நயமுடைமை
கதையாசிரியர்: சேலை சகதேவ முதலியார்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2024
பார்வையிட்டோர்: 1,456
(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
உலகம் பலவி தமா தலின் கண்டபடி பேசுவதும் செய் வதும் கூடாது; அஃது ஒருவரோடொருவர் மாறுபட்டு மனத்தாங்கல் கொள்வதற் கிடங்கொடுக்கும். மனமபோன படி செய்வதை அடக்கிக்கொள்ளவேண்டும்; அதனால், நாம் பிறருடைய மனவருத்தத்துக்கு ஆளாகமாட்டோம்.

ஒருவரோடொருவர் கூடிப் பழகும்போது மரியாதை யும் அன்புங் காட்டவேண்டும்; அதற்காகப் பெரியோர் சில பேச்சு நடத்தைமுறைகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவன் முகந்தெரியாத ஒருவ னுக்கு எழுதும் கடிதத்தின் கீழே ‘தங்கள் கீழ்ப்படித லுள்ள ஊழியன்,’ என்று எழுதுகின்றான்; பழக்கமுள்ள ஒருவனுக்கு ‘அன்புள்ள ஐயா’ என்று எழுதுகின்றான். இவைகள் அதைப் படிப்பவனுக்கு மனக்கிளர்ச்சி உண் டாக இவ்வாறு மரியாதை காட்டும் சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன.
மக்கள் ஒருவரையொருவர் கண்டு பேசக்கூப்பிடும் போது மரியாதை காட்டுஞ் சொற்களைக் கூறுகின்றார்கள். ஒரு கூட்டத்தில் வயதானவர்க்கு முதலில் இடங்கொடுத்து விட்டுப் பினபே வாலிபன் தனக்கிடம்பார்த்துக்கொள் கின்றான். ஒருவர் பேசிமுடித்த பின்னரே மற்றொருவர் பேசத் தொடங்குகின்றார். இவைகளையெல்லாம் நடிப் பென எண்ணப்படாது; மேற்கொள்ளவேண்டிய கடமை களே. ஏனெனில் வேறெவ்விதமும் மக்கட்கு மனத்தாங் கலை உண்டாக்காத நயஞ்செய்யுங்குணமே நாகரிகத்தைத் தரும். பொதுவாக மக்கள் எல்லோரிடத்தும் அன்புள்ள வன் நயம்படவுரைத்து நன்மை செய்வானேயொழிய தன் பேச்சிலும் செய்கையிலும் அவர்கள் வீணே மனத்தாங்கல் அடையும்படி வைத்துக்கொள்ளமாட்டான்.
நம்மைச் சூழ்ந்திருக்கும் காட்சிகளால் நம்முடைய உணர்ச்சிகள் மாறுபடுகின்றன; சண்டைசெய்து சச்சரவு படும் மக்கள் நம்மைச் சூழ்ந்திருந்தால் நாம் கொடுமையும் எரிச்சலுமுடைய மனவுணர்ச்சி பெறுகின்றோம். மென்மை யும் மரியாதையுமுடைய மக்கள் நடுவண், நாமும் அத் தன்மை யுணர்ச்சி பெறுகின்றோம்.
அளவுக்கு மீறின மரியாதை அருவருக்கத்தக்க தாகும். உண்மையான நயமுடைமையாவது பிறர் மனங் கோணாதபடி நடந்துகொள்வதே.
1. பாரசீக மன்னன்
தாழ்ந்தோருடைய நயம்படு செய்கையை உணராத உயர்ந் தோரும், உயர்ந்தோருடைய உதவியைப் புகழாத தாழ்ந்தோரும் இல்லை. ஏனெனில் ஒருதவியோ நயம்படு செயலோ சிறியதா பெரியதா என்பதைப் ற்றி யன்று. நாம் மதிப்பது, அவை எத் தகைய உணர்ச்சியினாலும் வழியினாலும் செய்யப்படுகின்றன வென்பதைப் பற்றியே. இதனாலேயே தாழ்ந்தோர் செய்யும் சிறு உதவியும் பெரியதாக மதிக்கப்படுகின்றது. உயர்ந்தோர் செய்யும் பேருதவியும் அவ்வளவாக மதிக்கப்படுவதில்லை. வன்சொற் பேசிக் குடிகளின் வேண்டுகோளை நிறைவேற்றுகின்ற அரசனைக் காட்டிலும் இன்சொல் வழங்கி அவர்களின் விண்ணப்பத்தை மறுத்த விடுகின்ற மன்னனையே அன்புடையவனாக மக்கள் கொள்கின்றனர்.
