நம்பிக்கைத் தீபம் ஏற்றுவோம்
கதையாசிரியர்: அல்போன்ஸ் மோசஸ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 103

காலம் ஓடிக்கொண்டேயிருந்தது. பலரைப் போல வாழ்க்கையெனும் சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தான் மணி. அப்பா சிறுவயதிலேயே காலமான போதிலும் அம்மாவின் அயராத உழைப்பும் தளராத நம்பிக்கையும் அவனை பட்டப்படிப்பு வரைப் படிக்க வைத்தது. சிறப்பாகப் படித்து கை நிறையச் சம்பளம் வாங்கும் ஒரு நல்ல வேலையும் செய்து வந்தான்.
ஒரே பையன் என்பதால் அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்துப் பேரப்பிள்ளையைக் கொஞ்ச வேண்டும் என்று அவனது தாய் கனவு கண்டு வந்தாள். மணி வேலை செய்யும் இடத்தில் பல பெண்களும் வேலை செய்து வந்தனர். அவர்களில் ஒருத்தியின் மீது மணியின் கடைக்கண் பார்வை விழுந்தது.
கமலி மிகவும் படித்தவள். அவள் குடும்பத்தில் அவள் ஒருத்தி மட்டும் என்பதால் பெற்றோரால் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டிருந்தாள். வீட்டில் அவள் வைத்ததே சட்டமாக இருந்தது. அவளின் நடை உடை பாவனி அனைத்தும் மணிக்குப் பிடித்திருந்தது. அவளது உருவம் மணியின் மனதில் விதையாக முளைக்க ஆரம்பித்து பின்னர் அது காதலாக மலர்ந்தது. அவளைப் பார்க்கா விட்டால் அவனுக்கு அந்த நாள் எட்டிக் காயாகக் கசந்தது. இதற்காகவே விடுமுறை கூட எடுக்காமல் அலுவலகம் சென்று வந்தான் மணி. இப்படியே பல மாதங்கள் உருண்டோடின.
ஒருமுறை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்ல தீர்மானித்தனர். மணியையும் சுற்றுலா வர அழைத்தனர். ஆனால் அவன் சுற்றுலாச் சென்றால் அவளைப் பார்க்க முடியாது என்று எண்ணி சுற்றுலா வர விருப்பம் இல்லை என்று கூறி தட்டிக் கழித்தான். அவனது நடத்தை நண்பர்களுக்கு ஒரு புரியாத புதிராக இருந்தது.
கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவிற்கு வந்துதான் ஆகவேண்டும் என்பது போல அவனது காதல் அரசல் புரசலாக வெளியேத் தெரிய ஆரம்பித்தது.
ஒருநாள் அவனது நண்பர்களில் ஒருவன் டேய் மணி நீ யாரையாவது காதலிக்கின்றாயா என்று கேட்டான். அதற்கு மணி தன் மனதில் குடி கொண்டிருக்கும் காதல் தேவதையைப் பற்றி புகழ்ந்து தள்ளினான். அனைத்தையும் கேட்ட அவனது நண்பன் அது சரி அவள் உன்னைக் காதலிக்கின்றாளா? உன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினாயா? என்று கேட்டான்.
அப்போதுதான் மணிக்கு நம் காதலை அவளிடம் சொல்லவேயில்லையே அவள் விரும்புகின்றாளா என்பது தெரியவேயில்லையே என்ற எண்ணமே உதிக்க ஆரம்பித்தது. அடுத்த நாள் வேலையின் மதிய உணவின் போது அவளைப் பார்த்து தன் காதல் விருப்பத்தினை எடுத்துக் கூறினான். ஆனால் அவள் உடனே அதை நிராகரித்து சட்டென்று நான் உன்னை விரும்பவில்லை என்று கூறி விட்டாள்.
அதை எதிர்ப்பார்க்காத மணி ஆடிப்போனான். அடுத்த நாள் முதல் அவனது பழக்க வழக்கங்களில் தொய்வு காணப்பட்டது. நண்பர்களிடம் எதுவும் கூறவில்லை. கடைசியில் உன் காதலை அவளிடம் கூறினாயா என்று கேட்ட நண்பன் அவனிடம் வந்து மணி உன் காதலை அவளிடம் சொன்னாயா அவள் என்ன சொன்னாள் என்று கேட்டான். அதற்கு மணி நடந்த விவரங்களைக் கூறினான். உடனே இந்த செய்தி அவனது நண்பர்கள் மத்தியில் காட்டுத் தீயாய் பறவியது. ஓவ்வொருவராக அவனிடம் வந்து காதல் தோல்விக்குத் துக்கம் விசாரிப்பதுபோல நடித்து அவனை போதைக்கும் பெண்மைக்கும் அடிமையாக்க வலை வீசினார்கள். அப்போதுதான் நண்பர்களின் எண்ணம் மணிக்குப் புரிய ஆரம்பித்தது.
உடனே தன்னைத் தேற்றிக் கொண்டு எப்போதும் போல மகிழ்ச்சியாக தனது வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து ஓட ஆரம்பித்தான். நண்பர்கள் வியப்புற்று அவன் அவ்வாறு இருக்கக் காரணம் என்ன என்று கேட்டனர்.
அதற்கு அவன் பதற்றமேயின்றி என் மீது அன்பேயில்லாத ஒருத்தியைத்தான் நான் இழந்திருக்கின்றேன். ஆனால் அவள்தான் அவளை உண்மையாகக் காதலித்த நேசித்த ஒருவனை இழந்திருக்கின்றாள். எனவே நான் இதில் எந்த விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தையும் இழக்கவில்லை. எனக்காக வேறொரு பெண் காத்துக் கொண்டிருக்கின்றாள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது என்றான்.
பலபேர் நமது வாழ்வைக் குறித்து நாம் முடிவெடுப்பதை விட மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் மற்றவர்கள் கேவலமாக நினைப்பார்களா நாலுபேர் நாலுவிதமாகப் பேசினால் என்ன ஆவது என்றே நினைத்து வாழ்கின்றார்கள்.
நம்பிக்கையை முதலில் நம்மேல் வைக்க வேண்டும். நம்மை நாமே நம்ப வேண்டும். பிறது அனைத்தும் தானாக நம்மைத்தேடி ஓடி வரும். இறைவன்மேல் பாரத்தைப் போட்டு வாழ்க்கையில் நம்பிக்கையோடு எதிர்நோக்கின் திருப்பயணம் மேற் கொள்வோம்.
| நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |