சொல்லப்படாத காதல்




நான் போய்டு வரேன் மா, பாத்து போய்ட்டு வா சாமி என்ற அவன் அம்மாவின் அக்கறையான வார்த்தைக்கு புன்முறுவல் செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் வேலைக்குப் புறப்பட்டான். மதி தேனீர் நிலையம் என்ற பெயர் பலகை கண்ணில் பட சீறிப் பாய்ந்த வாகனம் அந்த கடையின் முன் நின்றது. அண்ணா ஒரு டீ என கூறிவிட்டு திரும்பினான். எழில் எப்படி இருக்க என்ற குரல் நிமிர்ந்து பார்த்தான் அவனுடன் டியூசனில் படித்த நண்பன் எதிரில் நின்றான். ஏய் சூர்யா நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கிறாய் என கேட்டான். ஏதோ இருக்கேன் டா, என்னடா பண்ற என சூர்யா கேட்டான். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக இருக்குறேன். நீ என்ன பண்ற என கேட்டான். படிப்பு சரியா வரல அதனால என் மாமாவின் மெக்கானிக் கடையில் வேலை செய்கிறேன். தம்பி டீ என்ற குரலும் வந்தது. வேல் அக்கா,செல்வி அக்கா இருவரும் எப்படி இருக்கிறார்கள் என்றான் வேல்விழி அக்காவுக்கு கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. செல்வி அக்கா இந்த ஊரை விட்டு வெளியூருக்கு செல்வதாக இருக்கிறார் போல, அதைப்பற்றி விவரம் எதுவும் எனக்கு தெரியவில்லை எழில் என கூறினான். சூர்யா உன் போன் நம்பர் கிடைக்குமா ? இது என்ன கேள்வி குறித்துக்கொள் என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான். எழில் மனது பழைய நினைவுக்குள் சென்றது. அந்த எண்ண ஓட்டத்துடன் வாகனமும் ஓடியது. அலுவலகம் வந்தது. அவனுடன் வேலை செய்பவர் அவனை பார்த்து கையசைக்க இவன் பதில் அளிக்காமல் செல்ல அருகில் சென்று விசாரிக்க அவன் சொல்லத் தொடங்கினான்.

பள்ளிப் பருவம் மார்க் பார்த்து விட்டு ஆசிரியர் அடுத்த தடவை மார்க் கம்மியாச்சு அவ்ளோதான் ஒழுங்கா படிக்கிற வழிய பாரு என கத்திவிட்டு சென்று விட்டார். அதை பார்த்த சக மாணவர்கள் டியூசன் போ என சொல்ல நான் சரி என தலை அசைத்தேன். பள்ளித்தோழி முனீஸ்வரி மூலம்தான் என் வீட்டிற்கு அருகிலேயே ஒரு டியூசன் இருப்பது எனக்கே தெரியும், டியூசனில் சேர்ந்தேன். அங்கு எனக்கு அறிமுகம் ஆனவர்கள் தான் வேல் மற்றும் செல்வி அக்கா. அவர் அப்பா மளிகைக்கடை வைத்திருக்கிறார். டியூசனில் சேர்ந்து ஒரு மாதம் கழித்து திடீரென்று சென்னை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. லீவ் சொல்ல போனேன். வேல் அக்கா வீட்டில் இல்லை எனவே அந்த தகவலை செல்வி அக்காவிடம் மட்டும் சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஊருக்கு திரும்பினேன். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்பொழுது என் வீட்டிற்கு அருகில் உள்ள சிலபேரும் இணைந்து ஒன்றாக வீடு திரும்புவது வழக்கம். அப்போது மளிகை கடையை வேல் அக்கா பார்த்துக் கொண்டு இருந்தார் போல நான் கவனிக்கவில்லை, வீட்டிற்கு சென்று விட்டேன்.
டியூசனில் படித்து கொண்டு இருந்தேன். அப்போது கடையிலிருந்து வந்த வேல் அக்கா என்னை எழுப்பி ஏன்டா எழில் என்கிட்ட சொல்லாமல் போன நானும் உனக்கு ஆசிரியர் தான் எனக்கு என்ன மரியாதை என அனைவரின் முன்பாக திட்டிவிட்டார். அவன் வரும்பொழுது நீ வீட்டில இல்ல என்னிடம் கூறிவிட்டு தான் அவன் சென்றான், ஏன் அவனை சத்தம் போடுற எனக் கூறி எனக்கு ஆறுதல் கூறினார் செல்வி அக்கா. அப்படியே நாட்கள் சில கடந்தன. வேல் அக்கா காலேஜ் முடிந்து வெள்ளிக்கிழமை தோறும் பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபடுவது வழக்கம். அவர் உடன் அனிதா என்ற பெண்ணை அழைத்து செல்வார். ஒருநாள் நான் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது கீழே நின்று கொண்டிருந்தார் வேல் அக்கா. நான் சென்று என்னாச்சு என விசாரிக்க அனிதாவால் கோவிலுக்கு வர முடியவில்லையாம் யாரை கூட்டிட்டு போறதுன்னு தெரியல என கூறினார். நான் வரவா? எனக் கேட்டேன் சரின்னு சொல்ல மாட்டாங்க என நினைத்தேன், ஒப்புக் கொண்டார். அவருடன் கோயிலுக்கு சென்றேன். நிறைய பேசிக் கொண்டே சென்றோம். தகவல்கள் பல பரிமாறிக் கொண்டோம். எங்களுக்குள் நெருக்கம் அதிகமாக தொடங்கியது. உரிமையாக என்னிடம் பேச ஆரம்பித்தார்.
காலேஜ் முடிந்து வந்தவுடன் குளித்துவிட்டு, தான் எங்களுக்கு டியூசன் எடுப்பார். என்னிடம் என் துணி ஒன்றை எடுத்து குடு நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று கூறினார். அவர்கள் அணிவதில் எனக்கு மிகவும் பிடித்தது அந்த கருப்பு நிற ஆடை அதை எடுத்து குடுத்தேன். நீ இதைத்தான் எடுப்பாய் என எனக்கு தெரியும் என கூறினார். ஒரு பெண்ணின் காதல் தரும் இன்பத்தை விட இந்த இன்பம் பலமடங்கு அதிகமாகவே இருந்தது. நான் பழனி பாதயாத்திரை சென்றேன், அவர்களுக்கு ஒரு கயிறு வாங்கி வந்தேன். இதையா? வாங்கிட்டு வந்த என கேட்டு விடுவார்களோ என்ற தயக்கத்தோடே என்னுடைய புத்தகத்தில் மறைத்து வைத்திருந்தேன். நீ எனக்கு எதுவும் வாங்கிட்டு, வரவில்லையா? எழில் என கேட்க நான் தயக்கத்தோடு அந்த கயிறை எடுத்தேன். இது எனக்கு மிகவும் பிடிக்கும். குடு எனக் கூறி என் கையாலே கயிறு கட்டி விட சொன்னார்கள். பின்பு என் கைகளில் அவர்கள் கட்டி விட்டார்கள். பள்ளிக்கூடம் இல்லை என்றால் என் வீட்டில் இல்லாமல் அவர்களின் வீட்டுல இருந்தது, அப்பாவை சாப்பிட மாற்றிவிட கடைக்கு செல்லும்போது அவர்களின் பின்னால் ஒரு நாய்க்குட்டியை போல சென்றது, மழையில் சில்லென்று ரஸ்னா வாங்கி குடித்தது, கடையில் இருந்தால் அவர்களுக்காக சாப்பாடு எடுத்து கொண்டு சென்றது, மொபைலில் காசு இல்லை என என்னிடம் சொன்னவுடன் கடைக்குச் சென்று போட்டு விட்டது பலூன்களில் தண்ணீர் நிரப்பி விளையாடியது, அனைவரும் சேர்ந்து மாரியம்மன் கோவிலுக்கு சென்றது, எனக்கு பிடிக்காத தர்பூசணி பழத்தை அவர்கள் சாப்பிட சொன்னதால் அவர்களுக்காக நான் சாப்பிட்டது. என் மாடியில் இருந்து பார்த்தால் அவர்களின் ஜன்னல் தெரியும். இங்கிருந்து நான் பேச அவர்கள் ஜன்னல்களில் இருந்து பேசியது. இப்படி நாட்கள் இனிமையாக போய் கொண்டிருக்க அவன் எங்க வீடு தங்குறான் அவள் வீட்ல இல்லன்ன அவ கூட கடையில இருக்கான் என அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்கள் என் அம்மாவிடம் கூறி விட்டார்கள். ஒழுக்கமாக இருக்குற வழிய பாரு எழில் ஊர் வாயில விழாத என அம்மா கூறினார்.
அவர்களின் பிறந்தநாள் வந்தது. கேக் மற்றும் பரிசும் சேர்ந்து கொடுக்க அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார். இப்படியே நாட்கள் கடந்தது. நாங்கள் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை எனவே வீட்டை விட்டு சென்று விட்டோம் இருந்தபோதிலும் அவர்களுக்கு புட்டு பிடிக்கும் என்பதற்காக என் அம்மாவை செய்ய சொல்லி பள்ளி செல்லும் முன்பு கிளம்பி சைக்கிளில் சென்று அவர்களிடம் ஒப்படைக்க சொல்லி அவர்களின் அக்காவிடம் குடுத்து விட்டு வருவேன். இப்படி தொடர்ந்த என் வாழ்வில் எனக்கும் அவர்களுக்கும் இடையில் விரிசல் வரத் தொடங்கியது. என் பிறந்தநாள் வந்தது காணச் சென்றேன் வேல் அக்கா ஒரு பரிசும் செல்வி அக்கா ஒரு பரிசும் கொடுத்தார்கள் வேல் அக்கா கொடுத்ததை அங்கையே பிரித்தேன் அழகிய கண்ணாடியில் ஆன சிலை இருந்தது. நன்றி தெரிவித்துவிட்டு சென்று விட்டேன், அதன் பிறகு என் வாழ்வில் ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டது. இருப்பினும் உரையாடல்கள், நான் அனுப்பிய குறுஞ்செய்திகள் என அனைத்தும் என் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை. என கூறி முடித்தான் எழில். அதை கேட்ட அவன் நீ அவர்களை ஒருமுறை சந்தித்தால் என்ன கேட்டான்.
அவர்களிடம் எவ்வித தொடர்பும் இல்லை. எவ்வாறு சந்திப்பது என்ற மனக்குழப்பத்துடனே இருந்தான். அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தான். அப்பொழுது தான் செல்வி அக்காவின் பரிசை பிரித்ததும், அதில் வாழ்த்து அட்டை மற்றும் ஒரு கடிதமும் இருந்ததும், அதை படிப்பதற்குள் நண்பன் விளையாட அழைத்ததால் சென்று விட்டதும் அவன் நினைவுக்கு வரவே அம்மாவிடம் கேட்டான். எனக்கு தெரியவில்லை எனக் கூறிவிட்டார்கள். நன்றாக சிந்தித்து சொல்லுங்கள் என்று கூற அந்த சூட்கேஸ்ல தான் நீ பொறுக்கி வைத்துள்ள குப்பைய எல்லாம் போட்டேன். அதற்குள் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூற தேட ஆரம்பித்தான். தூசி படிந்த நிலையில் அந்த கடிதம் இருந்தது. படிக்க தொடங்கினான்.
அன்புத்தம்பி எழிலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் உனக்கு என் தங்கையை தான் மிகவும் பிடித்திருந்தது. உங்கள் ஒவ்வொரு அரட்டையிலும் விளையாட்டிலும், கொண்டாடத்திலும் உடன் நானும் தான் இருந்தேன், என்னை மட்டும் நீங்கள் ஒதுக்கி வைத்து விட்டீர்கள் ஏன்? எனக்கு புரியவில்லை. வீட்டில் எனக்கு கல்யாண பேச்சு எடுத்தார்கள். என்னை பெண் பார்க்க வந்தவனால் நிராகரிக்கப்பட்டேன். அங்கு தொடங்கியது போல உனக்கு கூட என்னை பிடிக்கவில்லை இதற்கு என்ன காரணம்? எழில் உன்னை அவள் திட்டிய பொழுது நான் உன் பக்கம்தான் நின்றேன். கணிதத்தில் நீ ஃபெயில் ஆன விசயத்தை உன்னுடன் சேர்ந்து அவளிடம் மறைத்தேன். நீ அவளுடன் விளையாடும் பொழுதெல்லாம் நான் அந்த இடத்தில் இருந்திருக்க கூடாதா என ஏங்கிருக்கேன். அவளுக்காக நீ சாப்பாடு எடுத்து செல்லும்பொழுது உன் அந்த அக்கறையை நான் ஏன் பெறமுடியவில்லை என சிந்தித்து இருக்கிறேன். அவளுக்கு பிடிக்கும் என்பதற்காக சைக்கிளில் வந்து புட்டை குடுத்து விடுங்கள் என என்னிடம் குடுக்கும் போது எப்படி வலிக்கும் என எனக்கு மட்டுமே தெரியும். இவ்வளவு தெரிந்த உனக்கு என் அன்பு தெரியாமல் போய்விட்டதே? ஒவ்வொரு நிகழ்விலும் நான் உன் உடன் தான் இருந்தேன். மிகப்பெரிய வலி காதல் தோல்வி என்கிறார்கள் இருக்கலாம். ஆனால் ஒருவரின் அன்பை உணராதபோதும் அவரையே நேசித்து கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய வலி. ஒருநாள் நீ என்ன தேடுவ அப்ப நான் இருக்க மாட்டேன். கண்களில் வழிந்த நீர்த்துளியை துடைத்துவிட்டு, சூர்யாவை தொடர்பு கொண்டு செல்வி அக்காவை பற்றி கேட்டான். அவன் எனக்கு தெரியவில்லை நாங்களும் அங்கிருந்து காலி செய்து வந்து விட்டோம். நாளைக்கு வேணா அவங்க வீட்டுல போய் பார்க்கலாம் என்றான் சூர்யா. அவன் வீட்டு விலாசத்தை கேட்டு விட்டு போனை வைத்தான்.
இரவு அவனுக்கு தூக்கமே வரல அந்த கடிதத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். எப்போது விடியும் என்ற தவிப்போடு ஆறு மணிக்கே சூர்யாவின் முன் சென்று நிற்க, எழில் போலாம்ன்னு சொன்னே அதுக்குன்னு இப்படியா ஆறு மணிக்கு வருவ. என்னாச்சு உனக்கு என கேட்டான். அதபத்தி பேசுவதற்கெல்லாம் இப்ப டைம் இல்ல வா செல்வி அக்காவ பாக்க போலாம். இப்படியே வரவ ஏன் இதுக்கு என்ன டேய் நான் இன்னும் பல்லு கூட வெளக்கல டா. ஆடு மாடெல்லாம் பல்லா வெளக்குது வாடா, என இழுத்து கொண்டு சென்று விட்டான். சேர வேண்டிய இடத்தை அடைந்தார்கள். வீடு பூட்டிய நிலையில் இருக்க பக்கத்து வீட்டில் விசாரித்தனர். நேத்து தான் வீட்ட காலி பண்ணிட்டு போனாங்க. எங்க போனாங்கன்னு எதாச்சும் தெரியுமா? ஏதோ வெளியூரில வேல கிடைச்சிருக்கு அவள மட்டும் தனியா அங்க எப்படி விடுறது. நாங்களும் போலாம்ன்னு இருக்கோம். அவள் தனிமையின் தாகம் அந்த இடத்திலாவது தீரட்டும் என அவங்க அம்மா புலம்பியதாக கூறினார். எந்த ஊருன்னு ஏதும் சொன்னாங்களாமா என எழில் கேட்க, அதபத்தி அவங்களும் சொல்லல நானும் கேக்கல சரிப்பா எனக்கு வேல இருக்குன்னு சொல்லிட்டு உள்ள போய்டாங்க. ஒருநாள் நீ என்ன தேடுவ அப்ப நான் இருக்க மாட்டேன், என அவள் கூறிய வார்த்தையை நினைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.