அருட்சேகரன் என்னும் பாரசீக அரசன் அரண்மனை விட்டுத் தொலைவிலுள்ள ஒரு நகருக்குப் பயணஞ் செய்துகொண் டிருந்தான். வழியிலிருந்த ஓர் உழவன், அரசனுக்கு ஏதாவதொரு காணிக்கை கொடுக்க வேண்டுமென்று எண்ணி, பக்கலில் இருந்த ஒரு சிற்றாற்றினின்றும் ஒரு சிறங்கைத் தண்ணீர் கொண்டுபோய்ச் சென் று அரசன் எதிரில் நின்று, “மன்னர் பெருமானே! இ தண்ணீரைச் சிறிதருந்தி யருளவேண்டும்,’ என்றான். அரசனோ அப் புத்தப் புதுமையான காணிக்கையைக் கண்டு, புன்சிரிப்புக் கொண்டு, அவனை நோக்கி, “அன்புடையாய்! இஃது உன்னுடைய பண்பு நயத்தைக் காட்டுகின்றது,” ன்று சொல்லி அவனுக்கு நன்றி செலுத்தினார்.
அக்குடியானவன் ஒரு பட்டிக்காட்டானேயாயினும், உள்ளன்புடைய ஒரு குலமகனே யன்றோ!
2. அயலூர் சென்ற ஆங்கிலேயன்
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு ஆங்கிலேயன் ஒருவன் பக்கத்தி லுள்ள நாடுகளைக் கண்டுவரச் சென்றான். அவன் இத்தாலி நாட்டின் துயூர் நகரடைந்து ஒரு பகல் அந்நாட்டுக் காட்சிகளைக் காணச்சென்றான். அப்போது படைப்பயிற்சி செய்துவிட்டு வந்து கொண்டிருந்த போர்வீரர் கூட்டம் எதிர்வரக்கண்டு ஓரிடததில் நின்றான். அப்போது அச்சிறு படைத்தலைவன் ஒரு வாய்க்காலைத் தாண்ட முயன்றான்; கால் தவறிப்போயிற்று. அவ்விடரினின் றும் எப்படியோ தப்பித்துக்கொண்டான். அப்போது அவனு டைய தலைமூடி தொலைவிற்போய் விழுந்துவிட்டது.
அவனைக் கண்ட போர்வீரர்கள் சிரித்துக்கொண்டு நிற்க, ஆங்கு நின்று பாத்துக்கொண்டிருந்த ஆங்கிலேயனோ அது வீழ்ந்துகிடந்த இடத்திற்கோடித் தலைமூடியை எடுத்துக்கொண்டு வந்து அத்தலைவன் கையில் அமைதியோடும் வணககத்தோடும். கொடுத்தான். அப்படைத்தலைவன் வியப்பும் வெட்கமுங்கொண்டு ஆங்கிலேயனுக்கு வணக்கமொழி கூறிவிட்டுத் தன் படையுடன் சேர்ந்து போய்விட்டான்.
இந்நிகழ்ச்சி படைப் பெருந்தலைவர் வரையில் எட்டிவிட்டது. அந்நாள் மாலையில் ஆங்கிலேயன் உணவுவிடுதியி லிருந்தபோது படைத்து ணை த்தலைவர் அவனிடத்திற்கு வந்து விருந்துண்ணப் பட்டாளத்தின் உறைவிடத்திற்கு அவனை இட்டுக்கொண்டுபோயி னர். விருந்துக்கூடத்திற் போர்த்தலைவர்கள் எல்லோரும் அவ்வாங் கிலேயனை மிகமிக மெய்ச்சிப்பேசினா. பிறகு பெரும்படைத்தலை வர் அவ்வாங்கிலேயனை அரசனுக்கு அறிமுகஞ்செய்ய, அரசன் இத்தாலி மாவட்டங்களின் தலைவர்கள் எல்லாருக்கும் கடிதங்கள் விடுத்து, அவ எனை நல்வரவேற்கும்படி கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் மரியாதையோடும் மேம்பாடோடும் அந்நாட்டா ரால் வரவேற்கப்பெற்று, அந்நாட்டின் அழகும் வியப்பும் வாய்ந்த காட்சிகளையெல்லாம் கண்டுகளித்து அவரவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தன்னாடுபோய்ச் சேர்ந்தான்.
ஒரு பெருமகன் ஓர் அயல்நாட்டிற் சென்றவிடமெல்லாஞ் சிறப்புப்பெறும்படி செய்தது அவன்தன் ஒரு சிறு நயம்பட்ட செய்கையல்லவா?
3. அருமையறிவன்
பிரான்சு நாட்டில் அருமை யறிவன் என்னும் மன்னனொரு வன் இருந்தான். அவன் தன் குடிகளில் எவரையும் இகழ்ந்து பேசியறியான் மேலும் அரண்மனையில் ஆண் பெண் எவராயினும் குடிகளை இழிவாக நடத்தக்கூடாதென்று கண்டிப்பான கட்டளை யிட்டிருந்தான்.மேலும குடிகளிடம் மிடுக்காகப் பேசுவது, அவர் கள் மேல் இடிவிழுவது போலவும் நச்சம்பு படுவது போலவும். ஆகும் என்று தன் குடும்பத்தார் எல்லோர்க்கும் அறிவூட்டியும் வந்தான்.
ஒருநாள் மன்னனின் மருமகள் ஒரு குடியானவனைப் பார்த்து, அழகுகெட்டவனே அப்புறம்போ,” என்றாள். உடனே மன்னன் வளைக் கடுகடுத்துப் பார்த்து, உரத்த குரலோடு, “அம்மா! அவரை நான் நமது நாட்டிலுள்ளவர்கள் எல்லோருக்கும் மேலான அழகுடையவரென்றும் மதிக்கின்றேன்,” என்று சொல்லி அவ்வம்மையாரைக் குடியானவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும்படி செய்தான்.
க. பிறர் விருப்பத்தை நிறைவேற்றுதல் நமக்கு மேற் பட்டவரையும் நம்மை விரும்பும்படி செய்யும்; தம்மோ டொத்தவரைத் தான் சொல்லுவதை ஒப்பச்செய்யும்; தமக்குத் தாழ்ந்தோரை ஒத்து நடக்கச்செய்யும். அது, வேறுபாட்டை மென்மைப்படுத்தும், பேச்சுக்குச் சுவை கொடுக்கும், உடனிருக்கும் ஒவ்வொருவனையும் மகிழச் செய்யும். அது, நல்லியல்பு தரும், ஈகையை ஈனும், மாட்சிக்கு உளத்திட்பங் கொடுக்கும், முரட்டுத்தனத்தைத் தணிக்கும். கொடுமையை அடிமையாக்கும், காட்டாளை யும் வீட்டாளாக்கும். -அடிசன்.
உ. மரியாதையற்ற சொல்லைப்போலவே செய்கையுந் தவறே.
ங. ஒருவனை அடித்துத் தள்ளுவது போலவே, முரட்டுப்பேச்சும் தவறே. – ஜான்சன்.
ச. சிறுசிறு குற்றங்களால் தீமை நிறையும்.
ரு. அமைதியும் ஆறுதலும் மகிழ்ச்சியைத் தரும்.
சு. மகிழ்ச்சி தருவது மக்களால் முடிந்ததொன்றே.
எ. சிறு தீங்கு பெருங் குற்றம்.
அ. பெரும்பொருள் கொடுத்துதவுவதைவிட, சிறு தீங்குசெய்வதை ஒழித்தலே சிறந்தது. -ஒரு பெரியார்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |
