கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2025
பார்வையிட்டோர்: 69 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கமலியின் முன்னால் சேலைகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன. கலர் கலராய் – பூக்களும், கட்டங்களும், கொடிகளுமாய்… அவளுக்குத் தலைவலித்தது. 

காலையில் அவசர அவசரமாய்ச் சமைத்து, துவைத்து, ஒருவழியாகக் கிளம்பி, பஸ்சில் முண்டியடித்து ஏறி… 

ஸ்டூல் ஒன்றை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள். சேலை வாங்க வரும் போது முன்பெல்லாம் எத்தனை ஆர்வம், ஆர்ப்பாட்டம்… இப்போதோ அது ஒரு கடமையாய்ப் போனது. 

அவளுக்கு இத்தனை அழுத்தமான நிறமெல்லாம் பிடிக்காது. 

அவள் கணவன் குமாருக்கோ எளிய நிறங்கள் சுத்தமாகப் பிடிக்காது ‘இதென்ன பாட்டி போல அழுது வடியுது’ – முகம் சுளிப்பான். இவளது இளவண்ண ஆர்கண்டிகளும் ஷிபான்களும் பீரோவில் தூங்கின. 

“வேற ஏதும் பார்க்கறீங்களாம்மா?” கடைச் சிப்பந்தி அலுப்பாய்க் கேட்டார். 

மேலும், கீழும் பார்த்தவள், ”வேற ஏதாச்சும்” என்று இழுத்தாள். 

“விசித்திரா பிரிண்ட் புதுசு வந்திருக்கு எடுக்கவா?” 

“ம்.” அவர் அசுவாரஸ்யமாய் நகர யாரோசுமலியின் தோளை அழுத்தமாய்ப் பற்றினார்கள். 

பயந்து திரும்பினாள். 

“ஏய்… கத்தரிக்கா” கிசுகிசுத்துச் சிரித்தவள் – பூர்ணிமா. 

எழுந்த கமலி, தோழியின் கைகளை ஆவலுடன் பற்றினாள். 

“அட. பூரணி,எத்தனை வருஷமாச்சு பார்த்து!” 

கண்களை மூடி யோசித்த பூரணி, “ம். 12 வருஷம். என்ன கத்திரிக்கா வாடிப் போயிட்ட?” என்று கேட்டாள். 

“நீதான் சொல்றியே – 12 வருஷமாச்சுன்னு. பின்ன வாடாதா?”

புன்னகையினுடே கமலி, பூரணியை ஆச்சரியத்துடன் பார்த்தாள். பூரணி இப்போது மிகவும் அழகாகியிருந்தாள், பளபளப்பும், கம்பீரமுமாய் – நேர்த்தியாய் உடுத்தி… தான் ஏன் இத்தனை அலுத்துச் சலித்து விட்டோமென்று துளி கோபம் வந்தது. மனித ஆயுளில் 33 வருடங்கள் இளமையோடு சேர்த்தி தானே! 

“எத்தனைக் குழந்தைங்க கமலி உனக்கு?”

“ரெண்டு பொண்ணுங்க.” 

“10 வயசு 8 வயசா?” 

“பந்தும் ஆறும்” – சிரித்தாள். 

“இதென்ன இப்படி ‘பளீர்’ கலரெல்லாம் குமிச்சு வச்சிருக்கு? லைட் கலர் தானே கட்டுவே? கத்தரிப்பூ கலர்னா உயிராச்சே” 

“அவருக்குப் பிடிக்காது..” 

“அவருக்குப் பிடிச்ச மாதிரி ரெண்டு. உனக்கு இஷ்டமானதா ரெண்டு. அது சரி. சேலை எதுக்கு இப்ப?”

“நாளைக்கு எனக்குப் பிறந்த நாள்.”

“வாழ்த்துக்கள் – அப்ப லைட் கலர் தான்.” 

இவர்கள் பேசி முடிப்பதற்காகப் பொறுமையாய்க் காத்திருந்த விற்பனையாளரிடம் பூரணி சொன்னாள்: 

“இது வேணாங்க லைட் கலர்ஸ், பொடி பூவா எடுங்க.”

கமலிக்குத் திடீரென உற்சாகமாய் இருந்தது. “கத்திரிப்பூ கலர் இருக்கா?” – சிறு பெண்ணாய்க் கேட்டாள். 

ஐந்தே நிமிடங்களில் அவள் கேட்டதினுசில் புடவை அமைந்து போனது. பொருத்தமாக ரவிக்கைத் துணி பொறுக்கி எடுத்து வெளியே வந்தனர். 

“கிளம்புவோம் வா. மார்க்கெட் பக்கந்தானே சொன்னே? நான் போற வழி தான்.” 

“இல்லை, மார்க்கெட் தாண்டி. சாந்தி நகர்.” 

“கூட 2 நிமிஷம்.” 

ராயல் தியேட்டர் பக்கமாய் நடந்தனர்.

“நீ ஒண்ணும் வாங்கலையா?…” 

“சேலை ஒண்ணு ஆர்டர் பண்ண வந்தேன்.” 

“ஓஹோ.” 

“வெண்பட்டுலே சுறுப்பு பார்டர்.” 

“வெள்ளையும், கறுப்புமா? அவரு ஒண்ணுஞ் சொல்ல மாட்டாரா?”. 

“நல்லாத்தானிருக்கும். ஆசைப்பட்டுத்தானே எடுக்கறோம். அவர் தங்கை சிங்கப்பூரிலேர்ந்து எனக்கு ஒரு முத்து செட் வாங்கி வந்தா, அதுக்குப் பொருத்தமா சேலை.” 

யோசித்துப் பார்க்க வெண்பட்டு, முத்து, மிதமான ஒப்பனையில் பூரணி பிரமாதமாயிருப்பாள் எனக் கமலிக்குப் பட்டது. 

“என் வீட்டிலே கத்தரிக்காய் சமைக்கும் போதெல்லாம் நான் உன்னை நினைச்சுக்குவேன் கமலி. தினம் ஒரு தினுசு சாதத்தோட எண்ணெய்க் கறி பண்ணி எடுத்துட்டு வருவே. வதக்கியதில் கருப்பா பளபளன்னு மின்னும் உன் சுத்தரிக்காய். ” 

“எங்க வீட்ல அதைச் சமைக்கறதேயில்லை”. 

“அப்படியே சாப்பிட்டிருவியா?” டி.வி. விளம்பர பாணியிஸ் கேட்டான் பூரணி. 

“சேச்சே… அட இதென்ன மொபெட் இதிலியா நான் ஏற?”

“நீ ஓட்ட வேண்டாம். பின்னால உட்காரு.”

“எனக்குப் பழக்கமேயில்லையே…” 

“உங்க வீட்ல பின்ன என்ன பென்ஸா?”

“ஒரு பழைய பியட்.” 

“நீயும் ஒரு மொபெட் வாங்கிக்க. சிக்கனம். நான் ஓட்டக் கத்துத்தரேன்.” 

“கொஞ்சம் மெள்ளவே போ பூரணி”. 

“மெட்ராஸ் டிராஃபிக்குல பொண்ணுங்க புகுந்து வளைஞ்சு ஓட்டறதை நீ பார்க்கணும். திருநெல்வேலியில ஓட்றது நத்திங். இங்க இடதுபக்கம் ஓவர்டேக் பண்ண மாட்டாங்க. பொண்ணுங்களுக்குத் தனி மரியாதை.” 

கொட்டிய கமலி, சவாரியை அனுபவிக்க ஆரம்பித்திருந்தாள். தாமிரபரணியை, பஸ் – சைக்கிள் பயணிகளை, போஸ்டர்களை – குழந்தை போல முறைத்துப் பார்த்தாள். காற்று முகத்தில் மோத தலைசாய்த்துப் புன்னகைத்தாள். 

பஸ் ஸ்டாப் அருகே நிறுத்திய பூரணி, ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் வாங்கி வர, மரத்தினடியில் பேசியபடி சாப்பிட்டனர். 

குடும்பம். வேலை என்று பேசி மறுபடி கத்தரிக்காய்க்கு வந்தனர். 

“அதென்ன கத்தரிக்கா சமைக்கறதில்லைங்கற? அது இல்லாம சோறு இறங்காதே உனக்கு?” 

“அதெல்லாம் ஒரு காலம்.” 

“சே பாட்டி மாதிரி பேசாதே. பிடிச்சதை செய்து சாப்பிடக் கூடவா காலம்?” 

“அவருக்கு அது அலர்ஜி.” 

“அதுக்கென்ன?” 

“எனக்குன்னு சமைக்கறதுக்கு… சோம்பல்.” 

“நோ…நோ. கல்யாணமானா நமக்குப் பிடிச்சதை விட்டறணுமா? சின்னச் சின்ன விஷயங்கள்ல தான் சுவாரஸ்யமே. இந்த ரவிக்கையைப் புது தினுசில தைச்சு, நாளை கத்திரிப் பூ சேலை கட்றச்சே ஒரு உஜார். சுடச்சுட எண்ணெய்க் கறி செய்து, பாட்டுக் கேட்டுட்டே சாப்டறது ஒரு குஷி. தனக்குன்னு தனியா செய்துக்கறதுல பொம்பளைங்களுக்கு ஒரு பயம்… தன்னலமோன்னு ஒரு குற்றவுணர்வு”. 

“மித்த யாரும் சாப்பிடாத போது…” 

“பிரிட்ஜில் வச்சு இரண்டு நாள் சாப்பிடு. கொஞ்சம் தன்னலம் அவசியம் கமலி. அது வாழ்க்கையை இனிதாக்கும். செஞ்சு பார். இனி ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உன் வயசு இறங்கிட்டு வரும் பாரேன்.” 

“அது சரி” 

“நீ இளமையா, உற்சாகமா இருக்க – அவருக்கும் குஷி பிய்ச்சிக்கும்.” 

மார்க்கெட்டில் இறங்கிய பூரணி, மறுநிமிடம் ஒரு காகிதப் பையுடன் வந்தாள். 

“நல்ல பிஞ்சுக் கத்தரிக்காய். நாளைக்குச் செய்து என்னை நினைச்சுட்டே சாப்பிடு.” 

கிளம்பிய மொபெட் வேகமாகச் செல்லச் செல்ல, ஏனோ கமலிக்குப் பயமாகவே இல்லை. தலைமுடி காற்றில் சிலும்ப, சின்னப் பெண் போல உணர்ந்தாள் அவள். 

– மங்கையர் மலர், மே 1992.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *