சிவகாமியின் செல்வன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 131 
 
 

(1990ல் வெளியான வாழ்க்கை வரலாறு, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம் – 16

டில்லியில் இன்னொரு நாள். பக்தர்கள் பகவாளைச் ‘சிக்’ கெனப் பிடித்தது போல நானும் காமராஜைச் ‘சிக்’கெனப் பிடித்துக் கொண்டு, “போன தேர்தல்லே காங்கிரஸ் தோல்வி அடைஞ்சதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டேன்.. 

“சரியான வாரிசு இல்லே. அரிசி கிடைக்கல்லே. காங்கிர ஸுக்குள் பூசல், பொறாமை வளர்ந்துட்டுது.” 

“அடுத்த தேர்தல்லே காங்கிரஸுக்கு எத்தனை ஸீட் கிடைக்கும்?”  

“நூற்றைம்பது ஸீட் ஸிண்டிகேட் காங்கிரஸுக்கு நிச்சயம் கிடைக்கும். பிரசாரம் போதாது. இன்னும் நல்லா செய்யணும்.” 

“நிலப் பட்டா செய்யறது பற்றி உங்க கருத்து என்ன?” 

“ஊரிலே தனியா நிலம் இருந்தா எல்லாக் கட்சியும் சேர்ந்து நிலமில்லாதவங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு லிஸ்ட் போட்டு, ஆளுக்கு இவ்வளவு நிலங்கிற லிஸ்ட்டைச் சர்க்காருக்கு அனுப்பினா பட்டா போட்டுக் கொடுக்கலாம்.” 

“பணக்காரங்க ரொம்பப் பேருக்கு நிலத்தைக் கொடுத்துட் டாங்களாமே?” 

“கொடுக்கல்லே; அவங்களே எடுத்துக்கிட்டாங்க… நிலத்துக்கு உச்ச வரம்பு இங்கே பதினைந்து ஏக்கர்னு வெச்சிருக்காங்க. கேரளாவிலேயும் பதினைந்து ஏக்கர்னு வெச்சிருக்காங்க. இது சரியில்லே. கேரளாவிலே ஐந்து ஏக்கர் நிலம் இருந்தா இங்கே அது பதினைந்து ஏக்கர் நிலத்துக்குச் சமம். அப்படி வித்தியாசம் இருக்கச்சே, இங்கே, அங்கே ரெண்டு ஏக்கர் ஸீலிங் என்பது எப்படிச் சரியாகும்?” 

“அதை விடுங்க. ஒரு தமிழர் இந்த நாட்டின் பிரதம மந்திரியா வர முடியுமா?” 

“முடியும்.ஆனா இப்ப முடியாது; அதுக்குச் சரியான சூழ்நிலை இல்லை. நான் காங்கிரஸ் பிரஸிடெண்ட்டா இருக்கக் கூடாதுன்னு இந்திரா காந்தி நினைச்சாங்க. மொரார்ஜி தேசாயும் நினைச்சார். இதிலே அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு!” 

“ஜனநாயகத்துக்கு ஆபத்து, இந்தியாவுக்கு ஆபத்து இந்த இரண்டிலிருந்தும் தேசத்தைக் காப்பாத்தணும்னு சொல்றீங்களே, அந்த ஆபத்து எப்படி, எந்த உருவிலே வந்திருக்குன்னு சொல்ல முடியுமா?” 

“இந்த நாட்டிலே பிரதமரை விலைக்கு வாங்கலாம். ஜனநாயகத்தையும் விலைக்கு வாங்கலாங்கிற நிலைமை இப்போ வந்துகிட்டிருக்கு. இதைவிட நம்ம நாட்டுக்கு வேறே என்ன ஆபத்து வேணும்? மருந்து கண்ட்ரோல், சிமெண்ட் கண்ட்ரோல் இந்த ரெண்டிலேயும் ரொம்ப ஊழல் நடக்கிறது. லட்சம் லட்சமாப் பணம் புரளுது. ஏராளமான வெளிநாட்டுப் பணம் நம்ம நாட்டிலே நடமாடுது. இந்தப் பணமெல்லாம் நம்ம அரசியலைப் பாழடிக்காதா? இந்த மாதிரி அந்நிய நாட்டுப் பணம் நம்மை ஆட்டிப் படைச்சா நம்ம நாடு ‘வீக்’காகத் தான் போகும். ரஷ்யப் பணம், அமெரிக்கப் பணம் ரெண்டுமே தப்புதான். இதனாலே நம்ம சுதந்திரமே போயிடுமே! இன்றைய அரசியல்லே முதல் இடம் பணத்துக்குத்தான்னு ஆயிட்டுது அதுக்கு அப்புறந்தான் ஜாதி மத்தது எல்லாம். கம்யூனிஸ்ட் கட்சிங்க வேறே. இதிலே வலது கம்யூனிஸ்ட்டால்தான் ஆபத்து அதிகம்னு நான் நினைக்கிறேன். அவங்களுக்குத்தான் ரஷ்யப் பணம் ரொம்பக் கிடைக்குது. அது நம் நாட்டை ரொம்பக் கெடுக்குது. இதைக் கவர்ன்மெண்ட் பார்த்துச் சீக்கிரமா நிறுத்தணும். நமக்கு இதெல்லாம் தெரியுது. ஆனா நாம் என்ன செய்ய முடியும்? அயல் நாடுகளுக்கு இங்கே எதுக்குத் தனியா ஒரு வர்த்தக அதிகாரி? ரஷ்யாதான் எல்லாமே அரசாங்க வழியா நடக்கணும்னு சொல்லுதே, அவங்க மட்டும் இங்கே நடத்தற சில சாமான்கள் வியாபாரத்தை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் வழியா நடத்தக் கூடாதா? தனிப்பட்ட ஆளுங்களுக்கு ஏன் கொடுக்கணும்? கம்யூனிஸ்ட் பலம் அதிகமானால் இந்திரா கேபினெட்லே கீ பொஸிஷனையெல்லாம் கம்யூனிஸ்ட் எடுத்துக்குவானே…? அப்புறம் சிமெண்ட் கண்ட்ரோல் இருந் தப்போ சிமெண்ட் தெற்கே இருந்து வடக்கே போய்க்கிட்டு இருந்தது. ரயில் சார்ஜ் அரசாங்கம் கொடுத்தது. இதனாலே அங்கே இருக்கறவங்களுக்கு அதிக லாபம் சம்பாதிக்க முடி யல்லே. பணம் கொடுத்து ‘டி கண்ட்ரோல்’ பண்ண வச்சாங்க. வடக்கே சிமெண்ட்டுக்கு ஷார்ட்டேஜ் வந்தது. நல்ல லாபம் சம்பாதிச்சாங்க. 

மருந்து விலைக் குறைப்பும் அப்படித்தான். அவசியமான மருந்து விலை ஏறிப் போச்சு; தேவையில்லாத மருந்துகள் விலை மட்டும் குறைஞ்சுது. இதிலே யாருக்கு லாபம்? மருந்துக் கம் பெனிக்காரர்களே பணம் கொடுத்து செய்த வேலை இது. இந்தப் பணமெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியணும்… இதையெல்லாம் எப்படித் தடுக்கிறது? எல்லாரும் ஒண்ணு சேர ணும். இந்த ஆபத்தையெல்லாம் எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்யணும். பத்திரிகைகளெல்லாம் இந்திரா காந்தியை சப் போர்ட் பண்ணுது. ரேடியோ. அவங்க கையிலே இருக்குது. பிரஸ் இருக்குது. பிறகு எப்படி பப்ளிக் ஒபினியன் உருவாகும்? 

நாம் எவ்வளவு பேசினாத்தான் என்ன? ஆயிரம் பேர் ங்க, அவ்வளவுதான். அதுவே பேப்பர்லே வந்தா லட்சம் பேர் படிப்பாங்க. பேப்பர்லே வந்ததை வெச்சுக்கிட்டு அப்புறம் பத்து லட்சம் பேர் பேசுவாங்க. நாம் பேசறது பேப்பர்லே வராட்டா எப்படி?” 

பத்திரிகைகளின் சக்தியைப் பற்றிக் காமராஜ் இப்படிச் சொன்னதும் ‘நானும் ஒரு பத்திரிகையாளன்’ என்ற முறையில் என் உள்ளம் பெருமிதத்தால் நிறைந்தது. அடுத்த கேள்வியை நான் போடுவதற்குள், ‘தலைவர் இருக்கிறாரா?’ என்று கேட்டுக் கொண்டே யாரோ ஒரு பிரமுகர் உள்ளே வரவே, “இதோ வந்து விட்டேன்!” என்று காமராஜ் எழுந்தார். வந்தவர் யார்? என்று நான் கவனிப்பதற்குள் இருவரும் எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு வெளியே நடந்தார்கள். 

எப்படியிருக்கும் எனக்கு? நல்ல ஒரு துப்பறியும் கதையின் கடைசிக் கட்டத்திலுள்ள துப்புத் துலங்கும் அத்தியாயத்தைப் பரபரப்புடன் படித்துக் கொண்டிருக்கும் போது, யாரோ வந்து என் கையிலிருந்த புத்தகத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விட்டது போல் இருந்தது.

அத்தியாயம் – 17

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் விருது நகருக்குச் சென்று காமராஜின் தாயார் சிவகாமி அம்மாளைப் பார்த்துப் பேசி ட்டு வந்தேன். அப்போது பேச்சுக்குப் பேச்சு ‘காமராஜ் திருமணம் செய்து கொள்ளவில்லையே’ என்ற குறையை அவர் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். 

“உங்க மகனைப் பற்றி நாடே பெருமைப்படுதே, அதற்காக நீங்க சந்தோஷப்படுவீங்களா! கலியாணம் செய்து கொள்ள வில்லையே என்று இப்படிக் குறைப்படுவீங்களா?’ என்றேன் நான். 

“நாட்டுக்கு ராஜாவானாலும் தாய்க்குப் பிள்ளைதானே? எனக்குக் குறை இருக்காதாய்யா?” என்றார் அவர். 

“வேறு ஏதாவது குறை உண்டா உங்களுக்கு?” என்று கேட்டேன். 

“இங்கே வந்தால் ஒரு நிமிஷம் நிற்கமாட்டான்யா: உள்ளே நுழையற போதே, ‘என்னம்மா சௌக்கியமா?’ம்பான். அப்படிக் கேட்டுக்கிட்டே உள்ளே வருவானா? வந்த சுவட்டோடே, அப்படியே தெருப் பக்கமாகத் திரும்பி நடந்துகிட்டே, ‘நான் வரேம்மா’ன்னு போயிடுவான். என் மகனை இந்த நாட்டுக்கு உழைக்க ஒப்படைச்சுட்டேன். சின்ன வயசிலேருந்தே அவன் வீடு தங்கினதில்லை. அவனுக்கு ஒரு கலியாணத்தைச் செஞ்சு கண்ணாலே பார்த்துடணும்னு நானும் எவ்வளவோ பாடு பட்டுப் பார்த்தேன். முடியலே. அதுதான் குறை!” 

“உங்கள் செலவுக்குப் பணம் அனுப்புகிறாரா?” 

“அனுப்பறான். அவனே அனுப்ப மாட்டான்; தனுஷ்கோடி நாடார் மூலமாத்தான் அனுப்புவான். அவர் நூறு ரூபா அனுப்புவார். இங்கே நாலு பேர் உட்கார்ந்து சாப்பிடணுமே! இந்த விலைவாசியிலே நூறு ரூபா பத்துமா? நீங்களே சொல்லுங்க.” 

“மெட்ராசுக்குப் போய் மகன்கிட்டேயே இருந்துடுங்களேன்…” 

“நல்லா இருக்க விடுவானே…? ஆவடி காங்கிரஸின் போது போனேன். ரெண்டு நாள் தங்க விடலே. ஊரைச் சுற்றிக் காட்ட ஏற்பாடு பண்ணான்; பார்த்தேன். ‘எல்லாம் பார்த்தாச்சு இல்லையா? புறப்படு விருது நகருக்கு’ன்னு ரயிலேற்றி விட்டுட்டான். நான் சொன்ன பேச்சைக் கேக்கற பிள்ளையர் அவன்? காமராசான்னு நாடே அவனைத் தலையிலே தூக்கி வச்சுக்கிட்டுக் கூத்தாடுது. அதுலே எனக்கு சந்தோசந்தான். இருந்தாலும்…” 

”சின்ன வயசிலே அவரை நீங்க பள்ளிக்கூடத்திலே படிக்க வெச்சு வீட்டிலேயே மடக்கிப் போட்டு வளர்த்திருக்கணும்.” 

“நல்லாத் தங்குவானே வீட்டிலே! மதுரை உண்டா, மன்னார்குடி உண்டான்னு ஓடிக்கிட்டே இருப்பான். கொஞ்சம் அரிசியும்,படி நெய்யும் கொடுத்துப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வாத்தியாரு கூட வச்சோம். படிச்சானா? இல்லே! இந்த நாட்டிலே படிக்காத பிள்ளைங்களே இருக்கக் கூடாதுன்னு இப்ப சொல்றான். ஊர் ஊராப் பள்ளிக்கூடம் கட்டிப் பிள்ளைங்களைப் படிக்க வைக்கறான்.” 

சிறு வயதிலேயே வீட்டை மறந்து நாட்டுக்கு உழைப்பதி லேயே நாட்டம் கொண்ட காமராஜ் 1921-ஆம் ஆண்டுக்குப் பிறகு முழு நேரக் காங்கிரஸ் ஊழியராகவே மாறி விட்டார். உத்தியோகம், திருமணம் இவ்விரண்டும் தம்முடைய போக்குக்கு ஒத்து வராது என்று முடிவு செய்த அவர், அவை பற்றிய சிந்தனைக்கே இடம் தருவதில்லை. யாராவது அந்தப் பேச்சை எடுத்தாலும், “அதெல்லாம் எதுக்கு…? ம்… அப்புறம்?” என்று பேச்சை மாற்றி விடுவார். 

விடுதலைப் போராட்டங்களில் முழு மூச்சுடன் ஈடுபடுவதற்கு முன்னால் சில நாட்கள் அவர் இன்ஷூரென்ஸ் ஏஜண்டாயிருந்தார். ஆனால், அந்த வேலையை அவர் வெகு சீக்கிரத்திலேயே விட்டு விட்டார். பணம் சம்பாதிப்பதில் அவருக்கு நாட்ட மில்லை. ‘அரசியல் வேலையே தம்முடைய வேலை, தேச நலனே தம்முடைய நலன்’ என்று கருதி ஒவ்வொரு விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறைக்குச் செல்வதையே தொழிலாகக் கொண்டார். 

காந்திஜியின். ஒத்துழையாமை இயக்கத்தின் போது இந்த நாட்டில் பல லட்சம் மக்கள் சிறைக்குச் செல்லத் தயாராயிருந்தார்கள். அப்போது சிறைச்சாலைகள் நிரம்பிப் போதுமான டமின்மையால் பிரிட்டிஷ் சர்க்கார் பலரைக் கைது செய்யா மலே விட்டு வைத்திருந்தது. இந்த நிலையில் சிறைக்குப் போகவும், விடுதலை இயக்கத்தில் ஈடுபடவும் காங்கிரஸ் தொண்டர்கள் நாடெங்கும் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் காமராஜும் ஒருவர். இந்தச் சமயம் பார்த்துக் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி விடவே, பலர் உற்சாகம் இழந்து விட்டார்கள். ராமநாதபுரம் ஜில்லாவில் இரண்டே பேர்தான் கைதானார்கள். காமராஜ் கைதாகவில்லை. 

போராட்டம் நின்று விட்டதால் ஊழியர்கள் சோர் வடைந்து விடக் கூடாது என்பதற்காக அங்கங்கே கள்ளுக் கடை மறியல் செய்யத் தொடங்கினார்கள். காந்திஜியின் நிர்மாணத் திட்டப் பணிகளில் அதுவும் ஒன்று. இந்த மறியல் வேலையினால் தொண்டர்களுக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. தமிழ் நாட்டில் மதுரை நகரந்தான் கள்ளுக்கடை மறியலில் முன்னணியில் நின்றது. காங்கிரஸ்காரர்களை மறி யல் செய்யும் இடங்களுக்குச் சென்று கைது செய்வதைவிட ஒரே இடத்தில் அவர்கள் எல்லாரையும் மொத்தமாக மடக்கிப் பிடித்துக் கொண்டு போய் விடுவது நல்லது என்று எண்ணினார்கள் மதுரைப் போலீசார். இதற்காகக் காங்கிரஸ் அலுவலகத்துக்கே சென்று அங்கிருந்த காங்கிரஸ்காரர்கள் அத்தனை பேரையும் கைது செய்து லாரியில் ஏற்றிக் கொண்டு போனார்கள். போலீசார் போன சமயத்தில் காமராஜ் காங்கிரஸ் அலுவலகத்தில் இல்லை. சில நிமிடங்களுக்கு முன்னால்தான் அவர் வெளியே போய் இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது எல்லாக் காங்கிரஸ்காரர்களையும் போலீசார் அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்பதை அறிந்து அவர் மிகவும் வருத்தப்பட்டார். 

பிறகு, ‘நாகபுரிக் கொடிப் போராட்டம்’ என்ற பெயரில் ஓர் இயக்கம் நடைபெற்றது. அங்கே ஒரு குறிப்பிட்ட தெரு வழியாகத் தேசியக் கொடியைப் பிடித்துச் செல்லக் கூடாது என்று போலீசார் தடை உத்தரவு போட்டதன் விளைவாக எழுந்த போராட்டம் இது. 

ஒத்துழையாமை இயக்கம் நின்று போன ஏக்கத்தில் சோர்வடைந்து போயிருந்த காங்கிரஸ்காரர்களுக்கும், காமராஜுக்கும் நாகபுரிக் கொடிப் போர் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத் தையும் உண்டாக்கியது. நாட்டின் எல்லா இடங்களிலிருந்து தொண்டர்கள் நாகபுரியை நோக்கிப் புறப்பட்டார்கள். காமராஜ் சும்மா இருப்பாரா? பலரைச் சேர்த்து நாகபுரிக்கு அனுப்பி வைத்தார். அடுத்தாற் போல் இன்னொரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு தாமும் புறப்பட திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். இதற்குள் நாகபுரிப் போராட்டத்தில் சமரசம் ஏற்பட்டு விட்டதால் அப்போதும் காமராஜுக்குச் சிறை செல்லும் வாய்ப்பு கிட்டாமலே போய் விட்டது. 

பின்னர், ஜெனரல் அவாரி என்ற தேசபக்தர் நாகபுரியில் வாள் போராட்டம் ஒன்றை நடத்தினார். தெருவில் வாள் எடுத்துப் போக அனுமதி வேண்டும் என்று சட்டத்தை மீறுவதே அதன் நோக்கம். அதே மாதிரிப் போராட்டம் ஒன்றை மதுரை யிலும் நடத்த வேண்டுமென்று காங்கிரஸார் தீர்மானித்தார்கள். 1927-ஆம் ஆண்டில் தேசபக்தர் சோமயஜுலு தலைமையில் பட்டாக் கத்திகள் தாங்கி ஊர்வலமாகச் சென்றார்கள். இந்த இயக்கத்திற்குக் காமராஜ்தான் ஐந்து பட்டாக் கத்திகள் தயார் செய்து கொடுத்தார். இப்போதும் போலீசார் இவர்களில் யாரையுமே கைது செய்யாமல் விட்டு விட்டார்கள். காரணம், அப்போதைய சட்ட மந்திரியான சி.பி. ராமசாமி ஐயர் செய்த சூழ்ச்சிதான். மதுரையில் யாரையும் கைது செய்ய அவர் விரும்பவில்லை. கைது செய்தால் அந்த இயக்கத்துக்கு வலு ஏற்பட்டு விடும் என்பதற்காக அவர், ‘தெருவில் பட்டாக் கத்தி எடுத்துச் செல்ல மலபாரில் மட்டும்தான் அனுமதி பெற வேண்டும். மற்ற இடங்களுக்கு அனுமதி தேவையில்லை’ என்று கூறி விட்டார். அதனால் அந்த இயக்கம் ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துப் போயிற்று. 

இதற்கு அடுத்த போராட்டம் சென்னையில் நடந்தது. மவுண்ட்ரோடிலுள்ள நீல் என்ற வெள்ளைக்காரன் சிலையை அப் புறப்படுத்த வேண்டும் என்பதற்காக நடந்த சத்தியாக்கிரகப் போராட்டம் அது. ‘1857-ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய்க் கலகம் என்று சொல்லப்பட்ட முதலாவது சுதந்திர யுத்தத்தில் ஜெனரல் நீல் என்பவன் இந்தியரைச் சித்திரவதை செய்தான். அந்தக் கொடியவனுக்கு மவுண்ட்ரோடில் சிலை ஒரு கேடா? அந்தச் சிலையை அப்புறப்படுத்திவிட வேண்டும்’ என்று கொதித்து எழுந்தார்கள் பலர். அதற்காகச் சத்தியாக்கிரகம் செய்தவர்களில் பெரும்பாலோர் தண்டனை பெற்றுச் சிறைக் கும் போய் விட்டார்கள். எஞ்சியிருந்தவர்கள் காமராஜும் இன்னும் சிலருந்தான். காமராஜ் அந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்த விரும்பினார். மகாத்மா காந்திஜியிடம் சென்று விஷயத்தை விளக்கினார். மகாத்மாவும் ‘நீலன் சிலையை அப்புறப்படுத்த வேண்டியதுதான்’ என்று கூறி, அந்த இயக்கத்துக்குத் தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து விட்டார். ஆயினும் ‘நீலன் சிலை ஒழிப்பு இயக்கம்’ தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதே சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்கும் வேலை வந்து விட்டதால், அந்தச் சிலை எதிர்ப்பு இயக்கத்தைக் கொஞ்சம் தள்ளிப் போடும்படி ஆகி விட்டது. இவ்வளவு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டும் சிறைக்குப் போகாமலே தப்பித்துக் கொண்டிருந்த காமராஜ் கடைசியாக 1930- ஆம் ஆண்டில்தான் சிறைத் தண்டனை பெற்றார். 

அத்தியாயம் – 18

காந்தி மகான் 1930 ஏப்ரலில் உப்பு சத்தியாக்கிரகம் செய்வதற்காகத் தண்டி யாத்திரை புறப்பட்டார். காந்திஜியைப் போலவே ராஜாஜியும் திருச்சியிலிருந்து சில சத்தியாகிரகிகளை அழைத்துக் கொண்டு வேதாரண்யத்துக்கு உப்பு காய்ச்சப் புறப்பட்டார். நாடெங்கும் உப்பு சத்தியாக்கிரக இயக்கம் பெரும் எழுச்சியை உண்டாக்கியது. ஆயிரமாயிரம் தேசபக்தர்கள் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை புகுந்தார்கள். 

காமராஜும் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். அதுவரை பல போராட்டங்கள், இயக்கங்கள், கிளர்ச்சிகளில் தீவிரப் பங்கு கொண்டு வேலை செய்து வந்த காமராஜைச் சும்மா விட்டு வைத்திருந்த போலீசார் அவர் உப்பு சத்தியாக் கிரகம் செய்த உடனே கைது செய்து இரண்டு வருடச் சிறைத் தண்டனையும் வாங்கிக் கொடுத்து விட்டார்கள். 

காமராஜ் சிறைக்குச் செல்வதில் அவருடைய குடும்பத்தினருக்குத் துளியும் விருப்பமில்லை. ‘காங்கிரஸ் வேலைகளில் ஈடுபட வேண்டாம். சிறைக்குப் போக நேரிடும்’ என்று அவர்கள் அவரை ஏற்கெனவே எச்சரித்திருந்தார்கள். அவர்கள் பேச்செல்லாம் காமராஜ் காதிலேயே விழவில்லை. 

‘உப்பு சத்தியாக்கிரகம் செய்து காமராஜ் இரண்டு வருடச் சிறை வாசம் பெற்று விட்டார்’ என்ற செய்தியைக் கேட்டதும் அவருடைய பாட்டி திருமதி பார்வதி அம்மாள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். அந்த அதிர்ச்சி காரணமாக அவர் தம் சுய நினைவை இழந்ததுடன் பேசும் சக்தியையும் இழந்து விட்டார். 

பேரன் காமராஜிடம் பார்வதி அம்மாள் வைத்திருந்த அளவற்ற அன்பே இதற்குக் காரணம். தமக்குப் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்து விட்டதால், குடும்ப வழி அற்றுவிடக் கூடாதே என்பதற்காகக் காமராஜின் தந்தையை அவர் தத்து எடுத்துக் கொண்டார். தம்முடைய தத்துப் பிள்ளைக்குப் பிறந்த அருமைச் செல்வன் திருமணம் செய்து கொள்வான், குடும்பம் பெருகும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை சிதறும் வகையில் காமராஜ் சிறை சென்ற அதிர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ; மூர்ச்சையுற் றுப் படுத்த படுக்கையாகி விட்டார். 

காமராஜுக்கு இந்தச் செய்தியைச் சொல்வதற்காக அவருடைய உறவினர்களான துரைசாமி நாடாரும், தனுஷ்கோடி நாடாரும் பெல்லாரி சிறைக்குச் சென்றார்கள்.. அவர்களைக் கண்டதும், “எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டார் காமராஜ். 

“உன்னைப் பாட்டியார் பார்க்க வேண்டுமாம். படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். பரோலில் அழைத்துச் செல்ல வந்திருக்கி றோம். அதற்கான உத்தரவுகூட வாங்கி விட்டோம்” என்றார்கள் வந்தவர்கள். 

“நான் வர முடியாது. பரோலில் சென்று வருபவர்கள் யோக்கியப் பொறுப்பானவர்கள் என்ற நற்சாட்சிப் பத்திரம் கேட்பார்கள் சிறை அதிகாரிகள். அம்மாதிரி செய்வது என் கொள்கைக்கு விரோதமானது” என்று கூறி, வந்தவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார் காமராஜ். 

பின்னர், ஓராண்டுக் காலம் கழித்து காந்தி இர்வின் உடன்படிக்கை ஏற்பட்டதால் சிறையிலிருந்தவர் களெல்லாம் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களுடன் காமராஜும் வெளியே வந்தார். விடுதலை பெற்றதும் பாட்டியைப் பார்க்க விருது நகருக்கு விரைந்தார். பேரனைக் காண அதுவரை உயிரை வைத்துக் கொண்டிருந்த பார்வதி அம்மையார் காமராஜைக் கண்ட பிறகே கண்களை மூடினார். 

1931-இல் மகாத்மா காந்தி வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருக்கும், பிரிட்டிஷ் சர்க்காருக்கும் அங்கு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தைகளால் பலன் எதுவும் கிட்டவில்லை. அதுமட்டுமல்ல. மகாத்மாஜி லண்டனில் இருந்த போதே காங்கிரசை நசுக்கும் வேலைகளில் இங்குள்ள பிரிட்டிஷ் சர்க்கார் ஈடுபட்டு விட்டது. காந்திஜி திரும்பி வந்ததும் காங்கிரஸ்காரர்களைப் பிரிட்டிஷார் சிறையில் தள்ளினார்கள். காமராஜ் மீது ஜாமீன் வழக்குத் தொடுத்தார்கள். காங்கிரஸ்காரர்கள் ஜாமீன் கொடுப்பது. வழக்கமில்லையாகையால் காமராஜ் அதற்கு மறுத்து விட்டார். இதனால் ஒரு வருட காலம் அவர் சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது. 

காமராஜைக் கைது செய்து வேலூர்ச் சிறைக்குக் கொண்டு போனார்கள். அக்காலத்தில் வேலூரிலும், கடலூரிலும்தான் அரசியல் கைதிகளை வைத்திருப்பது வழக்கம். பயங்கரச் சதி வழக்குகளில் ஈடுபட்ட சில கைதிகளும் இந்தப் பந்தோபஸ்து கைதிகளுடன் அப்போது சேர்த்து வைக்கப் பட்டிருந்தார்கள். இதனால் அகில இந்தியாவிலிருந்தும் வந்திருந்த அரசியல் கைதிகளுடன் பழகும் வாய்ப்பு எல்லாக் கைதிகளுக்கும் கிட்டியது. இந்தக் கூட்டுச் சிறை வாழ்க்கையின் பயனாக பின்னால் இந்தியா வெங்கும் பல சதியாலோசனை வழக்குகள் தோன்றின. 

வேலூர்ச் சிறையில் அச்சமயம் பகத்சிங் வழக்கில் சம்பந்தப்பட்ட ஜயதேவ் கப்பூர், கமல்நாத் திவாரி முதலியவர்கள் இருந்தார்கள். சிறைச்சாலையில் எல்லாருடனும் சுமுக மாகப் பழகும் சுபாவம் காமராஜுக்கு உண்டு. அரசியல் கொள்கையில் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுடன் கலந்து பழகக் காமராஜ் தயங்க மாட்டார். 

இதன் விளைவாக 1933-இல் ‘சென்னைச் சதியாலோசனை வழக்கு’ என்ற ஒன்று ஏற்பட்டது. அதற்கு ‘சர்வ மாகாணச் சதியாலோசனை’ என்று பெயரிட்டார்கள். வேலூர்ச் சிறையில் இருந்த எல்லா மாகாணத் தலைவர்களையும் அதில் சேர்த்தார்கள். 

அந்த வழக்கின் விசாரணையின் போது ‘சதியாலோசனைக் காரர்களுக்கு வேண்டிய ஆயுதங்களுக்குக் காமராஜ் பணம் கொடுத்தார்’ என்று அப்ரூவர் சொன்னார். ஆனாலும் போதிய ருசு இல்லை என்பதால் காமராஜைக் கைது செய்யவில்லை. 

‘வேறு எந்த வழியாகச் சிறைக்குப் போகலாம்? என்ன கிளர்ச்சி செய்யலாம்?’ என்று காமராஜ் யோசித்துக் கொண்டிருந்தபோது விருதுநகர்ப் போலீஸார் அவரைக் கைதுசெய்து கொண்டு போய் ஒரு வழக்கைத் தொடுத்தார்கள். ‘விருது நகர் தபாலாபீஸ் மீதும், ஸ்ரீவில்லிபுத்தூர்ப் போலீஸ் ஸ்டேஷன் மீதும் காமராஜ் வெடிகுண்டை வீசினார்’ என்பது அந்த வழக்கு. மதுரை தேச பக்தரும் வக்கீலுமான திரு.ஜார்ஜ் ஜோசப் எதிரிகளுக்காக வழக்கை நடத்திப் போலீஸ் ஜோடனை களைத் தகர்த்தெறிந்தார். இதன் பயனாகக் காமராஜ் அந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்றார். 

அந்தக் காலத்தில் காமராஜுக்கு உற்ற துணைவர்களா யிருந்து உதவி செய்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் முத்தசாமி; மற்றவர் தங்கப்ப நாடார். முத்துசாமியும் காமராஜும் இரட்டையர் போல் வாழ்ந்து வந்தார்கள். காங்கிரஸ் வேலை களை இருவரும் சேர்ந்தே செய்தார்கள். ஒருவரை ஒருவர் பிரிந்து அவர்கள் இருந்ததேயில்லை. தங்கப்ப நாடார் காமராஜின் பொது வேலைகளுக்கு வேண்டிய பண உதவிகளைச் செய்து வந்தார்; மிளகாய் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. ஆனாலும் காலணா செலவழிப்பதாயிருந்தாலும் கணக்குப் பார்த்தே செலவழிப்பார். ஒரு சமயம் அவர் சந்தைக்குப் போயிருந்தார். வீடு திரும்ப வண்டி வாடகை கொடுக்க வேண்டாமென்பதற் காக அவர் கொளுத்தும் வெயிலில் நடந்தே வருவதென்று முடிவு செய்தார். எதிர்பாராத விதமாக, வரும் வழியில் வெயில் தாங்காமல் அவர் கீழே விழுந்து இறந்து விட்டார். அவ்வளவு சிக்கனமானவர் காமராஜின் பொது வேலைகளுக்கு மட்டும் தாராளமாகப் பணங் கொடுத்து வந்தது அவருடைய தேச பக்தியை மட்டும் காட்டுவதாயில்லை: காமராஜ் அவர் கொண்டிருந்த அன்பையும் காட்டுவதாயிருந்தது. 

1942 இயக்கத்தில் கைதான காமராஜை வட நாட்டுச் சிறைச்சாலைக்கு கொண்டு போகப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட தங்கப்ப நாடார் சென்னைக்கு விரைந்து சென்று ஒரு நண்பரிடம் ஐம்பது ரூபாயைக் கொடுத்து, “இதை எப்படியாவது காமராஜிடம் சேர்த்து விடுங்கள். போகிற இடங்களில் எப்படி இருக்குமோ?” என்றாராம். 

– தொடரும்…

– சிவகாமியின் செல்வன், சாவியில் தொடராக வெளிவந்த காமராஜரின் அரசியல் வாழ்க்கை, நான்காம் பதிப்பு: ஜனவரி 1990, மோனா பப்பிளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *