சுரங்களும் சுருதிகளும்
கதையாசிரியர்: தம்பு சிவசுப்பிரமணியம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 76
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மார்க்கண்டரின் தங்கைச்சியின் மகள் பெரிசாகிவிட்டாள் என்ற செய்தி சொல்ல அவற்றை தங்கைச்சியும் மச்சானும் வீட்டுக்கு வந்து சொல்லி விட்டு,
“மச்சான், விடியத் தண்ணிவாக்க வேணும் தாய்மாமன் உனக்குத்தான் அந்தக் கட்டாயம் இருக்கு அவவையும் கூட்டிக் கொண்டு பொழுதோடை வந்துவிடுங்கோ”
‘விடிய ஆறுமணிக்கு வந்தால் போதுமே?” என்று அப்பா கேட்டார்.
“நாங்கள் தண்ணிவாக்கிறத்துக்கு ஒருவருக்கும் சொல்லேல்லை. நீங்கள் வசதிபோல வாங்கோ; வந்ததும் வாப்பம்.”
“சரி வசதிபோலை வாறம் மச்சான்.”
“இராகு காலம் 7.50க்குத் தொடங்கீது அதற்குமுன் செய்ய வேணும். அப்ப நாங்கள் வாறம்.” மாமா செல்லிப்போட்டு போய்விட்டார். சின்னமாமி ஒன்றுமே பேசவில்லை. சின்னமாமா கதைக்கேக்கை ஏன் குறுக்கிடுவான் என்று பேசாமல் இருந்துவிட்டார்.
”பாத்தியளே அவவின்ரை கெப்பரை. அதுதான் உங்கட சின்னத்தங்கைச்சியைத்தான் சொல்லுறன். அந்த ஆள் உங்கட மச்சான் சிவலிங்கம் எவ்வளவு தன்மையாய் கதைக்கிறார் பாத்தியளே.” என்று அம்மா சொல்வது கேட்கிறது.
“ஒரு விடயத்தை இரண்டுபேரும் ஏன் சொல்லுவான் எண்டு இருந்துவிட்டாளாக்கும்” என்றார் அப்பா.
“வீடு தேடி வந்தவள் ஒரு வார்த்தை எண்டாலும் கதைச்சி ருக்கலாம்; பேசாமல் போய்விட்டாள்.”
இப்படியாக அம்மா கதையை வளர்த்துக்கொண்டு போவதை விரும்பாத அப்பா “சரி பேசாமல் இரும் காணும்” என்றார்.
“நீங்கள் உங்கள் தங்கைச்சி செய்கிறதெல்லாம் சரி. நாங்கள் ஏதோ சும்மா கத்துகிறம் எண்டு நினைக்கிறியள் போலை”
“இப்ப என்னப்பா என்னைச் செய்யச் சொல்லுகிறீர்.”
“நாளைக்கு தண்ணிவாக்கப் போகக்கூடாது. நானும் வரமாட்டன்.”
“உமக்கென்ன விசரே! தாய்மாமன் எண்ட முறையிலை அவர்கள் முறையாக வந்து சொல்லிவிட்டுப் போயினம். போகாட்டி இனசனம் என்ன நினைப்பார்கள்”என்று அப்பா கொஞ்சம் கடுமையாகச் சொல்லிவிட்டார்.
அம்மாவுக்குத் தெரியும் அப்பா சின்னத்தங்கைச்சி குடும்பத்தோடை நல்ல ஒட்டு அதனால் அவரிடம் கதைப்பதில் எதுவித பயனுமில்லை என்று நினைத்தாவோ தெரியாது ஒன்றும் மேற் கொண்டு கதைக்காமல் வீட்டுக்குள் போய்விட்டார்.
நான் வீட்டுக்கு ஓடிவருவதைக் கண்ட அப்பா
“ஏனடா தம்பி ஓடிவாறாய்” என்று கேட்டார்.
“கனடா சித்தப்பாவும் சித்தியும் பிள்ளைகளும் சின்னமாமி வீட்டை போகினம். நான் றோட்டிலை பெடியங்களோடை நிக்கேக்கை கண்டனான். அவை ஒருவரும் என்னை காணேல்லை.”
“அட்படியோ சங்கதி பொறிக்கிப்பயல் சபை சந்திக்கு வந்திட்டான். அவன் நிக்கிற இடத்திற்கு நான் போறதே? என்னையும் அவனைப் போலை கேடுகெட்டவன் எண்டு நினைச்சிட்டான் போலை” என்று கத்தினார்.
“ஏன் அப்பா சித்தப்பா என்ன துரோகம் செய்தவர் எண்டு அவரை பேசுகிறியள்”
”பேசுகிறதோ! அவன்ரை கண்ணிலை கூட முழிக்கமாட்டன். நம்பிக்கைத் துரோகி”
“விசயத்தை சொன்னீங்களெண்டால் நான் போய் கதைக்கிறன்”
”நீ கூட அவனிட்டை போகக்கூடாது” என்றார் அப்பா.
“ஏன் அப்பா சித்தாப்பாவோடை இவ்வளவு கோபமாக இருக்கிறியள்”
“உனக்குத் தெரியுமே அவன் படிக்கிற காலத்திலை நான்தான் ஐஞ்சை பத்தைக் கொடுத்து உதவிசெய்தனான். அவன்படிச்சு வந்து பாங்கிலை வேலை செய்யேக்க ஒரு கொளுத்த சீதணத்தோடை கல்யாணம் பேசி இனாமாக ஐஞ்சுலட்சம் தாறமெண்டு பொம்பிளை வீட்டுக்காறர் சொல்லிச்சினம். நானும் சந்தோஷப்பட்டன் அந்த இனாம் காசை வாங்கி உன்னர அக்கா ரதியின்ரை பெயரிலை போட்டுவைக்கலாம் எண்டு நம்பி இருந்தன். உவன் எல்லாருக்கும் தண்ணி காட்டிப்போட்டு, பாங்கிலை வேலை செய்கிற ஒண்டுக்கும் வழியில்லாத குடும்பத்திலை சீதணம் ஒண்டும் வாங்காமல் ஒருதருக்கும் சொல்லாமல் கல்யாணம் கட்டிப் போட்டான். அண்டைக்கே சொல்லிப்போட்டன் எங்கட வாசல்படி ஏறக்கூடாது எண்டு. அவனும் இஞ்சை வரமாட்டான்”
“அப்பா நீங்கள் மச்சாள் பெட்டேன்ரை தண்ணிவாக்க போக மாட்டியளே? வீட்டை தேடி வந்து சொல்லிவிட்டுப் போன சின்னமாமாவும், சின்னமாமியும் கோவிக்கமாட்டினமே?”
“இஞ்ச வா சந்திரன் உன்னர சித்தப்பனும் பெட்டைக்கு தாய் மாமன் தானே! குடும்பத்தோடை வந்திருக்கிறான். அவன் தண்ணி வாக்கட்டுக்கும். நான் செய்தாலும் அவன் இருக்கிற இடத்துக்குப் போகமாட்டான்.”
அப்பாவுக்கு ஏதோ அடிமனத்திலை பெரியதாக்கம் இருக்கு. எனவே இவரோடை இப்ப கதைக்கிறதில் எதுவித பயனும் இல்லை என்று நினைத்துக்கொண்டு அம்மாவிடம் சென்று அவவின் நிலைப்பாட்டை அறியமுனைந்தேன்.
“அம்மா சின்னமாமியின் பெட்டையின்ரை தண்ணிவார்ப்புக்கு சித்தப்பா குடும்பம் அங்க வந்ததாலை அப்பா போகமாட்டாராம். நீங்களெண்டாலும் போகத்தானே வேண்டும்.”
“அப்பா போனாலென்ன போகாட்டாலென்ன சிவலிங்கத்துக் காகவாவது நான் போகத்தான் எண்ணியிருந்தன். ஆனால்…”
“என்ன ஆனால்…. அம்மா”
“அண்டைக்கு தண்ணிவாக்கிறத்திற்கு வரச்சொல்லி அழைக்க வந்த உன்ரை சின்னமாமி மச்சாள் வாருங்கோ எண்டு தலைநிமிந்து ஒரு வார்த்தையெண்டாலும் கதைக்கேல்ல. சிவலிங்கத்தை கல்யாணம் கட்டிப் போட்டாளாம் எண்ட கெறுக்கு அவளுக்கு. அவளின்ரை வீட்டை நான் போகமாட்டன்.”
“சின்னமாமி சிவலிங்கத்தாரை கல்யாணம் கட்டினதாலை உங்களுக்கு என்ன வருத்தம் அம்மா”
“வருத்தமோ! அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறாய். நானும் உன்ரை சின்னமாமியும் ஒன்றாகத்தான் படிச்சனாங்கள். படிக்கற காலத்திலை சிவலிங்கம் இளம்பெடியன். பள்ளிக்கூடத்திற்கு போற றோட்டிலைதான் அவற்றை புடவைக்கடை இருந்தது. நாங்கள் போகேக்கை வரேக்கை எங்களைப் பார்த்து சிரிப்பார். அவர் எனக்கு கிட்டிய சொந்தக்காறன். என்னர ஐயா எனக்குச் சிவலிங்கத்தை கல்யாணம் பேசி போயிருக்கின்றார். அவர் மாட்டன் எண்டு சொல்லிப்போட்டு உன்னர சின்னமாமியை கல்யாணம் கட்டிப்போட்டார். பேந்துதான் தெரிஞ்சுது அவை இரண்டு பேரும் காதலிச்சவை எண்டு. என்ரை நல்ல சினேகிதியாக இருந்தவள் எனக்கு கல்யாணம் பேசேக்கை விட்டுக் கொடுத்திருக்கலாம். அவளுக்கு சிநேகிதியிலும் பார்க்க காதல் பெரிசாய் போச்சு. அண்டைக்கே அவளுக்கும் எனக்கும் இருந்த உறவு முறிஞ்சு போச்சு.”
அம்மாவின் மனத்தாக்கத்தை புரிந்துகொண்டபோதிலும் ஒன்றும் தெரியாதவனாக “அப்ப நீங்களும் போகமாட்டியள்”
“நான் அவள் வீட்டை போய் நக்குவன் எண்டு நினைச்சிட் டாள் போல”
“அப்ப அக்காவின்னர கல்யாணம் எப்பிடி நடக்கப்போகுது”
“அவை இல்லாட்டி கொக்காவுக்கு என்ன கல்யாணம் இல்லையோ”
“தயாளன் மச்சான் அக்காவைத்தான் கட்டுவாரம் எண்டு அக்காவும் நம்பி இருக்கின்றா. நீங்களும் அவையளும் கீரியும் பாம்புமாய் இருந்தால் அக்காவின் கல்யாணம்… அக்கா பாவம்”
“நீங்களும் வராவிட்டால் இருக்கோ நானும் அக்காவுமெண்டாலும் போயிட்டுவாறம்” என்றேன்.
“அங்க போகக்கூடாது காலடிச்சு முறிச்சுப்போடுவன்”
அம்மா கத்துகிற சத்தம் கேட்டு அப்பா உள்ளுக்குள் வந்துவிட்டார். நான் அக்காவிட்டை போய் சின்னமாமி வீட்டை போறவிடயம் பற்றியும் அப்பா அம்மாவின்ரை இழுபறி பற்றியும் சொன்னேன்.
“தயாளன் அத்தான் கோவிப்பார் தம்பி நானும் நீயுமெண்டாலும் கட்டாயம் போவம்”
வீட்டுக்குள் அப்பா அம்மாவும் சண்டைபிடிக்கிற சத்தம் கேட்டு கொஞ்ச நேரத்தில் அமைதி நிலவியது. அப்பா என்னையும் அக்காவையும் கூப்பிட்டார். நாங்கள் இருவரும் அப்பாவுக்குக் கிட்டப்போனோம். அப்பா சொன்னார்.
“அக்காவும் நீயும் விடிய சின்னமாமி வீட்டை போங்கோ. ஆனால் சித்தப்பனோடை மட்டும் கதைக்கக்கூடாது. இது எனது கண்டிப்பான உத்தரவு. கதைச்சியள் எண்டு கேள்விப்பட்டன் இரண்டு பேரையும் வீட்டைவிட்டுக் கலைச்சுப் போடுவன்.”
என்று அப்பா சொல்லிப்போட்டுப் போய்விட்டார். அம்மா எங்கள் இரண்டு பேருக்கும் கிட்டவந்து
“ரதி அங்கை போறது சரி சின்னமாமியோடை கதைச்சுப் போடாதை. அவவின்ரை கெப்பரை அடக்கவேணும்.”
பெண்பிள்ளைகள் பெரிசானதும் முதலில் கிட்டிய இனத்த வரை குறிப்பாகத் தாய்மாமனை கூப்பிட்டு தண்ணிவாக்கிற சடங்கு நடைபெறும். வசதிபோல் சாமத்தியச் சடங்கை பணச்சடங்காக ஊரெல்லாம் சொல்லி சிறப்பாக நடத்துவார்கள் அதுதான் அந்த ஊர் வழக்கம்.
இப்ப நானும் அக்காவும் சின்னமாமி வீட்டை தண்ணிவார்க்கிற சடங்குக்குப் போவதற்கு வெறுங்கையோடு போகேலாது. இதைப்பற்றி வீட்டிலை கேட்டால் அங்கை போகவும் விடமாட்டினம். என்ன செய்வது என்று யோசித்தோம்.
அக்கா சொன்னா “தம்பி பக்கத்துவீட்டு பறுவதம் அக்கா விட்டை போய் ஊர் கோழிமுட்டை இருந்தால் ஒரு பத்துப் பன்னிரண்டை வாங்கிக் கொண்டுபோய் கந்தையற்றை கடையிலை வைச்சுவிட்டு வா போகேக்கை எடுத்துக் கொண்டு போவம்.”
அக்கா தந்த காசை வாங்கிக் கொண்டு போய் பறுவதம் அக்காட்டை, வீட்டிலை சொல்லாதேங்கோ எண்டு சொல்லி பன்னிரண்டு முட்டை வாங்கிக் கொண்டுபோய் கந்தையர் கடையில் வைத்து விட்டுவர அக்காவும் குளித்துவிட்டு வந்து சாறி உடுத்துக்கொண்டு இருக்கிறா. நானும் குளித்துவிட்டு உடுப்பு மாற்றிக் கொண்டு, அப்பா அம்மாவிடம் சொல்லிப் போட்டுப்போக சென்றபோது அம்மா கல்அட்டியல், பென்ரன் சங்கிலி, முத்துமாலை, காப்புகள் என்று தன்னிடதமிருந்த நகைகள் எல்லாவற்றையும் அக்காவுக்குப் போட்டுவிட்டார். நாங்கள் என்ன கல்யாணவீட்டுக்கே போறம் ஏன் இந்த எடுப்புகள் என்று அக்கா சொல்ல… அம்மா கூறிய காரணத்தைக் கேட்க எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“உன்னர சின்னமாமியின்ரை கெப்பருக்கு நாங்கள் என்ன ஒண்டுமில்லாதவை எண்டு நினைச்சுப் போட்டாளோ! அவள் உன்னைப் பார்த்து பொறமைப்படவேணும். அதுதான் எல்லா நகைகளையும் போட்டுவிட்டனான். நீங்கள் இரண்டுபேரும் அவளோடை மட்டும் கதைச்சுப் போடக் கூடாது என்ன தெரியும் தானே?”
“ஓம் அம்மா நாங்கள் என்ன உங்கள் பிள்ளைகளல்லாவா?” என்று அம்மாவுக்கு ஐஸ் வைத்துவிட்டு அப்பாவிடம் போகிறோம்.
“என்னடி பிள்ளை கல்யாணவீட்டுக்குப் போறமாதிரி நகையெல்லாம் சாத்திக் கொண்டுபோறாய்”
“அம்மாதான் போட்டுவிட்டவ”
“அவ இந்த நேரத்திலை தன்ரை கெப்பரைக் காட்டுறா போலை” என்று அப்பா சொல்லுகிறார். தொடர்ந்து…
“உதுகளைப் பார்க்க உங்கடை சித்தப்பன். அண்ணனிட்டை எக்கச்சக்கமாக இருக்குப்போலை எண்டு நினைக்கப்போறான். எங்கடை கஷ்டத்தை அவன் விளங்கிக் கொள்ளமாட்டானே?”
“ஏன் அப்பா சித்தப்பாட்டை ஏதாவது எதிர்பார்த்து இருக்கி றீங்களோ?” என்று ஒன்றும் தெரியாத மாதிரி கேட்டேவிட்டன்.
“அவன் கஞ்சப்பயலின்ரை செம்புச் சல்லிக்குக்கூட நான் ஆசைப்படமாட்டன். சரி நீங்கள் போய் மாமி சாப்பிடச் சொன்னால் இருந்து சாப்பிட்டுவிட்டு வாங்கோ. ஆனால் சித்தப்பாவோடை கதைகாரியம் வைச்சுக்கொள்ளாதேங்கோ. ஏன் எண்டால் சித்தப்பா கட்டியிருக்கிற பொம்பிளை வீட்டிலை நாங்கள் செம்பு கூட எடுக்கமாட்டம். அவை கொஞ்சம் குறைஞ்ச ஆட்கள் பகுதி”
எல்லோரும் மனிதர்கள் தானே. அப்பா, அம்மாவின் உபதேசங்களைக் கேட்டுக் கேட்டு மனம் சலிச்சுப்போச்சு. விட்டால் காணும் என்று நினைத்துக் கொண்டு நானும் அக்காவும் வீட்டைவிட்டுப் புறப்பட்டோம். கந்தையற்றை கடைக்குப்போய் காலையிலை அங்கு வைத்த கோழி முட்டைகளையும், அவற்றை கடையிலிருந்த சீல்வைத்த நல்லெண்ணை போத்தல் ஒன்றும் வாங்கிக் கொண்டு ஒரு ஓட்டோவில் சின்னமாமியின் வீட்டைச் சென்றடைந்தோம்.
வாசலில் ஓட்டோ சத்தம் கேட்டதும் மாமி வாசலுக்கு ஓடிவந்து விட்டா.
“வாருங்கோ… வாருங்கோ உங்களைத்தான் எதிர்பார்த் திருந்தனான். நீங்கள் வந்தது எனக்கு நல்ல சந்தோஷம்” என்று இன்முகம் காட்டி வரவேற்றார்.
“ஏன் அண்ணனும் மச்சாளும் வரேல்லையே பிள்ளை” என்று மாமி அக்காவைப் பார்த்துக் கேட்டார்.
நான் சொன்னன் “அவைக்குக் கொஞ்சம் சுகமில்லை”
“என்ன சுகமில்லைத் தம்பி” மாமி கேட்டா, நான் சொன்ன அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல்.
அக்கா ஒருவாறு சமாளித்துக் கொண்டு “இரண்டு பேருக்கும் தடிமன் காய்ச்சல் அதாலைதான் இண்டைக்கு வரவில்லை சாமத்தியச்சடங்கு வீட்டுக்கு கட்டாயம் வருவினம்” என்று சொல்லி முடித்தார்.
சித்தி எங்களிடம் வந்து “என்ன ரதி எப்படி இருக்கின்றாய் என்ன மெலிஞ்சு போனாய். தயாளனை கல்யாணம் கட்ட எல்லாம் சரியாய் வந்துவிடும்” என்று சொல்லிச் சிரித்தார்.
“சந்திரன் நீங்கள் என்ன செய்கிறீங்கள்” என்று என்னைப் பார்த்துக் கேட்டா. “உங்கட சித்தப்பா சொல்லுவார் உங்களையும் கனடாவுக்கு எடுப்பிக்கலாம் உங்கடை அப்பா விடமாட்டாரம் என்று சொல்லி மனவருத்தப்படுவார்”
“நான் சித்தி ஒரு என்.ஜீ.ஓ வில் உளவியல் ஆலோசகராகக் கடமை பார்க்கிறேன்” என்று சொன்னேன்.
அவர்களின் அன்பான உபசரிப்பும், ஆறுதலான வார்த்தைகளும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட்டன.
நாங்கள் போகும்போது சின்னமாமாவும் சித்தப்பாவும் வீட்டில் இருக்கவில்லை. சின்னமாமா அக்காவைக் கண்டுவிட்டார்.
“என்ன மருமகள்” என்று அன்புடன் விசாரித்தார். சித்தப்பா சொன்னார் “மகள் உன்னைப் பார்க்கத்தான் கனடாவிலிருந்து இங்கு வந்தனாங்கள். வேணுமெண்டால் சித்தியைக் கேட்டுப்பார். அப்பா அம்மா எப்பிடி இருக்கினம்? நான் இங்கே இருக்கிறபடியால் கொப்பா வரமாட்டார் எண்டு தெரியும்.” என்றார்.
தலைக்குத் தண்ணி வாத்துமுடிந்து, எல்லோருக்கும் சாப்பாடு மாமியும், சித்தியும் பரிமாறினார்கள். “என்ன மருமகள் மேலை சரியான கரிசனை போல கிடக்கு” என்று மாமியைப் பார்த்து சின்னமாமா கிண்டலடிக்க எல்லோரும் சிரித்தார்கள். அந்த நல்ல மனிதர்களுடன் சந்தோஷமாக இருந்து சாப்பிட்டோம். சாப்பிட்டு முடிய சின்னமாமி ஒருசோடி காப்பு கொண்டு வந்து அக்காவுக்கு போட்டுவிட்டார்.
சிறிது நேரம் பல கதைகளையும் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு நாங்கள் புறப்படப்போகின்றோம் என்று எல்லோரிடமும் சொல்லி விட்டுப் புறப்பட்டோம். சின்னமாமா, மாமி, சித்தப்பா, சித்தி எல்லோரும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.
சித்தப்பா சொன்னார். “நான் பாங் மட்டும் போறன். உங்களையும் அதிலை றோட்டிலை இறக்கிவிடுகிறன்” என்றார்.
நாங்களும் காரில் ஏறிக்கொண்டு சென்றோம்.
கார் பாங்க வாசலில் நிறுத்தப்பட்டது. சித்தப்பா எங்களையும் கூட்டிக்கொண்டு போனார். அக்காவின்ரை பெயரில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டுமென்று படிவங்களை வாங்கி தானே நிரப்பி அக்காவிடம் கையொப்பமும் வாங்கினார். தன்னுடைய சேமிப்புக் கணக்கில் இருந்த ஐந்து இலட்சத்து எண்பத்தையாயிரத்து இருநூறு ரூபாவையும் அக்காவின் கணக்குக்கு மாற்றினார். தன்னுடைய சேமிப்புக் கணக்கை குளோஸ் பண்ணிவிட்டார்.
அக்காவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி. சித்தப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டன. சித்தப்பாவும் எனக்கும் கடமை இருக்கு என்று சொல்லி அக்காவின் தலையைத் தடவிவிட்டார். பாங்க அலுவல் முடிந்து காரில் ஏறினோம். கார் புறப்பட்டு சற்றுத்தூரத்திலுள்ள புடவைக்கடையில் போய் நின்றது. “சித்திக்கு சாறி வாங்க வேண்டும்; நல்ல செலக்சனாக வந்து எடுத்துத்தா” என்று கூறி அக்காவைக் கூட்டிப் போனார். நானும் உடன் சென்றேன். காஞ்சிபுரம், பனாறிஸ், பெங்களுர், கஸ்மீர் என்று பலவகைப்பட்ட ஐந்து சாறிகள் எடுத்து வைக்கப்பட்டன. எனக்கும் ஜீன்ஸ் இரண்டு சேட் இரண்டு எடுத்தாச்சு. மொத்தமாக இருபத்தொராயிரம் ரூபா பில் தந்து சித்தப்பா காசு கொடுத்துவிட்டு பொருட்களுடன் காரில் ஏறினோம். காருக்குள் ஏறியதும் சித்தப்பா சொன்னார் “பாங்கில் காசுபோட்டவிடயம் வீட்டிலை ஒருவருக்கும் தெரிய வேண்டாம். சாறி உடுப்புகள் உன்ரை தயாளன் அத்தான் இலண்டனில் இருந்து அனுப்பியிருந்தவர், சிவலிங்கமாமா தந்தவர் எண்டு சொன்னால் ஒரு பிரச்சினையும் இருக்காது” என்றார். வீடு வந்து சேர்ந்தோம்.
அப்பா வந்து “அவன் சித்தப்பா ஏதாவது கதைச்சவனே?” என்று கேட்டார்.
“இல்லை அப்பா” என்று அக்கா சொல்ல..
“அதுதானே பாத்தன் பொறுக்கிப்பயல்” என்று சித்தப்பாவை வாயில் வந்தபடி திட்டித் தீத்தார்.
அம்மா உடுப்புக்களையும், அக்காவின் கையில் போட்டிருந்த புதுக்காப்புகளையும் பார்த்துவிட்டு “உதுகளை யார் தந்தது” என்று கேட்டார்.
“தயாளன் அத்தான் அனுப்பினதெண்டு சின்னமாமா தந்தவர்”
“அவ கெப்பர் காட்டுகிறவ ஒண்டும் கதைக்கேல்லையே?”
“சின்னமாமி குசிணியை விட்டு வெளியிலை வரேல்லை” என்று அக்கா சொல்ல “அவள் சரியான மோசக்காறி” என்றார்.
அப்பா அம்மா இருவர் மனத்திலும் இருக்கின்ற மனத்தாக்கங்கள் எப்படியான வார்த்தைகளால் வெளிக்காட்டப்படுகின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சித்தப்பாவின் காதல் திருமணம் அப்பாவையும், சித்தியின் காதல் திருமணம் அம்மாவையும் வெவ்வொறு கோணங்களில் மன அழுத்தங்களை ஏற்படுத்தியிருந்தன.
சின்னமாமியின் மகளின் சாமத்தியச்சடங்கு மிகவும் பெரிசாகச் செய்வதற்கு ஏற்பாடுகள் எல்லாம் தடல்புடலாக நடக்கின்றது. ஒரேயோரு மகள் ஊரெல்லாம் சொல்லித்தான் செய்யப் போயினமாம் என்று சின்னமாமி சொன்னவர். பெரியமாமி, மாமா பிள்ளைகளும் கொழும்பிலிருந்து வருவினமாம். சின்னமாமாவின் அக்கா குடும்பம் வவுனியாவிலிருந்து நேற்றே வந்துவிட்டினம். சின்னமாமாவின் தம்பி குடும்பமும் வட்டுக்கோட்டை யிலிருந்து வந்து விடுவினமாம். நான் அங்கை போய்விட்டுத்தான் வந்தனான் என்று வீட்டின் முன்பக்கத்தில் இருந்த அக்காவுக்கும், அப்பாவுக்கும் சொல்லிக்கொண்டிருந்தன்.
அம்மா குசிணிக்கிள் இருந்து நாங்கள் கதைக்கும் இடத்துக்கு வந்து என்னிடம்
“உன்னை யாரடா அங்கை போகச்சொன்னது” என்று கேட்டார். “என்னரை தங்கச்சி வீடுதானே அவன் போனதாலை உனக்கு என்ன செய்யுது” என்று அப்பா அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.
:நீங்கள் குடுக்கிற சப்போட்டிலைதான் பிள்ளைகள் என்னை மதிக்காமல் நடக்குதுகள்”
“எடியேய் வாயைப்பொத்து; அவள் என்ரை கூடப்பிறந்த தங்கைச்சி என்ரை பிள்ளைகள் அங்கை போனால் உனக்கேன் உறுத்தூது”
“அவ பெரிய மாய்மாலக்காறி. சிவலிங்கத்தை மயக்கி கல்யாணம் கட்டினவளல்லே. அந்தப் புத்தி எங்கை போகப்போகுது. எங்கட பிள்ளைகளையும் மயக்கிப்போடுவாள்.” அம்மாவும் விட்ட பாடில்லை.
இவை இரண்டு பேருடைய பேச்சுவார்த்தைகளைச் சகிக்காமல் அக்கா சொன்னா “இரண்டு பேரும் கொஞ்சம் சண்டை பிடிக்கிறதை தயதுசெய்து நிப்பாட்டுங்கோ. அக்கம் பக்கதிலை இருக்கிறவை என்ன நினைப்பினம். இந்த வீட்டிலை நித்தச் சண்டையெண்டெல்லோ சொல்லப்போயினம். உங்களாலை பிள்ளைகளாகிய எங்களுக்கும் அவமானம்.” என்று அக்கா சொல்லி முடிக்க முந்தி
“பொத்தடி வாயை” அம்மா கத்துகிறார்.
அப்பொழுது கேற் கதவு திறக்கும் சத்தம் கேட்டு எல்லோரும் வாசல் பக்கம் பார்த்தோம். சின்னமாமா, சின்னமாமி, பெரியமாமா, பெரியமாமி எல்லோரும் வீட்டுக்குள் வருகிறார்கள். அப்பாவும் அக்காவும் அவர்களை வரவேற்று முன் கோலிலுள்ள கதிரைகளில் அமர வைக்கிறார்கள். பெரியமாமியும், சின்னமாமியும் இருக்காமல் நிற்கின்றார்கள். அப்பா இருந்ததும்தான் அவர்களும் அமர்ந்தார்கள். தமையன் மேல் ஒரு பக்தியும் மரியாதையும் அவர்கள் வைத்திருந்ததை அவதானித்துக் கொண்டேன்.
அம்மா இவர்களைக் கண்டதும் பின்பக்கத்தாலை அடுத்த வீட்டுக்குப் போய்விட்டார். அப்பா அவர்களுடன் கதைத்துக் கொண்டிருக்க அக்கா வந்தவைக்கு பிஸ்கட் கொண்டுவந்து கொடுத்துவிட்டு தேனீர் போடப் போய்விட்டார்.
“எங்கை மச்சாளைக் காணவில்லை” பெரியமாமி கேட்டார்.
“உங்கைதான் இருந்தவ. தம்பி அம்மாவைப்பார்” என்று அப்பா சொல்ல நானும் வீடு முழுக்கத் தேடிப்பார்த்தேன் அம்மாவைப் காணவில்லை.
அக்கா தேத்தண்ணி கொண்டுவந்து கொடுக்கேக்கை அவர்களுக்குச் சொல்லுவது எனக்குக் கேட்கிறது.
“அம்மா உங்கை ஒரு இடத்தை சுகமில்லாத ஒரு ஆளைப் பார்க்கப் போய்விட்டா” என்று அக்கா பொய் சொல்லி சமாளித்துப் போட்டா.
“என்ன பிள்ளை ரதி, தயாளன் வாறமாதம் வாறானாம். சட்டுப்புட்டெண்டு கல்யாணத்தை வைச்சுப்போடுங்கோ எண்டு சின்ன மாமாவிட்டையும் சின்னமாமியிட்டையும் சொல்லிப் போட்டன்.”அதைக் கேட்ட அக்காவின்முகம் பூரிப்படைந்திருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது.
“இப்ப எங்களோடை நீயும் தம்பியும் வந்துவிடுங்கோ. அப்பாவும் அம்மாவும் நாளைக்கு வரட்டுக்கும்” என்று சின்னமாமி சொன்னார்.
அக்கா அப்பாவிடம் கேட்க அப்பாவும் போங்கோ என்று சொல்லிப் போட்டார். அம்மா வந்தால் விடமாட்டா என்று எங்களுக்கு தெரியும். அக்கா அப்பாவிடம் சொன்னா “சாறி உடுப்புகள் எல்லாம் எடுத்தாச்சு. நகை எடுக்க அம்மாதான் வரவேணும்.”
“பிள்ளை உன்ரை கொம்மாவின்ரை ஒண்டும் உனக்கு வேண்டாம். நீ உடுத்த உடுப்போடை வந்தால் காணும்” என்று சின்னமாமி அக்காவிடம் சொல்லி அவவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோக, நானும் பின்னால் போய் அவர்கள் வந்த காரில் ஏறி சின்னமாமி வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.
அடுத்தநாள் சாமத்தியச்சடங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தூர இடங்களிலிருந்தும் எல்லாச் சொந்தக்காரரும் வந்துவிட்டார்கள். எங்கள் அம்மா அப்பா இரண்டு பேரும் வரவேயில்லை.
தயாளன் அத்தான் இலண்டனிலிருந்து வந்துவிட்டார். அடுத்தநாள் அக்காவைப் பார்க்க வந்து வீட்டிலுள்ளவர்களுடன் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார். அம்மா அவருடன் கதைக்கவே இல்லை. அப்பா அன்பாகக் கதைத்தார். இருந்து கதைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
அப்பா அம்மாவைப் பார்த்துச் சொன்னார். “பொம்பிளைப் பிள்ளை பெத்த நாங்கள் முறையாகப்போய் மாப்பிள்ளை கேட்க வேணும். இண்டைக்கு நல்ல நாள் போய்விட்டு வருவம் வெளிக்கிடும்”
“அவள் போக்கணம் கெட்டவளிட்டை நான் வீடுதேடிப்போய் மாப்பிள்ளை கேட்கிறதா? இவள் கல்யாணம் கட்டாமல் வீட்டோடை கிடக்கட்டும் நான் வரமாட்டேன்”
“இந்த ஜென்மத்திலை நீ திருந்தவேமாட்டாய். நான் கண்ணை மூடுகிறத்திற்கு இடையிலை பிள்ளையின்ரை நல்ல காரியத்தைக் கூட பார்க்கவிடமாட்டாய் போல, என்று அப்பா மிகுந்த வேதனையுடன் கூறினார்.
அக்கா அழத்தொடங்கிவிட்டா. அவவைப் பார்க்க எனக்கும் மனவேதனையைக் கொடுத்தது.
அம்மாவின் நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன? மனப்பாதிப்பு அடிமனத்தில் இருப்பதால் அந்த மனஅழுத்தம் இவவை இப்படி நடந்துகொள்ள வைக்கின்றதா? அப்படி என்ன பாதிப்பு இவவுக்கு ஏற்பட்டது. உளவள ஆலோசகராகக் பணியாற்றும் எனக்கு அம்மா உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது நன்றாகப் புரிந்தது. அவவின் மனத்தை உளவள ஆலோசனை மூலம் நல்ல நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என எண்ணினேன்.
அம்மாவை அணுகி “அம்மா நீங்கள் எடுத்ததற்கெல்லாம் கோபப்படுகின்றீர்களே ஏன்? பிள்ளைகளாகிய எங்களைக்கூட ஒருநாளாவது அன்புடன் நடத்தவில்லையே ஏன்? அப்பாவை உங்களுக்குப் பிடிக்க வில்லையா? அப்படிப் பிடிக்காதவரை ஏன் திருமணம் செய்தீர்கள். அக்காவையும் என்னையும் நீங்கள் தானே பெத்தீர்கள். நீங்கள் ஒரு இடமும் போகாமல் ஏன் இருட்டுக்குள் இருக்க விரும்புகின்றீர்கள். அம்மா சொந்தங்களோடு நாங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எங்கடை வீட்டு நல்லது கெட்டதற்கு நாலு சனம் வந்து நிற்கும், அப்பதான் சிறப்பு” காசுபணம், வெறுப்பு, கோபம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை, உதாசீனம் என்பன மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டன. மனித நேயத்தை விட்டு, மற்றைய காரணங்களுக்காக பிடிவாதமாக இருப்பவர்கள் ஏதோ ஒருவித மனஅழுத்தம் காரணமாகவே நடந்துகொள்ளுகிறார்கள் என்பதைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றது. அதை சமுதாயத்தின் பிழை என்று கூடச் சொல்லமுடியாது. அம்மா சின்னமாமாவோ அல்லது சின்னமாமியோ உங்களுக்கு எத்தகைய துரோகத்தையும் செய்யவில்லை என்பதை நீங்கள் ஆழமாக உங்கள் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும். சின்ன மாமா சிவலிங்கம் படிக்கிற காலத்திலேயிருந்து சின்னமாமியைக் காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்து எவருடைய தூண்டுதலும் இன்றிச் சுயமாகவே திருமணம் செய்து கொண்டவர்கள். ஆகவே அவர்கள் இருவரும் எவருடைய வாழ்க்கை யையும் பாதிப்புக்கு உள்ளாக்கவோ அல்லது வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. மனமொத்த காதல் வாழ்க்கை வாழுகின்றார்கள்.
அதேமாதிரி சித்தப்பாவும் சித்தியும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டார்கள். அப்பா இவர்கள் விடயத்தில் எதிர்பார்த்து கைகூடவில்லை என்ற ஆதங்கத்தில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி சித்தாப்பாமேல் கோவப்படுகின்றார். ஆனால் சித்தப்பாவோ கனடாவிலிருந்து அக்காவைப் பார்க்க வந்த அவவின் பாங்கணக்கில் ஐந்து இலட்சத்து எண்பத்தையாயிரம் வரை வைப்பிலிட்டுச் சென்றிருக்கின்றார். அத்துடன் என்னையும் கனடாவுக்கு எடுப்பிப்பதாகச் சொல்லியுள்ளார்.
சின்னமாமி அக்காவுக்குத் தேவையான நகைகள் எல்லாம் புதிதாகச் செய்து வைத்திருக்கிறார். உடுத்த துணியோட வந்தாலும் மருமகளாக ஏற்றுக்கொள்ளுவேன் என்ற நல்ல மனத்துடன் இருக்கின்றார். தயாளன் மச்சானும் ரதி அக்காவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அவர்களை எவராலும் பிரிக்கமுடியாது. அவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்வதற்கு சின்னமாமா, சின்னமாமி, சித்தப்பா, சித்தி எல்லோரும் எல்லாவகையான உதவிகளையும் செய்யக் காத்திருக்கின்றார்கள். பெரியமாமா, பெரியமாமி கூட தயாளன், ரதி திருமணம் எப்ப நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
ஆகவே அப்பாவும் அம்மாவும் செய்யக்கூடிய உதவி அத்தானையும் அக்காவையும் சிறப்பாக வாழவைப்பதுதான்.
ஆறுதலாக நான் கூறியவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அம்மா அழத்தொடங்கிவிட்டார். என் வாழ்நாளில் அம்மா அழுததை அன்றுதான் கண்டேன்.
அவருடைய மனஅழுத்தம் இந்த அழுகையுடன் விடுபடுமா?
(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை)
யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டு இலக்கியப் பணியாற்றி வருகின்றார் தம்பு – சிவா. பாடசாலையில் கல்விகற்கும் காலத்திலிருந்தே சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து பல பரிசில்களைப் பெற்றுள்ளார். இடதுசாரி சிந்தனையாளராகிய இவர், அடக்குமுறைக்கு எதிராகக்குரல் கொடுக்கும் எழுத்தாக்கங்களைப் படைத்துவந்துள்ளார். 1970 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த “கற்பகம்” கலை இலக்கியச் சஞ்சிகையின் சிறப்பாசியராகச் செயற்பட்டார். ‘கற்பகம்’ சஞ்சிகையில் வெளிவந்த சிறுகதைகளை எல்லாம் (12 சிறுகதைகள்) தொகுத்து “காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள்” என்ற பெயரில் தொகுப்பாசியராக இருந்து வெளியிட்டுள்ளார். அரும்பு, கலைக்கோலம், ‘கற்பகம்’, அர்ச்சுனா, தமிழ்த்தென்றல், ஞானம் ஆகிய சஞ்சிகைகளிலும், பார்த்தேன், வடிவேல் ஐயா நினைவுமலர், தினகரன் என்பவற்றிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. சிறுகதை, கட்டுரை, கவிதை, பத்திஎழுத்துக்கள் என்பவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் எழுதிவருகின்றார். இதழியலில் நீண்ட அனுபவத்தைக் கொண்ட இவர் உதயன், சஞ்சீவி பத்திரிகை நிறுவனத்திலும், வடக்கு கிழக்கு மாகாணப் பதிப்பகத்திணைக் களத்திலும் உயர்பதவிகளை வகித்தமையால் அச்சுத்தொழில், பத்திரிகைத்துறை சார்ந்த விடயங்களில் அனுபவமுள்ளவராக இருந்து தொடர்ந்தும் எழுத்தாக் கங்களை “தம்பு சிவா” இணுவையூர் வசந்தன் என்ற புனைபெயர்களில் எழுதிவருகின்றார்.
– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.