பனங்கற்கண்டு பாலகம்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 2,856
மழைக்காலத்தின் ஈரப்பதம் இன்னும் விலகாத இனிய அந்திப்பொழுது. வானம் நீலத்தை தொலைத்து விட்டு புது கோலத்தில் தெளிந்து காணப்பட்டது. சாலை ஓரத்து மண் திட்டுகளில், நெடுநாட்களாக உறங்கியபடி பதுங்கி கிடந்த பலவகை விதைகள் விழித்துக்கொண்டு, பச்சை நிறப் புல் பூண்டுகளாய் தரை எங்கும் புன்னகையை சுமந்தபடி பூத்திருந்தன.
காந்தி பூங்காவின் நுழைவாயிலுக்கும், முத்தமிழ் கலையரங்கிற்கும் இடைப்பட்ட அந்த நடைபாதை இடைவெளியில், மழையில் முளைத்த காளானைப் போல திடீரென்று ஒரு ‘பனங்கற்கண்டு பாலகம்’ முளைத்திருந்தது.
வெள்ளை நிற அரைக்கை சட்டையும், காலவோட்டத்தில் பழுப்பு நிறமாக மாறிய வெண்மை வேட்டியும் அணிந்தபடி, அந்த எழுபது வயது முதியவர் பனங்கற்கண்டு பாலகத்தின் உரிமையாளராய் உற்சாகத்தோடு நின்றிருந்தார்.
அவர் கைகள் ஒரு லாவகத்தோடு பனங்கற்கண்டு பாலை ஆற்றிக்கொண்டிருந்தன. கீழே சூடான பால் அண்டா, மேலே தூக்கிப் பிடிக்கப்பட்ட சொம்பு. பால் மேலிருந்து கீழே விழும் அந்த வினாடியில், ஒரு பாலருவி மேலிருந்து கீழே மேன்மையுடன் விழுவது போல் காட்சியளித்தது. நுரை ததும்ப ததும்ப அவர் பாலை ஆற்றுவது அவருக்கு ஒரு கைவந்த கலையாய் இருக்க, நான் அவர் எதிரே சிலையாய் நின்றபடி அதனை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.
விலை மதிக்க முடியாத ஒரு கலை நிகழ்வாய் அது எனக்கு வியப்பை தந்தது.
அவருக்கு அருகிலேயே, ஒரு மூலையில் சுருண்டு அமர்ந்திருந்தார் அவரது துணைவி. உடல்நலக்குறைவின் வாட்டம் அவர் முகத்தில் தெரிந்தது. தன் கணவருக்கு ஒரு சிறு உதவி கூட செய்ய முடியவில்லையே என்ற கவலையும், இயலாமையும் அவர் கண்களில் ‘குறுகுறு’ பார்வையாகத் தேங்கிக் கிடக்க, அவர் முகம் அதை தாங்கிப் பிடித்தபடி தவித்துக் கொண்டிருந்தது.
சிலர் பனங்கற்கண்டு பாலை உற்சாகமாக உறிஞ்சி உறிஞ்சி ரசித்தபடி பருகிக் கொண்டிருந்தனர்.
எனக்கும் அந்த ஆசை உள்ளுக்குள் ஊற்றெடுக்க, நான் எனது சட்டையின் உள் பையில் கையை விட்டு, பணத்தாள்களை எடுத்துப் பார்த்தேன். அதில் மூன்று 100 ரூபாய் தாள்கள் கசங்கியபடி முடங்கி கிடந்தன. நான்மகிழ்வோடு பனங்கற்கண்டு பாலை பருக நெருங்கினேன்.
எனக்கு முன்பே 100 ரூபாய் தாள்களை கொடுத்துவிட்டு மீதி பணத்தை வாங்க, இருவர் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர் என்ற பதட்டமான நிலையையும் எனது கண்கள் கவனித்தன. . நான் அப்படியே அருகில் இருந்த ஒரு உடைந்த கல் தூணில் சாய்ந்து அமர்ந்தேன்.
அந்தப் பாலின் மணமும், முதியவரின் உழைப்பும் என் மனதை சுண்டி இழுத்துக் கொண்டிருந்தது.
ஆனால் அங்கே சூழல், சில்லறை தட்டுப்பாடு பிரச்சனையால் சற்றே எரிச்சலும் கோபமும் கலந்து சூடாகவும் விற்பனையாளருக்கு பெரும் பாடாகவும் அது கனத்திருந்தது.
“ஐயா! எவ்வளவு நேரமா நிக்கிறது? எனக்கு வேற வேலை இல்லையா? பத்து நிமிஷமா பாலை ஆத்திகிட்டே இருந்தா என்ன அர்த்தம்? சில்லறையைத் திருப்பிக் கொடுக்கணும்னு அக்கறை இருக்கா இல்லையா உங்களுக்கு?”
– ஒரு வாடிக்கையாளர் எரிச்சலோடு கத்தினார்.
முதியவர் தர்மசங்கடமாக நிமிர்ந்து பார்த்தார்.
“ஐயா, கோவிச்சுக்காதீங்க. என்கிட்ட இப்ப சுத்தமா சில்லறை இல்லைங்க. கொஞ்சம் பொறுங்க, அடுத்தவங்க வர்றப்ப சில்லறை இருந்தா வாங்கித் தர்றேன்,” என்றார் தழுதழுத்த குரலில்.
மற்றொருவர் இடைமறித்து, “சில்லறை இல்லைன்னா முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே பெரியவரே? இப்ப எங்களை வம்பு பண்றீங்களே? எங்கயாவது போய் மாத்திக்கிட்டு வாங்க,” என அதிகாரம் செய்தார்.
அந்த முதியவர் ஒரு கணம் கூனிப்போனார். அவரிடம் தெம்பு குறைந்து போனது. அவரது கையில் இருந்த சொம்பு, இப்போது அவருக்கு ஒரு பாரமாகத் தெரிந்தது. சுற்றியிருந்தவர்கள், ஆசையோடு பாலை வாங்கி பருக வந்தவர்கள் அவரை ஏளனமாகப் பார்ப்பதும், ஏகமாய் சலித்துக்கொள்வதும், அவரை மனதளவில் நிலைகுலையச் செய்தன.
“கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது இதுதான் போல” என்று ஒரு வழிப்போக்கர் தன் பங்குக்குத் தத்துவம் பேசினார்.
முதியவர் இப்போது விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்டார்.
“சில்லறை இருக்கிறவங்க மட்டும் வந்து குடிங்க… மத்தவங்க எல்லாம் தயவு செஞ்சு வராதீங்க. என்னால சில்லறை தர முடியாது,” என்று குரலை உயர்த்திச் சொல்லிவிட்டு, ஒருவித ஏமாற்றத்துடன் மீண்டும் பாலை ஆற்றத் தொடங்கினார்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
சுமார் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, கூட்டத்தை முண்டியடித்துக்கொண்டு ஓடி வந்தாள். அவள் கையில் ஒரு பை நிறைய ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நாணயங்களும், பத்து ரூபாய் இருபது ரூபாய் தாள்களும் இருந்தன.
“தாத்தா! இந்தாங்க… இதுல 500 ரூபாய்க்குச் சில்லறை இருக்கு. பத்து, இருபதுன்னு எல்லாமே இருக்கு. காப்பி பேலஸ் கடைக்காரர் கொடுத்துவிட்டாரு,” என்று மூச்சிரைக்கச் சொன்னாள்.
முதியவரின் முகம் சட்டென்று பிரகாசமடைந்தது. ஆனந்த பரவசத்தில் அவருக்கு அந்த சிறுமியை யார் என்னவென்று கேட்கத் தோன்றவில்லை. “காப்பி பேலஸ் கடைக்காரரை அவர் ஒருபோதும் பார்த்ததும் இல்லை; பழகியதும் இல்லை. அப்படி இருக்க, அந்த காப்பி பேலஸ் கடைக்காரர் அவருக்கு ஏன் உதவ வேண்டும்?” என்றெல்லாம் அவருக்கு சிந்திக்கத் தோன்றவில்லை. சில்லறை பணம் கிடைத்த சந்தோஷத்தில் அவர் மனம் மயங்கிப் போனார்.
இருண்டிருந்த வானத்தில் நிலவு உதித்ததைப் போல அவர் கண்கள் மின்னின. சில்லறைப் பற்றாக்குறையால் தடைபட்டு தடுமாறியபடி நின்றிருந்த பனங்கற்கண்டு பால் விற்பனை மீண்டும் வேகம் எடுத்தது. அவரின் சோகம் தணிந்தது.
சண்டையிட்டவர்கள் சில்லறையைப் பெற்றுக்கொண்டு நகர, புதியவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து பாலை பருகி விட்டுச் சென்று கொண்டிருந்தனர்.
ஆனால், அந்தச் சிறுமி மட்டும் நகராமல் அங்கேயே நின்றிருந்தாள். அந்த முதியவரின் முகத்தில் தெரிந்த நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஒரு தவம் போல ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுமியின் முகத்தில் படர்ந்திருந்த அந்த ஆத்மார்த்தமான புன்னகை எனக்குள் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது..
நான் மெல்ல அவளருகில் சென்றேன்.
“ஏம்மா… நிஜமாவே அந்த காப்பி பேலஸ் கடைக்காரர் தான் இதைத் தந்தாரா?”
சிறுமி என்னைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்.
“இல்லைங்க மாமா… இது நான் ரொம்ப நாளா உண்டியல்ல சேர்த்து வெச்ச என்னோட சொந்தப் பணம். அதுல இருந்த இருநூறு ரூபாயைத்தான் அந்த கடையில கொடுத்துச் சில்லறையா மாத்திக்கிட்டு வந்தேன். நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த பக்கமா வந்துகிட்டு இருந்தப்ப, பாவம், அந்த தாத்தா சில்லறை இல்லாம கஷ்டப்படுறதைப் பார்த்தேன். எனக்கு மனசு கேக்கலை. எங்க வீடு இதோ பக்கத்துல தான் இருக்கு, நான் உடனே ஓடிப் போயி என்னோட உண்டியலை உடைத்து நான் சேர்த்து வைத்திருந்த காசை எல்லாம் எடுத்துக்கிட்டு வந்து இந்த தாத்தா கிட்ட கொடுத்தேன்.” என்றாள் வெகுளியாக.
“உன் பேர் என்னம்மா?” எனக் கேட்டேன்.
அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. ஒரு மெல்லிய புன்னகையை மட்டும் எனக்கு முன்னே உதிர்த்துவிட்டு, வண்ணத்துப் பூச்சியைப் போல அந்தச் கூட்டத்திலிருந்து விலகி வேகமாக நடந்தாள்..
அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். பனங்கற்கண்டு பாலை விட, அந்தச் சிறுமியின் மனிதாபிமானம் என் நாவில் அதிக இனிப்பையும் மனதிற்கு முழு நிறைவையும் சேர்த்திருந்தது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
