தோழிக்குப் பாராட்டு – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 15,042
திடீரென அந்தச் சந்திப்பு நிகழுமென கமலி எதிர்பார்க்கவில்லை.
ஆர்த்தியும் அவளைக் கண்டு வியந்தாள். இருவரும் பூங்காவில் புல்வெளியில் அமர்ந்தனர். கமலியின் முகம் வாடியிருந்தது.
“கல்யாணமாகி சில மாதங்கள் கூட ஆகலை. அதற்குள்ள சிடுசிடுங்கிறாரு. சட்டைக்கு பட்டன் இல்லை. சாப்பபாட்டுல உப்பில்லைன்னெல்லாம் கோவிச்சுக்கிறாரு!’ என்று வருத்தப்பட்டாள் கமலா.
அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆர்த்தியின் முகம் சட்டென மாறியது.
“நீ ஏன் கண் கலங்குறே?’ என்று ஆதரவாக கேட்டாள் கமலி.
“நம் இருவரது கணவருமே ஒரே அலுவலகத்துலதான் வேலை பார்க்கிறாங்க. உன் புருஷன் வேலை முடிஞ்சா நேரா வீட்டுக்கு வர்றாரு. உன்னோட எப்போதும் சேர்ந்தே இருக்காரு. ஆனா என் புருஷனோ அலுவலகத்துல உள்ள ஒரு பெண்ணோட ஊர் சுத்திட்டு, லேட்டா வீடு திரும்புறாரு. மேம்போக்கா என்னோட பழகுறாரு. இது தெரிஞ்சு தினம் தினம் நான் வேதனைப்படுறேன். சிரிச்சுக்கிட்டே எனக்கு துரோகம் செய்யும் என் புருஷனைவிட, கடுகடுப்பா, அன்பைச் செலுத்தும் உன் புருஷன் உயர்ந்தவர். நீ கொடுத்து வெச்சவ கமலி’ என்று சொன்னபோது கமலிக்கு என்னவோ புரிவது போல இருந்தது
.
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கமலியின் கணவன், அவளது கரம் பற்றி, “காலையில் நான் கோவப்பட்டதற்கு ஸாரிம்மா’ என்று மன்னிப்புக் கேட்டபோது “ஆர்த்தி… யூ ஆர் கரெக்ட்!’ என்று மனசுக்குள் பாராட்டி நன்றி சொல்லிக் கொண்டாள் கமலி.
– தமிழழகன் (மார்ச் 14, 2012)