செல்லம்னா கடிக்காதா என்ன?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 123 
 
 

வீட்டுல நாய் வளர்க்கிறோம். கொஞ்சறோம். அருமையா கவனிக்கிறோம்.

இருந்தாலும், சில சமயங்களில், அந்த செல்லம் நம்மைக் கடித்து விட்டால் என்ன ஆகும்?

மருத்துவ ஏற்பாடுகள் என்னென்ன? வேறு என்ன செய்ய வேண்டும்?

உளவு ரீதியாக செல்லமும், நாமும் எப்படி புதிய அத்தியாயம் தொடங்க வேண்டும்?

இவற்றைத் தெரிந்துகொள்ள, இந்த நிகழ்வை கொஞ்சம் விரிவாகப் படிக்கவும். நிறைய புத்திக் கொள்முதல் ஏற்படும்.

சமீபத்தில்(ஜூன் 5) என்னுடைய மனைவியை எங்கள் செல்லம்( இறந்து போன நண்பருடைய வளர்ப்பு நாய்; அவர் குடும்பத்தினர் வேண்டிக் கொண்டதனால், நாங்கள் கொஞ்ச காலம் பராமரிக்க வேண்டி, எங்களிடம் வந்து ஒரு மாதமே ஆகி இருந்தது) பலமாகக் கடித்து விட்டது. வலது உள்ளங்கையில் ஆழமான ரத்தக் காயம். எதிர்பாராத இந்தக் கடியினால் மனைவி உளவு ரீதியாக மிகவும் பாதிக்கப் பட்டு விட்டார். அந்தச் செல்லமும் கொஞ்சம் குற்ற உணர்வுடன் தென்பட்டது.

அத்த விடுங்க! என்ன செய்தோம்னு கவனியுங்க!

கடித்தது மதியம் 1 மணி இருக்கும். உடனே, காயத்தைக் கழுவி இரத்தப் பெருக்கைக் குறைக்க பஞ்சு வைத்து நன்றாக சுத்தம் செய்து அதன் மேல் “betadine” களிம்பு தடவி முதலுதவி ஆயிற்று! சிறிய ஒரு கட்டும் கட்டி விட்டோம். எங்கள் டாக்டர் வரும்வரையில்.

டாக்டர் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்- வீட்டுப் பிராணியானாலும், தடுப்பூசி போட்டே ஆக வேண்டும் என்று. ‘ரிஸ்க் எடுக்கவேண்டாம் சார்’. அவனுக்கு டிசம்பரில் தடுப்பூசி போட்டிருந்தாலும் மீண்டும் இன்று போட்டு விடுவோம்.

அனுபவ அட்வைஸ்:

அரசு மருத்துவ மனையா? பிரைவேட்டா?

நாய்க்கடிக்கு தடுப்பூசி போட சிறந்த இடம் அரசு மருத்துவ மனை அல்லது சுகாதார மையம்தான்!

மொத்தம் 4டோஸ் ஊசிகளும் முறையே,

(கடித்த நாளில் போட்ட ஊசியைச் சேர்க்காமல்)

1. முதல் டோஸ் – 3ஆம் நாள்

2. இரண்டாம் டோஸ் – 7 ஆம் நாள்

3. மூன்றாம் டோஸ் – 14 ஆம் நாள்;

4. நான்காம் டோஸ் 28ஆம் நாள்

என்பதாக அட்டவணை கொடுக்கப் படும்.

என்ன காரணம்:

1. உடனடி மருத்துவ உதவி

2. நாய்க்கடி மருத்துவத்தில் சிறந்த அனுபவம்- அனைத்து லெவல்களில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கும் எல்லா விஷயங்களும் மனப்பாடம்!

3. பிரைவேட்டில் இது புதிய சவாலாகக் கருதப் படுகிறது- ஆராய்ச்சி தொடங்குகிறது- நேரம் வீணாகிறது- அதிகச் செலவு செய்தும் கூட!

4. மருத்துவம் இலவசம்; மருந்து மாத்திரையும் இலவசம்

5. ஊசி செலுத்தும் அட்டவணை உடனே கொடுக்கப்பட்டு விடும்.

6. மிகவும் கண்ணியமாக, கனிவாக அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

7. லஞ்சம் துளிக்கூட இல்லை!

8. OP ticket எடுக்கவேண்டியது ஒன்றுதான் நம் வேலை!

கவனத்திற்கு சில பாயின்ட்டுகள்:

  • கடித்த தினம் ARV (நாய்க்கடி தடுப்பூசி) மற்றும் Anti-Tetanus(ஜன்னி வராமல் தடுக்க) ஊசிகள் உண்டு.
  • எவ்வளவு ஆழமாகக் கடித்துள்ளது என்பதைப் பொறுத்து ஊசிகள் செலுத்தப் படும்.
  • கீறலாக இருந்தால் ஊசிகள் குறைவு
  • ஆழமில்லாக் காயம் என்றால் 4 டோஸ்
  • ஆழமான காயமானால் IMMUNOGLOBLIN(இம்யூனோகுளோப்ளின்) என்ற ஊசி கட்டாயம்.
  • நாய்க் கடிக்கு பேண்டேஜ் கிடையாது. ஏனெனில் காயம் விரைவில் ஆற வேண்டுமே!

IMMUNOGLOBLIN(இம்யூனோகுளோப்ளின்) குறித்து சிறு குறிப்பு:

1. ஆழமாகக் கடிபட்டவர் 24 மணி நேரத்திற்குள் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

2. இது காயத்தைச் சுற்றிலும் உள்ள பகுதியில் ஒரே நாளில், ஒரே சமயத்தில் 5 அல்லது 6 ஊசிகளாகச் செலுத்தப் படும். வலி பிராணனை வாங்கிவிடும்.

3. காயமடைந்தவரின் எடை, உயரம் இவற்றைப் பொறுத்து, ஊசி மருந்தின் அளவு தீர்மானிக்கப் படும்.

4. இந்த ஊசி மிகவும் விலையுயர்ந்தது.அரசு மருத்துவ மனையில் மட்டும் உடனே கிடைக்கும்.

5. காயம் உடனடியாக ஆற வழிசெய்யும் இந்த ஊசி, தடுப்பூசியின் பலனுக்கு முன்னரே வேலை செய்ய ஆரம்பிக்கும்.

என்ன சொல்ல வரீங்க? :

என் மனைவி குணமடைந்து விட்டார். எங்கள் guest செல்லமும் இன்னொரு ஊசியைப் போட்டுக் கொண்டு பழைய நிலைமைக்கு திரும்புகிறது.

முக்கியமான விஷயம்: அந்த செல்லம் காதுபட, இதுதான் அது! என்று கூறக் கூடாது. மேலும், பயத்தில் (உள்ளூர இருந்தாலும்) செல்லத்தை நிராகரிக்கக் கூடாது. வழக்கம்போல பராமரித்து வர வேண்டும் என்பது கட்டாயம். திருப்பி அனுப்புவதோ, வேறு ஒருவருக்கு இலவச இணைப்பாகக் கொடுப்பதோ கொடுமையிலும் கொடுமை- செல்லத்திற்குத்தான்!

பின் குறிப்பு: குழந்தைப் பருவம் முதல் என் மனைவியின் இல்லத்தில் நாய் வளர்ப்பு உண்டு. எங்கள் இல்லத்தில் கடந்த 50 ஆண்டுகளாக, செல்லங்கள் உண்டு. தற்போது guest செல்லத்தையும் சேர்த்து எங்கள் வீட்டில் 20 ஆக இருந்து வந்த செல்லங்களில் இப்போது(பன்னிரண்டு ஆண்டுகளில்) 8 ஆகக் குறைந்து தற்போது ஆனந்தமாக வலம் வருகின்றன.

மனைவிக்கு இதுதான் முதற் கடி! எங்கள் செல்லங்கள் இதுவரை யாரையும் கடித்ததாக சரித்திரம் கிடையாது! சிறப்பு என்னவென்றால், கடித்த அயல்-செல்லத்தின் ஒரிஜினல் உடைமையாளர்களில் ஒரு ஜீவன் கூட இன்றுவரை, கடிபட்ட என் மனைவியை வந்து பார்க்கவோ, கடித்த செல்லத்தின் நிலை குறித்து விசாரிக்கவோ, நேரிலோ, போனிலோ அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா!

அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும், அவர்களுடைய மாஜி-செல்லத்திற்கும் எந்தத் சம்பந்தமும் கிடையாது போலத்தான் தோன்றுகிறது!

வாழ்க்கையில் நாம் படிக்கும் பாடங்கள் தொடர்கதைதான்: வயதோ, இனமோ பாலினமோ இதற்குத் தடையில்லை !

பாடம் 1: என்னதான் கடித்தாலும், கடிபட்டாலும், வாழ்வில், செல்லம் செல்லம்தான்!

பாடம் 2: எந்த சந்தர்ப்பத்தில் யாருக்கு எந்த உதவியாக இருந்தாலும், கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! பழமொழியை நினைவில் கொள்ளவும்!

செய்நன்றி கொல்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்!- இதுதான் நிதர்சனமான உண்மை!

என்.சந்திரசேகரன் சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *