கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2025
பார்வையிட்டோர்: 304 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மெல்லிய நீலநிறப் பூச்சிடப்பட்ட அறைச்சுவர் தண்ணெண்ற குளிர்ச்சியை வாரி இறைத்துக் கொண்டி ருந்தது. அச்சுவர்களில் நாற்புறமும் பலவிதமான அறிவித்தல்களும், வரைபடங்களும். புள்ளிவிபரங்களும் ஒட்டப்பட்டிருந்தன. காற்றாடி இதமாக சுழன்று கொண்டிருந்தது. 

“வரச்சொன்னீர்களா மெடம்?” 

மெல்லிய குரலில் கேட்டபடி வாசலருகே வஹ்ஹாப் ஆசிரியர் நின்று கொண்டிருந்தார். அது இரண்டாம் பாடவேளையின் ஆரம்பம். எல்லா வகுப்புகளிலும் மிக ஜரூராக பாடங்கள் நடந்துகொண்டிருந்தன. குளிர்ந்த காலைப்பொழுது உள்ளங் களில் உற்சாகத்தை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தது. அவருக்கும் அந்நேரத்தில் எட்டாம் தரத்தில் சமூகக் கல்விப் பாடம். விருப்பமின்றியே அழைப்பை ஏற்று வந்திருந்தார். 

அவர் இந்தப் பிரபலமான நகரப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்து ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் எப்படியோ அதிபரின் அன்புக்கு ஆளாகிப் போயிருந்தார். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது அவரை அழைத்துப் பேச அதிபர் மறப்பதில்லை. அவரது முதுகுக்குப் பின்னால் இது குறித்துப் பல கதைகள். எதுவுமே அறியாதவர் போல் நடந்துகொள்வதன் மூலம் சிக்கலான அந்தப் பாடசாலை ஒழுங்கமைப்புக்குள் தப்பிப் பிழைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். 

“யெஸ். உட்காருங்கள்.” 

கதிரையின் நுனியில் தயக்கத்துடன் உ உட்கார்ந்தார். அலுவலகக் கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்த காரியாலய ஊழியன் கோபாலன் தலைநிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தான். 

“நீங்கள்தானா இந்தக் கணக்கைச் செய்வித்தது?” 

மேசையின் மீது பயிற்சிக் கொப்பியை நகர்த்திப்போட்டார் அதிபர். தங்க ஃபிரேம் போட்ட கண்ணாடிக்கூடாக கூர்மையாகப் பார்த்தார். 

ஆசிரியர் கொப்பியைக் கையில் எடுத்துப் பார்த்தார். தான் செய்வித்த கணக்குதான். முந்தாநாள் பதில் கடமையின் போது மூன்றாம் தரத்திற்கு வழங்கியது. 

“அது அந்த மாணவர்களின் தரத்துக்கு டூ மச் என்று பேரன்ட்ஸ் கொம்ப்ளைன் பண்ணியிருக்காங்க….” 

“இல்ல மெடம். அந்த வகுப்புல பல கெட்டிக்கார மாணவங்க இருக்காங்க. அவங்களுக்காகத்தான் இதக் கொடுத்தேன். இன்னும் ரெண்டு வருஷத்துல ஸ்கொலர்ஷிப் எக்ஸாம் எழுதப்போறவங்க இல்லையா?’ 

அதிபர் தைைய அசைத்து அதனை ஆமோதித்தார்.

“அப்போ நா போகவா மெடம்?” 

சில வினாடிகளின் பின்பு வஹ்ஹாப் ஆசிரியர் கேட்டார்.

“என்ன அவசரம்? கொஞ்சம் உக்காருங்க sir.”

கட்டளைக்குப் பணிந்து மீண்டும் அமர்ந்தார். 

“ஏன் நேற்று நீங்கள் லீவு?” 

“ஃப்ரெண்ட் கல்யாணம். கண்டிக்குப் போயிருந்தேன்.” 

“ஓ… ஐசீ…” என்று புன்னகைத்த அதிபர் தொடர்ந்தார். 

“கண்டி அழகான ஊர். அங்கே உள்ளவங்க நாகரிகத்துக்கு பேர் போனவங்க… அந்தக் காலத்துல நாகூட “கண்டி ஹைஸ்கூல்”லதான் படிச்சேன்..முப்பது வருஷத்தை யும் அங்கதான் கழிச்சேன்.. என் ஃபாதர் அடிக்கடி சொல்லுவார், உனக்கு ஏத்த இடம் கண்டிதான். நீ அங்கதான் படிக்கணும். வளரணும். கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும்… இப்படி சொல்லிக்கொண்டேயிருப்பார். நா படிக்கும்போது தனியா ஒரு வீடு, ரெண்டு ஆயாமார், ஒரு கார் எல்லாம் ஏற்பாடு பண்ணித் தந்தார். அது சரி, சாப்பாடெல்லாம் எப்படி?” 

“பரவாயில்ல மெடம்…” 

மெடம் சிரித்தார். 

“ஓமொம். வீட்டுல எப்பவும் நல்லா சாப்பிடுறவங்க கண்டியில கிடைச்ச கல்யாண சாப்பாட்டக்கூட not bad ன்டுதான் சொல்லுவாங்க. அந்தக் காலத்துல எங்கட வீடும் அப்படித்தான். ஒரு கிழமைக்கு ஒரு கிடாய் அறுத்து கறியாக்குவாங்க. எங்க ஃபாதர் ஜி.எஸ். எங்க மதர் இதே ஸ்கூல்ல ப்ரின்ஸிபல். வடமத்திய மாகாணத்திலேயே முதலாவது முஸ்லிம் ப்ரின்ஸிபல் எங்க மதர்தான். எந்த நேரமும் விருந்துதான். வடமத்திய மாகாணத்தில, இந்த அனுராதபுர டிஸ்ட்ரிக்குல நல்ல ஃபேமஸா இருந்தது எங்க குடும்பம்…” 

ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முந்திய கனவு லகுக்குள் காலடி வைத்ததுபோன்று அதிபர், தனது கதிரையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார். இதுதான் நல்ல தருணமெனப்படவே, வஹ்ஹாப் ஆசிரியர் மெதுவாக பேச்சைத் தொடங்கினார். 

“மெடம். வர்ற செகன்ட் டெர்ம்ல ஒரு ட்ரிப் ஏற்பாடு செஞ்சா நல்லம்தானே…?” 

“ஒமோம். அது சம்பந்தமா ஸ்டாஃப் மீட்டிங்குல பேச வேணும். இந்த ஸ்கூல்ல ரெண்டு பார்ட்டி இருக்கு தில்லையா…? இழுபறி கேஸ்களையும் சமாளிக்கணும். முந்தியெல்லாம் என்னக் கண்டா ஊர் ஜனங்கள் எழும்பி நிண்டு மரியாதை செய்வாங்க. இப்ப இந்த அறுவான்களால எல்லாம் போச்சு. சின்ன பிள்ளைகள்கூட மதிக்குது இல்ல. அந்தளவுக்கு எல்லார் கிட்டயும் என்னப்பத்தி பொய்யும், புரட்டுமா சொல்லி வச்சிருக் கான்கள். நிர்வாகம் சரியில்லையாம். பெண் தலைமைத்துவம் உருப்படாதாம். என்ன மாத்த வேணுமாம். தூ! எப்பவும் கீழ்த் தரமான வேலைகளில்தான் கவனமாயிருக்கான்கள். யாரைச் சொல்ல? அவன்கள் பிறந்த கோத்திரமே அப்படித்தானே…! கடலைக்காரனும், பொட்டணிக்காரனும் படிச்சி, பதவிக்கு வந்துட்டா போதுமா? குணம் அதேதானே….!” 

அதிபரது முகம் சிவந்து போயிற்று. வாய் கோணி, கண்கள் நனைந்தன. 

நன்றாக மாட்டிக்கொண்டோமோ என்று ஆசிரியருக்கு பட்டது. ஏன் சுற்றுலா பற்றி கதை எடுத்தேன்? பேசாமல் அதிபர் புராணத்தைக் கேட்டபடி இருந்திருக்கலாம். 

கோபாலன் லேசாகத் திரும்பி ஆசிரியரை அனுதாபப் பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தனது வேலையில் ஆழ்ந்தான். 

மூக்கை உறிஞ்சியபடி அதிபர் மீண்டும் பேசத்தொடங்கினார். 

“இந்த கோபாலனக் கேட்டுப் பாருங்க sir. இவன்ட அப்பாகூட எங்கட வயல்லதான் வேல செஞ்சாரு. இவங்க காட்டுற மரியாதையும், மதிப்பும்கூட எங்க ஜனங்க கிட்ட இல்ல. அந்தக் காலத்துல எங்க வாப்பா பள்ளிவாசல் ட்ரஸ்ட்டியாவும் இருந்தாங்க. பில்டிங் சாமானெல்லாம் லொறி லொறியா வந்து எங்கட வீட்டுலதான் இறங்கும். மலேஷியா, சவூதி அரேபியா எம்பஸிக்கெல்லாம் கட்டட உதவி கேட்டு எங்கடஃபாதர் எழுதின கடிதங்கள்…வந்த பதில்கள் எல்லாம் இப்பகூட எனக்கிட்ட பத்திரமா வச்சிருக்கேன். ஒரு செங்கல்லக்கூட எங்க வாப்பா அநியாயம் பண்ணினதில்ல. கெட்ட பேர் வாங்கவும் இல்ல. இப்பல்லாம் அப்படியில்ல. இந்த மக்களுக்கு எத செஞ்சாலும் திருப்தியில்ல…” 

வஹ்ஹாப் ஆசிரியர் அதிபரின் முகத்தில் உணர்ச்சிக் கோலங்கள் வர்ணஜாலமிடுவதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். 

”உங்களுக்குத் தெரியுமா sir? எங்கட ஃபாதர் நல்ல ரசிகர். ஜாக்குலின் கென்னடிக்குக்கூட அந்தக் காலத்துல கடிதம் எழுதியிருக்காரு. கென்னடி செத்த உடனே ஜாக்குலின், ஒனாஸிஸைக் கல்யாணம் கட்டினதைக் கண்டிச்சி லெட்டர் எழுதியிருக்காரு. அந்த லெட்டர் ஹெட் எனக்கிட்ட பத்திரமா இருக்கு. இப்ப அதேமாதிரிதான் வளர்ந்து வாறான் என் மகனும். இளைய தளபதி விஜய் எட்ரஸா, அல்காயிதா நெட்வர்க் பத்தின தகவலா… எல்லாமே விரல் நுனியிலதான். பட்பட்டுன்டு பதில் சொல்லுவான்…” 

பேச்சு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தது. நேரம் தண்ணீரைப்போல கரைந்துகொண்டிருந்தது. நான்காம் பாட முடிவுக்கு மணியடித்தது. வஹ்ஹாப் ஆசிரியர் எதிரேயுள்ள சுவரைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். 

அழகிய இள மங்கையரின் வண்ண வண்ணப் படங்கள் ஒட்டப்பட்ட சிறிய அறைச் சுவர்கள். சின்ன ஜன்னலுக்கூடாகத் தென்றல் தவழ்ந்து வந்து கொண்டி ருந்தது. 

அது ஒரு சிறிய அறை. முன் ஹாலில் உள்ள நாலைந்து மேசைகளைத் தவிர, இவ்வறையினுள்ளே ஒரே ஒரு மேசையும், சில கதிரைகளும் போடப்பட்டிருந்தன. தனிமை விரும்பிகளுக்கு வாய்ப்பான அறை. 

மதிய இடைவேளை. முனாப், சலீம், இம்டியாஸ், மஜீத் நால்வரும் தமது ஆஸ்தான அறையில் தாம் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

அது, வலயக் கல்விப் பணிமனைக் கட்டடத்தின் அருகில் அமைந்திருந்த சிறிய சிற்றுண்டிச்சாலை. அந்த அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஆண், பெண் பேதமின்றி அங்கு வந்து சாப்பிட்டுச் செல்வார்கள். 

“சலீம் ஏன் நீ சாப்பாடு கொண்டு வரல்ல…?” மஜீத் கேட்டான். 

“வீட்டுல சின்ன பிரச்னை. ராத்திரி சண்டை போட்டு திரும்பிப் படுத்துட்டா. காலைல எனக்கு டீயும் இல்ல; சாப்பாடும் இல்ல…” 

கடையில் வாங்கிய மரக்கறி ரொட்டியைக் கடித்தபடி சலீம் சொன்னான். 

கடைச் சேவகன் தண்ணீர் கிளாஸ்களை மேசையில் வைத்துவிட்டுப் போனான். 

“நடந்ததச் சொல்லுடா…” 

“ஒண்ணுமில்ல. நா கண்ட மாதிரி சிகரட் குடிக்கிறனாம். ஏன்கிட்ட வந்தாலே அவக்கு வயித்தப் புரட்டுதாம். சிகரட்ட நிப்பாட்டுங்க. அதுவரைக்கும் கிட்ட வராதீங்க என்டெல்லாம் பெரிய வசனம் பேசுறா…” 

இம்டியாஸும், முனாபும் புன்னகைத்துக் கொண்டனர். மஜீத் ஆறுதல் சொன்னான். 

“பெண்புத்தி பின்புத்தின்னு சும்மாவா சொன்னாங்க. கிடக்கட்டும். நீயும் போசாத. தானே வருவா…’ சில நிமிட நேர மௌனத்திற்குப் பிறகு இம்டியாஸ் தொடங்கினான். 

“கவலய விடுடா. நம்ப புதிய ஃபிகர் எப்படி?” 

தனது மேலதிகாரியாக – உதவிக் கல்விப் பணிப்பாளராக – சென்ற வாரம் பதவியேற்று கடமைக்கு வந்திருந்த சாந்த குமாரியைப் பற்றித்தான் அவன் குறிப்பிட்டான். 

“ச்சா… வெரி ஃபைன். நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். நல்ல ஸ்மார்ட் இல்லையா?” 

“அது மட்டுமா? அவ இன்னும் மிஸ்தான்….” 

“ஓஹோ..அதுதான் இவ்வளவு கெட்டப்பா? இளமை ஊஞ்சலாடுகிறது..” 

எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். 

“நேத்து சைன் வாங்குறதுக்காக அது ரூமுக்குள்ள போனேன். ஃபிகர் வெளிய போய் இருந்திச்சி. மேசையில டயரி கிடந்திச்சி. சுட்டுட்டேன்.” 

“என்ன சுட்டாய்?” 

“சொந்த ஊர் கம்பஹா. இங்கே கூலிக்கு ஒரு வீடு எடுத்து பேரன்ட்ஸோட தங்கியிருக்கு. இன்னொரு விஷயம் சொல்லவா? ம்….வெயிட் அம்பத்தஞ்சி…” 

மீண்டும் எல்லாரும் அட்டகாசமாகச் சிரித்தனர். சாப்பிட்டு முடித்து சிகரட் பிடிக்க ஆரம்பித்தனர். 

“அப்போ கணக்கு எப்படி? ” 

“இரு சொல்றேன்…” கண்களைச் சிமிட்டி, முகத்தில் சிருங்கார ரசம் தோய அவன் சொல்லத் தொடங்கினான். அவனது உள்ளத்தின் அழுக்குகள் அவன் வாயிலிருந்து புழுக்களைப் போல வந்து விழுந்தன. 

மீண்டும் வெடிச்சிரிப்பு பரவி அந்த அறைச் சுவர்களில் மோதிற்று. சுவரில் தெரிந்த அழகிய பெண்களின் புகைப்படங் கள் சிகரட் புகையில் மங்க ஆரம்பித்தன. 

கூட்டம் முடிந்து தலைவர் வெளியே சென்று விட்டார். அனைவரும் கசமுசவென்று பேசியபடி நகரத் தொடங்கினார்கள். ராசிக் எழுந்திருக்கவில்லை. காரணம், சுமையா இன்னும் எழுதிக்கொண்டிருந்தாள். 

அவள் தலை நிமிரும்போது அவன் எதிரே சுவரைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். சுவரில் பல புகைப் படங்கள் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் புகைப் படங்கள். நடுவே பிரதேச சபைக் கட்டடத்தின் முகப்புத் தோற்றம் அழகிய புகைப்படமாக. அதன் கீழே, வடமத்திய மாகாணத்தில் சிறந்த பிரதேச சபையாக கெகிறாவ பிரதேச சபை தெரிவு செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட சான்றிதழ். 

அது குறித்த பிரதேச சபையின் பாவனைக்குரிய விசாலமான விழாமண்டபம். விரைவில் நடைபெறப் போகும் தேர்தல் சம்பந்தமாக செய்யவேண்டிய வேலைகளைப் பகிர்ந்து வழங்குவதற்காக அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஏறக்குறைய யாருமற்ற தனிமை. ராசிக் சற்று தூரத்தில், பக்கவாட்டில் அமர்ந்து குறிப்பெழுதிக் கொண்டிருந்த சுமையாவை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். 

ஒருகாலத்தில் அவனுடன் ஏட்டிக்குப் போட்டியாகப் படித்தவள். பெரிய ஆசைகள், அதைவிடப் பெரிய கனவுகள். “படித்து முடித்து என்னவாகப் போகிறாய்?” என்று ஒரு கேள்வி கேட்டால் போதும். வரிந்து கட்டிக்கொண்டு தனது இலட்சியங்கள் பற்றிப் பேசுவாள். 

அவன் எதுவுமே காதில் விழாததுபோன்று பாசாங்கு பண்ணியபடி யாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பான். அவளது அழகில் மயங்கி, அவளை ஒரு தலைப்பட்சமாக காதலித்த எத்தனையோ வாலிபர்களில் அவனும் ஒருவன். சாதாரண ஏழை. அவள் மீதுள்ள ஈடுபாட்டை வெளிக்காட்டிக் கொள்ள இன்றுவரை அவனுக்கு சந்தர்ப்பம் வாய்க்கவே யில்லை. 

இப்போது இருவரும் ஒன்றாகவே வேலை செய்கின்ற போதும் இருவேறு திசைகளில் கவனங்கள். காரணம், ராசிக் அரசியலில் தீவிர ஆர்வங் காட்டினான். அலுவலக நேரம் போக, ஏனைய நேரங்களில் எல்லாம் ஆளும் கட்சிக்கு பிரசாரம் செய்து வந்தான். ஆளும் கட்சித் தலைவரின் வலது கையாக மேடைகளில் வீற்றிருப்பான் பெருமிதமாக. 

இடையில், அவள் எதிர்க்கட்சித் தலைவரின் மனைவி யாகிப் போனாள். அவள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கிறாள் என்பதுபற்றி ராசிக் எதுவும் அறிய முடியவில்லை. ஆயினும், அவள் எதிர்க் கட்சிக்காரியாகவே தோற்றமளித்தாள் இப்போது. 

அவள் மீதுள்ள ஈடுபாட்டைக்கூட அரசியல் குறுக்கிட்டு மறைத்தது. வெறும் அலுவலகப் பேச்சுக்களொடு அவர்களது உறவு முடிந்துவிடும். என்றாலும், அவள் பார்க்காதபோது நாவில் எச்சில் ஊற, தலைமுதல் கால்வரை அவளை அளவெடுத்துக் கொண்டிருப்பது அவன் வழக்கம். 

அவள் தலைநிமிர்ந்தாள். 

“என்ன ராசிக் யோசனை…?”

“ஒண்ணுமில்ல…” சிரித்தபடி எழுந்துகொண்டான். அவளும் எழுந்து வெளியே செல்ல ஆரம்பித்தாள். 

அவள் வாசலை நெருங்கியபோது அவளை வெளியே செல்லவிடாமல் திடீரென ஒரு கும்பல் அவளைச் சூழ்ந்து கொண்டது. 

முடிவில் தொடங்கும் கதைகள் எங்கிருந்து வந்தனர், எப்படி வந்தனர், யார் இவர்கள்…? எதுவுமே புலப்படவில்லை. 

கும்பல் பல தூஷண வார்த்தைகளைப் பேசியபடி அவளை நெருங்கியது. 

“பெரிய அரசியல்வாதிட பொஞ்சாதின்னு நெனப்பா? இந்தமுறையும் உன் கட்சிக்கு என்ன நடக்குதுண்டு பாரு. உன் புருஷன் ஊர விட்டே ஓடுவான்…” 

அவர்களில் ஒருவன் திடீரென ஒரு வாளியை அவள்மீது கவிழ்த்தான். அது, ஆளுங் கட்சியின் வர்ணம் கலந்த நீர். 

அவளது இளமஞ்சள் நிறச்சேலை சில நொடிகளில் ஆளுங் 

கட்சியின் வர்ணமாக மாறியிருந்தது. 

“இந்த முற வோட் போட இந்த சாரியோட போ.” 

அவள் மிரள மிரள விழித்தபடி பின்வாங்கினாள். கையி லிருந்த பேனையும், கொப்பியும் நழுவி வீழ, கதிரை களிடையே சிக்கியபடி ராசிக்கை நோக்கி ஓடிவந்தாள். 

“ராசிக் ப்ளீஸ்.. காப்பாத்துங்க…” 

நீரில் நனைந்த நிலையில் அவளது அழகிய தோற்றம் அவன் கண்களைக் கூசவைத்தது. அவளை யாரும் தீண்டாதபடி காப்பாற்றிவிட கைகள் பரபரத்தன. 

ஒருகணம்தான். மறுகணம், தான் ஆளுங் கட்சிக்காரன் என்ற உணர்வு அவன் சிந்தையில் உறைக்கத் தொடங்கியது. 

இவள் எதிர்க்கட்சிக்காரன் மனைவி. இவளை நானீ ஏன் காப்பாற்ற வேண்டும்? 

இரண்டடி விலகி நகர்ந்து, ஓடிச்சென்று பின்புற வாசலின் வழியாக அவன் வெளியேறியபோது, காரியம் முடிந்து கும்பல் வந்தவழியே நடக்கத் தொடங்கியிருந்தது. 

விக்கித்துப்போய் மண்டபத்தின் உட்சுவரோடு ஒட்டி நின்றுகொண்டிருந்த அவளை எதிரேயிருந்த புகைப்படங்கள் அனுதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன. 

– மல்லிகை, ஜூலை 2004.

– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *