நவீன கதாசிரியன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2025
பார்வையிட்டோர்: 1,401 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த அபலையின் பணத்தை அவன் பறித்துக் கொள்ளப் பார்க்கிறான்; துரோகி! இவனை நம்பி, அத்தனை சொத்தையும் இவனிடம் ஒப்பித்தானே? அந்த முட்டாளைத்தான் நோக வேண்டும். அது எப்படியானா லும் போகிறது. விஷயம் என்ன? தான் பொய்ச்சாட்சி சொல்லித்தான் தீர்வதா? சொன்னால். ஐயோ! அதை நினைத்தாலும் உள்ளம் நடுங்குகிறதே! சர்வ பாக்கியங் களோடு வாழ்ந்த அந்த உத்தமி, தெருவிலே நின்று தவிப்பாளே! செல்வமாக வாழ வேண்டிய அவள் குழந்தைகளின் கதிதான் என்ன ஆகுமோ? முடியாது. பொய்ச்சாட்சி சொல்ல முடியாது; அவனால் முடியாது. ஆனால், சொல்லாவிட்டால்….? அந்தக் கிராதகன் தன்னை ஊரிலே குடியிருக்க விடமாட்டான். என்ன செய்வது? மோகனின் மனம் இவ்வாறெல்லாம் எண்ணி வெகு நேரம் ஊசலாடியது. 

இந்தக் கட்டம் வரையில் ஆசிரியர் சோமு, கதையை எழுதிவிட்டார். பிறகு, கொஞ்ச நேரம் வரையில் தலையில் கையை வைத்துக்கொண்டு யோசிக்கத் தொடங்கினார்.

“அடே சோமு! என்னடா தலையில கை! நன்றாகத்தான் இருக்குப் போ! நல்ல நாளும் பொல்லா நாளுமாய்த் தலையிலே கை! எழுந்திரு; நேரம் ஆகலையா? அவள் பறக்கிறாள்; நாலு பேருக்குப் பாஸ் வாங்கிண்டு வந்திருக்கையாமே மோகனாங்கி ஸினிமாவுக்கு? சரியான காலத்திலே டிபனைச் சாப்பிட்டூட்டுப் புறப்பட வாண்டாமா? எழுந்திரு” என்று தாயார் வந்து, நம் கதாசிரியரை விரட்டினாள். 

“இந்தா அம்மா! இப்ப மணி ரெண்டரைதான் ஆறது. அஞ்சு மணிக்குப் புறப்பட்டால் போரும். என்ன அவசரம்? இந்தக் கதையை இன்னிக்கு முடிச்சாகணும். அவுட்டுச் சிரிப்புப் பத்திரிகாசிரியர் கேட்டிருக்கிறார். நாளைக்கே வேணுமாம். என்னை இப்ப யாரும் தொல்லை பண்ணக்கூடாது” என்று தலையைக் குனிந்த சோமு. என்னவோ எழுத முயன்று, முடியாததால் எதிரே விழித்த கண்களும் ஏங்கிப் பிடித்த பேனாவுமாக உட்கார்ந்திருந்தார். 

அதற்குள் உள்ளேயிருந்து வேகமான ஒரு குரல் புறப்பட்டது. “அவா என்ன சொல்றா, அத்தை! இன்னிக்குச் சினிமாவுக்குப் போக வாண்டாம்னா சொல்றா? ஆம்; இது ஆசிரியர் சோமுவின் மனைவி குரல்தான். நாலரைக் கட்டை ஆர்மோனிய சுருதியில் அது பேசியது. 

சோமு நிமிர்ந்து பார்க்கவில்லை. அவருடைய பேனா மள மள என்று ஓடத் தொடங்கியது: 

மோகனின் மனது திக்குத் திசை தெரியாமல் தவித்த இந்த நேரத்தில், குழலோசை போல் ஒரு குரல் கேட்டது: ‘நா தா! உங்கள் மனம் ஏன் வாட்டமுற்றிருக் கிறது? உடம்பு அசெளக்கியமா?’ 

‘உடம்புக்கு ஒன்றுமில்லை.’ 

‘மனக் கவலையானால், என்னிடம் தெரிவிக்கலாமே!’

‘தெரிந்து உன்னால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை.’ 

‘உங்கள் வேதனையையாவது நானும் பங்கிட்டுக் காள்ளுகிறேனே. அந்தப் பாக்கியங்கூட எனக்குக் கிடைக்கலாகாதா?’ 

‘கண்ணே! உன்னிடம் ஒளிக்க வேண்டுமென்று எனக்கு ஏதுவும் இல்லை; பயனற்ற காரியத்துக்கு உன்மனமும் எதற்காக வருந்தும்படி செய்ய வேண்டும்?’ 

‘விஷயம் இன்னதென்றே அறியாமல், உங்கள் முக வாட்டத்தைமட்டும் பார்க்கும்போது எனக்கு உண்டாகும் கவலைதான் தாங்க முடியாத சங்கடம்.’ 

மோகனுக்கு எரிச்சல் வந்தது, மனைவியின் முகத்தை ஆத்திரத்தோடு நிமிர்ந்து பார்த்தான். 

இந்த நேரமெல்லாம், அடைமழை போல், ‘சள பள, சள டள’ என்று ஆசிரியர் சோமுவின் காதில் ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சோமு அதைக் கொஞ்சங்கூட லட்சியம் செய்யாமல் எழுதிக்கொண் டிருந்தார். ஆனால், இப்போது இடியிடித்தால்போல் ஓர் ஓசை வரவே அவர் உடம்பு தானாக ஒரு துள்ளுத் துள்ளியது. 

“அடேயப்பா! உங்க காது என்ன செவிடா? கண் தான் அவிஞ்சு போச்சா? மழையிலே விறைக்கிற தவளை மாதிரி ஒருத்தி கத்தறேனே; காது கேக்கலே? இடிச்ச புளி மாதிரி எதிரே நிக்கறேனே; கண் தெரியிலே? உங்க ராயசத்தைக் கொஞ்சம் நிறுத் திண்டு, பதில் சொல்லுங்கோ. அப்பறம் நடக்கட்டும் நீங்க கதை கட்டறதும் காணம் போட்டு ஆடறதும்…” என்று சோமுவின் மனைவி சுப்பம்மாள் கூறினாள். 

சோமு கதை கட்டுவது வாஸ்தவம். காணம் போட்டு ஆடுகிறார் என்று அவள் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் சந்தேகிக்கலாம். கதைக்கும் காணத்துக்கும் பிராசம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்; வேறோர் அர்த்தமும் இல்லை. 

சோமு குனிந்தபடியே ஏதோ முணுமுணுத்தார். தலை நிமிரப் பயம். 

“முணுமுணுப்பென்ன முணுப்பு! தைரியமாக வாய் திறந்து பேசுங்களேன், ஆண்பிள்ளைச் சிங்கம் மாதிரி! உங்களை நான் ஒண்ணும் கடிச்சு முழுங்கிப் பிடலே. இன்னிக்கு ஸினிமா உண்டா. இல்லியா? சொல்லிடுங்கோ. இல்லையானா எதிர் வீட்டு எச்சுமியோடே பீச்சுக்காவது போயிட்டு வறேன்” என்றாள் தேவி சுப்பம்மாள். 

“ஸினிமாவுக்குப்போக இன்னும் இரண்டுமணி நேரத்துக்கு மேல் இருக்கு. ஒரு மணி நேரத்தில் இந்தக் கதை பூர்த்தியாகிவிடும்! உனக்குச் சம்மதமானால்  எழுதறேன்; இல்லையானால் இப்பவே எழுந்திருந்துடறேன்” என்று குனிந்தபடியே மிக இங்கிதமான குரலில் சோமு சொன்னார். 

“சரி; கணக்காக ஒரு மணி நேரத்தில் முடிக்கணும். அப்புறம் எழுதினீர்களோ! உங்க கதை, கைக்குட்டை எல்லாத்தையும் கிழிச்சுக் காத்தாடி பண்ணிப்பிடுவேன்’ என்று சொல்லிச் சுப்பம்மாள் உள்ளே போய்விட்டாள். 

சோமுவுக்குச் சுப்பம்மாள் சொந்த அம்மான் மகள். நந்தவனத்தில் சந்தித்த சுந்தரக் கன்னி அல்ல. அண்ணனும் தங்கையும் தீர்மானித்தார்கள்; மகளுக்கும் மகனுக்கும் முடிபோட்டு விட்டார்கள். அவள் சொன்னால் சொன்னதுதான்; அன்னிதாக் கிடையாது. சோமுவின் தாய் எப்போதும் மருமகள் பக்கமே சேர்ந்துவிடுவாள். மருமகளும் மாமியும் மகா ஒற்றுமை. எதில்? சோமுவின் கண்ணிலே விரலைக் கொடுத்து ஆட்டி வைப்பதில். ஆகையால் சுப்பம்மாள் உள்ளே போனதும், தாய், கடிகாரத்தின் பக்கத்திலே போய் உட்கார்ந்துகொண்டாள்; ‘நிமிஷம் ஒண்ணு,நிமிஷம் இரண்டு, நிமிஷம் மூணு’ என்று கணக்கும் எடுத்துக்கொண் டிருந்தாள். எதற்காக? மணி ஒன்று கழிந்ததும், மருமகளிடம் போய் ‘ரிப்போர்ட்’ செய்வதற்காகத்தான். 

சோமு தலை நிமிராமல் எழுதுகிறார்; அவருடைய சுந்தரக் கதை தொடர்ந்து உருவாகிறது. 

மனோகரிபாய் – அவள்தான் மோகனின் மனைவி – ஏதோ பெருங் குற்றம் புரிந்தவள்போல் உடம்பெல்லாம் குன்றி, நாதா, மன்னியுங்கள்’ என்று மருண்ட குரலில் கூறினாள். 

‘யாரை, யார் மன்னிப்பது, மனோ?’ 

‘நான் பிடிவாதம் செய்தது தவறுதானே?’

சிறிது நேரம் மெளனம். 

‘நாதா!’ 

‘என்மேல் கோபமா?’ 

‘யாரை யார் கோபிப்பது, நாதா?’ 

மோகன் புன்முறுவல் பூக்கிறான். அவனை அறியா மலே அவன் கை, மனோகரியின் இளம் தளிர்க்கரத்தைப் பற்றி இழுக்கிறது. அவள் கையை விலக்கி நகர்ந்து நிற்கிறாள். ‘மனோ, நிலவிலே மலர்ந்து சிரிக்கும் பூ. யாரைக் கண்டும் வெட்கப்பட வேண்டியதில்லை.’ 

‘பூ எங்கே?’ 

‘நீதான்,’ 

‘நிலவு?” 

‘அதுவும் நீதான்.’ 

மனோகரி சிரிக்கிறாள். ‘உங்கள் கவிதா சக்தியைக் கண்டு, காளிதாசன் திகைத்துத் திணற வேண்டியது தான்.’ 

‘நிச்சயமாய்.’ 

‘அப்படியா! ஏனோ?’ 

‘என்னிடம் கவி விக்கிரகமே இருக்கிறது!’ 

மனோகரி மலர்ந்த கண்களோடு, அவனை அப்படியே விழுங்கிவிடுபவள்போல் சற்று நேரம் உற்றுப் பார்த்தாள். பிறகு தலை குனிந்து திரும்பி, உள்ளே செல்ல நகர்ந்தாள். ‘மனோ, நில்! அதை..?’ மோகனின் முகம் இருள் கவிந்தது. 

‘என்ன விஷயம்?’ என்று கேட்டு அவள் நின்றாள். 

‘அதை.. அதைச் சொல்லிவிடுகிறேன்..’ என்றான்.

“கண்ணில்லாக் கபோதி, அம்மா, ஊரெல்லாம் சுத்தியாச்சே, ஒரு பிடி அரிசி கிடைக்கலையே. ஏழைக்கு இரக்கப் படுங்கோ. சாமி.’ – இப்படி வாசலிலிருந்து ஒரு குரல் வருகிறது. இந்தப் பிச்சைக்காரன் கூட, தம்முடைய மனைவியோடும் தாயாரோடும் சேர்ந்து சூழ்ச்சி செய்வதுபோல் சோமுவுக்குத் தோன்றுகிறது. ‘சனியன்! சனியன்!! கண் இல்லாமல் படைத்தது தெய்வத்தின் குற்றம் அதனிடம் போய் முட்டிக்கொள்” என்று தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார். ஒரு வெற்றிலைச் சுருளை எடுத்து வாயில் போட்டு மென்றார். மறுபடியும் பேனாவை எடுத்து விறு விறு என்று எழுதத் தொடங்கினார். 

மனோகரிபாய், ஒன்றும் தோன்றாதவளாய், ஆவல் நிறைந்த கண்களுடன் நின்றாள். ‘சொல்லட்டுமா, மனோ!’ 

‘சொல்லக் கூடியதாக இருந்தால் சொல்லுங்கள். இல்லையானால் வேண்டாம்.’ 

மோகன் மீண்டும் சிறிது நேரம் நின்றான். ‘மனோ, நாம் சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டும்.’ 

‘மனோகரிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் என்ன குற்றம் செய்தாள்? ஏதாவது அவளை அறியாமலே தவறு செய்திருப்பாளோ ஒருவேளை! திடீரென்று அந்த எண்ணத்தால், அவள் உடம்பு குலுங்கியது; மனம் நடுங் கியது: நாக் குழறியது. ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எதற்காக இந்தத் தண்டனை?” என் று அவள் படபட வென்று கேட்டாள். 

‘மனோ. கோபித்துக்கொள்ளாதே; நீ ஒரு தவறும் செய்யவில்லை. விதியின் சூழ்ச்சி யாரை விட்டது? சீதையும் ராமனும் பிரியவில்லையா? நளனும் தமயந்தியும் பிரியவில்லையா?’ 

‘நளனைப்போல் என்னை விட்டுச் செல்லாதீர்கள்.’

மோகன் பெருமூச்சு விட்டான். எட்வர்டும் வாலி சிம்ப்ஸனுந்தான் தற்கால லட்சிய தம்பதிகள் என்ற ஓர் எண்ணம் அவன் மனத்தில் தோன்றியது. ஆம், நளன் ஒரு பேடி; ராமன் ஒரு பேதை!. என்ன, என்ன! தர்மாத்மாவும் சத்தியசந்தனும் அல்லவா ராமன்? பிதுர்வாக்கிய பரிபாலனத்துக்காக, சுய உரிமையான ராஜ்யத்தையே . … சேச்சே! ராஜ்யமாவது, ராஜாவா வது! அதெல்லாம் பழங்கதைத் தத்துவம். இன்று அந்த உதாரணங்களே பொருந்தமாட்டா. எங்கெங்கோ சுற்றியது மோகனின் மனம். பின்பு கொஞ்சம். நிதானப்பட்டு, ‘மனோ!’ என்று அழைத்தான். 

‘என்ன?’ என்றாள் மனோகரி. 

‘என்ன என்னவோ பேசிக் குழம்புகிறது என் உள்ளம். உள்ள விஷயத்தை உன்னிடம் சொல்கிறேன். நீ மதி நுட்பம் உள்ளவள். உன் யோசனையை அளிப்பாயா?’ 

‘சொல்லுங்கள்.’ 

மோகன் நிதானமாக, தன் தர்ம சங்கடத்தைச் சொல்ல வாயெடுத்தான். அப்போது 

அப்போது, “அத்தை, மணி என்ன ஆச்சு?” என்று உள்ளே இருந்து இடிக்குரல் வந்தது. 

‘இன்னும் அரைமணிதான் இருக்கடா, சோமு. சுருக்க முடி உன் கதையை’ என்றாள் ஆசிரியர் சோமுவின் அம்மாள். 

“இந்தா, அம்மா! இந்த மாதிரி உபத்திரவம் பண்ணினீர்களோ, இன்னிக்கு நான் வெளியே கிளம்பவே போறதில்லை” என்று கொஞ்சம் தைரியமாகச் சொன்னார் சோமு. 

“அப்படியா! உன் பாடு. அவள் பாடு; எனக் கென்ன வந்தது? உள்ளே போய் அவளை வரச் சொல்றேன்” என்று சலிப்புடன் சொன்ன தாய் உள்ளே சென்று விட்டாள். 

