பழக்கம்
கதையாசிரியர்: க.சட்டநாதன்
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 878
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எழுபதுகளில் அது நடந்தது. புத்தூரில் அவன் படிப்பித்த காலம். பாடசாலைக்குப் பஸ்ஸில்தான் பயணம். அவன்போகும் பஸ்ஸில் அனேகமாக அவளும் பயணம் செய்தாள். அழகு அவளிடம் இருந்தது. இளமையும் இருந்தது. கண்கள் சற்றுப் பெரிதாகவும் பரிவு கொண்டவையாகவும் இருந்தன. படபடப்பற்ற நிதானம் அவளது இயல்பு போலும். அவளில் அவனது பார்வை தொடும் போதெல்லாம் அவளது முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் குதூகலத்தையும் அவன் கவனம் கொண்டான்.
ஒரு சமயம் தட்டி வானில் அவன் பயணம் செய்த பொழுது, எதிரும் புதிருமாக, அவளுக்கு முன்பாக அவன் உட்கார்ந்து கொண்டான். அவளது மூச்சொலி கூட அவனுக்குக் கேட்டது. இருவரையும் சூழ இங்கிதமில்லாத ஒரு வெம்மையும் இறுக்கமும். மனசு கள்ளப்பட்ட நிலையில், தைமாத இளங்காலைக் குளிரில் கூட, அவனுக்கு வேர்த்தது. ஏதோ தவறு செய்வது போல ஒரு தடுமாற்றம், ஓர் உறுத்தல்.
‘இது தப்பா… சும்மா பார்ப்பது கூடத் தப்பாகி விடுமா…?’ அவனது மனசு நிலை கொள்ளாது தவித்தது.
அவனுக்குத் திருமணமாகி ஆறுமாதம் கூட ஆகவில்லை. அவன் பார்த்திருக்க மலர்ச்சி கொண்டு, மனுஷியாகி, அவனைப் பூவிதழாய் ஸ்பரிசிக்கும் அவனது லதாவின் ஞாபகம் ஏனோ அப்பொழுது அவனுக்கு வந்தது. கட்டற்ற காதலையும் அன்பின் பிரவகிப்பையும் உணர்த்தியவள் அவளல்லவா…? அவளது நினைவுகளையும் மீறி மனசு சபலப்பட முடியுமா? சபலப்படுதல் மனசின் இயல்புபோலும்.
அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான். அதன் பின்னர் அவள் அவனுக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.
அவன் பார்க்காத வேளைகளில் அவள் பார்த்தாள். எதேச்சையாக அவனது பார்வையும் அவள் மீது படுவது உண்டு. அப்பொழுதெல்லாம் ஏன்… என்ன… ஏன் இப்படி…? என்ற ஆச்சரியம் மட்டும்அவளது விழிகளில் உறைந்து நிலைப்பட்டு விடுவதைக் கண்டான். ‘கேள்விகள் நிறைந்த கண்கள் அவளுடையது…?” என நினைத்துக் கொள்ளவும் செய்தான்.
சிலநாட்கள் செலவாகின. அவள் இப்பொழுதெல்லாம் அவனுடன் பயணம் செய்வதில்லை. அவளும் ஆசிரியையாக இருக்கவேண்டும். மாற்றம் பெற்று, எங்காவது போயிருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டான். இருந்தும் அவளது நினைவு மட்டும் மனசின் ஓரத்தில் ஈரப்பளபளப்புடன் கசியவே செய்தது.
அவனைப் பொறுத்தவரையில், அவனது வாழ்விலிருந்து ஒதுக்கம் கொண்டு, தொலைந்து போனவர்களில் ஒருத்தியாகவே அவளும் ஆகிவிட்டாள்.
ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னால், அவளை அவன் மீளவும் சந்தித்தான். அதுவும் சந்திக்க முடியும் என அவன் நினைத்திருக்காத வேளையில்.
அவனது வீட்டில், நடுஹோலில், செற்றியின் குஷன் புதைந்து போக அவள் உட்கார்ந்திருந்தாள். அவளது இயல்புகளுக்கு மாறாக கலகலப்பும் சிரிப்பும்.
‘லதா ஏதாவது சுவாரஸ்யமாகச் சொல்லி இருப்பாளோ..?’
ஒடிசலாய் நெகு நெகு என்றுஇருந்தவள், உடல் பருத்து, தசைக் குவியலாக இருந்தாள்.
பாடசாலையில் இருந்து வந்த களைப்பு அவனுக்கு. அவனைப் பார்த்ததும் அவள் சிரித்தாள். கண்கள் கூட முன்னர் போல இருக்கவில்லை. சிறிதாக இருந்தன. அவற்றின் கீழாக விடைத்த தசைதான் காரணமா? அந்தக் கண்களில் இருந்த பரிவு, பரவசம் எல்லாம் எங்கோ ஓடி ஒழிந்து கொண்டது போலிருந்தது அவனுக்கு.
“ஆளைத் தெரியுமா..?” லதா அவனைத்தான் கேட்டாள்.
“தெரியும்… நீர்வேலியிலை படிப்பிக்கேக்கை பஸ்ஸிலை பார்த்திருக்கிறன்..” அவளது அவசரமான பதில்.
‘இத்தனை வருஷங்களுக்குப் பின்னரும் அவளது நினைவில் நான்..’
அவனுக்கு அது ஆச்சரியமாய் இருந்தது.
சற்றுத் தடுமாறியவனாய் லதாவைப் பார்த்தான்.
“மிஸ்ஸிஸ் மகேசன். என்னோடைதான் படிப்பிக்கிறா… போன மாதம் சடங்கு முடிச்சவ… கனடா மாப்பிளை… எஞ்சினியர்… அடுத்த மாதம் கனடா போகப் போறா…”
அவள் மிதப்புடன் ஒருவகைப் பெருமித உணர்வு பொங்க, அவனைப் பார்த்தாள். அவளது பார்வையைச் சந்திக்கும் பலம் அற்றவனாய் அவன் தனது அறையை நோக்கி நடந்தான்.
‘முன்னர் பஸ்ஸில் சந்தித்த பெண் இவள் அல்ல…’ என நினைத்துக் கொண்டான். கழிந்த வருஷங்கள் அவளில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டன போலும்.
அவள் லதாவிடம் விடைபெறுவது இவனது காதில் விழுந்தது. “அப்ப நான் வாறன்… அவருக்கும் சொல்லுங்க…”
அவள் நடந்து போன பொழுது, அவளது காலடி ஓசை அவனுக்குக் கேட்டது. அந்த ஓசை ஏனோ அவனுக்கு எரிச்சலூட்டுவதாய் இருந்தது.
– மல்லிகை, ஜூன் 2001.
– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.
![]() |
க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க... |
