நாகம்மாள்
கதையாசிரியர்: ஆர்.சண்முகசுந்தரம்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 108
(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
முன்னுரை

மணிக்கொடி எழுத்தாளர்களில் சண்முகசுந்தரம் தான் முதன்முதலில் நாவல் எழுதியவர் என்று ‘தமிழ் நாவல்-நூறாண்டு வளர்ச்சியும் வரலாறும்’ என்னும் நூலை எழுதிய சிட்டியும், சிவபாதசுந்தரமும் பெருமிதத்தோடு குறிப்பிடுகின்றனர். அந்த நாவல்தான் 1942-ல் வெளிவந்த புகழ்பெற்ற படைப்பான நாகம்மாள்.
இந்நாவலின் இரண்டாம் பதிப்புக்கு முன்னுரை எழுதிய க.நா.சுப்பிரமணியம் தெளிவுபடுத்தும் ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது: “தமிழ் நாவல்களில் மட்டுமல்ல; இத்திய நாவல்களிலும் சண்மூககந்தரத்தின் நாகம்மாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. கிராமிய சூழ்நிலைகளை முழுவதும் உபயோகித்து பிராந்திய நாவல் என்கிற துறையை முதன்முதலாக இந்தியாவில் உருவாக்கியவர் அவர்தான் என்று சொல்லலாம்”.
“சண்முகசுந்தரம் இராம வாழ்வின் ஒரு நேர்மையான சாட்சி இவருடைய அனுபவங்கள் தீவிரமானவை. தீவிரம் என்பது ஏனெனில் முன்கூட்டி வகுத்துக் கொண்டிருக்கும் தத்துவங்களுக்கோ, கெட்டி தட்டிப்போன எண்ணங்களுக்கோ, அவல வெற்றி தேடித் தரும் பொருட்டுத் தம் அனுபவங்களின் சிறகுகளை ஒடிக்கும் கயமையின்றி அவற்றை முழுமையாக முன் வைத்திருப்பதால்தான்… நிஜயங்களின் விளைவுகளை அல்ல, நிஜங்களையே இவர் முதன்மைப் படுத்துகிறார். இவரிடத்தில் மிகையில்லை, பிரசார தோக்கடில்லை.” என்கிறார் சுந்தர ராமசாமி, (சு.ரா. கட்டுரைகள், ப. 90-94)
அத்தியாயம் – 1
சந்தைக் கூட்டம் மெதுவாகக் கலையவாரம்பித்தது. சோளத் தட்டுகளைக் கடித்து அசைபோட்டுக் கொண்டிருந்த காளைகள், மணிகள் ஒலிக்க எழுந்து நின்று வண்டியில் பூட்டத் தயாராயின. சக்கரத்தடியில் கிடந்த சரக்குகளை எடுத்துச் சிலர் தட்டினர். வாங்கி வந்த சாமான்களை வண்டியில் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். சந்தைக்குள்ளே நிழலுக்காக முளை அடித்துக் கட்டியிருந்த துணிகளையும், விற்பதற்குப் பரப்பியிருந்த பண்டங்களையும் அவரவர் பரபரப்பாக எடுத்தனர். பெண்களும் ஆண்களும் தங்கள் தங்கள் கிராமத்துப் பாதையின் வழியே வேகமாக நடக்கலானார்கள். இரண்டொரு உள்ளூர்க்காரரும், சிறுவர்களும் அங்குமிங்கும் எதையோ தேடுவதைப் போல திரிந்து கொண்டிருந்தார்கள்.
வெங்கமேட்டில் வாரத்திற்கொருமுறை புதன்கிழமை சந்தை கூடும்; வீட்டுச் சாமான்கள் வாங்குவதற்கு இங்குதான் வருவது வழக்கம். ‘உப்புத் தொட்டுக் கற்பூரம்’ வரை சாதாரணமாக எல்லாச் சாமான்களுமே அங்கு கிடைக்கும். அந்தப் பக்கத்துக்கே பெரிய சந்தை அதுதான்.
பிரதி வாரமும், ‘எனக்கு முந்தி, உனக்கு முந்தி’ என்று பொழுது சாய்வதற்கு முன்பே சகலரும் பயணம் கட்டி விடுவார்கள். ஆனால், இந்த வாரம் வியாழக்கிழமை சிவியார்பாளையத்தில் சாமி சாட்டியிருந்ததால், சந்தையில் கூட்டம் அதிகமானதோடு, இருட்டும் வரை அவர்கள் ஊர் போவதையே மறந்து வியாபார முசுவில் நேரம் பண்ணிக் கொண்டிருந்து விட்டார்கள்.
வெங்கமேட்டிற்கு மேற்கில் மூன்றாவது மைலில் இருக்கிறது சிவியார்பாளையம்; ஆற்றுப் பாசனம் அதிகம் இல்லாவிட்டாலும் நீர் கொழிக்கும் ஊர் அது. தோட்டக் கிணறுகளில் ‘எட்டித் தொடும்’ தண்ணீர் எந்தக் காலத்திலும்; ஊரைச் சுற்றி பூக்குலுங்கும் பசுமையான மரங்கள்; கண்ணுக்கினிய காட்சிகளே நாலா பக்கங்களிலும் நிறைந்திருந்தன. வறட்சியென்பது அங்கு வெகுதூரத்துக்கில்லை.
சிவியார்பாளையத்திலிருந்துதான் இன்று அதிகம் பேர் வந்திருந்தார்கள். பொங்கல் கொண்டாடப் போகும் ஆனந்தத்தில் வெகு குதூகலமாக சம்பாஷித்துக் கொண்டே அவர்கள் நடந்தார்கள்.
அவர்கள் போய்க் கொண்டிருந்த இட்டேறி மிகக் குறுகலானது. அதோடு குண்டுகுழி நிறைந்து கரடு முரடானது. அந்தத் தடத்தில் நல்ல பழக்கமில்லாது புதிதாக நடப்பவர்கள், அதுவும் அந்த மசமசப்பான நேரத்திலே, ஒரு எட்டு அப்பாலே எடுத்து வைக்க முடியாது. வேண்டுமென்று நாம் ஒரு நாளைக்கு அந்தக் கஷ்டமான பரீட்சையில் இறங்கினாலும் கல்லும் முள்ளும் நம் பாதத்தைப் ‘பதம்’ பார்க்காது விடமாட்டாது. இப்படிப்பட்ட இக்கட்டான பாதையில் அப்பெண்கள் அனாயசமாகச் செல்வதைப் பார்த்தால் நமக்கெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். வரிந்து கட்டின மாராப்புச் சீலையுடன் நேராக நிமிர்ந்து தலையில் வைத்திருக்கும் கூடை விளிம்பில் இரு கரங்களையும் உயர்த்திப் பிடித்து ஒய்யாரமாக அவர்கள் பேசியவாறே சென்றனர். வரிசையாக ஒருவர் பின் ஒருவராக எறும்புச் சாரை போல் அவர்கள் போகும் தினுசு வெகு அழகாயிருந்தது.
அப்போது மணியடித்தது போல் ஒரு குரல் எழுந்தது. முன்பின் போகிற பத்து முப்பது பேரும் ‘கப்’பென்று பேச்சை விட்டனர். “நான், எல்லாம் வாங்கியும் ஒண்ணை மறந்திட்டனே!” என்று கணீரெனும் ஒரு குரல் எழுந்தது. யார் இந்த வெண்கலத் தொண்டையில் பேசியது? பெண்ணுக்கா பிரமன் இவ்விதமான குரல் மகிமையை அளித்தான் என்று நீங்கள் வியப்படையாதீர்கள். இந்த நாகம்மாளைப் பற்றிப் பின்னால் நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ளப் போகிறீர்களாகையால் சுருக்கமாகக் கூட இப்போது நான் சொல்லப் போவதில்லை. ஆனால் கணவன் இறப்பதற்குப் பத்து வருஷத்திற்கு முன்பிருந்தே அவள் ஒரு ‘ராணி’ போலவே நடந்து வந்திருக்கிறாளென்றும், பிறருக்கு அடங்கி நடக்கும் பணிவும் பயமும், என்னவென்றே அவள் அறியமாட்டாள் என்றும் இப்போது குறிப்பிட்டாலே போதும்.
“இந்தப் பாழாப் போன ஊட்டிலே நான் நெனச்சுப் பார்த்து ஒண்ணு வாங்கினா உண்டு. இல்லாட்டி நாளைக்கு இல்லீங்கற சமயத்தில் இதுக்கா வண்டி கட்டிக்கிட்டுப் போறது?” என்றாள் நாகம்மா.
அது என்ன? எதை மறந்து விட்டாள் என்பதை கூடக் கேட்காமலே இரண்டொருத்தி, “ஆமாம்” என்று ஆமோதித்தனர். ஒருவேளை என்னவென்று விசாரித்தால், ‘கொட்டைப் பாக்கில் சின்ன ரகம் வாங்காதது’ போன்ற பதில் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது போலும்!
இந்தச் சங்கதியொன்றும் காதில் போட்டுக் கொள்ளாது தன் பாடுபரப்பைப் பற்றியே யோசித்துக் கொண்டு வந்த ஒரு பெரியவள், “அந்த வெந்தயக்காரன், அரைக்காச் சொல்லி, மூணரைத் துட்டுக்குப் போட்டானே! நான், மூணு துட்டுக்கே கேக்காது போனம் பாத்தியா?” என்று தனக்குத்தானே வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள்.
அதைக் கேட்கவும் நாகம்மாள் கூடச் சிரித்துவிட்டாள். “எல்லாமே அப்படித்தான். ஏமாந்தா தலையிலே கல்லைப் போடற நாளாத்தான் இருக்குது. யாரை நம்பறது? யாரை விடரது?” என்று உபதேசம் செய்யும் பாணியில் ஒருத்தி தொடங்கினாள்.
“தூர ஏம்போவோணும்?” என்று நாகம்மாள், தனக்கு முன் சொல்லியவளின் பேச்சை அங்கீகரிக்கும் விதமாய், “என்னையே எடுத்துக்குவோம்” என்று ஆரம்பித்தவள் ஏனோ சடக்கென, உதட்டைக் கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டாள்.
இந்தச் சமயத்தில் பக்கத்துக் கிழுவமர வேலியைத் தாண்டி, நாலைந்து பேர் ஒரு முயலைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். திடுதிடுவென வருவது யாரெனத் தெரியாமல் இரண்டொரு பெண்கள் சத்தமிட்டனர். நாகம்மாள் போன்றவர்கள், “அட, மொசல் எந்தச் சந்திலே போச்சோ! இங்கு ஏன் வந்து இப்படி ஏறுகிறீர்கள்?” என்று கூறவும், சந்தடி மட்டுப்பட்டது. ஓடி வந்த ஆட்களும் ஏமாந்த முகத்தோடு நின்று விட்டார்கள்.
இக்காட்சிக்குப் பின்னால் முயல்களைப் பற்றி அங்கு கிளம்பிய கதைகளெல்லாம் நமக்கு வேண்டாம்; எப்படியோ ஊர் வந்து நாகம்மாளும் தன் வீடு போய்ச் ‘ச்சோ’வென்ற ஒருவிதச் சலிப்போடு, திண்ணையில் கூடையை இறக்கி வைத்தாள். கீழ்வானில் நிலவும் பூத்தெழுந்தது.
அத்தியாயம் – 2
நாகம்மாளின் நான்கு வயதுக் குழந்தை முத்தாயி நிலா வெளிச்சத்தில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். தன் தாயாரைக் கண்டவுடன் “எனக்கு என்னம்மா வாங்கியாந்தே?” என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தாள்.
முத்தாயாளுக்காக எத்தனையோ சாமான்கள் தாயார் வாங்கி வந்திருந்தாள். பழம், பொரிகடலை, முறுக்கு, மிட்டாய் முதலிய தின்பண்டங்கள். ஆனால் நாகம்மாள் இப்போது அவைகளை எல்லாம் எடுக்காமல் மேலேயிருந்து ஒரு முறுக்கை மட்டும் ஒடித்துக் குழந்தையிடம் கொடுத்தாள். முறுக்கைப் பார்க்கவும் குழந்தைக்குப் பரமானந்தம் உண்டாயிற்று. அதைக் கடித்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடியதில் பாதி முறுக்குக் கை நழுவி கீழே விழுந்தது கூடக் குழந்தைக்குத் தெரியவில்லை.
“உன் சின்னய்யன் இன்னம் வல்லயாயா?” என்று நாகம்மாள் தன் மகளிடம் கேட்டாள்.
அப்போது குழந்தைக்கு இருந்த சந்தோஷத்தில் சின்னய்யனே எதிரில் வந்திருந்தாலும், கண்ணெடுத்துப் பார்த்திருக்குமா என்பது சந்தேகமே. தாயின் கேள்வியைக் கவனியாது முறுக்கைச் சுவைப்பதிலேயே முத்தாயா மூழ்கியிருந்தாள். “நல்ல சின்னய்யன்” என்று நாகம்மாள் சப்புக் கொட்டினாள்.
இவள் இப்படிச் சலித்துக் கொள்ளும் சின்னய்யன் யார் என்பதைப் பற்றி இரண்டு வார்த்தை சொல்வது அவசியம். நாகம்மாளுடைய கணவனுடன் பிறந்த தம்பி தான் சின்னய்யன் என்கிற சின்னப்பன். சின்னப்பனே தான் இப்போது குடும்பத் தலைவன். அநேகமாக நாகம்மாளுடைய அரசு தான் வீட்டில் நடக்கிறதென்றாலும், சின்னப்பனுக்கும், அவனது மனைவி ராமாயிக்கும் இதுவரை எவ்விதமான கஷ்டமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சின்னப்பனைக் குழந்தை முத்தாயி ‘சின்னய்யன்’ என்று கூப்பிடுவதால் நாகம்மாளும் அவனை அந்தப் பெயராலேயே குறிப்பிடுவது வழக்கம்.
வெளியே ‘கடக்’கென்று சத்தம் கேட்டது. “வண்டி வந்திட்டுது போலிருக்குதே” என்று நாகம்மாள் திண்ணையிலிருந்து எழுந்தாள்.
இத்தனை நேரம் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த ராமாயி, “அரிசி வண்டி இதுக்குள்ளே வந்திருமாக்கா?” என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டு வந்தாள்.
“செரி, அடுப்பு வேலையெல்லாம் ஆச்சா?” என்று நாகம்மாள் கேட்டாள்.
ராமாயி பொழுது போவதற்கு முன்பிருந்தே காரியம் செய்ய ஆரம்பித்திருந்தும், ஒன்றும் முடிந்தபாடில்லை. ஆனால் ‘இல்லை’ என்று சான்னால் ‘எக்காள’மாக ஏதாவதொன்று சொல்வாளென்பது தெரியுமாதலால் “நீ தண்ணி வாத்துக்கிறதுக்குளே ஆகாதய போயிருது, எந்திரியக்கா” என்றாள்.
“நான், மேலுக்கு ஊத்திக்கறதுக்குளே அந்த முறத்திலிருக்கிற அரிசி மாயமா வெந்து போயிருமா? பேச்சைப் பாரு, பேச்சை! மொதல்லே அரிசி கழுஞ்சு ஒலயில போடு, சோறு ஆக்கியானதுக்கப்பறம் வேறெ வேலை பார்க்கலாம்” என்று நாகம்மாள் சொன்னாள்.
ராமாயி பதில் பேசாது முறத்திலிருக்கிற அரிசியை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். நாகம்மாள் கூப்பிட்டு, “இத்தனையுமா போடப் போறாய்!” என்றாள்.
“ஆமாக்கா, நாம நாலு சீவனுக்கு இதுதான் வேண்டாமா?”
“நல்லாக் கணக்குப் போட்டாய். இப்படிப் பாத்தா ஊடு, வாசலாயிறாதா? உன்னையும் ஊன்ற ஊட்டுக்காரரையும் என்னையும் இந்தப் பூப்பாலனையும் ஒரே கணக்கில் சேத்தினயே! இந்தக் குழந்தை காப்பிடி தின்னுமா?”
“சரி, ரண்டு வட்டச்சேறை எடுத்துப் போடட்டாக்கா?” என்று கேட்டுக் கொண்டே ராமாயி திரும்பினாள்.
நாகம்மாள் சட்டென்று, “சுண்டைக்காயிலே வெக்கிறது பாதி, கடிக்கிறது பாதியென்ன? போட்டதை ஏன் எடுக்கிறாய்? மிச்சமிருந்தால் காலம்பர பழையது ஆகுது. வேலையைப் பாரு” என்றாள். அதோடு “சாணித் தண்ணி போட்டு இந்தக் கூடையை உள்ளே எடுத்து வை” என்று கட்டளையும் இட்டாள்.
சாணித் தண்ணி போட்டுவிட்டால் எல்லாத் ‘தீட்டும்’ போய் விட்டதாக அர்த்தம். சந்தையிலிருந்து வந்து சாமான்களை உள்ளே கொண்டு போகுமுன் சாணியை நீரில் கலக்கி அதை சாமான் நனையாமல் தெளித்துவிடுவது. சாமான்களுக்கு மட்டும் சாணித் தண்ணீரைப் போட்டுக் கொள்வதோடு சிலர் தங்களுக்கும் போட்டுக் கொண்டு குளிக்காமலே சும்மா இருந்து விடுகிறதும் உண்டு. ஆனால் நாகம்மாளைப் போன்றவர்கள் அப்பேர்ப்பட்டவர்களை ரொம்பவும் இழிவாகக் கருதுவார்கள். இந்த மாதிரி விஷயங்களை நாகம்மாள் வரிந்து கட்டிக் கொண்டு பாட்டுப் பழமொழிகளுடன் பேச ஆரம்பித்து விட்டால் கிட்டத்திலிருப்பவர்களுக்கும் பொழுது போவதே தெரியாது. நாகம்மாளும் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டே இருப்பாள்.
‘சரி, நாகம்மாளைப் பற்றி சொல்லிக் கொண்டு போனால் சங்கதிகள் எல்லையற்று விரியுமாதலால் மற்றப் புறங்களிலும் திருஷ்டியைச் செலுத்துவோம்.’
அத்தியாயம் – 3
பத்து வருஷமாகக் கொண்டாடாதிருந்த மாரியம்மன் உற்சவம் இந்த வருஷம் கொண்டாட்ப்படுகிறது. கற்கள் கீழே விழுந்தும் வங்கு பறித்தும் க்ஷ£ண தசை அடைந்திருந்த கோவிலின் சுவர்கள் மண்ணும் சுண்ணாம்பும் அடிக்கப்பட்டு பளிச்சென்றிருந்தன. நாலு பக்கத்தின் உச்சியிலும் வேப்பிலைக் கொத்துக்கள் சொருகப்பட்டிருந்தன. கோவிலுக்கு முன்பாக தென்னோலையில் மேயப்பட்ட பசும் பந்தல் மிக அழகாயிருந்தது. பந்தல் கூரையின் அடிப்புறத்தில் வண்ணான் மாத்து கட்டப்பட்டிருந்தது. சுவாமியின் சந்நிதானத்திற்கு நேர் எதிராக வெளிப்புறத்தில் பூவோடு வைக்கும் முக்கோணப் பாச்சா மரக்கம்பம் நடப்பட்டிருந்தது. கம்பத்துச்சியில், மஞ்சள் துணியில் நவதானியங்களுடன் ஒரு செப்புக் காசும் வைத்துக் கட்டப்பட்டிருந்தது. பாதை பூராவுமே தண்ணீர் தெளித்துக் குளுகுளுவெனச் செய்திருந்தார்கள்.
ஊர் முழுவதும் இதே பேச்சுத்தான். ஒவ்வொரு வீட்டிலும் சபைகள் கூடி அடுத்தநாள் எடுத்துச் செல்கிற மாவிளக்குத் தட்டங்களைப் பற்றியும் தங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினர்களுக்குச் செய்யப் போகும் பலகாரங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். மணியக்காரர் வீட்டில் அன்று மத்தியானம் ஊர்ப் பிரமுகர்களெல்லாம் கூடியிருந்தார்கள். வெகுகாலமாக இருந்து வந்த விபூதித் தகராறையும் இப்பொழுது ஒத்தி வைத்து விட்டார்கள். பூஜை பண்ணி பண்டாரம், விபூதியை விருந்தினர்களுக்குக் கொடுத்துவிட்டு விபூதித் தட்டை கீழே வைத்து விடுவது, பின்பு இஷ்டப்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மணியக்காரர் தலையாரியைக் கூப்பிட்டு எல்லோருக்கும் தாகத்திற்கு இளநீர் கொண்டு வரும்படி சொன்னார். அவன் சாலையோரத்தில் சாலையிலேயே வெட்டிக் குவித்திருந்த இளநீர்க் காயை எடுத்துவந்து அங்குள்ளவர்களுக்கெல்லாம் சீவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அதே சமயம் பொன்னபண்டாரத்தின் வீட்டிலும் அந்த மாதிரி தான் ஒரு காட்சி நடந்து கொண்டிருந்தது. நாலைந்து வீட்டுப் பண்டாரங்களும், உள்ளூர் நாடார்களும், தோட்டி தலையாரிகளும், பழங்காலத்தில் பூஜை செய்து வந்த முறை மறைந்து, ஜனங்கள் ஆத்தாளை மறந்ததால், அவள் காட்டும் கோபம் இப்படியிருக்கிற தென்றும் இதை விக்கினமின்றி நிறைவேற்றுவதோடு, தங்களுக்கு இத்தனை நாளாக நிறுத்தி வைத்திருந்த வரவு இனங்களோடு சேர்த்துக் கொஞ்சம் அதிகமாகவே செய்யச் சொல்லி மணியக்காரரிடம் கேட்பதென்றும் முடிவு செய்தார்கள். இதே மாதிரிதான் பட்டியிலும் களத்திலும் காட்டிலும், பெரியவர்களும் சின்னவர்களும் பொங்கலைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
அன்று இரவு ஏழு மணிக்குத் தப்பட்டைச் சத்தம் ‘டிம், டிம்’ என்று ‘தெரப்பாக’ எழுந்தது. பத்துப் பதினைந்து பறையர்கள் கம்பத்தடியில் உட்கார்ந்து அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் சாப்பாட்டைப் பாதியிலேயே வைத்துவிட்டுக் குழந்தைகள் ஓடி வந்தன. பெரியவர்களும் அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்களெல்லாம் மாலையிலேயே தலைக்குத் தயிர் தேய்த்துக் குளித்து, முகத்திற்கு மஞ்சள் பூசி, மினுமினுப்பாகக் கொண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் அடைந்து கிடைக்க முடியாமல் அவசர அவசரமாக சாதம் பரிமாறிக் கொண்டிருந்தனர். பூவோட்டில் நெருப்பு ‘தகதக’வென்று எரிந்து கொண்டிருந்தது. நாச்சப் பண்டாரம் விரதம் கலையாமல் பத்துப் பழங்களையும் ஒரு படி பாலையும் குடித்துவிட்டு, புகையிலையை வாயில் அடக்கிக் கொண்டு பயபக்தியுடன், சுவாமியை எண்ணெய்யாலும், தண்ணீராலும், பாலாலும் ஆனந்தமாக அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். நெய் விளக்குகள் அம்மன் பக்கத்திலும் எரிந்து கொண்டிருந்தன. கன்னங்கரேல்லென்று கமுகமாயிருந்த அம்மனுக்கு இடுப்பளவு புடவை சுற்றி, கண்ணுக்குக் கண்ணடக்கமும், இடைக்கு ஒட்டியாணமும் இன்னும் சில நகைகளும் அணிவித்திருந்தார்கள். அந்த அம்மனின் தோற்றம் அங்கு பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனத்தில் அபார பக்தியை ஏற்படுத்துவதா யிருந்தது. பார்க்கப் பார்க்கச் சனங்கள் வந்து கூடிவிட்டார்கள். “கொட்டுங்கடா!” என்ற சப்தம் கேட்டது. பறையர்கள், “டண், டண்… டணக், டணக்’ என்ற இசையில் குச்சியைத் தம்பட்டத்தில் செலுத்தினார்கள். மனதிலே ஒரு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவதாயிருந்தது அந்த அடிகளின் இசை. ‘ஜல், ஜல்’ என்று சதங்கைகள் ஒலிக்கக் கம்பத்தைச் சுற்றிச் சிறியவர்களும் பெரியவர்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் ஆட்டத்திற்குத் தகுந்த பாட்டுக்கள் பாடிக் கொண்டே கம்பத்தைச் சுற்றி வந்தார்கள். வயதானவர்களும் பெண்களும், கோயில் ஓரத்திலும் அரச மரத்தடியிலும் நின்று கொண்டிருந்தனர்.
அந்த ஆட்டக்காரர்களிலே ஒருவன் அடிக்கடி பறையர்கள் அடிப்பதைக் குற்றம் சொல்லி வந்தான். அதிகாரம் த்வனிக்கும் குரல்; உயரத்திற்கேற்ற பருமன். உருட்டிக் கட்டின வேஷ்டி, சரியான தலைக்கட்டு; அவனைக் கண்டு, கூட இருப்பவர்கள் சந்தோஷம் கொள்வதும், அவன் அதட்டும் போது கொல்லென்று சிரிப்பதுமா யிருந்தார்கள். கம்பத்திற்கு எதிரில் தான் அரசமரக் கட்டிடம். அதன் மீது ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வயது அறுபது, எழுபது இருக்கும். அவர் தான் ஊர்ப் பண்ணாடியின் தகப்பனார். வயது அதிகமாகிக் கண்பார்வை மங்கிவிட்ட போதிலும் ரொம்ப உற்சாகமாகவே அவற்றை ரஸித்துக் கொண்டிருந்தார். அருகே போகிறவர்கள் வருகிறவர்களை விடாமல் ஏதோ வாயைக் கிளறிக் கொண்டிருந்தார். “யாரடா சின்னு, இந்த அதிகாரம் பண்ணுறவன்?” என்று அவர் கேட்கவும் பக்கத்திலிருந்தவன், “அது நம்ம கெட்டீப்பனுங்க” என்றான். அந்தப் பெயரைக் கேட்டவுடன், “இப்படி ஏண்டா ரவுசு போடறான்? வெடிய வெடிய அடிக்கிற பறையனுக்கல்ல கஷ்டம் தெரியும்” என்றார். அதோடு அவர், “அவனுக்குக் குடிப்பதற்குக் காசு எங்கிருந்து கிடைக்குதோ?” என்றார்.
“அவனுக்கு எப்படியோ கிடைச்சுப் போகுதுங்க” என்று ஒருவன் சொல்லவும் அருகில் இருந்த எல்லோரும் சிரித்தார்கள்.
அவனுக்கு எப்படிப் பணம் கிடைக்கிறது? என்ன, ஏதாவது மந்திரம் தந்திரம் கற்று வைத்திருக்கிறானா? அதெல்லாம் ஒன்றுமில்லை; கெட்டியப்பனுக்கு இருந்த காடொன்றையும் தொலைத்து விட்டான். அவன் வேறு ஒன்றும் செலவு செய்யவில்லை; இட்லியும், கள்ளும் அந்தக் காட்டை விலைக்கு வாங்கிவிட்டது! இப்போது வெறும் ஆள். அந்த ‘விடுசூளை’ யாருக்கும் பயன்படமாட்டான். ஊரில் எல்லோரும் அவனை ஒரு மாதிரியாகத்தான் நடத்துவார்கள். அவனிடம் பகைத்துக் கொண்டால் போச்சு; அன்றைக்கு, விரோதித்துக் கொண்டவருக்கு வாழைத் தோட்டமிருந்தால் பத்துப் பன்னிரண்டு தாராவது பிஞ்சோடும் பூவோடும் அறுபட்டுப் போய்விடும். அல்லது தென்னந்தோப்பு உள்ளவராயிருந்தால் இருபது, முப்பது குலையாவது பாளைக் குருத்தோடு காணாமல் போயிருக்கும். அவனிடம் தன்னைப் போன்ற நாலைந்து ஆட்களும் உண்டு. கெட்டியப்பனைப் பற்றி வளர்த்தினால் வளர்ந்து கொண்டே போகும். இப்போது அவனது ஆட்டத்தைப் பார்ப்போம்.
“என்னுங்க மாப்பிள்ளெ, இந்த பறயர்க அடியெல்லாம் மறந்திட்டானுகள்” என்று கையிலிருந்த கவையை ஓங்கிக் கொண்டு கெட்டியப்பன் தப்பட்டை கொட்டுகிறவர்களை அடிப்பது போலப் போனான்.
“அடே, கெட்டி, கெட்டி, வாண்டாம்” என்று சத்தம் போட்டுக் கொண்டு பண்ணாடிக் கவுண்டர் ஓடி வந்தார். அதே சமயம், “என்னுங்க சாமி, இந்த விளக்கு ‘புசுபுசு’ன்னு போகுது” என்று சொல்லிக் கொண்டே நாச்சபண்டாரம் வந்தான். “எக்கேடோ கெட்டுப் போங்கடா” என்று சொல்லிக் கொண்டே கெட்டியப்பன் தன் சாளையை நோக்கி நடந்தான்.
– தொடரும்…
– நாகம்மாள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1942, புதுமலர் நிலையம், கோயம்புத்தூர்.