நீ பாதி நான் பாதி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2025
பார்வையிட்டோர்: 69 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ரெண்டு ரூபாய்க்குப் பூ கொடும்மா…” 

ஸ்கூட்டரில் இருந்தபடியே காலூன்றி காசு நீட்டியவனை ஒரு நொடியில் கணித்து லிட்டாள். பூக்காரி, 

விரல்களில் புதுமோதிரம், பளபளப்பான காலணிகள், பரபரக்கும் முகம் அவன் புதுமாப்பிள்ளை என்பதை அடையாளங்காட்ட 

”ரெண்டு ரூவாக்கு இத்தினிதாம்ப்பா வரும்… அஞ்சு ரூவாக்கு வைக்குதேன்… தலைநிறைய வைக்கட்டும்ப்பா…” என்றபடி சரத்தை நறுக்கிக் காட்டினாள். 

நாளை வாடிப்போகும் பூவிற்கு ஐந்து ரூபாய் செலவழிப்பது அதிகப்படியோ? சமீபமாய் சம்சாரத்தைத் தொடங்கியிருந்தவன், பிரமிப்பாய் மணக்கும் இலைப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டான். 

‘தன் சம்பளத்தில் சம்சாரம் சுமையாகிவிடுமோ’ என்ற சஞ்சலம், மனைவி சாந்தியின் சிக்கனத்தில்… குறைந்திருந்தது! 

வாடிக்கையாய்ப் பூக்காரியிடம் பேசி, பின்னலில் ஒரு இணுக்கு மலர் சரத்தை செருகிக் கொள்பவளுக்கு இன்று பந்தாய் சூட்டி அழகு பார்க்கப் பிரியப்பட்டான்.ஆனால், சாந்தி நிதானமானவள். ‘எதையும் யோசிச்சுதான் பேசணும், செய்யணும்’ என்ற அவள் பல்லவிக்கு ஏறுமாறாயும் துள்ளும் ரகம் இவன். 

அவள் படிப்பு நாசரேத்தின்கிறிஸ்தவப் பள்ளியில், சிற்றூருக்கு ஏற்ற பெற்றோரின் கெடுபிடி வேறு… 

சக மாணவிகள் ‘காதல்’ கதாநாயகர்கள் பற்றிப் பேச, விலகி, ஞாயிறும், வெள்ளியும் ஆலய ஆராதனைகளுக்குப் போய் முழுக்க மூடிய சேலைக் கட்டில் அதிராமல் நடந்து பலிசாய்ப் பேசி, ஊர்க்கிழவிகளின் மனதையும் குளிர்வித்தவள், சாந்தி.

இவன் நான்கு பெண்களுக்குப் பிறகு ‘கிருபையாய்’ பிறந்தவன். பெண்களின் மடியிலும், வாசம்மிகு அணைப்பிலும் வளர்ந்தவனை, இன்னும் அக்காமார் பார்க்கும் போதெல்லாம் ‘டேய் பொடியா’ என்று கட்டி முத்தமிடத்தான் செய்கின்றனர். 

சிறுவனாயிருக்கையில் அண்டை வீட்டுப் பெண்கள், ‘கிருபா, ரெண்டு ரூவாக்குப் பாக்கும், காக்கிலோ வெல்லமும் வாங்கிட்டு வாடா’ என, தளுக்காய் குலுக்கி நடந்து போய் அவர்களைச்சிரிக்க வைப்பான். 

பெண்களின் சீண்டலும், தீண்டலும் அவனுக்குப் பழகிப்போன விகல்பமில்லாதவை. ஆனால், மனைவியின் தோள் அணைக்க, சிரிக்கையில் அவள் தொடையைத்தட்ட, சாந்தி மரவட்டையாய் சுருண்டு – “ச்சே… யாராவது பாத்தா? இதென்ன நிதானமில்லா…?” கண்களாலேயே கண்டிப்பாள்! 

”கொஞ்சந் தள்ளித்தான் உக்காருங்களேன்… மூச்சு படறாப்பல ஒட்டிட்டு…” இடித்து ஒதுக்குவாள்! 

தன் இயல்பிற்கும், புது மனைவியின் மேல் பெருகிய மோக வெள்ளத்திற்கும் இவை அணைகட்ட, மூச்சு முட்டத் தத்தளித்தான், கிருபாகரன்! 


கடைகளில் வண்ண நட்சத்திரங்கள் கண் சிமிட்ட, பருத்த பலூன்கள் அசைந்தன. கிறிஸ்துமஸ் காலம். 

அன்று வெளிநாட்டினரின் புதுமையான இசை, நடன நிகழ்ச்சி நகரில் நடக்கவிருக்க, இரு நுழைவுச் சீட்டுகளை முன்பே வாங்கி விட்டிருந்தான். 

அன்று காலை சாந்தி, அவனுக்கு அதை நினைவுபடுத்த, அவளை நெருங்கி, ”இன்னைக்கு சாயங்காலம் நீ என்ன கட்டிக்கறே, தெரியுமா?” கழுத்துக்குள் முகமுக என்று பேசினான். 

“ஐயோ…” நெளிந்து உதறினாள். 

“பெரியக்கா கொடுத்த ஆரஞ்சு கலர் கிரேப்?”

“அதுக்கு இன்னும் ரவிக்கை தைக்கலைங்க.”

“ரொம்ப நல்லது. அப்படியே வா.” 

அவள் கைகளைச் சுண்டி சுழற்றிவிட்டான். 

“விடுங்க நீங்க… சதா தொட்டுத் தடவிப் பேசற இந்தப் பழக்கந்தான் வெளியேயும் வருது…” 

எட்டிப்போய் நின்றவள், சுழன்றதில் ஈரக்கூந்தல் தோள்களின் முன்னே வழிந்தது. 

நான்கு அக்காக்களும் தேடிச் சலித்து, பொறுக்கி எடுத்த பெண் சாந்தி – அழகிற்குக் கேட்பானேன்! 

கருப்புப்பட்டாய் சிலுசிலுக்கும் அத்நீளக் கூந்தல் தளி கவர்ச்சி. அதில் இப்பூச்சரத்தைச் சொருகி, அணைத்தால்…! 

நினைப்பு, அவல் அடிவயிற்றில் பொறியேற்ற, ஸ்கூட்டரின் வேகம் கூடியது. 

புதுச்சேலையில் சதவு திறந்தவளை, “என் மான் குட்டி” என ஆவேசமாய் இறுக்கினான். 

“என்ன இது லாசல்லியே…?” முழங்கையால் இடித்துத் தள்ளினாள்! நாற்காலியில் சரிந்தவன், பூப்பொட்டலத்தை நீட்ட, 

“எதுக்குங்க இத்தனைப் பூ?” கவலையானாள். 

“பிகு பண்ணாத மானே! வைச்சு அசத்து.” 

”வர்ற வாரம் முதல் கிறிஸ்துமஸுக்குக் கிராமத்துக்குப் போகப் போறோம். உங்க கலாட்டாவ நினைச்சா எனக்குப் பதறுது.”

காபி தந்தவள், தன் அலங்காரத்தை நிறைவு படுத்தினாள். 

சரிகைப் புட்டா தெளித்த குறுப்பு இரவிக்கையும், உடலைக் கவ்வி வழுக்கிய நெருப்பு நிறச் சேலையும், பூவுமாய் அசத்தியவளைப் பெருமையாய்க் கூட்டிக் கொண்டு கிளம்பினான். 


மதுரை நெரிசலில் நீந்தி, ‘குளுகுளு’ அரங்கினுள் கரை சேர், வியர்வைபட்ட சட்டை சிலுசிலுத்தது. 

இடம் தேடி அமர்ந்ததும், சுற்றிவந்த அவன் பார்வை. முன்வரிசையில் அமர்த்திருந்த பெண்ணின் சந்தன நிறக்கழுத்தில் குத்தி நின்றது. 

தூக்கலான கொண்டையும், சிறு கருநீல இரவிக்கையும் அவள் மேனியின் வெளுப்பை, வளத்தை தூக்கிக் காட்டின. 

விளக்குகள் அணைத்த பின்னும் கரிய யானையின் தந்தம் போல இளம் இருட்டில் அக்கழுத்தும் முதுகும் பளபளத்தன. அவள் அடிக்கடி பேச்சும், சிறு சிரிப்புமாய் தன் கணவனின் தோளில் சாய்ந்தாள். எக்கி, அவன் கன்னத்தில் உதடு உரச கிசுகிசுத்தாள்.

மனம் பரபரக்க, மனைவியை நிமிண்டி ஜாடை காட்டினான், கிருபாகரன். 

ஏற்கெனவே அழகியின் குலாவல் நாடகத்தைக் கவனித்தவம் கடுப்படித்தாள். 

“வெட்கமில்ல…? அதுவும் கிறிஸ்துமஸ் நாடகம் பார்க்க வந்த இடத்தில் இது தேவையில்லாத கூத்து.” 

சில நிமிடத்தில் இசை, நடிப்பு, ஆடல் என்று மேடை அவர்களின் கவனத்தை மொத்தமாய்ச் சுருட்டிக் கொண்டது. 


நிகழ்ச்சி முடிந்து வெளியேறுகையில், முன்னிருக்கைத் தம்பதிகள் முன்னால் நடந்தனர். இப்போதும் கணவனை ஒட்டி அவள் காதோடு பேசியபடியே நடந்தாள் அப்பெண். 

‘பார்த்துக்கோ’ கிருபாகரனது விழிகள் மனைவியிடம் பேசின.

அந்த ஜோடி எதற்கோ பிள்ளே திரும்ப. அப்பெண்ணிற்கு முதுகுக்கு குறையாத முக அழகைக் கவனித்தவர்கள்… வேறொன்றைக் கவனித்து மலைத்தனர்! 

கணவனது செவியில் சிறு அட்டைப் பூச்சி போல பதிந்திருந்தது. ஒரு காது கேட்க உதவும் கருவி! 

வீடு வரும்வரை இவர்கள் இருவரும் பேசவில்லை.

சாப்பிட்டு முடிக்கும்வரை அவன் விஷமம் செய்யவுமில்லை. சாந்தி சமையலறையை ஒழிக்கையில் சுனைத்தான். 

“என்னங்க? தண்ணி வேணுமா?” புரியாதது போல நிமிர்ந்தாள். 

“அந்தப் பொண்ணு நல்ல அழகில்ல?” 

“உம்ம்.. உங்கப் பார்வையிலேயே தெரிஞ்சுது…” பெருக்கித் தள்ளினாள். 

“ஏய்… சாந்தி, சொல்ல வர்றது என்னன்னா, அத்தனை அழகானவ ஏன் அந்த அரைச் செவிடனைக் கல்யாணம் கட்டிக்கணும்…?” 

“காதுக்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தமென்ன?” 

”இல்ல… அதான் அவள் அவன் காதுக்குள்ள விழுந்து விழுந்து பேசியிருக்கா… கணவன்தானோ என்னவோ?” 

“கழுத்தில் தாலியிருந்தது.” 

“ஓ… நான் உன்னை.. இல்ல நம்மை, அவங்களோட ஒப்பிட்டது… தப்புதான், சாந்தி, சாதாரண ஜோடியாயிருந்தா சாதாரணமாய்ப் பழகியிருப்பாங்க…” 

ஈரக் கைகளைத் துடைத்தபடி கணவனை நெருங்கியவள். அவனது தலைமுடியைக் கோதிக் கலைத்தாள். 

சிறு வியப்புடன் நிமிர்ந்தான். 

“என் பார்வையின் கோணம் வேறங்க… ” பேசியபடி அவனை நாற்காலியில் அமர்த்தி, கைப்பிடியில் அமர்ந்து அவன் முதுகோடு சாய்ந்தாள். அவளது பின்னல் அவனது தோளில் விழுந்து – புரண்டது. 

இந்த இன்ப உரசலோடு, கூந்தலின் மல்லிகை வாசம் சேர்ந்து மயக்சகரகரத்த குரலில் கேட்டான்; 

“என்னது?” 

“அவள் அத்தனை அழகாயிருந்தும் துளி கர்வமில்லாமல் அனுசரணையா இருந்தாளே? பிறரைப் பற்றி அலட்டலை. தன் கணவனின் மகிழ்ச்சி மட்டுந்தான் அவள் குறி! தனக்கு சதா பிறத்தியார் அபிப்ராயம் பற்றின கலக்கம் – உங்களைவிட பிறந்தியார் முக்கியமில்லைங்கறது புரிஞ்சுது.” 

இவன் வாய் பிளந்து கேட்டபடி கிடந்தான். 

“உங்க இயல்பைக் கட்டுப்படுத்தத் தான் நாம தனியா இருக்கறப்பவும் கூட ஒதுங்கினேன்… இப்ப அது தப்புன்னு படுது.. நம்ப அபிப்ராயங்களைவிட அன்பு முக்கியம்னு புரியது..” 

தோள் வழியே அவள் கைகளை மாலையாய் இழுத்துப் போட்டான். அவள் விரல்கள் ‘சில் லென்ற குளுமையுடன் அவன் கன்னங்களை வருடின- குத்தும் மீசையை நீவின. 

“அப்ப என் பாடம்? நாள் இனி வெளிவாசல்ல ஆர்ப்பாட்டமில்லாம கொஞ்சம் கட்டுப்பாடாவே இருந்துடறேன்… என்ன? ஆனால், முதல்ல நீ எவ்வளவு திருந்தியிருக்கேன்னு பார்ப்போமாம்…” 

கொஞ்சிய கணவனது முகத்தை இரு கைகளில் ஏந்தியவள், “தோ இவ்வளவு” என்றபடி அவன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டாள். 

கெஞ்சிக் கூத்தாடாமல், விளக்கு அணைக்காமல் மனைவி தந்த முதல் முத்தத்தில் கிறங்கிப் போனான், கிருபாகரன்! 

– ராணி, டிசம்பர் 1999. 

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *