நான் தோற்றுவிட்டேன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 416 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மரண வீடு அமைதியாக இல்லை. ஒரே கலகலப்பு விட்டு விட்டுப் பறை முழங்குகிறது. அதிர் வெடிகள் காதுப் பறையை உடைக்கின்றன. வீட்டு வளவுக்குள்ளும் வெயிலிலும் கூட்டங் கூட்டமாக மக்கள் பலர் வாயில் வெற்றிலைகள் சமாதி அடைந்து சாறுபறிக்கின்றன. சிலர் வாயில் சுருட்டுக்கள் பொருந்திப் புகைபோக்குகின்றன. எவர் முகத்திலும் மரணத்தின் அமைதியில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் தத்தம் பிரச்சினைகள் அரசியல் பொருளாதாரம், சமூகம், குடும்பம் இவற்றை அடக்கிய சர்ச்சைகள் வெயில் வேறு கொளுத்திக் கரிக்கிறது.

நான் மெல்ல நடந்து சென்று, பழைய செருப்பைக் கழற்றிக் கொண்டு குடையைச் சுருக்கி படிமீது வைத்து மர நிழலில் அமருகிறேன். களைக்கிறது. நடந்த களைப்பு, வியர்த்துக் கொட்டுகிறது. சால்வைத் தலைப்பால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொள்ளுகிறேன். யாரோ ஒரு சிறுவன் என் முன்னால் வெற்றிலை தட்டைக் கொண்டு வந்து வைக்கிறான். பலர் என்னைப் பார்த்து மெல்லச் சிரித்து மரியாதையாகத் தலையசைக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் என்னுடைய மாணவர்கள். அவர்கள் எல்லோருக்கும் என் பதிலைத் தெரிவிக்கிறேன். அந்தச் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல கிராமங்களையும் சேர்ந்த அவர்களைக் காணும் போது என் உள்ளம் பூரிக்கிறது.

இறந்த பெண்ணின் மகன் என்னைக் கண்டு கொள்கிறான். சோகம் தோய்ந்த அவனைக் காணும் போது நானும் வேதனையில் துடிக்கிறேன். அவன் என்னுடைய மாணவன். அவன் மேல் என்றுமே எனக்கு தனியான வாஞ்சை. மிக விவேகி. நல்லபிள்ளை அவனுடைய திறமைக்கு அவன் ஓர் ஆசிரியனாக மட்டும் வந்திருக்க வேண்டியவனல்ல. அதற்கு மேல் உயர்ந்த ஒரு ஸ்தானத்தை பெற வேண்டியவன். அவன் குடும்ப நிலை அதற்கு வாய்ப்பாக இல்லை. என்றாலும் அவனை அதற்கு மேல் கொண்டு போக முடியவில்லை.

நான் ஆசிரியனாக இருந்த காலம் வேறு இந்தக் காலம் வேறு. இன்று படித்துவிட்டு உத்தியோகம் இல்லாதிருப்பவர்கள் வேறு தொழில் கிடைக்காத காரணத்தால் ஆசிரியராகிறார்கள். இன்று ஆசிரியத் தொழில்தான் நடக்கிறது. எங்கள் காலத்தில் ஆசிரியப்பணி செய்தோம். எங்களுக்கு அந்தக்காலத்தில் பிள்ளை பிடிகாரர்” என்று பெயர். பிள்ளைகளைத் தேடி கிராமம் கிராமமாக வீடு வீடாக அலைந்தோம். எங்கள் சராசரியை பெருக்கி, தொழிலை ஸ்திரப்படுத்திக் கொள்ளத்தான் என்று பலர் கருதினார்கள். ஆனால் என் மனநிலை அப்படி இருக்கவில்லை. என் முன்னோரும் வாத்தி தொழில் பார்த்தா வாழ்ந்தார்கள் ! இந்தத் தொழில் இல்லாது போனால் மண்ணைக் கிண்டப் புறப்பட்டிருப்பேன். அதற்கேற்ற உடல் வலிமையும் எனக்கிருந்தது.

ஏதோ என் தந்தையின் நாட்டத்தால் கல்வி பெற்று என் மூன்றாவது கண்ணும் திறந்து கொண்டது. கண்களை அகலத் திறந்த பார்த்தேன். எங்கும் இருள். மக்கள் எல்லாம் இருளில் அழுந்தி இடர்பட்டுக்கொண்டிருந்தார்கள். அன்று செய்து கொண்டேன் திடசங்கற்பம்.

பிள்ளைகளுக்கு கல்வி ஒளியை ஊட்ட வேண்டுமென்ற அறிவில்லாத பெற்றோர்களை அணுகுகிறேன். எனக்காக வேண்டி அவர்கள் பிள்ளைகளை பள்ளிக்கனுப்பப் பரிந்தழைத்தேன். இதனால் நான் இழந்த கைப்பொருள் ஏராளம். புத்தகங்கள் உடு புடவைகள் என் செலவில் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்தேன். இதனால் நான் இன்று கடன்காரன். ஆனால் எனக்கொரு தனியான ஆத்ம திருப்தி உண்டு. நான் ஏற்றி வைத்த சிறு தீபங்கள் பல இன்று இந்த நாட்டில் பல் வேறு இடங்களில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன.

இந்தத் தீபங்களில் ஒன்றுதான் அவன். இறந்த பெண்ணின் மகன் துரைசிங்கம்.

அவன் நேராக என்னிடத்தில் எழுந்து வருகிறான்.

“வணக்கம் வாத்தியார்….”

கரம் கூப்பி வணங்குகிறான். கண்கள் துன்பத்தைச் சொரிகின்றன.

என் நடுங்கும் கரங்களால் வாஞ்சையோடு அவன் முதுகைத் தடவிக் கொடுக்கிறேன். இலகுவில் என் வாயைத் திறக்க இயலவில்லை. என் பிள்ளை கண்ணீர் சொரிகின்றான். எப்படி என் வாய் பேசும் ! இதயந்தான் பேசியது.

சிரமத்தினுாடே சில ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவனை அனுப்பி வைக்கிறேன். ஆசுவாசம் தீர வேதனை மூச்சை வெளியிட்டுக் கொண்டு, என்னிடங் கற்ற அந்தக் கிராமத்துப் பையன்களைத் தேடுகிறேன்.

எனக்கு அந்தக் கிராமத்தின் மேல் மிகவும் இறுக்கமான… நாட்டம் இருந்தது. அந்தப் பகுதியில் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழ்ந்த கிராமம் அது. அவர்கள் இப்படியே இருந்து விடக் கூடாதென்பது என் வேட்கை. அவர்களால் அவர்களுக்கு மட்டுமல்ல இந்தச் சமூகத்துக்கே ஏன் இந்த நாட்டுக்கே பெரு நஷ்டம். அவர்கள் மத்தியில் கற்றவர்கள் என்று சொல்ல மருந்துக்குத்தானும் ஒருவர் இருக்கவில்லை. என்றுமே சண்டையும் சச்சரவுமாகச் சுகாதாரமற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

ஆனால் உழைப்பிலே குறைந்தவர்கள் அல்ல. நல்ல உடல் உழைப்பாளிகள்தான் ஆனால் உழைப்பைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாது. குடித்துச் சீரழிந்தார்கள்.

அவர்களை இந்தத் துயரிலிருந்து மீட்கவேண்டுமென்பது என் அந்தரங்க ஆசை. அவர்கள் மத்தியில் சென்று பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்றேன். தினமும் அதிகாலையில் வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை பாடசாலைக்கு தயார் செய்து கூட்டிச் சென்றேன். அவர்களின் குறை நிறைகளைப் பெற்றவர்கள் மத்தியில் சென்று அறிந்து முடிந்தவரை தீர்த்து வைக்கப் பிராயாசைப்பட்டேன்.

அன்று எனக்கிருந்த எண்ணம் கல்வி அறிவூட்டினால் இந்தச் சமூகங்கள் திருந்தி வருமென்பதுதான். அறியாமையினால் தான் மக்கள் திருந்தாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.

அந்தக் கிராமத்தில் துரைசிங்கமும் இன்னும் இரண்டு மூன்று பேரும் இன்று அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அக்கிராமங்களில் திருமணம் செய்து குடியும் குடித்தனமுமாக வாழ்கிறார்கள்.

அந்தக் கிராமத்துப் பல பையன்கள் ஏழு, எட்டாம் வகுப்புரை படித்துவிட்டு தங்கள் குலத் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நான் இந்தக் கிராமத்துக்கு வந்திருக்கிறேன். ஒன்று இரண்டு ஓட்டு வீடுகளைத் தவிர பெரிதாக ஒரு மாற்றமும் இல்லை. பழைய மனிதர்கள் அதே குடிவெறியும் குதர்க்கமும் குத்து வெட்டுப் பேச்சும்தான் சிலர் எனக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.

‘வாத்தி இரும் வாறன்’

பழைய அகங்காரம் அந்த நாட்களில் எங்கடை பிள்ளையாலேதானே இவர் சம்பளம் எடுக்கிறார்.’ என்ற அகம்பாவம். இன்று எங்கடை பிள்ளையளாலேதான் இவர் சம்பளம் எடுத்து வாழ்ந்தவர்’ என்ற அகம்பாவம். போலும் ! பாவம் ! நான் சம்பளம் பெறுவதற்காகத்தான் இவர்கள் பிள்ளையைப் பெறும் திருத்தொண்டைப் புரிந்தார்கள் போலும் ! எனக்கு இவர்கள் புதியவர்களல்லர்! என்னிடம் கற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதில்தான் ஆவலாக இருக்கிறேன்.

பேச்சுக்குரல் ஒன்று கேட்கிறது. எனக்குப் பழகிய குரல் போலவும் தோன்றுகிறது. செவியைக் கொடுக்கிறேன்.

“டேய்……. மச்சான் இதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது. இண்டைக்கு உன்ரை கோச்சி செத்துப்போனா! நாளைக்கு என்ரை ஆச்சி. பிறந்தால் இறக்கத்தானே வேணும். ஏன் இப்ப இதிலே நிற்கிறன். பின்னேரம் போற வழியில் விழுந்து சாகிறனோ என்னவோ ! ஆர் கண்டது ! நான் சாகிறத்துக்கு எப்பவும் தயார். எனக்கிந்த உலகத்தில என்ன கிடக்கு. இந்தச் சின்ன வயதுக்கை அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிச்சுப் போட்டன் எனக்கென்ன மயிரே!

உத்தியோகம் பாக்கிறவைதான் மயிர் நரைச்சாப்போல கலியாணம் முடிக்கிறவை. நான் நாலு பிள்ளையும் தேப்பனுமாயிட்டன். இனிமேல் எனக்கென்ன கிடக்கே ! நான் ஒருவனுக்கும் பயப்பிட மாட்டன். எவன் என்னை நீ எண்டு சொல்லுறானோ அவன்ரை தரம் கீழே விழும். நாங்களென்ன உத்தியோகம் பார்க்கிறமே…. என்ரை வாயில மண் விழுந்து போகுமெண்டு பயப்பிட – எவனுக்கும் கை கட்டி நிற்க பொலிசென்ன…. ஒரு என்னை மசுத்தேலாது’

எனக்கு ஆவல் மேலிடுகிறது. யார் இப்படி பேசுபவன் என்று நோக்குகிறேன். அவன் என்னிடம் படித்த முருகுப்பிள்ளை தோல்வி ! படுதோல்வி. என் வாழ்வில் நான் கொண்டிருந்த லட்சியம் அடிபட்டுக் குற்றுயிராகக் கிடந்து துடிதுடிக்கிறது.

இதற்குள் துரைசிங்கம் நான் இருப்பதைச் சாடையாகக் காட்டியிருக்கிறான். முருகுப்பிள்ளை என்னைத் திருப்பிப் பார்த்துவிட்டுத் தள்ளாடித் தளம்பிய வண்ணம் துரைசிங்கத்துக்கருகே இருந்து மௌனமாக சுருட்டைப் புகைக்கத் தொடங்கினான்.

அவன் மெளனம் குருவுக்கு – எனக்குச் செலுத்தும் மரியாதையா?

ஆமாம், மரியாதைதான். இந்த நிலையிலும் அவன் எனக்கு மரியாதை செலுத்துகிறான். அப்படியானால் நான் தோற்றுவிட்டேனா !

ஆமாம், தோற்றுத்தான் விட்டேன்.

அவன் எனக்குச் செய்யும் மரியாதை மட்டுமல்ல. நான் பெறும் வெற்றி அதற்கு மேல் ஒன்றை எதிர்பார்த்தேன். அவனுடைய திருந்திய வாழ்வை – அந்தச் சமூகத்தின் திருந்திய வாழ்வை அந்த வெற்றிக் கம்பத்தை என்னால் ஏன் பெற முடியவில்லை. நான் செய்த தவறென்ன ! சிந்திக்கிறேன்… சிந்திக்கிறேன்.

தவறு என்னிடத்தில்தான் இருக்கிறது. என்னுடைய தெளிவற்ற மயக்கமான எண்ணந்தான் என் தோல்விக்குக் காரணம். வெறும் ஏட்டுக் கல்வியினால் மட்டும் ஒருவனையோ திருத்திவிட இயலாது. ஏட்டுக்கல்வி அவனுடைய சமூகச் சூழலில் அமிழ்ந்து போகிறது. ஏட்டுக் கல்வியோடு தன்னைத்தான் உணருகின்ற சமூக உணர்வையும் ஊட்ட வேண்டும். சுயசிந்தனைத் தெளிவைக் கோடிகாட்ட வேண்டும். தனக்கு மட்டுமல்ல சமூகத்துக்காகவும் வாழ வேண்டுமென்ற நாகரீகப் பண்பையும் புகட்ட வேண்டும்.

தன்னை உணர்ந்து சமூகத்தையும் உணர்ந்து, தனக்காகவும் சமூகத்துக்காகவும் வாழ்கின்ற வாழ்வே வாழ்வென்பதைக் கல்வி அறிவு பள்ளியிலேயே தெளிவுபடுத்திவிடவேண்டும் ! சமூகப் பிரக்ஞையோடு கலந்து ஊட்டப்பட வேண்டும்.

இந்த உணர்வில்லாத உத்தியோக மனிதர்களுக்கும் முருகுப்பிள்ளைக்கும் எந்தவித வேற்றுமையுமில்லை.

இதனை இன்றுதான் நான் உணர்கிறேன். காலங் கடந்த யதார்த்த உணர்வு, இதனைச் சாதனைப்படுத்த இனிமேல் எனக்கு இயலாது. நான் இளைப்பாறிய ஆசிரியன்.

ஆனால் இன்றைய ஆசிரிய உலகமாவது இதனை உணரட்டும் உணரத் தவறினால் அவர்களும் என்னைப் போல் தோற்றுத்தான் போவார்கள்.

நான் என் பழைய செருப்பைக் காலில் கொளுவிக் கொண்டு வெயிலில் நடக்கிறேன். நீண்ட துாரம் நடந்துவிட்டேன். என் குடையை விரிக்கவில்லையென்பது பின்னர்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஆயினும் நடக்கிறேன்.

தெணியான்

நாடறிந்த படைப்பாளிகளில் ஒருவரான தெணியானின் ‘பரம்பரை அகதிகள்’ ஈழநாடு வெளியிட்ட நாவல்களில் குறிப்பிடத்தக்கது. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இலக்கியம் படைக்கும் தெணியான், ஈழநாடு இதழ்களில் ‘செத்த வீடு, சரணம் தாயே, அவனுள் அவள், நான் தோற்றுவிட்டேன்’ ஆகிய சிறுகதைகளை எழுதியுள்ளார். சாதியம், வாக்கியம் ஆகிய உணர்வுகள் இச்சிறுகதைகளில் மிக்கு நிற்கின்றன. குடும்ப உறவுகளை மென்மையான இறுக்கத்துடன் பிணைத்து எழுதுவதில் அவர் வல்லவர். ‘நான் தோற்று விட்டேன்’ என்ற சிறுகதை மூலம் தெணியான் குறிப்பிடும் ஆசிரிய உலகம் சிந்திக்க வைக்கிறது.

– 30.06.1971, ஈழநாடு.

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *