சிறுத்தைப் புலியின் கழுத்தில் கறை எப்படி வந்தது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 1,144 
 
 

(தென்னாப்பிரிக்கா நாட்டுக் கதை)

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோம்பேறி வேட்டைக்காரன் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான். மிருகங்களை வேட்டையாடும் பொருட்டு காட்டுப் பகுதியில் அலைந்து திரிவதை சிரமமாகக் கருதினான்.

அன்று, அவனுக்கெதிரே தெரிந்த புல்வெளியில் ஒரு சிறு மான் மேய்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். ஆனால் பழம் நழுவிப் பாலில்விழுந்த நல்ல வாய்ப்பைப் பற்றி அவன் சிறிதும் கவலைப்படவேயில்லை.

அவ்வளவு சோம்பேறி!

சற்று தொலைவில் சில மான்கள் மந்தையாய் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், ‘நோகாமல் நோம்பி கும்பிடும்ஆசாமி’க்கு எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்கிற நப்பாசை.

அப்பொழுது, அந்தப்பக்கம் ஒரு சிறுத்தைப்புலி உணவு தேடியலைவதைப்-பார்த்தான்.

மான்கள் மேய்வதைப் பார்த்த சிறுத்தைப்புலி மெல்ல அவைகளை நோக்கி நகர ஆரம்பித்தது. அவ்வேளையில், மந்தையைவிட்டுப் பிரிந்து தன்னந்தனியாக ஒரு மான் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த புலிக்கு அதன் நீண்ட கால்களைக் கவ்விப் பிடித்து, அமுக்கிக் கொல்வதில் சிரமம் ஏற்படவில்லை. சிறுத்தைக்கு மான் இரையாகிப்போனது.

அந்த மானையிழுத்துக்கொண்டு போகிற சிறுத்தையைப் பார்த்துக்கொண்டிருந்தான் வேட்டைக்காரன். சற்று மறைவான புதருக்குப் பின்னால், மூன்று அழகான சிறுத்தைக் குட்டிகள், தாய்ப்புலியை எதிர்பார்த்துக் காத்திருந்தன. அதைப் பார்த்த வேட்டைக்காரனுக்குப் பொறாமையாக இருந்தது. தனக்கும் இப்படி ஒரு ’வேட்டைக்க்காரன்’ இருந்தால் கால்மேல் கால்போட்டுக்கொண்டு சாப்பிடலாமே! எந்த வேட்டைக்கும் போகாகலேயே மேசை மீது உணவு வந்துவிடும்!

அவனுக்குள் ஒரு குரூரமான எண்ணம் தோன்றியது. ஒரு குட்டியைத் தூக்கி வந்து, தனக்கு வேட்டையாடும்படி பழக்கினால்…எப்படியும், மாலையில் தாய்ப்புலி குட்டிகளை விட்டு பிரிந்து அருகே நீர்நிலையை நோக்கிச் செல்வது உறுதி. அதுதான் நல்லதருணம். உள்ளுக்குள் குரூரச் சிரிப்பு!

மாலை நேரம் வந்தது. வேட்டைக்காரன் சமயம் பார்த்து, சிறுத்தைப்புலியிருந்த புதர்ப்பகுதியோரம் மறைந்திருந்து கவனித்தான். அவன் நினைத்தது போலவே. தாய்ப்புலி மூன்று குட்டிகளையும் புதர்மறைவில் ஒளித்து வைத்துவிட்டு, தண்ணீர் உள்ள பகுதிக்குச் சென்றது. இவன் உடனே மூன்று புலிக்குட்டிகளும் பதுங்கியிருந்த இடத்துக்குச் சென்று ஒரு சிறிய புலிக்குட்டியைக் கையில் எடுத்துக் கொண்டான். அது மிகவும் நடுங்கி கீழே துள்ளி விழப் பார்த்தது. பின்னர் அவன் என்ன நினைத்தானொ தெரியவில்லை, மூன்று குட்டிகளையும் அபகரித்துக் கொண்டான். ஒன்றைத் திருடுவதைவிட மூன்றையும் எடுத்துக்கொண்டால் நல்லதுதானே என்று அவன் மனம் எண்ணியது.

சிறிது நேரத்தில், தாய்ச்சிறுத்தைப்புலி வந்து பார்த்துத் திடுக்கிட்டது. தன் மூன்று குழந்தைகளும் காணாமல் போய்விட்டதால், வீறிட்டு அழுதது. இரவு பூராவும் பீறிட்டு அழுதது. அடுத்த நாளும் அதன் துக்கம் தீரவில்லை. அழுது அழுது வடிந்த கண்ணீர் அதன் கழுத்துப் பகுதியில் கருப்புநிறக் கறைகளை உண்டாக்கியது. அதன் குமுறலும், ஓலமும் அந்தப் பக்கம் வந்த ஒரு முதியவரின் செவிகளில் ஒலித்தது. அவர் மிருகங்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்கிற,சாதுர்யமான மனிதர்.

அந்த மனிதர் சிறுத்தைப் புலிக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்டார். இதற்கு நிச்சயமாக அந்த மோசமான வேட்டைக்காரன்தான் காரணம் என்கிற முடிவுக்கு வந்தார். அவன் ஒருசோம்பேறி என்பது மட்டுமல்ல. பழங்குடி மக்களின் பாரம்பரியத்தை மீறிய கயவன் என்பதால், மிகவும் சினங்கொண்டார். ஒவ்வொரு வேட்டைக்காரனும் தன் சொந்த ஆற்றலால் வேட்டையாட வேண்டுமென்பதே மரபாயிருந்தது. இது போன்ற ஈனச்செயல்களை அந்தக் காட்டில் எவரும் அனுமதிப்பதில்லை.

வயதான கிராமத்துக்குச் சென்று, நடந்த விபரங்களைத் தலைவர்களிடம் சொன்னார். அந்த கிராமமே கொதித்தெழுந்தது.

வெகுண்டெழுந்த மக்கள், சோம்பேறி வேட்டைக்காரனைக் கண்டுபிடித்து, ஊரைவிட்டே விரட்டியடித்தது. வயதான அந்த மனிதர் மூன்று புலிக்குட்டிகளையும் எடுத்து, திரும்பவும் தாய்ச்சிறுத்தைப் புலியிடமே கொண்டு போய் சேர்த்தார். ஆனால் நீண்ட நேரம் அழுது அழுது வருந்திய அந்த தாய்புலியின் முகத்தில் மாறாத வடு தோன்றியிருந்தது.

இன்றளவும் வேட்டைக்காரர்கள் தாய்ப்புலியையும், அதன் முகத்தில்இருக்கும் கருப்புக் கறையையும் பார்த்தால் ஒன்றை மறக்கமாட்டார்கள்.

வேட்டையாடும்போது என்றுமே மரபை மீறக்கூடாது என்பதுதான் அது.

சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *