செம்மதி!





மாலைப்பொழுதில் மகரந்த சேர்க்கைக்காக மலர்களைச்சுற்றும் வண்டுகள் நிறைந்த நந்தவனத்திலிருந்து மல்லிகை மலர்கள் வெளிப்படுத்திய நறுமணம் சிவந்தனின் மனதை மயக்கியது.
செதுக்கி வைத்த சிலையைப்போல் மிக நெருக்கமாக அமர்ந்திருந்த மலர் போன்ற இளவரசி செம்மதியின் ஸ்பரிசம் பட்டபோது உணர்வுகளின் முறையற்ற செயல்பாட்டால் உடலும் வண்டின் நிலை பெற்று மயங்கியது.
உடலும், மனமும் ஒரு சேர மயக்கத்தில் இருக்கும் தருணம் பிணையலிட்ட சாரையும், நாகமும் இணைந்து நடனமாடிய காட்சியின் நிலையை இயற்கை ரசித்து, பொறாமை கொண்டு, தடுமாறி பெருமூச்சு விட்டதால் ஏற்பட்ட அசாதாரண நிலையால் பட்டென ஒரு சத்தம் காதுகளைத்தாக்க, வேறு உலகத்துக்கே சென்று வந்த உணர்விலிருந்து விடுபட்டு சட்டென இருவரையும் விலகிச்செல்ல வைத்தது.
சத்தம் வந்த இடத்தை உற்று நோக்கிய போது நந்தவனத்தில் மலர் செடிகளுக்கு இடையே வானவெளியில் தனித்துச்சென்ற ஒரு பறவை நந்தவனத்தில் நடக்கும் காட்சியைப்பார்த்ததால் தன்னிலை மறந்து, வழி மாறி இறகுகளை அசைக்க மறந்து, கீழே விழுந்ததில் அடிபட்ட வலியால் துடிப்பதைக்கண்டு தனது செயலால் பிற உயிருக்கு துன்பம் வந்ததை எண்ணி ஓடிச்சென்று பறவையை கைகளால் ஒரு குழந்தையைப்போல் அள்ளியெடுத்து தடவிக்கொடுத்து, அரண்மனை வைத்தியரை அழைத்து சிகிச்சையளிக்கும் படி கட்டளையிட்டாள் செம்மதி.
நமக்குரிய ஒன்றும், அதன் மீதான அதீத விருப்பமும், அதன் நுகர்வும் பொது வெளியில் நிகழும் போது இனம்புரியாத அசௌகரியம் வந்து ஆட்கொள்வதும், பிற உயிரினங்கள் பாதிக்கப்படுவதும், பிறர் கண் படுவதுமான நிலையானது தனது செயலிலும் பூரணம் பெறாமல் தடைபட்டுப்போவதை தடுக்க இயலாது என்பது புரிந்தது.
இது போன்ற தருணங்களில் மதி மயங்காமல் மனதை கட்டுப்படுத்தப்பழகிக்கொள்ள வேண்டுமென யோசித்தாள்.
அறிவிற்கு இடம், பொருள், ஏவல் தெரியும் அளவிற்கு உணர்வுக்கு புரிவதில்லை என்பதை முதலாக இருவரும் புரிந்து கொண்டனர். உணர்வு பின் விளைவுகளைப்பற்றி சிந்திப்பதில்லை என்பதை விட அதற்கு சிந்திக்கும் ஆற்றல் கொடுக்கப்படவில்லை.
அந்தப்புரத்தில் பகலும், இரவும் அடைந்து கிடக்க இயலாத நிலையில் நந்தவனத்தில் நேரத்தைக்கழித்துச்செல்ல, கூண்டை விட்டு சுதந்திரமாக வானத்தில் சுற்றித்திரியும் பறவைகளைப்போன்ற உணர்வைப்பெறும் நோக்கில் வந்த போது மலர்களின் நறுமணம் செய்த வேலை மதியை மயக்கி விட்டது என்பது புரிந்த போது வெட்கத்தில் முகம் சிவந்து போயிருந்தது செம்மதிக்கு.
“யாரங்கே…..?” அதட்டலாகக்கேட்ட குரல் அரசருடையது என்பதையறிந்து பதைபதைப்புடன், பதட்டத்துடன் ” நான் தான் தந்தையே….” எனும் குயிலின் குரலை விட இனிமையான மகளின் குரல் ஒலிக்க வந்த திசையை ஊருடுவலாக ஒரு முறை நோக்கி விட்டு, உடனிருப்பவரை அறிந்தவுடன் தேரை பயமின்றி ஓட்டிச்சென்றார் கதம்ப நாட்டின் சக்ரவர்த்தி விமல வர்மன்.
கதம்பநாட்டின் இளவரசி செம்மதி, மகத நாட்டு இளவரசன் சிவந்தனை சுயம்வரத்தில் தேர்வு செய்து மணம் முடித்திருந்தாள்.
மணம் முடித்து ஒரு திங்களெனும் முப்பது நாட்கள் முடிந்த பின்னும் ஒரு நொடி கூட சிவந்தனைப்பிரிய முடியாமல் தவித்தாள்.
அவனது முகத்தைப்பார்த்துக்கொண்டு இணைபிரியாமல் அருகிலேயே இருக்க வேண்டும் என அடம்பிடித்தாள்.
‘தன் நாட்டை விட்டு மகத நாட்டிற்குச்சென்றால் கணவன் மீது தான் வைத்திருக்கும் பிரியம் குறைந்து போகக்கூடுமோ?’ என மனதில் ஏற்பட்ட அச்சத்தால் போக மனமின்றி இருந்தாள்.
மகளின் மகிழ்ச்சிக்கு தடைபோடக்கூடாது என்பதால் மருமகனின் தந்தைக்கு வேறு காரணங்களைக்கூறி ஓலை அனுப்பி சாந்தப்படுத்தினார் மன்னர்.
அந்தக்காரணம் சோதிடப்படி கிரக நிலை மாற்றங்களுக்குப்பின் என்பது தான்.
எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதையும் அறிந்தவர் என்பதால் விரைவில் அனுப்பி வைப்பதாக உறுதி கூறி மறுபடியும் ஓலை அனுப்பினார்.
சுயம் வரத்தில் தன் மகளின் செயல்பாடுகளை மீண்டும் நினைவு படுத்திப்பார்த்ததால் தான் பொய்யான காரணங்களை சொல்ல மன்னருக்குத்துணிவு வந்தது.
மகத இளவரசனை சுயம்வரத்தில் இளவரசி செம்மதி முதலாகப்பார்த்த பின் உடனே திருமண ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும். தாமதமானால் மணம் முடிக்கும் வரை ஒரு நாளும் இளவரசனை விட்டு விலக முடியாது. என பிடிவாதமாகக்கூறியதைக்கேட்டு அப்போது சபையே அதிர்ந்தது.
தனது நாட்டிற்குச்சென்று திருமண ஏற்பாடுகளைச்செய்து பின் வந்து சந்திப்பதாகக்கூறிய போது மறுத்து விட்டாள்.
“நீங்கள் போனால் நான் உயிர் போன உடலாகி விடுவேன். நான் நீங்கள் என்பது நம் வாழ்வில் இல்லை. நானே நீங்கள், நீங்களே நான். நாடும் வேண்டாம், நகரமும் வேண்டாம், ஊரும் வேண்டாம், உறவும் வேண்டாம். உண்ணவும் வேண்டாம், உறங்கவும் வேண்டாம். இப்போதே என்னை மணந்து கொள்ளுங்கள்” என பிதற்றினாள்.
சுயம்வரத்தில் மகத இளவரசனைப்பார்த்ததும் அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் எனும் ராமன் சீதையைப்போல் பார்த்ததும் பிடித்துப்போனதும் பரவசமானாள்.
நாற்பது நாடுகளின் இளவரசர்கள் கலந்து கொண்ட சுயம்வர விழாவில் கடைசியாகத்தான் மகத நாட்டின் பட்டத்து இளவரசன் சிவந்தனைக்கண்டாள்.
பல ஜென்மங்கள் ஒன்றாக வாழ்ந்த உணர்வு ஏற்பட்டது. உடல் நடுங்கியது. மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. தன்னிலை மறந்து தடுமாறினாள். இதுவரை ஒருவர் மீதும் இப்படியான ஈர்ப்பு வரவில்லை. பல காதல் கதைகளைக்கேட்டிருக்கிறாள். அது தனக்குள் ஊற்றெடுப்பதை தற்போது தான் உணர்ந்திருக்கிறாள்.
அனைத்தையும் ஒட்டு மொத்தமாக மறக்கச்செய்யும் ஆற்றல் காதலுக்கு மட்டுமே உண்டு என்பது மட்டுமே புரிந்தது. பெரிய கயிற்றால் தனது உடல் கட்டப்பட்டிருப்பது போல் இருந்தது.
வான்மதி உருகியுருகி தேய்ந்து கதிரவனுடன் சேரும் போது தனது தன்மையை, உருவத்தை முழுவதுமாக இழப்பது போன்று தனது அறிவெனும் மதியின் நிலை இருபதையறிந்த போது இனம்புரியாத சுகத்தின் உலகத்தில் தான் பிரவேசித்திருப்பதை உணர்ந்தாள்.
சிலதை இழப்பது துன்பம் தரும், சிலதை இழப்பது இன்பம் தரும். தன்னையே இழந்து பெறும் இன்பமென்பது ஈடில்லாததாகத்தோன்றியது. முறைகளும், சட்டங்களும் அங்கே சக்தியற்றுப்போயிருந்தன.
“செம்மதி…..” அரண்மனையே நடுங்கியது.
“எதற்காக இவ்வாறு பிதற்றுகிறாய்? பல மன்னர்களை ஆளும் சக்ரவர்த்தியின் ஒரே மகள் என்பதை மறந்து விட்டாயா? பதினைந்து வயதிலேயே போருக்குத்தலைமையேற்று வெற்றி வாகை சூடிவந்த வீரமிக்க பெண்மணி என்பதையும் மறந்தாயா? மனதுக்குப்பிடித்த ஒரு ஆண்மகனைத்தேர்ந்தெடுக்கத்தான் இந்த சுயம்வரம். மதி மயங்க அல்ல. செம்மதியை உடனே அந்தப்புரத்துக்கு அழைத்துச்செல்லுங்கள்” என மன்னர் கட்டளையிட, பணிப்பெண்கள் இளவரசியின் அருகில் சென்றபோது சிவந்தனை விட்டுப்பிரிய மறுத்தாள்.
வேறு வழியின்றி சிவந்தனையும் இளவரசியுடன் அழைத்துச்சென்றனர்.
உடனே அரண்மனை ஜோதிடரை அழைத்து இரண்டு பேருடைய ஜாதகங்களையும் கொடுத்தார் மன்னர்.
“மன்னா இந்த ஜாதகங்கள் மிகவும் அபூர்வமானவை. பராசரர் வகுத்து வைத்த பத்து பொருத்தங்களும் சரியாக உள்ளன.
அதில் ஒன்று வசியம். உங்களுக்கும் மகாராணி விண்மதிக்கும் வசியம் உள்ளது. அது நட்சத்திர வசியம் மட்டும். அதற்கே பிரிய மனமில்லாத நிலையில் வாழ்கின்றீர்கள். இது நட்சத்திர வசியம்போக தேவ வசியம், கிரக வசியம், திசை வசியம், புத்தி வசியம், அந்தர வசியம், நாள் வசியம், களத்திர வசியம், காந்தர்வ வசியம், கால வசியம், உதிர வசியம் என பத்து வசியங்கள் கூடுதலாக இருப்பதால் ஜோதிட சாஸ்திரத்தில் அர்த்தநாரீஸ்வர வசியம் என ஒரே வார்த்தையில் கூறலாம்” என கூறியவர் சற்று ஆழ்ந்து யோசித்துப்பின் பேசினார்.
“மற்ற வசியங்களில் உதிர வசியம் இருப்பதுதான் சற்று குழப்பமாக உள்ளது.
மகதம் என்பது நமக்கு தூர தேசம். உதிர வசியம் என்பது நெருங்கிய உறவைக்குறிக்கும்”
“அரசர்கள் என்றாலே முன் காலத்தில் பெண் கொடுப்பதும், பெண் எடுப்பதும் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் உதிர வசியம் இருக்கலாம்” என மன்னர் கூறிய பின் அதை ஆராய்வதை விட்டு விட்டார் சோதிடர்.
“நாளையே நல்ல நாள் உள்ளதால் திருமணத்தை நம் அரண்மனையிலேயே நடத்திவிடுங்கள். இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை” என சோதிடர் கூறியதை முழுவதும் உள்வாங்கி புரிந்து கொண்டார் மன்னர்.
உடனே திருமண ஏற்பாடுகளை செய்ய கட்டளையிட்டதோடு சுயம்வரத்துக்கு வந்த மற்ற நாட்டினரையும் திருமண விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும்படி மகா மந்திரிக்கு கட்டளையிட்டார்.
திருமணம் கோலாகோலமாக நடந்து முடிந்தது. தற்போது ஒரு திங்களும் முடிந்து விட்டது. மணமக்களை எதிர்பார்த்து மகத நாடு காத்துக்கொண்டிருப்பதாக அந்த நாட்டு மன்னர் மந்தகர் ஓலையனுப்பியிருந்தார்.
இதற்கு மேல் விட்டு வைப்பது முறையல்ல என்பதையுணர்ந்த கதம்ப நாட்டின் சக்ரவர்த்தி விமல வர்மன் தன் மகளை அழைத்து விபரம் கூறியபோது ஒரு குழந்தையைப்போல் அழுதாள்.
அரவணைத்து ஆறுதல் கூறியதோடு பெற்றேரான தாங்களும் உடன் வருவதாகச்சொன்னதும் ஒத்துக்கொண்டாள்.
தங்கள் நாட்டுப்படை தெற்கு தேசத்தில் நடக்கும் போரில் பங்கேற்க பெரும்பகுதி சென்று விட்டதால் மகத நாட்டுப்படையினர் வந்து தம்பதியரை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல ஓலையனுப்பியும் பதில் வரவில்லை என்பதையறிந்து ஒற்றர் மூலம் விசாரித்ததில் நிலைகுலைந்து போனார் சக்ரவர்த்தி.
இது வரை தாம் மகதத்துக்கு அனுப்பிய ஓலையும் அதற்கு கிடைத்த பதிலும் பொய் என்பதையறிந்து ஓலை கொண்டு சென்றவர்கள் மீதும், அங்கிருந்து கொண்டு வந்தவர்கள் மீதும் கடும் கோபமடைந்தார்.
தனது மருமகன் சிவந்தன் மகத நாட்டின் பட்டத்து இளவரசன் கிடையாது என்றும், காட்டில் வசிக்கும் ஆதிவாசி மங்கனின் மகன் என்பதும் தெரிய வர உடைந்து போனார்.
இந்த விசயம் செம்மதிக்குத்தெரிந்தால் அவமானத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளத்தயங்க மாட்டாள் என்பதையறிந்ததால் சொல்லாமல் விட்டதோடு இன்னும் ஒரு வருடம் இங்கேயே இருக்கும் படி அரண்மணை சோதிடர் கூறினார் என்றபோது தந்தையைக்கட்டியணைத்து நன்றி சொன்னாள்.
ஒரு வருடத்தில் செம்மதி கருவுற்றதால் அழகான ஆண் குழந்தை பிறந்ததை மன்னருக்கு காட்டியபோது அக்குழந்தை அரசாளத்தகுதியற்றது என நினைத்து பார்க்க விருப்பமில்லாமல் போனாலும், தன் மகளது வயிற்றில் உதித்தது என்பதால் பார்த்தார். பார்த்தவரின் முகம் மலர்ந்தது.
குழந்தையின் முகத்தில் சத்திரியருக்குரிய சாமுத்திரிகா லட்சணம் தெரிந்ததோடு மங்க தேசத்து வேல் லட்சினையின் மச்சம் நெஞ்சில் இருந்தது. தனது தங்கை தவமதியின் வாரிசும் குழந்தையாக இருந்த போது காணாமல் போன மங்க தேசத்து பட்டத்து இளவரசன் தான் தன் மருமகன் என்பதை அறிந்து மனதால் மகிழ்ந்தார்.
சகோதரியின் வாரிசு காணாமல் போனதால் அவர்களது மங்க தேசத்துக்கு வாரிசு இல்லையென்பதால் தன் நாட்டுடன் அந்த நாட்டை இணைத்துக்கொண்டார். வாரிசு காணாமல் போன கவலையில் சகோதரியும், மன்னரான அவளது கணவரும் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
அருகில் நின்றிருந்த மருமகன் சிவந்தனின் மேலாடையை தனது வாலால் விலக்கிய போது அவரது நெஞ்சிலும் வேல் மச்சம் இருந்ததைக்கண்டு பரவசமானார்.
“நீங்கள் மகத தேசத்து பட்டத்து இளவரசன் இல்லை. எதற்காக சுயம்வரத்தில் பொய் சொல்லி கலந்து கொண்டீர்கள்?” மன்னர் போலி கோபத்துடன் பேசியதைக்கேட்ட அங்கிருந்த செம்மதி உள்பட பலரும் அதிர்ச்சியடைந்தாலும், சிவந்தன் மட்டும் சலனமின்றி நின்றிருந்தான்.
“நான் மகத தேசத்து வாரிசு இல்லை. மகத தேசத்து வாரிசு சிவந்தன் சுயம்வரத்திற்காக வந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது அவரை எனது தந்தை காப்பாற்றி சிகிச்சையளித்தார். அவரால் சுயம் வரத்துக்கு வர இயலவில்லை. எனது பெயர் செம்பன். அவர் போலவே முக ஜாடை எனக்கு இருந்ததால் அவரது லட்சினையைக்கொடுத்து என்னை கலந்து கொள்ளச்சொன்னார். நான் ஆதிவாசியின் மகன் என்றாலும் சிறுவயது முதலே நாம் சாதாரண ஆள் இல்லை. ஒரு தேசத்தை ஆளப்பிறந்திருக்கிறோம் என்று மனதில் அடிக்கடி தோன்றும். இளவரசருக்குரிய அனைத்து போர் பயிர்ச்சிகளையும் கற்றிருந்தேன். அதன் காரணமாகவே வந்த வாய்ப்பை மறுக்கவில்லை. வந்த நேரம் செம்மதியின் அளப்பரிய அன்புக்குப்பாத்திரமானேன். கடந்த ஒரு வருடத்தில் ஆயிரம் வருடங்கள் மற்றவர்கள் வாழ்ந்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு மனம் நிறைந்து வாழ்ந்து விட்டேன். என் தவறுக்காக நீங்கள் மரண தண்டனை கொடுத்தாலும் மனதார ஏற்கிறேன்” என்றான்.
அவனது வார்த்தையைக்கேட்டதும் மயங்கி விழுந்தாள் செம்மதி. அரண்மனை வைத்தியர் வந்து சிகிச்சையளித்தபின் நினைவு திரும்பியவள் தேம்பி அழுதாள்.
“ஆம். மரணதண்டணையை அவருக்கு கொடுங்கள். அப்படியே எனக்கும் கொடுத்து விடுங்கள். மன்னரும் மனிதர் தானே….? ஒரு சாதாரண மனிதர் மன்னராகக்கூடாதா….? ஏன் இன்னும் பழைய நிலையிலேயே உள்ளீர்கள்?” எனக்கூறி அழுதாள் செம்மதி .
“நான் கூறிய மரண தண்டனை என்பது எனது சகோதரியின் அன்பு மகனுக்கு மரணம் வரும் வரை இந்த நாட்டை ஆளும் தண்டனை. மாமன் மகள் செம்மதியை விட்டு ஒரு நாழிகையும் நீங்காமலிருக்கும் தண்டனை” என்று மன்னர் சொன்னபோது அரண்மனையிலிருந்த அனைவரும் மகிழ்ந்ததோடு காணாமல் போன செம்பனே கணவனாக செம்மதிக்கு இறைவன் அருளால் கிடைத்து விட்டதை எண்ணி நிம்மதி அடைந்தனர்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |