தீராத விளையாட்டுப் பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 81 
 
 

சென்னை மயிலாப்பூரில் லஸ் தேவாலய சாலையில் புதிதாக கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் இருந்தது அந்த அலுவலகம். கட்டுடல் இளைஞன் ராஜா , இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் இன்றுதான் பணிக்கு வருகிறான். ஊருக்குப் போயிருந்த அவன், அலுவலகம் வந்து சேர்வதற்குள் மதிய உணவு இடைவேளை நேரம் வந்து விட்டது. அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியபடியே படிகளைக் கடந்து அவன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். இருக்கைகளில் யாரும் இல்லை. உணவு உண்ணும் கூடத்தில் இருப்பார்கள் என்று அங்கு சென்றான். உணவு இடைவேளை அந்த அலுவலகத்தின் கலகலப்பான பொழுது. சீனியர் அக்கவுன்டன்ட் சோமசுந்தரம், கேஷியர் ராஜாத்தி , ராஜா உள்ளிட்ட சேல்ஸ் டீம் ஆட்கள் என அனைவரும் உட்கார்ந்து அரட்டை அடித்தபடியே சாப்பிடுவார்கள். ஒருவரது உணவிலிருந்து மற்றொருவர் உரிமையோடு எடுத்துச் சாப்பிடுவது அங்கு மரபு . ராஜா , சில நாள் , உணவு கட்டிக் கொண்டு வராத நாட்களில் சக ஊழியர்கள் தரும் உணவை சேகரித்துப் பசியாறி விடுவான். அலுவல் நேரங்களிலேயே இறுக்கமான முகத்துடன் வேலை செய்பவர்களை சிரிக்க வைத்து விடும் சாமர்த்தியம் கொண்ட ராஜாதான் உணவு மேஜையில் , யாருடைய வாயையாவது கிளறி அரட்டையைத் தொடங்கி வைப்பான். ஜோக்காளன் என்றும் பெயர் பெற்றவன் அவன்.

இன்று அனைவரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தர்கள். விருப்பம் இல்லாமல் சாப்பிடுகிறார்களோ என்று நினைத்தான் ராஜா.

‘என்னங்க எம்டி கம்பெனிய மூடப்போறேன்னு டிக்ளேர் பண்ணிட்டாரா என்ன?‘ என்று புன்னகைத்தபடியே அங்கு காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

‘ராஜா நம்ம அக்கவுன்டன்ட் சோமு சார் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்கப்பா.. கேன்சராம் … டாக்டர்ஸ் நம்பிக்கை தரா மாதிரி ஒண்ணும் சொல்ல்லே ங்கறாங்க ‘ என்றார் கண்ணன் என்ற நடுத்தர வயது ஊழியர்.

ராஜா, சோமு சார் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தான். அவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். ஆனாலும் இளைஞர்களோடு இளைஞனாகப் பழகிக் கொண்டிருந்தார். அவருடைய நிலையை அறிந்து சக ஊழியர்கள் அதிர்ந்து போய் இருப்பதில் வியப்பொன்றுமில்லை .


அன்று மாலை நேரம். ராஜாவும் மற்றவர்களும் கீழ்ப்பாக்கம் பகுதியில் ஈ.வே.ரா. நெடுஞ்சாலையில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்று சோமசுந்தரத்தை பார்த்தனர். சோமு சார் படுக்கையில் படுத்தபடி அனைவரையும் புன்னகையுடன் பார்த்தார். பழுப்பு நிற தாவணியை அணிந்திருந்த அவருடைய மகள் ஒடிசலான இளம்பெண் , அவரது கட்டில் அருகே சிறிய ஸ்டூலில் அமர்ந்து இருந்தாள். பல நொடிகள் இறுக்கமான மௌனத்தில் ஓடின. ராஜாவாலும் பேச முடியவில்லை.

மௌனத்தை உடைக்க சோமு பேசினார் –

‘என்னப்பா ராஜா.. தீராத விளையாட்டுப் பிள்ளை.. எல்லாரும் முகத்தை தொங்கப் போட்டுகிட்டு இருக்காங்க நீயும் பேச மாட்டியா நிறைய ஜோக் கதை சொல்லுவியே.. இன்னிக்கு பாரதியார் பிறந்த நாள் பாரதி நகைச்சுவை சொல்லுப்பா..‘

ராஜாவுக்கு நா எழும்பவில்லை. இருப்பினும் கஷ்டப்பட்டுத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான். நிற்பவர்களை அங்கு உள்ள நாற்காலிகளில் அமரும்படி சைகை காட்டினார் சோமு .

ராஜா பேசினான் –

‘பாரதியார் , பாண்டிச்சேரில தர்மராஜா கோயில் தெருவுல வசிச்சப்ப , வ.ரா உள்ளிட்ட நண்பர்கள் கிட்ட இதை சொல்லுவாராம் –

இரண்டு நண்பர்கள் ஒருவர் வியாபாரி ஒருவர் குடியானவர் காட்டுப் பாதையில் செல்ல நேர்ந்தது. திருட்டு பயம் உள்ள பாதை. இருட்டுவதற்குள் கடந்து விடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் பொழுது சாய்ந்து விட்டது. திருடர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் , குடியானவனை நையப் புடைத்து அவனிடமிருந்தவற்றைப் பிடுங்கிக் கொண்டார்கள். வியாபாரி பார்த்தார். பேச்சு மூச்சு இல்லாத மாதிரி படுத்துக் கொண்டார். திருடர்களில் ஒருவன் கோலால் தட்டிப் பார்த்து கட்டை கிடக்கிறது என்றான்.

வியாபாரி ‘உங்கள் வீட்டுக் கட்டை பத்து ரூபாய் பணத்தை மடியில் கட்டிக் கொண்டிருக்குமோ ‘ என்று அந்த திருடனிடம் கேட்டார்.

‘போதும் சார் நீங்க ஓய்வு எடுங்க..‘ என்றான் ராஜா.

வாய் நிறைய சிரி்ப்புடன் சோமு ‘நீ வேறப்பா..மேல சொல்லுப்பா’ என்றார் .

ராஜா, தன்னுடைய பாக்கெட் டைரியைப் புரட்டி விட்டு சொன்னான்.

‘பாரதியார் சொன்ன கதை இது . ஒரு கிராமத்திலே ஒரு ஏழைக் குடியானவன் சுரைக்காய் தோட்டம் போட்டிருந்தார். ஒரு பொழுது விடியுமுன்பு இருட்டிலே ஒரு திருடன் தோட்டத்திற்குள் புகுந்து சுரைக்காய் திருடிக் கொண்டிருக்கையிலே குடியானவன் வந்து விட்டார். திருடன் , குடியானவனை ஏமாற்றி விடலாம் என்று நினைத்தான்.

குடியானவன் – யாரடா அங்கே ?

திருடன் கம்பீரமான குரலில் ஆகா பக்தா இது பூலோகமா? மானிடர் நீங்கள்தானா ? என்றார். தோட்டக்காரர் , இவர் யாரோ பெரியவர் தேவலோகத்திலிருந்து இப்போதுதான் நமது இடத்திற்கு வந்திருக்கிறார் என்று நினைத்து ஆம் ஸ்வாமி, இதுதான் பூலோகம்.. நாங்கள் மானிடர்கள் என்று திருடனிடம் ஏழெட்டுச் சுரைக்காய்களை கொடுத்து அனுப்பினார். திருடன் அவற்றை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தான்.

சோமு வாய் விட்டுச் சிரித்தார். ராஜாவும் மற்றவர்களும் அவரையே பார்த்தபடி இருந்தனர்.

சோமு ‘மறுபடியும் ஒரே ஒரு நகைச்சுவை சொல்லுப்பா’ என்றார். கண்ணன், சொல்லேம்பா என்று ராஜாவின் தோள்களைத் தொட்டார்.

ராஜா பேசினான் –

‘ஒரு நாள் பாரதியாரைப் பார்க்க அவர் வசித்த தெருவில் இருந்த பெரியவர் ஒருவர் வந்தார். இந்தப் பெரியவரின் குடும்ப வாழ்வில் அவருடைய முதல் மனைவியின் மகன் முத்துசாமி அவனது மனைவி தரப்புக்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் எப்போதும் சண்டை.

இந்தப் பெரியவர் திண்ணையில் அமர்ந்திருந்த பாரதியாரிடம் என்ன படிக்கறீங்க என்று கேட்டார். பாரதியார் சுதேசமித்திரன் தான் என்று பதில் அளிக்கிறார்.

பெரியவர், அடுத்த கேள்வியா இந்த சண்டை எப்ப முடியும் என்று கேட்கிறார்.

பாரதியாரோ – நீரும் உம் மனைவியும் தனியாவும் முத்துசாமியும் அவனது மனைவியும் தனியாவும் குடித்தனம் போய்ட்டா , இரண்டு பெண்களும் சந்திக்க இடம் இல்லாதபடி செஞ்சா முடிஞ்சுடும் என்று சொன்னார்.

பெரியவர் கோப பார்வை பார்த்து விட்டு எழுந்து போய் விடுகிறார். பெரியவர் , இவரிடம் செய்தித்தாள் இருந்ததால, ஐரோப்பாவில் நடக்கும் சண்டையைப் பற்றி கேட்டிருக்கிறார். பாரதியாரோ, குடும்பச் சண்டை பற்றி கேட்கிறார் என்று நினைத்து பதில் சொல்லி இருக்கிறார் .

ராஜா டைரியை மூடி வைத்தான். அனைவரும் விடை பெற எழுந்து நின்ற போது சோமு பேசினார்.

‘ஒரு நிமிசம்பா.. எல்லாரும் கேளுங்க.. எனக்கு எப்ப வேணாலும் எதுவும் ஆகலாம் ‘

கண்ணனும் ராஜாத்தியும் ‘அதெல்லாம் ஆகாது சார் ‘ என்றனர்.

அவர் தொடர்ந்தார்

‘எனக்கு தெரியும் கேளுங்க.. எனக்கு தனிப்பட்ட வகையிலும் அலுவகத்திலும் பலவகையிலும் உதவியா இருந்த ராஜாவுக்கே என் மகள் ஷீலாவைக் கொடுக்கணும்னு முடிவுல இருக்கேன். நான் இல்லாட்டாலும் ஷீலாவோட அம்மா முடிச்சிடுவா’

மௌனமாக இருந்த சோமுவின் புதல்வி ஷீலா ராஜாவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

கண்ணன் ‘நல்ல முடிவுதான் சார்’ என்று கூறியபடியே ராஜாவின் கைகளைக் குலுக்கினார்.

(குறிப்பு : இந்தச் சிறுகதை, 1988 ஆம் ஆண்டு, பாரதியார் பிறந்த நாளை ஒட்டி அடியேன் எழுதிய சிறுகதை. இது வரை வெளியிடப்படவில்லை. என்னுடைய பழைய கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பிலிருந்து தட்டச்சு செய்துள்ளேன்.எஸ்.மதுரகவி 3.10.2025)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *