நாய் மூளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 304 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

றொக்சன் ஆசிரியத் தொழிலைத் தேடிச் சென்றனவல்ல. படித்து விட்டுத் தொழிலின்றி இருந்த போது கிடைத்த இந்த ஆசிரியத் தொழிலை விருப்போடு ஏற்றுக் கொண்டு முடிந்தவரை மனச் சாட்சியோடு பணிபுரிபவன். 

நற்பிரசைகளை உருவாக்கும் உன்னதமான நிலையங்கள் தான் பாடசாலைகள் என்ற தத்துவத்தைக் கல்வியியலாளர்கள் கூறிக் கொண்டாலும், தற்போதைய கல்வி நிலையங்கள் மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார் செய்யும் இடங்களாகவே செயற்பட்டு வருவதை றொக்சன் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தான். 

றொக்சன் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. இருபத்தேழு வயது மதிப்பிடலாம், சிவந்த மெலிந்த தோற்றம், அடர்ந்த கட்டையான சுருண்ட கேசம், மிதித்த இடத்தில் புல்லும் சாகாத பதுமையான நடை, மிகவும் கூர்மையான கண்கள், எவரையும் மிக இலகுவாக மதிப்பிட்டுக் கொள்ளும் சமூக ஆளுமை, அவசரப்படாத திட்டமிட்ட செயற்பாடு, எதையும் ஏற்றுக் கொள்ளும் பண்பட்ட மனப் பக்குவம்… இன்றைய சமூக நடைமுறைகளோடு இவனது பண்புக் கூறுகளை ஒப்பிட்டு நோக்கினால் இவன் ஒரு வித்தியாசமான மனிதனாகவே தென்படுவான். 

பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக் கொண்டு ‘விஞ்ஞானப் பட்டதாரி’ என்ற ‘லேபிளுடன் விண்ணப்பங்கள், நேர்முகப் பரீட்சைகள் என்ற முயற்சியுடன் இரண்டு வருடங்கள் கழிந்தன! 

“என்னடா தம்பி… உனக்கொரு வாத்தி வேலை கூடக் கிடைக்கயில்லையா?” என்று கேட்குமளவிற்குச் சமூகச் சூழ்நிலை உருவாகி வீட்டிலும் குசினிக்குள் மௌனமாக நச்சரிப்புக்கள் சிறுகச் சிறுக ஆரம்பமாகியிருந்தன. 

றொக்சன் இடையிடையே ‘வயரிங்’ வேலைக்குச் செல்வான், வேலை இல்லாத நாட்களில் தாயோடு சந்தைக்குச் தேங்காய் வியாபாரம் செய்யச் செல்வான். தினசரி ஏதோ வேலை செய்து கொண்டுதானிருந்தான். இருந்தாலும், அவனது பெற்றோர் நீளக்களிசான் போட்டு உத்தியோகம் பார்த்து மாதம் மாதம் சம்பளமெடுப்பதைத்தான் விரும்பினர். 

“எனது மகன் கவுண்மேந்து வேலை செய்யிறான்” என்று கூறிக் கொள்வதில் ஒவ்வொரு பெற்றோரும் திருப்தி அடைந்து கொள்கின்ற பொதுவான இயல்புக்கு றொக்சனின் பெற்றோரும் விதி விலக்காகி விட முடியுமா?… 

இந்தச் சூழ்நிலையில்… 

அரசாங்கத்துக்குள் வழமையாக ஏற்படுகின்ற இழுபறிகள் ஏற்பட்டு, அந்த இழுபறிகள் விஸ்வரூபமெடுத்து அரசாங்கம் கலைக்ககப்பட்டு புதிய தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது. வழமை போல் வேட்பாளர்கள் மக்களை நோக்கி வந்தனர். குசினிக்குள் புகுந்து, திருவலைப் பலகையில் குந்தியிருந்து, குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சினர். 

வாக்குகள் ஊற்றெடுக்கும் ‘பொக்கணைகளை’க் கண்டறிந்து வேலை வாய்ப்புக்கள் வழங்கினர். ஆஸ்பத்திரி லேபர் வேலை, சமூர்த்தி வேலை, அலுவலகப் பியூன் வேலை இவைகளோடு ஆசிரியர் வேலை இப்படி அரசாங்க வேலைகள் கிள்ளித் தெளிக்கப்பட்டன. 

இந்தக் கிராமத்தில் றொக்சன் நீதியான ஒருவன் என்று மதிக்கப்பட்டதால், அவனைத் தனது பக்கத்தில் வைத்திருக்க வேண்டியதொரு தேவை வேட்பாளருக்கேற்பட்டு, றொக்சனுக்கு ஒரு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. 

“சமூகம் என்பது ஒரு கழுதை, அந்தக் கழுதைக்கு முன்னால் சென்றால் கடிக்கும், பின்னால் சென்றால் காலால் அடிக்கும்” என்று கூறுவார்களே, அதுேபோல றொக்சனைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இப்போது அக்கறைப்பட்டு சமூக நீதி கதைத்தனர்! 

“என்னடா றொக்சன்… ஒரு வாத்தி வேலைக்காக வேசையாடலாமா” என்ற நக்கலடித்தனர். 

எதிரிகளுக்கும், விரோதிகளுக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை நன்றாகவே றொக்சன் புரிந்து வைத்திருந்தான். அதனால் தன்னை நக்கலடித்தவர்களுக்குப் பதில் சொல்ல அவன் விரும்பவில்லை. 

தேர்தலில் சமூகம் நன்மையுடையுமோ என்னவோ… றொக்சனை போன்ற படித்த சிலர் நன்மையடைந்தனர். 

மகாலிங்கம் – சொர்ணம் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவன்தான் றொக்சன். மகாலிங்கம் அயற் கிராமங்களுக்குச் சென்று தேங்காய்கள் வாங்கி வருவான். சொர்ணம் அத்தேங்காய்களை நகரச் சந்தையில் விற்பனை செய்வாள். றோக்சன் சிறுவனாக இருந்த போது மட்டுமல்ல, பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோதும், பட்டதாரியான பின்பும் கூட தாயோடு சந்தையில் தேங்காய் வியாபாரம் செய்யச் செல்வான். 

சற்சதுர வடிவில் அமைந்துள்ள அந்தச் சந்தையின் வடமேற்கு மூலையில், பிரதான வாசலை அண்மித்து நிற்கும் புளிய மரத்தின் கீழ்தான் தேங்காய் வியாபாரிகள் கூடுவார்கள். முப்பது ரூபா, இருபத்தைந்து ரூபா, இருபது ரூபா என்ற விலைகளில் தேங்காய்களைப் பகுதி பிரித்து சிறுகுவியல்களாக அடுக்கி வைத்து அவற்றிற்கு பின்னால் சாக்கை விரித்து சொர்ணமும் றொக்சனும் அமர்ந்திருப்பார்கள். 

“தம்பி… றொக்சன்… நீ என்னோடை சந்தைக்கு வராதையப்பு… உன்னோடை படிக்கிற புள்ளையள் கண்டால்… உன்னைப் பற்றி கேவலமாக நினைக்குங்கள்…” றொக்சன் பல்கலைக்கழக மாணவனாக இருந்த போது சொர்ணம் ஒரு நாள் இப்படிக் கூறினாள். றொக்சன் சிரித்துக் கொண்டானே தவிர, தாய்க்கு எதுவுமே அவன் கூறவில்லை. கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்து, வறுமைத்தணலில் வெந்த… படிப்பில் குறைந்த ஒரு தாய் இப்படித்தான் சிந்திப்பாள் என்ற சமூக இயங்கியல் யதார்த்தத்தை றொக்சன் நன்றாகவே புரிந்து வைத்திருந்தான். 

றொக்சன் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான போது, அவனது குடும்பத்திலுள்ளவர்கள் பெருமைப்பட்டுக் கதைத்த கதைகள்… இரவிரவாக முத்தத்திலுள்ள வேப்பமரத்தின் கீழ் அமர்ந்திருந்து சொர்ணமும், மகாலிங்கமும் கதைத்த கதைகள்… இனிமேல் றொக்சன்தான் இந்த நாட்டின் தலைவன் என்ற தோரணையில் தான் அவர்கள் கதைத்தனர்! 

பல்கலைக்கழகங்கள் முதலில் விடைகளைக் கொடுத்து அதன் பின் பரீட்சை என்ற பெயரில் வினாக்களைக் கொடுத்து… அதன் பின் பட்டங்களை கொடுத்து மாணவர்களை வீதிக்கனுப்பும் ஒரு கல்வி நிலையமே தவிர, வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு சமூக முனைப்புடைய நிலையமல்ல என்ற உண்மையை மகாலிங்கம் சொர்ணம் போன்ற பாமரக் குடும்பங்களால் உணர முடியுமா? 

றொக்சன் விஞ்ஞானப் பட்டதாரியாக இருந்ததால் அவனுக்கு அப்பகுதியிலுள்ள பிரபலமானதொரு கல்லூரியில் நியமனம் கிடைத்தது. நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள், ஆயிரக் கணக்கான மாணவர்கள்…! 

கல்லூரியில் உள்ள ஆசிரியர்களிலும், மாணவர்களிலும் கணிசமானோர் ஏற்கனவே றொக்சனைத் தெரிந்து வைத்திருந்தனர். 

“…சந்தையுக்கை தேங்கை விக்கிற சொர்ணத்தின்ர பொடியன்தான். புதிசாய் வந்திருக்கின்ற சயன்ஸ் மாஸ்ரர்: பொடியன் அடக்கமான பண்பான புள்ளை” இப்படித்தான் கல்லூரியில் றொக்சனைப் பற்றிப் பேசிக் கொண்டனர். இக்கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடப் பொறுப்பும் மேலதிகமாக றொக்சனுக்கு வழங்கப்பட்டது. 

றொக்சனுக்கு சமூக யதார்த்த நிலைகளில் தெளிவிருந்ததாலும், பொறுப்புணர்வோடு விடயத் தெளிவும் இருந்ததால், இவனது வகுப்புகள் கலகலப்பாகவே நடைபெற்றன. மாணவர்களிடம் பாட விடயங்களைத் திணிக்காமல் மாணவர்கள் விடயங்களைச் சுவைத்து அசைபோடுமளவிற்கு சுவையாகக் கற்பித்தான். 

அதுமட்டுமன்றி மாணவர்களை சமூக ரீதியாகச் சிந்திக்கத் தூண்டும் அளவிற்கு செயற்பட்டுக் கொண்டான். 

சமூகப் பிரச்சினைகளை கூறி விடை தேட வைப்பான். 

சிந்திக்கத் தூண்டும் கேள்விகளைக் கேட்பான். 

புதிரான கணக்குகளைக் கேட்பான். 

“உங்கள் முன் கடவுள் தோன்றி உனக்கு விருப்பமான ஒன்றைக்கேள் தருகிறேன் என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்” என்று ஒரு நாள் கேட்டு பதிலை ஆயத்தம் செய்யவிட்டான். இன்னொருநாள், “உங்களை முதல் மந்திரியாக்கினால் நீங்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்ய விரும்புவீர்கள்” என்ற கேட்டு மாணவர்களை தேசிய ரீதியாகச் சிந்திக்கத் தூண்டினான். 

“நீங்கள் ஒரு நீதிபதியாக இருக்கிறீர்கள். உங்கள் முன் ஒரு குற்றவாளி நிற்கின்றான்.. அந்தக் குற்றவாளி குற்றம் செய்யவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் சாட்சிகளின் பொய்யான வாக்கு மூலங்களின் படி அந்தக் குற்றவாளிக்குத் தண்டனை வழங்க வேண்டிய சூழலில் நீங்கள் இருக்கிறீர்கள். தண்டனை வழங்குவீர்களா… அல்லது விடுதலை செய்வீர்களா…” இப்படியும் ஒரு நாள் கேட்டு சட்ட ரீதியான சிந்தனையை மாணவர்களிடம் தூண்டினான். 

இக்கல்லூரியில் ஏ.எல் விஞ்ஞானப் பிரிவில் பதினைந்து மாணவர்கள் இருந்தார்கள். றொக்சன் மாஸ்ரரின் புதிதான கேள்விகளுக்கு இந்தப் பதினைந்து மாணவர்களில் பதினான்கு மாணவர்களுக்கு… சரியோ, பிழையோ ஏதாவது பதிலைக் கூறி விடுவார்கள். ஆனால் பதினைந்தாவது மாணவனாக இரந்த சுபதீசன் மட்டம் மௌனமாக இருப்பான். 

றொக்சன் மாஸ்ரரின் கணிப்பீட்டின்படி வகுப்புப் பாடங்களை ஒழுங்காகவும், திறமையாகவும் செய்து கொள்ளும் சுபதீசன் மந்தமான மாணவனல்ல என்ற முடிவிருந்தது. 

பாடம் சம்பந்தமான கேள்விகள் கேட்டால் ஒழுங்காகப் பதில் கூறுவான். அதேவேளை சமூகம் சம்பந்தமான புதிர்க்கேள்விகள் கேட்டால் மௌனமாக நிற்பான். 

றொக்சன் மாஸ்ரர் சுபதீசனைக் கூர்ந்து அவதானிக்க ஆரம்பித்தார். சுபதீசனின் முகத்தில் அப்பியிருக்கும் துன்ப உணர்வுகள் இலேசாகத் தென்பட்டன. இவனுக்குப் பின்னால் ஏதோவொரு துன்ப வரலாறு உண்டென்பதை மட்டும் றொக்சன் மாஸ்ரரால் உணர முடிந்தது. 

சுபதீசன் 

மெலிந்த தோற்றம், பொது நிறத்தை விட சிறிது கருமை கூடிய நிறம், பக்கவகிடிட்ட அடர்த்தியான கேசம், இலேசான முன்னோக்கி மிதந்த பற்கள், குழிவிருந்த கண்கள், எதிலுமே பற்றற்ற நிலை, வருவான். வகுப்பில் இருப்பான். பாடங்களை ஒழுங்காகச் செய்வான்… வகுப்பு முடிய… விளையாட்டு மைதானம், றோட்டுக்கரை, கூத்துக்கும்மாளங்கள் என்று எதிலுமே ஈடுபடமாட்டான்… வீட்டுக்குச் சென்று விடுவான். 

பசுபதி, நல்லம்மா குடும்பத்தில் பிறந்த ஒரே மகன் தான் சுபதீசன், இக்கல்லூரி அமைந்திருக்கும் நகரத்திலிருந்து வடக்குப்பக்கமாக ஏறத்தாழ மூன்று கிலோமீற்றர் தூரத்தில் வயல் கரைப்பக்கமாக இவர்களது வசிப்பிடம் அமைந்திருந்தது. 

ஐந்தாம் வகுப்புக்குட்பட்டதொரு சிறிய பாடசாலை, அந்தப் பாடசாலையை அடுத்து ஒரு முருகன் கோவில், அதையடுத்து பசுபதியின் கொட்டில் வீடு அமைந்திருந்தது. பசுபதி அக்கிராமத்திலுள்ள நாகரத்தினம் என்ற மேசனோடு கூலியாளாகச் செல்வான், நல்லம்மா கிராமத்துள் ஏதாவது கூலி வேலைக்குச் செல்வாள். இனப்பிரச்சினையால் கட்டிடப் பொருட்களின் வரவு தடை செய்யப்பட்டதால் கட்டிட வேலையாட்களுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. அதேபோன்று கிராமத்தில் கூலி வேலைகளும் இல்லாமல் போய் விட்டதால் பசுபதியின் குடும்பத்தில் பெரும் பஞ்சம் நிலவியது. 

ஆறு கப்புக்கள் நாட்டப்பட்டு, அதில் சில மரங்களைப் பொருத்தி கூரையாக்கி கிடுகினால் வேயப்பட்டதொரு கொட்டில், அந்தக் கொட்டிலின் ஒரு மூலையில் மூன்று அடுப்புககற்கள், அதுதான் அவர்களின் குசினி. குசினிக்கு எதிராகவுள்ள மூலையில் தொங்க விடப்பட்டதொரு சாக்கு… இந்தச் சாக்கின் மீது தான் சுபதீசன் தனது புத்தகங்களை வைப்பான். 

அந்தக் கொட்டில் வீட்டின் கூரைக்கிடுகள் உக்கி, பொத்தல் விழுந்து… மாரி காலத்தில் பசுபதியும் நல்லம்மாவும் சுபதீசனும் பக்கத்திலுள்ள அந்தச் சிறிய பாடசாலைக்குள் படுத்துக் கொள்வார்கள். 

இப்பாடசாலைக்கு புதிதாக வந்ததொரு அதிபர் இரவில் அப்பாடசாலைக்குள் சுபதீசன் இருந்து படிப்பதையும்,சுபதீசனின் குடும்பத்தினர் இரவில் அங்கு தங்குவதையும் சட்ட விரோதமான செயலெனச் சுட்டிக்காட்டித் தடை விதித்து விட்டார். 

மழைக் காலத்தில் மூவரும் அந்தக் கொட்டிலுக்குள் யூரியாப் பையினால் தலையை மூடிக் கொண்டு குந்தியிருப்பார்கள். 

கறள் பிடித்த அச்சாணி… அதில் கரடுமுரடாகச் சுற்றுகின்ற ஒரு சக்கரம் போல் அவர்களின் வாழ்க்கை சுழன்றது. 

ஒரு நாள் அதிகாலை… நான்கு மணியிருக்கும்… படையினர் அக்கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். பசுபதியின் குடிசைக்குப் பக்கத்திலுள்ள முருகன் ஆலயத்துள் குண்டுகள் ஒளித்து வைக்கப்ட்டிருப்பதாகக் கூறி… கோவிலைச் சல்லடை போட்டுத் தேடினர்… கிராமத்து மக்கள் மழையில் நனைந்த கோழிக்குஞ்சுகள் போல் குறாவிப் போய் நின்றனர்… 

பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். முருகன் கோவிலுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் என்ற காரணத்தினால் பசுபதியும் கைது செய்யப்பட்டான். 

பொழுது விடிந்தது… ஆனால் அக்கிராமத்து வாயில்லாப் பூச்சிகளின் துயரங்கள் வடியவுமில்லை… விடியவுமில்லை! 

கைது செய்யப்பட்டவர்கள் வீடு திரும்பவுமில்லை. 

கைது செய்யப்பட்டவர்கள் உயிருடன் திரும்ப வேண்டுமென் வேண்டி. அந்த முருகன் கோவிலில் தினசரி அர்ச்சனைகள் நடந்தன. சாத்திரங்கள் கேட்கப்பட்டன. 

இலங்கையில் தென் எல்லையில். நான்கு சுவர்களுக்கு நடுவே அவர்கள் உயிருடன் இருப்பதாக சாத்திரி கூறினான்! 

நாட்கள் நகர்ந்தன… சுபதீசனின் குடும்பத்தில் வறுமையும் துயரமும் நங்கூரமிட்டு நின்றன. இவ்வளவு துன்பத்துள்ளும் நல்லம்மா சுபதீசனைப் படிப்பிக்கவே விரும்பினான். தன்னால் படிப்பிக்க முடியும் என்று நம்பினாள். 

கண்ணீரும் கம்பலையுமாக நகர்ந்து கொண்டிருக்கும் தங்கள் வாழ்க்கையை உணர்ந்து கொண்ட சுபதீசன் படிப்பை நிறுத்திக் கொண்டு ஏதாவது கூலி வேலைக்குச் செல்லலாமென எண்ணினான். தனது முடிவு தனது தாயின் மனதைப் பாதித்து மேலும் துன்பத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்து கொண்டு தனது படிப்பைத் தொடர்ந்தான். 

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொதுநல நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுபதீசனின் குடும்பத்தை அணுகினர் “… மனிதனை மனிதன் ஆளக் கூடாது, அதற்குப் பதிலாக அவனை வாழ வைக்க வேண்டும்! மனிதனை ஆளும் உரிமை இறைவனுக்குத் தான் உண்டு” என அவர்கள் போதித்தனர்… 

எரிகின்ற வயிற்றுக்குடலுக்கு நீர் ஊற்றினர்… கொட்டில் வீட்டைத் திருத்தி சீற் போட்டுக் கொடுத்தனர்…, நல்லம்மாவுக்கு தொழில் வசதி காட்டினர்… சுபதீசனின் படிப்புக்கு உதவினர்… நல்லம்மா அவர்களை நம்பினாள். 

அந்தப் புதியவர்களின் கைகளில் பைபிள் புத்தகங்கள் இருந்தன… 

சுபதீசன் எந்த மறுப்பும் கூறாமல் நல்லம்மாவைப் பின் தொடர்ந்தான்…! 

சுபதீசனை அவனது வகுப்பு மாணவர்கள் நக்கலடித்தனர்… அவனுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தத்துவ விளக்கங்கள் செய்தனர்… ஊரவர்கள் மதத்துரோகிகள் என்றனர்… 

சுபதீசன் தனக்குள்ளேயே அழுது கொண்டான். 

சுபதீசனின் தகப்பனான பசுபதி காணாமல் போன போது தகப்பனை இழந்த விரக்தியில், சுபதீசன் வகுப்பில் ஒதுங்கியிருந்தான்… இப்போது சுபதீசனிடமேற்பட்ட மத மாற்றத்தினால் பாடசாலைச் சமூகமே அவனை ஓரக்கண்ணால் பார்த்தது. 

பட்டினிப் போராட்டம் நடத்திய ஒரு ஏழை அப்பாவிக் கிராமவாசியான பசுபதி காணாமல் போனான்… முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைத்த அப்பட்டமான இந்தச் சம்பவத்தைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை… இப்போது…? 

கொதித்த வயிற்றுக்கு நீர் ஊற்றியவனை அவன் நம்பினான். செஞ்சோற்றுக்கு கடனுக்காக அவன் மதம் மாறினான்… 

றொக்சன் மாஸ்ரர் மட்டும் சுபதீசனை அனுதாபத்தோடு பார்த்தார்… மரத்துப்போன மனதில் ஊரவர்களின் பேச்சுக்கள் எந்தத்தாக்கங்களையும் ஏற்படுத்தவில்லை. சுபதீசன் வழமை போல வகுப்புக்கு வந்து போனான். 

அன்றும் வழமை போல விஞ்ஞான வகுப்பு நடந்து கொண்டிருந்தது. சுபதீசன் பின் வரிசையில் அமர்ந்திருந்தான். இன்றைய வகுப்பில் மூளையின் இயக்கம் பற்றிய நுணுக்கச் செயற்பாடுகள் பற்றி றொக்சன் மாஸ்ரர் விளங்கிக் கொண்டிருந்தார். 

பலவகையான மனிதர்களின் மூளை அமைப்புக்களைச் சித்திரிக்கும் படங்களையும், மிருக வகைகளின் மூளை அமைப்புக்களைச் சித்திரிக்கும் படங்களையும் மாணவர்களின் பார்வைக்கு றொக்சன் மாஸ்ரர் கொடுத்திருந்தார். 

வகுப்பு கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 

மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்காக இன்று றொக்சன் மாஸ்ரர் மூளையோடு தொடர்புபட்டதொரு புதிர்க் கேள்வியையும் தயாரித்து வைத்திருந்தார். 

பாடம் முடிய இன்னும் சில நிமிடங்கள் இருந்தன.றொக்சன் மாஸ்ரர் பாடத்தை முடித்துக் கொண்டு தனது கேள்வியை வெளியிட ஆரம்பித்தார். 

“…நான் உங்களுக்கெண்டு ஒரு கேள்வி தயாரித்து வைச்சிருக்கிறன்… அந்தக் கேள்விக்கு நீங்கள் எல்லோரும் நிதானமாக யோசிச்சுப் பதில் சொல்ல வேணும்…” மாணவர்கள் வழமை போல றொக்சன் மாஸ்ரரின் கேள்விகளை உள் வாங்குவதற்குத் தயாரானார்கள். 

“சொல்லுங்கோ சேர்…” வகுப்புமொனிற்றர் குயின்ரன் முன்னணிணில் நின்றான், மயிரைப் பிளந்து இரண்டாக்கும் புத்திக் கூர்மையுள்ளவன் குயின்ரன். 

“சேர் என்ன கேள்வியெண்டாலும் நான் பதில் சொல்றன்…” குயின்ரனை அடுத்திருந்த பால்ராஜ் குரல் கொடுத்தான். பால்ராஜ் லேசுப்பட்டவனில்லை! 

“…சேர்… கெதியாய் கேள்வியைச் சொல்லுங்கோ” லியோ துரிதப்படுத்தினான். 

சுபதீசன் எதுவும் பேசவில்லை! 

றோக்சன் மாஸ்ரர் கேள்வியைக் கூறினார். 

“… உங்களுக்கு முன்னால் சகல விதமான மனிதர்களின் மூளைகளும், சகல விதமான மிருகங்களின் மூளைகளும் சகல விதமான பறவைகளின் மூளைகளும் வைக்கப்பட்டடிருக்கின்றன. இந்த மூளைகளுள் நீங்கள் விரும்பும் ஒரு மூளையைத் தெரிவு செய்யும் படி கேட்டால், நீங்கள் எந்த மூளையைத் தெரிவு செய்வீர்கள்…” றொக்சன் மாஸ்ரர் கேள்வியைத் கூறி முடிக்கிறார். 

வகுப்பில் பெரும் அமைதி… மாணவர்களைச் சிந்திக்கவிட்டு அவர்களின் உளவியல் வெளிப்பாடுகளை றொக்சன் அவதானிக்கிறார். 

புருவமயிர்கள் மயர்க்கொட்டி போல் நெளிய… கண் முழிகளைப் புரட்டிக் கொண்டு… மாணவர்கள் சிந்திக்கின்றனர். 

“…சேர் நான் என்ஜினியர் மூளையை எடுப்பன்…” முதலாவது மாணவனாக குயின்ரன் கூறுகிறான். 

“… சேர் நான் டாக்டர் மூளையை எடுப்பன்…” அடுத்து பால்ராஜ் பதில் கூறுகிறான். 

“… நான் மந்திரியின் மூளையை எடுப்பன்.” லியோ இப்படிக் கூறுகிறான்.. 

வரிசையாக மாணவர்கள் பதில் கூறுகின்றனர். ஆனால் சுபதீசன் மட்டும் எந்தப் பதிலும் கூறாமல் மெளனமாக இருக்கிறான். சுபதீசனின் மெளனத்தை றொக்சன் மாஸ்ரர் அவதானிக்காமலில்லை. சுபதீசனைப் பற்றி றொக்சன் மாஸ்ரர் புரிந்து வைத்திருந்ததால், அவனை வற்புறுத்தவும் அவர் விரும்பவில்லை! 

வகுப்பு முடிகிறது… மாணவர்கள் எழுந்து வரிசையாக வெளியேறுகின்றனர்… சுபதீசனும் எழுந்து வருகிறான். 

“வாங்கோ சுபதீசன்… நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் மட்டும் தான் பதில் சொல்லவில்லை…” எந்தக் கண்டிப்பும் இன்றி சர்வதாதாரண நிலையிலேயே றொக்சன் மாஸ்ரர் கேட்கிறார். 

சுபதீசன் மௌனமாக றொக்சன் மாஸ்ரனைப் பார்க்கிறான்… வெந்து வெடித்த பார்வை… வேதனையில் அவனது நாடி முனையிலுள்ள சதை துடிக்கிறது. 

“சேர்… நான் மனிசனாக வாழந்தால் தானே… எனக்கு மனிச மூளை தேவைப்படும். கண்டதையும் திண்டு… கண்ட இடத்திலை படுத்து… கண்டவையிட்ெைடயல்லாம் பேச்சும், அடியும் வாங்கி… நாயைப் போல வாழ்ற எனக்கு… மனிச மூளையை விட… நாய் மூளைதான் பொருத்தம்…” சுபதீசன் கூறுகிறான். அவனது கண்களின் கீழ் இமைப்புருவத்தில் கண்ணீர் தேங்கி… தளம்புகின்றது… 

றொக்சன் மாஸ்ரரின் உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போன்ற விறைப்பு… அவர் எதையோ கூறி விட முயற்சிக்கிறார்… அவரது வாய்க்குகைக்கள் அவரது நாக்குச் செயலிழந்து துடிக்கிறது! சுபதீசன் அங்கிருந்து புறப்படுகின்றான். 

– ஓலை, ஐப்பசி 2009.

– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *