நேற்று இல்லாத மாற்றம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 8,395 
 
 

ஆபிஸ்க்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டதே என்று அடிக்கடி செல்போனில் டைம் பார்த்துக்கொண்டே, அவசர அவசரமாக காலை டிபனைச் சாப்பிட்டான் அமுதன். சாப்பிட்டதும் பக்கத்தில் டைனிங் டேபிள் மேல் இருந்த டம்ளர் தண்ணீரை எடுத்து ‘மடக் மடக்’ கென்று குடித்துவிட்டு, எழுந்து வாஷ்பேசினில் கையை கழுவினான். அவனுடைய ஆபீஸ் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்ப… மனைவி சங்கீதா அவனிடம் லஞ்ச் பாக்ஸைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அந்த நேரம் பார்த்து, அவனுக்கு வந்த செல்போன் அழைப்பை, அவன் காதில் இருந்த ப்ளூடூத் இணைப்பில் தொடர்பு ஏற்படுத்திப் பேச ஆரம்பித்தான்.

சங்கீதா கொடுத்த டிபனை வாங்கி பேக்கில் வைத்துக்கொண்டு, அவளைப் பார்த்து ‘சரி, கிளம்புகிறேன்’ என்பதுபோல தலையை மட்டும் ஆட்டிவிட்டு, வாசலில் இருந்த காரைப் பார்த்து நடந்தான்.

சங்கீதா அவன் கூடவே வாசல் வரை போய், அமுதன் காரில் ஏறி கிளம்பும் வரை பார்த்துவிட்டு, திரும்பி வீட்டுக்குள் வந்ததும்… கோபமாக ஹாலில் இருந்த சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தாள்.

அவளுக்கு கணவன் அமுதன் மீது கோபம் கோபமாக வந்தது. சமீபகாலமாக அவன் முன்பு போல அவளை கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் அவளுடைய கோபத்திற்குக் காரணம். அவளுக்குத் திருமணம் ஆன புதிதில், புளித்துப் போன மாவில் தோசை ஊற்றிக் கொடுத்தால் கூட.. ‘அடடா என்ன சுவை!’ன்னு பாராட்டியவன், இப்போதெல்லாம்… அவள் ‘யூடியூப்’ வீடியோ பார்த்து, விதவிதமான டிஷ்சை செய்து கொடுத்தாலும் … ‘இது இன்னும் கொஞ்சம் வெந்து இருக்கலாம்!’ ‘உப்பு கொஞ்சம் குறைவா இருக்கிற மாதிரி இருக்கே!’ ‘காரமே இல்லை!’ என்று ஏதாவது ஒரு குறையைச் சொல்லுகிறான் அல்லது எதுவுமே பேசாமல், மொபைல் போனைப் பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்று கூட கவனிக்காமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விடுகிறான்.

ஒருவேளை அமுதனுக்கு அவள் சமையல் பிடிக்கவில்லையா? அல்லது அவளையே பிடிக்கவில்லையா?!.. இல்லை முன்பு போல அவனுக்குப் பிடித்த மாதிரி தனக்குச் சமைக்கத் தெரியவில்லையோ?! என்று யோசித்தாள். ‘ஆனால் அவளுடைய குழந்தைகள் எப்போதும் போல அவளுடைய சமையலை ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறார்களே’!’ என்றும் நினைத்தாள்.

அவள் கணவனைப் பற்றிய தீவிர யோசனையோடு… சோபாவுக்கு முன்பு இருந்த டீப்பாயைப் பார்த்தபோது, அங்கே ஒரு ஃபைல் இருப்பதைக் கவனித்தாள். அது ஒரு பட்டன் டைப் பிளாஸ்டிக் ஃபைல், அது சரியாக மூடாததால், அதில் இருந்த பேப்பர்கள் ஃபேன் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.

‘ம்ம்..இது அமுதனுடைய ஆபீஸ் ஃபைல் தானே! அடடா… காலையில் ஆபீசுக்குக் கிளம்ப ரெடியானவன், ஆபீஸ் பேக்கில் இருந்து இந்த ஃபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சாப்பிட போகும்போது இதை அப்படியே வைத்துவிட்டுப் போனான். பிறகு ஆபீசுக்குப் புறப்படும்போது, போன் பேசிக்கொண்டே… ஃபைலை மறந்துவிட்டு, ஆபீஸ் பேக்கை மட்டுமே எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் போல!’

என்று நினைத்தபடி, அவள் அதைக் கையில் எடுத்துப் பார்த்தாள்.

அப்போது அந்த ஃபைல் அவளுடைய கையில் இருந்து நழுவி, கீழே தரையில் விழவே… அதற்குள் இருந்த பேப்பர்கள் சில ஃபைலை விட்டு வெளியில் வந்து விழுந்தன. அவள் உடனே சட்டென்று எழுந்து… அந்த பேப்பர்களை எடுத்து மீண்டும் அந்த ஃபைலில் வைத்தாள். அதில், அமுதனுடைய முத்து முத்தான கையெழுத்தில் தமிழில் எழுதியிருந்த பேப்பர் ஒன்று அவள் கண்ணில் பட்டது.

மற்ற பேப்பர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்க, இந்த பேப்பர் மட்டும் தமிழில் இருந்ததால், அந்த பேப்பரில் எழுதியிருந்ததைப் படித்தாள்.

‘நீ என் மனைவியாக வந்தது…’ என்று ஆரம்பித்த வரியைப் பார்த்தவுடன், அது அவளுடைய ஆவலைத் தூண்ட, அதை முழுவதுமாகப் படிக்க விரும்பினாள்.

“நீ என் மனைவியாக வந்தது…நான் செய்த புண்ணியம்!. நீ என்னை அக்கறையோடு கவனித்துப்பார்த்துக்கொள்வதால்தான், நான் வீட்டில்

கவலை இல்லாமல், சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு இருக்கும் ஆபீஸ் வேலை, டென்ஷனில் உன்னிடம் இதுவரை மனம் விட்டு பேச முடிந்ததில்லை. என் மனதில் உள்ளதை நேரடியாக சொல்வதை விட, இந்தக் கடிதம் மூலமாக என் உள்ளம் திறந்து சொல்கிறேன்! ‘நீயில்லாமல் என் வாழ்க்கையே இல்லை! உன்னை எனக்கு மனைவியாகக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். அதைப்போலவே உன்மீதும் நான் அன்பைப் பொழியவே விரும்புகிறேன்.’

அந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்தக் கையெழுத்து அமுதனுடையது என்பது தெளிவாக அவளுக்குத் தெரிந்தது. ‘ஏன் அமுதன் இதை, ஆபீஸ் ஃபைலில் வைத்திருக்கிறான்?! அவள் அவனிடம் கோபமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, அவளைச் சமாதானப்படுத்த, இப்படி எழுதி வைத்திருக்கானோ?! அவள் பார்க்க வேண்டும் என்று வேண்டுமென்றே இந்தப் ஃபைலை வைத்துவிட்டுப் போய்விட்டானோ!’… இப்படி பல விதமாக அவள் யோசித்தாள்.

அதற்குள் ஆபீசுக்குப் போன அமுதன் திரும்ப வீட்டிற்கு முன்பு வந்து காரை நிறுத்தி, ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டது. உடனே சங்கீதா அந்த லெட்டரை ஃபைலில் வைத்துவிட்டு, அந்த ஃபைலை எடுத்துக்கொண்டு அவசரமாக, வீட்டுக்கு வெளியே வந்தாள்.

“நான் ஒரு ஆபீஸ் ஃபைலை, ஹாலில் சோபா மேலே வைத்துவிட்டுப் போய்விட்டேன். கொஞ்சம் அதை எடுத்துட்டு வா” என்று சொல்லிவிட்டு, அவள் கையில் அந்த ஃபைலை வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு புன்னகையோடு அந்த ஃபைலை வாங்கிக்கொண்டு போனான்.

அன்று மாலை அமுதன் திரும்ப ஆபீஸில் இருந்து வந்த பிறகு, அவனால் வீட்டில் நடப்பதெல்லாம் நம்ப முடியவில்லை. அவன் ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமாய், காரை நிறுத்தும் இடத்துக்கே வந்து வரவேற்கிற சங்கீதாவை அமுதன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

முன்பெல்லாம் அவன் ஏதாவது சொல்வதற்கு முன்பு… “உங்களுக்கு ஒன்றும் தெரியாது. சும்மா இருங்கள்! எப்ப பார்த்தாலும் ஆபீஸ் வேலை ஆன்லைன் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டு, வீட்டையே கவனிக்கிறதில்லை!

இங்கு வீட்டில் ஒருத்தி என்ன சமைக்கிறாள்? என்ன சாப்பிட்டாள்… இப்படி எதுவும் கண்டுகொள்வதில்லை… எப்ப பார்த்தாலும் அந்த போனில் யாருகிட்டயாவது பேசிக்கொண்டே இருக்கிறது. இல்லை அதையே நோண்டிக்கொண்டு இருக்கிறது. வீட்டில் பொண்டாட்டி என்று ஒருத்தி இருக்கிறதே உங்கள் ஞாபகத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லை.! பெற்ற பிள்ளைகளிடம் பேசக்கூட உங்களுக்கு நேரம் இல்லை.”

எப்பவும் குறை சொல்லிக்கொண்டு, அவனை வம்பிழுத்துக்கொண்டே இருக்கிற மனைவி, இப்போது “பாவம்ங்க நீங்கள்… நம்ம குடும்பத்துக்காக இப்படி வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் கூட பேசக்கூட முடியாத அளவுக்கு வேலை. ஆபீஸில் எந்த பிரச்னையானாலும், உடனே போன் பண்ணி பேசி.. உங்களைத் தொந்தரவு பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள்.

நீங்கள் எங்கள் மேல் வைத்திருக்கிற பாசத்தை புரிந்துகொள்ளாமல், நான் வேறு… உங்களிடம் எப்ப பார்த்தாலும் மல்லு கட்டிக்கொண்டு, மூஞ்சை தூக்கிக்கொண்டு இருக்கிறேன்.”

சங்கீதா இப்படி பேசுவதைக் கேட்டு… அவனுக்கே நடப்பதெல்லாம் கனவா நனவா என்று தெரியவில்லை.

திடீரென்று அவளுடைய நடவடிக்கையில் வந்த இந்த மாற்றத்துக்கு காரணம், ஒருவேளை, ராசிபலனில் சொல்லுவார்களே, அது மாதிரி அவனுடைய ராசியில் இருக்கிற கிரகங்கள் எல்லாம் உச்சம் பெற்றுவிட்டதா?!’ என்று யோசித்தான்.

மறுநாள் வழக்கம் போல அமுதன் ஆபீஸ் கிளம்பும் போது, சங்கீதா, பளிச்சென்று புன்னகையோடு கூடவே வாசல் வரை வந்து வழியனுப்பினாள்.

அவனுடைய லஞ்ச் பாக்ஸ், ஆபீஸ் பேக் எல்லாவற்றையும் அவளே எடுத்துக்கொண்டு வந்து, அவனுடைய காரில் வைத்துவிட்டாள். கல்யாணம் ஆன புதிதில் அவனோடு அன்பாக, சினேகமாக இருந்த மனைவி சங்கீதாவை மீண்டும் பார்ப்பது போல் அமுதனுக்குத் தெரிந்தது. ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது’ என்ற திரைப்பட பாடல் அவன் நினைவுக்கு வந்தது.

இப்படி யோசித்துக்கொண்டே, ஆபீசுக்கு வந்த அமுதனை, அவனுடைய சீட்டில் வந்து உட்கார்ந்ததும்… அவனுடைய ஜூனியர் நவீன் எதிரே வந்து நின்றான். “ரொம்ப தாங்க்ஸ் சார். உங்க அனுபவ அறிவை வெச்சு , என்னோட குடும்பத்தில் இருந்த பிரச்சனையை சரி பண்ணி கொடுத்திருக்கிறீங்க . சூப்பர் சார். இந்த உதவியை என்னைக்கும் மறக்கமாட்டேன் சார். உண்மையில் உங்களை போல ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க உங்க வைஃப் கொடுத்து வெச்சிருக்கணும்.

அவங்க ரொம்ப லக்கி சார்” என்று மகிழ்ச்சியோடு மனம் நெகிழ்ந்து பேசினான். “என்ன பிரச்சனைன்னே தெரியாம, எனக்கும் என் வைஃபுக்கும் இடையில இதுவரை இருந்த சண்டை, நீங்க கொடுத்த யோசனையாலதான் சரியாச்சு.

அவளோட இனிமே சந்தோஷமா வாழவே முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்த நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்னா அது உங்களாலதான் சார். நீங்க எனக்காக ஒரு லெட்டரை எழுதி காண்பித்து, அதே மாதிரி என்னையும் எழுதி, என் வைஃப் கண்ணுல படற மாதிரி வீட்டுல வைக்க சொன்னீங்க. ஆனா நான் அவ கையிலேயே கொடுத்துட்டேன்.

அவ அதை படிச்சதும் செம ஹாப்பியா ஆகிட்டா… அதுக்கப்புறம் எனக்கு ஒரே கவனிப்புதான்.” என்று சொல்லிவிட்டு, அவன் மனசுல தோன்றிய சில விஷயங்களையும் அமுதன் கிட்ட சொன்னான்.

“சார், நம்ம கூட வேலை செய்யறவங்களை, நமக்கு கீழ வேலை பார்க்குறவங்களை தட்டிக்கொடுத்து, பாராட்டிட்டு, அதுக்கு பிறகு அவங்களை வேலையை செய்ய சொல்லும் போது, அவங்களோட நட்பும், முழு ஒத்துழைப்பும் நமக்கு கிடைக்குது. நாம அதே மாதிரியான அணுகுமுறையை, நம்ம வீட்டில காண்பிக்கிறதில்ல. அவங்களுக்காக உழைக்கிறோமுன்னு சொல்லிட்டு, நாம அவங்ககூட பேசக்கூட நேரம் இல்லாது போல நடந்துக்கறோம்.”

வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு… நாள் முழுதும் டென்ஷனோடு வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற லேடிஸ்க்கு, ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கணுமுன்னா… நாம அவங்களோட பேச, நம்ம நேரத்தை ஒதுக்கணும். மனசு விட்டு பேசணும். அப்போதுதான் அவங்களை நாமும், நம்மை அவங்களும் புரிஞ்சிக்க உதவும். இதை உங்க உதவியால நான் புரிஞ்சிக்கிட்டேன். நவீன் உற்சாகமாகப் பேச… பேச… அவனுடைய பாராட்டையும், நன்றியையும் புன்னகையோடு ஏற்றுக்கொண்ட அமுதனுக்கு, அப்போது மனசுக்குள் பல்ப் எரிந்தது.

அவன் நவீனிடம் பேசி, வாழ்த்தி அனுப்பிவிட்டு… அவசரமாக அவன் வைத்திருந்த அந்த பிளாஸ்டிக் பைலை எடுத்துப் பார்த்தான். வீட்டில் ஒரே சண்டையாக இருப்பதாக நவீன் அமுதனிடம் புலம்பியபோது, நவீனுக்காக, நவீன் மனைவியைப் பாராட்டி எழுதுவதுபோல, ஒரு கடிதத்தை எழுதிக் காண்பித்து, அவனையும் அதைப்போல் எழுதச் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கடிதத்தை அந்த பைலில் வைத்திருந்தான்.

‘சங்கீதாவின் மாற்றத்துக்குக் காரணம் அந்தக் கடிதம்தான் என்று அமுதனுக்குப் புரிந்துவிட்டது. நேற்று அந்த பைலை அவன் வீட்டில் மறந்துவிட்டுப் போன நேரத்தில், சங்கீதாவும் படித்துவிட்டு… அது அவளுக்காக அமுதன் எழுதியது என்று நினைத்திருக்கலாம்’ என்று நினைத்தான்.

பொதுவாக அடுத்தவர்களுக்கு ஆலோசனை தருவது சுலபமான விஷயம். ஆனால் அவரவர் குடும்ப விஷயத்தில் அதைப் பின்பற்ற நினைப்பதில்லை. எது எப்படி இருந்தாலும், நவீனுடைய குடும்பச் சண்டைக்கு, அமுதன் கொடுத்த யோசனை அவனுக்கே பலன் தந்துவிட்டது.

அவன் மனைவி சங்கீதா பாவம், அவளாகவே கற்பனை பண்ணிக்கொண்டு சந்தோஷமாகிவிட்டாள். அதை நினைத்ததும் அமுதனுக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அவன்மீது அவள் காட்டும் அன்புக்குத் தகுதியானவனாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். ‘இனிமேல் மனைவி சங்கீதா கூடவும், குழந்தைகளோடும் அதிக நேரம் செலவழித்து, அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கணும்’ என்று அமுதன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

– ராணி வார இதழில் (29.06.2025) பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *