பட்ட காலிலே..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 55 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று அவர்களுக்குச் சம்பளம். கங்காணி செல்லமுத்து லயத்து முன்னறையில் ஒருகாலை நீட்டி அமர்ந் திருக்கிறான். கடுக்கன் துளை தூர்ந்து விட்ட செவிகள், கறுத்தக் கோட்டு! அவனெதிரில் வற்றிக் கறுத்துலர்ந்த முகங்களோடு குஞ்சுங் குழந்தையுமான ஐந்து பிள்ளைகள் அரை நிர்வாண முழு நிர்வாணக் கோலங்களில் நிற்கின்றன.

மனைவி கறுப்பாயியும் மூத்த மகள் இந்திராவும் உள் அறையில், புகை கமறும் ஈர அடுப்புடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதம் கொட்டும் பனியிலும், சுள்ளென்றடிக்கும் வெய்யிலிலும் சோவென்று பொழியும் மழையிலும் சறுக்கல் மலைகளில் நின்று செல்லமுத்து கறுப்பாயி இந்திரா மூவரும் சம்பாதித்த பணத்தில் சில்லறைக்கடைக் கடன் 90 ரூபா போக மிகுதி 135 ரூபா அவன் முன்னால் கிடக்கிறது.

கள் குடிக்க அவன் போன மாதம் வட்டிக் கடையில் 100 ரூபாவுக்கு ஈடுவைத்த கறுப்பாயி சங்கிலியை மீட்க 125 ரூபா போய்விடும். மிகுதி 10 ரூபா கைமாற்றுக் கடனுக்குச் சரி!

நாளை பக்கத்துத் தோட்டத்தில் செல்லமுத்துவின் தங்கை மகளுக்குக் கல்யாணம். அங்கே போகப் பிள்ளைகளுக்குக் காதிலே கழுத்திலே ஒன்றும் இல்லை. மூன்றாம் மாதம் ஈடுவைத்த இந்திராவின் சங்கிலியை இந்த மாதமும் மீட்கமுடியவில்லை. அதுமட்டுமா? குழந்தைகளுக்கு ஆனசட்டை சேலைகூட இல்லை. 

‘இந்திரா அக்கா! நீங்க நாளை கல்யாணத்துக்கு வர வில்லையா?” என்ற குரல் கேட்டுச் சிந்தனைச் சுழலில் நின்றும் விடுபட்டு நிமிர்ந்தான் செல்லமுத்து!

காதுகளில் சிமிக்கிகள் குலுங்க, கைவளையல்கள் கலகலக்க, கழுத்துச் சங்கிலி தன் பிஞ்சு மார்பகங்களில் பளிச்சிட்டுப் புரள ஓடி வந்தாள் பக்கத்து வீட்டுச் சிறுமி!

“துரைவீட்டுப்பிள்ளை போல் அல்லவா இருக்கிறாள்? எங்களிலும் குறைந்த சம்பாத்தியமுள்ள இந்தக் குடும்பம் இத்தனை சீரும் சிறப்புமாக வாழ்கிறபோது…நானும், நான் பழக்க அவளும் குடித்து மாதா மாதம் 125 ரூபாக்களைப் பாழாக்கி… ஐயோ எத்தனை 125 ரூபாக்கள்! அவ்வளவையும் மிச்சம் பிடித்திருந்தால் எத்தனை ஆயிரம் ரூபாக்கள்!” என்று செல்லமுத்து எண்ணக்கரங்களால் நஞ்சைப் பிழிந்து கொண்டிருந்தபோது வீட்டினுள்ளிருந்து ‘இல்லைப் பரிமளம்! அப்பா அம்மா போய்வருவாங்க!’ என்று தன் இல்லாமையை நெஞ்சுள் மடக்கிய மனக்குமைவோடு கூறுகிறாள் இந்திரா!

அவனுக்கு வேதனை நெஞ்சை உலுக்கிப் பிசைய நெற்றி நரம்புகள் விம்மிப்புடைத்து வலிக்கின்றன. தலையுள் பூகம்பப் பேரொலியின் ஓலம்! தன்னை மறந்து எழுந்த செல்லமுத்து நிம்மதியைத் தேடிக் கள்ளுக் கடைப்பக்கமாகப் பழையபடி அதோ நடந்து கொண்டிருக்கிறான். 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *