கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2024
பார்வையிட்டோர்: 1,301 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவ்னால் ஒரு பிராணிக்கும் இம்சை கிடையாது; ஒரு மனிதனுக்கும் பாரம் கிடையாது. அவனுண்டு அவன் பாட்டுண்டு. உலகம் அவனைப்பற்றி பலவிதமாய்க் கூறுகிறது. அவனுக்கென்ன? சந்திரனுடைய பால் குடமும், சிறு பிள்ளைகளும், வாயில் பாட்டும் உள்ளவரை அவனுக்கென்ன குறை? 

நேற்று நடந்ததுபோல் தோன்றுகிறது. ஆனால் சுமார் ஒரு வருஷம் இருக்கும். இதே பாலக்கரையின் மீது, வழக்கம்போல் புது வைக்கோல் காந்தியோடு அந்தி சூரியன் யாத்திரை செய்துகொண்டிருந்தான். சிலர் கலங்கிய கள் கண்களோடு இன்னதென்று தெரி யாமல் ஆடி வழிந்தார்கள். மற்றும் சிலர் வேலையினின்று அரிவாளோடும், மண்வெட்டியோடும், சும்மாட்டோ டும் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். இருந் தாற்போல் இருந்து பக்ஷியின் குரல்போன்ற ஒரு குரலில் பாட்டொன்று காதல் விழுந்தது. 

டீடீடி டீடீடி டீடி டட்டட்டீ டீடிடட்டட்டீ
டீடீடி டீடீடி டீடிடட்டட்டீ 

சோலைக் கருங்குயிலே, 
சொக்கு மினிமையே, தைக்குமின்பமே, 

காலையின் பொன் வயலில் 
பொழியும் கீதமே, வழியும் நாதமே, 

காதல் கடலதனி லோடும்
தோணியே, அடக்கும் ராணியே 

சாதலென்னும் வாழ்நாட்களில் 
பிறக்கும் அமுதமே, மறக்கும் மயக்கமே! 

எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். 

தத்துக்கிளியைப்போல் இரண்டு பக்கத்திலும் இரண்டு கஷ்கதண்டம். நெற்றியில் அரையணா அகலத் திற்கு சந்தனம். அதன்மேல் காலணா அகலத்திற்கு குங்குமம். பாதி முகத்தை மறைக்கும் மீசை. நெற்றியை மறைக்கும் சிகப்புத் துணி முண்டாசு. பொத்தானில் லாத கோட்; ஷர்டில்லாத மார்பு. கீல் பிடிப்பு தத்தல். உலகு உருக்கும் பாட்டு. இவ்வளவு அங்கங்களோடும் ஒருவன் வந்தான். வந்தவன் சொக்கு! 

சுங்கச்சாவடி கண்டிராக்டர் அவனைப் புரளி செய்வ தற்காக ‘லைசென்ஸ் இருக்கா? இல்லாட்டி காசை இளக்கு’ என்றார். சொக்கு சிரித்துக்கொண்டே, 

கையிலே காசுமில்லெ 
இனாம் கொடுப்பார் யாருமில்லெ
பையிலிருந்த புகையிலையும் 
போன வழி தெரியவில்லை, தன்னானே 

என்று பாடிவிட்டு ஊருக்குள் நுழைந்துவிட்டான். 

அந்த ஊர் பெரிய நகரத்திலும் சேர்ந்ததல்ல, கிரா மத்திலும் சேர்ந்ததல்ல. நடவடிக்கைகளிலும் சரி, நாக ரிகத்திலும் சரி, இப்படிப்பட்ட நடுநிலைமை. புதுசில் கொஞ்சம்; பழயதில் ரொம்ப, மொத்தத்தில் பிளாஸ்திரி. 

இப்படிப்பட்ட ஊரில், பாலக்கரைக்கு அடுத்தாற் போல், சொக்கு ஆஸ்ரமம் அமைத்துக்கொண்டான். பாழடைந்த துர்க்கைக் கோவில் ஒன்று அவனுக்கு இடம் தந்தது. இருந்தாலும் அவன் நாள் முழுதும் பக்கத்தில் குடைபிடிக்கும் ஆலமரத்தின் நிழலிலேதான் இருப்பான். 

குழந்தைகளுக்கு அவனைக்கண்டால் வெகு பிரியம். அவனுக்கு குழந்தைகளென்றால் உயிர். ஆற்றில் ஜலம் எடுக்கச் செல்லும் பெண்களுக்குக்கூட அவன் பேரில் அன்படர்ந்த அனுதாபம். சொக்குவின் ஸ்படிக மனமும், தினசரித் தொல்லைகளையும், அயர்ச்சிகளையும், மனப் புண்களையும் ஆற்றும் அவன் பாட்டும் அதற்குக் காரணம். அவனொரு ஜீவன் முக்தன். அந்த ரகசியத்தைக் குழந்தைகளும், மாசற்ற மங்கைகளும் உணர்வார்கள். அதுபற்றியே சாப்பாட்டுக்கு சொக்கு கவலைப்படுவ தில்லை. மக்களும் மங்கைகளும் தங்கள் பங்குக்கு அவனைக் கவலைப்பட விடுவதில்லை. ஆகையால் பகலவன் படகை மேற்குத் திசை ஓட்டி, பாய்மரம் சுருட்டும் வரையில் ஆலமரத்து நிழலில் இன்னிசை நாடகம்தான். அடிமுடி யற்ற களிக்கூத்து. இரவிலும் அப்படியே. ஆனால் ஒரு வித்யாசம். பகலைப்போல் குழந்தைகளோ பெண்களோ அவன் பாட்டைக் கேட்க கூடமாட்டார்கள். அவர்களுக் குப் பதிலாக வாள் வீசும் துர்க்கையும்,ஒளி வீசும் ஆகாய பாரிஜாதகங்ளும், சலிக்கும் காற்றும், குதிக்கும் காவேரியும் ரசிகர்கள். 

துன்பமும் இன்பமும் சுழலும் சக்கரம். சொக்கு வுக்கு இவ்விரண்டு நிலைகளும் இல்லையென்றாலும், மண் வாழ்க்கையை ஒட்டி துன்பம் மேலோங்கவேண்டிய காலம். பொதுவாக ஊர் ஜனங்களுக்கு அவன்மீது வெறுப்பு. குறிப்பிட்ட காரணம் யாதொன்றும் கிடையாது. 

இப்படிக்கிருக்கையில் ஒருநாள் பின்வருமாறு ஊரில் நடந்த சம்பவமொன்றைப்பற்றி வம்பு அளந்தார்கள். ”பார்த்தீரா? சொக்குவின்மீது நாம் வெறுப்புக்கொள் வதற்குக் காரணமில்லையென்று கட்சி பேசினீரே. நம்மு டைய உணர்ச்சிக்கு ஜோஸியம் தெரியும்; ஆளை நிறுக் கும் சக்தி உண்டு. இதோ நாம் நினைத்ததுபோலத்தான் இருக்கிறது.’ 

‘சொக்குவின் தில்லும் முல்லும் முகத்திலேயே தெரிகிறதே.’ 

‘அதெல்லாம் கிடக்கட்டும் ஐயா! இப்பொழுது என்ன செய்திருக்கிறான் தெரியுமா?… நேற்று வந்தான் சொக்கு. முந்தாநாள் வந்தான் கீழத்தெரு ஆனந்தம். ஆனந்தத்திற்கு மருந்துமுறை சொல்லித்தந்து, பங்கஜத் தின் பெண் சுந்தரியை மயக்கி வசியம் செய்யச் சொக்கு சொல்லித் தந்திருக்காவிட்டால், இப்படி ஆனந்தமும் சுந்தரியும் சேர்ந்து ஓடிப்போயிருப்பார்களா? விழிக் கிறீரே! சொக்கு வராததற்கு முந்தி நம்மூரில் இந்த மாதிரி ஏதாவது நடந்தது உண்டா? சொல்லுமே?’ 

உண்மையில் இந்த சம்பவத்திற்கும் சொக்குவுக்கும் காக்கைக்கும் கீழே விழும் பனம் பழத்திற்கும் எவ்வளவு சம்பந்தமுண்டோ அவ்வளவுதான். இருந்தாலும் அவனை ஊரைவிட்டு ஓட்டிவிடவேண்டுமென்ற எண்ணம் ஊராருக்கு. வேண்டாத மனிதன்மீதுதானே குற்றங்கள் முளைக்கும். 

ஒருநாள் இரவில் மிராசுதார் ஜானகிராமய்யர் வீட் டில் பணம், வெள்ளிப்பாத்திரம், நகை முதலியவை களவுபோய்விட்டன. சொக்குவுக்கு விஷயம் தெரியாது. அவன் வழக்கம்போல் காலையில் எழுந்து வெற்றிலை போட்டுக்கொண்டு, 

கதிரவன் இளம் விழி காணுது கிழக்கில்
கனியே, என் காதலே கண் திறவாயோ ! 

என்று ஆரம்பித்தான். 

‘தெரியுமடா பாட்டும், கீட்டும். நிறுத்து’ என்று ஒரு கனத்த குரல் உத்திரவிட்டது; திரும்பிப் பார்த் தான். 

‘ஏதடா அந்த ஜரிகை வேஷ்டியும் பித்தளைப் பாத் திரமும்? கையில் ஜெபமாலை, கட்கத்தில் கன்னக்கோல் என்பதுபோலிருக்கே’ என்று சொல்லிய மற்றொருவர், அவனுக்குப் பின்னால் கிடந்த வேஷ்டியையும் பாத்திரத் தையும் குறிப்பிட்டார். 

சொக்குவுக்கே தூக்கிவாரிப்போட்டது.ஒருக்கால் இரவில் வந்த திருடன் ஏதேனும் வேண்டாமென்று போட்ட சாமான்களோ என்னமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும்பொழுதே, ‘என்னடா ஆசாரக் கொக்கு போல் முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறாயே! எழுந் திரு’ என்று அதட்டினார் ஒருவர். 

சொக்குவுக்கு பதில் சொன்னால் புண்யமில்லை யென்று தெரியும். எனவே மௌனம் சாதித்தான். 

மறுநாள் போக மறுநாள் மாலைக்குள் நீதிஸ்தலத்தில் நாடகம் முடிந்துவிட்டது. குற்றவாளி என்று சொக்கு ஒப்புக்கொண்டுவிட்டான். தடையம் அகப்பட்டுவிட் டால் வேறு என்ன தேவை ? இரண்டு மாதம் தண்டனை கிடைத்தது. 

சாயங்காலம் கையெழுத்து மறையும் வேளை. ஜலத் தில் மிதக்கும் தீபங்கள்போல ஆகாயத்தில் நக்ஷத்திரங் கள் மிதந்தன. குளங்களின் மீதும் கோபுரத்தின்மீதும் இருள் சாய்ந்தது. 

ஜெயிலின் கதவை டாணாக்காரன் திறந்தான். சொக்கு வானை நோக்கினான். பிறகு தலையை ஆட்டிக் கொண்டு சிரித்தான். கடைசியாக சீட்டி அடித்தபடியே உள்ளே நுழைய காலடி எடுத்துவைத்தான். 

‘சொக்கு மாமா!’ என்று ஒரு குரல் கேட்டது. டாணாக்காரனும் கைதியும் திரும்பிப்பார்த்தார்கள். வியர்க்க வியர்க்க ஓடிவந்த பையனைப் பார்த்து டாணாக் காரன் ‘பயலே! எங்கே வந்தாய்?’ என்றான். 

சுட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒன்றை பையன் சொக்குவிடம் கொடுத்துவிட்டு ‘ஏன் அப்பா, சொக் குவை உள்ளே அடைக்கரே? நொண்டி ஆளு திருட முடி யுமா?-இவுகளெல்லாம் சொக்குவை திருடன் கறாகளே! இப்பிடியே உட்டுடேன். எங்கனாச்சும் போயிட்ட்டும் என்றான். 

சொக்குவுக்குக் கண்களில் நீர் ததும்பிற்று. இவ்வ ளவு அருமையா சொக்கு தன்னுடைய பையனுக்கு என்று டாணாக்காரன் அறியவும், அவன் கண்கள்கூட கொஞ்சம் கலங்கின. 

‘தம்பீ! அப்பாருகூட நீ இப்பொ வீட்டுக்குப்போ. அப்புறம் பார்க்கறேன் உன்னை’ என்று சொக்கு வற் புறுத்திவிட்டு ‘உள்ளே நுழைந்தான். டக்கென்று சாவி பூட்டில் திரும்பிற்று. 

அடுத்தநாள் வழக்கம்போல் சூரியனுதித்தான். பாயும் ஜலத்தைப் பளிங்குபோல் செய்தான். பறக்கும் மேகங்களை பஞ்சுபோலாக்கினான். துர்க்கைக் கோவி லுக்குமட்டும் ஒளியேற்ற முடியவில்லை; சொக்கு இல் லாத அந்தக் கோவில் கிளியில்லாத பஞ்சரத்தைப்போ லிருந்தது. பையன்களும், பெண்களும் சொக்கு இல்லாத தால், ஊர் வெறிச்சென்று போய்விட்டதாக வருந்தினார் கள். அதுபற்றி ஜெயில் பக்கமாகக்கூட சிலர் நடந்து சென்றார்கள் – சொக்குவின் தலையையாவது பார்க்கலா மென்று. சொக்குவைப் பார்க்கமுடியவில்லை. 

கெடுவிற்குப் பிறகு சொக்கு விடுதலையடைந்தான். தெருவழியாகத் தன் பழய இருப்பிடத்தை நோக்கிச் சென்றான். போகும்பொழுதும் பாட்டுத்தான். சில கிழங்கள் அவனைப் பார்த்து ஏளனம் செய்தனர். சில பையன்கள் அவன்கூடவே சென்றனர் – ரோஜாக் கூடை யைத்துடர்ந்து செல்லும் தேனீக்கள்போல. சில பையன்கள் வீட்டுவாசற்படியிலிருந்துகொண்டே கண்களால் அவனை வழியனுப்பினார்கள். சில பெண்கள் அடுப்பங் கரை ஜன்னலிலிருந்தபடியே அவனுக்கு ஆசி கூறினர். 

அன்று சாயங்காலம் பையன்களும் பெண்களும் சொக்குவுக்குக் கொடுத்த உணவும், தின்பண்டமும் ஒரு வாரத்திற்குமேல் தாங்கும். 

சோமக்கலம்போல் கிழக்கில் சந்திரன் உதித்தான். சொக்குவைப் பார்க்க வந்த பையன்களும் பெண்களும் வீட்டிற்குக் கிளம்பினார்கள். தன் நிழல் முன்னே செல்ல ஒரு பையன் அங்கே அப்பொழுதுதான் வந்து சேர்ந் தான். அவன் தான் டாணாக்காரன் பிள்ளை! ஒரு கரும்பை எடுத்து நீட்டிவிட்டு ‘இன்னிக்குத்தான் ஜெயில்லேருந்து வந்தேன்னாங்க. எங்கியோ மறுபடி ஊருக்குப் போகப் போறியாமே? நெஜமா?’ என்றான். 

தன் அந்தரங்க எண்ணம் எப்படி அதற்குள் பையன் களுக்குத் தெரிந்துவிட்டது என்று சொக்கு வியப்படைந்தான். இருந்தாலும் பையனை சமாதானப்படுத்த வேண்டி ‘சொந்த ஊருக்குப்போய்விட்டு திரும்பிவரு வேன் தம்பீ!’ என்றான். 

பையன் நம்பவில்லை. ‘ தெரியும், தெரியும். நீ இப் போ போனா வரமாட்டே. அப்பாரைக் கேட்டுட்டு நானும் கூடவரேன் இல்லாட்டி விடமாட்டேன்.’ சொக்கு பார்த்தான் ‘நல்லது தம்பீ அப்பாரை கேட்டுக் கொண்டு வா; போகலாம். இப்பொழுது வீட்டுக்குப் போ. தேடுவாங்க.’ 

கடவுளை ஏமாற்றலாம். கள்ளனை ஏமாற்றலாம். குழந்தைகளை ஏமாற்றுவது கடினம். 

‘நீ பொய் சொல்லுறே. காலம்பர கோழி கூவறக் துக்கு முன்னாலேயே ஏமாத்திட்டு போயிடுவே, தெரியாதா!” 

இப்படிப் பையன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே. அவனைத் தேடிக்கொண்டு அவன் தாயார் வந்து விட்டாள். பையனுடைய சந்தேகம் வீட்டிற்குச் செல்ல அனுமதி தரவில்லை. தாயார் விடும் வழியா யில்லை. கரகரவென்று கையைப்பிடித்து வீட்டிற்கு இழுத்துக்கொண்டு போனாள். 

‘நான் கருக்கலோடெ வரேன். நீ போயிடப்படாது என்று திரும்பிப் பார்த்து சொல்லிக்கொண்டே சென்றான் பையன். 

மறுநாள் கிழக்கு வெளுப்பதற்கு முன்னோடு சில பிராதஸ்நான சிகாமணிகள் காதில், 

‘தாவாரமில்லை; தனக்கொரு வீடில்லை 
தேவாரம் ஏதுக்கடீ? – குதம்பாய்’ 

என்ற பாட்டு அமிருத மழையாய் பொழிந்தது. பார்த் தார்கள். சொக்கு தனது சர்வ சொத்துமாகிய கட்க தண்டத்துடனும், பாட்டுடனும் ஊரைவிட்டு வெளியே போய்க்கொண்டிருந்தான்.. 

சொன்ன சொல்படி டாணாக்காரப் பையன் துர்க்கைக் கோவிலுக்கு வந்தான்; சொக்குவைக் காணோம். குரங்கைப் பறிகொடுத்த ஆண்டியைப்போல விழித்தான். 

‘ஏமாத்திப்புட்டியா?’ என்று பெருமூச்செறிந்தான். 

– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *