தரிசனம்
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2026
பார்வையிட்டோர்: 303
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நகரத்தின் ஆத்மா மூச்சுத் திணறுகிறது.
நகரமென்ன, முழுத் தேசமுமே கொதித்துக் கொந்தளித்து எரிமலையாகி நிற்கின்றது.
புகைவண்டிகள் ஓடவில்லை.
ட்றாம் வண்டிகளைக் காணோம். சாலைகளில் பஸ் வண்டிகளில் ஒன்றைத்தானும் காணவில்லை. மோட்டார்
வாகனங்கள் கண்ணில் தென்படவில்லை. முச்சக்கர பைசிக்கிள்றிக்சோக்கள் எல்லாம் காணாமல்
போய்விட்டன. பைசிக்கிள் ஒன்றைத் தானும் வீதியில் காணவில்லை.
சாலைகள் வீதிகள், நெடுந்தெருக்கள் எல்லாம் ஆளரவமற்று வெளிச்சோடிக் கிடக்கின்றன.
நகரத்தின் ஆத்மா எப்படி மூச்சுத் திணறும்?
தேசத்தின் உயிர் நாடியான ஹுக்ளி நதியில் ஒரு படகைக் கூடக் காணவில்லை.
படகுகள் அனைத்தையும் நதிவிழுங்கி ஏப்பமிட்டு விட்டதா?
ஆயிரக் கணக்கான பாதசாரிகள், மோட்டார் வாகனங்கள், புகை வண்டிகள் எல்லாம் ஏக காலத்தில் போவதும் வருவது மாக ஜீவத் துடிப்புடனிருந்து கொண்டிருக்கும் பிரசித்தி பெற்ற ஹௌராப் பாலம் இன்று ஆளரவமற்று வெறிச்சோடி சோகத் தின் உருவாய் நிற்கின்றது. அரச அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், கடைகள், அங்காடி வியாபாரக் கடைகள், சாப்பாட்டுக் கடைகள், பிரபல ஹோட்டல்கள், பாடசாலை கள், கல்லூரிகள் எல்லாமே மூடிக் கிடக்கின்றன.
தொழிற்சாலைகள், மில்கள், ஆலைகள் ஒன்றும் இயங்க வில்லை.
வங்கம் மூச்சுவிட மறந்து விட்டதா?
நகரத்தின் சாலைகள், வீதிகள், தெருக்கள் எல்லாவற்றி லும் திடீரென ஜீவத்துடிப்பு! மக்கள் சமுத்திரம் அலை மோதல்!
மக்கள் சக்தியின் பேரெழுச்சி!
நகரத்தின் பிரதான சாலைகள், வீதிகள், தெருக்கள் வழியாக முட்டி மோதி அலைபாய்ந்து ஆக்ரோசமாய் வந்து கொண்டிருக்கின்றன ஊர்வலங்கள். நகரத்தின் நெஞ் சிலே யுள்ள சௌறங்கி சதுக்கத்தை நோக்கி மக்கள் பிரவாகம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு பாய்ந்து கொண்டிருக் கிறது.
கல்கத்தா நகரத்தின் ஆத்மா மூச்சுத் திணறுகின்றது. ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயி கள் அரச, தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், ஆண்கள், பெண்கள், மாணவர்கள். இளைஞர்கள், வயோதிபர்கள் எல்லோரும் அணிவகுத்து உத்வேகமாய் வந்து கொண்டிருக் கின்றனர்.
வங்கத்தின் ஆசிரியர்கள் தங்கள் ஜீவனோபாயத்துக்கான ஐந்து அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து இரு வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருன் றனர்.
அரசாங்கம் பாராமுகமாய் இருக்கின்றது.
அரசின் கவனத்தை ஈரப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆசிரி யர்கள், நகரத்தின் நெஞ்சிலேயுள்ள சௌரங்கி சதுக்கத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்னால் அமர்ந்து சத்தியாக் கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
சத்தியாக்கிரகப் போராட்டம் ஒரு வாரத்தையும் தாண்டு கின்றது.பலனேதுமில்லை.
உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. பத்து நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் நீடிக்கின்றது. அரசு மெளனமாயிருக்கின்றது.
சில உண்ணாவிரதிகளின் நிலை கவலைக்கிடம். அரசின் பிடிவாதப் போக்கைக் கண்டித்து ஊடகங்கள் குரலெழுப்புகின்றன.
மக்கள் கொதித்தெழுகின்றனர்.
ஆசிரியர்களது நியாயமான போராட்டத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பதற்குப் பதிலாக அரசு மாற்று நடவடிக் கையிலிறங்குகின்றது.
உண்ணாவிரதமிருக்கின்ற ஆசிரியர்களை வன்முறை மூலம் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கிறது. பொலிஸ் களத்தில் இறங்குகின்றது.
பொலிஸ் படையின் பொறுப்பதிகாரி றாய் சௌத்திரி.
நாச தேவதையின் பிறவியாய் சௌத்திரி.
சௌத்திரியின் கையில் எந்த நேரமும் யாரையாவது தாக் குவதற்குத் துடித்துக் கொண்டிருக்கும் லத்திக் கம்பு. எவரை யாவது சுடுவதற்குக் காத்துக் கொண்டிருக்கும் கைத்துப் பாக்கி அவனது இடுப்பில்.
சௌத்திரியின் விழிகளில் எரியும் கனல்.
கொம்பு மீசை அவனது விசர் பிடித்த முகத்தை மேலும் கோரமாக்குகின்றது.
ரத்த வெறி பிடித்த அவன் போராளிகளைத் தாக்குவ தற்குத் தவித்துக் கொண்டிருக்கின்றான்.
எத்தனையோ தொழிற்சங்கத் தலைவர்கள், பிரபல அரசி யல்வாதிகளின் தலைமையில் நடந்த தொழிற்சங்கப் போராட் டங்களையும், அரசியல் ஆர்ப்பாட்டங்களையும் சௌத்திரி வன் முறைத் தாக்குதல்களால் முறியடித்து அடக்கு முறை அரசாங் கங்களின் பாராட்டுதல்களையும் பதவி உயர்வுகளை யும் பெற்றிருக்கின்றான்.
பதினைந்து வருடங்களுக்கு மேலாக சௌத்திரியின் புகழ். அடக்குமுறைச் சக்திகளின் மத்தியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது-
சௌரங்கி சதுக்கத்திலுள்ள காந்தி சிலைக்கு முன்னால் உண்ணாவிரதமிருக்கின்ற ஆசிரியர்களை, சௌத்திரியின் தலைமையில் பொலிஸ்படை அடித்து உதைத்துத் தாக்கி அப்புறப்படுத்த முயல்கின்றது.
வன்முறை வெடிக்கின்றது. இருதரப்பும் மோதல், தடியடிப்பிரயோகம்.
துப்பாக்கிச்சூடு!
மூன்று ஆசிரியர்கள் பலி!
அநேகர்படுகாயம்.
புரட்சியின் தொட்டில் வங்கம்.
வங்கம் கொதித்தெழுகின்றது.
வங்கத்தின் சகல பகுதிகளிலுமிருந்து மக்கள் வந்து நகரத்தை முற்றுகையிடுகின்றனர்.
நகரத்திலும் சுற்றுப் புறங்களிலுமுள்ள பாடசாலைகள், கல்லூரிகள், புகையிரத நிலையங்கள், சந்தைக் கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில் தற்காலிகமாகத் தங்கியிருக்கின்ற மக்கள் களத்திற்குப் புறப்படுகின்றனர்.
ஊர்வலம் ஆரம்பமாகின்றது.
ஆசிரியர்கள்,மாணவர்கள், அரசாங்க, தனியார் நிறுவனங் களின் ஊழியர்கள், தொழிற்சங்க -விவசாய சங்கங்களின் உறுப் பினர்கள் அனைவரும் அணிதிரண்டு அலையலையாய் ஊர் வலங்களில் வந்து கொண்டிருக்கின்றனர்.
நகரத்தின் சகல பகுதிகளிலுமிருந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
ஊர்வலங்கள் சங்கமித்து சௌரங்கி சதுக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. சௌரங்கி சதுக்கத்திலுள்ள காந்தி சிலை கள்ளங்கபடமற்ற குழந்தைத் தனமான சிரிப்புடன் நிற்கின்றது.
காந்தி சிலை முன்னால் பல்லாயிரக்கணக்கான போராளி கள் அணிதிரண்டு ஊர்வலமாகச் சென்று வங்க மாநில சட்ட சபையை முற்றுகையிட்டு.
ஆசிரியர்களினது ஐந்து கோரிக்கை களும் கிடைக்கும் வரை சட்டசபை உறுப்பினர்கள் அனை வரையும் சிறைப்படுத்தி வைக்கும் வேட்கையுடன் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஊர்வலத்திலுள்ள போராளிகளை அடித்துக் கலைத்து விடும்படி பொலிசுக்கு அரசு கட்டளை.
ஊர் வலத்தில் வந்து கொண்டிருக்கும் போராளிகளை தடுத்து நிறுத்தி அடித்துத் துரத்தும் வெறியுடன் பொலிஸ் படை தயார் நிலையில் அரணாய் நிற்கின்றது.
பொலிஸ் படைக்கு தலைவன் ராய் சௌத்திரி.
ராய் சௌத்திரி பொலிஸ் அரணுக்கு முன்னால் வீறாப்புடன் நிற்கின்றான்.
ஊர்வலம் புறப்படுகின்றது!
‘இன்குலாப்! ஜிந்தாபாத்!‘
‘புரட்சி ஓங்குக!’
கோஷித்தபடியே வாட்ட சாட்டமான ஒரு மாணவன் முன்வருகின்றான்.
சௌத்திரியின் லத்திக் கம்பு உயர்கின்றது.
‘இன்குலாப்! ஜிந்தாபாத்!’
கோஷித்தபடியே மாணவன் சுருண்டு விழுகின்றான்.
மாணவனின் மண்டை பிளந்து, காந்தி சிலைக்கு முன்னா லுள்ள புல் தரையை இரத்தமயமாக்குகின்றது.
‘இன்குலாப்’
ஜிந்தாபாத்! ‘
பிமால் சென்
ஓய்வு பெற்ற ஆசிரியர். எண்பது வயது.
குள்ள உருவம்.
கண்களில் தடித்த மூக்குக் கண்ணாடி
கையில் பொல்லு.
கம்பளிப் போர்வை.
‘இன்குலாப்
ஜிந்தாபாத்!’
கர்ஜித்தபடியே முன்வருகின்றார் பிமால் சென்.
லத்தியை ஓங்கியபடியே
ஓடி வருகின்றான் சௌத்ரி.
நிதானமாக மூக்குக் கண்ணாடியைக் கழற்றுகின்றார் சென்.
பிமால் சென் சௌத்திரியை வெறித்துப் பார்க்கின்றார்.
சென்னின் பார்வையில் அமானுஷ்ய ஜீவத்துடிப்பு. தன் சுட்டு விரலை சௌத்திரியின் நெற்றிக்கு நேராக நீட்டுகின்றார் சென்.
‘நீ! நீ என்னட்டைப் படித்த மாணவனல்லோ!’
சௌத்ரி திகைத்தவனாய் பின் வாங்கி நின்றான்.
சென்னுடைய தீட்சண்யம் மிக்க கண்களை சௌத்ரி உற்றுப் பார்க்கின்றான்.
‘என்னைப் படிப்பித்த ஆசிரியர் போல கிடக்கு.
‘அதே கண்கள்! ‘
சௌத்ரியின் ஞாபகத் தடத்தில் பிமால் சென்னின் விழிகளின் ஞானச் சுடரொளி.
சௌத்திரிக்கு அதிர்ச்சி. சென்னின் பார்வையில் மானிடம் ஜெக ஜோதியாய் சுடர் விடுகின்றது.
ருத்ர அவதாரமாய் ஆசிரியர் சென்.
‘என்ர குரு! ‘ சௌத்திரிக்குப் பேரதிர்ச்சி!
சௌத்திரியின் மனதில் உதைப்பு.
அவமானமும் வெட்கமும் அவனைப் பிடுங்கித் தின்கின்றன. சௌத்ரியின் அதிகாரத் திமிர்த்தனம், வாலிப மிடுக்கு, ரத்தாவேச வெறி, திமிர்த்தனம் எல்லாமே அழிந்து மறைகின்றன.
ஒரு நொடிக்குள் சௌத்ரி அனுதாபத்துக்குரியவனாய் தாழ்ந்து நிற்கின்ற அவலம்.
ஸ்தம்பிப்பில் உறைந்து நிற்கின்றான் சௌத்ரி. அழக்கூடத் தோன்றாத சடமாய் நிற்கின்றான்.
அவமதிக்கப்பட்டுப்போன ஊமைக் காயத்தின் வேதனை சௌத்திரிக்கு.
மனக் கொந்தளிப்பு.
சௌத்திரியின் மனது உருகி மருகித் தவிக்கின்றது.
போர்க் களத்தில் சகல ஆயுதங்களையும் இழந்து, இராமன் முன்னால் நிராயுதபாணியாய் அவமானத்தோடு தலை குனிந்து நிற்கும் இராவணனாய் சௌத்திரி.
தன் தலையிலுள்ள பொலிஸ் தொப்பியை எடுக்கின்றான் சௌத்ரி.
பொலிஸ் அதிகாரியான சௌத்ரியின் தொப்பியும் லத்திக் கம்பும் பிமால் சென்னின் காலடியில்.
– காலவெள்ளம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: செப்டம்பர் 2010, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |