்து அழுகிறதே! இங்கே ஏன் உட் கார்ந்திருக்கவேண்டும்?’ என்றேன். 

சாமியாரின் கண்கள் மலர்ந்தன. ஏதோ ஞாபகம் செய்துகொள்பவரைப்போல் சுற்றுமுற்றும் பார்த்தார். கனவிலிருந்து விழித்தவர்போல், “என்ன? என்ன?” என் றார். காவேரிக் கரையில் குழந்தை அழுகிறதென்று மறுபடி யும் சொன்னேன். சாமியார் பசுப்போல எங்களுடன் வந்தார். 

காவேரியில் அவருக்கு ஸ்நானம் செய்துவைத்துத் தெருக்கோடியில் உள்ள வீட்டுக்கு மெதுவாக அழைத்துப் போனேன். அந்த வீட்டிலிருந்த குழந்தையைப் பார்த்த தும், ‘ஒ! ஓ! தூங்கி எழுந்திருந்துவிட்டாயா? பொல்லாது)’ என் று கை கொட்டித் தாண்டவமாடினார். முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சினார்; முத்தமிட்டார். சிரித்தார்; குழந்தையும் சிரித்தது. 

இப்படி இருந்தாற்போல் இருந்து திடுதிடுவென்று தெருப்புறம் ஓடினார். எங்களுக்கெல்லாம் புரியவில்லை. வெளியே வந்தோம். பாப்பாச் சாமியார் எதிர் வீட்டுக் குள் சென்று, அங்கே தொட்டிலில் இருந்த குழந்தையைப் பார்த்து விளையாடினார்; சிரித்தார்; எழும்பிக் குதித்தார். சாமியாருக்குப் பால் கொண்டுவரப் பெண்கள் போய் திரும்பி வருமுன் சாமியார் ஓடிவிட்டார். 

பிறகு அடுத்த வீடு. அங்கும் இதே மாதிரி. அதற்கு அடுத்த வீடு, அதற்கடுத்த வீடு, அதற்கும் அடுத்த வீடு. எங்கும் இதே மாதிரி. சாமியாருக்குச் சந்தோஷம் தாங்க வில்லை. ‘அடாடா! ஒரு பாப்பாவுக்கு எத்தனை தம்பிப் பாப்பா!’ என்று சிரித்துக்கொண்டே கிழக்கே ஓடினார். 

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *