செத்தாலாவது வாழலாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 8, 2024
பார்வையிட்டோர்: 1,330 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆலமரத்துப் பிள்ளையார் ராம கோவிலுக்கருகே லிங்கம் வந்தபோது, அங்கே பேசிக்கொண்டிருந்த நாலைந்து விவசாயிகளில் ஒருவர் ‘கிராம சேவிக் ஐயா… ஒங்களைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுமாதிரி வந்துட்டிய!”என்றார். இன்னொரு. டிராக்டர் விவசாயி, “அவரை கிராம சேவக்குன்னு சொல் லாதே மச்சான்! இப்போது அவரோட உத்தியோகத்துக்கு. ஊர்நல அதிகாரின்னு பேராக்கும்” என்றார். 

ராமலிங்கம் “நீங்க வேற… பேரு பெத்தபேரு… வீடு. பட்டினி! பழைய கருப்பன் கருப்பனேங்கற சமாசாரந்தான். இப்போ பேசிக்கிட்டு இருக்க நேரமில்ல. யூனியன் கமிஷனர் அவசரமா வரச்சொல்லியிருக்கார். போய்க்கிட்டே இருக் கேன்” என்றார். 

“பொழுது சாஞ்ச நேரத்தில அப்படி என்ன வேல? கமிஷனர் வரச்சொன்னாராம். எதுக்குன்னு எனக்கும் புயுயல” 

“ஒங்க கமிஷனரு காரணமில்லாமக் கூப்புடமாட்டார். நீங்க நம்ம ஹரிஜனன் ராமசுப்புக்கிட்ட விவசாயத் தொழி லாளிக்குக் குறைந்தபட்சக் கூலி சட்டப்படி ஏழேகால் ரூபாய். ஆறுரூபாய் கொடுத்தா வாங்காதேன்னு சொன்னி யளா?” 

“சொன்னேன்” 

“நம்ம கண்டிராக்டர் வீடே கட்டல! அவர் கேட்கிற சிமெண்டைக் கொடுக்காண்டாமுன்னு கமிஷனர் காதைக் கடிச்சியளா?” 

“கடிக்கல! சத்தம் போட்டுச் சொன்னேன் ” 

“அங்கதான் விஷயமே இருக்கு. மிராசுதார் கிருஷ்ண சாமியும், காண்டிராக்டரும் போன வாரமே கலெக்டரைப் பார்த்து உங்களைப்பத்தி எதையோ எழுதிக் கொடுத்தாங் களாம்! எனக்கு என்னமோ…’ 

“இவன் எவண்டா இவன்! கிராம சேவக்கையா, நீங்க கவலைப்படாமப் போங்க.” 

”எனக்காகக் கவலைப்பட நீங்க இருக்கும்போது நான் எதுக்காகக் கவலைப்படணும்?” ராமலிங்கம் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்குப் போனார். விஸ்தரிப்பு அதிகாரி முதல் ஆபீஸ் பியூன்வரை அனைவரும் அவரை அனுதாபத்துடன் பார்த்தார்கள். கமிஷனரை அவர் சீக்கிரம் பார்க்கட்டும் என்பதுபோல் வராந்தாவில் கும்பலாக நின்றிருந்த அவர்கள் அவருக்கு வழி விட்டார்கள். 

கமிஷனர் அவரைப் பார்த்ததும், நாற்காலியை. நகர்த்திக்கொண்டே “ஐ ஆம் ஸாரி மிஸ்டர்! ஒங்கள பட்டியாம்பட்டி யூனியனுக்கு மாத்தியிருக்காங்க. பி.ஏ. பீடிக்கு கால் போட்டுச் சொன்னேன். கலெக்டரே போட்ட ஆர்டராம்! மாத்த முடியாதாம்!” 

ராமலிங்கத்தால் முதலில் மூச்சுக்கூட விட முடியவில்லை. 

“ஸார்! இந்த இடத்துக்கு வந்து ஒரு வருஷம்கூட ஆகல்ல. அதுக்குள்ள மாத்துறதாய் இருந்தால் என்ன ஸார் அர்த்தம்! நான் என்ன தப்பு ஸார் பண்ணினேன்?” 

“நீங்க தப்புப் பண்ணியிருந்தால் ஒங்கள மாத்தியிருக்க மாட்டாங்க! நீங்க விவசாயத் தொழிலாளிகளைக் கிளர்ச்சி பண்ணும்படியா தூண்டிவிடுகிறதாக் கலெக்டர் கிட்ட மனுப் போயிருக்கு; மாத்திட்டார். ஐ ஆம் ஸாரி. சத்தியமாய்ச் சொல்றேன், ஒங்களவிட எனக்குத்தான் வருத்தம்!” 

“ஸார்! இந்த டெவலப்மெண்ட் இலாகாவுல சேர்ந்து இருபது வருஷமாகுது. இதுக்குள்ள முப்பது இடத்துக்கு மாத்திட்டாங்க. அப்பா மெட்ராஸ் ஆஸ்பத்திரியிலே சாகக் கிடக்காரு! மனைவி நோயில கிடக்காள். சொந்தத் தம்பி கிட்டச் சொல்றமாதிரி சொல்றேன். அன்றாடம் சாப் பாட்டுக்கே கஷ்டமாய் இருக்கு. அப்பாவுக்காக வாரத்துல இருபது ரூபாய் ஆயுடுது. அவளுக்கு சிஸேரியன் ஆபரேஷனைச் சரியாச் செய்யாததுனால குடல் சரிஞ்சிருக் கிறதா டாக்டர் சொல்றாரு! அவளை ஜிஹெச்லே சேர்க் கலாமுன்னு இருக்கேன். இதுக்காகவே கிரேட் ஒன்றுக்கு புரமோட் பண்ணி டிரான்ஸ்பர் செய்தப்ப புரமோஷன் வேண்டாமுன்னுட்டேன். இது தெரிஞ்சும் என்னை மாத்து னால் நான் என்ன சார் பண்றது?” 

“நான் என்ன பண்ணட்டும்? 

“‘இது அநியாயம் ஸார்! பேமலி வெல்பால முப்பத்தாறு பேர் டார்ஜெட் கொடுத்திங்க… 58 கேஸ் பிடிச்சிருக்கேன். சிறுசேமிப்புக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தீங்க. ரெண்டா யிரத்து நூறு வாங்கிக் கொடுத்திருக்கேன். பதினைஞ்சு கம்போஸிட் குழி போட்டிருக்கேன்! ஒரு கோபர் கேஸ் பிளாண்டுக்குப் பதிலா அஞ்சு பிளாண்ட் போட்டிருக்கேன்! நான் என்ன சொல்லி என்ன செய்யல! நீங்களே சொல்லுங்க ஸார்.” 

“நான் என்ன பண்ணட்டும்… அந்தக் காலத்திலேயே காய்ச்ச மரத்துலதான் கல்லு விழுமுன்னு பழமொழி இருக்கு. காய்ச்ச மரத்துல பழம் பறிக்கிறவன்மேல கல் விழுறதா ஒரு மொழியும் இல்ல! என்ன பண்றது… நீங்களும் நானும் வேல செய்யறதுல மாடாய் இருக்கோம். காக்கா யாய் மாற முடியல! இந்தக் காலத்துல உழைக்கிறவன் அதிக மாய் உழைக்கிறதா உபத்திரவமாய் நினைச்சுக்கிறாங்க. மிராசுதாரையும் கண்ட்ராக்டரையும் பகைச்சுக்கிட்டீங்க. அவங்க சங்கை ஊத வேண்டிய இடத்தில ஊதி உங்களெ.” 

“ஸார்… நான் உங்களத்தான் நம்பியிருக்கேன்!” 

“ஆல்ரைட். நீங்க ஒரு மாதம் லீவு போடுங்க. நான் சாங்ஷன் பண்ணிடுறேன். மனிதாபிமானத்தைக் கருதி, மாற்றல் உத்தரவை ரத்து செய்யும்படியாய் ஒரு மனுக் கொடுங்க. நான் ஸ்ட்ராங்கா எழுதறேன்… என்னத்த எழுதி என்ன பிரயோஜனம்? எங்க நியாயம் இருக்கு?” 

ராமலிங்கம் தான் படும் கஷ்டங்களைச் சுட்டிக்காட்டி, அங்கிருந்து மாற்றப்பட்ட இடத்துக்குப் போனால் குடும்பத் தில் ஏற்படும் சிக்கல்களையும் கோடி காட்டி அங்கேயே விடுமுறை விண்ணப்பத்தையும். கருணை மனுவையும் கொடுத்துவிட்டு, சலிப்போடு வெளியே வந்தார். 

ராமலிங்கம் எஸ்.எஸ்.எல்.சி. படித்ததற்கு இந்த ஆண்டு வெள்ளி விழா நடத்தலாம். அவர் கிராமத்தில் முதன் முதலாக எஸ்.எஸ்.எல் சி. படித்த ஐந்தாறு பேரில் அவரும் ஒருவர். அவரைத் தவிர இதர எஸ்.எஸ்.எல்.சி.க் காரர்கள் தாலுகா அலுவலகங்களில் கிளார்க்குகளாகச் சேர்ந்து இன்று பல கிளார்க்குகளை வைத்து வேலை வாங்கும் அதிகாரிகளாக இருக்கிறார்கள் ஆனால் இந்த மனிதர் கிராம முன்னேற்றம் சமூக சேவை என்று பத்திரிகை களிலும், அப்போதைய அமைச்சர்களின் வாய்களிலும் அடி பட்ட வார்த்தைகளில் மயங்கி பஞ்சாயத்து யூனியன் ஆபீசில் கிராம சேவக்காகச் சேர்ந்தார். அவரது இயல்பான பற்றற்ற ரே நிலையான குணத்தைப்போல் அதிகாரிகளின் வயிற்று வேகத்துக்கும் ஈகோ’வுக்கும் தீனி போடமுடியாத இவரது உத்தியோகமும் ஒரே நிலையில் இருந்தது. 

வேலையில் சேர்ந்த ஒரு வருடத்துக்குள்ளேயே அலுவல் கத்துக்கு வருகை தரும் மேல் அதிகாரிகளிடம் உள்ளதை உள்ளபடி சொல்லி அவர்களது சினத்தையும் யூனியன் அதிகாரிகளின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்ட இவர் ஒரு சமயம் லட்சிய மரத்தின் உச்சாணிக் கிளைக்குப் போய் அங்கே இருந்து உலுக்கப்பட்டுக் கீழே விழுந்தார். விழுந் தவர் விழுந்தவர்தான். இன்னும் எழவில்லை. அதாவது பஞ்சாயத்துக் கவுன்சில் ஹாலில் கூடிய கூட்டமொன்றில் ஒரு தலைவர் பாரதம் கிராமங்களில் வாழ்கிறது என்பதை மறக்கக்கூடாது’ என்றபோது இவர் ‘ஆனால் நாம் கிராமங் களில் சேரிகள் செத்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டோம். என்று ஆவேசமாகச் சொன்னபோது அந்த ஆவேசத்தில் ஆக்ரோஷமான அதிகாரிகளால் அவரது அந்தரங்கக் குறிப் பேடு வில்லங்கமாகியது. 

இப்படிப்பட்டவர் காதலிக்காமலாவது இருந்திருக்க லாம். சொல்லப்போனால் அவர் காதலிக்கவே இல்லை. ஏகப்பட்ட சொத்திருந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டுக்கு உத்தியோக ரீதியாகப் போய்க்கொண்டிருந்த அவரை, அந்தத் தலைவரின் மகள் கண்ணால் அடித்தாள். இவருக்கும் ஆசை வரப் பார்த்தது. உடனே பயந்துபோய். சொல்லாமல் கொள்ளாமல் வேலையை வேறொரு யூனிய னுக்கு மாற்றிக்கொண்டு அவர் போனபோது. அங்கே அவரை வரவேற்றது அந்தப் பெண். பஸ் நிலையத்திலேயே நின்றிருந்தாள். இவர் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்க வில்லை. திருமண விபத்துக்கு உள்ளாக்கப்பட்டார். மனைவி போட்டிருந்த முப்பது பவுன் நகைகளை இவர் பஞ்சாயத்து மாமாவிடம் சேர்த்துவிட்டு, லட்சிய இல்லத்தில் இறங்கினார். மகனுக்கு வசதியான இடத்தில் கல்யாணம் செய்து இதர பிள்ளைகளையும் கரையேற்றக் கனாக் கண்டுகொண் டிருந்த இவரது தந்தை, பிள்ளை வேறே ஜாதியில் திருமணம் செய்ததை அறிந்து கொதித்து தந்தையே மகனுக்குக் கொள்ளி’ வைத்தார். மகன் செத்துப்போய்விட்டதாக அவர் பகிரங்கமாக அறிவித்தபோது, பஞ்சாயத்து மாமாவும் சம்பந்திக்குத் தானும் இளைக்காதவர் என்பதுபோல் மகளின் ஆடைகளை நெருப்பில் போட்டு அவரும் ‘கொள்ளி’ வைத்தார். 

எப்படியோ காலம் அந்தத் தம்பதியருக்கு கொள்ளிக்’ கண்களைக் காட்டியது. பொதுவாக கிராம சேவக்குகள் ஆசிரியைகளை மணந்துகொண்டு டபுள்’ சம்பளத்தில் உருவங்களும் டபுளாக இப்போது கமிஷனர்களாக மாறிய போது, கெமிஷன்’ வாங்காத ராமலிங்கம் கண்ணேறுபடும் அளவுக்கு அப்படியே இருந்தார். சமீபத்தில்தான் நோய்ப் பட்ட தந்தையைக் கிராமத்தில் போய்ப் பார்த்து கட்டிப் பிடித்து அழுதுவிட்டு, பிறகு அவரைப் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தார். 

ஒரு மாத விடுமுறையும் ராமலிங்கத்துக்கு ஓய்வு கொடுக் காமலேயே ஓய்ந்தது: குடும்ப நிலையை எத்தனையோ பேரிடம் எடுத்துக் கூறினார். அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கும் ‘அட்மிஷன் ரசீதையும் மனைவிக்கு ‘மேஜர் ஆபரேஷன் தேவைப்படும் என்று ஒரு டாக்டர் கொடுத்த நிஜமான சர்டிபிகேட்டையும் இணைத்து மீண்டும் கருணை மனுப் போட்டார். 

அவருடைய கருணை மனுவுக்குப் பலன் கிடைக்கவில்லை யானாலும் பதில் கிடைத்தது. 

கமிஷனர் அவரைப் பார்க்க அவர் வீட்டுக்கே வந்தார். உடன்பிறந்த சகோதரன் போல் ராமலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டே, “ஐ ஆம் ஸாரி தம்பி…நீங்க உடனே வேலையில் சேராவிட்டால் உங்க மேலே ஒழுங்கு நட வடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கு, நானும் உங்களுக்கு உடந்தைன்னு சொல்லி எனக்கும் மெமோ வந்திருக்கு. நாளைக்கு வந்து ரிலிவிங் ஆர்டரை வாங்கிக் கிறீங்களா?” என்றார். 

மறுநாள் ராமலிங்கம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் போய், ரிலீவிங் ஆர்டரை வாங்கிக்கொண்டார். அவருக்காக வைத்திருந்த பிரிவுபசார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். யூனியன் கட்டிடத்துக்கு வெளியே வந்தவர் ஒரு விவசாயியின் வேண்டுகோளை ஞாபகப்படுத் திக்கொண்டு டிப்போவில் போய், ஒரு டின் பூச்சி மருந்தை. வாங்கினார். 

இரவுப் பொழுது பகலை விழுங்கிக்கொண்டிருந்தது. வீட்டின் உள்ளறையில் வைத்திருந்த பூச்சி மருந்து டின்னை உரியவரிடம் சேர்ப்பிப்பதற்காக எடுத்தார். 

திடீரென்று ஒரு யோசனை. 

இத்தனை ஆண்டு நேர்மையுடனும், நியாயத்துடனும் வாழ்ந்து என்னத்தைக் கண்டோம்? நியாயம் செத்துவிட்ட காலத்தில் எதற்காக வாழவேண்டும்? கழுதையும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும் இந்த டிபார்ட்மெண்டில் எதற்காக இருக்க வேண்டும்? மனைவியை நல்லவிதமாகப் பராமரிக்க முடியவில்லை. அவள் வயிற்றுக்குள் குடல். அவர் மனம் மாதிரி சரிந்துகொண்டு வருகிறது. கடைசிக் காலத்தில் மகனைப் பார்த்துக்கொண்டே கண் மூடலாம் என்று ஆஸ்பத்திரியில் தவம் கிடக்கும் தந்தையை வாரத்துக்கு ஒரு முறைகூடப் பார்க்க முடியாது. நம்பி இருப்பவர்களை வாழ வைக்க முடியாத அவர் ஏன் வாழவேண்டும்? அப்படியானால் மனைவி மக்களின் சதி? 

திடீரென்று இன்னொரு நினைவு. 

இன்று முன்னைவிடப் பெருமளவு வசதியாக வேறொரு மாவட்டத்தில் இருக்கும் அவர் மாமனாரை இவருக்குப் பத்தாண்டுகளுக்குப் பின்னால் சேர்ந்து இப்பொழுது விவசாய விஸ்தரிப்பு அதிகாரியாக வேலை பார்த்தவர் பார்த்தாராம். பார்த்த கையோடு “ஒங்க மகளும் பேரன் பேத்திகளும் ரொம்பக் கஷ்டப்படுறாங்க… கொஞ்சம் உதவக்கூடாதா” என்று கேட்டாராம். அதற்கு அந்த மாமனார் “அவன் செத்தா போய்விட்டான்… நான் என் மகளுக்கு உதவறதுக்கு?” என்று திருப்பிக் கேட்டாராம்! 

ஒருவேளை நான் செத்தால்… இந்தப் பிள்ளைகளும் அவங்களைப் பெற்றவளும் வாழலாமோ… மாமனார் அவர் களைக் கூட்டிக்கொண்டு போய் வாழ வைக்கலாம். அதோட தந்தையை வரவேற்கத் தான் ஏன் முந்திக்கக்கூடாது? 

ராமலிங்கம் பூச்சி மருந்து டின்னின் வாய்ப் பக்கத்தை ஓர் ஆணியை வைத்து அடித்து ஓர் ஓட்டையை உண்டாக்கினார். கடவுளே என்னை மன்னிச்சுடு. இந்த நாற்பத் திரண்டு வயசில் பிறத்தியார் பொருளை இப்போதுதான் சாப்பிடுறேன்’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டே அந்த டின்னின் மரணப் பொந்தை அவர் வாய்க்கு அருகே. கொண்டு போனபோது- 

வீட்டுக்கு வெளியே, ஏதோ ஒரு மூலையில் இருந்து வந்த எருமை மாடு ஒன்று, யாரோ பின்னால் ஏறி உட்கார்ந்திருப் பதுபோல் முதுகைச் சிலிர்த்துக்கொண்டது. 

– இன்னொரு உரிமை, முதற் பதிப்பு: மே 1992, வானதி பதிப்பகம், சென்னை.

சு.சமுத்திரம் சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *