நான்கு முட்டாள்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 3,664 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பண்டாரப்பட்டி என்பது ஒரு கிராமம். அந்த கிரா மத்தில் மட்டிசாமி, மண்டுசாமி, மக்குசாமி, மடச்சாமி என்ற நான்கு பேர் இருந்தனர். இந்த நான்கு பேர்களுக்கும் அப்பா அம்மா கிடையாது. வீடு கிடையாது, விலாசம் கிடையாது. ஆனாலும் இந்த நான்கு பேர்களைப் பற்றி தெரியாதவர்கள் அந்தக் கிராமத்தில் ஒருவர் கூட கிடையாது. இவர்கள் பெயர் களைச் சொன்னாலே பிறந்த குழந்தைகூட பொக்கை வாயைத் திறந்து ‘பொலக் கென்று சிரிக்கும். அவ்வளவு ‘பிரசித்தி’ அவர்கள். 

அதாவது முட்டாள் தனத்தில் இவர்கள் உலகப் பிரசித்தி ! இவர்களை சாதாரண முட்டாள் ரகத்தில் சேர்த்தால் நம்மீது கோபிப்பார்கள். ‘வடிகட்டிய முட்டாள்கள்’ என்று சொன்னால்தான் மகிழ்ச்சியடைவார்கள். 

இந்த நான்கு பேர்களும் எங்கே போனாலும் சேர்ந்தே போவார்கள். சேர்ந்தே வேலை செய்வார்கள். சேர்ந்தே சாப்பிடுவார்கள். சேர்ந்தே உறங்குவார்கள். 

எல்லா காரியத்திலும் பெரிய சூரர்கள்போல முன்னுக்கு நிற்பார்கள். ஆனால் ஒவ்வொரு காரியத்தையும் முட்டாள்தன மாக செய்து பேந்த பேந்த விழிப்பார்கள். 

இவர்களைக் கண்டாலே அந்தச் கிராமத்தில் உள்ள சிறுவர் களுக்கு ஒரே கொண்டாட்டம். வித்தை காட்டும் குரங்கைப் பார்க்க கூட்டம் கூடுவதுபோல, இவர்களைச் சுற்றி கூட்டம் கூடிவிடுவார்கள். இவர்கள் தங்களை வேடிக்கைப் பார்க்கத் தான் கூடுகிறார்கள் என்பது இந்த முட்டாள்களுக்கு தெரியாது. ‘ஊரில் பெரிய மனிதர்கள்’ என்பதால் கூடுகிறார். கள் என்று நினைத்துக்கொண்டு நால்வரும் கிராமத்து பொட்டல் வெளிகளில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ராஜாடை போடு வதை பார்க்கவேண்டுமே! இப்படி நடக்கும்போது சில சமயங் களில் கல்லு தட்டி விழுந்து விடுவதும் உண்டு. 

ஒரு நாள் இவர்கள் அந்த கிராமத்தை விட்டு வேறு கிரா மத்துக்கு போகவேன்டியதாயிற்று. இவர்களுடைய முட்டாள் த்னத்தால், இவர்களுக்கு யாரும் வேலை தர முன்வராததுதான் காரணம். 

ஆகவே, இந்த நால்வரும் அடுத்த கிராமத்தை அடைந் தார்கள். அங்கே வேலை கேட்டு ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினார்கள். யாரும் வேலை தரவில்லை. பசி வேறு அவர்கள் காதுகளை அடைக்க ஆரம்பித்தது. 

கடைசியாக நால்வரும் ஒரு வீட்டிற்கு சென்றனர். அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு பெரியவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். அவரிடம் நால்வரும் வேலை கேட்டார்கள்! அவரும் முதலில் வேலை எதுவும் இல்லை என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் இந்த நால்வரும் விடவில்லை. 

“வேலை தராவிட்டால், மயக்கத்தில் இங்கேயே விழுந்து செத்துவிடுவோம்” என்று மிரட்டினான் மட்டிசாமி! மற்ற மூவரும் “ஆமாம் ஆமாம்” என்று கோயில் மாடுகள் போல தலையை ஆட்டினர். 

அதன்பின் வேலை தர ஒப்புக்கொண்டார். அதற்கு முன் னால் எல்லோருக்கும் ஆளுக்கொரு மண் சட்டியில் கஞ்சியை ஊற்றிக் கொடுத்தார். நால்வரும் மூக்குமுட்ட சாப்பிட்டனர். 

அடுத்த நிமிடம் ‘பெரியவரே வேலை கொடுங்கள். என்ன செய்யவேண்டும்” என்று நால்வரும் சண்டைக்கு நிற்பதுபோல தொடையைத் தட்டிக்கொண்டு நின்றனர். 

வேலை செய்வதற்கு அவர்கள் காட்டிய உற்சாகத்தைப் பார்த்ததும் பெரியவருக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட் டது. “சரி, என்னுடன் வாருங்கள்” என்று அவர்களை கொல்லைப்புறம் பக்கமாக இட்டுச் சென்றார். 

அங்கே ஒரு இடத்தைக் காட்டி, “இந்த இடத்தில் ஒரு பெரிய குழி எடுக்கவேண்டும்” என்றார். அவர்கள் கைகளில் ஆளுக்கொரு மண்வெட்டியையும் கொடுத்தார். 

நான்கு பேர்களும் மளமள வென்று குழியை வெட்ட ஆரம்பித்தனர். வேலையை மேற்பார்வை பார்த்தவாறு பெரியவர் ஒரு கட்டிலில் அமர்ந்திருந்தார். 

வெட்டப்பட்ட மண் குழியைத் சுற்றி நான்கு புறமும் குவிய ஆரம்பிக்கவே, நின்று வெட்ட வசதியில்லாமல் தவித்தனர். 

நின்ற இடத்திலேயே நால்வரும் உட்கார்ந்துவிட்டனர். எப்படி மண்ணை அப்புறப்படுத்துவது என்று யோசிக்க ஆரம் பித்தனர். 

திடீரென்று துள்ளிக் குதித்த மண்டுசாமி, “ஆஹா, இப்படிச் செய்தால் என்ன?” என்று கூவினான். 

“எப்படி!” என்று மீதி மூவரும் ஒரே குரலாய் கூவினர். 

“இன்னொரு குழியை வெட்டி இந்த மண்ணை போட்டு விட்டால் போச்சு” என்றான். 

மக்குசாமிக்கு கோபம் குதித்துக் கொண்டு வந்தது. 

“போடா மண்டு, நமக்கு கொடுத்த வேலை ஒரு குழி தோண்டுவதற்குத்தான். இன்னொரு குழி வெட்டினால் யார் கூலி தரப்போறா” என்று மகா புத்திசாலிபோல கேட்டான் மக்கு. 

அப்படியானால் என்னதான் செய்றது?” என்று மூவரும் கவலையுடன் கேட்டனர். 

“அது ஒன்றும் பெரிய காரியமில்லை” என்று தொண்டையை கனைத்துக்கொண்ட மக்குசாமி “பேசாமல் இந்தக் குழியிலேயே மண்ணைத் தள்ளிவிடுவோம்” என்றான், கம்பீரமாக தலையை நிமிர்த்தியபடி. 

“ஆஹா…ஆஹா…… இந்த யோசனை நமக்கில்லாமல் போச்சே” என்று சொல்லிக்கொண்டே, மளமளவென்று மண்ணை வெட்டி குழியில் போட ஆரம்பித்தனர். 

இவ்வளவு நேரமும் அங்கே நடந்த கூத்துக்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வீட்டுக்கார பெரியவருக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. 

“அட மடச் சாம்பிராணிகளா! குழியை வெட்ட சொன்னால், வெட்டிய குழியை மூடுகிறீர்களே! இனிமேல் என்னைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது, குழியில் கொட்டிய மண்ணையெல்லாம் எடுங்கடா” என்று கத்தினார். 

இந்த கூச்சலால் வெடவெடவென்று நடுங்கிப் போன நால்வரும் மீண்டும் குழி எடுக்க ஆரம்பித்தனர். 

பெரியவர் கட்டிலில்போய் அமர்ந்து கொண்டார். 

திடீரென்று மடச்சாமிக்கு ரோஷம் வந்துவிட்டது. “பெரிசா கோபப்பட்டுட்டு போறாரே, நாமதான் முட்டாள் தனமா செய்துட்டோம். அவராவது மண்ணை எங்கே கொட்டு வது என்று சொல்லலாம் அல்லவா. இப்போதே நான் போய் கேட்டு வாரேன்” என்று பெரியவரை நோக்கி வேகமாக நடை போட்டான். 

“பெரியவரே, வெட்டிய மண்ணையெல்லாம் எங்கே கொட்டுவது என்று சொல்லுகிறீர்களா!” என்றான். 

கொல்லைப்புறத்தில் ஒரு மூலையில் தெரிந்த ஒரு குப்பை குவியலை சுட்டிக்காட்டி “அதன் மேல் போடுங்கள்” என்றார். 

நால்வரும் ஆளுக்கொரு கூடையில் மண்ணை நிரப்பிக் கொண்டு அவர் காட்டிய இடத்தில் கொண்டுபோய் கொட்டினர். 

மீண்டும் மண்ணை நிரப்பி குப்பைமேட்டை நோக்கி மண்டுசாமி சென்றபோது, “டேய், டேய் பெரியவரிடம் கேட்டுச்செய். அவரிடம் கேட்காமல் எந்த வேலையையும் யாரும் செய்யக் கூடாது” என்று எச்சரித்தான் மட்டிசாமி. 

மறுபடியும் ஒவ்வொருவராக செட்டியாரிடம் போய் கேட்டனர். “அங்கே போய் கொட்டுங்கடா” என்றார் எரிச்சலுடன். 

இப்படியே நான்கைந்து முறை தொடர்ந்து செட்டியாரிடம் போய் கேட்டு கேட்டு தொந்தரவு செய்யவே, அவருக்கு எரிச்சல் வந்துவிட்டது. 

மறுமுறை அவர்கள் வந்து “எங்கே போய் கொட்ட வேண் டும்” என்று கேட்டபோது “என் தலைமேலே கொட்டுங்கடா” என்று சொல்லி விட்டார். 

செட்டியார் இப்படிச் சொன்னதுதான் தாமதம். கால்வரும் கூடையில் உள்ள மண்ணை கையாலே அள்ளி அள்ளி மலர் தூவுவது போலே கூத்தாடி கூத்தாடி அவர் தலையில் தூவ ஆரம்பித்து விட்டனர். 

செட்டியாருக்கு வந்ததே ஆக்ரோஷம்! குபீரென்று எழுந்து பக்கத்தில் கிடந்த மரத்தடியை எடுத்து “அட மூளை கெட்ட பசங்களா! வேலை கொடுத்த என் தலையிலேயே மண்ணை அள்ளி போடுறீங்களே! நீங்க உருப்படுவீங்களா?” என்று திட்டிக் கொண்டே, நான்கு பேர் முதுகிலும் விளாசு விளாசு என்று விளாசி விட்டார். 

நான்கு முட்டாள்களும் “ஐயோ அம்மா, ஐயோ அப்பா” என்று அலறியடித்துக்கொண்டு ஓடினர். 

செட்டியார் தலையில் மண்ணை போட்ட விஷயம் அந்தக் கிராமம் பூராவும் பரவி விட்டது. ஆகவே இவர்களுக்கு யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை. 

ஆகவே அந்த கிராமத்தைவிட்டு வேறு கிராமத்திற்கு பயண மானார்கள். 

காட்டுவழியே போய்கொண்டிருந்த போது, ஒரு மரத்தடி யில் ஒரு மனிதன் இறந்து கிடந்தா தான். 

பட்டு வேஷ்டியுடனும் பளபளக்கும் சொக்காயுடனும் கிடந்த அந்த ஆசாமியைப் பார்த்து இந்த நால்வருக்கும் ஒரே கொண்டாட்டமாக போய்விட்டது. 

“டேய் இந்த ஆசாமி தூங்கி விழித்தவுடன் நமக்கெல்லாம் ஒரு வேலை கேட்கனும். தரமாட்டேன் என்றாலும் விடக் கூடாது” என்று கூறிக்கொண்டே மடச்சாமி அந்த பிணத்தின் அருகில் எல்லோரையும் உட்காரச் சொன்னான். எல்லோரும் பிணத்தின் தலைமாட்டில் அமர்ந்தனர். 

அரைநாள் கழிந்தது. அந்த ஆசாமி விழிக்கவில்லை. பிணம் எப்படி விழிக்கும். 

மண்டுசாமிக்கு பொறுக்க முடியவில்லை. “டேய் இவரை எழுப்பி வேலை கேட்கலாம்டா” என்றார். 

மண்டுசாமியை மக்குசாமி ஒரு முறைப்பு முறைத்தான்! ”டேய் கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா? நாளைக்கு இவர் தான் நமக்கு முதலாளி . முதலாளி தூக்கத்தை நாம் கலைக்கலா மாடா? அப்புறம் அவர் கோபப்பட்டா நமக்கு வேலை கிடைக் குமா?” 

மக்குசாமி சொன்னது எல்லோருக்கும் சரியெனப்பட்டது. ஆகவே கப்சிப்பென வாயைப் பொத்திக் கொண்டனர். 

இப்படியே ஒருநாள் கழிந்தது, இரண்டாம் நாளும் வந்தது. தண்ணீர் கூட அருந்தாமல் நால்வரும் பிணத்தைச் சுற்றி உட்கார்ந்தவாறே இருந்தனர். 

இதற்கிடையில் அந்தப் பிணம் நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த முட்டாள்களுக்கு இந்த நாற்றமும் தெரியவில்லை. 

அப்போது அந்த வழியாக ஒரு வழிப்போக்கன் வந்தான். இவர்கள் அருகில் வந்ததும், “ஏன் இப்படி செத்தவனைச் சுற்றி உட்கார்ந்து இருக்கிறீர்கள். செத்தவன் உங்கள் சொந்தக்காரனா?” என்று கேட்டான். 

“என்ன செத்தவனைச் சுற்றி உட்கார்திருக்கிறோமா, என்னப்பா உனக்கு பைத்தியம் கியித்தியம் பிடித்துவிட்டதா” என்று எழுந்தனர் நால்வரும். 

“பைத்தியம் எனக்கு பிடிக்கவில்லை. உங்க நாலு பேருக்கும் தான் பிடிச்சிருக்கு. இல்லையென்றால், இந்த பிணநாற்றம் கூட தெரியாம, இப்படி காத்துக் கிடப்பீர்களா?” என்றான் வழிப் போக்கன். 

அப்புறம்தான் நால்வரும் பிணத்தின் மீது மூக்கை வைத்து முகர்ந்து பார்த்தனர். மூக்கை சுளித்துக் கொண்டனர். 

“ச்சே இரண்டு நாளா இந்தப் பிணத்தையா காத்துக் கிடந்தோம்” என்று முகத்தை சுளித்தவாறு, எழுந்து பயணத்தைத் தொடர்ந்தனர். 

இரண்டு மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடாததால் அவர்களால் நடக்கவே முடியவில்லை. 

ஆகவே ஒருவருக்கொருவர் கைத்தாங்கலாக தோள் மீது கை போட்டுக்கொண்டு மெதுவாக மெதுவாக நடந்தனர். 

வேலையும் கிடைக்காமல். சோற்றுக்கும் வழியில்லாமல் இரண்டு மூன்று நாட்கள் கழிந்ததால் இவர்கள் பல் விளக்கவுமில்லை. குளிக்கவுமில்லை. ஆகவே நால்வர் உடம்பிலும் ஒருவித கெட்ட நாற்றம் அடித்தது. 

மட்டிசாமி மீது நாற்றம் அடிப்பதை மண்டுசாமி உணர்ந்தான். உடனே ‘ஓ வென்று உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டான். 

“என்ன என்ன” என்று மூவரும் மண்டுவை சூழ்ந்துகொண்டனர். 

“அட முட்டாள்களா! மட்டிசாமி செத்துட்டாண்டா! உங்களுக்கு இது தெரியவில்லையா?” என்று மீண்டும் அழுதான் மண்டு. மட்டிசாமி ஆந்தை போல விழிக்க, மற்ற இருவரும் “என்னடா உளர்ற. அவன் உயிரோடதானே இருக்கிறான்” என்றனர். 

“போங்கடா மடையன்களா! உயிருள்ள உடல் நாறுமடா!” என்றான். 

எல்லோரும் மட்டிசாமியை முகர்ந்து பார்த்தனர். “ஆமாண்டா மட்டிசாமி செத்துதான் போயிட்டான்” என்று மீதி இருவரும் குரல் எழுப்பினார்கள். அப்போது மட்டிசாமி அவர்கள் மூவரையும் முகர்ந்து பார்த்து விட்டு, “ஐயையோ நிங்களும் செத்து விட்டீர்கள். உங்கள் உடம்பும் நாறுது” என்று அலறினான். 

உடனே, ஒருவரையொருவர் முகர்ந்து பார்த்துக் கொண்டனர். மட்டிசாமி சொன்னது சரிதான். எல்லோர் உடம்பும் நாறியது. 

அதற்குமேல் அவர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை.”நாம் எல்லோரும் செத்துப் போயிட்டோம். செத்தவர்கள் நடக்கக் கூடாது. ஆகவே இங்கேயே கிடப்போம்” என்று மண்டு சொல்ல அனைவரும் ரோட்டிலேயே படுத்துவிட்டனர். 

சிறிது நேரம் கழித்து அப்பாதையில் ஒருவன் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். 

பாதையில் இவர்கள் படுத்துக் கிடப்பதைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி, “டேய் தடிப்பசங்களா, ரோட்டில் ஏண்டா கிடக்கிறீர்கள்?” என்று கத்தினான். 

நால்வரும் மூச்சு விடவில்லை. இரண்டு மூன்று முறை யும் யாரும் எழும்பாததால், வண்டியைவிட்டு கீழிறங்கி “டேய் தடிமாடுகளா! பாதையிலே ஏண்டாபடுத்திருக்கிறீர்கள்” என்று இரைந்து கத்தினான். 

‘தடிமாடு’ என்று சொன்னவுடன், மக்குசாமிக்கு ஆத்திரம் வந்துவிட்டது. 

“அட எருமைப்பயலே, பிணம் எங்கேயாவது நடக்குமாடா! உனக்கு அறிவிருக்கா?” என்று கோபமாக பேசிவிட்டு மீண்டும் படுத்துவிட்டான். 

வண்டிக்காரனுக்கு இவர்களின் முட்டாள்தனம் புரிந்து விட்டது. 

“அப்படியானால் நீங்கள் எல்லோரும் செத்துவிட்டீர்கள்! அப்படித்தானே!” என்றான். 

“ஆமாம் ஆமாம்” என்று நால்வரும் ஒரே குரலில் கோரஸ் போட்டனர். 

“சரி! இப்போ உங்க எல்லோருக்கும் உயிர் கொடுக்கப் போறேன். இப்போ நீங்களெல்லோரும் நடக்கமுடியாமல் இருக்கிறீர்கள். நான் உயிர் கொடுத்தபின் ஓடவே செய்வீர்கள். சரியா?” என்றான் வண்டிக்காரன். 

நான்கு பேர்களும் ஆச்சரியத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு “சரி…உயிர் கொடு பார்ப்போம்” என்றனர். 

அடுத்த நிமிடம் வண்டிக்காரன் மாடு விரட்டும் சவுக்கை எடுத்தான். நான்கு பேர் முதுகிலும் ”சுரீர் சுரீர்” என்று வைத்தான். 

சாட்டையின் அடி தாங்கமாட்டாமல் நால்வரும் “அடிச்சது போதும் ஐயோ ஐயோ உயிர் வந்துட்டு எங்களுக்கு உயிர் வந்துட்டு” என்று துள்ளி எழுந்து ஓட ஆரம்பித்தனர். 

வண்டிக்காரனுக்கு சிரிப்பு வந்தது. அவர்கள்மீது அவனுக்கு பரிதாபமாகவும் இருந்தது. 

சாட்டையை கீழே போட்டுவிட்டு அவர்களைக் கூப்பிட்டான் வண்டிக்காரன். 

“நண்பர்களே உங்களுக்கெல்லாம் இப்போ உயிர் வந்து விட்டது. ஆகவே உங்களுக்கு நான் கொஞ்சம் சோறு தருகிறேன். சாப்பிட்டு போங்கள்” என்று வண்டியில் வைத்திருந்த கட்டுச்சோற்று மூட்டையை அவிழ்த்து ஆளுக்கு கொஞ்சம் போட்டான். 

காய்ந்த மாடு கம்பியில் விழுந்தாற்போல விழுந்தடித்து சாப்பிட்டனர் நால்வரும். 

சாப்பிட்டதும் வண்டிக்காரனிடம் நால்வரும் “எங்களுக்கு ஒரு உதவி செய்யனும்” என்றனர். 

“என்ன உதவி” என்று கேட்ட வண்டிக்காரனிடம் “எங்களுக்கு உயிர் கொடுத்த அந்த மந்திரசாட்டையை கொடுக்க வேண்டும். எங்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எல்லோரும் திட்டுகிறார்கள். இந்த மந்திரசாட்டையைத் தந்தால் இதை வைத்தாவது நாங்கள் பிழைத்துக் கொள்வோம்” என்று பரிதாபமாகக் கேட்டான். 

வண்டிக்காரனுக்கு இந்த மடையர்களை நினைத்து உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. 

ஆனாலும் அடக்கிக்கொண்டு கொஞ்ச நேரம் சிந்திப்பது போல பாவனை செய்தான். பின் “சரி, பரவாயில்லை. நான் எப்படியாவது பிழைத்துக் கொள்கிறேன், நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்” என்று சொல்லி அந்த சாட்டையைக் கொடுத்தான், 

அதை வாங்கிக் கொண்டதும் நால்வருக்கும் ‘குஷி’ தாங்க முடியவில்லை. சாஷ்டாங்கமாக வண்டிக்காரன் காலில் விழுந்து வணங்கி விடைபெற்றனர். கூத்தும் கும்மாளமும் போட்டபடி பக்கத்து கிராமத்தை அடைந்தனர். 

ஊருக்குள் நுழையும்போது அந்தச் சாட்டையை மடச்சாமி பிடித்துக்கொண்டு போனான். 

மீதி மூவருக்கும் அதைப் பார்க்க பொறாமையாக இருந்தது. மூவரும் ‘குசுகுசு’ வென்று பேசிக்கொண்டனர். 

திடுதிப்பென்று மண்டுசாமி கேட்டுவிட்டான், ” டேய் மடச்சாமி, உன் மனசில் என்ன நினைச்சிட்டே. எல்லோரும் உன்னை மட்டும் மந்திரவாதி என்று கூப்பிடனும்னு நினைக்கிறாயா? இந்த மந்திரச்சாட்டை நால்வருக்கும் சொந்தம். ஆகவே இதை நான்குபேர்களும்தான் பிடித்துக்கொண்டு போகவேண்டும்” என்றான் ரோஷமாக. 

மடச்சாமி வெலவெலத்துப் போனான். கடைசியாக நான்கு பேர்களும் அந்த சாட்டையில் ஆளுக்கொரு கை போட்டு பிடித்துக் கொண்டு போனார்கள். 

ஒரு குச்சியை நான்கு பேர்களும் மிகக் கவனமாக பிடித்துக் கொண்டு போனதை பார்த்த கிராம மக்கள். கூட்டமாக அவர்களைப் பின்தொடர்ந்தனர். 

கூட்டத்தில் ஒருவன், “இந்தக் குச்சியில் அப்படி என்ன மந்திரம் இருக்கிறது. இப்படி எச்சரிக்கையுடன் தூக்கிப் போகிறீர்களே! என்றான். 

“அட அற்ப மானிடனே! இதைப் பார்த்தா குச்சி என்று சொன்னாய். இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் மந்திரச் சாட்டையடா! மடையா புரிகிறதா” என்று அலட்சியமாகக் கூறினான் மக்குசாமி. மூவரும் “ஆமாம் ஆமாம்” என்றனர். 

“உண்மையாகவா” என்று கூட்டத்தில் ஒருவன் வாயைப் பிளந்தான். 

”ஏன் சந்தேகமா! இப்போதே நீ செத்துப்போ. நாங்கள் பிழைக்க வைக்கிறோம் பார்” என்றனர். கூட்டத்தினர் கொல்லென்று சிரித்தனர். 

“சந்தேகப்படவில்லை. பக்கத்து தெருவில் ஒரு வாலிபப் பையன் இறந்துவிட்டான். அவனைக் காப்பாற்ற முடியுமா!” என்றான், வாயைப் பிளந்தவன். 

“மீண்டும் சந்தேகப்படுகிறாயே, அப்பனே முதலில் இடத் தைக் காட்டு” என்றான். மண்டுசாமி. 

கூட்டத்தினர் நால்வரையும் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒரே கூட்டமாக சோகமாக ஆண்கள் நின்றிருந்தனர். பெண்கள் மாரடித்து அழுதுகொண்டிருந்தனர். 

நான்கு முட்டாள்களையும் கூட்டிச் சென்றவர்களில் ஒருவன் முன்னே ஓடிச்சென்று, அந்த வீட்டுக்கார முதியவரிடம் போய், விபரத்தைச் சொன்னான். 

முதலில் இதை நம்பாதவர்போல அவர் விழித்தாலும், பின் ஒப்புக்கொண்டார். 

இறந்தவனின் சடலம் கிடத்தப்பட்டிருந்த இடத்திற்கு நால்வரும் அழைத்துச் செல்லப்பட்டனர். 

பெரிய மந்திரவாதிகள் போல நால்வரும் ஒருமுறை பிணத்தைச் சுற்றிவந்து பார்வையிட்டனர். ஜெபிப்பதுபோல கண்களை மூடி முணுமுணுத்தனர். கூட்டத்தினர் எல்லோரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு கதவை சாத்தினர். 

முதலில் மக்குசாமி சாட்டையைப் பிடித்தான். ஒரு சொடுக்கு சொடுக்கினான். பிணத்தின் மீது சாட்டையால் “பளீர் பளீர்” என்று நாலைந்து வைத்தான். பிணம் எழும்பவில்லை மீண்டும் அடித்தான். பயனில்லை. நால்வரும் மாறிமாறி அடித்தனர். பிணத்தைச் சுற்றியுள்ள ஆடைகள் கிழிந்து, பிணம் அலங்கோலமாக மாறியதுதான் மிச்சம். 

நீண்டநேரம் ஆனபடியால் வெளியில் இருந்தவர்கள் கதவைத் தட்டினர். சொன்னபடி பிணத்தை எழுப்பவில்லை. எப்படி கதவைத் திறப்பார்கள். 

கதவை உடைத்துவிட்டு உள்ளே நுழைந்துவிட்டனர். கட்டிலில் பிணம் ரத்தக்களறியாக சிதைந்து கிடக்க, சித்தப் பிரமை பிடித்தவர்களாக நான்கு சூரப்புலிகளும் அதைச் சுற்றி நிற்க, உள்ளே வந்து இந்த கண்றாவியைக் கண்ட எழவு வீட்டுக் காரர்களுக்கு கோபம் புயலாக கிளம்பியது. 

அடுத்த நிமிடம் நால்வரும் ரோட்டில் வந்து விழுந்தனர். அடி உதைபட்டு உடம்பெல்லாம் கொழுக்கட்டைகளாக காய்த்துவிட்டன. 

வீசியெறியப்பட்ட குப்பைகள்போல தெருவில் சிதறிக் கிடந்த இந்த நால்வரைப் பார்த்ததும், அவ்வழியே வந்த பெரிய மனிதர் ஒருவர் இரக்கப்பட்டு, “உங்களுக்கு ஏன் இந்த நிலை வந்தது” என்று கேட்டார். 

அவர்கள் நடந்த விபரத்தை கூறினர். 

அதற்குள் பெரிய மனிதர், “உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இறந்த வீட்டில் இப்படி நீங்கள் நடந்து கொண்டால யாருக்குத்தான் கோபம் வராது. பேசாமல் பிணத்தின் கட்டிலைச் சுற்றி உட்கார்ந்து ‘ஐயோ மகனே போய்விட்டாயே எங்களுக்கு இனி யார் கதி’ என்று ஒப்பாரி வைத்து அழுதாலாவது உங்களுக்கு சாப்பாடாவது போட்டு அனுப்பியிருப்பார்கள். இனியாவது புத்திசாலிகளாக நடங்கள்” என்ற அறிவுரை கூறி அகன்றார். 

அவர் சொன்னது அவர்களுக்கு சரியாகபட்டது. இனி அவ்விதமே செய்யவேண்டும் என்ற முடிவுடன் தட்டு தடுமாறி எழுந்து நடையைக் கட்டினர். 

அன்றைய சாப்பாட்டை நாலு இடத்தில் கையேந்தி முடித்துவிட்டனர். 

மறுநாள் மறுபடியும் ‘நகர்வலம்’ புறப்பட்டனர். 

ஒரு வீட்டு வாசலில் வாழைநட்டு தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. உள்ளே மேளச்சத்தம் கேட்டது. நைசாக நால்வரும் உள்ளே எட்டிப் பார்த்தனர். உள்ளே கூட்டமாக தடபுடலாக இருந்தது. கூட்டத்தின் நடுவே மேடையில் மணமகனும் அருகில் மணமகளும் அமர்ந்திருந்தனர். புரோகிதர் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார். 

நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மட்டிசாமி கூறினான், “நேற்று பெரியமனிதர் கூறிய அறிவுரைப் படி நடப்போம்.நம் இஷ்டத்திற்கு எதையாவது செய்து, அடி உதை வாங்க இனி நம்மாலே முடியாதப்பா’ என்றான். 

எல்லோரும் “அதுதான் சரி” என்றனர். 

நால்வரும் வேகமாக கூட்டத்தைக் கடந்து மணமேடை நோக்கி விரைந்தனர். 

இவர்கள் யார்? ஏன் இப்படி வேகமாக செல்கிறார்கள் என்பது எதுவுமே புரியாமல் கூட்டம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தது. 

விரைந்து சென்ற நால்வரும் மணமேடையைச்சுற்றி அமர்ந்தனர். இரண்டிரண்டு பேர்களாக கட்டிப்பிடித்துக் கொண்ட னர். 

“ஐயோ மகனே போய்விட்டாயே இனி எங்களுக்கு யார் கதி? ” என்று ஒப்பாரிவைத்து அழத்தொடங்கி விட்டனர். 

எதிர்பாராது நிகழ்ந்துவிட்ட இந்த அசம்பாவிதத்தில் முதலில் அங்குள்ளவர்களுக்கு ஒன்றுமே ஓடவில்லை. ஆனால் அடுத்த கணமே, பதறித் துடித்தவர்களாக எழுந்து நால்வரின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, “அட சனியன்களா? கல்யாண வீட்டுக்கும் எழவு வீட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?” என்று அடித்து விரட்டினர். சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமையல்காரர்கள் ஒருபக்கம் அகப்பை கரண்டிகளை தூக்கி வந்து ‘மொத்து மொத்தென்று’ மொத்தி விட்டனர். 

பாவம் நான்கு முட்டாள்கள்! இந்த ஜனங்களிடம் எப்படி நடந்தால் சோறு போடுவார்கள் என்பதுகூட தெரியாமல் மீண்டும் தெருவில் வந்து விழுந்தனர். 

“சந்தோஷமான நிகழ்ச்சிகளில் ஆடிப்பாடணும், துக்கமான நிகழ்ச்சிகளில் அழுதுவடியணும் இந்த முட்டாள் பசங்களுக்கு எதுவுமே புரியலை. ஆகவே நன்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்” என்று அவ்வழியே சென்ற ஒருவன் சொல்லி விட்டுப்போனான். 

இவர்கள் அதைக் கூர்ந்து கவனித்தனர். “அடடா இத்தனை நாளும் இது தெரியாமல் போய்விட்டதே” என்று நால்வரும் தங்கள் தலைகளிலேயே குட்டுப்போட்டுக் கொண்டனர். 

இனி புத்திசாலித்தனமாக நடந்தே தீருவது என்ற வைராக்கியத்துடன் நடந்தனர். 

ஒரு தெருமுனையில் ஒரு வீட்டுக்கு வெளியே நின்று புருஷனும் பெண்டாட்டியும் வாய்ச்சண்டைப் போட்டுக் கொண்டிருந் தனர். 

அவர்கள் ஒருவரை ஒருவர் மிகக்கேவலமாகப்பேசி சண்டை போட்டனர். பார்க்க அது வேடிக்கையாக இருந்ததால், கூட்டமாக மக்கள் கூடி சிரித்துக் கொண்டிருந்தனர். 

மடச்சாமி மக்குசாமியிடம் கேட்டான், “இது சந்தோஷ நிகழ்ச்சியா? துக்க நிகழ்ச்சியா” என்று. 

“அட மடச்சாம்பிராணி, இதற்குக் கூட ஆராய்ச்சி பண்ண னுமா? கூட்டத்தினர் சிரித்து சிரித்து வேடிக்கை பார்க்கிறதை பார்த்தாலே, இது சந்தோஷமான நிகழ்ச்சி என்று புரியுமே” என்றான். 

இந்த சின்ன விஷயம் கூட தெரியாமல், மக்குசாமியிடம் கேட்டோமோ என மடச்சாமி வெகுவாக வருத்தப்பட்டான், 

இன்னும் சண்டை நடந்து கொண்டிருந்தது. நால்வரும் ஒரு முடிவு செய்தனர். சந்தோஷமான நிகழ்ச்சி என்றால் ஆடிப்பாட வேண்டும் என்று முதல்நாள் ஒரு வழிப்போக்கன் சொன்னது நினைவுக்கு வந்தது. இங்கே ஆடிப்பாடுவதுதான் புத்திசாலித்தனம் என்று முடிவு செய்தனர். 

ஆட்டம் வேண்டுமென்றால் ஆடலாம். பாட்டுக்கு எங்கே போவது? 

நான்கு முட்டாள்களும் முன்பிருந்த கிராமத்தில் கிழவிகளை கிண்டல் செய்து சிறுவர்கள் பாடுவார்கள். 

இப்போது நால்வருக்கும் அது நினைவுக்கு வந்தது. 

விடுவிடுவென்று சென்றார்கள். சண்டை போட்டுக்கொண்டி ருந்தவர்களைச் சுற்றி நின்றார்கள். 

”போடுங்கம்மா கூத்து 
பொக்கை வாயைப் பாத்து”

என்று பாடினார்கள். பாட்டுக்கேற்றாற்போல, குனிந்து குனிந்து கைகளை தட்டி, சுற்றி சுற்றி வந்தார்கள். 

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்துக்கு இப் போது மிகவும் வேடிக்கையாக இருந்தது. வாய்விட்டு சிரித்தார்கள். வயிறு குலுங்க சிரித்தார்கள். 

சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் இதைப் பார்த்தார்களோ இல்லையோ, ஆத்திரம் நெருப்பாகப் பற்றிக்கொண்டு வந்தது. 

இப்போது புருஷனும் பெண்டாட்டியும் சமாதானமாகி விட்டனர். நேரே வீட்டுக்குள் சென்றனர். புருஷன் ஒரு உலக்கையை எடுத்து வந்தான். பெண்டாட்டி ஒரு துடைப்பத்தை எடுத்து வந்தாள். அப்புறம் கேட்க வேண்டுமா? 

அடிதான்! உதைதான்! நால்வரும் மீண்டும் தெருவோரத்தில் வந்து விழுந்தனர். 

“ஊருக்குள்ளே யாராவது சண்டை போட்டால், அவர்களை விலக்கி விடணும். அதைவிட்டு, கூத்தடித்து கும்மாளம் போட்டா, சும்மா விடுவார்களா? இந்த அறிவுகெட்ட பசங்க ளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்” என்று நாலைந்து பேர் பேசிக்கொண்டு போனார்கள். 

அப்போதுதான் நான்கு முட்டாள்களுக்கும் தெரிந்தது, அங்கே நடந்தது சண்டையென்று. 

நான்கு பேர்களும் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்த வாறு தெரு வழியே நடந்தனர். இனி ஒருபோதும் இப்படி முட்டாள் தனமாக நடக்கக் கூடாது என்று ஒருவருக்கொருவர் சத்யம் செய்து கொண்டனர். 

மறுநாள்…நால்வரும் பிழைப்புக்கு வழிதேடி சென்று கொண்டிருந்தனர். வழியில் இரண்டு மாடுகள் பாய்ந்து பாய்ந்து முட்டி மோதிக்கொண்டிருந்தன. ஈட்டிபோல கூர்மையாக நீண்டு வளைந்திருந்த கொம்புகளைப் பார்த்தாலே உடம்பு புல்லரித்தது. 

நால்வரும் இந்தச் சண்டையைப் பார்த்தார்கள். 

“இந்த மாடுகள் சண்டைதானே போடுகின்றன?” மக்குசாமி கேட்டான். , “அதிலென்ன சந்தேகம்” என்றான்  
மண்டுசாமி.

“அப்புறம் ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறோம்.நேற்று சண்டையைப் பார்த்துக் கூத்தடித்து, பட்ட உதையை மறந்து விட்டீர்களா? வாருங்கள் சண்டையை விலக்கி விடுவோம்.” என்றான் மக்குசாமி. 

எல்லோரும் “ஆமாம் ஆமாம் வாருங்கள் விலக்கி விடுவோம்,” என்று முன்னேறினர். 

அப்போதுதான் மோதிக்கொண்டிருந்த மாடுகள் இரண்டும் மீண்டும் பலமாக மோதுவதற்காக சற்று பின்வாங்கி நின்றன. இந்த நால்வரும் அந்த இடைவெளியில் நின்று கொண்டு, “சண்டை போட்டது போதும். சமாதானம் சமாதானம்” என்று குரல் கொடுக்கவும், பின் வாங்கிய மாடுகள் இரண்டும் முன்னால் பாய்ந்துவந்து மோதுவதற்கும் சரியாக இருந்தது. 

அடுத்த நிமிடம்…நால்வரும் மாடுகள் முட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். 

இத்துடன் நான்கு முட்டாள்களும் ‘குளோஸ்’ என்று எண்ணி விடாதீர்கள். 

‘பட்டணத்தில் முட்டாள்கள்’ கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

இதைவிட அசகாய முட்டாள்தனங்களை செய்கிறார்கள் அந்தக் கதையில். வெளிவந்தவுடன் படித்து சிரித்து வயிற்றை புண்ணாக்க மறந்து விடாதீர்கள். 

– அணில் அண்ணா எழுதிய சிரிப்புக் கதை,பாட்டி கதை வரிசை : 3, அணில் வெளியீடு. 

அணில் அண்ணா கற்பனை ஊற்றெடுக்கும் - சாகசங்கள் பிறக்கும் சிறுவர்களுக்கான புதிய வாசிப்பு முறையை அறிமுகப்படுத்திய அணில் அண்ணா புவிவேந்தன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் விநாயகம். கடந்த 2009ம் ஜனவரி 14ந் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 60. புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மரணம் சம்பவித்தது. சிறுவயதில் சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மளிகைக்கடை நடத்திக் கொண்டிருந்த இவர் சினிமாவுக்கு கதை எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்குச் சென்றார். அங்கிருந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *