நாடு ஆறு மாதம் காடு ஆறு மாதம் ஆளத் தொடங்கிய கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2025
பார்வையிட்டோர்: 273
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
1-வது வினோரஞ்சிதப் பதுமை சொல்லிய விக்கிரமாதித்தன் பூர்வீகக் கதைகள் | 2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
கதை – 4 | கதை – 5
5. நாடு ஆறு மாதம் காடு ஆறு மாதம் ஆளத் தொடங்கிய கதை
அப்பால் விக்கிர மாதித்தன், நவரத்தின சிம்மாசனத்தைத் தன் கொலுக் கூடத்திலே ஸ்தாபித்துவிட்டு இந்திரலோகம் போய்வந்த கதையை ஆதியோடந்தமாகத் தெரிவித்தான். அப்போது மதிமந்திரியான பட்டி, “அரசே! ஏறின சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் வருடம் அரசாள வரம் பெற்று வந்தீர்கள். ஆயிரம் வருஷம் ஆயுள் பெற்று வந்தீர்கள். எனக்கும் அம்மாதிரி வரம் பெற்று வந்தீர்களா?” என்று கேட்டான்.
அதைக் கேட்ட அரசன், “பட்டி! உன்னை நான் மறந்து விட்டேனே!” என்று சொல்லி மிகவும் வருந்தினான்.
“கவலைப்படாதீர்கள்!” என்று சொல்லிவிட்டுப் புத்திசாலியான பட்டி, “இரண்டாயிரம் வருஷங்கள் வாழும்படியான வரம்பெற வேண்டுமென நினைத்து முப்பத்திரண்டு ஆயுதங்களையும் தரித்து, இரவு பத்து நாழிகைக்கு மேல் குலதெய்வமான பத்திரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்றான். அவன் சென்ற சமயம் தேவி நகர் ஊர்வலம் சென்றிருந்தாள். ஆகவே அவள் சன்னிதானத்தில் தோத்திரம் செய்து கொண்டு நின்றான். அப்போது பத்திரகாளி யம்மனும் திரும்பி வந்து அவனைப் பார்த்து, “பட்டி, இந்த அர்த்த ராத்திரியில் இங்கு வந்ததன் நோக்கமென்ன? சொல்!” என்று கேட்டாள்.
பட்டி அவள் பாதங்களில் விழுந்து வணங்கி, “தேவி! என் சகோதரன் விக்கிரமாதித்தன் தேவலோகம் சென்று வரும்போது இந்திரனிடம் ஆயிரம் வருடம் அரசாட்சி செய்ய வரம் பெற்று வந்துள்ளான். அடியேன் தங்களைத் தவிர வேறு யாரையும் சரணடைந்ததில்லை. ஆகவே, என்மீது கருணை கொண்டு எனக்கு இரண்டாயிரம் வருடம் ஜீவித்திருக்க அருள்புரிய வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.
“பட்டி! நீ கேட்கும் வரம் கைகூட வேண்டுமென்றால், உன்னுடைய ராஜன் விக்கிரமாதித்தனின் தலையை அறுத்து இப்பீடத்தின் முன்னே கொண்டுவந்து வைக்க வேண்டும்! என்றாள் பத்திரகாளியம்மன்.
உடனே பட்டி அரண்மனைக்குத் திரும்பி அரசனின் சயன அறைக்குச் சென்றான். சப்ரமஞ்சத்திலே அன்றைய முறைக் காரியான பத்தினி மந்தாக்கினியுடன் சல்லாபித்திருந்துவிட்டு மற்ற மனைவியர்களெல்லாம் சூழ்ந்து சயனித்திருக்க, தூங்கா விளக்குகளெல்லாம் எரிந்து கொண்டிருக்க, விக்கிரமாதித்தன் நித்திரையிலாழ்ந்திருந்தான். பட்டி அரசனை எழுப்பி சைகை செய்து வெளியே வரும்படி அழைத்தான்.
“பட்டி! இந்நேரத்தில் இங்கு என்ன காரணம் பற்றி வந்தாய்?” என்று விக்கிரமாதித்தன் கேட்கவே, பட்டி, “அரசே! ஒரு காரியத்துக்காக உமது சிரம் தேவைப்படுகிறது” என்று சொன்னான்.
“ரொம்ப சந்தோஷம், பட்டி! எடுத்துச் செல்” என்று தரையிலே அரசன் படுத்துக் கொண்டான். பட்டியும் அரசன் தலையை அறுத்து எடுத்து தேவியின் பலிபீடத்தில் கொண்டுவந்து வைத்தான்.
அப்போது பத்திரகாளியம்மனும் மனம் மகிழ்ந்து அவன் விரும்பிக் கேட்ட இரண்டாயிரம் ஆண்டு ஆயுளையும் மற்றும் அனேக மகிமைகளையும் அவனுக்கு அளித்தாள். அந்தச் சமயத்தில் பட்டி கலீரென்று சிரித்தான். அவன் நகைத்ததற்கு காரணத்தை பத்திரகாளியம்மன் கேட்டபோது. பட்டி பின்வருமாறு தெரிவித்தான் :
“தேவி எங்கள் அரசன் விக்கிரமாதித்தனுக்கு இந்திராதி தேவர்கள் ஆயிரம் வருடம் மேன்மையாக ஆட்சிபுரியும்படி வரம் அளித்து ஒருமாதங்கூட ஆகவில்லை. அதற்குள்ளாக அந்த மன்னனின் சிரசு என் கையால் அறுபட்டு இதோ உன் பலி பீடத்திலே போடப்பட்டிருக்கிறது. தேவாதி தேவர்களின் வரமே இந்தக் கதியானால். நீ கொடுத்த வரம் எப்படி நிலைக்கும் என்பதை எண்ணித்தான் சிரித்தேன்!” என்றான் பட்டி.
“பட்டி! பயப்படாதே! என் வார்த்தைக்கு பங்கம் ஏதும் வராது. இன்னும் உனக்குத் தேவையான வரம் இருந்தால் கேள். தட்டாமல் தருகிறேன்” என்று பத்திரகாளி சொல்லவே, “தாயே! இதோ சிரம் துணிக்கப்பட்டுக் கிடக்கும் விக்கிரமாதித்தனை எழுப்பிக் கொடுத்தீர்களானால், தாங்கள் அளித்த வரம் உண்மைதானென்பதை அடியேனால் நம்பமுடியும்!” என்று வி நயத்தோடு பட்டி தெரிவித்தான்.
உடனே தேவியும் திருப்தியுற்றவளாய் எலுமிச்ச பழமும் கும்பதீர்த்தமும், திருநீற்றுடன் கொடுத்து, தலையை எடுத்துச் சென்று உடலிலே பொருத்தி, கும்பதீர்த்தத்தைத் தெளித்துத் திருநீற்றைத் தடவினால் அரசன் உயிர் பெற்றெழுவான் என்று தெரிவித்தாள்.
அவ்விதமே பட்டி உயிர்பெற்றெழச் செய்தபோது, தன் சாமர்த்தியத்தினால் அம்மனிடமிருந்து இரண்டாயிரம் வருடம் ஆயுளைப் பெற்று வந்த பட்டியைக் கண்டு அரசன் சொன்னான்: “பட்டி! தேவர்கள் எனக்குக் கொடுத்த ஆயுளோ ஆயிர வருஷங்கள் தான்! ஆனால் நீயோ நம் பத்திரகாளியம்மனைத் திருப்தி செய்து இரண்டாயிரம் வருஷங்கள் ஆயுள் பெற்று வந்துள்ளாய். நாமிருவரும் சம ஆயுளுடன் வாழ இப்போதும் வழியில்லாமல் போய் விட்டதே! இதற்கு என்ன யோசனை செய்வது, பட்டி?” என்று விக்கிரமாதித்தன் குழம்பினான்.
“அரசே! வருந்தாதீர்கள். உமக்கு மேலும் ஆயிரம் வருஷங்களை நீட்டி விடுகிறேன். ஏறிய சிம்மாசனத்திலிருந்து இறங்காமல் ஆயிரம் வருடம் ஆட்சி புரியும்படிதானே தேவர்கள் வரம் அருளினார்கள்! தாங்கள் நாட்டிலே சிங்காதனத்தில் ஏறி ஆறுமாதங்கள் ஆட்சி புரியலாம். பிற்பாடு ஆறுமாதங்களைக் காடுகளில் சஞ்சரித்து பொழுதைக் கழிக்கலாம். அவ்வி தம் பார்த்தால் தேவர்கள் குறிப்பிட்ட கெடு முடிவடையும் சமயம், தங்களுக்கு ஆயுள் இரண்டாயிரம் ஆகிவிடும்!” என்று யுக்தி கூறினான் பட்டி.
பட்டியின் புத்தி சாமர்த்தியத்தைக் கண்ட விக்கிரமாதித்தன் அவனைப் பலவாறாகக் கொண்டாடினான். அவனும் பட்டியும் இணை பிரியாதவர்களாக, ஒருவர் மீது ஒருவர் அதிக மதிப்புள்ளவர்களாகக் காடாறு மாதமும் நாடாறு மாதமுமாக வாழ்ந்துவர நிச்சயித்து, பராக்கிரமத்துடன் விளங்கினார்கள்.
பிறகு ஒரு நல்ல நாளில் புரோகிதர்களால் குறிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் விக்கிரமாதித்த மகாராஜன், அதிசய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து நெறி தவறாது ராஜ்ஜிய பாரம் செய்யத் தொடங்கினான்.
***
“விக்கிரமாதித்தனின் பூர்வீகக் கதையைச் சொல்லி விட்டேன்! போஜ மகாராஜனே! விக்கிரமாதித்த ராஜனைப் போன்று ஞானமும் வல்லமையும் உமக்கு இருந்தாலன்றோ, இந்த அதிசய சிம்மாசனத்தில் நீர் ஏறலாம்?” என்று முதற்படிக்குக் காவலாக இருந்த வினோதரஞ்சிதப் பதுமை கதையை முடித்து மௌனமாகி விட்டது. சூரியனும் அஸ்தமித்தது.
போஜமகாராஜனும் நீதிவாக்கிய மந்திரியும் திகைப்பு நீங்கி உணர்வு பெற்று நேரத்தைப் பார்த்தார்கள். சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொள்ள நிச்சயித்த முகூர்த்தம் கடந்து வெகு நேரமாகி விட்டதைப் போஜராஜன் உணர்ந்தான். சுபவேளை தவறிவிடவே சிம்மாசனத்தின் மேலே ஏற விரும்பாமல் கீழே இறங்கி, அந்தப் புரத்திற்குள் சென்று சப்ரமஞ்சத்தில் சயனித்துக் கொண்டான்.
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.