அவள் வந்தாலும் சரி, அவளுடைய தாத்தா வந்தாலும் சரி, இன்று சண்டை போட்டே தீர்வது என்று மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, மிடுக்காக நிமிர்ந்து உட்கார்ந்தார் சோமு. கதையை இப்போதே எழுதிப் பூர்த்தி செய்யாமல் விடுவதில்லை என்று சங்கல்பமும் செய்துகொண்டார். பேனாவை அழுத்தமாகக் கையிலே பிடித்தார். எழுதப்போனார். என்ன ஆச்சரியம்! பேனா ஓடவில்லை. மனம் ஓடினால் அல்லவா, பேனா ஓடும்? 

கதை எங்கே ஆரம்பித்தது? எங்கே வந்து நிற் கிறது? முதலிலிருந்து படித்துப் பார்க்கலானார். கதை என்ன கதை என்று அவருக்கே புரியவில்லை. எந்த இடத்தையாவது அடித்துத் திருத்திச் செப்பனிட லாமா என்று, சிறிது பரிசீலனை செய்தார். ஆரம்பம் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. தம்பதிகளின் சம்பாஷணை கொஞ்சம் அதிகப்படிதான். இருந்தாலும் அதைவெட்ட அவருக்கு எப்படி மனம் வரும்? அதிலே காதலும் சிங்காரரஸமும் கலந்து ததுப்புகின்றனவே! இன்னொரு முறை ஆரம்பத்திலிருந்து படித்துப் பார்த் தார். எப்படியும் கதையை முடிக்க வேண்டியதுதான். எப்படி? பிரத்தியட்ச வாழ்க்கையின் ஏதாவது ஒரு மகத்தான பிரச்னையில், ஓர் உன்னத உணர்ச்சியைப் புகுத்தி, சித்திரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வளவுதானே கதை? முடிவு ஜோராக அமைய வேண்டும். பேனாவைப் பல்லிலே கடித்துக்கொண்டு தீவிரமாக, நிதானமாக, சிந்தாக்ராந்தராக யோசிக்கத் தொடங்கினார். 

இதற்குள் அரைமணி நேரமும் பூர்த்தியாகி விட்டது. 

“முடிஞ்சுதா? கிளம்புங்கள்” என்று கம்பீர மாகக் கட்டளை இட்டுக்கொண்டே இடுப்பியம்மாள்- இல்லையில்லை – சுப்பம்மாள் வந்து சேர்ந்தாள். 

கண்களில் தீப்பறக்க விழித்துக்கொண்டு, “இன்னிக்கு எங்கேயும் வர என்னால் முடியாது’ என்று திடமான குரலில் பதிலளித்தார் சோமு. 

சுப்பம்மாள் ஆச்சரியத்தோடு அவரை மிரள மிரள விழித்துப் பார்த்தாள். தன் புருஷன்தானா, வேறு யாராவதா என்று அவளுக்குச் சந்தேகம் வந்ததுபோல் தோன்றிற்று அவள் பார்வை. 

கொஞ்சம் கேலி கலந்த குரலில், “ஏனாம்?” என்று அவள் கேட்டாள். 

“என் இஷ்டம்” என்றார் சோமு! 

“நியாயம். ஆனால், இன்னிக்கு ராத்திரி உங் களுக்கு யார் வீட்டில் சாப்பாடு?” என்று கேட்டாள் சுப்பி. 

“நம் வீட்டில்தான்.’ 

“இன்று இங்கே சமையல் இல்லை.”

“ஏன்?” 

“என் இ…ஷ்…ட…ம்” என்று நீண்ட அழுத்த மான குரலில் சொன்னாள் சகதர்மிணி. சோமுவின் மனத்தில் அழுகையும் சிரிப்பும் சேர்ந்தாற்போல் வந்து ஒன்றை ஒன்று ரத்துச் செய்துவிட்டன. 

று 

“பார்க்கலாம்” என்று பெருமூச்சோடு வேறு பக்கமாகப் பார்த்துக்கொண்டே, “என்னை இப்போது யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். என்று சொல்லிவிட்டுக் கதையிலே ஆசிரியர் ஆழ்ந்த கவனம் செலுத்தினார் – செலுத்தவாவது! செலுத்த முயன்றார். 

சுப்பம்மாள் ஒரு புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டு, ”அத்தை, இன்னிக்கி வீடெல்லாம் ஒரே வீராவேசக் கூத்தாக இருக்கு. யார் வெச்ச சூனியமோ? எவள் போட்ட மருந்தோ? குடித்தனம் தலைகீழாகப் போயிண்டிருக்கு; இனிமே என்னாலே அரைக்ஷணம் இங்கே இருக்க முடியாது. எனக்குத் தலையை வலிக் கிறது.’ என்று சொல்லிப் பரபர என்று ஓடி மூலையில் போய்ப் படுத்துப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள். 

சோமு இதை லட்சியம் செய்யவே இல்லை. துளியும் தம் பிகுவை விடாமல், மிடுக்காக உட்கார்ந்து, பேனாவைக் கையில் எடுத்தார். 

ஆனால் இந்த அவந்தரையில், கதை எப்படி ஓடும்? அது பிடிவாதமாக, நகரவே மாட்டேன் என்றது. மென்னியைப் பிடித்துக் கதையை முன்னே தள்ள முயன்றார் சோமு. தத்துக்கிளி மாதிரி, தத்தித் தத்தி தந்தி பாஷையில், கதை வெளிவரத் தொடங்கியது. 

…அப்போது..ஊம்.. அவள் வந்துவிட்டாள்.. இல்லை.. அந்தக் கிராதக ஜமீன்தார் வந்துவிட்டான். இருவருமே வரவில்லை..தான் அந்தக் கிழவிக்கு விரோத மாகச் சாட்சி சொல்லாவிட்டால், ஜமீன்தார் தன்னைத் துன்புறுத்துவான். தான் குடியிருப்பது அவன் வீடு. தன்னை வீட்டை விட்டே துரத்துவான். அந்த அவ மானங்களெல்லாம் நடப்பதைப்பற்றி, மோகனுக்குக் கவலையில்லை. ஆனால், அந்தச் சமயத்தில் தன் காதல் மனைவி மனோகரி துன்புறுவாளே? அதை நினைக்கத்தான் அவனுக்குச் சங்கடமாக இருந்தது. ‘மனோ, உனக்காக நான் பொய்ச்சாட்சிகூடச் சொல்லத் தயாராக இருக் கேன்’ என்கிறான். ஐயோ பாவம்! எனக்காக ஒரு பேதை ஸ்திரீயின் குடும்பம் அழிவதா? வேண்டாம் வேண்டாம்’ என்று இரங்குகிறாள் மனோகரி. 

‘இல்லையானால் நம் குடும்பம் சிதையுமே?’ என்கிறான் மோகன். 

‘ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி; நீங்கள் இருக்கும் இடம் எனக்கு இந்திரலோகம்’ என்கிறாள் மனோகரி: 

கண்டிப்பாய் மோகன் நிஜமான சாட்சியமே ‘சொல்வதென்று முடிவாகிறது. அப்படியே சொல்லி விடுகிறான். அவன் பயந்தபடியே எல்லாம் நடக் கின்றன. அவனைக் கோலாகலம் செய்கிறான் கிராதக ஜ மீன்தார். வீட்டை விட்டு அவர்களை விரட்டுகிறான்: அவர்களுடைய சொத்தையெல்லாம் பறித்துக்கொள் கிறான். கொஞ்சகாலம் கழித்துக் காவேரி நதி தீரத்தில், டமுருட்டி ஆற்றங்கரையில் ஒரு காட்சி: அதோ ஓர் அழகான ஆசிரமம். அதற்குள்ளே வனதேவதைபோல் ஒரு ஸ்திரீ எளிய ஆடை புனைந்து, ஆபரணங்கள் எதுவு இல்லாமல் அமர்ந்து பாடிக்கொண்டே ராட்டினம் சுற்றுகிறாள். அவள் அருகே ஒரு புருஷனும் அதேவிதமாக உட்கார்ந்து நூல் நூற்கிறான். ‘ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்’ என்ற இன்னிசை ருவர் நாவலிருந்தும் புறப்பட்டு, அமிருதாரையாக வருஷிக்கிறது. 

“அட பாவி! நாசமாய்ப் போக!” என்று வாசலில் சோமுவின் தாயாருடைய குரல் கேட்டது. 

துருத்தி சுருதி மாதிரி, ‘உம் ஊம்ம் ம்…ஊம் ம்ம்…ஊம் ம் ம்…’ என்று ஓர் அழுகைக் குரலும் கூடவே கேட்டது. 

“எங்கேடா தொலைச்சே? எங்கேடா அவன்? ஓங்க அப்பனுக்கோ ஒரு கவலையும் இல்லை. அவளோ கைகேயி மாதிரி போத்திண்டு படுத்துண்டுட்டா … எங்கேடா?” 

பதில் இல்லை. சுருதிமாத்திரம் தொடர்ந்தது. பளீர் என்று ஓர் அறை விழுந்தது. 

‘ஐயோ! ஐயோ! அவன்….அவன் அவன். அதோ அதோ…..” என்று வீரிட்ட சத்தம் எழுந்தது. 

தம் கதைக் கற்றையைத் தூக்கிப் பிடித்த வண்ணம் சோமு வாசலிலே ஓடினார். 

“வாடாப்பா,வா. உன் சமத்துப் பிள்ளை செய் திருக்கற காரியத்தைக் கேளு. யாரோ பிச்சைக்காரக் குழந்தை வந்துதாம். நேத்திக்குப் புதிசாய்த் தச்சயே சொக்காய், அதைக் கழட்டி அவன்கிட்டக் குடுத்திட்டு நிக்கறது. ஏண்டான்னா. அந்தக் குழந்தை அழுது தாம்: பரிதாபமா இருந்துதாம்!” என்றாள் அம்மாள். 

ஆசிரியர் சோமுவுக்கு மகா ஆத்திரம் வந்தது. தாமும் பளீர், பளீர் என்று சிறுவனுக்கு நாலு அறை வைத்தார். பிறகு, பையனைப் பரபர என்று பிடித்து இழுத்துக்கொண்டு வாசலிலே ஓடினார். பிச்சைக்காரக் குழந்தையைக் கண்டே பிடித்துவிட்டார். புதுச் சொக்காயைத் திரும்பவும் கைப்பற்றி, அந்தக் குழந்தைக்கும் இரண்டு பிரகரம் வைத்துவிட்டு வீடு திரும்பினார். 

ஒரு கையில், இழந்து திரும்பிய புதுச் சொக்காய்: மறு கையில், கதைக் கற்றை. சொக்காயை ஒரு முறை ஆனந்தமாகப் பார்த்தார். காணாமல் போய்த் திரும்பி வந்த சொக்காய் அல்லவா? கையிலே உள்ள நூறு ரூபாயை விட, காணாமல் போய் அகப்பட்ட ஒரு ரூபாயின் ஆனந்தமே பெரிது என்று ஏசு பகவானே சொல்லியிருக்க வில்லையா? பிறகு மறு கையிலுள்ள கதை முடிவை ஒரு முறை கண்ணோட்டம் விட்டார். துவும் அவருக்குச் சந்தோஷமே தந்தது. 

“ரகுபதி ராகவ ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம் என்று பாடிப் பார்த்துக்கொண்டார். ‘நல்ல முடிவு! அற்புதமான முடிவு! நல்ல முடிவு!’ என்று தமக்குத் தாமே சபாஷ் சொல்லிக்கொண்டார். சோமுவுக்கு இரட்டைச் சந்தோஷம். ஒரு மனித னுக்கு இதைவிட வேறே என்ன இன்பம் வேண்டும்? அவர் முகம். வசந்தகால சந்திரனைப்போல பிரகாசித்தது. ஆனால் அடுத்த நிமிஷம் அதை ஒரு வியாகுல மேகம் சூழ்ந்தது; ராத்திரிச் சாப்பாடு எங்கே? லங்கணந்தானா?

– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.

தி.ஜ.ரங்கநாதன் தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *