சுமக்காதவர்கள்….!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 1,661
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10
அத்தியாயம் – 7
ஓய்வறையில் வந்து அமர்ந்து பிலோமினா படிக்கப் புத்தகத்தைப் பிரிந்தாள்.
இரண்டாக மடிக்கப்பட்ட வெள்ளைத்தாள் ஒன்று அதனுள் இருந்து இவள் காலடியில் விழுந்தது.
‘என்ன….?’ எடுத்துப் பிரித்தவளுக்கு அதிர்ச்சி.
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்!’ ராஜா.
காதல் கடிதம்!
கலா.. விசயம் முடிவதற்குள் அடுத்து அதிர்ச்சி.
‘என்ன செய்ய…?’ – புத்தகத்தை புரட்ட மனசு வரவில்லை.
ஜிலீரென்னு சின்னதாய் பழைய ஞாபகங்கள்.
***
“ஏய்..! நீ ரொம்ப அழகா இருக்கே!”
“போடா காதல் பிசாசு!”
“எனக்கு 20 உனக்கு 18.”
“ஐ லவ் யூ டா!”
அதற்கு மேல் இருவருக்குமே தொடர்ச்சியாப் பேச படங்கள் ஞாபகத்திற்கு வரவில்லை.
“அவ்வளவுதானா சரக்கு?” இவள் கேட்டாள்.
லாரன்சும், “ஆமாம்!” சொன்னான்.
“சரி அடுத்து சினிமா பாட்டாவது எவ்வளவு துாரம் பாட வருதுன்னு பார்க்கலாமா?”
“செய்யலாம்.”
“யார் மொதல்ல ஆரம்பிக்கிறது?”
“நீயே ஆரம்பி. வேணாம் நானே ஆரம்பிக்கிறேன்.”
“காதல் பிசாசே! காதல் பிசாசே!”
“கிறுக்கா கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா… காதல் கிறுக்கா…”
“ஏய்… டிம்சு கட்ட ஏய்.. டிம்சு கட்ட..”
“மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே….”
“வண்டார் குழலி! வண்டார் குழலி….!”
“மன்மத ராசா! மன்மத ராசா! என்னைக் கணக்குப் பண்ணாதே..!”
“காதலெனும் தேர் வெழுதி காத்திருக்கும் மாணவன் நான்..”
“படிக்கிற வயசுல பார்க்குல உட்கார்ந்து கிறுக்குப் புடிச்சு அலையுதுங்க….” எவரோ ஒரு புண்ணியவான் பெரிய மனிதர் இவர்கள் ரவுசு தாங்காமல் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்ட…. வெலவெலத்துப் போனார்கள்.
குப்பென்று வியர்த்தது.
“மெதுவாத்தானே பாடினோம்?!“ பிலோமினா… லாரன்சு காதில் குசுகுசுத்தாள்.
“‘ஆமாம்.. அதுவே அவருக்குத் தொந்தரவாய் இருந்திருக்கு. பாவம் மனுசன் என்ன வெறுப்பு நெனப்புல இருந்தாரோ?“
“நாம கல்லுாரியைக் கட்டடிச்சட்டு வந்ததுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்”
“சரி. மேல பாடு.”
“அடி படவா! எழுந்திரி!” இவள் புத்தகத்தை எடுத்து அவன் தலையில் அடிப்பது போல ஓங்கி எழுந்தாள்.
***
“கையில தாளை வைச்சிக்கிட்டு என்ன யோசனை?” பிலோமினா குரல் கேட்டு திடுக்கிட்டாள்.
இவள் சக ஊழியை கன்னிகாஸ்திரி ரோசி நுழைந்து மூலையில் அமர்ந்தாள். நல்ல வேளையாய் காதரீன் இல்லை. அவள் கேட்டதோடு நின்றிருக்க மாட்டாள். கையிலிருப்பதைப் பிடுங்கிப் பார்த்திருப்பாள். அவ்வளவு நெருக்கம்.
“ஒன்னுமில்லே குறிப்புத்தாள்!” உள்ளே வைத்து தனக்குத் தேவையான பக்கத்தைப் புரட்டினாள்.
மனசு…’யார் ராசா?’ தேடியது.
இவள் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களின் முகம் பெயர்களைக் கொண்டு வந்தாள். ஒரு பெயர்கூட ராசா கிடையாது.
