சோடியம் விளக்குகளின் கீழ்
 கதையாசிரியர்: தஞ்சை பிரகாஷ்
 தின/வார இதழ்: குங்குமம்                                           
 கதைத்தொகுப்பு: 
                                    சமூக நீதி 
 கதைப்பதிவு: July 15, 2025
 பார்வையிட்டோர்: 5,130  
                                    (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

லேசாகத் தூறல் விழ ஆரம்பித்திருந்தது. சோடியம் ஆவி விளக்குகள் அப்போதுதான் எரிய ஆரம்பித்தன. மங்கல் ஆரஞ்சு நிறத்தில். மாலை இருட்டு, மழைத்துளிகள் ஒரு மணி நேரமாய் பூத்தூறல் விசிறிக் கொண்டிருக்கும் நேரம். தஞ்சாவூர் கீழவீதி வாகனங்களின் வேகம் நிரம்பிக் கிடந்தது. சோடியம் விளக்கின் தீவிரம் வீதி எங்கும் தங்கம் பூச தங்கத்துகிலாய் மழைச்சாரல்!
இன்றிலிருந்துதான் இந்த விளக்குகள் எரிகின்றன. எதிரே ஒரு மேடை- ராஜா காலத்தில் கொடி மரம் இருந்த இடம், ராஜா அஞ்சுமாடி மேலிருந்து சுவாமி தரிசனம் செய்கிற உப்பரிகைக்கு நேர் கீழே தேவையில்லாமல் பாழடைந்து கிடக்கிற மேடு அது. அங்கேதான் படுத்துக்கிடக்கிறாள் அகிலா, மழைக்கு ஒதுங்கி தூங்க ஆரம்பித்தவளல்ல. அது அவள் இடம்!
அகிலாவுக்கு தஞ்சாவூர் புதுக. ஆறு மாசம்தான் ஆச்சு. போலீஸ் தொந்தரவு ஜாஸ்தி வேற வழியும் இல்லெ. எந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்தாலும் முதல் ஒரு மாசம் போலீஸ்காரங்களுக்குத்தான். அதுக்கப்புறம் ஊர் பெரிய மனுஷங்களைப் பார்க்கலாம். அப்புறம் ரோடு! கம்பெனி!
கேரளத்துக் கோடியில் ஒரு தர்மாஸ்பத்திரியில் பிறந்தபோது அகிலாவின் அம்மா ஆஸ்பத்திரியிலிருந்தே போய்விட்டாள் என்று பத்து வயசானபோது கேள்விப்பட்டாள். பதின்மூன்றாவது வயதில் பம்பாய்க்கு ஒரு குடும்பத்துக்கு வேலை செய்யப் போய் டெல்லி, நாக்பூர் என்று பதினாலாவது வயதில் போலீஸ் ஸ்டேஷன் பழக்கமாகியது.
கல்கத்தா நகரத்தில் கடியாகாட் போலீஸ் ஸ்டேஷனில், பத்து பதினாலு போலீஸ்களோடு ‘மல்யுத்தம்’ செய்ததற்காக மூன்று வருஷம் ‘உள்ளே’ இருந்து வெளியே வந்ததும் ரோட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள்.
தஞ்சாவூர் ஏனோ அவளுக்கு ஒரு டவுன் மாதிரியே தோன்றவில்லை. பெரிய நகரம் இல்லை. பெரிய கட்டிடங்கள் இல்லை. ஆனாலும் இந்த ஊர் அவளுக்குப் பிடித்தது. ஊர் முழுவதும் மங்கலான ட்யூப்லைட்டுகள், ராத்திரி ஏழு எட்டு மணி ஆரம்பிக்கும்போதே ஊர் அடங்கி விடும். பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் தவிர வேறு இடங்கள் பெரும்பாலும் மங்கல் வெளிச்சத்தில் ஆழ்ந்து கிடக்கும். சத்துகள்! ஏராளமான இடுங்கிய தெருக்கள். பாழடைந்த கோவில்கள். சந்துகளுக்குள்ளும் கோவில்கள், கோவில் மேடைகள். வெற்றிலை பாக்குக் கடைகள் கூட இருண்டு கிடக்கும் மண்ணெண்ணெய் விளக்குகளால்!
அகிலா ரோட்டில் இறங்கி நின்றாள்.
சைக்கிளில் போகிற ஒவ்வொருவரும் திரும்பிப் பார்த்துக் கொண்டு போனார்கள். தலைக்கு மேலே சூரியன். அவளுக்கு மயக்கம் வருவது போலிருந்து. இரவில் இத்தனை சூரியன் இந்த ஊருக்கு எதுக்கு, தஞ்சாவூர் உருப்பட்டு என்ன ஆக?
அகிலா என்று யார் வைத்ததோ அந்தப் பெயரில் கூப்பிட்டபோதுதான் திரும்பிப் பார்த்தாள் அவள்.
மாஜிஸ்ட்ரேட் ஒரு நாளில் ஏதோ ஒரு ஊரில் அவள் பிடிபட்டபோது கூண்டில் ஏற்றிய போது கேட்டார்; “ஏம்மா, ஏதாவது கெளரவமான தொழில் செஞ்சு பிழைக்கக்கூடாது?”
இது ஒண்ணும் அவளுக்கு புதுசில்லை. அதிகாரிகளிடம் போகிற போதெல்லாம் அவர்கள் இதுமாதிரி, அசட்டு அடிமட்ட கேள்விகளைக் கேட்பதுண்டு. பதின்மூன்றாவது வயசில் ஒரு கல்கத்தா பாபு கேட்டாள். அவனுக்கென்ன தெரியும். அப்போது, அழுநாள் அகிலா. அப்புறம் அழுதது எத்தனை பைத்தியக்காரனத்தனம் என்று புரிந்தது.
ஒரு பெரிய அரசியல்வாதி கேட்டார். நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது? அட பயல்களா? என்னையுமா சுத்தம் பண்ணணும்னு பாக்கிறீங்க? நீங்க போட்ட சட்டம்… அதுக்கு இந்தத் தொழிலும் உடன்படணுமா? ஏண்டா. நீ பண்ணிக்கிட்டு இருக்கியே, அது கல்யாணமா? போடா?
ஒரு ஸ்கூட்டர் அவளை நோக்கி வந்தது. தஞ்சாவூர் ஸ்கூட்டர் இது! நெருங்கி வருகிறது மெதுவாய். சோடியம் விளக்குகள் ஆக்ரோஷமாய் எரிந்து கொண்டிருக்கின்றன. கீழே சூரியனாய் அகிலா, மேல் சூரியனாய் சோடியம் வேப்பர். ஸ்கூட்டர் அவனருகே ஒளிவட்டத்துக்கு வரவில்லை; மெதுவாய் வந்து வேகம் பெற்று அவளைக் கடந்து வேகமாகிப் போய் பறந்துவிடுகிறது. அட ஏன் பிடிக்கவில்லையோ? வெளிச்சம்தான் காரணம்!
ரோடுதான் அவ வீடு! அவளுக்கு ரோடுதான் பிடிச்ச எடம்! வெளிச்சம் இருக்கும். ஆனா இருட்டும் இருக்கும்.
கல்கத்தா ரோட்ல ஒருத்தனோட ஒரு சந்துக்கு போனதும் இன்னொருத்தன் வந்தான். நிறைய குடிச்சிருந்தான். மெய்ன் ரோடு, பத்மாபூக்குர் வழியே போகிற ட்ராம் தடதடக்கிறது. மத்தியானம் ஒரு பஞ்சாபி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பத்து பேர் எல்லாம் பக்கத்து பட்டறை ஒன்றில் வேலை பார்க்கிறவர்கள் – அவளைப் பார்த்து நொட்டை விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது அத்தனை பேரும் இந்த சந்துக்குள்! திமுதிமுவென்று அவளைத் தேடி!
ஒரு கடைத்திண்ணை, இரண்டு பேர்களும் மோதிக் கொண்டார்கள். பத்துப்பேருக்கும் உடனே அகிலா வேணும். பயங்கரம். எல்லோரும் இரண்டுபுறமும் அவளை இழுக்கிறார்கள். கசங்குகிறாள் அவள். ஒரு தரம் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒரு உதறல் அவ்வளவுதான்; கோஷ்டிகள் பிரிந்து இருமருங்காய் நின்று அடிதடி.
கால்களில் சிறகு முளைக்கிறது திடுதிடுவென்று பின்னால் ஓடிவருகிறார்கள். ஒருவள், கத்துகிறான் ஹிந்தியில் “ட்டேரோ!” (‘நில்!’) சந்துகள் பறக்கின்றன. இரவின் கல்கத்தா அவளை இருளுக்குள் அணைக்கிறது. சந்துச் சாக்கடைகளைத் தாவித் தாண்டி பறக்கிறாள் அகிலா அதற்கு மேல் போகாத அடைப்பாய் சந்து முடிந்து விடுகிறது. திகைப்பு அகிலாவுக்கு- இருபுறமும் உயரமான கட்டிடம் இருட்டாய் நிற்கிறது. எதிரிலும் வழியில்லை. அங்கும் ஒரு கட்டிடம்.
பின்னால் திரும்பிப் பார்த்தாள். ஒரே ஒருவன்! நல்ல உயரம் காபூலிக்காரன். நீளப் பைஜாமா. பின்னாலும் யாருமில்லை. தூரத்து விளக்குக் கம்பத்து விளக்கின் மஞ்சள் வெளிச்சம் திட்டுத்திட்டாய் விழுந்து வழிந்திருந்தது. எண்ணெய் மில்களின் கடகடத்த ஓசையும் மணமும் அவன் அவளைப் பிடித்து அங்கேயே அவிழ்த்தான். பலவந்தமில்லாத இந்த அணைப்பு வியர்வையுடன் அவளுக்குள் அடங்கியபோது பின்னால் ஆரவாரம். அவளைச் சேர்ந்தவர்கள்தான்.
இரண்டு கைகளாலும் அவளை அவிழ்த்த நிலையிலேயே தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த சுவரில் ஏறினான் அந்தக் காபூலி! மனிதனில் இப்படி ஒரு பலமா? சுவரில் பிடிமானமில்லை. ஆங்காங்கே அடித்திருந்த ஆணிகளைப் பிடித்து உந்தி ஏறினான் அவன். எண்ணெய் மில்களின் டங்டங்கென்ற எந்திர ஓட்டம். அவன் தோளில் அவள் முகம். அகிலாவின் ஆனந்தம் யாருக்கும் புரியாது. மேலே ஏறி கைப்பிடிச்சுவரைத் தாண்டிக் குதித்தான் அவன். அடேயப்பா எத்தனை வேக லாவகம்! அங்கேயே அவளைக் கவ்விக் கடித்து முத்தம்!
“துமி கொரியோ நா! துமிகாச்சே ஏஸோ” (“இன்னும் கிட்டே வரமாட்டாயா?”)
அகிலாவுக்கு ரொம்பப் பிடித்தது. அது ஒரு கட்டிடத்தின் மாடிப்பகுதி. நீண்ட எண்ணெய் டின்கள் அடுக்கிக் கிடந்தன. இருட்டில் அது பளபளத்தது.. கட்டுக்கட்டாக டின்கள் தரையெல்லாம் பிசுபிசுத்தது. கீழே ஆரவாரம். தேடிவந்த அவளைக் காணோம் என்ற பேச்சொலிகள். திமுதிமுவென்ற காலோசை.
காபூலிக்காரன் அவளைத் தரையில் அழுத்தி உட்கார வைத்து, பிசுபிசுத்த எண்ணெய் மணம் மூச்சேற, உலகமே இருண்டுபோக தூரத்தே நண்பர்கள் குரலொலிகள் நைந்து போயின. காபூலி அவளை விட்டு எழுந்தபோது கிழக்கு வெளுத்திருந்தது. கீழே எண்ணெய்க் கசட்டில் அகிலா!
அவன் கைநிறய கொடுத்த நோட்டுகள் அவளை மயக்கவில்லை. அவன்தான் மயக்கினான். பெரிய மீசை, சிவந்த சுண்கள். உயரமான அந்த ஆண்மை. அவளைச் சற்றும் விலகாத அவன் துணிச்சல்.
இருபது வருடங்களுக்குப் பின் காபூலி தந்த கெளரவம் அவள் நெஞ்சில் நிறைந்து கிடந்தது. பணம் மட்டுமா இது?
பெரிய மனுஷர்களின் ஏர்கண்டிஷன் அறைகளில் அவள் எத்தனையோ சுகித்தவள்தான். அதெல்லாம் விருந்துதான். ஆனாலும் இது பசிக்குச் சாப்பிட்ட சோறு! அக்கினி பட்சித்த காடு!
அவள் மலையாளிப் பொண்ணு யாருக்கும் பயப்படுகிறவள் இவ்வை. அன்று அந்த காபூலிக்குப் பயந்த சுகம் தனி! பெரிய பணக்கார பங்களாக்களிலும் அவென்யூக்களிலும் மட்டுமே இருந்திருந்தால் இன்று ரோட்டுக்கு அவள் வந்திருக்க வேண்டாம். முப்பத்தைந்து வயதில் அவள் இன்றும் யாராவது ஒரு லாலிடம் மேம்சாஹிபாவாக மிருதுவாய் இருந்திருக்கலாம். வேண்டாமே தடித்தனம்!
விரிந்த ஆகாயம். ஏதாவது ஓட்டலின் பிரியாணிச் சோறு. மங்கிய வெளிச்சம் உள்ள சத்துகள், வைன்கள். பகலில் யாரும் விரட்டாத ஏதாவது ஒரு திண்ணை. தினமும் குளிக்க ஒரு ஆறு குட்டை குளம் ஏரி! போதும். பாங்கில் கொஞ்சம் பணம் இருக்கும். உடம்பு இன்னும் விழ ஆரம்பிக்கவில்லை. பிள்ளைபெற ஆசை உண்டு பெற்று கொஞ்சி நெஞ்சோடு அழுத்தி உதடுகளில் முத்தமிட்டால் சுகம் ஆனால் பிள்ளை பெற்றால் காப்பாற்றி வைக்க வளர்க்க… அப்படியே வளர்த்து…என்னதான் செய்ய? அம்மா என்றழைக்குமே அது? அது போதுமா?
ஆறு ஏழு மாசத்துக்கு முன் தஞ்சாவூருக்கு வந்து இறங்கியதே விசித்திரம். டிக்கட் கலெக்டர் இறக்கிவிட்ட இடம் இது. இடம் எதுவானால் அகிலாவுக்கு என்ன? இருட்டு நேரம் ஆனா கிடைக்காது. ஆனாலும் விசித்திரம். ஊருக்குள் வந்ததும் ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் கேட்டான் – “எங்கேம்மா போகணும்?” அம்மாங்கிறானே! அம்மா பையன்
“இங்கே லாட்ஜ் இருக்கா?”
அவனுக்கு உடனே புரிந்தது இவள் பாஷை,
‘விசாலம் அத்தை’கிட்டே கொண்டு போய்ச் சேர்த்தான் அவன்.
“வாடிக்கண்ணு” என்று அழைத்துக் கொண்டு போய்விட்ட இடம் மேம்பாலம்! ஒரு போலீஸ் க்வாட்டர்ஸ். அது ரெண்டு இன்ஸ்பெக்டர்கள் படுக்கிற இடம். விடிந்து எழுந்தபோது அந்த இன்ஸ்பெக்டர், “இங்கியே இரு” என்று சொல்லிவிட்டுப் போனாள்.
சாப்பாடு – தூக்கம் – மதியம் மூன்று மணியிலிருந்து விடிய விடிய தூங்க முடியவில்லை. மூன்று நான்கு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள். கடைசியாக கான்ஸ்டபிள்கள்.
மாவை குளிக்க வேண்டும் என்று கேட்டபோது அந்த ஆண்மகன் சிரித்தான். “குளிக்கறது வேற உண்டா?”
மூன்றாம் நாளே ரோட்டுக்கு வந்துவிட்டாள் அகிலா. சப் இன்ஸ்பெக்டர் மூஞ்சி ஒன்று சொல்லியது. “ஏன் சீப்பா அலையிற ரோட்வ? மாட்டினா அதுமாதிரிதான் இருக்கும் உதையும்!”
அவள் சிரித்தாள். யாருக்கும் புரியப் போகிறதில்லை.
நைட் கவீனாச்சே! புரியுமா?
இந்த ஆறு ஏழு மாசத்தில் ஊரில் பிரபலமாய்ப்போன ‘மலையாளத்தா’ என்ற பட்டத்தோடு வியாபாரமானாள். பகலில் கீழ வீதி மூக்கில் அஞ்சு மாடி கீழ் உள்ள மேட்டுத் திண்ணையில் எப்போதும் அகிலாவைப் பார்க்கலாம். எந்த கம்பெனியிலும் அவளைப் பார்க்க முடியாமல் ரஸிகர்கள் தவித்தனர். சினிமாவில் பார்த்துதான் கண்டு பிடித்தாக வேண்டும். பலத்த போட்டி, அடிதடி குஸ்தி, எல்லாம் நடக்கும். லேசில் மசியமாட்டாள். விலையும் கலையும் பெரிது. பெரிய பணக்காரர்கள் அண்ட முடியாது. பணம் அவர்கள் மூஞ்சியிலேயே வந்து விழும். ஒரே நாளில் கலர் டெலிவிஷன் பார்த்து காஷ்மீர் கார்பெட்டிலும் ரோட் ஓரக் கடைத் திண்ணையிலும் புரளுவாள் அகிலா.
மைனர் ஒருவன் ஒருநாள் பலவந்தமாக மோட்டார் பைக்கில் கொண்டு போய் தென்னந்தோப்பு பங்களாவில் அடைத்து வைத்துப் பார்த்தான், நெருங்கவே முடியவில்லை. காலில் விழுந்தான். மூன்று நாள் சொர்க்கம் மைனர் கையில், இங்கியே இருந்துடேண்டி என்று அழ வேண்டியிருந்தது. அப்போதும் சிரித்துவிட்டுத்தான் ரோட்டுக்கு வந்தாள் அகிலா! இப்போதும் “ம்” என்றால் மைனர் மெத்தை காத்திருக்கிறது. தென்னந்தோப்பு பங்களா, போகமாட்டாள் அகிலா. மேட்டுத் திண்ணைதான் அவளுக்குச் சரி.
மணி பத்து.
தலையைச் சீவி சிடுக்கெடுத்துப் பின்னினாள். அது ஒன்றுதான் அவளுக்கு மலையாளத்துச் சீதனம்! சுருண்ட கேசம்.
அஞ்சு மாடிக் கட்டிடத்தின் திண்ணை அகன்றது. இருண்டு கிடக்கும் எப்போதும். யாரும் அருகில் போவதில்லை.
கூர்க்கா-போலீஸ் பீட்- யாரும் அவள் வியாபாரத்தில் தலைகாட்ட வரமாட்டார்கள். மாமூல்!
என்றைக்காவது இன்ஸ்பெக்டர் சாப்க்கு அகிலா ஞாபகம் வரும். அப்போது கான்ஸ்டபிள் ஏழு எட்டு மணிக்கு அஞ்சு மாடித் திண்ணையில் வந்து லாட்டி குச்சியால் தட்டி, ”ஐயா இன்னைக்கு வரச்சொன்னாரு” என்பான். அன்று மட்டும் லீவு அஞ்சு மாடித் திண்ணைக்கு!
மெதுவாய் திண்னையிலிருந்து ரோட்டிறங்கினாள் அகிலா. நடந்தாள். சந்துகளிலிருந்தெல்லாம் பெண்கள். சிறு குழந்தைகள், பெரியவர்கள் வெளியே வந்து சோடியம் விளக்குகளைப் பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜங்ஷன் உள்ளே கூட ஆரஞ்சுப் புகை, ஜனக்கூட்டம்.
வெளியே வந்த இளைஞன் அவளையே உற்றுப் பார்த்தான். தூண்டிலை வீசினாள் அகிலா
“போட்மெய்ல் போய்டுச்சா?” சோடியம் விளக்கு அவன் கண்களைக் கூச- வைத்தது.
சுற்றிலும் அவர்கள் இருவரையும் பிணையப் பல கண்கள். அவள் கூடவே நடந்தாள் அகிலா. இப்போது அவர்களுக்குப் பின்னால் இருள்.
“எங்கே போகணும்?” என்றான் அவன்.
“இடம் இருக்கு!” என்றாள் அகிலா!
அவன் மிரண்டு பின்னால் பார்த்தான். பின்னால் மீண்டும் இருவர் இரையை விழுங்க நிறைய!
“கையி சிங்கப்பூரா?” என்று கேட்டாள்.
“எங்கியாவது நின்னு பேசணும். ஒரே வெளிச்சமால்ல இருக்கு? நைட் ட்ரெயின்ல நான் நாகப்பட்டணம் போகணும். அதுக்கு முன்னால்…” என்றான் அவன்.
பின்னாலேயே நெருங்கிய புதிய இரண்டு பேரும் “என்னா ப்ரதர் கோத்தாச்சா?” என்றனர்.
அவள் பதில் சொல்லாமல் விலக ஜங்ஷன் கட்டிடத்தின் வெளியில் ரெண்டு கான்ஸ்டபிள்கள் முளைத்தனர். “என்னாம்மா இஞ்ச?” என்றனர். மூன்றுபேரையும் மின்னலடித்து விலக்கியது. திடீரென்று மூவரையும் காணோம். ஜங்ஷன் வாசலில் மாயமாய் காணப்பட்டனர். எல்லாம் சோடியம் விளக்கின் உபயம்! எல்லா இடமும் வெளிச்சம்!
ஒதுங்க ஒரு இடமில்லை.
புதாற்றுக் கரையில் நின்றால் போதும், உடனே ஆள் கூப்பிடும். இப்போது அங்கெல்லாம் ஆளையே காணோம். கொஞ்ச நேரம் நின்றாயிற்று.
ஆற்றங்கரையில் நின்று பார்த்தபோது ஆற்றிலும் சோடியம் வெள்ளம். பஸ் ஸ்டாண்டில் அலுமினிய பஸ்கள் ஆரஞ்சு நிறம் பூசிக் கொண்டன.
கார்கோ பஸ்கள் ரெண்டு உறுமிக் கொண்டிருந்தன. மணிக்கூண்டும் அண்ணாவும் சோடியம் வேப்பரில் குளித்திருந்தார்கள். அண்ணா புத்தகத்தில் ஆழ்ந்து சிவையாய் இருந்தார்.
கீழ வீதி வழியே தடந்து மாமா சாய்பு மூலைக்கு வந்தாள் அகிலா. சந்துகள் இருளில் ஆழ்ந்து கிடந்தன.
அதில் போய் இருட்டில்தான் மறைய முடியும். ஆள் கிடைக்க வழியில்லை. லேசாய் வயிறு கிள்ளியது.
நேற்றிரவு சாப்பிட்டது. பகல் முழுவதும் தூங்கியது. எல்லாம் சேர்ந்து பரித்தது. முனை கடையில் உட்கார்ந்தாள் அகிலா. மழைத்தூறலும் நின்றிருந்தது. டீ ரொம்ப இதமாய்ச் சுட்டது.
மணி 11.30, சோடியம் விளக்குகள் உக்ரமாய் தொழில் செய்து கொண்டிருந்தன.
தஞ்சாவூரில் எந்த இரவுமே அவளை இத்தனை ஆயாசப்படுத்தியதில்லை. விளக்குகள் மனித குலத்துக்கு வேண்டியவைதான். இருட்டும் வேணுமே! உங்களுக்கு வீடு இருக்கு வீட்டுக்குள் இதமான உங்களுக்கு மட்டுமேயான விளக்குகள் இருக்கு, சுவிட்சும் இருக்கு. உனக்குப் பிடித்தவனோடு நீ இதமான நீல வெளிச்ச இருட்டில் கிடப்பாய்தான்! நான்?… எனக்கும் அந்த சுதந்திரம் இருந்தது.
தஞ்சாவூருக்கு சோடியம் விளக்குகள் வந்ததோட அது போச்சு, வெளிச்சமாப் போச்சு….
வழக்கமான வாடிக்கை ஆட்கள் கூட வெளிச்சத்துக்குப் பயந்துவிட்டார்கள்.
அகிலா சலித்தாள். படிப்படியாய் நடமாட்டம் வேறு குறைந்து கொண்டே வந்தது.
மழை எப்போது நின்றது என்று தெரியவில்லை.
ஒருத்தனைக் கூடக் காணோம்.
எப்படி வருவார்கள்? அவளுக்கும் வேறிடம் இல்லை. அவள்களுக்கும் வேறு இடம் புரியாது.
சோடியம் விளக்கின் கீழே நின்று தூரே தெரியும் நிழலைப் பார்த்தாள் அகிலா. போலீஸ் கான்ஸ்டபிள்! பார்த்தால் பணம் கேட்பான். சட்டென்று ஒளிய வேண்டும். நகர்ற்தால் நிழல் பூதாகாரமாய் நகர்கிறது. எப்படியும் பார்த்துவிடுவான். தப்ப முடியாது. அடுத்த போஸ்ட் அருகே வந்து விட்டான்.
“என்னட்டி, மலையாளத்தா! சும்மா நின்னுகிட்டிருக்கியே!”
“ஆமா! நீதான் வாயேன்.”
“நீ கூப்ட்டா வரமாட்டேன்னு எவஞ்சொல்லுவாள்? வாரேன். ஆனா இப்ப ட்யூட்டில இருக்கேன்.”
“ம்! ஏய்யா வயித்தெரிச்சலெ கிளப்புறே. போய்த் தொலையேன்…”
“ஆமா ஏதாச்சும் கெடைக்குமா?”
“என்னாத்தெ கெடைக்க! ஏதாவது ஆள் புடிச்சுக்குடு”
“இன்னும் தெனாவுட்டு அடங்கலெ ஒனக்கு! என்னெயவே ஆள் புடிச்சா உடச் சொல்ற!” லாட்டியால் அவள் இடையில் ஒரு குத்துவிட்டான் அவன். நிஜமாகவே நொந்து வலித்தது. அதையும் சிரித்தே தாங்கி துப்பினாள் அகிலா.
”ஆள் புடிச்சி அனுப்பினா அவன் கிட்டேயும் பணம் உனக்குக் கிடைக்குமல்ல?”
“இப்ப உங்கிட்ட லூட்டி அடிக்க எனக்கு நேரமில்லெ. வந்து உன்னெ… கவனிக்கிறேன். எனக்கும்ல்ல ஆள் இல்லெ!” இருட்டில் மறைந்தான் அந்த போலீஸ். இருட்டு ஏது! அவனுக்கும் இன்று ஏது கேஸ்! ஒருத்தனும் அகப்படவில்லை.
மணி 12.30
விளக்குகள் வால்டேஜ் அதிகமாக உஷ்ணம் தகிக்க எரிந்து கொண்டிருந்தது.
தெருவில் கூட்டமில்லை. இன்னும் கொஞ்ச நேரம் சினிமாக்கள் விட்டு ஜனம் வரும். பார்க்கலாம்.
மணி ரெண்டுக்கு மேல் இருக்கும். இருக்காது; ஒன்று ஒன்றரைதான் இருக்கும்.
ஒரு சினிமாதான் விட்டிருக்கிறது.
இன்னும் அரைமணி நேரத்தில் ஆள் எல்லாம் போய் அடங்கிடும். அதற்கு அப்பால் அவளும் திண்ணைக்குப் போய் குப்புற விழ வேண்டியதுதான். இன்னைக்குப் பட்டினிதான்! பசி புதுசு இல்லெ.
ரோட்டின் மறுகரையில் ஒருவன் அவளையே பார்த்தபடி கடந்தான். கூப்பிடலாமா? மெதுவாய் அவனை நோக்கி நகர்ந்தாள் அகிலா, அவளை நோக்கித் திரும்பினான் அவன் அப்பா! சந்துக்குள் போக வேண்டியதுதான் பாக்கி எங்கும் ஒரே வெளிச்சம். சந்துக்குள்ளும் பத்தடிக்கு ஆரஞ்சு ஒளி.
தூரத்தில் ஆரஞ்சுப்புகை வெளியில் ஒரு ஜீப் ரவுண்டானாவில் சுற்றி கீழவீதி கொண்டிராஜபாளையம் நோக்கித் திரும்புவது ஆரஞ்ச் லைட்டில் தெரிகிறது. பின்னாலேயே போலீஸ் வானும் ஆரஞ்ச்.
எதிரே வந்தவன் எதிர் சாமந்தான்குளம் ரோட்டுக்கு நேரே திரும்பி நடக்கிறது அகிலாவுக்கா புரியவில்லை?
அடப்பாவிகளா! முன்னாலேயே “போங்கடி”ன்னு விரட்டிவிடறது. பின்னாலியே ஜீப்ல வந்து வான்ல ஏத்துறது. கொண்டுபோய் அடச்சு ‘அதே வேலை’ யெ நீங்க பண்றது. ‘அதே வேலை” பண்றவங்களே சந்தேகக் கேஸ். உள்ள தள்ளு ஓதை! அவங்ககிட்டயும் உங்களுக்கு வருமானம்.
அன்னைக்கி ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தில் யாரோ ஒருத்தி புருஷனெ ரயில்ல பாக்க வந்தவளே சுத்தி சுத்தி வந்தீங்களேடா! ஒரு மணிக்கி ராத்திரி ஜனதா! தெரியாம ஜனம் ஜங்ஷன்ல நிறைய நிக்குமேன்னு தைரியத்துல வந்துட்டாளாம். ஒரு மணி வண்டிக்கி ஏம்மா பத்து மணிக்கி வந்துட்டேங்கிறான் ஒரு போலீஸ் ஒரு பக்கம் ஒண்ணுமே சொல்லாம சுத்தி வர்றான் ஒரு மீசெக்காரன்… நான் மட்டும் அன்னிக்கு இல்லேன்னா அந்தப் பொண்ணு ‘சந்தேகக் கேஸ்’தான்.
“இப்டி வாங்கம்மா, இன்ஸ்பெக்டர் கூப்புட்றாரு சந்தேகமா இருக்காம்!”
“என்னாய்யா சந்தேகம்”ன்னு நான் ஒரு அதட்டல் போட்டனே! தானே மெதுவா பின்னாலே போனானுக. பயந்து நடுங்குறா! பயம் தானே இதுல லாபமே. பயப்பட பயப்படத்தானே பயலுகளுக்குக் குறியே. எந்தப் பயலும் நிமிந்து நிக்கிறவகிட்ட ஒண்ணுமே பண்ண முடியாதே. ஆனா நிமிந்தா தேவுடியான்னுட்றான். என்னா டெக்னிக் இந்த ஆம்பளப் பயலுகளுக்கு!
“என்னாம்மா யாரு நீய்யி?” ஆரம்பிக்கும்போதே “என்னாடா பொட்டப்பயலே”ங்கணும் “ஆம்மா! இப்ப என்னா சொல்லிட்டேங்கிற?”ன்னு கீழ எறங்குவான். பாவம் இதுங்க. புருஷன்னா எல்லாம் புருஷன்னு நெனைக்கிதுங்க புருஷன் மட்டும்தான் ஆம்பளை மத்த புருஷன் எல்லாம் பொட்டைப் பயலுகன்னு இதுகளுக்கு யார் சொல்லிக் குடுக்குறாங்க?
வந்த சரக்கும் போயிடுச்சு. சினிமா டாக்கீஸ் பக்கம் போய்ப் பாப்பமா. ஏதாவது பயலுக வரமாட்டானா? எல்லாம் பேடிப்பயலுக வெளிச்சத்துக்கு பயப்பட்டு ஓட்றானே… இவன்லாம் என்ன ஆளு வெளக்குக்குக் கீழ நிக்கிறேனே! இவனுகளுக்கென்ன ஆச்சு?
இத்தனை நாளா இத்தனை வெளிச்சம் கிடையாது!
ஜீப் சோடியம் விளக்கின் கீழே அகிலா! அஞ்சுமாடி கட்டிடத்தின் மௌனம்! தெருவே நிர்வாணமாய்க் கிடக்கிறது – யாருமேயில்லையா..?
ஜீப் அவளருகே வந்ததும் ஸ்லோ மோஷளில் மெதுவாய் நகர்கிறது. ஜீப்பிலிருந்து பலத்த சிரிப்பொலி..
“என்னடீ! தெனாவட்டு ரோட்ல நின்னா இப்படித்தான்! பொறுக்கணும் இல்லேன்னா பொடைக்கணும்! ஒண்ணும் ஆப்டல்லியா? ஹெஹ்ஹெஹ்ஹே?” – கிண்டல்! சிரிப்பொலி! சாராயம்!
பின்னால் வந்த போலீஸ் வானும் நின்றது. ‘கர்கர்கர்’ என்றது கம்யூனிகேஷன் ரேடியோ ஸிஸ்டம் அதில் “காலிங் பீட் நெம்பர் ஃபோர் ஓவ… க.க.க… வயர்லெஸ் மூலம் சமிக்ஞைகள்… ஓவர். எஸ். ஓவ..
கான்ஸ்டபிள் வயர்லஸ்ஸில் கொடகொடத்துக் கொண்டிருக்கும் போதே அகிலாவையும் ஒரு கண்ணிட்டுக் கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர் முறைத்துக் கொண்டே சாய்ந்திருக்க கான்ஸ்டபின்கள் சிரிக்கிறார்கள். சிரிப்பு! மெதுவாய் ஜீப் வடக்கு ராஜவீதியை நோக்கிப் போனது பின்னால் வான் நகரச் சற்று நேரம் ஆகியது.
“சாவுகிராக்கிங்க தூ!”
ரோடு பொட்டலாகிக் கிடந்தது.
சினிமாக் கூட்டமெல்லாம் கரைந்தது. கொஞ்சம் கூட மனித வாடையில்லை.
ஆத்திரம் தாங்க முடியவில்லை அகிலாவுக்கு
கீழே குனிந்தாள். நல்ல பெரிய கருங்கல் ஒன்று மறு கையிலும் ஒரு கருங்கல் கப்பி. ரோடு போட வந்த கல் சோடியம் ஆவி விளக்கை நோக்கி ‘விர்ர்’ கல் பறந்தது. ‘ச்சில்லிங்ங்’! கம்பத்தின் உச்சியில் ‘புஸ்ஸ் ‘ஸென்ற புகை… மறுகை வீசினாள் அகிலா எதிர்க்கம்பம் ‘ச்சில்லிங்ங்ங்’! ஆச்சர்யம்! மூச்சு வாங்கியது அவளுக்கு, கண்ணாடித் தண்டுகள் ரோட்டில் சிதறியது. இப்போது சுற்றும் முற்றும் பார்த்தாள் அகிலா. எதிர்ப்புறம் இருந்த இன்னொரு கம்பத்து சோடியம் விளக்கும் நொறுங்கியது.
எதிரே இருந்த இரண்டு விளக்குகள் விர்ர் விர்ர் என்ற வீச்சில் சிவப்பு சுடர் ரத்தம் சிந்தியது. ரோடு முழுவதும் கண்ணாடிச் சிதறல்! பருக்கைக் கற்களாய்க் கண்ணாடி இருட்டை நொறுக்கிய ஒளியை நொறுக்கிவிட்டாள் அகிலா,
கொண்டிராஜபாளையம் இருண்டது. நாலு சோடியம் விளக்குகள் புகைந்து கொண்டிருக்கிறது. வியர்வையைப் புறங்கையால் துடைத்தபடி கீழே குளிந்து ரோட்டோரக் குப்பிக்கல் குவியலிலிருந்து பருமனான இரண்டு சுற்களை எடுத்து மறுபடியும் “விர்ர்” என்று வீசி… அடுத்தது வீசுமுன் நொறுங்கி விழும். சப்தத்தோடு “மாட்டிக்கிட்டியா” என்ற குரல் கேட்டது. யாரோ அகிலாவைத் தாவிப் பிடித்தார்கள். திமிறினாள் அவள். இருட்டு, பலமான இருட்டு வழக்கம்போல அவளால் திமிற முடியவில்லை.
“ஆள் புடிச்சி குடுக்கச் சொன்னீல்லா” கழுத்திலே யாரோ அறைந்து தள்ளினார்கள் அவளை) “லைட்டயா ஓடக்கிறே! வாடி கண்ணூ ஸ்டேஷன்ல இருக்கு ஒனக்கு திம்ஸ்ஸு கத்தினான் அந்த கான்ஸ்டபிள்! இன்னும் இருட்டுக்குத் தள்ளிக் கொண்டு போனான் அவன். எங்கும் அவள் சிருஷ்டித்த இருள்!
ஸ்டேஷனில் படி ஏறியதும் நாற்காலியில் சாய்ந்து கிடந்த இன்ஸ்பெக்டர் அட்டகாசம்! “என்னாடா நீங்க இந்த மலையாளத்தாளையே இழுத்துகிட்டு வர்றீங்க? வேற ஒருத்தியுங் கெடைக்கலியா உங்களுக்கு? சீ இவளோட ரோதனை! எப்பவும்!’
“இல்ல சார்! இது அந்த நேஸ் இல்ல. புதுசா போட்ட சோடியம் லைட் இருக்குல்ல சார். அதுகளெ கல்லெ உட்டேஞ்சு உட்டேஞ்சு வரிசையா ஓடச்சுத் தள்ளீட்டா சார் இவ.”
இடுப்பில் லாட்டியால் அகிலாவைக் குத்தி இன்ஸ்பெக்டர் முன் தள்ளினான் அவள்.
“அட! ரோட் லைட்டெயாம ஓடச்சேர் ஒரு லைட்டு என்னா வெலை தெரியுமா ஒளக்கு! எதுக்கு ஓடச்சாளாம் இவ?”
“பைத்தியம் புடிச்ச மாறி ஓடி ஓடி கருங்கல்லெ எடுத்துக்கிட்டு… என்னா வெறிங்கிறீங்க… லூசுமாதிரி எவ்வி எவ்வி பாஞ்சு பாஞ்சு ஓடி ஓடி அடிச்சு நொறுக்குறா சார், விடல்லெ நானு! ஓடிப்போயிப் பிடிச்சேன், இல்லாட்டினா இன்னும் நாலு ஓடச்சு தள்ளியிருப்பா! சந்து வழியா வந்து புடிச்சுட்டேன்!””
“பலேடா ராஜா! ஹெவியான கேஸ்தான். எழுது எழுது. ஏட்டெ வரச்சொல்லு ”
அதே நேரத்தில் உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கர் “அட! இவ எங்க இங்க வந்து உக்காந்திருக்கா!” என்றபடியே அவள் கன்னத்தில் ஒரு தட்டு கொடுத்தார்.
“ஹோஹ்ஹோ ஹ்ஹோ”-சிரிப்பு, கிண்டல்,
கீழே உட்கார்ந்திருந்தாள் அகிலா, “ஏந்திரிடி”
“சொல்லு! ஏன் உடச்சே?”
“…அவள் பழைய அகிலா அல்லர் மூலை இருட்டுக்கு இனி போகத் தயார்!”
“சொல்லுட்டி மலையாளத்தா! இல்லென்னா முதுகுத்தோலு உரிஞ்சுடும்! ஆமா”
போலீஸ் ஸ்டேஷன் மங்கிய விளக்குகளின் இருட்டு அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நைட் ட்யூட்டி ஆள் அதிகமில்லை. ரெண்டு இன்ஸ்பெக்டர்கள்தான். தெருப் பொறுக்கியாய் மட்டும் இருந்திருந்தால் அவர்களும் இவ்வளவு யோசிக்க மாட்டார்கள். உதையோடு காரியம் முடிந்துவிடும்.
அகிலா அப்படியல்ல! இவள் உயர்மட்டம் வரை பாயும் குதிரை! கொட்டடியில் அடைத்தாயிற்று. முதலில் மோட்டிவ் என்ன என்று தெரியனும் சொல்ல மாட்டாளே! நொறுக்கி எடுக்கணும்!…
கோர்ட்! விசாரணையின் கடைசி கட்டம் – அலுப்பு! பத்து நாளாய் முடியாத விசாரணை! அகிலாவைக் கூட்டிக் கொண்டு வந்து கூண்டில் ஏற்றினார்கள்.
கலைந்து தொங்கும் கூந்தல். வெறி ஏறிய விழிகள்! சுற்றிலும் இலவ மரங்கள். இங்கிலீஷ்காரன் கட்டிய கோர்ட்டு கட்டிடம். மாலை நேரம்! கடைசி பொழுது| ஆற்றுக்கரை ஓரம் புதாறு பள்ளத்தில் ஓடினாலும் காற்று குளிர்த்து வீசியது. நீரில் நனைந்த காற்று!
கூண்டில் சிலைபோல நிற்கும் அகிலா. யாரையும் லட்சியம் செய்யாத பார்வை! இருட்டுக்கு ஏங்கிய அவள் முகத்தில் டம்ளர் டம்ளராய் தண்ணீரை அடித்து வாங்கிய உண்மை ஒன்றுமில்லை. அவள் உடம்பிலும் ஒன்றுமில்லை!
வாட்டி விளையாடிய விளையாட்டு விரல்கள் எல்லாம் ரத்தம் கட்டியிருந்தது.
வக்கீலும் நீதிபதியும் ரொம்ப மிருதுவாக அந்தப் பெண்ணை விசாரித்தார்கள்.
“ஏம்மா இப்டி ஓடச்சே லைட்டெயெல்லாம்? பப்ளிக் மணியாச்சே! தப்புன்னு தெரியாது?”
தலைக்கு மேலே சூரியன் இருந்தால் சோடியம் ஆவி பறக்கிறது! மஞ்சள் நிற ஆரஞ்சுக் கலவை தலைமேல் விழுகிறது. ஆனால் வெளிச்சத்தில் இருக்க வேண்டிய உறவா அது! நீ கிடப்பாயா உன் மனைவியுடன்?
“இதுக்கு நீ பதில் சொல்லல்லேன்னா நீ தீவிரவாதின்னு ருஜு ஆகி, பத்து வருஷம் உள்ள போட்டுடுவாங்க! ஏதாவது சொல்லீடும்மா! இது ஆபத்து! பெண்ணாச்சேன்னு யோசிக்க வேண்டியிருக்கு..”
“எனக்கு இருட்டு வேணும்…” அவள் உதடுகள் முணுமுணுத்தது. இருட்டு!
மாஜிஸ்ட்ரேட் கண்ணாடியைத் தலைமேல் தூக்கி விட்டுக் கொண்டார். வக்கீல்கள் அவர்களுக்குள் குசுகுசுத்தார்கள், ருமாஸ்தா எழுதிக் கொண்டிருந்தான். அகிலா நின்று கொண்டிருந்தாள்.
ஜட்ஜ்மெண்ட் வாசித்தார்கள். அது அகிலாவுக்கு எதற்கு? மூன்று ஆண்டுகள் ஜெயில் இருள்!
நெட்டித் தள்ளிக் கொண்டு போய் வானில் ஏற்றினார்கள் அகிலாவை! வானும் வலையோடு இருண்டிருந்தது. மூன்று வருடம் தண்டனை! திருச்சியா மதுரையா என்று தெரியாது.
இருட்டிவிட்டது. ரோடுகளில் சோடியம் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. ஆரஞ்சு ஒளி வெள்ளம். நிறைய குற்றவாளிகள்! விதவிதமான விபச்சாரிகள், எல்லாரையும் அதே வானில் ஏற்றினார்கள்.
எங்கும் ஒரே வெளிச்சம். சோடியம் ஆவி விளக்குளின் பிரகாசம்.
வான் புறப்பட்டது. கார்டுகளுடன் கோர்ட் ரோடு முழுவதும் சோடியம் விளக்குகள் பாய்ந்து பின்னோக்கி ஓடியதை வலைக்கம்பி வழியே பார்த்துக் கொண்டிருந்தாள் அகிலா. வண்டி கீழ வீதியில் திரும்பியது. கொண்டிராஜபாளையம் அஞ்சு மாடிக் கட்டிடத்தைத் தாண்டிப் போகிறது. அதோ அங்கே-
வரிசையாய் ஐந்தாறு சோடியம் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது – இன்னும்!
அகிலா எழுந்து நின்று கம்பி வலை வழியே திண்ணையைப் பார்க்க முயன்றாள்.
அஞ்சு மாடித் திண்ணை இருளில் ஆழ்ந்து கிடந்தது.
“மலையாளத்தா” இனி அங்கே இல்லை.
ஆ வெளிச்சம் இனி அவளைக் காட்டிக் கொடுக்க முடியாது.
அந்த சோடியம் ஆவி விளக்குகளுக்கு அகிலாவைத் தொட முடியாது.
– குங்குமம், 1984.
– தஞ்சை பிரகாஷ் கதைகள், முதல் பதிப்பு: ஜூலை 2004, காவ்யா வெளியீடு, சென்னை.