தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர்
கதையாசிரியர்: நாரா.நாச்சியப்பன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 1,278
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் அரசனுக்கு மூன்று முலைகளோடு ஒரு பெண் பிறந்தாள். இது புதுமையாக இருக்கவே அவன் சோதிடனை அழைத்து, ‘இதற்கு என்ன செய்வது?’ என்று கேட்டான். அதற்கு அந்தச் சோதிடன் ‘இது நன்றாக ஆராய்ந்த பிறகே சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டான். அதன்படி அவன் அந்தப் பெண்ணின் சாதகத்தை ஆராய்ந்து, ‘அரசே, தங்கள் மகள் தங்கள் எதிரில் வரக்கூடாது.

ஆகையால் அவளைத் தனியாக வைத்திருங்கள்’ என்று சொன்னான். அவளும் தனியாக மாளிகையில் வளர்ந்து வந்தாள். அரசன் பார்க்காமலே பருவ வயதை அடைந்தாள்.
அவள் பருவமடைந்ததைக் கேள்விப்பட்ட அரசன் அவளை யாருக்காவது திருமணம் செய்து கொடுக்க எண்ணினான். அவளைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அளவில்லாத செல்வம் கொடுப்பதாக அவன் அறிவித்தான். இதைக் கேள்விப் பட்ட ஒரு குருடன், கூனன் ஒருவன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அரசனைப் பார்க்க வந்தான். இளவரசியைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி கேட்டான். அரசனும் சரியென்று ஒப்புக்கொண்டான். அவளைத் திருமணம் செய்து கொண்டு வேறு எந்த ஊரிலாவது போயிரு. இந்த ஊரில் மட்டும் இருக்காதே என்று அரசன் சொன்னான். அப்படியே குருடன் இளவரசியைக் கூட்டிக் கொண்டு போனான்.
இளவரசியும், குருடனும், கூனனும் மற்றொரு நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள். இளவரசிக்குக் குருடன் மேல் அன்பில்லை; கூனன் மேல்தான் ஆசையாய் இருந்தது. ஆகவே குருடனைக் கொல்வ தற்காகச் செத்தபாம்பு ஒன்றை அடுப்பிலிட்டுக் கறி யாக்கினாள். குருடனைக் கூப்பிட்டு அதற்கு தெருப் பூட்டும்படி கூறினாள். குருடனும் அடுப்பின் அருகில் இருந்து விறகைத் தள்ளித் தீ எரித்துக் கொண்டிருந் தான். அப்போது வெந்து கொண்டிருந்த பாம்பின் ஆவி அவன் கண்களைத் தாக்கியது. அதனால் ஒளி இழந்த அவன் கண்கள் தெளிவாகத் தெரிந்தன. தூரத்தில் கூனனுடன் கூடி இளவரசி குலாவுவதை அவன் தன் இரு கண்களாலும் பார்த்தான். அதனால் ஆத்திரம் கொண்டு அந்தக் கூனனைப் போய்ப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து அப்படியே கைகளால் சுழற்றி இளவரசியின் மேல் எறிந்தான். அதனால் இளவரசியின் நடு முலை மறைந்தது. கூனனுடைய கூனும் நிமிர்ந்துவிட்டது.
தீதை நினைக்கப் போய் எல்லாம் நன்மையாய் முடிந்தது. தெய்வத்தின் அருள் இருந்தால் எல்லாம் நன்மையாக முடியும்,
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.
![]() |
நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க... |