‘பி. பிரிவில் உண்டா?’ அலசினாள். இல்லை.
‘மேல் வகுப்பு மாணவர்களா? இவள் பத்தாம் வகுப்புப் புத்தகத்தை அவர்கள் ஓசி வாங்கி திருப்ப அவசியமில்லை’. இருந்தாலும் அலசினாள். இல்லை.
‘கலாவை அடுத்து இன்னொரு கேஸ்!’ நினைத்துப் பார்க்கவே அவளுக்கு நடுக்கமாக இருந்தது.
‘எல்லாம் வயசு கோளாறு.’
இதை எப்படி முடிக்க? ஜூலியாவை அழைத்து யார் என்ன எவரிடம் புத்தகம் கொடுத்தாய்? என்று கேட்டால் விளங்கி விடும். ஒரு வேளை எதிர் வீடு அக்கம் பக்கத்து பையனாகக் கூட இருக்கலாம்.
கடிதம் இருப்பது மறந்து கொடுத்து விட்டாளா? இல்லை அவளுக்கு உள்ளே கடிதம் இருப்பது தெரியாமல் கொடுத்து விட்டாளா?
இது பெற்றவர்கள் கையில் கிடைத்திருந்தால்..
“யாரு அவன்?. மொளைச்சி மூணு இலை விடலை. அதுக்குள்ளே என்ன காதல்!?” உரித்து எடுப்பார்கள்.
எப்படி விசாரிக்க? முறைப்படி தலைமை ஆசிரியையிடம் காதில் போட்டால் அவ்வளவுதான்! கலா விசயத்தில் கடுப்பில் இருப்பவள் குதறி எடுத்துவிடுவாள்.
எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் அடுத்தவன் பேனாவை எடுத்துவிட்டான் என்பதற்காக…
“இனிமே இப்படி செய்வீயா? திருடுவியா?” அவன் கையிலேயே அடித்து கம்பை முறிக்க….அடுத்த நாளே வந்தது வினை.
“எவடி என் புள்ளையை அடிச்சது?” நேராக தலைமை ஆசிரியை அறையிலேயே நுழைந்து விட்டான் பெற்றவன் பாஸ்கர்.
“மரியாதையாய் பேசுங்க மிஸ்டர். நான்தான் அடிச்சேன்!”
“நீ பெரிய கொம்பா? எதுக்குடி அடிச்சே?” பின்னாலேயே பெற்றவளும் வந்துவிட்டாள்.
“திருட்டுப் புள்ளையைப் பெத்து வைச்சிருந்தா அப்படித்தான் அடிப்பேன்.”
“என் புள்ளை திருடன்னு தெரியுமா? என் புள்ளையை மாட்டிவிடனும்ங்குறதுக்காக அந்த பையன் என் பையனுக்குத் தெரியாம பேனாவை என் பையன் பையில போட்டிருக்கலாமில்லே?!”
“வீணா தகராறு பண்ணாதீங்க. போலீசைக் கூப்பிடுவேன்!”
“போலீசென்ன கலெக்டரையேக் கூப்பிடுடி. பையன் தெரிஞ்சு எடுத்தாலும், தெரியாம எடுத்தாலும், திருடினாலும்..நீ யாரு கழுதை என் என் பையனை அடிக்க..? உனக்கு அடிக்க உரிமை உண்டா, சட்டம் இருக்கான்னு பார்க்கிறேன்! எங்களுக்கும் சட்டம் தெரியும் தொட உரிமை கிடையாது. பையன் எந்த தப்பு செய்தாலும் பெத்தவங்கிட்ட சொல்லனும். அவுங்களை விட்டு கண்டிக்கச் செய்யனும். எங்களுக்கும் கண்டிக்கத்தான் உரிமை உண்டேத் தவிர தண்டிக்க உரிமை கெடையாது. பெத்தவங்களுக்கே அந்த கதின்னா…பாடம் சொல்லி கொடுக்கிற மாணவ, மாணவிகளைத் தொட உரிமை கிடையாது,”
“நேத்து நீ அடிச்ச அடியில நீ கை வீங்கிப் போய்… ராத்திரியெல்லாம்… ஜன்னி கண்டாபோல் நடுக்கம், சுரம். ஆபத்தான நிலையில ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். நேராய்ப் போலீசுக்குப் போய் உன்னை மாட்ட விடாம இங்கே வந்திருக்கோம். நீ புள்ளையைப் பெத்து, வளர்த்துப் பார்த்திருந்தால்தானே பெத்த, வளர்த்த வலி தெரியும். நீ எதுவும் அனுபவிக்காத முண்டச்சி. உனக்கு எப்படி புள்ளை அருமை தெரியும்! இந்த காலத்துல யாரும் பத்து பெத்து போடலை. அருமையாய் ஒன்னு ரெண்டு பெத்து வளர்க்கிறோம். அதுங்களுக்கு ஒன்னுன்னா தேகமே பதறும்.“
“அன்பு வடிவானவர் ஏசு. அவர் தப்பு செய்தவங்களைத் தண்டிக்கச் சொல்லலை. அரவணைச்சு அன்பால திருத்தச் சொன்னார். அவர் பேரைச் சொல்லி அநியாயம் பண்ணாதீங்க. அரக்கத்தனமா நடந்தா அவர் பேரைச் சொல்லவே உங்களுக்கு அருகதை கிடையாது. இந்த பள்ளியை விட்டா என் புள்ளை படிக்க ஆயிரம் இருக்கு. உனக்கு புள்ளைங்க மேல கையை வைச்சா சிறை இருக்கு. போலீசுல புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து மனித வள மேம்பாடு வரை போய் உன்னை உண்டு இல்லேன்னு ஆக்குவோம்.”
“ஆசிரியைப் பயிற்சியில நீ மனோதத்துவம் படிச்சியா இல்லே மண்ணையள்ளி தின்னுட்டு வந்தியா? அதுல புள்ளைங்களைத் தண்டிச்சா கண்டிச்சா அவுங்க மனசு மனசு எப்படி பாதிக்கப்படும்ன்னு சொல்லிக் கொடுக்கலை? படிக்கிற வயசுல புள்ளைங்க பெத்தவங்ககிட்ட இருக்கிற நேரத்தைவிட பள்ளி, உங்க கிட்ட இருக்கிற நேரம் அதிகம். அவுங்க எதிர்காலம் உங்க கையில இருக்கு. யோசிச்சு நட.” விட்டால் ஏஞ்சலையை உண்டு இல்லை ஆக்கி விடுவார்கள் போலிருந்தது.
ஆரம்பத்தில் துள்ளிய ஏஞ்சல் தலைமை ஆசிரியை… அவர்கள் பேசப் பேச… அப்படியே அரண்டு அடங்கி ஒடுங்கி விட்டாள்.
சத்தம் கேட்டு அலுவலகத்திலிருந்த ஆட்கள், மதர் சுப்பீரியரும் வந்து சமாதானப் படுத்த…. சென்றார்கள்.
தலைமை ஆசிரியை என்ற அகம்பாவம். ஏஞ்சலுக்கு எப்போதும் எடுத்தேன் கவிழ்த்தேன் குணம். அதோடு மட்டுமில்லாமல் பிடித்த பிடியை விடமாட்டாள். எத்தனை முறை பட்டாலும் அவள் எப்போதும் வேதாளம் முருங்கை மரம்.
‘எப்படி முடிக்க?’ என்று குழம்ப…. லாரன்சு கண்ணில் வந்தான்.
அத்தியாயம் – 8
பள்ளிக்கூடம் விட்டதும் பிலோமினா சாமியார் இருப்பிடம் நோக்கிச் சென்றாள்.
லாரன்சு கைலி, கை வைத்த பனியனில் இருந்தான். சாமியார் அங்கியில் இல்லாமல் சாதாரண மனிதனாய் வரண்டா நாற்காலியில் அமர்ந்து ‘இந்தியா டுடே’ ஆங்கிலப் பிரதியைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
அதன் தமிழ் பதிப்பு டீபாயில் கிடந்தது.
அது மட்டுமில்லாமல்.. இரண்டு தினப் பத்திரிக்கைகள், சில.. வார, மாத …பத்திரிக்கை, புத்தகங்கள் கிடந்தன.
லாரன்சு தயைத் துாக்கி இவளைப் பார்த்ததும், “வா பிலோமினா! உட்கார்!” எதிர் நாற்காலியைக் காட்டினான். அமர்ந்தாள்.
‘ஃபாதர் அழைக்கலாமா? லாரன்சு அழைக்கவா?’ என்று இவளுக்குள் சின்ன தடுமாற்றம், குழப்பம்.
“எனக்கு ஒரு சின்ன பிரச்சனை!” பொதுப்படையாக மெல்ல ஆரம்பித்தாள்.
“சொல்லு?“
ஜூலியா காதல் கடித விபரத்தைச் சொன்னாள்.
“இதை எப்படி முடிக்க?” கேட்டாள். லாரன்ஸ் கொஞ்சமும் யோசிக்கவில்லை.
“ரொம்ப சுலபம். ஜூலியா யாரையும் காதலிக்கலை. அப்படி காதலிச்சிருந்தால்ன்னா யார்கிட்டே இருந்து புத்தகம் வாங்கினாளோ அப்பவே அவன் எழுதிய கடிதத்தை எடுத்திருப்பாள். அவள் காதலிக்கவும் ஆரம்பிக்கலை. அவள் வகுப்புல படிக்கிற யாரோ ஒரு மாணவனுக்கு அவள் மேல் காதல் ஒரு கடிதம் எழுதி அவளுக்குத் தெரியாமல் அவள் புத்தகத்துல வைச்சிருக்கான். பையனும் தெரிஞ்சு தவறு செய்யலை. வயசு, ஆர்வக் கோளாறு. சின்ன தடுமாற்றம் எழுதி இருக்கான். இதை ஏஞ்சல்கிட்ட சொல்லி பெரிசு படுத்தனும்ன்னு அவசியமே இல்லை. அப்படி செய்தால் அவமானம் பையன் மனசு பாதிக்கும்.”
“அடுத்து பையன் நமக்கு யார்ன்னு தெரியனும். அதுவும் சுலபம். பொதுவா சிலருக்கு வீட்டுல ஒரு பேர் வெளியில ஒரு பேர் இருக்கும். மாணவியை அழைச்சு விபரம் ஏதும் சொல்லாம நீ கடைசியாய் யார்கிட்ட, எந்த மாணவன்கிட்டே புத்தகம் கொடுத்தேன்னு கேட்டா…. அவள் நிசத்தைச் சொல்லிடுவாள். அதை வைச்சு அவனை அழைச்சு காதும் காதும் வைச்சாப் போல கண்டிச்சு விடலாம்.” கொஞ்சமும் தடுமாறாமல் தெளிவாய்ச் சொன்னான்.
பிலோமினாவிற்கு அவன் சொன்னது மொத்தமும் பிடித்திருந்தது.
”சரி. அப்படியே செய்திடலாம் !” என்றவளுக்குள் இன்னொரு சந்தேகம், “அந்த பையன் இது என் பேர் இல்லே. நான் எழுதலைன்னு சாதிச்சா ?“ கேட்டாள்.
“அதைக் கண்டுபிடிக்கிறதும் குதிரைக் கொம்பில்லே. நீ திருத்துற கட்டுரை நோட்டைப் பார்த்தாலே யார் கையெழுத்துன்னு கண்டு பிடிச்சுடலாம்.”
‘நல்ல யோசனை!’ எழுந்தாள்.
“இதுக்குத்தான் வந்தியா பிலோமினா?”
“ஆமாம்.” நின்றாள்.
“என் மனசுக்குள்ளே நம்ம பழைய படங்கள் ஓடுது.”
அதிர்ந்தாள்.
‘நின்றால் சரி வராது!’ வேகமாக நடந்து படி இறங்கினாள்.
கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டதுபோல் அவளையும் அறியாமல் இதயம் படபபடத்து.
உடல் வேர்த்து வெடவெடத்தது. துடைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
‘ஏன் வந்தோம். எதற்கு வந்தோம். நின்றால் என்ன? பாதிரியார் என்றால் அவயருக்குப் பழைய நினைவுகள் இருக்கக்கூடாதா… வரக்கூடாதா…?’
‘கன்னிகாஸ்திரி என்றால் காதல் பேச்சு கேட்கக்கூடாதா? கலா, ஜூலியா காதல் கேட்கவில்லை. பார்க்கவில்லை!?‘ மனம் கேள்வி மேல் கேள்விகளை அடுக்கியது.
கதவை யாரோ தட்டினார்கள். திறந்தாள்.
காதரீன்!
“சீருடையை விட்டு நைட்டிக்கு மாறி இருப்பேன்னு நெனைச்சேன். ஏன் மாறலை. முகம் கலவரமா இருக்கு?” திடீர் கேள்வி கேட்டு இவளை உற்றுப் பார்த்தாள்.
“அப்படியா !?” என்று ஆச்சரியப்பட்டவள் போல் நடித்த பிலோமினா, “ஒரு சின்னப் பிரச்சனை. என் வகுப்பு மாணவி ஒருத்திக்கு ஒரு மாணவன் காதல் கடிதம் எழுதிட்டான். அதான் யோசனை?” சமாளித்தாள்.
அதுவே அவளுக்கு வினையாக முடிந்தது.
“இது பத்தி பேசத்தான் சாமியார்கிட்ட போனீயா?” காதரீன் அடுத்து கேட்டாள்.
“அ..ஆமா.“
“அதுக்கு.. ஏன் சாமியார்கிட்ட போகனும்?” இவள் துணுக்குற்று அவளைப் பார்த்தாள்.
“உன் முதுகுக்குப் பின்னாலேயும் கண்ணிருக்கிறதைத் தெரிஞ்சுக்கோ பிலோமினா?”
“ஏய்… அவர் நம்ம கோயில் சாமியார்!” பதறினாள்.
“இருக்கட்டுமே. அவரும் ஆம்பளை.”
“காதரீன்!”
“எந்த மத சாமியார்களும் இப்போ சரியா இல்லே. எத்தனையோ நாட்டு நடப்புகள். சமீபத்துல ஒரு சேதி பத்திரிக்கையில படிச்சேன். இதே மாதிரி ஒரு சாமியாருக்கும் ஒருத்திக்கும் கள்ளத்தொடர்பு! சம்பந்தப்பட்டவள் கணவன். ‘என் மனைவியை அவர்கிட்டே இருந்து பிரிச்சு தாங்க’ ன்னு போலீஸ்ல புகார் கொடுத்திருக்கான். சப்-இன்ஸ்பெக்டரும்… சாமியார், அவளைக் கூப்பிட்டு விசாரிச்சிருக்கார். சாமியார், அவள் விருப்பம்’ன்னு சொல்லி ஒதுங்கி இருக்கார். இவள். ‘நான் சாமியார்கூடத்தான் வாழ்வேன்!’னு அடிச்சுச் சொல்லி இருக்காள். வெறுத்துப் போன சப்-இன்ஸ்பெக்டர், ‘நீ ஒழுங்கா கவனிச்சா ஏன் அவள் சாமியாரைத் தேடிப் போறாள்? அவர் சரியாய்க் கவனிச்சிருக்கார். அதான் அவரைவிட்டு உன் மனைவி பிரிய மாட்டேன்ங்குறாள். அடுத்து நீ எவளையாவது கட்டிக்கோ!’ன்னு சொல்லி திருப்பி அனுப்பிச்சிருக்கார். இது கதை இல்லே. நிஜம்!” சொன்னாள்.
“நீ இந்த இந்த சாமியார் என்னைச் சந்தேகப்படுறீயா..?”பிலோமினா திருப்பி அவளைக் கேட்டாள்.
“நான் படலை பிலோ. குறிப்பா.. நம்ம தலைமை ஆசிரியை ஏஞ்சல் சந்தேகப்படமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?”
பிலோமினாவிற்குள் சடக்கென்று சின்னத் திகில் அடித்தது,
“நாப்பது வயசு தாண்டிய ஏஞ்சல் நம்மை நம்மை போல் கன்னிகாஸ்திரியாய் உடை உடுத்தி, அதிகம் படிச்சு, தலைமை ஆசிரியை ஆனாலும் கோபம் விருப்பு வெறுப்பு காட்டுறாங்க. நாம யார்…. எந்த ஆம்பளைகிட்ட பேசினாலும் சாதாரண மனுசியாய்ச் சந்தேகப்படுறாங்க. நம்ம பள்ளிக்கூடத்துல ஆண் வாடையே மூணு பேர். ஒருத்தன் கேட் காவலாளி. வயசு பதினெட்டு. அடுத்து வங்கி வேலை, வெளி வேலைக்குன்னு இன்னொருத்தன் சுபாஷ் வயசு 25. சமீபத்துல திருமணம் முடிச்சான். கடைசியாய் உடற்பயிற்சி ஆசிரியர். இந்த சக ஊழியர்கிட்டேயே நாம ஒரு நிமிசம் நின்னு பேசினா அந்தம்மா ஒரு மாதிரியா பார்க்குறாங்க. அவ்வளவு ஏன்.. ஒரு நாள் காவலாளி பையன்கிட்ட ஒரு நிமிசம் நின்னு பேசிட்டேன்ங்குறதுக்காக அவன்கிட்ட என்ன பேச்சுன்னு என்னை ஒரு மாதிரியாய்க் கேட்டாங்க. அப்படி இருக்கும் போது நீ சாமியார்கிட்ட பேசுறது அவுங்க கண்ணை உறுத்தும்!”
பிலோமினாவிற்கும் நினைக்க என்னவோ போலிருந்தது.
“சரி. நம்மைவிடு. சாமியார் ஏன் அயோக்கியமா இருக்கக்கூடாது?”
“காதரீன்!” அலறி அலறி சடக்கென்று துணுக்குற்றுத் திடுக்கிட்டுப் பார்த்தாள்.
“அதிர்ச்சி அடையாம நான் சொல்றதைக் கேள். போன சாமியார் வரை ஆரோக்கியசாமிதான் ஆம்பளைக்கு ஆம்பளை உதவி ஆளாய் இருந்தான். இப்போ வந்த இவர்… துணைக்கு ஒரு பொம்பளையைச் சேர்த்திருக்கார். அவள் புருசனைவிட்டு பிரிஞ்சு ஒரு குழந்தையோட வாழ்றவள். சின்ன வயசு. பஞ்சும் நெருப்பும் பத்திக்காதுன்னு என்ன நிச்சயம்? வேணாம்… சாமியார் யோக்கியம், வாழை மட்டை. பத்தவே பத்தாதவர். இவள் எங்கேயாவது பத்தி இவர்தான் காரணம்ன்னு பழியைப் போட்டால் இன்றையக் கால கட்டம். உலகம் எப்படி நம்பாமல் போகும்?” சொல்லி சின்ன வெடி வெடித்தாள்.
பிலோமினாவிற்குள் சொரக்கென்றது. வயிற்றின் உள்ளே எவரோ கை விட்டு பிசைந்தார்கள்.
“இப்படியெல்லாமா நடக்கும் காதரீன்?” மிரட்சியாகப் பார்த்தாள்.
“நடந்தால் என்ன செய்ய முடியும்? அப்படி நடக்க நாம ஏன் இடம் கொடுக்கனும்? சாமியாரைப் பார்த்தால் நல்லவராய்த் தெரியறார். அவருக்கு ஏன் இந்த வீண் வேலை?”
‘இவள் என்ன சொல்ல வருகிறாள்?! முதலில் தன்னைக் கண்டிக்க வந்து சாமியாரைக் குறை சொன்னாள். அடுத்து நல்லவரென்கிறாள். கடைசியாய் அக்கறை கொண்டவள் போல் பேசுகிறாள். ஏன்?’ குழம்பினாள்.
காதரீன் அவளையும் படம் பிடித்தாள்.
“நான் எப்படின்னு குழம்பறீயா? எல்லார் மேலேயும் அக்கறை கொண்ட ஒரு நல்ல மனுசின்னு வை. இளங்கன்று பயமறியாதுன்னு சொல்வாங்க. அவரைப் பார்த்தால் நல்லவராய்த் தெரியறார். எதுக்கு அனாவசியமாய், விபரம் புரியாமல் சேத்தை அள்ளிப் பூசிக்கனும்? நமக்கு தெய்வப்பாதைன்னு ஒரு தனிப்பாதை அமைச்சுக்கிட்டோமேத் தவிர எல்லாரும் இந்த மக்கள் சமுதாயத்துலதான் வாழ்றோம். கர்த்தர்கிட்ட இதயம் மொத்தத்தையும் கழட்டி வைச்சிட்டு யாரும் கல்லா வாழ முடியாது. அப்படி இருக்கும் போது ஒருத்தர் மேல ஒருத்தர் அக்கறை காட்டுறதுல என்ன தப்பு ? கடைசியாய் சொல்றேன். நீ அடுத்த முறை சாமியாரைச் சந்திக்கும் போது இந்த பொம்பளை விசயத்தைப் போட்டு வை.” சொன்னாள்.
“என்ன காதரீன் சொல்றே? நீதான் சாமியாரைச் சந்திக்காதே, சந்தேகப்படுவாங்க சொல்றே, அடுத்து சந்திக்கலாம் சொல்றே. சந்திக்கலாம். கூடாது! தெளிவாய் ஏதாவது ஒன்னைச் சொல்.” பிலோமினா கேட்டாள்.
அதற்கும் அவள் பதிலைத் தயாராய் வைத்திருந்தாள்.
“நான் மத்தவங்களைப் பத்தி குறை சொன்னேனேத் தவிர உன்னைக் குறை சொல்லலை. நாம் யோக்கியமாய் இருந்தால் கொல்லன் தெருவிலேயும் ஊசி விக்கலாம். சந்தேகப்படுறவங்க படட்டும். அவுங்க குணம் அப்படி. உனக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்!” சொல்லிவிட்டுச் சென்றாள்.
காதரீன் சென்ற பிறகு லாரன்சுவிடம் ‘அந்த வேலைக்காரி வேண்டாம் சொல்ல வேண்டும்!’ நினைவுதான் பிலோமினாவிற்குள் நின்றது.
‘லாரன்சு எதற்கு அந்த வேலைக்காரியை அமர்த்தினான் அவளைப் பற்றிய விளரம் தெரியுமா?இவளே கேள்விகளைக் கேட்டாள்.
***
மறுநாள்.
இவள் ராஜாவை கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தாள். உடன், ஜூலியாவைத் தனியே அழைத்து, “நீ எனக்குப் புத்தகம் கொடுக்கிறதுக்கு முன் யார்கிட்டே கொடுத்தே ?” விசாரித்தாள்.
“நான் யார்கிட்டேயும் கொடுக்கலை மிஸ் !” என்றாள் அவள்.
“வீட்டுக்குப் போய் அங்கே யாருக்காவது இரவல் கொடுத்தியா?“
“உங்களைத்தவிர நான் யார் கேட்டாலும் கொடுக்க மாட்டேன். இதுவரை அப்படி யார்கிட்டேயும் கொடுத்ததில்லே மிஸ்.”
‘ஒருவேளை வேறொருத்திக்குக் கிடைக்க வேண்டியது தவறுதலாக இவள் புத்தகத்தில் சிக்கிவிட்டதா?’
“உனக்குப் பக்கத்துல யார் உட்கார்ந்திருக்கா?”
“ரோசி மிஸ்!”
அவள் கொஞ்சம் அலட்டல். எல்லா மாணவர்களுடனும் கலகலப்பாக பேசுவாள், பழகுவாள்.
‘எவனோ… அவளுக்குக் கொடுக்க வேண்டிய கடிதத்தை இவள் புத்தகத்தில் வைத்து நீட்டிவிட்டானா!? தோன்றியது.’
“அவள் உன் புத்தகத்தை இரவல் எடுப்பாளா?”
“எதுக்கு மிஸ் இந்த விசாரணை?” ஜூலியாவிற்குள் மெல்ல பயம் தலை துாக்கியது.
“பயப்படாம நான் சொல்றதை காதுல வாங்கு. மத்தவங்ககிட்டேயும் மூச்சு விடக்கூடாது, பெரிய மிஸ் காதுல விழுந்தா விசயம் வில்லங்கம். தொலைஞ்சே! உன் புத்தகத்துல இந்த கடிதம் இருந்துது. யார் எழுதினா தெரியுமா?” காட்டினாள். வாங்கிப் பார்த்த ஜூலியா அரண்டாள்.
“சத்தியமா எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லே மிஸ்!” மிரண்டாள்.
கடிதத்தைத் திருப்பினாள்.
“ஓ.கே. விசயத்தைச் சொல்லாம நீ போய் ரோசியை அனுப்பு.” அனுப்பினாள்.
சில நிமிடங்களில்… அவள் வந்தாள். பவ்வியமாய் நின்றாள்.
“ரோசி! நேத்தோ அதுக்கு முதல் நாளோ நீ ஜூலியா கணக்குப் புத்தகத்தை எடுத்தியா, தொட்டியா?”
“இல்லே மிஸ்.”
“நல்லா யோசிச்சு சொல். அவள் புத்தகத்தை நம்ம வகுப்பு பையன்கள் யார் கேட்டாவது கொடுத்தியா?“
“ஆங்…. கொடுத்தேன் மிஸ்.”
“யார்கிட்டே எப்போ?“
“எங்களுக்குப் பின்னால உள்ள குணா அந்த புத்தகத்தை எடு, பார்த்துட்டு தர்றேன்னு ஜூலியா புத்தகத்தைக் காட்டி கேட்டான். அப்போ அவ இல்லே. உங்களைக் கேட்டுக்கிட்டுத்தான் வெளியில யாரோ வந்திருக்கான்னு கேட்டுப் போனாள். நான் எடுத்துக் கொடுத்தேன். உடனே திருப்பிட்டான் மிஸ்.”
“சரி. அவனை அனுப்பு.’”
“ஏன் மிஸ்..?”
“நான் சொல்றதைச் செய்!” பத்து நிமிடத்தில் வந்தான்.
“குணா! இந்த! இந்த கடிதம்?” இவள் காட்டி கேட்ட அடுத்த வினாடியே….
‘சாரி. தப்பு பண்ணிட்டேன் மிஸ் !” அழ ஆரம்பித்தான்.
பிலோமினா..அன்று மாலையே சாமியார் லாரன்சை சந்தித்து…. ‘கண்டுபிடித்து. மன்னித்துவிட்ட’’ விசயத்தைச் சொன்னாள்.
அவன் மௌனமாக கேட்டான்.
“அ…அப்புறம் இன்னொரு விசயம்?”
“என்ன?”
“உங்களுக்கு இங்கே வேலைக்காரி அவசியமா?”
“ஏன்… நீ வர்றீயா, உனக்குத் தேவையா ?”
“வேடிக்கை வேணாம். விசயம் இருக்கு. கேட்குறதுக்குப் பதில் சொல்லுங்க.”
“தேவை இல்லே! ஆனா நான் எந்த எந்த கோயில் சாமியாராய்ப் பணியில் அமர்ந்தாலும் அங்கே அனாதரவற்ற ஒருத்திக்கு வேலை கொடுக்கிறது வழக்கம். ஏதோ நம்மாலான உதவி.”
“அனாதரவான ஆம்பளைக்கு உதவ மாட்டீங்களா?”
“இது நீயும் நானும் கல்லுாரியில் கல்லுாரியில் படிக்கும்போது கேட்கும் கேள்வி போல இருக்கு. இருந்தாலும் பதில் சொல்றேன். அவன் நாலு இடத்துல பிச்சை எடுத்தாவது நடு ரோட்டுல படுத்து பிழைச்சுப்பான். பிரச்சனை இல்லே. ஆனா ஒரு இல்லே. ஆனா ஒரு பொண்ணால அப்படி வாழ முடியாது. அதனாலதான் இந்த முடிவு. மத்தபடி அனாதரவுல எனக்கு ஆண் பெண் பேதம் கெடையாது.”
“காரணம் சரி. இவள் வேணாம். நிறுத்திடுங்க.”
“ஏன்?“
“நடத்தை சரி இல்லேன்னு கேள்வி.”
“புருசன் ஓடிப் போனா… நடத்தை இல்லாதவளா ?”
“கேள்விப்பட்டதைச் சொன்னேன்.”
“தப்பானவங்களைத்தான் திருத்தனும். பிலோமினா.”
“ரொம்ப சரி. ஒரு பெரிய எழுத்தாளர் ஒருத்தர் எழுதின கதையை நீங்களும் படிச்சிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். புடிக்கலைன்னாலும் தெரிஞ்சுக்கோங்க.
புயல், மழை! நடுக்கடல்ல ஒரு கப்பல் நங்கூரம் போட்டு தள்ளாடி நிக்குது. அப்போ.. உங்களைப் போல ஒரு சாமியார். தன்னோடு பயணம் செய்யும் பலான ஒருத்தியிடம்… நீ இப்படியெல்லாம் இருக்கக்கூடாது!ன்னு உபதேசம் செய்யறார். புயல் மழை ஓய்ந்து பார்த்தால் அவள் இவர் வழிக்கு வரலை. பாதிரியார்.. அவர் ஸ்தானத்துல இல்லே!” பிலோமினா அடுத்து வேறெதுவும் சொல்லாமல் சென்றாள்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
