நல்ல வியாபாரம்!





(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கையில் இரண்டு ஆரஞ்சுப் பழங்களுடன் பாரிஸ்டர் வீட்டுக்குள் நுழைந்த கமலபதி அங்கேயிருந்த பியூனைத் தனியே அழைத்து, “எசமானர் ரொம்பக் கோபக்காரரோ?” என்று விசாரித்தான்.
“ஆமாங்க, ரொம்பக் கோபக்காரர்தான்” என்று பியூன் அதற்குப் பதில் சொல்லியதும் கமலபதி தைரியம் அடைந் ந்தவனாய், “அப்படியானால் நான் அவரை உடனே பார்க்க வேண்டும். யாரோ ஒருவர் அவசர காரியமாக வந்திருக்கிறார் என்று சொல்லு, போ” என்றான்.

பியூன் சிறிது தயங்கினான். பாரிஸ்டர் அப்போது சில முக்கிய அலுவல்களைக் கவனித்துக்கொண்டிருந்தார் என்பது அவனுக்குத் தெரியுமாதலால் அந்த சமயத்தில் உள்ளே போவதற்கு அவனுக்குத் தைரியமில்லை. அதைக் கவனித்த கமலபதி, “சரி சரி, நீ போய்ச் சொல்ல வேண்டாம்! நானே போய்ப் பார்த்துக் கொள்கிறேன்” என்று விடு விடென்று பாரிஸ்டரின் அறைக்குள்ளேயே நுழைந்து விட்டான்.
உள்ளே சென்றதும் கமலபதி தன் கையிலிருந்த இரண்டு ஆரஞ்சுப் பழங்களையும் மேஜை மீது வைத்துவிட்டு “குட்மார்னிங் ஸார்! நான் ஒரு இன்ஷுரன்ஸ் ஏஜண்டு…” என்று பல்லைக் காட்டினான்.
“யார் உம்மை உள்ளே விட்டது?…பியூன் ஒரு இடியட்!…” என்று பாரிஸ்டர் சிறி விழுந்தார்.
“இல்லே…நான் ஒரு இன்ஷியுரன்ஸ் ஏஜண்டு…”
“சரி சரி, போயிட்டு வாரும்!… எல்லாம் முன்னேயே நான் இன்ஷியூர் செய்துண்டாச்சு!…”
“அப்படியானால் அது வேண்டாம், தள்ளுங்கள்! நல்ல நெய்யா ஒரு இடத்திலே கிடைக்கிறது…”
“ரொம்ப அழகா இருக்கே! அந்த வியாபாரம்கூட வச்சிண்டிருக்கீரா?…பேஷ் பேஷ்!…”
“என்ன செய்கிறது ஸார்?. ஒன்று இல்லாத போனால் இன்னொன்றிலாவது லாபம் கிடைக்காதா என்றுதான்…”
“சரி சரி…எனக்கு நெய்யும் வேண்டாம். தயிரும் வேண்டாம். போய்ட்டு வாரும்!”
“அது போகட்டும்…ஜவுளி தினுசுகளாவது தேவையாயிருக்குமோ?… நம் சிநேகிதர் ஒருவர் புதுசாக ஒரு கடை வைத்திருக்கிறார்…”
”அட ராமச்சர்திரா!…எனக்கு ஒண்ணுமே வேண்டாம், ஐயா!…இரண்டு நாழிக்கு முன்னாலே நீர் போய்ச் சேரும்!”
“குழந்தைக்கு, நல்ல பிஸ்கோத்து வேண்டுமென்றலும் சொல்லுங்கள்…”
“ஒய்! எனக்குக் கோபம் வந்தா ரொம்பப் பொல்லாதவனா இருப்பேன்…ஆமாம்…மரியாதையாகப் போய்ச் சேரும்!”
“சரி, நான் போய்ட்டு வருகிறேன், ஸார்! இப்போது சமயம் சரியாக இல்லை போலிருக்கிறது…இன்னொரு தடவை வருகிறேன்…எப்படியும் உங்களிடத்தில் ‘பீஸினஸ்’ நடக்கும் என்கிற நம்பிக்கை மட்டும் எனக்கு இருக்கிறது…இல்லாவிட்டால் துணிந்து எட்டணா செலவழித்து இந்த ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வந்திருக்க மாட்டேன்.”
“ஓய்! ஓய்! இந்தாரும் அந்த எட்டணா!…என்னாலே உமக்கு ஏன் வீண் செலவு?..”
“ஐயையோ! நான் வாங்கவே மாட்டேன் அந்தக் காசை!”
”வாங்காத போனால் இதோ தூக்கி எறிகிறேன் பாரும், வாசலிலே !… உம்ம காசு எனக்கு ஏதுக்கு?…”
இப்படிச் சொல்லியவாறு ஒரு எட்டணா நாணயத்தையும் பழத்தையும் வீசி எறிந்தார் பாரிஸ்டர். கமலபதி சட்டென்று குனிந்து காசை எடுத்துக் கொண்டான்.
அதைப் பார்த்துக்கொண்டு நின்ற பியூன், கமலபதியை அணுகி “ஏன் சார் இந்தக் காசைக் கையிலே வச்சுக்கிறீங்க!…அவர் வீசி எறிஞ்ச மாதிரி அவர் முகத்திலேயே வீசி எறிஞ்சுடப்படாது?…இப்படியா உங்களை அவமானப் படுத்தறது?” என்று அனுதாபப்பட்டான்.
அதைக் கேட்டதும் கமலபதி சிரித்துக்கொண்டு, “வந்த லாபத்தை விட்டு விடவா சொல்கிறாய்? இரண்டு ஆரஞ்சுப் பழத்தினுடைய விலை மூன்றணாத்தான். இப்போது அதற்கு ஐந்தணா லாபம் கிடைத்திருக்கிறது! இது போதாதா? இந்த ஊரில் இவர் மாதிரி தினம் ஒரு பத்து கோபக்காரர்கள் அகப்பட்டால் போதாதா நமக்கு? என் பிழைப்பு நடந்துவிடுமே!…” என்றான்.
“அப்படியானால் உங்களுக்கு என்ன வியாபாரம்?…”
“எனக்கா! பழ வியாபாரம் தான்!…கடையிலே இருக்கிற அழுகல் பழங்களை எல்லாம் இந்த மாதிரி புது முறையிலே வியாபாரம் பண்ணிக்கொண்டு வருகிறேன். இந்த ஒரு மாசமாக…வியாபாரம் நன்றாக நடக்கிறது…”
– விகடன் 40-களில் வெளியான கதை.