சுமக்காதவர்கள்….!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 1,495 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம் – 11

இரவில் பள்ளிக்கூடத்தில் இப்படி ஒரு கூத்து நடக்குமென்று பிலோமினாவால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

அதுவும் ஒரு கன்னிகாஸ்திரி..! நினைக்க நினைக்க உடம்பெல்லாம் பற்றி எரிவது போல் ஒரு பதற்றம், நடுக்கம். பகலில் என்ன சாந்தமே வடிவாக இருக்கிறாள்!

தப்புக்கு கர்த்தரே! பாவமன்னிப்பு கேட்பாளோ?! கர்த்தர் மன்னிப்பாரா!?

அந்த பையனை எப்படி மடக்கினாள்? அவன் எப்படி மடங்கினான்? பெண்களையே ஏறெடுத்துப் பார்க்காதவன். அம்மா அப்பா இல்லாத அனாதரவாக ஏழ்மையில் சுருண்டு வேலைக்கு வந்தவன். அவன் துணிந்திருக்க மாட்டான். இவள்தான் அவனை மிரட்டி உருட்டி… சத்தியமாய் அவன் அதிர்ச்சி அடைந்திருப்பான்! இந்த தாக்கம் விருப்பமில்லாத உறவு. அதுதான் எப்போதும் அவன் முகவாட்டம். இவளுக்குப் பொலிவு.

இந்த விசயம் வெளியே தெரிந்தால் அவமானம். அவளுக்கே ஒன்று ஆனால் அவன் பதினெட்டு இவள் முப்பது. திருமணம் செய்து கொள்ள முடியாது!

‘ஆசா பாசங்கள் அறு. இறைத் தொண்டுதான் உன் செயல். கர்த்தர்தான் உன் மூச்சு!’ என்கிற பால பாடம் எப்படி காற்றில் பறந்தது?

வெளியில் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊமைக் கனவு!

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இந்த பையன் சவலைப் பிள்ளைபோல் இருக்க இதுவும் ஒரு காரணம்! ஒருவித சோகமும் கருணையும் கலந்திருக்கும் கன்னிகாஸ்திரிகள் முகங்களில் இந்த வடிகால்தான் எலிசபெத் முகத்தில் எப்போதும் பொலிவு. சாதாரண பெண்ணிற்கு இருக்கும் மலர்ச்சி! இது என்ன நியாயம்?

தலைமை ஆசிரியைக்குத் தெரிந்தால் நெருங்கவே விடமாட்டாள். பழக்கமே வைத்துக் கொள்ள மாட்டாள். சாதாரண மாணவ மாணவிகளே தவறு செய்தால் பொறுக்காதவள். முதலில் அவள் உடுப்பைக் கழற்றி வெளியேற்றுவாள்.

மெல்ல சொல்லி நடவடிக்கை எடுத்தாலென்ன ? அப்படி எடுத்தால்?

“ஆமாம். நான் கர்த்தருக்குச் சேவை செய்ய வந்தவள்தான். ஆனா உயிரும் உடலும் உணர்ச்சிகளும் கலந்த மனுசி. என்னால இயற்கை உந்துதல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழ முடியலை. தப்பு செய்யறேன். இந்த தப்புக்காக கர்த்தர் என்னை ஒதுக்கலை. ஜெபம் சரியாய் செய்யறேன். இது கன்னிகாஸ்திரிகளுக்கு அவமானம். மதத்துக்குக் கருங்காளித்தனம்ன்னு உங்க மனசுக்குப் பட்டால் உச்ச பட்ச தண்டனையா இதிலிருந்து நான் விலக்கறேன். யாருக்கும் எந்த பாதிப்பு, கெடுதல், கஷ்டம் இல்லாம நானே கழட்டி வைச்சுட்டு மதம் இல்லா மனுசியா வாழ்றேன்!” என்று அவளாகவே கழற்றி வைத்து விட்டுப் போனால் யார் என்ன செய்ய முடியும்? அப்படி வாழ்வதில் என்ன கஷ்டம், துன்பம் வந்துவிடும்?

மனிதன்தான் மதத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறான். மதம் மனிதனைப் பிடிக்கவே இல்லை. நீ இதைச் செய் அதைச் செய். அப்படி இரு இப்படி இரு என்று எந்த கடவுள் யாரைக் கட்டாயப்படுத்தி இருக்கிறது? அப்படி இல்லாதவனை எங்கு துாரத் தள்ளி இருக்கிறது? விலக்கி வைத்திருக்கிறது? கை விட்டிருக்கிறது? மனிதனிடம்தான் கோளாறு. அவன்தான் வேலி போட்டுக் கொள்கிறான். தாண்ட மறுக்கிறான். அத்தனை யூதர்களை அநியாயமாய்க் கொன்றானே ஹிட்லர். அவனை அவன் தெய்வம் என்ன உச்சாணிக் கொம்பில் வைத்து பட்டாபிஷேகம் செய்தது?! தலையில் மலர் கிரீடம் வைத்து அழகு பார்த்தது?! இறப்பில்லா வாழ்க்கையைக் கொடுத்தது?! இவன் செய்த அநியாயங்களின் பாவம். எதிரிகளின் பிடியில் இருந்து தப்ப தன்னைத்தானே தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுதான் செத்தான். அவன் சாவுகூட சரியாய் இல்லை.

தெய்வம் ஒன்றென்பதால்தான் மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்கள் கூட சந்தோசமாக இருக்கிறார்கள். தெய்வம் வேறு வேறு என்றால் அவைகள் இவர்களைத் தொடாமல் செய்திருக்கும். ஏன் சந்திக்க விடாமலே தடுத்திருக்கும். இல்லை… அவைகளே இவர்களுக்காக ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டிருக்கும். தெய்வம் ஒன்று. மனிதனே மதம் பிடித்து அலைகிறான். ஆகையால் அவன் வெட்டிய குழியில் அவனே புதையுண்டு போவது போல் வெட்டிக்கொண்டு சாகிறான். சுட்டுக் கொண்டு மடிகிறான்.

எந்த சாமி வேசம் போட்டு இறைப்பணி செய்யச் சொல்லி இருக்கிறது? பாவ விமோசனம் பெற்றவனெல்லாம் நேரே சுத்தமாகக் கடவுளிடம் சென்றான் என்று எவன் கண்டான்? சரி இவன் சுத்தப்படுத்தப்பட்டான் என்பதற்கு எது சாட்சி? எவர் வைத்திருக்கிறார் அத்தாட்சி?

கடவுளின் அவதாரம் என்று கூறி வணங்கப்படும் பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கும், மக்களுக்கும் சாதாரணவர்கள் போல் நாற்பது வயதுக்கு மேல் கண்பார்வை குறைகிறது. நோய் நொடி பீடிக்கிறது. எல்லோரையும் போல் செத்துப் போகிறார்கள். அவர்களுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் வித்தியாசமில்லை. ஆக… ஆண்டவனை எவனும் தொட்டவனும் இல்லை. தொடப் போபவனும் இல்லை.

கடவுள் என்பது பிரமாண்டம். அதை எவனும் நெருங்கவும் முடியாது தொடவும் முடியாது. மனிதனின் பார்வைக் கோளாறு இந்த உடை, உடுப்பு, எல்லாம் வேசம். எலிசபெத்தின் இந்த தவறு என்பது சாதாணம் குப்பை. ஒதுக்கித்தள்ளு!

ஒதுக்கினாள்.

பிலோமினாவிற்குள் மனசு லோசானது போல் ஒரு உணர்வு உண்டாயிற்று.

மறு நாளிலிருந்து அவளை சகோதரி வாஞ்சையாகப் பார்த்தாள்.

ஆனால் எலிசபெத்?

“அன்னைக்குக் கனகசபைகிட்ட அதிக நேரம் பேசிக்கிட்டு இருந்தீங்க போலிருக்கு?” இவளைச் சந்தித்துக் கேட்டாள்.

“ஆமாம்.”

“என்ன பேசுனீங்க பிலோமினா?”

“உனக்கு எப்போ திருமணம்ன்னு கேட்டேன்.”

“என்ன சொன்னான்?”

“நான் சின்னப்பையன். பி.காம். முடிக்கனும் இதை விட நல்ல வேலைக்குப் போய் அதிகம் சம்பாதிச்சு அப்புறம்தான் திருமணம்ன்னு சொன்னான்.”

“நல்ல பதில்!” புன்னகைத்துச் சென்றாள்.

இது பெண்களுக்கே ஏற்படும் சந்தேகம், பொறாமை புத்தி!

‘பாதகத்தி! ஆளை மடக்கித் திருப்பி, நம் மடியில் கை வைத்தால் என்ன செய்வது என்கிற பயம். எலிசபெத் கன்னிகாஸ்திரி உடையில் சராசரி பெண்ணாகி தான் திருடி பிரத்தியாளை நம்ப மறுக்கிறாள்!’ நினைக்க பிலோமினாவிற்குப் பாவமாக இருந்தது.

இந்த இரட்டை வாழ்க்கை தேவை இல்லாதது. ஊதறித் தள்ளி விட்டு சராசரி பெண்ணாகிப் போனால் யார் என்ன செய்து விடமுடியும்…?

எது இரட்டை வாழ்க்கை? மனித சேர்க்கையும் இறை வேண்டலும் வாழ்க்கை. கணவன் மனைவி குடும்பமாக வாழ்பவர்கள் கடவுளை வணங்குகிறார்கள்! அவர்கள் வாழ்க்கை எப்படி இரட்டையாக இருக்க முடியாதோ அப்படித்தான் இதுவும். கன்னிகாஸ்திரி நிலை உடுப்பு உடையெல்லாம் ஒரு வேலை வேசம். மனிதன் ஒதுக்கியது ஒதுங்கிக் கொண்டது. இயற்கை உணர்ச்சி உந்துதல் என்பது மனித இயற்கை.

இறை அன்பிற்கும் தொண்டிற்கும் பிரம்மச்சரியம் சரி. அவர்களுக்கே என் அன்பு. அன்பு, அடைக்கலம். மாறியவர்களுக்கும். பிறர்க்கு இல்லை என்று எந்த தெய்வம் கடவுள் சொல்லி இருக்கிறது…? அப்படி தேவை என்றால் அந்த தெய்வமே உணர்வுகள் அறுத்த ஒரு பிறப்பை உருவாக்கி இருக்கும். தொண்டில் விழுந்த மக்களுக்கு அந்த உணர்வு, பிறப்புறுப்புகளைச் செயலிழக்க வைத்திருக்கும். ஏன் செய்யவில்லை.? அவன் படைப்பில் குறையே இல்லை. வாழவே மக்களைப் படைத்தான்.

மனிதனிடம்தான் குறை. மதத்தைப் பரப்ப… மயிர் நீக்கு. காமம் தவிர், வெள்ளை ஆடை அணி, தாடி மீசை வை, காவி உடுத்து என்று அடையாளம் காட்டி இறுத்திக் கொண்டான். எப்படி இரட்டை வாழ்க்கையாய் இருக்க முடியும் ? எலிசபெத் கேள்வி கேட்டால் என்ன பதில் பதில் சொல்ல முடியாது. இந்த உண்மையை மக்களாலும் ஜீரணித்துக் கொள்ள முடியாது, காரணம் இன்னார் இப்படி என்று மதவெறியர்களால் அவர்களை ஒரு சட்டத்தில் பதித்துப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அவர்கள். இவள் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சரி. இவர்கள் ஆண்டவனுக்குத் தொண்டு செய்யவே வந்தவர்களாக இருக்கட்டும். இன்றைக்கு எத்தனை கன்னிகாஸ்திரிகள் மயிர் நீக்கி, உள்ளம் சுத்தமாய், வெள்ளுடை தரித்து, உள்ளுடை அணியாமல் இருக்கிறார்கள்…!?

தலை படிய வாரி, கொண்டையிட்டு, முகப் பொலிவிற்குப் பவுடர் பூசி, காவி அணிந்திருந்தாலும்.. உள்ளாடை தெரியும் பூ ஜாக்கெட், இடுப்பு தெரியும் புடவைகள் கட்டி காவி சீருடை அணிந்த தேவதைகளாக வலம் வருகிறார்கள். மனத்தளவிலும் சுத்தமாக இல்லாமல் அன்பை ஒதுக்கி… விருப்பு, வெறுப்பு, கோபம் காட்டுகிறார்கள். இதில் காமம் மட்டும் ஏன் விதிவிலக்கு…? மறைப்பு?

“மிஸ்! உங்களுக்கு அமெரிக்காவுலேர்ந்து போன்.“ கடைநிலை ஊழியை கோமதி வந்து சொன்னதும் பிலோமினா நினைவுகளை அறுத்துக் கொண்டு ஓடினாள். அப்பாதான் பேசினார்.

“நல்லா இருக்கியாம்மா. நாங்க நல்லா இருக்கோம் இங்கே பெரியம்மா பெரியப்பா அவுங்க புள்ளைகளெல்லாம் சவுகரியம். இப்போ நீ எங்கே இருக்கிறே என்கிற உன் சரியான விலாசம் சொல்லு. நானும் அம்மாவும் என்னைக்காவது ஒரு நாள் திடீர்ன்னு வந்து நிப்போம். எங்களுக்கு உன்னைப் பார்க்கனும் போல் ஆசை.” என்றார்.

இவள் பள்ளி விடுதி, விலாசத்தைச் சொன்னாள்.

அடுத்து அம்மா பேசினாள். அவள் பேச்சு என்றும் தேன். இருந்தாலும் அப்பாவிற்கு அடங்கிய அம்மா. வைத்துவிட்டு திரும்பினாள். வழியில் காதரீன் வந்து சேர்ந்தாள்.

“உன் திருமண வாழ்க்கை எப்படி இருக்கு பாலா?” சிஸ்டர் மேரி வங்கிக்குச் சென்று திரும்பியவனை வரண்டாவில் வைத்து விசாரித்தாள்.

“நல்லா இருக்கு மேடம்.”

அவர்களைத் தாண்டிய காதரீனுக்கு முகம் கடுகடுத்தது.

“என்னம்மா?”

“இவளாலதான் இவன் சீக்கிரமே கலியாணம் கட்டிக்கிட்டான். மறுபடியும் இவ அவளைத் தொந்தரவு செய்யுறா பார்.” வெறுப்பாக முணுமுணுத்தாள்.

பிலோமினாவிற்கு அடுத்தும் அடி! அதிர்ச்சியாய் இருந்தது.

“என்ன காதரீன் சொல்றே?!”

“அந்த அசிங்கத்தை வேற என் வாயால சொல்லனுமா? புரிஞ்சுக்கோ!” சொல்லி அகன்றாள்.

இங்கு என்ன நடக்கிறது? யார் சுத்தம்? மயக்கம் வரும் போலிருந்தது, உமட்டிக் கொண்டு வந்தது, யார் யாருக்கோ தெரியாமல் எவ்வளவோ விசயங்கள் நடக்கின்றன. எல்லாம் எங்கு போய் முடியும்?!

லாரன்சுவிடம் இது குறித்துப் பேசலாமா? என்னவென்று பேசுவது. எப்படி ஆரம்பிப்பது …? இல்லை அவன்தான் ஒழுங்கென்று எவருக்குத் தெரியும்? ஒழுங்கானவனாய் இருந்தால் அநாதரவைக் காரணம் காட்டி தன் கருணை உள்ளத்தை வெளிப்படுத்தி எப்படி ஒருத்தியை வேலைக்கு அமர்த்தி இருக்க முடியும்?

அவன் ஒழுங்கில்லையென்று யார் சொல்ல? கேள்வியை அப்படியேத் திருப்பிப் போட்டாள்.

பதில் தெரியாமலும், சொல்ல முடியாலும்.. தவித்தாள், தத்தளித்தாள், திணறினாள்.

‘தீயவற்றைப் பார்க்காதே!, கேட்காதே!, பேசாதே!’ மனசுக்கு உத்தரவு போட்டாள்.

***

தலைமை ஆசிரியை ஏஞ்சல், எலிசபெத், உடற்பயிற்சி ஆசிரியர் பாலன் மூவரும் சனிக்கிழமை இரவே புறப்பட்டார்கள். பள்ளிக்கூடம் வழியாக சென்னை செல்லும் ஆம்னி பேருந்து அவர்களை வாசலில் வந்து நின்று 9.30க்கெல்லாம் ஏற்றிச் சென்றது.

பாலன் ஒன்பது மணிக்கே மணிக்கே வந்துவிட்டான். வந்து லாரன்சோடு இருந்து இரண்டு பேருமாக 9.15க்கு பள்ளிக்கூடவாசல் கேட்டிற்கு வந்தார்கள்.

ஏஞ்சலும் எலிசபெத்தும் ஐந்து நிமிடம் கழித்து அதே வாசலுக்கு வந்தார்கள்.

இவர்களை வழியனுப்ப பிலோமினா, காதரீன் உடன் வந்தார்கள்.

அவர்கள் பேருந்து ஏறிப் புறப்பட…லாரன்சு பள்ளிக்கூட வளாகத்திற்குள் வந்து தன் இருப்பிடத்திற்குச் செல்லாமல் அப்படியே திரும்பிச் சென்றான்.

பிலோமினா அறைக்கு வந்து கதவு சாத்தி சன்னலை மூட…

அவன் அங்கிருந்து இவள் அறையையேப் பார்த்துக் கொண்டு நின்றான்!

அத்தியாயம் – 12

திங்கள். செவ்வாய் இரண்டே நாட்களில் அவசரமாய் வேலைகளை முடித்துத் திரும்பி ஏஞ்சல் புதன் காலை தன் அறையில் கடுகடுவென்று நுழைந்து இருக்கையில் அமர்ந்தாள்.

அழைப்பு மணி அழுத்தி அடுத்த அறையில் அலுவலக வேலையாய் இருந்த கல்பனாவை வரச் செய்தாள்.

அவள் வந்து நின்றதும், “பாலனுக்கு உடனே.. பணி நீக்கம் உத்தரவு அடிச்சு கொண்டு வாங்க.” உத்தரவிட்டாள்.

“…..”

“அந்த ஆள்.. இதை எதிர்த்து வழக்குப் போட்டாலும் செல்லாத அளவுக்கு அந்த உத்தரவு இருக்கனும். அதனால படிக்க வேண்டியதைப் படிச்சு, சட்டப்படி சரியாய் அடிச்சு சீக்கிரம் கொண்டு வரனும்.” மேலும் சொன்னாள்.

ஒரு அதிகாரி உத்தரவிடும்போது கீழுள்ளவளாள் என்ன செய்ய முடியும்? கல்பனா தன் திகைப்பை அடக்கிக் கொண்டு அகன்றாள்.

இயலாமை, தள்ளாமையால் எப்போதாவது வந்து தலைகாட்டும் மதர் சுப்பிரீயர் இன்று ஒன்பதரை மணிக்கெல்லாம் மெல்ல உள்ளே நுழைந்து தலைமை ஆசிரியை முன் அமர்ந்தாள். அடுத்து ஏஞ்சல், “கோமதி!” அழைத்தாள். அவள் வந்து நின்றாள்.

“இவுங்களையெல்லாம் உடனே இங்கே வரச் சொல்!”

கையிலுள்ள ஒரு தாளைக் கொடுத்தாள்.

அவள் அகன்ற அடுத்த வினாடி இன்டர்காமை அழுத்தினாள்.

மணி அடித்தது.

பாதிரியாரின் அறையைப் பொறுப்பாய் கட்டிலுக்கடியில் இருந்த குப்பையை மண்டிப் போட்டு பெருக்கிக் கொண்டிருந்த ஆரோக்கியசாமி ஓடி வந்து, “ஹலோ!” எடுத்தான்.

“ஆரோக்கியசாமி! தலைமை ஆசிரியை ஏஞ்சல் பேசறேன். சாமியார் இல்லே?” கேட்டாள்.

“இல்லம்மா.”

“எங்கே போயிருக்கார்?”

“எங்கே போனார்ன்னு தெரியலைம்மா. ஆனா என்னைப் பார்த்து நீ இங்கே இரு. உடனே வந்திடுறேன்னு சொல்லிப் போனார். பக்கத்துலதான் போயிருப்பார். இப்போ திரும்பிடுவார். என்னம்மா விசயம்?”

“அவர் எப்போ திரும்பினாலும் உடனே பள்ளிக்கூடத்துக்கு என் அறைக்குச் வரச் சொல்லனும். அவசரம்!”

“சொல்றேன்ம்மா.” வைத்தான்.

அலுவலகத்தில் கணணி தட்டச்சு அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்தது.

தாளை வாங்கிக் கொண்டு வெளியே சென்ற கோமதி அதை முதலில் பிலோமினாவிடம் காட்டி, “எல்லாரையும் உடனே வரச் சொன்னாங்க.” சொன்னாள்.

‘இவளையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர்கள். எல்லாரும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள். ஏதாவது, முக்கிய முடிவு, ஆலோசனை, அறிவிப்பு என்றால்… மதர் சுப்பீரியர் தலைமையின் கீழ் தலைமை ஆசிரியை இவர்களைக் கூட்டுவாள்.

‘இப்போது திடீரென்று என்ன ஆலோசனை, அறிவிப்பு? ஒரு வேளை வாங்கி வந்த பொருட்கள் காட்டுகிறாளா?’ பிலோமினாவிற்குள் ஓடியது.

“சரி நீ போ” அவளை அனுப்பிவிட்டு கிளம்பினாள்.

இவள் நுழையும் போது மற்ற நான்கு பேர்களும் ஏஞ்சலுக்கு முன் அமர்ந்திருந்தார்கள். பக்கவாட்டில் மதர் சுப்பீரியர் அமர்ந்திருந்தார். கூடுதலாக உடற்பயிற்சி ஆசிரியை ரோசி நின்றிருந்தாள். அவளுக்கு அருகில் எலிசபெத்.

பிலோமினா காலி நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள்.

“ரோசி! நீங்கதான் இந்த பள்ளிக்கு முழு உடற்பயிற்சி ஆசிரியை. ஆண் பெண் எல்லாருக்கும் வகுப்பு எடுக்கனும். பாலனை வேலையை விட்டு எடுத்தாச்சு. உங்களுக்கு உத்தரவு அடிச்சு அனுப்பறேன். நீங்க போகலாம்.” தலைமை ஆசிரியை அவளை விரட்டினாள்.

‘யாரையும் ஆலோசிக்காமல் என்ன திடீர் உத்தரவு, முடிவு?’ எல்லார்க்குள்ளும் குழப்பம் வந்தது.

ஏஞ்சல் எல்லாரையும் ஒரு முறை பார்த்து, “நான் ராத்திரி பன்னிரண்டு மணிக்கு வந்ததுமே மதர் சுப்பீரியரை எழுப்பி எல்லா விசயத்தையும் சொல்லிட்டேன். உங்ககிட்டேயும் சொல்ல வேண்டிய கடமை சொல்றேன். பாலனை வேலையை விட்டுத் தூக்கறேன். இன்னையிலேர்ந்து அவருக்கும் இந்த பள்ளிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. காரணம்…. அந்த ஆள் நடப்பு சரி இல்லே. அவனுக்கு ஆம்பளை அகம்பாவம்!” ஒருமையில் பேசி நிறுத்தினாள்.

அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் அவள் முகத்தையே திகைப்பாய்ப் பார்த்தார்கள்.

‘நானும் எலிசபெத்தும் பாலனை ஆண் துணை உதவி ஒத்தாசைக்காகத்தான் சென்னைக்குக் கூட்டிப்போனோம். அந்த ஆள் கிளம்பும் போதே…சாதாரண பேருந்து உடம்பு வலிக்கும். ஆம்னி பேருந்துல போகலாம்ன்னு சொன்னார். அவருக்காக அதிக காசு செலவழிச்சு அந்த பேருந்துல போனோம். சென்னை இறங்கியதும் வெயில் அதிகமா இருக்கு. ஏ.சி அறை எடுத்து தங்கலாம்ன்னு சொன்னார். அழைச்சு வந்ததுக்குத் தண்டம்ன்னு அதுக்கும் தலையாட்டி அவருக்கு ஒரு அறை. எங்களுக்கு ஒரு அறை எடுத்துத் தங்கினோம். அடுத்து பொருள் வாங்குற இடத்திலேயும் பிரச்சனை.

“தியாகராய நகர் ஒரு பதிப்பகத்துல மூணு புத்தக மூட்டைகள் வாங்கியாச்சு. ஆளுக்கொன்னு எடுத்து ஆட்டோவுல வைக்கலாம்ன்னா… நான் வேலை ஆள் இல்லே. கூலி ஆளை வைச்சுத் துாக்கலாம்ன்னு ஒதுங்கறார். என்ன சொல்லியும் கேட்காம மறுத்துட்டார். சாதாரண புத்தகக் கட்டைத் தூக்க கூலி ஆளா? எனக்கு அப்பவே அவர் மேல கடுப்பு. பொறுத்துக்கிட்டு நாங்களே துாக்கி ஆட்டோவுல ஏத்தினோம். இவர் நாங்க துாக்குறோங்குற வருத்தமில்லாம வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தார். அடுத்த பரிசு பொருட்கள் வாங்குற இடத்திலேயும் இதே பிரச்சனை. வேணாம்ன்னு துரத்திவிட்டு நாங்களே முடிச்சு எடுத்து வந்தோம். இப்படிப்பட்ட ஆள் இந்த பள்ளிக்குத் தேவை இல்லேங்குறது என் அபிப்பிராயம். மதர் சுப்பீரியர்கிட்ட சொல்லி ஒப்புதல் வாங்கியாச்சு. உத்தரவும் அடிக்கச் சொல்லியாச்சு. நீங்க ஆதரவு கொடுக்கனும். மறுப்புச் சொல்லக்கூடாது” முடித்தாள்.

இது தன்னிச்சை செயல். இப்படி ஒரு முடிவெடுத்து எல்லாம் முடித்த பிறகு ஒப்புதல்? பிலோமினாவிற்கு உறுத்தியது.

அமர்ந்திருக்கிறவர்கள் எவரும் வாயைத் திறக்கவில்லை. அவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள். ஏஞ்சல் கருத்துக்கு எதிர் சொல் சொன்னால் அடுத்து அவர்களுக்கு ஆபத்து. எதிலாவது கோர்த்து வாங்குவாள்.

ஏஞ்சலின் குணாதிசயமே அப்படித்தான். அவள் முடிவிற்கு யாரும் கட்டுப்பட வேண்டும். மறுத்தால் கோபப்படுவாள். குழி பறிப்பாள்.

“பொம்பளைன்னா அவ்வளவு இளக்காரம்! நான் இந்த பள்ளியை ஆம்பளையே இல்லாம நடத்திக் காட்டுவேன். மீதி இருக்கும் ரெண்டு ஆண்களும் இடக்கு முடக்கு செய்தா அவனுங்களையும் துாக்கிடுறேன்!” ஆவேசமாக கூறி கறுவினாள். அவள் முகத்தில் அத்தனை ஆத்திரம் அவமானம்.

மதர் சுப்பிரீயர், பிலோமினாவைத் தவிர…மற்றவர்கள் ஏஞ்சல் முகத்தைப் பார்தது அரண்டிருந்தார்கள்.

லாரன்சு உள்ளே நுழைந்தான். முழு பாதிரியார் உடையில் இருந்தான்.

“வாங்க ஃபாதர். உட்காருங்க.” ஏஞ்சல்.

அமர்ந்தான்.

“என்ன ஆலோசனை?” கேட்டு புரியாமல் பார்த்தான். ஏஞ்சல் சொன்னதைத் திருப்பிச் சொன்னாள்.

“நிர்வாக உறுப்பினர்கள்ல நீங்களும் ஒருத்தர் ஃபாதர். இங்கே எல்லார் கருத்தும் ஒன்னா இருக்கு. உங்க ஒப்புதல் மட்டும் பாக்கி, வேணும்.” கூர்ந்து பார்த்தாள்.

லாரன்சு வலது கையால் மேசை மேலிருந்த கண்ணாடி உருண்டையை உருட்டினான்.

‘சரி இல்லையே…’ மனம் யோசனையில் ஆழ்ந்தது.

ஏஞ்சலுக்கு அவன் மௌனம், யோசனை மனதை கலக்கியது.

நிர்வாகக் குழு ஒப்புதலில் இவன் சம்மதம் முக்கியம். சாமியார்… பள்ளிக்கூடத்திற்குச் சம்பந்தமில்லாத ஆள். மதர் சுப்பிரீயருக்கு அடுத்து மதத்தில் தீவிரம். அதன் காரணமாக பள்ளியைப் பற்றி எந்த முடிவு அறிக்கையும் இவர்களது மேலிடம் பாதிரியார் கையெழுத்து ஒப்புதலைத்தான் முக்கியம் எதிர்பார்க்கும்.

இவனின் ஆழ்ந்த ஆலோசனை மதர் சுப்பிரீயருக்கும் பயத்தை வரவழைத்தது, வயது முதிர்ச்சி காரணமாய் அவளை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்றாலும் மாற்றுக்கருத்து சொன்னால் தனக்கு ஒரு கரும்புள்ளி. நினைத்தாள்.

வெகு நேரத்திற்குப் பிறகு ‘ஓ.கே’ லாரன்சு மெல்ல தலையாட்டினான்.

பிலோமினாவைத் தவிர எல்லாருக்குள்ளும் உயிர் வந்தது!

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *