கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 22, 2025
பார்வையிட்டோர்: 254 
 
 

(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம் 1 – மரகதக் கடல்! முகப்பு வீடு!

நிலமகளை எங்கும் சுற்றி வளைத்துத் தழுவிக் கிடந்த நீலத்திரைக் கடலில், மரக்கலங்களுக்குப் பயண வழிகள் பல இருந்தாலும், கிழக்கே நெல்லூரிலிருந்து மேற்கே கொல்லம்வரை பாரதத்தாயின் பாதங்களை அலசி நின்ற கடல்வழி மட்டும் ‘மாபார்’ என்ற சிறப்புப் பெயரால் உலக வணிகர் பலராலும் அழைக்கப்பட்டு வந்ததற்கு முக்கிய காரணம், காயல்பட்டணத்தின் கடலோரந்தான் என்பதை நிர்ணயித்துக் கொண்ட இளைய பாண்டியன், மெள்ள மெள்ள மணலை முத்தமிட்டுக் கொண்டிருந்த மரகத நீரை மயக்கமுறும் கண்களுடன் நோக்கி, “இங்கு மட்டும் கடல் நீர் ஏன் இத்தனை பச்சையாயிருக்கிறது? முத்துக் கிடைக்கும் இக்கடலில் இந்தப் பகுதியில் மட்டும் ஒரு வேளை பச்சைக் கற்கள் அதிகமாக அடித்தளத்தில் கிடைக்குமோ?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான், “இந்தக் கடல் நீரின் பசுமை நிறத்தைப் பிற்பகல் கதிரவனின் கிரணங்கள் மிகப் பளபளக்கச் செய்ததற்கும் இதன் அடித்தளத்தில் புதைந்துள்ள மரகதக்கற்களே காரணமாயிருக்க வேண்டும்; வேறு எந்த இடத்தில் இத்தனை ஜாஜ்வல்யமாகக் கடல் நீரை இவனால் உருவாக்க முடிகிறது?” என்று கூறி ஏதோ பைத்தியம் பிடித்தவன்போல் கண்களை நீரில் நாட்டிக் கொண்டிருந்தாலும் வலது கையை மட்டும் மேலே உயர்த்திப் பின்னால் வானத்திலிருந்த ஆதவனைச் சுட்டிக் காட்டினான்.

“காயல் கடலின் இந்தச் சிறப்பை முன்னிட்டுத்தான் உலக வணிகர் பலரும் இந்தத் துறைமுகத்தில் வந்துகுவிகிறார்கள். இதுவே உலகத்திற்குள் விளைந்திருக்கும் இன்னோர் உலகம்” என்று தலையை மகிழ்ச்சியுடன் ஆட்டிவிட்டுத் தன் நினைப்புக்கு ஆதரவு தேடும் பாவனையில் கண்களைக் கடலோரத்திலிருந்து விடுவித்துக் கடலின் தொலைப் பகுதியை நோக்கினான்.

அவன் நினைப்புக்கு ஆதரவு தருவன போலும், சாட்சி கூறுவன போலும் பல நாட்டு மரக்கலங்களும் எட்டக் கடலில் நின்று கொண்டிருந்ததன்றி சீனம், அரபு, பாரசீகம், யவனம் ஆகிய நாடுகளின் கப்பல்கள், தங்கள் பலதரப்பட்ட கொடிகளைக் காற்றில் ஆடவிட்டும், தங்கள் அழகிய முகப்புகளை அவனை நோக்கிச் சிறிது குனிந்து குனிந்து எழுப்பியும் காயல் துறைமுகத்துக்கு இணையற்ற சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தனவென்றால், அந்த மரக்கலங்களிலிருந்து பலவகை வணிகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு தரையை நோக்கி ஊர்ந்து வந்த பெரும் படகுகள் அதன் வளப்பத்தை அதிகப்படுத்த வரும் அயல் நாட்டுத் தூதர்களைப்போல் காட்சி அளித்துக் காயலின் அழகைப் பல மடங்கு அதிகப்படுத்திக் காட்டின. அந்தப் படகுகளைத் துழாவி வந்த கடலோடிகளின் துடுப்புக்கள் ஏககாலத்தில் எழுப்பிய ‘சர்சர்’ என்ற ஓசை, கடலின் அலை ஓசையைக்கூட அடக்க முடியுமென்றாலும் அதற்கு இடைஞ்சலாக இருந்தன- கடற்கரை மணலில் விற்பனைக்கு வந்திறங்கி மடக்கப்பட்டிருந்த அரபுப் புரவிகளின் கனைப்பொலிகளும், அவற்றைக் கட்டி நிற்க வைக்க சுற்றும் முற்றும் ஓடிக்கொண்டிருந்த அராபிய வணிக அடிமைகளின் பெருங் கூச்சலும்.

ஹார்மோஸ், கிரீஸ், ஏடன் முதலிய இடங்களிலிருந்து வந்திருந்த மிக உயர்ந்த ஜாதிப் புரவிகளும், கதீப், லாஸா, பெஹரீன், குல்ஹாது முதலிய இடங்களிலிருந்து வந்து குழுமிக் கிடந்த ருஸ்தத்தின் ‘ருக்ஸ்’ பரம்பரையில் பிறந்து வளர்ந்த வெகுவேகப் புரவிகள் பலவும், காயலின் கடற்கரையில் அடங்கி நிற்காமல் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியதால் ஏற்பட்ட பிரமிக்கத்தக்க காட்சியைத் திரும்பிப் பார்த்த இளைய பாண்டியன் சற்றே புன்முறுவல் கொண்டான். அந்தப் புரவிகளில் ஓரிரண்டு அவனை இடித்துக்கொண்டு ஓடியும், ஓரிரண்டு அவன் ஆசையுடன் நோக்கிய மரகதக் கடலின் நீரிலும் காலை வைத்துக் குழப்பியுங்கூட, அவன் முறுவல் சிறிதும் குறையாமல் விரிந்து முகத்தில் அதிக மகிழ்ச்சியையே காட்டியது. காயலின் மரகத அலைகளுகுக் அடுத்தபடியாக அவன் நேசித்தது அந்தப் புரவிகளைத்தான். அன்று கிட்டத்தட்ட நான்கு பெரும் மரக்கலங்கள் புரவிகளைக் கொண்டு வந்து இறக்கியிருந்ததால், துறைமுகம் முழுவதும் புரவிகளாலேயே நிரப்பப்பட்டிருந்ததன் விளைவாக மற்ற வணிகப் பொருள்களைச் சீன அடிமைகளும், அராபியர்களின் நீக்ரோ அடிமைகளும், மூட்டைகளில் சுமந்துகொண்டு பட்டணத்தின் உட்புற அங்காடியை நோக்கி விரைந்து கொண்டிருந்தாலும், இளைய பாண்டியன் அந்த வணிக மூட்டைகளின் மீது சிறிதும் கண்களைச் செலுத்தாமல், புரவிகள் ஓடி ஓடி அமர்க்களம் செய்து திமிறித் திமிலோகம் செய்து கொண்டிருந்த இடத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தான். அந்தப் புரவிகளை விற்க வந்த வணிகரும் வாங்க வந்த அரண்மனைக் காவலரும் செய்த பேரக் கூச்சல்கூட இளைய பாண்டியன் செவிகளுக்கு மிக இன்பத்தை விளைவித்தது. அந்த இன்ப நிலையின் விளைவாக இளைய பாண்டியன் அந்தப் புரவிகளின் கூட்டத்தின் ஊடே நுழைந்து சென்றான். சில புரவிகள் அவனை இடித்தன, சில கடிக்க முயன்றன. இன்னும் சில குளம்புகளைத் தூக்கி அவனை உதைக்க முற்பட்டன. ஆனால் இளவரசன் அவைகளனைத்தையும் – சமாளித்துக் கொண்டு புரவிக் கூட்டத்திற்குள் சென்றான். இடித்த புரவிகளை ஒரு கையால் அலட்சியமாகத் தள்ளினான். கடிக்க வந்த புரவிகளின் மூக்குத் துவாரங்களை இன்னொரு கையால் இறுக்கிப் பிடித்துப் பற்களை மூடி அடக்கினான். உதைக்க வந்தவற்றிலிருந்து தப்பி, அவற்றின் முதுகில் அறைந்தான். இத்தனை சேஷ்டைகளுடன் நகைக்கவும் நகைத்தான். சில புரவிகளைக் கழுத்தில் தன் கைகளால் சுற்றி வளைத்துத் தழுவவும் செய்தான். இத்தனைக்கும் அவன் அதிகப்படியாக உடையேதும் அணியவில்லை. அராபியர்களைப் போல் சராயை மட்டும் அணிந்திருந்ததால் அந்த வாலிபனின் உடலின் மேற்பகுதி திறந்தே கிடந்தது. திறந்து கிடந்த மார்பு விசாலமாகவும், திண்ணிய தசைகளுடனும் இரும்பெனக் காட்சியளித்தது. அதில் வளர்ந்திருந்த கருத்த ரோமங்களிடையே ஆடிய பெரும் மரகதக்கல் ஒன்றைத் தாங்கியிருந்த பொற்சங்கிலியொன்று அவன் கழுத்தைச் சுற்றி ஓடியிருந்தது. இரும்பென நீண்ட மெல்லிய காங்களை அவன் ஆட்டி நடந்த முறை, தோள்களால் புரவிகளை முட்டித் தள்ளிய அலட்சியம், எல்லாமே அவன் அசுவ சாஸ்திரத்தை நன்கு அறிந்தவனென்பதை மட்டுமின்றி, அவன் உடலின் உறுதிக்கும் வலுவுக்கும் சான்று கூறின. அவன் விசால வதனத்தில் தலையிலிருந்து தொங்கிய ஓரிரு சுருட்டை மயிர்கள் அந்த வதனத்துக்குத் தனி அழகைக் கொடுத்தன. அவன் கண்களிலும் ஏதோ ஒரு தனிப்பட்ட வசியம் இருக்க வேண்டும். இல்லையேல் சில புரவிகள் அவன் கண்களைச் சந்தித்ததும் தலையை ஆட்டுவானேன்? அவன் முத்தமிடத் தங்கள் முகத்தைத்தான் உயர்த்துவானேன்?

உயரத் தூக்கிய புரவிகளின் முகங்களை அவன் முத்தமிட்டான். அந்தப் புரவிகளும் பதிலுக்கு அவன் தோளிலும் முதுகிலும் தங்கள் கழுத்துகளை வைத்து உராய்ந்தன. அப்பொழுது வைகாசித் திங்களாதலாலும் கதிரவன் மறையும் நேரங்கூட அணுகாததாலும் அவன் உடம்பைப்போலவே புரவிகளின் உடல்களிலும் வியர்வை ஓடிக் கொண்டிருக்கிறபடியால் அவற்றின் வியர்வையும் அவன் உடலில் பட்டதென்றாலும் அது கூட அவனுக்குப் பேரின்பத்தையே அளித்தது.

`நந்தவனத்துப் புஷ்பங்களில் கூட இந்த சுகந்தம் ஏது?’ என்று அந்த ஜாதிப் புரவிகளின் வியர்வையைக்கூட அவன் ரசித்தான்.

இப்படிப் புரவிகளை ரசித்துக்கொண்டே அவற்றின் ஊடே சென்ற இளைய பாண்டியனை, அரபு நாட்டுக் காசாரிகள் பெருமையுடனும் பிரமிப்புடனும் பார்த்தனர், ‘இப்படியொருவன் பாண்டி நாட்டிலிருக்க ஆண்டுதோறும் இங்கு ஏன் புரவிகள் பெருமளவில் மாண்டு போகின்றன?’ என்று அவர்களில் சிலர் ஒருவருக்கொருவர் வினவிக் கொண்டார்களேயொழிய, விடை காணாமல் தவித்தனர். அவர்கள் தவிப்பைப் பற்றி லட்சியம் செய்யாமல் வந்த அராபியன் ஒருவன், அந்தக் காசாரிகள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, இரு கைகளையும் உயரத் தூக்கி இருமுறை தட்டவே, இளைய பாண்டியன் சட்டென்று அத்திசையை நோக்கித் திரும்பினான். திரும்பியவன் முகத்தில் எல்லையற்ற வியப்புத் துலங்கியது. “எப்பொழுது வந்தாய் நீ?” என்று அராபிய மொழியிலேயே புரவிகளின் நடுவிலிருந்து கூச்சலிட்ட இளைய பாண்டியன் குரலிலும் வியப்புப் பெரிதாக ஒலித்தது.

அந்த அராபியன் கை தட்டியதும் காசாரிகள் துரிதமாக விலகி அவனுக்கு இடம்விட்டதன்றி, அந்த அராபியனை நோக்கித் தலை தாழ்த்தி வணங்கவும் செய்தனர். அவர்கள் வணக்கத்தைத் தலையசைப்பினாலேயே ஏற்ற அந்த அரபு வணிகன், இளைய பாண்டியன் வருகைக்காகப் புரவிக் கூட்டத்தின் எல்லையில் காத்து நின்றான். இளைய பாண்டியனும் ஏதோ காணாத விருந்தாளியைக் கண்டு விட்டவன் போல், வெகு துரிதமாகப் புரவிகளை விலக்கிக் கொண்டு அந்த அரபு வணிகனிருக்குமிடத்தை அடைந்து, “எப்பொழுது வந்தாய் ஜமாலுதீன்?” என்று வினவினான், வணிகன் பேசுவதற்கு இடங்கொடாமல்.

இளைய பாண்டியனைவிட உயரமாய், ஆறடிக்குக் குறையாமல் பெரும் உடை உடல் முழுவதும் மூடக் காட்சியளித்த அந்த அரபு வணிகன், இளைய பாண்டியன் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு, “நேற்று வந்தேன்” என்றான். “பின் ஏன் அரண்மனைக்கு வரவில்லை?’ என்று வினவினான் இளைய பாண்டியன்.

“வருவதில் ஒரு கஷ்டமிருக்கிறது,” என்றான் ஜமாலுதீன் பயங்கலந்த கண்களுடன்.

“என்ன கஷ்டம்?”

“ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்.”

“அதனால்?”

“அரண்மனைக்குக் கொண்டு வந்தால் எல்லாரும் கேட்பார்கள்!” “அந்தப் பரிசு யாருக்கு?”

“யாருடன் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேனோ அவருக்கு!”

“எனக்கா!”

“ஆம்.”

“என்ன விலை அது?”

“விலையற்றது.”

இளைய பாண்டியன் ஜமாலுதீனை உற்று நோக்கினான்.

“விலையற்றதானால் நான் எப்படி வாங்க முடியும்?” என்று வினவினான் சந்தேகத்துடன்.

“பரிசுக்கு விலையுண்டா?”

“கிடையாது.”

“நட்புக்கு விலையுண்டா?”

“கிடையாது.”

“அப்படியிருக்க விலையைப் பற்றி என்ன பேச்சு? இன்றிரவு வந்து அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” இதைக் கூறிய அந்த அரபு வணிகன் திரும்பிப் போகத் துவங்கினான். திரும்பியவன் என்ன காரணத்தாலோ சரேலென்று நின்று, “நானிருக்குமிடம் தெரியுமல்லவா?” என்று வினவினான்.

இளைய பாண்டியன் சற்று இரைந்தே நகைத்தான்.

“ஜமாலுதீன்! நீதான் ஆண்டுதோறும் – வருகிறாயே; உனக்குத்தான் தங்கத் தனி மாளிகை கொடுத்திருக்கிறோமே,” என்றும் கூறினான், நகைப்பின் ஊடே.

“அந்த இடத்தில் இன்றிரவு இருக்க மாட்டேன் நான்” என்ற ஜமாலுதீன் அக்கம்பக்கம் பார்த்து, பிறகு கூறினான், “காயலின் மூன்றாவது வீதியின் வடக்கு முகப்பில் ஒரு வீடு இருக்கிறது,” என்று ரகசியமாக.

“ஆம்… அது” என்று ஆரம்பித்த இளைய பாண்டியனை, “உம்…பெயர் சொல்ல வேண்டாம்,” என்று எச்சரித்தான் ஜமாலுதீன்.

பெயரைச் சொல்லவில்லை இளையபாண்டியன். ஆனால் மறுத்து மட்டும் கேட்டான், “நான் அங்கு எப்படி வர முடியும்?” என்று.

“ஏன் வந்தாலென்ன?” ஜமாலுதீன் சற்றுக் கோபத்துடன் வினவினான்.

“அது பரத்தையின் வீடாயிற்றே!” என்றான் இளைய பாண்டியன்.

ஏதோ கேட்க முயன்று, ஆனால் கேட்காமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு வாயை மூடிக் கொண்டான் ஜமாலுதீன். சிறிது யோசனைக்குப் பிறகு, “பாதகமில்லை வாருங்கள். வருவதில் பயன் இருக்கிறது,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான் வணிகனான ஜமாலுதீன்.

வணிகன் சொன்னதெல்லாம் விந்தையாயிருக்கவே மிகுந்த யோசனையுடன் காயலின் கடற்கரையிலிருந்து கிளம்பித் தொலைவிலிருந்த தனது அரண்மனைக்குச் சென்ற இளைய பாண்டியன், அன்று பொழுது போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இரவு நெருங்கியதும் நீராடிச் சிறிது உணவும் அருந்தி, இருள் நன்றாக முற்றியதும் அதே அராபியச் சராயில் குறுவாளொன்றை மட்டும் செருகிக் கொண்டு, உடலை ஒரு போர்வையால் போர்த்திக் கொண்டு, அரண்மனைத் திட்டி வாசல் வழியாகக் கிளம்பி மூன்றாவது வீதியை அடைந்தான். மூன்றாவது வீதியின் அந்த முகப்பு வீட்டை நெருங்கியதும் பலத்த சந்தேகம் இளைய பாண்டியனைப் பிடித்துக் கொள்ளவே அவன் சிறிது தாமதித்தான். வீட்டில் விளக்குச் – சிறிதுமில்லாமல் கும்மிருட்டாகக் கிடந்தது. அரவம் கூட ஏதுமின்றிப் பயங்கர அமைதியும் சூழ்ந்திருந்தது. எதற்கும் உள்ளே சென்று பார்க்கத் தீர்மானித்த இளைய பாண்டியன், கதவு திறந்தபடி கிடந்ததால் தங்கு தடையின்றி உள்ளே நுழைந்தான். முதல் கட்டை மெல்ல நடந்து தாண்டி, மிகுந்த எச்சரிக்கையுடன் இரண்டாவது கட்டுக்கு வந்த அவன், அங்கிருந்த விபரீத நிலை கண்டு மலைத்துப் பல விநாடிகள் அசையாமல் நின்று விட்டான்.

அங்கிருந்த பெரிய மரத்தூணொன்றில் ஜமாலுதீன் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்தான். அவன் வாயிலும் துணி அடைக்கப்பட்டிருந்தது; அவன் காலடியில் கிடந்த ஓர் அராபிய அழகியின் முகத்திரை கிழிக்கப்பட்டிருந்தது. அவளும் கை கால்கள் பிணைக்கப்பட்டுத் தரையில் உருட்டப்பட்டிருந்தாள். அவள் ஆடையும் நிலைகுலைந்து கிடந்தன. அந்தக் கோலத்தைக் கண்டு கோபத்தின் வசப்பட்ட இளைய பாண்டியன், தனது இடையிலிருந்து குறுவாளை எடுத்து அந்த இருவரின் பிணைப்புகளையும் அறுத்தெறியும் எண்ணத்துடன் அவர்களை அணுகினான்.

“அணுகாதே! அப்படியே நில்!” என்ற ஒரு குரல் இளைய பாண்டியன் கால்களைத் தேக்கியது. ஆனால் தலை திரும்பியது, குரல் வந்த திசையை நோக்கி. குரலுக்குடையவன் கண்ணுக்குத் தெரியவில்லை.

“அவனையும் பிடித்துக் கட்டுங்கள்,” என்ற ஒலி மட்டும் கூடத்தின் இருளடைந்த பகுதியிலிருந்து அதிகாரத்துடன் வெளிவந்தது.

அத்தியாயம் 2 – அதிர்ச்சி தந்த செய்தி

காயல் பட்டணத்தின் அரச வீதியை அடுத்த மூன்றாவது வீதி விலைமகளிர் வீதியாதலால் அங்கு எல்லா வீடுகளிலும் கேளிக்கையும் கூத்தும் நடப்பது இயற்கையாயிருந்தாலும், அன்று மட்டும் அத்தகைய அரவம் ஏதுமின்றி வீதி பூராவிலுமே மௌனம் மண்டிக் கிடந்ததை வீதியை அணுகியதுமே இளையபாண்டியன் கவனித்தானானாலும், அதைப் பற்றிப் பொருட்படுத்தாமலேயே முகப்பு வீட்டை அடைந்தான். அந்த முகப்பு வீட்டின் அந்த காரமும் அசப்தமும் அவனுக்குப் பலத்த சந்தேகத்தைக் கிளறிவிட்டதன் விளைவாக, அவன் மிகுந்த எச்சரிக்கையுடனேயே முதல் கட்டைத் தாண்டி இரண்டாவது கட்டுக்கு வந்தவன், அங்கிருந்த விபரீத நிலையை எதிர்பார்க்கவில்லை. அந்த இரண்டாவது கட்டிலும் பூர்ண இருட்டடித்துக் கிடந்தாலும் இளைய பாண்டியன் நிலை அத்தனை அபாயகரமானதாக ஆகியிருக்காது. ஆனால் இரண்டாம் கட்டில் ஜமாலுதீன் கட்டப்பட்டிருந்த தூணுக்கு அருகில் ஒரு சிறு அகல் விளக்கு வைக்கப்பட்டிருந்ததால், அந்த அகல் விளக்கின் சிறு வெளிச்சம் ஜமாலுதீனையும் அவன் காலடியில் கட்டி உருட்டப்பட்டிருந்த அராபிய அழகியையும் மட்டுமே காட்டிக் கொடுக்கும் வண்ணம் வீசிக்கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்துக்குள் தான் நுழைந்ததால் ஜமாலுதீனைக் கட்டிப் போட்டவர்களுக்குத் தன் மீது வாளெறிந்து கொல்வது ஒரு பொருட்டல்லவென்பதை இளையபாண்டியன் உணர்ந்து கொண்டிருந்தாலும், அவனுள்ளே அந்த சமயத்தில் எழுந்து விட்ட சினமும் இயற்கையாகவே அவன் ரத்தத்தில் ஓடிக்கொண்டிருந்த வீரமும் இருளில் மறைந்திருந்த ஆபத்தை அலட்சியம் செய்ய அவனைத் தூண்டிய காரணத்தால், அவன் தன் குறுவாளை எடுத்துக் கொண்டு ஜமாலுதீன் பிணைப்பையும், அரபு நாட்டு மகளின் பிணைப்பையும், அறுத்தெறிய அகல் விளக்கின் வட்ட வெளிச்சத்துக்குள் துணிவுடனேயே காலெடுத்து வைத்தான். அந்த சமயத்தில் அந்த இரண்டாவது கட்டின் இருளடைந்த பகுதியிலிருந்து எழுந்த, “அணுகாதே, அப்படியே நில்” என்ற குரலும், “அவனையும் பிடித்துக் கட்டுங்கள்” என்ற உத்தரவும் ஒரு விநாடி இளைய பாண்டியன் கால்களைத் தேக்கி நிறுத்தின.

அந்தக் குரல் அவனுக்கு வெகு பழகிய குரலாகத் தெரிந்தாலும் இருளிலிருந்து பேசியவன் சற்றுக் குரலை மாற்றிப் பேசியதால் திட்டமாக அது யார் என்பதை அவனால் நிர்ணயிக்க முடியவில்லை. உத்தரவிட்டவன் யாராயிருந்தாலும் அவன் தனிப்பட வரவில்லையென்பதையும் தகுந்த உதவியுடனேயே வந்திருக்கிறா னென்பதையும் இளைய பாண்டியன் புரிந்து கொண்டதால், குறுவாளை இடையில் மீண்டும் செருகிக் கொண்டான். அந்தச் சமயத்தில் சற்று எட்ட இருந்த தூண்களிலிருந்து இரண்டு வீரர்கள், வாட்களை உருவிப் பிடித்துக் கொண்டு வரவே, சரேலென்று தரையிலிருந்த அரபு நாட்டு அழகியின் பக்கத்தில் விழுந்து வெகு வேகமாக உருண்ட இளைய பாண்டியன் அகல் இருந்த இடத்தை அடைந்து அதை ஊதி விடவே, இரண்டாம் கட்டு முழுவதுமே பூர்ண இருளில் சிக்கிக் கொண்டது. முன்பே ஜமாலுதீனிருந்த தூணைக் குறி வைத்திருந்த இளைய பாண்டியன், சரேலென்று துள்ளி எழுந்து ஜமாலுதீன் கயிறுகளை மடமடவென்று தன் குறுவாளால் அறுத்துவிட்டு, “அந்தப் பெண்ணை எடுத்துக்கொண்டு பின் பக்கமாகச் சென்று விடு,” என்று அரபு வணிகனுக்குக் கூறிவிட்டு, எதிரேயிருந்த தூண்களை நோக்கிச் சென்றான்.

இருளடைந்த அந்த இரண்டாம் கட்டு அடுத்த விநாடி திமிலோகப்பட்டது. அங்குமிங்கும் நாலைந்து வீரர்கள் விவரம் புரியாமல் ஓடியதால் ஏற்பட்ட காலடி ஓசைகள் தடதடவென சப்தித்தன.

“மடையர்களா! சீக்கிரம் இன்னொரு விளக்கை ஏற்றுங்கள். பிடியுங்கள் அவனை,” என்று முதலில் இளைய பாண்டியனை அச்சுறுத்தியவன் குரல் பயங்கரமாக அங்கிருந்த சுவர்களில் தாக்கி எதிரொலி செய்தது. ஓரிரு வீரர்களின் வாட்கள் தூண்களில் பட்டதால் ‘கிணிங் கிணிங்’ என்ற உலோக ஒலிகள் இளைய பாண்டியனைக் கோட்டை விட்டது பற்றி பரிகசிப்பனபோல் காதுகளில் விழுந்தன. அதே சமயத்தில் வீரனொருவனும் ‘ஐயோ’ என்றலறினான்.

“என்ன அங்கே?” என்று முதலில் எச்சரித்தவன் சீறி விழுந்ததற்குப் பதில் ஏதுமில்லை. ஆனால் யாரோ ஒருவன் தொப்பென்று தரையில் விழும் சப்தம் மட்டும் கேட்டது. அடுத்த இரண்டு விநாடிகளில் விளக்கொன்றும் ஏற்றப்பட்டபோது பயங்கர நிலை அந்தக் கூடத்தில் நிலவிக் கொண்டிருந்தது. தூணொன்றுக்கருகில் இளைய பாண்டியன் காலடியில் அவன் குறுவாளால் கழுத்தில் குத்தப்பட்டு உடனடியாக உயிர் நீத்த வீரனொருவன் உடல் விழுந்து கிடந்தது. அந்த வீரனுடைய வாள் இளைய பாண்டியன் கரத்திலிருந்தது. இளைய பாண்டியன், தன் உடலைச் சுற்றியிருந்த போர்வையைச் சுருட்டிக் கையில் பிடித்துக் கொண்டு, மற்ற வீரர்களை எதிர் நோக்கி நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் விழுந்து கிடந்த வீரனின் கழுத்திலிருந்து உதிரம் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது.

புதிதாக ஏற்றப்பட்ட விளக்கின் வெளிச்சம், இருளை மட்டுமின்றி இளைய பாண்டியனைத் தாக்க வந்தவர்களின் ரகசியத்தையும் கிழித்து விடவே, அந்த வீரர்களை தன்னைப் பிடித்துக் கட்டும்படி ஊக்கியவனைக் கண்டான் – குலசேகர பாண்டிய மன்னனின் இரண்டாவது புதல்வனான வீரபாண்டியன். மூத்தவனான சுந்தரபாண்டிய னொருவனிருந்தாலும், மன்னன் இதயத்தையும் மக்கள் இதயத்தையும் ஒருங்கே வீரபாண்டியன் பறித்து விட்டதால், பாண்டிய நாட்டு மக்கள் மட்டு மின்றி வெளிநாட்டவரும் வீரபாண்டியனையே இளைய பாண்டியன் என்ற அருமைப் பெயரால் அழைத்து வந்தார்கள். அது மட்டுமல்ல காரணம். மூத்தவனான சுந்தரபாண்டியன் பட்ட மகிஷியின் மகனாயிருந்தும், மகிஷியின் மகன் அல்லாதவனும் ஆசைநாயகியின் மகனுமான வீரபாண்டியனையே மன்னன் தனது இளவரசனாக நியமித்திருந்தான். அதை ஆட்சேபித்தவர்களுக்கு, “இனி இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியவன் பெருவீரனாயிருக்க வேண்டும். அலாவுதீன் கில்ஜியின் பலம் வடக்கில் ஓங்கி வருகிறது. தென்னாட்டின் மீதும் அவன் கண் வைத்திருப்பதாகக் கேள்வி. பரம்பரையைப் பார்க்கும் சமயமல்ல இது. தகுந்தவனைத் தேடும் சமயம். இந்தச் சமயத்தில் பாண்டிய நாட்டை எதிரிகளிடமிருந்து காக்க வல்லவன் வீரனான வீரபாண்டியன் தான்” என்று திட்டவட்டமாக மன்னன் பதில் கூறி விடவே, அதைப் பற்றிய ஆட்சேபணையும் விவகாரமும் உள்ளூரப் புகைந்து கொண்டிருந்ததேயொழிய, எரிமலையாக வெளியே வெடிக்கவில்லை.

தவிர பிறப்பிலிருந்த ஊனத்தை, இன ஈனத்தை தனது வீரத்தால் சரிப்படுத்திக் கொண்டான் வீரபாண்டியன். குதிரையேற்றத்திலும் வாட் போரிலும் அவனுக்கிணை வேறு யாருமில்லையென்பதை மன்னர் போர்ப் பயிற்சி அரங்கில் பல முறை நிரூபித்தான். வாட்போரிட்ட சமயங்களிலெல்லாம் அண்ணனான சுந்தர பாண்டியனை வெற்றி கொண்டு, சிரித்து வெளியேறியிருக்கிறான்.

அந்தச் சிரிப்பு, பிற்காலத்தில் பெரும் வினையில் கொண்டு போய் விடுமென்பதை வீரபாண்டியன் அன்றும் உணரவில்லை. முகப்பு வீட்டின் இரண்டாவது கட்டின் கூடத்திலிருந்த இன்றும் உணரவில்லை. ஆகவே எதிரே வாளுடன் நின்று கொண்டிருந்த வீரர்கள் தலைவனையே வியப்புத் ததும்பிய விழிகளுடன் நோக்கினான் வீர பாண்டியன். தனது மூத்த சகோதரன் எதற்குத் தயாராயிருந்தாலும் தன்னைக் கொலை செய்யத் தயாராயிருக்க மாட்டானென்று நினைத்த இளைய பாண்டியன், சுந்தர பாண்டியனின் மெய்க் காவலனான குலபதி, தன் முன்பாகவே வாளை உருவிக்கொண்டு நிற்பதைக் கண்டதும், “குலபதி! நீயா?” என்று வினவவும் செய்தான் வியப்பின் ஊடே.

“ஆம், நான் தான்” என்ற குலபதி, “இளைய பாண்டியா! வாளைக் கீழே எறிந்து சரணடைந்து விடு நீ தப்ப வழி ஏதுமில்லை,” என்று மரியாதைக் குறைவாகவும் பேசினான்.

வீரபாண்டியன் அவனை ஒரு விநாடி உற்று நோக்கி விட்டு, “உனக்குச் சித்தப்பிரமை ஏதுமில்லையே?” என்று வினவினான்.

“இல்லை.” திடமாக வந்தது குலபதியின் பதில்.

“யாருடைய கட்டளையின்படி இங்கு என்னைச் சிறை செய்ய வந்தாய்?”

“இளவரசரின் கட்டளையின்படி” என்றான் குலபதி.

இந்த பதில் மற்றோர் அதிர்ச்சியை அளித்தது வீரபாண்டியனுக்கு.

“நானல்லவா இளவரசன்?”

“இருந்தீர்கள்.”

“இப்பொழுது?”

“யாருமில்லை.”

“இளவரசர் கட்டளைப்படி என்று சொன்னாயே.”

“நேற்று வரை இளவரசராயிருந்த சுந்தரபாண்டியத் தேவரைச் சொன்னேன்.”

“இன்று அவர் பதவி உயர்ந்துவிட்டதா?”

“ஆம்.”

“எப்படி?”

இதற்குக் குலபதி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சிறிது தயங்கிவிட்டுச் சொன்னான்.

“இன்று சுந்தர பாண்டியர் பாண்டிய நாட்டு மன்னராகி விட்டார்,” என்று.

பேரதிர்ச்சி தந்த இந்தச் செய்தியைக் கேட்ட இளவரசன், திக்பிரமை பிடித்து ஒரு வினாடி நின்றான்.

“அப்படியானால் என் தந்தை குலசேகர பாண்டிய மாமன்னர்…” என்று இழுத்து விழுங்கினான் இளைய பாண்டியன். “நேற்றிரவு அமரரானார்” என்றான் குலபதி.

“அவர் – எப்படி…?” குளறினான் இளைய பாண்டியன்.

“சுந்தரபாண்டியன் குறுவாள் அவருக்கு அமர நிலையை அளித்துவிட்டது” என்றான் குலபதி அடக்கம் ததும்பிய குரலில்.

“தந்தையைக் கொன்றுவிட்டானா என் தமையன்!” என்ற சொற்கள் நெருப்புத் துண்டங்களென உதிர்ந்தன – இளைய பாண்டியன் வாயிலிருந்து.

“ஆம். அதனால்தான் சொல்கிறேன். வாளைக் கீழே எறிந்துவிடு. அரசர் ஆணைப்படி உன்னைச் சிறை செய்து மதுரை கொண்டு செல்கிறேன்” என்று கூறி, மீதி வீரர்களை, “உம்… பிடியுங்கள் அவனை” என்றும் ஊக்கினான்.

அடுத்த விநாடி வீரபாண்டியன் வலது கையிலிருந்த வாள் மட்டுமல்ல, இடது கையிலிருந்த போர்வையும் சுழன்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீத விளைவுகள் நிகழ்ந்தன.

– தொடரும்…

– நிலமங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1977, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *