சின்னத் தேவதைகள்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாலையின் தகிப்பு அந்தப் பாழ்வெளியெங்கும் பரவியிருந்தது. பசுமையின் களை அழிந்துபோன அந்த வெட்டையைப் பார்த்தபடி, கிருஷ்ணி இருந்தாள். அவளது பார்வை நெடுந்தூரம்வரை நிலைத்திருந்தது.
அவளது உடல் சிதைந்து, கரைந்து, கோலங்கெட்டுக் கிடந்தது. கையும் காலும் உள்வளைவு கொள்ள, வயிறு பெருத்து, பாண்டு நோயாளிபோல அவள் காணப்பட்டாள். நீர்ப்பசை உலர்ந்த அவளது உடலில், ஈரக்கசிவுடன் இருந்தவை அவளது கண்கள் மட்டும்தான். அந்தக் கண்களும் மாற்றம் ஏதும் இல்லாமல், முன்னர்போல பெரிதாயும் பரிவைச் சொரிவதாயும் இருந்தன.
அவள் முன்பாக விரிந்து கிடந்த அந்தப் பெருவெளியில், முகை கருகிப்போன உவர் நிலத்துக்கே உரிய – கோரைப் புற்களும் சிறு அறுகும், வறள் முள்ளிச் செடிகளுமே இருந்தன. தூரத்தில் சதுரக் கள்ளியும் சப்பாத்துக் கள்ளியும் வளர்ச்சி குன்றி, பச்சையம் அழிந்து, செத்தலாய்ச் சரிந்து கிடந்தன. படரும் கொடிகளும் சிறு செடிகளும் கூட, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆதாரம் அழிந்த நிலையில் காணப்பட்டன.
அந்த வெளியில் கிழக்குப் பக்கமாக, சாம்பல் மேடொன்று இருந்தது. அந்தச் சாம்பல் மேடுதான் ஊரின் சுடுகாடு.
கிராமத்தில் துர்மரணங்களும் பட்டினிச் சாவும் மலிந்துபோனதால், சுடுகாட்டில் பிணங்கள் குவியலாக எரிந்தன. தீயில் கருகும் பிணங்களின் வாடை ஊர்முழுதும் கவிந்திருந்தது.
சுடுகாட்டுக்குச் சற்றுத் தூரத்தில், ஒரு வெட்டுக்குளம். அது தூர்ந்துபோன நிலையில் நீரில்லாது வரண்டு கிடந்தது. குளத்தின் வடக்குப் பக்கம் ஏகாலிகளின் படித்துறை இருந்தது. துணி துவைக்கும் கற்களும் சில அங்கு கிடந்தன.
குளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள வயல்கள் கலடுதட்டி, வரம்பழிந்த நிலையில் கிடந்தன. வயல்களுக்கு அப்பால் ஒரு ஒற்றையடிப்பாதை ஊரைப் பார்த்து வந்துகொண்டிருந்தது.
அந்த வெளியின் மேற்குச் சாய்வில் ஊர்மனை இருந்தது. கிருஷ்ணியின் குடிசை ஊரைவிட்டுச் சற்று விலகி, சனசந்தடி இல்லாமல் இருந்தது.
கிருஷ்ணி இப்பொழுதெல்லாம் பாடசாலைக்குப் போவதில்லை. அவளது யசோவின் அகால மரணத்தின் பின் படிப்பில் அவள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அந்த மரணமும் அதனடியான துயரமும் அவளை ஆழமாகவே பாதித்துவிட்டது. பாடசாலைகூட, பல நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டுவிட்டது. பாடசாலை இருந்த இடத்தில் இப்பொழுது மண்கும்பங்களும் கற்குவியல்களும் சில அஸ்பெஸ்ரோஸ் தகடுகளும் மட்டுமே சாட்சியமாய்க் கிடந்தன.
விதானையார்வீடு, சங்கக்கடை, கிராம சபைக்கட்டிடம், அதற்குக் கிழக்காக இருந்த சில மண்குடிசைகள் என யாவும் இடிபாடுகளுடன் கிடந்தன. ஊரின் குப்பை எல்லாமே இங்கு கொட்டப்பட்டதுபோல, அது ஒரு குப்பை மேடுபோலவும் காட்சியளித்தது.
முத்துமாரியம்மன் கோயில் இருந்த இடத்தில், பெரியபுற்று ஒன்று காணப்பட்டது. அப்புற்றில் நாகபாம்புகள் வளைய வருவதாக ஊர்மக்கள் கதைத்துக்கொண்டார்கள். ஐந்துதலை நாகம் கூட உண்டு என்ற பேச்சும் அடிபட்டது. கிருஷ்ணி கூட, வெள்ளி அரைஞாண் கொடிபோல ஒரு பாம்பைக் கண்டிருக்கிறாள். அது படம் விரித்து ஆடியதையும் பார்த்திருக்கிறாள். அப்பாம்பு வேறுயாருமல்ல, கோயில்பூசகர் மூர்த்திஐயர்தான் என்ற கதையும் ஊரில் உண்டு.
ஊர் மக்களின் பிரயாசை முழுவதும் இப்பொழுது ஒருமுகப் பட் ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளையாவது கொதிக்கும் தமது கும்பியை நிரப்பவேண்டும் என்பதுதான் அவர்களது கவனமாகும்.
கோரைக்கிழங்கு, முள்ளிவேர் அவற்றுடன் கரப்பான் பூ ச்சிகளையும் புற்று எலிகளையும் அவர்கள் உணவாகக் கொண்டார்கள். அயற் கிராமங்களில் உள்ள தோட்டங்களில் திருடிவந்த: சாமி, குரக்கன், எள்ளு, மரவள்ளி போன்றவற்றையும் அவர்கள் ரகசியமாகப் பகிர்ந்துகொள்ளவும் செய்தார்கள்.
எல்லா விஷயங்களிலும் துல்லியமான புரிதல் உடைய கிருஷ்ணி, ஊரில் நடக்கும் துர்ச்சம்பவங்களுக்கும் அழிவுகளுக்கும் யசோவின் மரணமே காரணம் என்பதைப் புரிந்து வைத்திருந்தாள். கிணற்றடியில் முகம் அலம்பிவிட்டுத் திரும்பிய கிருஷ்ணி, ஏதோ ஓர் உள்ளுணர்வால் உந்தப்பட்டு, ஊரைப் பார்த்து வந்து கொண்டிருந்த அந்த ஒற்றையடிப் பாதையைப் பார்த்தாள். பாதையில் சிறு புள்ளியாய் ஓர் அசைவு…
‘யாரது… யார் வருகிறார்கள்?’ குழம்பிய நிலையிலும் ஏதோ தெளிவு பெற்றவள் போலத் தனக்குள்ளாகவே பேசிக் கொண்டாள்.
‘ஊருக்கு நல்லது நடக்கப்போகிறதா..? சூனியத்துள் இருந்து… இன்மையில் இருந்து வரும் அந்தத் தூதுவன் யார்..? எத்தகைய தூது மொழியுடன் வருகிறான்’
நினைவுகளோடு விரைந்து வந்தவள் பாதையைத் தொட்டபடி நின்று பார்த்தாள்.
அந்தப் பாதையின் வழியாக, அமானுஷ்யத் தோற்றமுடைய முதுகிழவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். காலத்தின் தொடர்ச்சியை உறுதி செய்பவன்போல அவன் இருந்தான். அவனது பராயம் பல நூறைத் தாண்டியிருக்கவேண்டும். இன்னும் சற்றுக் கூடுதலாகவும் இருக்கலாம்.
அவனது அங்கங்கள் கலைத்துப் போடப்பட்டு, மீளவும் பொருத்தப்பட்டவாகில் இருந்தன. அவனது தலைப்பாகம் கீழாக, பாதங்கள் இருக்கவேண்டிய இடத்திலும் கால்கள் மேலாக, தலை இருக்கவேண்டிய இடத்திலும் இருந்தன. கண்களும், மூக்கும், வாயும் முகம் அழிந்த நிலையில் – வயிற்றில் முளைத்திருந்தன. காதுகள், காற்பெருவிரல்களோடு இருந்தன; அவை பெரிதாக, யானையின் காதுகளை ஒத்திருந்தன.
கிருஷ்ணியை நெருங்கிய அந்தக் கிழவன் அவளைப் பார்த்து உரத்த குரலில் ஏதேதோ பேசினான்:
“ஏய்.. சிறு பெண்ணே உன்னைத்தான்..! என்ன… இங்கு இப்படித் தியானத்தில் ஆழ்ந்துவிட்டாய்…உனக்குச் செய்தி தெரியாதா? ஊரே கொட்டுதோட்டப் பக்கம் விரைந்து கூடுகிறது. போ… போய் அங்கு என்ன நடக்கிறது என்று பார்…”
கிழவன் பேசியபோது அவனது நாக்கு வெளியே துருத்திக் கொள்வதையும் நுனி நாக்கில் நெருப்புத் தணல்துண்டுகள் சொரிவதையும் கிருஷ்ணி கவனித்தாள். அந்த நெருப்புத் தணல்கள் தரையில் விழுந்த கணத்திலேயே பனிக்கட்டிகளாக உருமாறி உறைந்தன. பின்னர் சிறுசிறு நீர்த்துளிகளாய் மாறின. சிறு துளிகள் புணர்ந்து சிறு அருவியாய் விம்மியது. அருவியின் இரு மருங்கும் தழையும் பசும் புற்கள். புற்கள் திட்டுத் திட்டாக இருந்தபோதும், பச்சைப் பட்டு மாலைபோல அழகாய் இருந்தது.
கிழவனை வழிமறித்த கிருஷ்ணி கூவினாள்:
“முதியோனே ஊருக்கு நல்லது நடக்கப் போகிறதா… இது மரணங்கள் மலிந்த மண். வறுமையும் பிணியும் எங்களைத் தொடர்ந்து தொல்லை தருகிறது. அவற்றில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்குமா…? நில். நின்று நிதானமாய் எனக்குப் பதில் தந்து போ…”
கிருஷ்ணியின் குரலைக் கேட்டதும் கிழவன் சற்றுக் கோபமாகவே திரும்பினான். அவனது கண்கள் தீச்சுடரை உமிழ்ந்தன.
ஒரு கணம் திகைத்துப்போன கிருஷ்ணி, வாய்பிளந்த நிலையில் அவன் போன திசையையே பார்த்தபடி நின்றாள். கிழவனின் உருவம் அழிந்து, வளியிடை கரைந்து போனது. ‘இதென்ன உருவெளித் தோற்றமா… காற்றில் கரைந்து போன மாயம்தான் என்ன..? அவனை, அந்தக் கிழவனை ஓடியோடித் தேடிப்பார்த்தாள். கிழவனின் குரல் மட்டும் அரூபமாய் ஒலித்தது:
“பெண்ணே! என்னைத் தேடுவதை விட்டுவிடு. அது வீண் முயற்சி. கொட்டு தோட்டப் பக்கம் போ. போனால் பயனடைவாய்… அங்கு, உனது பிரியை யசோதாவையும் காணலாம்.”
“யசோவா… அது… அது எப்படிச் சாத்தியமாகும். இப்பொழுது அவள் கடவுளின் குழந்தையல்லவா… அவள் எங்களைப் பிரிந்து சென்று எத்தனை நாட்களாகி விட்டன. மீளவும் அவளை எப்படி..”
கிருஷ்ணி கண்ணீர் மல்க விம்மினாள்.
“அவள் கடவுளின் குழந்தைதான்…..அவளது வழிகாட்டலில் நீ நட… அவளது அகால மரணத்தால் ஊருக்கு வந்த அபவாதம் நீங்கப்போகிறது. அதற்குரிய நேரம் வந்துவிட்டது. அவளது வசீகர ஆளுகைக்கும் இரட்சிப்புக்கும் உரியவள் நீ…. உன்வழி, ஊரில் எல்லாமே நல்லதாய் நடக்கப்போகிறது.”
மந்திரவசப்பட்டவள்போல் எழுந்த கிருஷ்ணி, கொட்டுதோட்டப்பக்கம் விரைந்து நடந்தாள்.
தோட்டத்தில் ஊரே கூடியிருந்தது. அது அவளுக்கு அதிசயமாக இருந்தது.
தோட்டத்தின் மையத்தைத் தொட்டபடி, சனக்கும்பல் நின்றது. கும்பலை விலத்தி உள்நுழைந்த கிருஷ்ணி, புதிதாய் தளிர் எறிந்து தழைத்திருந்த பசுஞ்செடி ஒன்றைக் கண்டாள். அதன் குளிர்ச்சியும் தளதளப்பும் சூழலில் வெம்மையைப் பெரிதும் தணித்தது.
அந்தச் செடியின் பக்கமாக நின்ற அமலன் சேர் ஏதோ சொன்னார்:
“இது.. இந்த மண் கண்டிராத செடி… குழப்பம் ஏதுமில்லை… இது முசுக்கட்டைச் செடிதான். பட்டுப்பூச்சிகள் உணவாகக் கொள்ளும் இந்தச் செடி. இங்கு எப்படி… இந்த நீர்க்கசிவே இல்லாத பாலையில்…. இதன் தளிர்கள் கருகிவிடாதோ…”
“முசுக்கட்டையா..?”
அமலன் சேருக்குப் பக்கமாக நின்ற தயாரீச்சர் கேட்டா. தயாரீச்சரை நெருங்கி வந்த கிருஷ்ணி, அவவைப் பார்த்துச் சிரித்தாள்.
“அட நம்ம கிருஷ்ணி…”
குதூகலித்த ரீச்சர், கிருஷ்ணியை அன்புடன் அணைத்துக் கொண்டாள்.
சனம் பார்த்திருக்க, சிற்றிலை சில விட்டு, துளிர்த்த முசுக் கட்டை கிசு கிசு என வளர்ந்தது. செடியைச் சுற்றி, கூட்டமாய்ப் பட்டாம் பூச்சிகள் பறந்தன. சிறு முணு முணுப்புடன் வீசிய காற்றில் லேசான குளிர். திடீரெனத் திரண்ட மேகங்கள், தென்மேற்கு வானில் இருந்து வடக்குநோக்கி நகர்ந்தன. சிறு தூறலாய்த் தொடங்கிய மழை, பெருமழையாய்க் கொட்டத்தொடங்கியது. எங்கோ தூரத்தில், மழை யில் நனைந்த தவிப்பில், ஒற்றைக் குயில் ஒன்றின் துயர்தோய்ந்த குரலிசை. கும்பலாய் நின்ற சனம் மழையில் நனைந்து கரைந்த மாயம் அங்கு நடந்தது.
ஒளிக்கசிவின் முதல்ரேகை பூமியில் பட்டவேளை கிருஷ்ணி விழித்துக் கொண்டாள். ஏதோ மந்திரவசப்பட்டவள்போல, கொட்டுதோட்டப்பக்கம் அவள் விரைந்தாள். அவளைத் தொடர்ந்து, ஊரில் உள்ளவர்களும் அயல்கிராமத்தவர்களும் தூரத்தில் இருந்த நகரவாசிகளும் தோட்டப்பக்கம் கூடினார்கள். அந்தச் சனத்திரளின் மொசு மொசுப்பு, சமுத்திரத்தின் பேரிரைச்சலை ஒத்திருந்தது.
தோட்டத்தில் தோன்றிய முசுக்கட்டைச் செடி, இப்பொழுது ஒரு புதராய் வளர்ந்திருந்தது. அதனுடைய முச்சோணை இலைகள் சூரிய ஒளியில் பளபளத்தன. கொத்துக் கொத்தாய் மலர்களும் காய்களும் கனிகளும் செடியில் குலுங்கின. கிருஷ்ணிக்கு வியப்புத்தாள முடியவில்லை.
பொன் துகள்கள் சொரியும் பட்டுநூல் இழைத்த கூடொன்றை, அச்செடியில் கிருஷ்ணி கண்டாள். அந்தக் கூட்டை உதைத்து, உடைத்துக்கொண்டு ஒரு சிறு பூச்சி, சிறகுகளை அசைத்தபடி வெளியே வந்தது. அது பட்டுப்பூச்சியா? அப்படித் தோன்றியபோதும் அல்ல, என்று அங்கு கூடி நின்றவர்கள் கூறினார்கள்.
பட்டுப்பூச்சியைவிட அது சிறியதாக இருந்தது. அதன் சிறகு களின் படபடப்பு, சூழலில் ஒரு உதைப்பை ஏற்படுத்தியது. அத்தோடு, அந்தப் பூச்சியின் சுவாசம் பட்ட இடமெல்லாம் மனதைக் கவ்வும் ஒரு வாசமும் சேர்ந்து பரவியது.
பூச்சியை நெருங்கிப் பார்த்தபொழுது அது சிறகுகளைக் கொண்டிருந்தபோதும் மனித உருவம் கொண்டதாயும் மானிட அம்சம் பொதிந்ததாயும் இருந்ததைக் கவனம்கொள்ள முடிந்தது. அதனுடைய கண்கள் சிறியதாக இருந்தன. ஆனால், அவை உமிழும் ஒளிப்பிரபை, பல ரசவாதங்களை ஏற்படுத்தக்கூடிய ஏதுக்களைக் கொண்டிருந்தது. நாசித்துவாரம் இருப்பதே தெரியாத மூக்கு. குச்சிக் கைகள், கால்கள், விரல்கள் நூல் இழையாய் நொய்ந்து கிடந்தன.
அந்தப் பூச்சி தன்னை உருமாற்றிக் கொள்ளும் இயல்புடையதாக இருந்தது. பட்டுநூற் குவியலாய்க் காட்சியளித்த அது, அடுத்த கணங்களில் சிறகுமுளைத்த சிறு குழந்தை போலவும், ஒரு சின்னத் தேவதைபோலவும் தோற்றம் காட்டியது. இந்த விநோத உயிரை அங்கு கூடிநின்ற மக்கள் வியப்புடன் பார்த்தார்கள்.
மஞ்சள் பூசிய ஒரு பொன்நிழலை தன்னுடன் சுமந்துவந்த அப்பூச்சி, மனங்கவரும் அந்த அற்புத வாசத்தையும் தழையவிட்டபடி, சிறகடித்துப் பறந்து திரிந்தது.
அந்தப் பறத்தலின் மூலம் ஊரின் மூலை முடுக்குகளை மட்டுமல்ல, உயிர் உள்ள, உயிர் அற்ற அனைத்துப் பொருள்களையும் தன் ஆளுகைக்கு உட்படுத்தி, ஒரு ஈர்ப்பு மையத்தை அது ஏற்படுத்தியது. அங்கு கூடிநின்ற மக்களை நெருங்கும்போதெல்லாம் அத்தேவதை ஏதோ சில சொற்களைப் பரம ரகசியம்போல உதிர்க்கவும் செய்தது. அச்சொற்கள் ஒரு வகையான மந்திர உச்சாடனம் போலவும் இசைப்பிணிப்பு மிகுந்த பாடல்கள் போலவும் இருந்தன:
“உங்களது வாழ்வு சமநிலை தளர்ந்து சரிந்துபோனமை எமக்குத் தெரியும். ஜீவிதசுகம் அழிந்து அல்லல்படும் நீங்கள் துன்பங்களில் இருந்து விடுதலைபெறவேண்டும். இங்கு சொர்க்கபுரி ஒன்றை உருவாக்க நான் வரவில்லை. ஆனாலும், இல்லாமை ஒழிந்து, எல்லாமும் உள்ள ஒரு உலகு உங்களுக்குக் கிடைக்கவேண்டும். அதற்கு எனது வல்லபம் உங்களுக்கு உதவும்…”
தேவதையின் பேச்சில் இழைந்த கனிவும் உறுதியும் சனங்களின் இடையே இருந்த அதிபருக்குத் துணிவைத் தந்திருக்கவேண்டும். சற்று முன்னால் வந்த அவர், தளர்ச்சியான குரலில் மன்றாடுவதுபோலப் பேசினார்:
“எம்மை ரட்சிப்பவளே… உமது அருள் எமக்கு எப்பொழு துமுண்டு. உமது ஒளி பட்டு இந்த மண் புனிதமடைந் துள்ளது. நாமும் புனிதரானோம். பாடசாலையில் படிக்கும் ஏழைப்பிள்ளை களின் துன்பம் நீங்கும் வகையில் அவர்களது மதிய உணவுக்காக ஒரு நிதியத்தை உருவாக்கியுள்ளோம். அந்த நிதியத்துக்கு தம்பையா ரீச்சர்தான் பொறுப்பாக உள்ளார். பாடசாலைக் கட்டடங் களும் இடிபாடுகளுடன் கிடக்கின்றன…. புதிய கட்டடங்கள் உருவாக வேண்டும்….தளபாட வசதியும் இல்லை… கல்வி செயல்வடிவம்பெற இவை தேவை..”
அதிபர் பேசி முடிந்ததும் திருமதி தம்பையா முன்நகர்ந்து, கால்களை மடித்து, நிலத்தில் வீழ்ந்து, கண்ணீர்சோரத் தொழுதாள்.
தம்பையா ரீச்சரைத் தொடர்ந்து ராமலிங்கவாத்தியார், அமலன் சேர், தயாரீச்சர், யசோவின் அம்மா, தங்கை என்று எல்லாரும் வணங்கினார்கள்.
அனைவருக்கும் அருள்பாலித்த தேவதை மிகுந்த பாந்தமுடன் பேசியது:
உங்களது முயற்சி எதுவாயிருந்தாலும் அதற்கு எனது அநுசரணை உண்டு. பாடசாலையின் இடிபாடுகள் இரண்டொரு தினங்களில் சீர்செய்யப்படும். பிள்ளைகளும் படிக்க வருவார்கள். பாடசாலை மட்டுமல்ல, ஊர்வாசிகளான உங்களது இல்லிடங்களும் செப்பனிடப்படும், உங்களது தேவைகளுக்கு நீங்கள் என்னை அணுகலாம். கிருஷ்ணியும் உங்களது உதவிக்கு வருவாள்.”
கூறிய தேவதை, எல்லாரும் பார்த்திருக்க – பேருருக்காட்டி ஒளிப்பிழம்பாய் ஜொலித்தது. மீளவும் சிறு பூச்சியாகிப் பறந்து சென்று, முசுக்கட்டைச் செடியில் அமர்ந்து, இளம் குருத்துக்களைக் கடித்துச் சுவைத்தது.
அங்கு திரண்டுநின்ற மக்கள் பரவசநிலை அடைந்து ஓங்காரமிட்டு ஆரவாரித்தனர்.
கிருஷ்ணிக்கு அருகாகத் திரும்பவும் பறந்துவந்த தேவதை, அவளுக்கும் தனக்குமான தூரத்தை நிதானப்படுத்திக்கொண்டு, அவளை நோக்கி நறுமணம் தழைந்து விம்மும் பல வண்ணத் தேவபுஷ்பங்களைத் தூவி ஆசீர்வதித்தது.
என்ன அதிசயம்! சிறுமியாக இருந்த கிருஷ்ணி, அழகிய இளம் பெண்ணாக மாறினாள். வெண் பட்டுச்சேலை பளபளக்க அலங்கார பூஷிதையாய் அவள் தோற்றம் அற்புதமாய் இருந்தது.
வெங்காயச்சருகு நிறம். நேர்கோடு கிளித்ததுபோன்ற வளர்த்தி காட்டும் உடல்வாகு. செதுக்கி எடுத்த சிற்பத்தின் வார்ப்புடன் மூக்கும் முழியுமாய் ஊர்க்கோயில் அம்மன் சிலைபோல அவள் அழகாக இருந்தாள். காமுகரைப் பொசுக்கும் தேஜஸ் அவளோடு இழைந்தது. அங்கு கூடிநின்ற ஊரவர் மீளவும் ஓங்கார ஒலியெழுப்பி, ஆனந்தித்து ஆரவாரித்தனர்.
அந்தஒலி, அலையலையாக எங்கும் வியாபகம் கொண்ட அதிசயம் அங்கு நடந்தது.
புதுப்பொலிவு கொண்ட கிருஷ்ணி, யசோதாவை விட்டுவிலகி, மாரியம்மன் கோயிலை நோக்கி நடந்தாள். கோவிலில் மூர்த்திஐயர் ஒதுங்கி நின்று, பவ்வியமாக அவளை வரவேற்றார். கோயிலின் பலிபீடத்தை அடைந்த கிருஷ்ணி, அதன் முன் நின்றபடி அங்கிருந்த சனத்திரளைப் பார்த்துப் பேசினாள்:
“நமக்கு வளமும் வாழ்வும் தர வந்துள்ள இந்தக் குட்டித்தேவதை வேறுயாருமல்ல யசோதான். இவள் மீளவும் உயிர்த்துவந்துள்ள செய்தியை, ஊருக்கு வழிப்போக்கனாய் வந்த, முதுகிழவன் ஒருவன் எனக்கு முன்னரே கூறிச் சென்றுள்ளான்:”
“யசோ சிறு பூச்சியுருவில் இருந்தாலும் அவளது சக்தி அபரிமிதமானது.”
“அதோ அவளைச் சூழ உள்ள ஒளிவட்டத்தைப் பாருங்கள். நீலமும் வெண்மையும் கலந்த வெளிர் நீலம். அந்த ஒளிவெள்ளத்தை நாம் நெருங்க முடியாது. அது தேவதைகளுக்கே உரியது. இச்சையில் உழலும் அற்பமனிதர்களான எம்மை அது பொசுக்கிவிடும். நமது அக அழுக்குகளை நீக்கி, நம்மைப் புனிதர்களாகவும் அது ஆக்கவல்லது. இதனோடு இன்னுமொரு செய்தியையும் நான் உங்களுக்குக் கூறவேண்டும்:”
“இன்று ஏகாதசி. இன்றிலிருந்து நான்காம் நாள் பூரணை. யசோவின் ஜன்ம நட்சத்திரமான சுவாதி கூடும்நாள். அன்று நடக்கும் சுபகாரியங்களையும் அற்புதங்களையும் காத்திருந்து பார்க்குமாறு எமது யசோ எங்களைக் கேட்டுக்கொள்ளுகிறாள்.”
கிருஷ்ணியின் நீண்ட பிரசங்கத்துடன் சனம் கலையத் தொடங்கியது.
தேவதையின் வாக்குக்கு அமைவாக ஊரில் எல்லாமே நடந்தன. பௌர்ணமி அன்று அதிகாலையிலேயே வேதமந்திர உச்சாடனம், மாயக்குரலாக பிரபஞ்ச வெளியெங்கும் ஒலித்தது.
வேதபாராயண ஒலியைத் தொடர்ந்து, இதய பீடத்திலிருந்து விகசிக்கும் காயத்திரிமந்திர ஒலி, தமிழ் வேதமான தேவாரபாராயணம் இவை அனைத்தும் அந்தச் சூழலுக்கு ஒரு புனித உணர்வையும் பரவசத்தையும் அளித்தது.
உதயத்துக்கு முன்பாகவே அந்த அற்புதங்கள் நிகழத்தொடங்கின. கிழக்கில் இருந்து பரவிய அந்த அதிசய வாசத்துடன் அது ஆரம்பமானது. அந்த வாசத்தில் முகை உடைந்த மல்லிகையின் மணமே தூக்கலாக இருந்தது.
அனல்வீசும் அந்தப் பங்குனி மாதத்தில், வழமைக்குமாறாகக் குளிர்காற்று வீசியது. லேசான மழைத்தூறல். நிலத்தைத் தழுவிய மழைத்துளிகள் வெண்பனிக்கட்டிகளாக மாறின.
உலர்ந்த மரங்களிலும், செடிகளிலும் கொடிகளிலும், முகை உலர்ந்த உவர்ப்புல்லிலும், கட்டாந்தரையில் தலை நெகிழ்த்திச் சிரிக்கும் சிறு பூக்களிலும் உயிர்ப்பின் நித்தியம் சலனமுற்றது.
எல்லாத் தருக்களுமே மலர்களைச் சுமந்திருந்தன. மலர்கள் பெரிதாகவும் இருந்தன. அம்மலர்களில் இருந்து, தேன் – அளவுக்கு அதிகமாகச் சுரந்து சொரிந்தன.
பனை, தென்னை, கமுகு, வாழை போன்ற மரங்கள் கிளை விட்டுச் சடைத்துத் தலையசைத்தன. கிளைகள் தொகைதொகையாகக் காய்களையும் கனிகளையும் சுமந்திருந்தன.
தூரத்தில் சற்று வடமேற்காக, கருநீலமும் ஊதாவும் கலவையிட மலைமுகடுகள். மலைச்சாரலின் குளிர்ச்சியும், அருவியின் சலசலப்பும், ஆறு ஓடிவரும் ஓசையும் கேட்டது. மலையில் இருந்து வழுவிவந்த ஆறு, கிருஷ்ணியின் வீட்டுப் பக்கமாக இருந்த வெள்ள வாய்க்காலில் அகலித்துப் பாய்ந்தது. ஆற்றுநீர் பளிங்குபோல சுழித்து ஓடியது. ‘இது பேராற்றின் கிளை நதியா? பேராறுதானா?’ கிருஷ்ணி குழம்பினாள். ஆற்று நீரில் புரண்டு, பாய்ந்து உருளும் மீன்கள்: பருத்த வாளை, கெண்டை, மீசை முளைத்த கெளுத்தி என நீருடன் அள்ளுண்டு போயின. வெள்ளவாய்க்காலை மேவி ஓடிய ஆறு, ஊரின் பெருவெளியைக் கடந்துசென்று, கிழக்குக் கடலில் சங்கமமாகியது.
ஆற்றின் கரையோரம் மக்கள் கூட்டம் கரைபுரண்டது.
சலவைக்கல் பதித்த, தனது அழகிய வீட்டைவிட்டு வெளியே வந்த கிருஷ்ணிக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆற்று நீரில் கால் வைத்தவள், ‘உய்’ எனும் ஓசையுடன் கால்களை வெளியே இழுத்துக் கொண்டாள். ஆற்று நீரின் குளிர்ச்சியை அவளால் தாள முடியவில்லை.
ஆற்றங்கரையை ஒட்டி அடர்ந்த புல்வெளிகள். அந்த வெளியில் மேயும் உரோமம் அடர்ந்த செம்மறி ஆடுகள். பலவகையான உயரினப் பசுக்கள் – ஐஷெயர், ஜேர்ஸி, ஃப்றிசியன் – எல்லாமே சீமைப் பசுக்கள், இவற்றுடன் சிந்தி, காங்கேயம் பசுக்களும், காளைகளும் காணப்பட்டன. கரிய மலை போன்ற எருமைப் பசுக்களும், அவற்றைத் துரத்தித் தொத்தத் துடிக்கும் கடாக்களும் அங்கு உலாவின.
குறிஞ்சியும் மருதமும் மயங்கிக் கிடந்த அந்தப் பெருவெளியில், பச்சைப்பசேலென்ற வயற்தடங்களும் இருந்தன. வயல்களில் பொன் வண்ண நெல்மணிகளைத் தாங்கி, தலை சாய்ந்து நிற்கும் நெற்பயிர்கள்.
ஊருக்கு வடக்கே, பாடசாலைக்கு அருகாக, ஆற்றின் கிளைநதி ஓடுவதாகச் சனம் கூறக் கேட்டு, கிருஷ்ணி அதைப்பார்ப்பதற்குப் பிரதானவீதி வழியாக விரைந்தாள். வீதியின் இரு மருங்கும் புதிய அழகான வீடுகள். எல்லாமே பளிங்கு போன்ற சலவைக் கற்களாலானவை. இவ்விடங்களிலெல்லாம் முன்னர் சுவரிடிந்து, கூரைசரிந்து, மூளியாய் நின்ற குடிசைகளைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். அது அவளது ஞாபகத்துக்கு வந்தது.
வீதியில், புதிய நவீன ரக வாகனங்களுடன் இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டிகளையும் கண்டாள். அவ்வண்டிகளில் தேவர்களை ஒத்த புருஷர்கள் பவனி வந்தார்கள். அவர்கள் அந்நிய தேசத்து வணிகர்கள் என்பதை அவள் சற்றுக் காலதாமதமாகவே அறிந்துகொண்டாள்.
வீதியால் உலாவந்த தெய்வக்களை பொருந்திய அந்த அழகிய பெண்ணைக் கண்ட ஊர் இளைஞர்கள் எதுவித ‘கல்மிஷமும் இல்லாமல் அவளை நிமிர்ந்து பார்த்தார்கள். அவள் பார்வை எதேச்சையாக அவர்கள் மீது பட்டவேளை, தங்களை அறியாமலேயே அவர்கள் ஒதுங்கி நடந்தார்கள். கண்களாலேயே கற்பழிக்கும் ளைஞர்களைக்கண்டு பழக்கப்பட்ட அவளுக்கு, இது அதிசயமாய் இருந்தது. எதையுமே பொருட்படுத்தாதவளாக நதியைப் பார்ப்பதற்கு அவள் விரைந்து நடந்தாள்.
பாடசாலை புதுப்பொலிவுடன் பல கட்டிடங்களோடு நிமிர்ந்துநின்றது. அதை விழிமலர்த்திப் பார்த்தவள், தனது சிநேகிதி யசோவுக்கு மனதளவில் நன்றி சொல்லிக் கொள்ளவும் செய்தாள்.
பாடசாலை மதிலுக்கு அப்பால், முத்து மாரியம்மன் கோயிற்படிகளை அலசியபடி, சலசலப்புடன் அந்தக் கிளைநதி பாய்ந்தது. அவ்வாற்றின் போக்கும் கிழக்கு நோக்கியதாகத்தான் இருந்தது. கோயிலின் பக்கமாக அந்த ஆற்றுக்குப் படித்துறைகள் இருந்தன. ஊர் மக்கள் படித்துறை வழி இறங்கி நீராடுவதையும் கிருஷ்ணி கண்டாள்.
நதியை அண்மித்ததும் அதன் மகிமையை முதன்முதலாக அவள் உணர்ந்து கொண்டாள். நதியின் கரையோரமாக இருந்த கற்பாறைகள் பொற்படிவுகளுடன் ஜொலித்தன. பொற்படிவுகளின் இடையே, பட்டையிடா வைரங்கள் நிரையிட்டன.
ஆற்றில் இறங்கிய கிருஷ்ணி, கரையில் கிடந்த கூழாங்கற்கள் சிலவற்றை எடுத்து நீரில் தோய்த்தாள். என்ன அதிசயம்! நீர் பட்டதும் அந்தக் கற்கள் பொற்கட்டிகளாக மாற்றமடைந்தன. இந்தப் புதுமை தெரியவந்தால் சன சமுத்திரமே இங்கு மல்லாடும் என நினைத்து, தன்னுள் சிரித்துக் கொண்டாள். குதிரை வண்டிகளில் உலாவரும் விதேசி வியாபாரிகளுக்கும் இது இன்னமும் தெரியாதோ? என நினைத்துக் கொள்ளவும் செய்தாள்.
திடீரென, அவளைச் சூழ – அவளுக்கு நன்கு பழக்கப்பட்ட அந்த உதைப்பு. அத்துடன் அந்த மனங்கவரும் வாசம். யசோ வந்திருப்பதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணி மிகுந்த குதூகலமடைந்தாள்.
கிருஷ்ணிக்கு அருகாகப் பறந்துவந்த அந்தப் பட்டுப்பூச்சி பேசியது:
“கிருஷ்ணி! எல்லாம் திருப்திதானே.”
“திருப்தி… பூரண திருப்தி.”
குரலை உயர்த்திக் கிருஷ்ணியால் பேசமுடியவில்லை.
அந்தப் பட்டுப்பூச்சியின் ஈர்ப்பு வலையில் அகப்பட்டு வசமிழந்து, அதன் பின்னால் அவள் அள்ளுண்டு போனாள்.
“கிருஷ்ணி! என்னைத் தொடராதே, தொடர்ந்து வருவது உனக்கு ஆபத்து…”
தேவதையின் கட்டளையைப் பொருட்படுத்தாது அவள் அதனை நெருங்கினாள்.
“கிருஷ்ணி! எனது ஒளிவட்டத்துள் நீ வந்தால் சாம்பலாகிவிடுவாய். சற்று மேலே பார் நீ தொட முடியாத தூரத்தில் நான் இருப்பது உனக்குத் தெரியும்.”
மேலே பார்த்த கிருஷ்ணி, அந்தத் தேவமங்கை, உயரஉயரப் பறந்துபோவதைக் கவனம் கொண்டாள். கண்களுக்குப் புலனாகாத உயரத்தில், ஒரு சிறு பொட்டாக அவள் பறந்தாள். அவளது குரல் மட்டும் இவளுக்குக் கேட்டுக் கொண்டே இருந்தது. இவளுக்கும் சிறகுகள் முளைத்ததான ஓர் உணர்வு. இவளும் உயரஉயரப் பறக்க முயற்சித்தாள். குறித்த ஓர் உயரத்துக்குமேல் இவளால் பறக்க முடியவில்லை. இவளது சிறகுகள் பலமிழந்து போன வேளை, அந்தப் பாரிய கருமுகிற் திரள்வந்து இவளைப் பலமாகத் தாக்கியது. நிலைகுலைந்துபோன இவள் தலைகீழாக வந்து, உடல் சிதறத் தரையில் விழுந்தாள். தரையில் விழுந்து கூழாகிப் போன இவளை, யாரோ கூட்டி அள்ளி எடுப்பதுபோல இருந்தது.
‘யாரது அம்மாவா?’
பதறியவள் விழித்துக்கொண்டாள்.
‘இது கனவா.. இல்லை இல்லை… இது கனவாக இருக்க முடியாது…’
அவளது உள்மனம் ஓலமிட்டது.
‘ஓ…! அந்த உதைப்பும் மனதை வசீகரிக்கும் அந்த வாசமும் என்னோடு இழைகிறதே..”
‘இது கனவா… இல்லை இல்லை…’
வாய் புலம்பியபடி, கிருஷ்ணி மீளவும் அயர்ந்து தூங்கினாள்.
ஆழ்ந்த உறக்கம் அவளைத் தழுவிக்கொண்டது.
– வெளிச்சம், கார்த்திகை-மார்கழி, 2004.
– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.
![]() |
க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க... |