திருநீற்றிலும் முயற்சி
கதையாசிரியர்: சி.எம்.ராமச்சந்திர செட்டியார்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 11, 2025
பார்வையிட்டோர்: 62
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுப்பராயக் குருக்கள் பொதுவாக நல்லவர்தான். சு எப்பேர்ப்பட்டவர் மீதும் ஒருவித அழுக்காறும் கொண்டவர் அல்லர். ஆனால், தாமும் தம் குடும்பமும் நன்றாக வாழ வேண்டுமென்பது இவர் இச்சை. இதனால் ஏனையோர் வாழக் கூடாது என்ற எண்ணம் இவருக்கு இருக்குமோ என்றால் இல்லவே இல்லை. “ஒவ்வொருவரும் உலகத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்று தினந்தோறும் கடவுள் முன்பாகச் சொல்லுகிறோம். ஆகவே அவர்கள் சுகமாக இருக்கவே உரிமை கொண்டுள்ளார்கள். அப்படியிருக்க ஒருவர் சுகமாயிருக்கக் கூடாது என்று நாம் சொல்ல முடியுமா? அது மிகத்தப்பு” என்று தம் கொள்கையை வந்தவர்களுக் கெல்லாம் எடுத்துச் சொல்லுவார்.
சுகமாக வாழ்வதென்றால் ஒரு குடும்பத்திற்கு வேண்டிய மட்டும் பொருள் இருக்க வேண்டும் என்பது இவர் கருத்து. தமக்கு அப்படிப்பட்ட நிலைமை வரவில்லையே என்ற விசாரம் இவர் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. தம் மனைவியும் மக்களும் நன்றாக உண்பன, உடுப்பன, பூண்பன, பூசுவன கொண்டிருக்க வேண்டும். தமக்கு யாதொரு வகையிலும் குறைவில்லாதிருக்க வேண்டும், ‘ஸர்வே ஜநா ஸூகிநோ பவந்து’ என்று தினந்தோறும் மற்றவர்களுக்கு இதத்தைத் தேடப் பிரார்த்தனை செய்த நமக்கேன் அது இருக்கப்படாது?” என்று தான் எண்ணுவார். ஊரார், பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். என்று யாராவது எடுத்துக் காட்டினால், “ஊரார் பிள்ளையை எடுத்து வளர்த்து வரும் பணக்காரத் தத்துப் பிதாக்களின் திண்டாட்டம் உமக்கென்ன தெரியும்?” என்று திருஷ்டாந்தத்தினால் ஒரு போடு போடுவார்.
குருக்களுக்குத் தங்கள் ஊர்க் கோயிலிலேயே அர்ச்சகத் தொழிலில் பரம்பரைப் பாத்தியம் உண்டு. அதிலும் ஒன்பதில் ஒருபங்கு முறைப் பாத்தியம் தான் உண்டு. இம்முறைக்காக வேறு எங்கும் செல்லாமல் வருடம் முழுவதும் காத்துக்கொண்டேயிருக்க வேண்டும். முறை வரும் சமயத்தில் இல்லாவிட்டால் எங்கே பாத்தியம் போய்விடுகிறதோ என்று பயந்து வீட்டை விட்டு அகலமாட்டார். தம் முறையில் பிரமோத்ஸவம் வந்துவிட்டால் ஒரே கொள்ளை தான் என்று அதனையே எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார். அது வரப் பல வருடங்கள் செல்லும். ஒருதடவை அம்முறை வந்தது. ஆனால் அந்த ஆண்டில் சுற்றுப் பக்கங்களில் தொத்து வியாதி கண்டது, சர்க்கார் திருவிழாவிற்குத் தடை உத்தரவு போட்டு விட்டார்கள். உத்ஸவத்திற்குக் கூட்டம் இல்லை. குருக்களுக்கு வரும்படியுமில்லை. தலைவிதி என்று நொந்துக்கொண்டார். எல்லாம் இலவு காத்த கிளிபோல் ஆயிற்று. பாவம்! குருக்கள் என்ன செய்வார்? தம் கொள்கையைக் கைப்பிடித்துக்கொள்ள வேறு முயற்சிகளில் புக எண்ணினார்.
இவருக்குத் தாம் வாழும் ஒரு புராதன ஓட்டு வீடு உண்டு. அதனை எந்த நூற்றாண்டில் எந்த மகான் கட்டித் தந்தாரோ, தெரியவில்லை. மூங்கில்கள் இற்றுப்போய் அடிக்கடி ‘மகரந்தப் பொடி’களைச் சிந்திக் கொண்டிருக்கும். வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டு அம்மூங்கில் துவாரங்களில் பரம்பரையாக வாழ்ந்து வரும். அப்பரம்பரை நமது குருக்களின் பரம்பரைக்குச் சிறிதும் கால அளவையில் குறையாது. ஓடுகளைச் செய்த குயவன் பரம்பரையும் இன்னமும் அவ்வூரில் இருக்கிறதென்று பெருமையுடன் பேசுவார். அதனை ஆமோதித்து அவ்வூர்ப் பெரிய குயவன், 95 வயது முதிர்ந்த சுப்ப வேளான், தன் பாட்டனுடைய பாட்டன்தான் அவ்வோடுகளை வனைந்தவன் என்று சொல்லி ஆண்டுக்கு ஒருமுறை தேங்காய், பழம், பூமாலை முதலிய வரிசை மரியாதைகளைக் குருக்களிடம் வாங்கிச் செல்வான். ஆனால் ஒரு பழைய ஓடு உடைந்து போனால் ஒரு புது ஓடு வெறுமனே தரவே மாட்டான்.
வீட்டிலே குருக்களுடன் போட்டிபோட மற்றத் தேவதைகள் உடன் வருவார்கள் என்றால் அதன் மகிமைகள் என்ன என்று சொல்ல வேண்டும்? பகல் வேளையில் கதிரவனும, இரவில் சில நாள்களில் திங்களும், மழைக்காலத்தில் வருண பகவானும் அதிதிகளாக வந்து சில தடவைகளில் நிரந்தரமாக இருக்கவும் முயலுவார்கள். ஓடுகளில் காணும் ஜன்னல்களின் வழியாக இருபத்தேழு நட்சத்திரங்களும் சிலதடவை கிரகங்களும் எட்டிப் பார்க்கும் என்றால், “சின்னச் சின்ன தாரகையாய்!” என்ற மின்னும் தாரகைப் பாடலை ஆங்கிலத்தில் இயற்றிய கவிஞரும் “என் திரைக்குள் நுழைந்திடுவாய். என்று சொன்னபோது இந்த வீட்டினுடைய பிரபாவத்தைக் கண்டு தான் பாடினாரோ என்று ஐயங்கொள்ள வேண்டி வரும் எனலாமோ? இனிமேல் அடுப்பு, அடுக்களை, புறக்கடை. கிணறு. தாழ்வாரம், முற்றம் இவைகளை வருணிக்க வேண்டிய தில்லை எனலாம். அவைகளும் இத்தன்மைக்கு குறைந்த மகிமை கொண்டவை யல்ல என்று மாத்திரம் சொல்லி, சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல், விரித்தால் பெருகும்; முதலிய அழகுகள் உத்திகள் ஆகிய கோட்பாடுகளுடன் இதனை நிறுத்திக் கொள்வோம்.
சுப்பராயக் குருக்கள் தம் கைக்கு வரும் துட்டுகளுக்கு ஏற்றபடி ‘மந்திரம் சொல்லுவார். ஒரு பணக்காரக் காரைக்குடிச் செட்டியார் வந்தபோது இவர் சொன்ன அர்ச்சனை எப்போது முடியுமோ என்று தீபாராதனை மட்டும் செய்யவந்த பேர்கள் ஏங்கிக்கொண்டி ருந்தார்கள். ஆனால், ஒரு நாள் ஒரு ஏழை லௌகீகப் பிராமணர் வந்தார். அவருக்காகச் செய்த அஷ்டோத்தர சத அர்ச்சனையில் 28 பெயர்களில் அர்ச்சனையைப் பூர்த்திசெய்து கற்பூரம் பற்ற வைக்கத் தொடங்கினார். ஏழைப் பிராமணர் சுவாமின்னு! எத்தனை நாமங்களை உச்சரித்தீர்கள்? 108 -ம் இவ்வளவில் சொல்லி விட்டீர்களா? என்று பரிதாபமாய்க் கேட்டார். “ஏங்காணும், நீர் அஷ்டோத்தரம் என்றால் அர்த்தம் தெரியுமா?” என்று உரக்கக் கூவினார். “என்ன சுவாமி, உங்கள் தாற்பரியம் என்ன?” என்று மெதுவாய்க் கேட்டார் அவர். “அஷ்டம் என்றால் எட்டு; உத்தரம் என்றால் பின்னால், ஆகவே அஷ்டோத்தரம் என்ற பதங் களுக்கு, பின்னால் எட்டுக் கொண்டது என்பது அர்த்தம். ஆகவே அது 18. 28, 38 என்ற எதுவும் இருக்கலாம் அல்லவா? நீர் தருகிற இரண்டணாத் துட்டுக்கு 28 போதாதா? நான்கு பெயர்களை அதிகமாகவே உச்சரித்துவிட்டேன்!” என்று விடையளித்தார். லௌகீகப் பிராமணர் மறுமொழி கூறாமல் விபூதி பெற்றுக் கொண்டு போனார். இவ்விதம் சமயத்துக்கு ஏற்றபடி, சாதுரியமாகவும் பேசவல்லவர் நமது குருக்கள். ஆனால் இந்தத் திருட்டுத்தனம் எத்தனை நாட்களுக்குச் செல்லும்? ஆலய கைங்கரியத்திலிருந்து வரக்கூடிய வரும்படி நாளுக்கு நாள் குறைந்தது. குடும்பமோ பெருகிற்று.ஆனமுதலில் அதிகம்செல’ வானால் மானம் அழியும்’ தருணம் சமீபித்தது.
சென்னிமலை முத்துச்சுவாமிக் குருக்கள் வெகு நிம்மதியாக வாழ்கின்றார் என்று சொல்லுகிறார்களே. அவர் தான் எவ்விதம் வாழ முடியும்? அதனை அறியவேண்டும் என்று வெகு ஆவல் கொண்டார் நமது குருக்கள். இவர் ஒரு நாள் சென்னிமலைக்குச் சென்று அவருடைய ஜீவன உபாயத்தை அறிய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். தம் மனைவியிடம் கட்டுச்சாதம் கட்டச்சொல்லி அதனை எடுத்துக் கொண்டு சென்னிமலைக்குப் புறப்பட்டார். பல நாட்கள் நடந்து சென்னிமலைக்குச் சென்று முத்து சுவாமிக் குருக்களைக் கண்டார். அக்குருக்களோ தம் இனத்தைக் கண்டு வெகு ஆவலுடன் வரவேற்று “சுவாமி! வெகுதூரம் புறப்பட்டு வந்திருக்கிறீர்கள். அங்கே காலட்சேபம் சரியாக நடக்கிறதா?” என்று கேட்டார்.
“அதைப்பற்றிச் சொல்வானேன்? சிறிய கோயில், யாத்திரிகர்கள் மிகக்குறைவு. குடும்பங்கள் குசேல வம்சத்தினர். திருவிழாவிற்கே ஆஸ்பதம் ஏற்படுவதில்லை. போதாக்குறைக்கு அடியேன் முறையில் அதிகாரிகள் 144 போட்டு வயிற்றில் அடித்து விட்டார்கள். உஞ்ச விருத்தி எங்கள் குடும்பத்தில் கிடையாது. மானம் இருக்கிறதல்லவா? ஈசுவரன் கருணை இந்த நிலையில் இருக்கிறது !” என்றார் இவர்.
“தங்கள் கோயில் ஒரு நல்ல இடம் என்று கேள்விப்பட்டேன்!”
“அது முன்காலத்தில் குடியானவர்கள் நன்றாய் இருந்தார்கள். பம்பல் காலத்தில் ஏராளமான தானியம் கிடைக்கும். ஒரு வருஷத்திற்கு அதுவே போதும். ஆனால் இப்போதோ மழைமாரி சரியாகப் பெய்வதே இல்லை. அவர்கள்தான் என்ன செய்வார்கள்? குடிகள் ஷேமம் இல்லையெனில் குருக்களுக்கு எங்கே? காலம் கெட்டுப்போச்சு!”
”சுவாமி! எங்குமே அப்படித்தான் சென்னிமலை தான் எப்படி என்கிறீர்கள்? அருச்சனைக் காசே இல்லை. உண்டியல் நிரம்புவதே கிடையாது. போதாக்குறைக்கு 25 பங்கு. ஆகவே எங்கள் பங்குக்கு என்ன வரும்?”
“என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்? தங்கள் பெயர் நாடு முழுவதும் அடிபடுகிறதே, எத்தனை பேருக்கு அர்ச்சனை விபூதி தருவதாகச் சொல்லுகிறார்கள்! சுவாமிகள் சும்மா விபூதி தருவீர்களா?”
“என்னமோ, உஞ்ச விருத்திதான். இதில் என்ன கௌரவம்? முக்காணிகளும், தீட்சிதர்களும் போலவா நாம் இருக்கிறோம்?”
“முக்காணிகளும் தீட்சிதர்களும் என்ன செய்கிறார்கள்? அவர்கள் யோகஷேமம் எனக்குத் தெரியாது; சற்று கூறுங்கள்” என்று ஆவலுடன் கேட்டார்.
முக்காணிகள் திருச்செந்தூரிலிருக்கும் ஒரு வகையான பிராமணக் குடிகள். சண்முகக் கடவுளைத் தரிசிக்க வரும் யாத்திரிகர்களை வரவேற்றுச் சகல மரியாதைகளும் செய்து சுவாமி தரிசனம் செய்துவித்துப் பின் வேண்டிய மட்டும் காணிக்கை பெறுவார்கள். விபூதிப் பிரசாதம் தபாலில் அனுப்புவார்கள். சிஷ்யர்கள் நேரில் வந்தாலோ கொள்ளைதான்!”
“தீட்சிதர்களோ?’
“தீட்சிதர்களோ சிதம்பரத்தில் இருப்பவர்கள், தில்லை மூவாயிரவர்கள் என்று சொல்லிக் கொண்டு பல மான யாத்திரிகர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு இட வசதி முதலியவைகளைத் தந்து வேண்டிய மட்டும் பணம் சம்பாதிக்கிறார்கள். சிலர் இலட்சாதிபதிகளாகி விட்டார்கள். அவர்களும் விபூதி அனுப்புவதுண்டு. திருவாதிரை ஆனித் திருமஞ்சனம் வந்து விட்டாலோ, கொள்ளை தான்”
“நமக்குத் தரிசனமோ மஞ்சனமோ வருவது கிடையாது. ஆகவே எவ்வித காலட்சேபம் செய்ய முடியும்?”
“நானும் அதுதான் நினைத்தேன். கடைசியில் விபூதிப் பிரசாதத்தைத்தான் கடைப் பிடித்தேன். இப்போது ஜீவனம் ஒருவாறு தேவலை.”
“அது எப்படிச் செய்வது? அண்ணா !”
“வெகு சுலபம், ஒருதரம் அர்ச்சனை செய்வது : அவ்விபூதியை ஒரு மணங்கு விபூதியுடன் கலப்பது; அச்சடித்த தாளோடு ஒரு உறையுள் வைத்துத் தபாலில் ஆசாமிகளுக்கு அனுப்புவது-இதுதான்”
“மிகவும் சுலபாய் இருக்கிறதே! எத்தனை தருவார்கள்?”
”வருஷத்திற்கு ரூ.3-8-0 வாங்குகிறது. அணா 0-8-0 தபால் போனால் ரூ.3 லாபம்” என்றார்.
இவ்விதம் வெகு நேரம் பேசிவிட்டு வெகு சந்தோஷமாக விடைபெற்றுச் சென்றார் சுப்பராயக் குருக்கள். மாதிரியாக ஒரு விபூதிப் பொட்டணமும் அச்சடித்த துண்டுக் காகிதமும் பெற்றுக் கொண்டு புதையல் எடுத்த ஒரு ஏழை மகனைப்போல் மிகுந்த ஆனந்தத்துடன் ஊர் போய்ச் சேர்ந்தார்.
அன்று முதல் இப்புது முயற்சியில் இறங்கினார். அடியில் கண்டபடி ஒரு சீட்டு அச்சு அடித்தார்.
சிவமயம்
பிரம்மஸ்ரீ சுப்பராயக் குருக்கள்
கள்ளிக்குடி
தேதி
பரம ஆஸ்திகரும் எமது பரமானந்த சிஷ்யருமான ஸ்ரீமான்-அவர்களுக்கு
உபய குசலோபரி ஆசீர்வாதம்
நாளது கிருத்திகையின்போது பார்வதி ஸமேத சிவ பெருமான் திவ்ய திருவடிக் கமலங்களுக்கு அருச்சித்துத் தங்கள் ஷேமத்தைக் கோரி அருச்சனை புரிந்து திருப்பிரஸாதமாகிய விபூதியை அனுப்பித் துள்ளேன். பெற்றுக் கொண்டு சுகத்திலிருக்கவும்.
வருஷக் காணிக்கை ரூ.3-8-0
விதேயன்
சுப்பராயக் குருக்கள்
ஆயிரம் பன் உறைகள், சீட்டுகள், விபூதிப் முதலியவைகள் தயாராகிவிட்டன. முதல் தபாலில் தெரிந்த அக்கம்பக்கத்துக் குடியானவர்களுக்குத் தபால் மூலம் அனுப்பினார். குடியானவர்கள் சுவாமி பிரஸாதம் என்று மிகுந்த பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார்கள். யுத்தம் ஆரம்பித்தவுடனே 1/2 அணா தபால் ஒரு அணா ஆயிற்று. செலவு இரட்டித்தது, ஆனால் பக்த கோடிகள் காணிக்கைகள் அனுப்புவது கிடையாது. குருக்கள் என்ன செய்வார்? தாமே நேரில் சென்று காணிக்கை கேட்க ஆரம்பித்தார். ஒன்றிருவரே கொடுத்தார்கள். ஏனையோர் தவணை சொன்னார்கள். பணம் கேட்டதை எண்ணிச் சிலர் வெலவெலத்துப் போனார்கள்.
“ஐயரே! உம்மை யார் அனுப்பச் சொன்னது? இனி நிறுத்திவிடுங்கள்” என்று வெடுக்கெனத் தாட்சண்யம் இன்றியும் சிலர் சொன்னார்கள். பணம் இல்லாத காலத்தில் என்ன செய்வார்கள்? முடிவில் வி.பி. வாபசு ஆகிவிட்டது. உள்ளதும் போய்விட்டது. என்ன செய்வார்? பாவம்! இந்தப் புது முயற்சியில் கையிலிருந்து நூற்றுக்கணக்காகச் செலவாகிவிட்டது. கடனும் ஏற்பட்டது. “என்ன, கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதே” என்று பிரலாபித்தார் குருக்கள், இருந்த ஒரு வீடும் தாவர சொத்தாக இருந்தது சங்கமச் சொத்தாகி விட்டது! ‘புது வியாபாரத்தில் இறங்கினது போதும்’ என்று சொல்லிச் சாய்ந்தார் குருக்கள் திண்ணையின்மீது.
– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.