தனித் தனியாய் தாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 311 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூரியன் மொட்டை மாடிக்கு இறங்கி வந்து நிற்பது போலிருக்கிறது. வெயிலின் உக்கிரம். தார் உருகிச் சாலை கொள கொளவென்று கிடக்கிறது. காம் பவுண்டிற்குள் நிற்கும் நெட்டிலிங்கம், வாழை, மா, கொய்யா. மரங்கள் அக்கினியில் குளிக்கின்றன. தோட்டத்தில் இன்று பூத்த பூக்களைத் தொட்டால் சுடுமோ என்னமோ?

பத்து மணிக்குக் கரண்ட் போய்விட்டது. ஹாலில், தாத்தாவின் ஓரத்து அறையில் இந்தப் படிப்பாதை யில் காலனி முழுதும் ஃபேன் சத்தம் நின்றுவிட்டது தாத்தா கோபத்தோடு சர்க்காரைத் திட்டிக் கொண்டே கட்டிலை விட்டெழுந்து ஈஸிச்சேரோடு மாமரத்தடிக்கு நகர்கிறார். இனி மூன்று மணிக்குத் தான் கரண்ட் வரும். அதுவரை எப்படி உயிரோடி ருப்பது என்று வீட்டில் எல்லோருக்கும் தினம் அச்சம் வந்து விடுகிறது.

கேஸ் அடுப்பில் இந்த வெயிலுக்கிதமாக எதையும் செய்து சாப்பிட முடியாது சமையற்காரன், வேலைக் காரன், வீட்டிற்குப்போட்ட ஆபீஸ்பியூன் யாராலும் மூன்று மணிவரை பிரயோஜனமில்லை. ஃப்ரிட்ஜில் எரிந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கும் பொசுக் கென்று அணைந்துவிட்டது.

கல்லூரி விடுமுறையில் கதைப்புத்தகமும் கையுமாய் இந்தப் படிப்பறையில் உட்கார்ந்தால் கண்காட்சிக்கு மேல் கண்காட்சி விடுமுறையில் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாதென்று அம்மா கறாராய் த்தரவு போட்டு விட்டாள். இந்தக் காலனிக்குள்ளே தான் இவன் சிநேகிதர்கள் ரகு, குமார், பரத், பெஞ்சமின் எல்லோரும் இருக்கிறார்கள். ரகு, ஜட்ஜ் மகன், குமார் காண்ட்ராக்டர் மகன், பரத் டாக்டர் மகன். பெஞ்சமின் வக்கீல் மகன். ஆனால் யார் வீட்டிற்கும் போகக் கூடாது. எல்லோரையும் பொறுக்கிகள் என்கிறாள் அம்மா. இப்போதைக்கு இந்த ஜன்னல்தான் உலகம்.

இந்த அறைக்கு இரண்டு ஜன்னல்கள . இந்த ஜன்னகள் வழியாக இத்தினி இத்னியாய்க் காற்று வருகிறது. கோடையைக் கருதி இருபது ஜன்னல் களாவது வைத்திருக்கலாம்.

அம்மாஹாலில் இரைந்து கத்திக்கொண்டிருக்கிறாள். ஒரு டஜன் முட்டை வாங்கி வரச் சொன்னாளாம். வேலைக்காரன் அரை டஜன் முட்டை வாங்கி விட்டானாம். கொஞ்சம் ஓய்ந்தது போலிருந்தது மறுபடி சமையற்காரனைக் காய்ச்சிக் கொண்டிருந் தாள். உருளைக் கிழங்கைப் பெரிது பெரிதாய் நறுக்குகிறானாம்.

ஃபேன் நின்றதும் அம்மாவிற்கு ஒரு வேலையும் ஓடாது. சோபாவில் உட்கார்ந்து நிட்டிங் போட முடியவில்லை. சின்னக் கை விசிறியால் வீசிக் கொள் கிறாள். அம்மாவின் பெரிய உடம்பின் மேல் சின்னக் குழந்தை வாயால் ஊதுவது போல் காற்று விழுகிறது. கைவலிக்கத் துவங்கினால் அம்மா வேலைக்காரனையோ சமையல்காரனையோ வையத் துவங்கி விடுவாள்.

***

ஜன்னல் வழியாக அனல் வந்து விழுகிறது. மைதானம் தாண்டி கானல் அலைகள் நெளிந்தோடுகின்றன நெடுஞ்சாலையில் ஒற்றையாய்க் கீற்றுக் கொட்டகையோடு டீக்கடை நிற்கிறது. இந்தக் காலனி பங்களாக்களின் சுகமான நிறங்களுக்கும் அந்த டீக்கடை நிறத் திற்கும் சம்பந்தமேயில்லை; டீக்கடையில் எல்லாமே மக்கிய நிறங்கள். கூரை டிரம்’ பலகாரத் தட்டு டம்ளர்கள் எல்லாமே அழுக்குப் பிடித்துக் கிடக்கிறது.

இரவு முழுக்க டீக்கடை விளக்கு எரியும். பரீட்சைக் காக விழித்துப் படித்துக் கொண்டிருக்கையில் கூட காலாற நெடுஞ்சாலை வரை நடந்து போய் அந்த டீக்கடையில் ஒரு டீக் குடித்துவர அம்மா விடமாட்டாள்.

ஃப்ளாஸ்கில் காப்பி போட்டு வைத்துவிடுவாள். நெடுஞ்சாலையில் போகிற வருகிற வாகனங்களை நம்பித்தான் அந்த டீக்கடை நிற்கிறது.

டீக்கடை வாசலில் பழைய டிரம்மில் கலங்க லாய்க் கிணற்றுத் தண்ணீர் இருக்கும். கைகழுவவும் அந்தத்தண்ணீர் தான். குடிக்கவும் அந்தத் தண்ணீர் தான். டீப்போடவும் அந்தத் தண்ணீர் தான். காலனி வாசிகள் விரலால் தொடமுடியாத பலகாரங்கள் மொய்த்துத் தட்டுகளில் இருக்கும். எல்லாம் மைதா மா கடலை மா மட்ட எண்ணைப் பலகாரங்கள். பால்வரத் தாமதமானலும் பசி வந்து வீட்டில் செய்து தர ஆளில்லை என்றாலும் அந்த டீக்கடை யார் ஞாபகத்திற்கும் வராது. சத்தம் போடாமல் நிற்கும் பிச்சைக்காரனைப் போல இந்தக் காலனிக்கு அந்த டீக்கடை.

சமையலறைக்குப் போய் இரண்டு தடவை தண்ணீர் குடித்தாகிவிட்டது ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் குடிக்க இவனுக்கு ஆசை. இந்த வெயிலுக்கு குளிர்நீர் ஜலதோஷம் கொடுக்கும். தொண்டை கட்டும். அம்மா ஒரு முறை படிப்பறைக்கு வந்தாள். ஜன்னல் வழியாகச் சாலையில் எதையோ தேடிவிட்டு போனாள்.

வாகனங்களில் சில டீக்கடை வாசலில் நிற்கின்றன. சிலர் டிரம்மிலிருந்து அந்தக் கலங்கல் தண்ணீரை அள்ளி அள்ளிக் குடிக்கிறார்கள். சில பேர் குடித்து விட்டுக் காறித் துப்புகிறார்கள். புழு எதுவும் கிடந் ததோ என்னவோ சில டிரைவர் கண்டக்டர்கள் டீ கிலாஸ்களுடன் நிற்கின்றார்கள். எந்தக் காலத்தில் என்ன செய்வதென்ற பிரக்ஞை இல்லை உடம்புக்குக் மேலேயும் உள்ளேயும் அனலை அப்பிக் கொண்டு அனலை விழுங்குகிறார்கள்.

அம்மாவின் சத்தம் மறுபடி சமையலறையிலிருந்து கேட்கிறது. ‘பீரோவைத் தொட்டா சுடுகிறது சரி. இந்த எலுமிச்சம் பழம் கூட சுடுதே ராமா. பிழியாதே. இப்ப சர்பத் வேணாம். இன்னுங் கொஞ்ச நேரத்திலெ இளநீர்க்காரன் வந்துருவான்.

அம்மா இளநீரை அமிர்தம் என்பாள் அமிர்தத்தையும் கடைந்தால் என்ன வருமென்று புராணங்கள் சொல்லவில்லையாம். அமிர்தத்தைக் கடைந்து கடைந்து ஒரு பொருள் செய்தால் அது வெண் பருப்புள்ள தேங்காயாம். அருங்கோடையில் ஒரு நாளில் வெளியாகிற அவ்வளவு வேர்வையையும் ஒரு இளநீர் ஈடு செய்து விடுமாம். அம்மா இளநீரைப்பற்றி இன்னும் என்னென்னவோ சொல்வாள். விஞ்ஞானம் இளநீருக்கீடாக இன்னும் ஒரு குளிர் பானத்தைத் தயாரிக்கவில்லை என்று அப்பா சொல்வார்.

இளநீர் வண்டி வருகிற நேரம் தாண்டிக் கொண்டிருக்கிறது. தினமும் பதினோரு மணி அடிக்கும்போது அந்தக் கிழவனின் இரட்டை மாட்டு வண்டி இந்த பங்களா வாசலில் நிற்கும். எதிரில் உள்ள வாகை மரத்தடியில் மாடுகளை அவிழ்ப்பான். பங்களாக்களிலிருந்து வேலைக்காரர்கள் அழகழகான பாத்திரங்களோடு பின்னால் வர பங்களாப் பெண்மணிகள் ஆரோக்கியமாய் நடந்து முன்னால் வருவார்கள்.

அந்தக் கிழவன் வடக்கே வெகு தூரத்தில் ஒரு செம்மண் தோப்பிலிருந்து தினமும் வண்டி நிறைய இளநீர் கொண்டு வருகிறான். ஒரு அமிர்தக் கடலை அவன் அனாயசமாக வண்டியிலேற்றி வந்து காலனி வாசிகளின் தொண்டைகளில் இறக்குகிறான்.

அம்மாவின் சத்தம் மறுபடி ஹாலிலிருந்து வெக்கை யிலடிப்பட்ட பறவையின் ஆதுரக் குரலாய் ஒலிக்கிறது. ‘ராமா இளநீர்க்காரனை என்னடா இன்னும் காணோம் போய் வெளியே நின்னு பாரு வாராணான்னு’ அம்மாவின் நாக்கிற்கு பழச்சாறு, சர்பத் எல்லாமே இப்போதைக்கு சாக்கடை. அவளுக்கு அமிர்தம் வேண்டும்.

மணி பதினொண்ணரை ஆகிறது. வெயில் பேரிரைச்சலோடு பூமியை விழுங்கப் பார்க்கிறது. அனல் தெறிக்கும் நெடுஞ்சாலையில் வாகனங்கள் வெயிலைப் பின்னுக்குத் தள்ளிவிட வேண்டுமென்ற வெறியில் ஆளாய்ப் பறக்கின்றன.

நெடுஞ்சாலையில் டீக்கடைக்கப்பால் வெகு தொலைவில் ஒரு புள்ளி ஆடுகிறது. வரவர பெரிதாகிறது. இளநீர் வண்டிதான் மாடுகளும் வண்டியும் அந்த நரைத்த கிழவனும் தெரிகிறார்கள். வாசலிலிருந்து ராமன் எந்த உணர்ச்சியுமில்லாமல் சொல்கிறான். “அம்மா இளநீர் வண்டிக்காரன் வந்துவிட்டான்”.

வண்டியை வெகு வேகமாக ஓட்டி வந்திருக்கிறான் கிழவன். தினமும் வரும்போது டீக்கடைக்கருகில் நின்று விட்டுத்தான் வண்டி வரும். இன்று அங்கே கூட நிற்கவில்லை. மாட்டுவாலை முறுக்கி சாட்டையிலடித்து நாலுகால் பாய்ச்சலில் வண்டியை ஓட்டி வருகிறான் கிழவன். ஜன்னலுக்கு அருகில் வண்டி வரும்போது இவன் கம்பியை ஒட்டி நின்று கவனித்தான்.

வண்டி நிறைய இளநீர்க் காய்கள். மேலே பச்சு பச்சென்று இரண்டு தென்னை ஓலைகள். காய்களின் மேல் குப்புறவிழுந்து கைகால் பரப்பி வெயில் படாமல் போர்த்திக் கிடக்கின்றன ஓலைகளும் காய்களும் பச்சைதான்; வேறு வேறு பச்சைகள், இந்த வண்டி, குலை குலையாய்க் காய்கள், எண்ணை பூசியது போல் தகதகக்கும் பசிய ஓலைகள். வெளேரென்ற வெயிலில் சின்ன ஓயசிஸ்.

இந்தக் காலனிக்காரர்களுக்கு எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். இன்று கால தாமதமாகி விட்டது. பதினொரு மணிக்கு ஆபீஸ் பியூனிடம் தூக்கில் இளநீரும் வழுக்கைத் தேங்காயும் போட்டு அம்மா. கொடுத்தனுப்பியிருக்க வேண்டும். 11:10க்கெல்லாம் அது ஆபீஸ் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். தாத்தா பத்து மணியிலிருந்து இளநீரை நினைத்துக் கொண்டே மாமரத்தடியில் ஈஸிச்சேரில் ஆடிக் கொண்டிருக்கிறார்.

தாமதமாய் வந்ததில் கிழவனுக்கு பதட்டம், கூச்சம், வண்டியை நிறுத்தி மாடுகளை அவிழ்த்துக் கட்டினான். உடம்பெல்லாம் வேர்த்து ஆறாய் ஓடியது. சட்டையில்லாத உடம்பு வெகுநேரத்திற்குப் பின் இப்போதுதான் மரநிழலைப் பார்க்கிறது. தலையில் கட்டி யிருந்த துண்டை அவிழ்த்துப் பரபரவென்று முகத்தைக் கன்னத் தோல் பிய்ந்து போகும்படி துடைத்தான்.

வண்டிக்குப்பின்னால் போய் தென்னை ஓலைகளைத் தூக்கி மரத்தடியில் போட்டான்.. மேலாற் போலிருந்த இளநீர்க்காய் ஒன்றின் மீது கொத்தி வைத்திருந்த அ ரிவாளை எடுத்தான். அரிவாளின் மற்றப் பகுதி இரும்பாலும் வெட்டும் நுனி வெள்ளி யாலும் செய்தது போல் பள பளவென்றிருந் தது.. பெண்களும் ‘வேலைக்காரர்களும் ஒரு சின்ன முற்றுகை நடத்திக் கொண்டிருந்தனர். அவசரம் பலர் முகங்களிலிருந்தது. காலதாமதம் எல்லாக் குற்றங்களையும் விடக் கொடியது இந்தக் காலனியில்.

இந்த வீட்டிற்கு முன் வண்டி நிற்பதால் அம்மாதான் எப்போதும் முதலில் வாங்குவாள். ராமன் பாத்திரத்தோடு அம்மா பின்னால் ஒரு பூனைக்குட்டி போல் நின்றான். கிழவன் வண்டி மேலேறி இளநீர்க் குலைகளை அள்ளிக் கீழே கிடத்த ஓலைகளின் மீது போட்டான். அம்மா குலைகளின் மீது நோட்டம் விட்டு ஒரு, குலையைத் தேர்ந்தெடுத்து விரலால் சுட்டிக் காட்டினாள்.

கிழவன் பந்தைத் தூக்குவது போல் முதற்காயை எடுத்து இடது கையில் தாங்கி அரிவாளை வீசினான். அரிவாள் நுனி பச்சை இளநீர்க்காய் மேல் வெண்ணையில் விழுவது போல் சிரமமில்லாமல் விழுந்தது. மூன்று வீச்சுகளில் காயின் வாய் வந்து விடுகிறது. பளீர் வெள்ளையில் மல்லாந்து துண்டுப் பத்தைகள் தரையில் விழுந்தன. ஆறு காய்களை வெட்டியபின் அம்மா ரூபாய்நோட்டை நீட்டினாள்.

கிழவன் அரிவாளைக் காயில் கொத்திவிட்டு மடியை அவிழ்த்து வேஷ்டி நுனியில் பை செய்து சொருகிக் கொண்டு ரூபாய் நோட்டை வாங்கி அதில் போட்டான். மீதியை அப்புறம் வாங்கிக் கொள்வதாகச் சொல்லி அம்மா புறப்பட்டாள். ராமன் பாத்திரத்தை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு அம்மா பின்னால் நடந்தான். மிதுமிது வென்ற வழுக்கையும் இளநீருமாய் பாத்திரம் ராமனின் கைகளில் அலைந்தது.

அடுத்த பங்களா அம்மாள் குலைகளைத் தள்ளித் தள்ளிப் பார்த்து ஒரு குலையைக் காட்டினாள். கிழவன் காய்களை அரியத் துவங்கினான். வேர்வை தலையிலிருந்து காதோரம் வந்து நெஞ்சுவயி றெல்லாம் தாண்டி வேஷ்டி நுனிப்பையிலுள்ள ரூபாய் நோட்டுகளை நனைத்தது. காய்மீதோ பாத்திரத்திலோ வேர்வை தெறித்து விடாமலிருக்க கிழவன் ஜாக்கிரதையாக. கைநீளும் வரையுள்ள தூரத்தில் வைத்தே காய்களை வெட்டினான்.

ராமன் ஒரு பளிங்குக் கிண்ணத்தில் தோசை போன்ற இளந்தேங்காயும் கிளாஸில் இளநீரும் கொண்டு வந்தான். இந்த இளநீரின் ருசி தேங்காயின் மிருது ஓவென்ற வெயிலை மெள்ளத் தள்ளி விடுகிறது.

வாசலில் அடுத்த பெண் வந்தபோது கிழவன் அரிவாளை ஒரு காயில் கொத்தி வைத்துவிட்டுத் துண்டை எடுத்துத் தலைமுதல் வயிறுவரை தோல் பிய்ந்து போகும்படி அழுத்தித் துடைத்தான்.

வரிசையாய் ஒவ்வொருவரும் குலைகளைக் காண்பிப்பதும் வெட்டித் தள்ளுவதுமாய் வெகுநேரம் ஆகி விட்டது. கிழவன் இதுவரை பத்துத் தடவைக்கு மேல் துண்டால் வேர்வையைத் துடைத்திருப்பான். அவனுக்கு நாக்கு வறண்டு வந்தது. காய்ந்த உதட் டைத் தடவிக் கொண்டான். எதிரிலும் பக்கங்களிலுமிருந்த பங்களாக்களைப் பார்த்தான். உச்சிவெயிலில் பங்களாக்கள் கண்ணைக் குத்தும் பிரகாசத் தோடும் பளபளப்போடும் ஜொலித்தன. பயமும் பிரமிப்புமாய் கிழவன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.

ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தார்கள். இன்னும் கிழவன் உட்காரவில்லை. கால்கள் சிலசமயம் பிடிப்பற்று ஆடின. மறுபடி மறுபடி வறண்ட நாக்கால் வேர்வை ருசிபட்டு முகஞ்சுளித்தான்.

அம்மா அரைமணி அரைமணி இடைவெளிவிட்டு இளநீர் அருந்தினாள். மெல்லிய தேங்காய் தின்றாள். தாத்தா இரண்டாம் முறை மாமரத்தடியிலிருந்து வந்து இளநீரைக் கேட்டு வாங்கிக் குடித்தார். ஆபீஸ் பியூன் தூக்கில் இளநீரை வாங்கிக்கொண்டு அப்போதே பறந்து போய் விட்டான். பாத்திரத்தில் கொஞ்சம்தான் இளநீர் இருந்தது போலும். அம்மா ராமனைக் கூப்பிட்டாள். “ராமா அந்தப் பாத்திரத்தை எடுத்துட்டு வா. இன்னும் ரெண்டு காய் வெட்டச் சொல்லலாம்!”

ராமன் பாத்திரத்தோடு பின்னால் வர அம்மா வெயிலில் வாடி வாசலுக்கு வந்தாள். கிழவனைக் காணோம்.

வண்டியிலும் கீழே கிடந்த ஓலை மேலும் குலை குலையாய்க் காய்கள் பச்சுப் பச்சென்று கிடந்தன. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்துவிட்டு அம்மா டீக்கடைப் பக்கம் பார்த்தாள். கிழவன் டீக்கடை டிரம்மிலிருந்து கலங்கல் தண்ணீரை ஒரு செம்பு நிறைய அள்ளி மடமடவென்று குடித்துவிட்டு ஓடி வந்து கொண்டிருந்தான்.

– பூவுக்குக் கீழே (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 1987, அன்னம் (பி) லிட், சிவகங்கை.

கந்தர்வன் கந்தர்வன் (க.நாகலிங்கம்) (பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கந்தர்வனின் முதல் சிறுகதை 'சனிப்பிணம்' 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார். கண்ணதாசன் இதழில்இலக்கிய விமரிசனங்கள்,சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா, சிகரம், செம்மலர், ஆனந்த விகடன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *