பருந்தும் மயிலும்





(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேலே பருந்து சுழன்று சுழன்று வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
கீழே மயில் ஆனந்தமாகத் தன்னைத் தானே வலம் வந்துகொண்டிருந்தது.
இரண்டுக்கும் பொழுது போகவில்லை.
“பருந்தக்கா, ஆகாய விமானம் ஏதுக்கு, நீ இருக்கும்போது?” என்றது மயில்.
“மயிலண்ணா, உன்னுடைய தோகைக்கு முன்பு ரத்தினங்களுக்கு மதிப்பு ஏது ?” என்றது பருந்து.
அறிமுகம் நட்பாக மாறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதில்லை.
“ஆகாயத்து நக்ஷத்திரங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!” என்று மயில் சொல்லும். “பூமியிலுள்ள புஷ்பங்களைப்போல!” என்று பருந்து பதில் சொல்லும்.
ஒரே தெய்விகத் தத்துவம் எங்கும் நிரம்பியிருக் கிறது என்ற சித்தாந்தம் இம்மாதிரியான சமயங் களில் அவற்றிற்குப் புலப்படும்.
பேசிக்கொண்டே இருக்கையில், “பூமியில் பாயும் நதிகள் எத்தனை அழகாக இருக்கின்றன!” என்று பருந்து கூறிவிடும்.
“ஆயினும் அவற்றின் நீர் ஆகாயத்திலிருந்து தானே வருகிறது?” என்று மயில் சமாதானம் சொல்லும்.
சராசர உலகில் எங்கும் ஒரே தத்துவம் நிறைந் திருக்கிறது என்ற பரந்த எண்ணம் அவ்வேளையில் அவற்றிற்குத் தோன்றும். ஒவ்வொரு பிராணியினிடத் தும் ஒரே தத்துவம் அபேதமாக விளையாடும்போது, ஒரு பிராணி மற்றொன்றைப் பிய்த்துத் தின்ன விரும்பு வதுகூட மகத்தான பாவம் அல்லவா? இந்தக் கொள்கை அவை இரண்டுக்கும் தானாகவே விளங்கியது.
பருந்து மயிலின் தோகைக்குள்ளே சுகமாகத் தூங்கும்.
மயில் பருந்தின் நகங்களோடு விஷமம் செய்து. குதித்து விளையாடும்.
இரண்டுக்கும் பிராண்சிநேகிதம் உண்டாகி விட்டது.
ஒரு நாள் பருந்தும் மயிலும், ‘எங்கும் ஒரே பரமாத்மா நிறைந்திருக்கிறான்’ என்ற தத்துவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், எதிரே ஒரு பாம்பு சலசலவென்று வளைந்து வளைந்து சென்றது.
பருந்து அதைப் பார்த்தது.
மயிலும் அதைப் பார்த்தது.
பருந்து சடக்கென்று பாய்ந்தது.
மயிலும் துள்ளிக் குதித்தது.
“என் உணவு இது” என்று பருந்து கத்தியது.
“என் உணவு இது” என்று மயில் அகவியது.
இரண்டும் உயிருக்கு மன்றாடிக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருக்க, பாம்பு எப்போதோ நழுவிவிட்டது.
காயமுற்ற பருந்தினால் ஆகாயத்தில் பறக்க முடியவில்லை.
காயமுற்ற மயிலால் இருந்த இடத்தை விட்டு அசைய முடியவில்லை.
முன்பு அவை ஒன்றை மற்றொன்று பார்க்கும் போது அவற்றின் கண்களில் மலர்கள் பூக்கும். இப்போது அதே கண்களில் எரிதழல்கள் சுடர் விட்டன.
இரண்டும் ஒரே சமயத்தில் உயிரைத் துறந்தன.
பயந்து ஓடிய பாம்பு சிறிது நேரத்துக்கெல்லாம் சத்தம் செய்யாமல் பதுங்கிக்கொண்டே திரும்பி வந்தது. பார்த்தால், பருந்து செயலற்றுக் கிடக் கிறது ; மயிலும் செயலற்றுக் கிடக்கிறது!
“ஒவ்வொரு பிராணியினிடத்தும் ஒரே தத்துவம் விளையாடுகிறது என்பது எவ்வளவு உண்மை!” என்று பாம்பு தனக்குள்ளேயே முணுமுணுத்தது.
– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |