தள்ளாடும் வயசு தடுமாறும் மனசு
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 99

நவரசபட்டியின் மேற்கே அமைந்திருக்கும் நந்தி வாய்க்கால் பாலக்கட்டையில், புங்கை மர நிழலில், சோழ தேசத்து வாரிசுகளைப் போல, நண்பர்கள் கரிகாலனும், சுந்தரபாண்டியனும் அமர்ந்திருந்தார்கள்.
அப்போது, சுந்தரபாண்டியனின் முகம் மட்டும் அந்த நிழலிலும் வாடிப்போய் இருந்தது.
“ஏண்டா சுந்தரபாண்டி? ஏன் ஒருமாதிரியா இருக்க? “
கரிகாலன் அக்கறையுடன் கேட்டான்.
பெருமூச்சுவிட்ட பாண்டியன்,
“அது ஒன்னும் இல்லடா… எங்க தாத்தாவும் பாட்டியும் இந்தத் தள்ளாத வயசுல ரொம்ப கஷ்டப்படுறாங்க. அதை நினைச்சாத்தான் மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு,” என்றான் வருத்தத்துடன்.
“ விடுடா… வாழ்க்கைனாலே மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும். அவங்க கஷ்டம் எல்லாம் சீக்கிரம் தீர்ந்துடும். நம்பிக்கைதான் வாழ்க்கை! அதை விடு, உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்னு வரச் சொன்னியே, என்னடா?” பேச்சை மாற்றினான் கரிகாலன்.
“நான் சொல்லலடா… நீதான் ஏதோ சொல்லணும்னு என்ன நீ இங்க வரச் சொன்ன?”
“ஆமாண்டா! மறந்துட்டேன்! பத்து நாளைக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தைப் பத்திதான் சொல்ல வந்தேன்.”
“சொல்லு…”
“நான் பத்து நாளைக்கு முன்னாடி உழவர் சந்தைக்கு போயிருந்தேன். அங்க பக்கத்துல ஒரு இளநீர் கடை இருந்துச்சு.”
“சரி “
“ நான் கடைக்காரரிடம் ஒரு இளநீர் வேணும்னு கேட்டேன். உடனே அவரு இளநீர் எப்படி வேணும்னு கேட்டாரு.”
“நீ என்ன சொன்ன?”
“என்கிட்ட இளநீர் வெட்டி சாப்பிட அருவா எல்லாம் இல்ல. அதனால நீங்க இளநீர வெட்டி, குடிக்கிற மாதிரி குடுங்கன்னு கேட்டேன்”
“சரி அவர் வெட்டி கொடுத்தாரா?”
“இல்லையே! அவரே திரும்பவும் எந்த மாதிரி இளநீர் வேணும்னு திரும்பத் திரும்ப கேட்டாரு!”
“சரி நீ என்ன சொன்ன?”
“நான் எனக்கு உப்பு கரிக்காம, நிறைய தண்ணி இருக்கிற மாதிரி, ருசியாவும், லேசா வழிச்சு திங்கிற மாதிரி இளநீர் கொடுங்கன்னு கேட்டேன். ஆனா அவரு திரும்ப திரும்ப இளனி எப்புடி வேணும்னு கேட்டாரு.”
“உனக்கு கோவம் வந்திருக்குமே?”
“இல்ல அவரு வயதானவர்ங்கறதுனால நான் கோவப்படாம பொறுமையா இருந்தேன்.”
“அப்புறம் என்ன ஆச்சு?”
“அவரு அங்க இருக்கிறதிலேயே ரொம்ப சின்னதா ஒரு இளநீர் வெட்டி கொடுத்தார். அது அரைக்காயா இருந்துச்சு. நான் தண்ணிய மட்டும் குடிச்சிட்டு தேங்காயை விட்டு எறிஞ்சிட்டேன்.“
“அப்புறம்?”
“நான் “என்னங்க ஐயா. இளநி கேட்டா நீங்க அறக்காய வெட்டி கொடுக்குறீங்க” ன்னு சொன்னேன். உடனே அவரு இன்னொரு இளநீய வெட்டி என்கிட்ட கொடுத்தாரு ”
“சரி அந்த இளநீர் எப்படி இருந்துச்சு?”
“அதுல தண்ணி நிறைய இருந்துச்சு. ஆனா உப்பு இளநீயா இருந்துச்சு”
“ சரி அந்த இளநிக்காரர திட்டுனியா?”
“இல்லடா. அவர் பார்க்கவே ரொம்ப பரிதாபமா இருந்தாரு. அப்புறம் அவரே இன்னொரு இளநீர் வெட்டி கொடுத்தாரு. நானும்
குடிச்சேன். அந்த இளநீர் ரொம்ப நல்லா இருந்துச்சு தண்ணியும் நிறைய இருந்துச்சு.”
“அப்புறம் இளநீகாரருக்கு எவ்வளவு பணம் கொடுத்த?”
“அவரு தயங்கி தயங்கி 180 ரூபா என்று சொன்னாரு. அவர பாக்க ரொம்ப பாவமா இருந்துச்சு. நான் அவர்கிட்ட 200 ரூபாய் கொடுத்துட்டு மீதி பணத்தை வாங்குறதுக்காக நின்னுட்டு இருந்தேன். அவரு பணத்த வாங்கின உடனேயே அப்படியே மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாரு”
“ஏன் என்ன ஆச்சு?”
“அவருக்கு ரெண்டு நாளா காய்ச்சலாம். அதோட அதா அவரு இளநீர் வித்துக்கிட்டு இருந்திருக்காரு”
“அப்புறம்?”
“அப்புறம் நான் தான் அவர என்னோட வண்டியில ஏத்திட்டு போயி பக்கத்துல ஒரு மருத்துவர பார்த்து மருந்து மாத்திரை ஊசி எல்லாம் போட்டு அவர வீட்டில போய் விட்டுட்டு வந்தேன்”
“உனக்கு எவ்வளவு செலவு ஆச்சு?”
“எனக்கு அன்னைக்கு மேற்கொண்டு ஒரு 350 ரூபாய் ஆச்சு. ஆனா மனசுக்கு ஒரு திருப்தி கிடைச்சுச்சு.”
“உனக்கு ரொம்ப நல்ல மனசு டா!”
“ஒரு வாரத்துக்கு முன்னாடி வயலூர் போயிருந்தப்ப அங்க ஒரு இளநீர் விக்கிறவர பார்த்தேன். நல்ல வெயில் நேரம். நான் அவரிடம் ஒரு இளநீர் வெட்டி கொடுங்கன்னு கேட்டேன்.
உடனே அவரு, ‘எப்படிப்பட்ட இளநீர் வேணும்?’னு கேட்டாரு.”
“அங்கேயும் அதே கேள்வி தானா?”
“அவசரப்படாம சொல்றத கேளுடா ! நான் எனக்கு இளநீ தான் வேணும் அப்படின்னு சொன்னேன். ஆனா அவரு திரும்பவும், ‘என்ன மாதிரி இளநீர் வேணும் னு என்ன கேட்டார்.”
“நானும் திரும்ப எனக்கு இளநீ தான் வேணும்னு சொன்னேன்.”
“சரி அதுக்கு அவர் என்ன சொன்னாரு?”
“சரி தம்பி இளநீர் எப்படி இருக்கும்னு உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க பாப்போம்!
என்று அவர் என்னிடம் நக்கலாக கேட்டார்.”
“சரிடா நீ என்ன சொன்ன அவர்கிட்ட?”
“ஐயா தென்ன மரத்துல காய் புடிச்ச பிறகு 2.5 மாசம் இல்லன்னா மூணு மாசத்துல பறிக்கிறது தான் இளநி. அப்ப பறிச்சு சாப்பிட்டா தண்ணி நிறைய இருக்கும். குடிக்க ருசியா இருக்கும். வழிச்சு சாப்பிட நல்ல பதமா இருக்கும். அதுக்கு பேருதான் இளநி. இது தெரியாம நீங்க இளநீர் எப்படி வேணும்னு என்ன கேக்குறீங்க!” அப்படின்னு நான் சொன்னேன். உடனே அவரு,
“தம்பி நீங்க சொல்றதெல்லாம் சரிதான்! நாங்க எல்லாம் அன்னன்னைக்கு வித்து பிழைக்கிறவங்க. இன்னைக்கு நாலு இளநீர் விக்காம மிஞ்சி போச்சுன்னா அதை அடுத்த நாளு வித்து காசாக்கணும். இல்லன்னா எங்களுக்கு நட்டம். அப்புறம் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம். அதனால நாங்க வர்றவங்க கிட்ட இப்படி கேள்வி கேட்டு அவங்கள ஒரு குழப்பு குழப்பி, அவங்கள இன்னொரு இளநியையும் வாங்கி குடிக்கிற மாதிரி பண்றது தான் எங்களுடைய நோக்கம். எங்களுக்கு வேற வழி தெரியல.* இப்படி அவர் சொல்லவும் எனக்கு மேற்கொண்டு ஒன்றும் சொல்ல தோணல. ”
“அடடே! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?” சுந்தரபாண்டியன் ஆச்சரியப்பட்டான்.
கரிகாலன் தொடர்ந்தான்.
“இது மட்டுமல்ல சுந்தரபாண்டி, நான் போன வருஷம் என் புத்தகத்தை அச்சுப் போட சிவகாசி போயிருந்தப்போ, யாழ்ப்பாணத் தேங்காய் மாதிரி ஒரு பெரிய இளநீரைப் பார்த்தேன். குண்டுப் பூசணிக்காய் மாதிரி பச்சை பசேல்னு இருந்துச்சு. 50 ரூபாய்தான். குடிச்சா மனசுக்கும் வயிறுக்கும் அவ்வளவு நிறைவு.”
“கேட்கவே நல்லா இருக்கே. வரட்சியான இடத்துல ஒரு புரட்சியினே இத சொல்லலாமே!..”
“அதேமாதிரி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தெப்பக்குளத்துக்கிட்ட குடிச்ச இளநீர் சின்னதா இருந்தாலும் சுவை பிரமாதம். விலையும் 40 ரூபாய் தான். ஆனா, போன மாசம் நம்ம கொடிமரத்து மூலையில ஒருத்தர் வித்த இளநீர் இருக்கே… சும்மா சப்புன்னு இருந்துச்சு. ஆனா விலை 40 ரூபாய்தான். இப்படி ஊருக்கு ஊரு, ஆளுக்கு ஆளு விதவிதமா விலை வச்சி விக்கிறாங்க .”
“உண்மைதான்டா. இப்பல்லாம் தரத்தை விட தந்திரம் தான் வியாபாரத்துல அதிகம் ஆகிடுச்சு,”
சுந்தரபாண்டியன் விரக்தியாகச் சிரித்தான்.
“அதுமட்டுமில்ல, போன வாரம் நம்ம பசங்களோட நாஞ்சிக்கோட்டைக்குக் கபடி விளையாடப் போயிருந்தோம். அங்க நடந்ததைக் கேளு. ஒரு வயசானவரும் ஒரு சின்னப் பையனும் இளநீர் வித்துட்டு இருந்தாங்க. அந்தப் பையன் ஒரு இளநீர் 60 ரூபாய்னு சொன்னான். ஆனா பக்கத்துல அந்தப் பெரியவர் 40 ரூபாய்னு சொன்னாரு. சரின்னு, நாங்க ஏழு பேரும் ஆளுக்கொரு இளநீர் வாங்கிகுடிச்சோம்.”
“பரவாயில்லையே, விலை குறைவா இருக்கே?”
“அங்கதான் விஷயமே! குடிச்சு முடிச்சுட்டு காசு கொடுத்தா, அந்தப் பெரியவர், ‘தம்பி ஒரு இளநீர் 40 ரூபாய், ஆனா வெட்டுக் கூலி 30 ரூபாய். ஆக மொத்தம் ஒரு இளநீருக்கு 70 ரூபாய் கொடுங்க’ன்னு சொல்லிட்டாரு. ஏழு இளநீருக்கு 490 ரூபாய் புடுங்கிட்டாரு! யோசிச்சுப் பாரு… வெட்டுக் கூலின்னு சொல்லி இப்படிப் பகல் கொள்ளை அடிக்கிறாங்களே… இவங்கல்லாம் உருப்படுவாங்களா?” கரிகாலன் ஆவேசமாகக் கொந்தளித்தான்.
சுந்தரபாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக வானத்தைப் பார்த்தான். அவன் கண்களில் ஈரம் கசிந்தது.
“டேய்… நான் அந்த ஏமாத்துக்காரக் கிழவரைத் திட்டுனா நீ ஏன்டா கண் கலங்குற?”
பாண்டியன் மெல்லிய குரலில் சொன்னான்,
“டேய் கரிகாலா… நீ சொல்ற அந்த ஆலமரத்து அடியில கடை போட்டிருந்த பெரியவர் வேற யாரும் இல்லடா… அது என் தாத்தா. கூட இருந்தது எங்க சொந்தக்காரப்பையன்.”
கரிகாலனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“என்னடா சொல்ற?”
“ஆமாடா… பாட்டிக்கு உடம்பு சரியில்ல. கை கால் வராம படுத்த படுக்கையா கிடக்கிறாங்க. அவங்களுக்கு மருந்து வாங்கத்தான் தாத்தா அந்த வயசுல அப்படி ஒரு வியாபாரம் பண்றாரு. நியாயமா வியாபாரம் பண்ணுனா வர்ற லாபம் வைத்தியச் செலவுக்குப் பத்தாது. அதான் ‘வெட்டுக் கூலி’ன்னு சொல்லி கொஞ்சம் அதிகம் வாங்குறாரு. மத்தபடி அவர் யாரையும் ஏமாத்த நினைக்கலடா… சூழ்நிலை அவரை அப்படி மாத்திருச்சு.”
பாண்டியன் சொல்லி முடித்ததும், கரிகாலனுக்குத் தான் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனுக்கே சவுக்கடியாக விழுந்தது போல் இருந்தது.
வியாபாரம் என்பது வெறும் பணப் பரிமாற்றம் மட்டுமல்ல; சிலருக்கு அது வாழ்வாதாரப் போராட்டம்.
‘ஏமாற்றுக்காரர்கள்’ என்று தான் முத்திரை குத்திய ஒருவருக்குப் பின்னால், படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு பாட்டியின் மருத்துவச் செலவும், தள்ளாத வயதில் உழைக்கும் ஒரு தாத்தாவின் கண்ணீரும் இருப்பது அவனுக்குப் புரிந்தது.
கரிகாலன் சுந்தர சுந்தரபாண்டியனின் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டான்.
வீசும் காற்று இப்போது அனலாக இல்லாமல், கொஞ்சம் இதமாக வீசுவது போல் இருந்தது.
![]() |
என்னைப் பற்றி சில வரிகள்: நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத ஆரம்பித்து கடந்த 22.02.2025 அன்று எனது இசையின் எதிரொலிகள் எனும் சிறுகதை தொகுப்பினை வெளியிட்டுள்ளேன். கடந்த 12.11.2025 அன்று எனது "மாமோய்"எனும் சிறுகதை ராயகிரி சங்கர் அவர்கள் நடத்தும் மின் இதழில் வெளிவந்துள்ளது. எனது"விலை போகும் உறவுகள்", "மாற்றத்தின் சீற்றங்கள்"மற்றும்"மயக்கத்தின் மறுபக்கம்"ஆகிய மூன்று சிறுகதைகளும் தங்களது"சிறுகதைகள்" மின் இதழில் கடந்த 18.11.25 இன்றும் அன்றும் 24.11.25 அன்றும்,30.11.25…மேலும் படிக்க... |
