நெஞ்சு பொறுக்குதில்லையே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 82 
 
 

ரமேசும் சுரேசும் இணைபிரியா நண்பர்கள். ஒரு குறிப்பிட்ட திரைப்பட நடிகரின் தீவிர ரசிகர்கள். சமீபத்தில் அந்த நடிகர் நடித்த திரைப்படம் வெளி வந்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. அந்த நடிகரின் நடிப்பில் இருவரும் மயங்கிப் போயினர். அந்த திரைப்படத்தை வீட்டிற்குத் தெரிந்தும் தெரியாமலும் பலமுறை பார்த்து ரசித்தனர்.

அப்போது ரமேஸின் உறவினர் ஒருவர் ஊரிலிருந்து வந்திருந்தார். அவரிடம் ரமேசும் சுரேசும் அந்தப் படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவர் அந்த நடிகர் எனக்கு நன்றாகத் தெரியும் அவர் என் நண்பர்தான் என்று கூறினார். நண்பர்கள் இருவருக்கும் எல்லையில்லா ஆனந்தம்.

உடனே அண்ணே அண்ணே நாங்கள் அந்த நடிகரை எப்படியாவது பார்க்க வேண்டும், அவரிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி ஒற்றைக் காலில் நின்றனர். அவரும் நான் ஊருக்குச் சென்று முதல் வேலையான அந்த நடிகரிடம் பேசி உங்களுக்கு அனுமதி வாங்கித் தருகின்றேன் என்று கூறிவிட்டு ஒருசில நாட்களில் ஊருக்குச் சென்று விட்டார்.

பின்னர் ஒருநாள் அவரிடமிருந்து ரமேசுக்கு அழைப்பு வந்தது. அதில் நடிகர் சமீபத்தில் வெளிவரப் போகிற ஒரு படத்தில் அதிமும்முரமாக நடித்துக் கொண்டிருப்பதாகவும், பார்ப்பதற்கு கால அவகாசம் கிடைக்காதென்றும் கூறியதாகச் சொன்னார். அதோடுகூட சமீபத்தில் அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதாகவும் அந்தக் கட்சி சார்பாக நமது ஊருக்கு அருகில் நடக்கும் அறிமுகக் கூட்டத்திற்கு நேரில் வர இருப்பதாகவும் நேரம் மற்றும் தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு கூறினார்.

நண்பர்கள் இருவருக்கும் தலை கால் புரியவில்லை. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல, பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல அரிய வாய்ப்பு வீடு தேடி வருகின்றது என்று அனைத்தையும் மறந்து அந்த நாளுக்கென ஆவலோடு காத்திருந்தனர். அந்த நடிகரை எப்படியாவது பார்த்து விட வேண்டும், அருகில் சென்று தொட்டுவிட வேண்டும் என்ற ஆதங்கம் தலை தூக்கியது. அந்த நாளும் வந்தது.

அதிகாலையிலேயே எழுந்து தங்களைத் தயாரித்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்களிடம் கூடத் தெரிவிக்காமல் அந்த அரசியல் கூட்டம் நடைபெறுவதாகக் கேள்விப்பட்ட இடத்திற்கு அருகில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்து விட்டனர். ரமேஸ் அந்த நடிகரைக் கண்ணால் பார்த்து, கையால் தொட்டுவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருந்தான்.

நேரம் கடந்து கொண்டேயிருந்தது. தலைவர் இதோ வருகிறார், அதோ வருகிறார், வந்து கொண்டேயிருக்கின்றார். இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்ற அறிவிப்பு அவ்வப்போது வந்து கொண்டேயிருந்ததே தவிர நடிகர் வந்தபாடில்லை. எங்கு பார்த்தாலும் தலையா இது கடல் அலையா என்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நண்பர்கள் இருவரும் நடிகரைப் பார்க்கும் ஆசையில் குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ எடுத்து வரவில்லை. நேரம் கடந்து கொண்டேயிருந்தது. காலை என்பது மாலையாகிப் போனது. ஆனால் நடிகர் வந்த பாடில்லை.

டேய் ரமேஸ் அந்த நடிகர் சீக்கிரம் வருவார் என்று எனக்குத் தோன்றவில்லை. மக்கள் கூட்டம் நேரத்திற்கு நேரம் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது. குடிக்கத் தண்ணீர் இல்லாமல் நா வரண்டு போகின்றது. பசி வேறு வயிற்றைக் கிள்ளுகின்றது. வா நாம் இருவரும் இப்பவே பத்திரமாக வீட்டிற்குப் போய் விடுவோம். அரசியல் கட்சிக் கூட்டம் என்பதால் கண்டிப்பாகத் தொலைக்காட்சியில் ஒளி பரப்புவார்கள். வீட்டிலிருந்தே பார்த்துக் கொள்ளலாம் என்று ஆலோசனைக் கூறினான்.

ஆனால் ரமேஸின் காதில் எதுவும் விழவில்லை. இருந்தபோதிலும் சுரேஷ் உடனடியாக அந்த கூட்டத்திலிருந்து தப்பித்து அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்தான். நான் அவரைப் பார்த்தே தீருவேன் என்று ரமேஸ் அங்கேயே ஒற்றைக் காலில் தவம் கிடந்தான்

மங்கிய மாலைப் பொழுதில் தூரத்தில் ஒரு அழகிய பேருந்து அசைந்தாடி கூட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதோ நமது தலைவர் வந்து விட்டார். யாரும் போகாதீர்கள்.

அமைதி அமைதி தலைவர் இந்த இடத்திற்குதான் வருவார். அப்போது ஆசை தீர பார்த்துக் கொள்ளலாம் என்று ஒலி பெருக்கியில் அறிவிப்பு வெளியாகியது. அந்த தலைவரைப் பார்க்க கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கடலலை போல் அங்கும் இங்கும் அலைமோதியது.

அந்த அலைமோதிய கூட்டத்தில் அகப்பட்டு ரமேஸ் சுக்குநூறாகிப் போனான். எத்தனை பேர் அவன் மேல் ஏறிச் சென்றார்கள் என்று கடவுளுக்கு தான் வெளிச்சம். மொட்டாய் மலர்ந்த ரமேஸ் ஏதோ மோகத்தில் சிறகிழந்த பறவை போல சின்னாபின்னமாகிப் போனான். உருக்குலைந்து உயிரே போனது. அவன் மட்டுமல்ல. குழந்தை முதல் பெரியவர் என பலரும் அவனோடு அதே நிலைக்கு ஆளாகி முகவரியற்று பெயரையும் மாற்றிக் கொண்டனர்.

எல்லா தொலைக்காட்சியும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பல கோணங்களில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. உயிருள்ளவர்கள் ஓடித் தப்பித்ததும் ஒருசிலர் மாண்டு மடிந்ததும் முக்கியச் செய்தியாக இடம் பெற்றுக் கொண்டிருந்தன.

கடவுளே நண்பன் சுரேஸிற்கு எதுவும் ஆக்கக் கூடாது என்று கண்ணை மூடி கடவுளை வேண்டி கண்ணைத் திறந்ததும் தொலைக்காட்சியில் அவன் கண்னில் பட்டது சுரேஸின் உயிரற்ற உடல்தான்.

எங்கு போகிறது இந்த இளைஞர் கூட்டம். வருங்காலச் சந்ததியினர் திரைப்படம், செல்போன் என மோகத்தில் ஆழ்ந்து போவதும், கொலை, கொள்ளையில் மூழ்கி சிறைச்சாலை போவதும் வேதனை அளிக்கின்றது. நாட்டில் நடப்பதைப் பார்க்கின்ற போது மகாகவி பாரதியார் பாடிய நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால், என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *